வடக்கு நோக்கி வந்த சொந்தச் சகோதரர் (நீதி மறுப்பும் நீதி கோரலும்)— 07

வடக்கு நோக்கி வந்த சொந்தச் சகோதரர் (நீதி மறுப்பும் நீதி கோரலும்)— 07

     — கருணாகரன் — 

(இனவன்முறையினால் வடக்கு நோக்கி வந்த மலையக மக்களுக்கான நீதி இன்னும் கிடைக்கவில்லை. அவர்கள் நம்பி வந்த தமிழ்ப் பிரதேசங்களிலேயே (வடக்கிலேயே) புறக்கணிக்கப்படுகிறார்கள். பல வழிகளிலும் ஒடுக்கப்படுகிறார்கள். அரச நிர்வாகம் தொடக்கம் வளப்பகிர்வு, சமூக நிலை எனப் பல வகையிலும் இந்த அநீதி தொடர்கிறது. இந்த மக்களுடைய பிரச்சினைகளைக் குறித்து இதுவரையிலும் கவனத்திற்குரிய மைய உரையாடல்களோ ஆய்வுகளோ நடக்கவில்லை. இந்தக் கட்டுரைத் தொடர் அதனைப் பொதுவெளியில் திறக்க முற்படுகிறது. — ஆசிரியர்) 

 “கேள்விகள் எதுவும் வேண்டாம். குற்றச்சாட்டுகளை நிறுத்துங்கள் என்றால் எங்கள் குரல் வளையில் செருகப்படுவது கத்தியன்றி வேறென்ன?” 

(07) 

வன்னியில் தங்களுடைய கிராமங்கள் தீண்டத்தகாதவை போல ஒதுக்கப்படுவதையிட்ட கவலை இருந்தாலும் அதைப் பற்றிப் பேசுவதற்கு எந்த வழியும் அவர்களுக்கு இருக்கவில்லை. ஒரு எளிய உதாரணம், முல்லைத்தீவு மாவட்டத்தில் முத்தையன்கட்டுக்கு வடக்கே இந்த மக்களால் உருவாக்கப்பட்ட மன்னாகண்டல் என்ற கிராமம். அங்கே தண்ணீரைக் காணவே முடியாது. நிலத்தைத் தோண்டினாலும் 100, 150 அடிக்கும் கீழேதான் நீரைக் காண முடியும். என்னுடைய வாழ்க்கையில் இப்படியான ஒரு சூழலைக் காணவே இல்லை. 1970 களின் இறுதிப் பகுதியில் – 80 களின் முற்பகுதியில் மன்னாகண்டலுக்குச் சென்றவர்கள் இந்த உண்மையை உணர்ந்திருப்பார்கள். இன்றும் அந்தக் காட்சி பெரும் வேதனை அளிப்பதாகவே மனதில் உள்ளது. குடி நீருக்காக அந்த மக்கள் அன்று பட்ட அவலம் சொல்லி மாளாது. ஒரு ஒதுக்குப் புறத்தில், காட்டோரமாக இருந்த அந்தக் கிராமத்தில் யானையும் கரடியும் நுளம்பும் அவர்களைப் பாடாய்ப் படுத்திக் கொண்டிருந்தது.  பஞ்சத்தில் அவர்கள் மெலிந்து உருக்குலைந்து போயிருந்தனர். ஏறக்குறைய எத்தியோப்பிய மனிதர்களைப் போல. இன்றைக்கு அவர்களில் எத்தனைபேர் தப்பிப் பிழைத்திருப்பார்கள் என்று எண்ணிப் பார்க்கிறேன். 

அந்த இடத்தை விட்டு வெளியேறினால் வேறு எங்கே போவதென்று தெரியாமல் இருந்ததால் அந்தக் கொடுமையான சூழலுக்குள் கிடந்து உழன்றனர். எந்த மீட்பரும் அவர்களுக்கிருக்கவில்லை. இப்போது கூட இந்த மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியைக் கேட்கவோ அவமானப்படுத்தப்படுவதைப் பற்றிப் பேசவோ அதைத் தடுக்கவோ யாருமில்லாத போது அன்று யார் இருந்திருக்க முடியும்? 

