மட்டக்களப்பின் இன்னோர் பக்கத்தை  பேசுகின்ற  நமது  தவராஜா

மட்டக்களப்பின் இன்னோர் பக்கத்தை பேசுகின்ற நமது தவராஜா

— பேராசிரியர் சி. மௌனகுரு —

 “அரங்கம் இரா. தவராஜா” என பொதுவாகப் பலராலும் அழைக்கப்படும் தவராஜா மட்டக்களப்பை, மட்டக்களப்பு மக்களுக்கும் வெளியுலகுக்கும் தெரியப்படுத்துபவர்களுள் முக்கியமானவர். ஒரு வகையில் அவர் மட்டக்களப்பின் ஓர் அடையாளமும் ஆவர். அதற்கான தகுதிப்பாடுகளை தனதுசொற்களாலும் எழுத்துக்களாலும் செய்கைகளாலும் வாழ்க்கை முறையினாலும் ஏற்படுத்திக்கொண்டவர். 

அவர்  முதலில் ஓர் சிறந்த பேச்சாளர்,   

அத்தோடு இவர் நாடக நடிகர், கவிஞர் சிறுகதை ஆசிரியர், கட்டுரையாளர், பத்திரிகை ஆசிரியர், அரசியல் சார்புடையவர், சமூகசேவகர் என பன்முகம் கொண்டவர்.  

இந்தப் பன்முகத்தன்மை அவரது ஆளுமைகளுள் ஒன்று.  

அவர் என்னைவிட இளையவரானமையினால் அவரது இச்செயற்பாடுகளை அருகிலிருந்து அவதானிக்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்துள்ளது.  

அரசடி பாடசாலையில் படிக்கும் அச்சிறுவயதிலேயே அவரது நாடக ஆர்வமும் பேச்சார்வமும் ஆரம்பித்து விட்டன. அவர் தனது வாழ்நாளில் 23 நாடகங்களில் நடித்திருக்கிறார் என அறிகிறேன், 1973 தொடக்கம் 1982 வரை மட்டக்களப்பில் நடந்தேறிய பௌர்ணமி நிகழ்ச்சிகளில் அவரது இந்த நாடகத்திறன்கள் வெளிப்பட்டன. 

தனது முதிராஇளம் வயதில் தமிழரசுக்கட்சி அன்று நடத்திய சத்தியாக்கிரகங்களிலும், சட்டமறுப்பு போராட்டங்களிலும் ஈடுபட்ட இவர் 1976 களில் இளைஞர் பேரவையுடனும் இணைந்து, தீவிரமாகச் செயற்பட்டுமுள்ளார். இன்றுவரை அவருக்கென ஓர் அரசியல் பார்வை, அரசியல் நோக்கு, அரசியல் செயற்பாடு உண்டு.  

1990 களில் கவிஞராக முகிழ்த்த தவராஜா, தொலைந்துபோன சுதந்திரம், நாளைய நாம் என இரு கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். பல கவி அரங்குகளில் கலந்துகொண்டுமுள்ளார்.  

அவர் பேச்சும் கவிதைகூறும் விதமும் சுவராஸ்யமாயிருக்கும். சொற்களில் விளையாடுவார்.  

அவரால் ஆரம்பிக்கப்பட்டு இரு மாதத்திற்கு ஒருமுறை வெளியாகிய “அரங்கம்” எனும் பத்திரிகை மூலம் “அரங்கம்தவராஜா” என பின்னர் அனைவராலும் அழைக்கப்பட்டார்.  

மிக முக்கியமானவர்கள் பங்களிப்புச் செய்த அந்தப் பத்திரிகையின் 17 இதழ்கள் வெளிவந்துள்ளன.  

அரசியல் அரங்கம், நாடக அரங்கம், விளையாட்டு அரங்கம், அன்னையர் அரங்கம், கவிஞர் அரங்கம் என ஓவ்வொரு முறையும் அது ஒவ்வொரு அரங்கமாக வெளிவந்தது.  

மட்டக்களப்பின் பத்திரிகை இல்லாக் குறையை அது ஓரளவு அன்று நிவர்த்திசெய்தது.  

இவர், இப்போது அவ்வப்போது தினகரன், வீரகேசரி, அண்மைக்காலத்தில் மட்டக்களப்பில் இருந்து வெளியான வார இதழான அரங்கம்(இது வேறு அரங்கம். சீவகனால் வெளியிடப்பட்டது), தமிழ் அலை முதலான பத்திரிகைகளில் தான் எழுதிய கட்டுரைகள் சிலவற்றைத் தொகுத்து ஓர் கட்டுரைத் தொகுதியாக வெளியிடுகிறார்.   

அவ்வப்போது இக்கட்டுரைகளை நான் படித்திருந்தாலும் ஓரிடத்தில் முழுமையாக ஒருங்கு சேரப்படிக்கையில் அதன் மூலம் தவராஜாவின் உலகப்பார்வைச் சிந்தனைப் போக்கை அறிந்து கொள்ளமுடிகிறது.  

