— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —
இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (இலங்கைத் தமிழரசுக் கட்சி), கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்), சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி (பெயர் மாற்றம் பெற்ற முன்னாள் ஈபிஆர்எல்எஃப்) ஆகிய மூன்று பிரதான அணிகளுமே தற்காலத் தமிழ் அரசியல் பொது வெளியில் ‘தமிழ்த் தேசியக் கட்சிகள்’ எனத் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டும் அவ்வாறே தமிழ் ஊடகங்களால் அடையாளப்படுத்தப்பட்டும் உலா வருகின்றன.
இந்த மூன்று அணிகளும் புலிகளின் முகவர்களாகவே தம்மை அடையாளம் காட்டியுள்ளன. அவ்வாறே அவை கருதவும் படுகின்றன.
இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் தற்போது ஆட்சியில் இருக்கும் ராஜபக்ச அரசாங்கமும் முன்னைய ஆட்சியாளர்களைப் போல் அசமந்தமாகவே இருக்கிறது. தமிழர் தரப்பிலும் காத்திரமான நடைமுறைச் சாத்தியமான அரசியல் முன்னெடுப்புகளும் இல்லை. இனப் பிரச்சினை கிணற்றுக்குள் தூக்கிப் போட்ட பாறாங்கல்லாகக் கிடக்கிறது. இதனால் தமிழ்த் தேசிய அரசியல் என்பது தனது இலக்கு நோக்கிய பயணத்தில் ஒரு ஸ்தம்பித்த நிலையை அடைந்துள்ளது. அதற்கு இலங்கையில் ஆட்சியிலிருந்த அரசாங்கங்கள் மட்டுமல்ல தமிழர் தரப்பின் பலவீனங்களும் காரணமாகும் என்பதை இக்கட்டுரைத் தொடரின் கடந்த பதிவில் பார்த்தோம்.
தமிழர் தரப்பிலான கடந்தகால அரசியல் தவறுகள்-தவறவிட்ட அரிய சந்தர்ப்பங்கள்- கையாலாகாத் தனங்கள் என்பவற்றையெல்லாம் கடந்து ஈழத் தமிழினம் இன்று வேண்டி நிற்பது தமிழ்த்தேசிய அரசியலை அறிவுபூர்வமாகவும் வினைத்திறனுடனும் எதிர்காலத்தில் கொண்டு செல்லக்கூடிய ஒரு மாற்று அரசியல் தலைமையையேயாகும்.
இத்தகைய மாற்று அரசியல் தலைமையைப் புலிகளின் முகவர்களாக உள்ள எந்தக் கட்சிகளாலும் இனி ஏற்படுத்த முடியாதென்ற உண்மையைத் தமிழ் மக்கள் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஸ்தம்பிதம் அடைந்துள்ள தமிழ்த்தேசிய அரசியலை இப்போதுள்ள சிக்கலிலிருந்து விடுவித்து இனப்பிரச்சனைக்கான நிரந்தரத் தீர்வை நோக்கி முன் கொண்டு செல்லக்கூடிய அரசியல் வேலைத்திட்டத்தின் ஆரம்பப்புள்ளி தற்போது கைவசம் உள்ள பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தத்தை முழுமையாக அமுல் செய்வதேயாகும்.
இதனைச் சாத்தியமாக்குவதற்குத் தமிழர் தரப்பிலிருந்து காத்திரமான அரசியல் நகர்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென்பதுடன் அத்தகைய முன்னெடுப்புக்கள் முழுமையாகப் பலனளிக்க வேண்டுமாயின் அதனைச் சிங்கள சமூகமும்-இலங்கை அரசாங்கங்களும் (அது எந்தக் கட்சி அரசாங்கமாக இருந்தாலும் சரி)- இந்தியாவும் அரசியல் விருப்புடன் ஆதரித்து ஏற்று உளப்பூர்வமான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.அப்போதுதான் சர்வதேச சமூகமும் அதற்கு உருப்படியாக உதவ முடியும்.சிங்கள சமூகத்தை-இலங்கை அரசாங்கங்களை- இந்தியாவை மீறி எந்த சர்வதேச நாடும், சர்வதேச அமைப்பும் தமிழர்களுக்கு உதவுவதற்கான வாய்ப்பு மிக அரிதாகவே காணப்படுகிறது.
புலிகளின் முகவர்களாகக் கருதப்படும் தமிழ்த் தேசியக் கட்சிகளையோ அல்லது அணிகளையோ சிங்கள சமூகமோ- இலங்கை அரசாங்கங்களோ-இந்தியாவோ அல்லது இவற்றையெல்லாம் மீறி சர்வதேச சமூகமோ ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. ஆனால் முரண்நிலை என்னவெனில் வடகிழக்கு வாழ் தமிழ் மக்கள் பெருவாரியாக உள்ளூராட்சி அதிகார சபைத் தேர்தல்- மகாண சபைத் தேர்தல்-பாராளுமன்றப் பொதுத்தேர்தல் என்று எல்லாத் தேர்தல்களிலுமே புலிகளின் முகவர்களான இத்தமிழ்த் தேசியக் கட்சிகளையே ஆதரித்து நிற்கின்றனர்.