இப்படித்தான் ஒவ்வொரு கிராமங்களிலும் இந்த மக்கள் பாடுகளின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருந்தனர். கிளிநொச்சி நகருக்கு தெற்கே காடாக இருந்த கிறவல் பிட்டிகளிலேயே இவர்களுடைய குடியிருப்புகள் உருவாகின. இந்தக் கிறவல் பிட்டிகளில் நீரைக் காணவே முடியாது. ஆழமாகத் தோண்டினாலும் அபூர்வமாகவே தண்ணீரைக் காண முடியும். இதனால் குடியிருக்கின்ற வீட்டுச் சூழலில் கூட ஒரு பயிர் பச்சையை உண்டாக்க முடியாது. 

மட்டுமல்ல, கோடையில் கொழுத்தும் வெயிலில் இந்தப் பிரதேசம் அனலாக எறிக்கும். இதனால் ஆட்களின் தோற்றமே காய்ந்து கருவாடாகியதைப் போலிருக்கும். இந்த நிலையில் இவர்களுடைய தோற்றத்தை வைத்தே இவர்களை அடையாளம் காணக் கூடிய நிலை இருந்தது. 

இதெல்லாம் எவ்வளவு கொடுமையான நிலை? 

ஆனால் அப்படித்தானிருந்தது. 

மனிதர்கள் வாழ்வதற்கு மிக மிக முக்கியமானது நிலமும் நீரும். இரண்டும் சரியாக இருந்தால்தான் ஒரு குடிசையையாவது போட்டுக் கொண்டு குடியிருக்க முடியும். அந்தக் குடியிருப்பில் எதையாவது செய்ய முடியும். இரண்டும் சீராக இல்லை என்றால் லேசில் உருப்படவே முடியாது. 

இப்போதும் மலையகத்தில் உள்ள மக்கள் தங்களுக்கு ஒரு துண்டுக் குடியிருப்பு நிலத்தைச் சொந்தமாகத் தாருங்கள் என்றே கேட்கிறார்கள். சொந்த நிலம் இல்லை என்றால் எதையும் செய்ய முடியாது. லயங்களில் வாழ வேண்டியதுதான். 200 ஆண்டுகள் வரை வாழ்ந்தாலும் தங்களுக்கென்றொரு குடிலோ, மரமோ வைக்க முடியாத நிலை. அது ஒரு அந்தர வாழ்க்கை. 

ஏறக்குறைய இதே நிலைதான் வடக்கு நோக்கி வந்த மக்களுக்கும் நடந்தது. இதில் பாதிப்பேர், கஸ்ரமான சூழலிலும் காடுகளை வெட்டி, கடினமான நிலத்தைத் தோண்டி, சின்னஞ்சிறிய குடிசைகளைப் போட்டுக் கொண்டு குடியிருந்தனர். அதிலிருந்தே படிப்படியாக தம்மைக் கட்டியெழுப்பினர். தங்களை நிலைப்படுத்திக் கொள்வதற்கு ஏறக்குறைய இரண்டு தலைமுறைக்காலம் வேண்டியிருந்தது. ஊற்றுப்புலம், தொண்டமான் நகர், ஜெயபுரம், பொன்னகர், மலையாளபுரம், பாரதிபுரம், செல்வா நகர், கிருஸ்ணபுரம், காந்தி கிராமம் போன்ற கிராமங்கள் இத்தகையன. 

ஏனையோர் வேறு ஆட்களுடைய காணிகளில் குடியிருந்தனர். குறிப்பாக வயல்களிலும் தோட்டங்களிலும் கூலிக் குடும்பங்களாகக் குடியிருந்தனர். அந்தக் காணிகளின் காவலர்களாகவும் அந்தக் காணிகளில் கூலிகளாகவும் ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளைச் செய்ய வேண்டியவர்களாக இருந்தனர். ஆனால் ஒரே கூலிதான் கிடைத்தது. அதுவும் குறைந்த கூலி. குடும்பம் வேலை செய்தாலும் ஓரிருவருக்கே சம்பளம் கிடைத்தது. இப்படி இருந்தாலும் இவர்கள்தான் பின்னாளில் அதிகம் கஸ்ரப்பட வேண்டியிருந்தது. 

ஏனென்றால் ஏனையோர் எப்படியோ கஸ்ரப்பட்டும் நிலத்தை எடுத்துக் கொண்டனர். இவர்கள் இரவல் காணிகளில் இருந்ததால் நிலமற்றவர்களாகினர். இது உண்டாக்கிய அவலத்தை 2009 போர் முடிந்த பிறகு நடந்த மீள் குடியேற்றக் காலத்தில் தெளிவாகப் பார்க்கக் கூடியதாக இருந்தது. மீள்குடியேற்றத்தின்போது நிலமுள்ளோருக்கே வீட்டுத்திட்டம் கிடைக்கும் என்ற விதிமுறை. அப்படியென்றால் நிலம் வேண்டுமே என்ற பிரச்சினை எழுந்தது. இது உண்டாக்கிய நெருக்கடிகள் பெரிதாகின. ஏறக்குறைய முப்பது ஆண்டுக்கு மேலாக குடியிருந்த நிலம் அவர்களுக்குச் சொந்தமில்லை என்றால், ஒரே நாளில் நடுத் தெருவுக்கு வந்ததாக இவர்கள் உணர்ந்தனர். ஆனாலும் வேறு வழியிருக்கவில்லை. புதிய இடத்தை நோக்கி நகரவே வேண்டியிருந்தது. அல்லது இருந்த காணியில் வீடமைப்பதற்கு ஒரு துண்டு நிலத்தையாவது பெற வேண்டும் என்று போராட வேண்டியதாயிற்று. அது லேசான காரியமல்ல. (இதைப்பற்றி பின்னர் விரிவாகப் பார்க்கலாம்). 

அரச காணிகளில் காடு வெட்டித் துப்புரவு செய்து குடியிருந்தவர்களுக்கு சொந்தக்காணியாக அவை மாறினாலும் அவற்றிற்குரிய உரிமப் பத்திரங்களைப் பெறுவதில் பெரிய பிரச்சினை ஏற்பட்டது. ஏனென்றால் இதெல்லாம் சட்டரீதியாக மேற்கொள்ளப்பட்ட குடியிருப்புகளல்ல. அதாவது அரசாங்கத்தரப்பின் அனுமதியோடோ தீர்மானத்தின் அடிப்படையிலோ உருவாக்கப்பட்ட குடியேற்றத் திட்டங்களல்ல. என்பதால் காணி உரிமப் பத்திரத்தை வழங்க முடியாது என நிர்வாக அதிகாரிகள் கையை விரித்து விட்டனர். இந்த நிலையில் இந்த விவகாரத்தை பாராளுமன்றத்திற்கு எடுத்துச் சென்று அங்கே சட்டமூலத்தில் சேர்த்திருக்க வேண்டியது தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களின் கடப்பாடாக இருந்தது. ஆனால் அதை அவர்கள் செய்யத் தவறினர். இதற்கு ஒரு முக்கிய காரணம், இந்த மக்களுக்கு அப்பொழுது இந்தப் பிரதேசங்களில் வாக்குரிமை இருக்கவில்லை. வாக்கில்லாத மக்களால் என்ன பயன் என்று இவர்கள் கருதினர். இன்னொரு காரணம், இவர்கள் கூலி நிலையிலிருந்து அடுத்த கட்டத்துக்கு –மத்தியதர நிலைக்கு வளர்ச்சியடையக் கூடாது என்பது. 