அதேவேளை, அரசியல் கோட்பாட்டு ரீதியாகவும் தத்துவார்த்த ரீதியாகவும் புலிகளை எதிர்க்கின்ற- இந்திய சமாதான ஒப்பந்தத்தையும் அதன் விளைவான பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தத்தையும் உளப்பூர்வமாக அனுசரித்துப் போகும் கட்சிகளை வடக்கு- கிழக்கு தமிழர்களில் ஒப்பீட்டு ரீதியாகச் சிறு தொகையினரே தேர்தல்களில் ஆதரிப்பதால் பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தத்தை முழுமையாக அமுல் செய்வதற்கான அரசியல் கள வேலைகளை முன்னெடுப்பதற்கான அதிகப்படியான மக்களினால் அங்கீகரிக்கப்பெற்ற அரசியல் அதிகாரமும் பிரதிநிதித்துவ வலுவும் இக்கட்சிகளிடம் இல்லை. அதாவது, எறிகின்ற பொல்லைத் தமிழ் மக்கள் இவர்களிடம் இன்னும் முறையாகக் கொடுக்கவில்லை.
முதலில் இந்த முரண்நிலை களையப்பட வேண்டும். அது உண்மையில் தலைவர்களின் கைகளில் இல்லை. தமிழ் மக்களின் கைகளில்தான் உண்டு.
அப்படியானால் தமிழ் மக்கள் என்ன செய்ய வேண்டும்?
எதிர்வரும் எல்லாத் தேர்தல்களிலும் மேற்கூறப்பெற்ற புலிகளின் முகவர்களான தமிழ்த் தேசியக்கட்சிகளை முற்றுமுழுதாக நிராகரித்து அதற்கு எதிரணியில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகளை பெருவாரியாக ஆதரித்து அவர்களின் கைகளில் அரசியல் அங்கீகாரத்தையும் பிரதிநிதித்துவ வலுவையும் ஜனநாயக ரீதியாக மக்கள் கையளிக்க வேண்டும்.
தமிழ் மக்கள் ஒரு பரீட்சார்த்தமாகவாவது தமிழர் அரசியலில் இந்த மாற்றத்தைக் கொண்டுவரத் துணிய வேண்டும்.
இந்த அணுகுமுறைதான் இன்றைய தென்னிலங்கை-இந்து சமுத்திரப் பிராந்திய- பூகோள அரசியல் களநிலையில் ஈழத்தமிழ் மக்கள் முன்னிலையில் இருக்கக்கூடிய அறிவுபூர்வமான மாற்று அரசியல் தெரிவாகும்.
தமிழ் மக்கள் கடந்த எழுபது வருடங்களுக்கும் மேலாக பயணிக்கும் அதே பாதையில் தொடர்ந்தும் பயணிப்பதால் பயன் ஏதும் விளையப்போவதில்லை. இவ்வளவு காலமும் தமிழ் மக்கள் இழந்தவைதான் ஏராளம். தேர்தல் இலக்குகளை மட்டுமே நோக்கமாகக் கொண்ட வெறும் உணர்ச்சி மைய அரசியலும்- கற்பனாவாத இலக்குகளும்- புத்திசாலித்தனமற்ற பிடிவாதங்களும் எவ்வகையிலும் உதவப் போவதில்லை. போர்க்கோலம் பூணுவதாலோ- வீரா வேஷங்களை வெளிப்படுத்துவதாலோ- பழம்பெருமை பேசுவதாலோ எதனையும் சாத்தியப்படுத்த முடியாது. கடந்த காலம் தமிழர்களுக்கு நிறையக் கற்றுத்தந்திருக்கிறது.
தமிழ் மக்களுக்குப் பாரபட்சமான செயற்பாடுகள் இலங்கை அரசாங்கங்களினால் காலத்துக்கு காலம் அதிகரிக்கப்பட்டே வந்துள்ளன. ஆட்சி மாற்றங்கள் தமிழ் மக்களின் சமூக பொருளாதார அரசியலில் எந்த முன்னேற்றத்தையும் கொண்டுவரப்போவதில்லை. கடந்த காலங்களில் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்கள் யாவும் (அண்மைக்காலத்தில் நல்லாட்சி உட்பட) தமிழ் மக்களைப் பொறுத்தவரை பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கைப் பிடித்த கதையாகத்தான் முடிந்திருக்கின்றன.
அதே போல்தான் புதிய அரசியலமைப்பு மாற்றங்களும் உள்ளன. கடந்த காலங்களில் நடைபெற்ற எந்த அரசியலமைப்பு மாற்றங்களும் எந்த உருப்படியான நன்மைகளையும் தமிழ்மக்களுக்குத் தரவில்லை. எனவே தமிழ்மக்களுக்குச் சாதகமானதொரு புதிய அரசியலமைப்பை எதிர்பார்ப்பது இலவுகாத்த கிளியின் கதையாகத்தான் முடியும்.
இன்றைய களநிலையில் இலங்கைத்தமிழர்கள் தமது சமூக பொருளாதார அரசியல் இருப்பைக் காப்பாற்றித் தமது அடையாளத்தை நிலை நிறுத்த வேண்டுமாயின் இயலுமான வழிகளிலெல்லாம் குறைந்தபட்ச அதிகாரங்களுடனாவது ஓர் அதிகாரப்பகிர்வுக் கட்டமைப்பை உடனடியாக உருவாக்கி வலுப்படுத்த வேண்டும். இது ‘நோயாளி’ ஒருவரின் உயிரைக் காப்பாற்றுவதற்கு அளிக்கப்படும்’ முதலுதவிச் சிகிச்சை’ போன்றதாகும் என்பது ஏற்கெனவே இப்பத்தித்தொடரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்கான வழிமுறைகளை இத்தொடரின் அடுத்த பத்தி (சொல்லத்துணிந்தேன்-88) பேசும்.