இதனைப் பற்றி இங்கே விபரிக்கிறார் வவுனியா மாவட்டம், கனகராயன்குளத்தைச் சேர்ந்த முத்தையா நல்லு என்பவர். “1966 ஆம் ஆண்டு அவிசாவளையிலிருந்து கனகராயன் குளத்துக்கு வந்தேன். அண்ணன்மார் கூடத்தான் வந்தேன். அப்ப நான் இளந்தாரி. இங்க வந்து காடு வெட்டி குடியேறினோம். வந்த உடன எல்லாம் காடோ காணியோ கிடைக்கவில்லை. அண்ணன்மார் ஒரு முதலாளியோட காணியில வேலை பார்த்தாங்க. அவங்களோடு நானும் ஒண்ணாக இருந்து வேலை செஞ்சன். அதுக்கப்பறமே இங்க உள்ள பெரிய குளம் பக்கமாக காட்டப் பாத்து வெட்டினோம். ஆனா ரொம்பக் காலமாக இதுக்கு பேர்மிட் கிடையாதுன்னுட்டாங்க. சரி, அது வாற நேரம் வரட்டும். அவங்க தாற நேரம் தந்துக்கட்டும் எண்டு நாம அங்கயே குடியேறினம். அப்பறமா ரொம்ப நாளைக்கு அப்பறம்தான் துண்டு (அனுமதிப்பத்திரம்) கெடச்சிச்சு. ஆனா இந்தக் காணியோட வெட்டின பல பேத்துக்கு இன்னுமே துண்டு கெடக்காம இருக்கு. இதுக்க பாருங்க, கனகராயன்குளம் மெயின் ரோட்டுப் பக்கத்தில இப்ப 2014க்குப் பிறகு காடு வெட்டிய ஆக்களுக்கெல்லாம் கையில பேர்மிட் கெடைச்சிருக்கு. இது ஆள் பாத்துச் செய்யிற காரியந்தான?” என்கிறார் நல்லு. இவருக்கு இப்பொழுது வயது 77.  

அவர் மேலும் சொல்கிறார். அப்பெல்லாம் இந்தப் பக்கமா யாரும் லேசுல வந்துக்க முடியாது. அதுவும் பொழுது இறங்கிட்டா ஊருக்கு வெளியில போகவும் ஏலாது. ஊருக்குள்ள யாரும் வரவும் ஏலாது. யானை தெருவில நிக்கும். தெரு எப்பிடியிருக்கும் தெரியுமாஅதொரு காட்டுப் பாதைதான். அந்தக் காட்டுப்பாதையில யானைதானே நிக்கும்அதின்ட பாதையில நாம எப்பிடிப் போறதுஆனா அதுக்கதான் நாம வாழக் கிடந்தோம். குழந்த பெத்துக்கிறதா இருந்தாலும் செரி,அந்தரம் அவசரத்துக்கு ஆஸ்பத்திரிக்குப் போறதா இருந்தாலும் செரி எல்லாமே இந்தக் காட்டுக்கத்தான். அப்ப நாம வாழக்கெடக்கோமா சாகக் கெடக்கோமா எண்ணே புரியாது. அப்படியெல்லாம் கெடந்துதான் இந்த மண்ணை வெளிக்க வெச்சோம். மண் வெளிச்சால் நாம வெளிச்ச மாதிரித்தான். ஆனா அதெல்லாம் லேசுப்பட்ட காரியமல்லேப்பா. அது நெனச்சால இப்பக் கூட கண்ணுல நீர் பொங்கும். மனசுக்கு கல்லு அழுத்தும். எவ்வளவு கஸ்ரம்பொம்பளங்க பாடு ரொம்பக் கொடுமை. வெறுங் காட்டுப் பிராணி போலல்லவா இதுக்க கெடந்தாங்க..” என்று கண்களைத் துடைத்தார் நல்லு. 

இந்த மாதிரி கடந்த காலத்தை நாம் அவர்களிடம் கேட்பதே பழைய காயத்தைப் புதுப்பிக்கிற ஒன்றுதான். ஆனால் வரலாற்றுக்கு ஆதாரங்கள் தேவை என்பதால் இந்த அத்து மீறலைச் செய்ய வேண்டியிருக்கிறது. இது தப்புத்தான். தெரிந்து கொண்டே மறுபடியும் அவர்கள் சிரமப்பட்டுக் கடந்த வந்த பாதையில் நினைவுகளால் தள்ளி விடுவதைப் போன்றது. இதனால் சிலர் இதைப்பற்றிப் பேச விரும்புவதில்லை. பலர் பேசித்தான் ஆக வேண்டும் என்று நிற்கிறார்கள். 

(தொடரும்)