இத்தொகுதிக்கு அவர்  இட்டிருக்கும் பெயரே இதற்குச் சான்றாகும். இத்தொகுதியின் பெயர் மட்டுநகரின் இன்னொரு  பக்கம் என்பதாகும்.  

இதுவரை மட்டக்களப்பின் ஒரு பக்கமே காட்டப்பட்டது. இது இன்னொரு பக்கம் என்று கூறுமாப்போல இந்நூல் அமைந்துள்ளது.  

இதுவரை மட்டக்களப்பு பற்றி எழுதியோரையும் அவர்கள் எழுதிய பிரபல நூல்களையும் நாம் அறிவோம். சுவாமி விபுலாந்தர் எஸ்  ஓ  கனகரத்தினம் தொடக்கம் வித்துவான்களான வீ.சீ.கந்தையா, எப் எக்ஸ்  சீ நடராஜா ஆகியோருக்கூடாக வெல்லவூர்க் கோபால் தங்கேஸ்வரிவரை பலர் மட்டக்களப்பு பற்றி எழுதியுள்ளார்கள். 

இவர்களிலிருந்து தவராஜா மாறுபடுகிறார்.   

முன் குறிப்பிட்டோரில் மிகபெரும் பாலானோர் மட்டக்களப்பின் பெருமையான பக்கங்கள் பற்றியே கூறினார்கள். சில பக்கங்களைப் பேசவேயில்லை தவிர்த்தார்கள். அது அவர்களது கருத்தியல். இங்கே தவராஜாவோ விடுபட்ட பக்கங்களைப் பேசுகிறார்.அது மட்டக்களப்பின் மறுபக்கம்.  

இந்தியா பற்றிக் கூறுகையில் ஓரிடத்தில் மஹாகவி பாரதியார் நமது இதிகாசம், நமது புராணம், நமது இலக்கியம்,  நமது கட்டிடம், நமது மாளிகை, நமதுகுடிசை, நமது சாதாரண மக்கள் எனவரையறை செய்கிறார்.  

மன்னர்கள் – சாதாரண மக்கள், மாளிகைகள்- குடிசைகள் அனைத்தும் சேர்ந்துதான் இந்தியா என்பது பாரதியாரது கண்ணோட்டம். அக்கண்ணோட்டம் பலரிடம் இருப்பதில்லை, இரு பக்கங்களையும் பார்க்கும் கண்ணோட்டம் அது.  

மட்டக்களப்பின் பெருமையை புராதனத்தை வலியுறுத்த புதைபொருள் சின்னங்கள் தேடி, அலைந்து பழைய மன்னர் வாழ்வை வெளிகொணரத்துடிக்கும் நமது சரித்திர ஆசிரியர்கள் அக்காலத்தில் வாழ்ந்த சாமானியரைப்பற்றி அவர்கள் பாவித்த பொருட்கள் பற்றி அதிகம் கவனம் செலுத்துவதில்லை.  

அது சமூகப் புதைபொருள்( Social Archeology) ஆய்வு சம்பந்தமான விவாதம்.  

வரலாற்றில் சாமானியரே மிகப் பிரதானமானவர், அவர்கள் வாழ்வே உண்மையான வரலாறும் ஆகும். அவர்கள் தமக்கென கல்வெட்டு ஆவணம் எழுதிவைக்கும் திறனில்லாதவர்கள். அவர்கள் தமது வரலாற்றைத் தமது நினைவுகளில் தேக்கி வைத்திருப்பர். நினைவுகளை வரலாற்றுத் தரவுகளாகக்கொள்ளும் புதியபோக்கு இன்று ஆய்வுலகில் வளர்ந்துவருகிறது.  

தவராஜா இக்கட்டுரைத்தொகுதி மூலம் அத்தகைய ஆய்வுப்போக்குக்கு உதவி செய்பவராகின்றார்.  

அரங்கத்தில் வெளியான, மட்டக்களப்பின்திரை அரங்குகள்  பற்றிய கட்டுரையில் அக்காலத்தில் இருந்த கல்லால் கட்டப்பட்ட திரை அரங்குகள், திரை அரங்கமாக இருந்த கூடாரங்கள் பற்றித் தகவல் தருவதோடு அவற்றோடு சம்பந்தமுடைய ரேஸ்ட்கடை, அன்று சினிமா அரங்குகளின் முன்  காணப்பட்ட ஓப்பனா எனும் பிச்சைக்காரன் என தகவல் தருகையில் மட்டுநகரின் இன்னொரு பக்கம் விரிகிறது. 

அவரது இன்னொரு கட்டுரையான (இதுவும் அரங்கத்தில் வெளியானது) வக்கிக்கரத்தை முதல் ஓட்டொரிக்சா வரை எனும் கட்டுரை சுவராஸ்யமான கட்டுரை ஆகும். அக்கால கட்டத்தில் மட்டக்களப்பில் போக்குவரத்திற்குதவிய இவ்வக்கிக்கரத்தைதான் மக்கள் பாவித்த அன்றைய கார் ஆகும்.  

அதன் தகவல்களைத் தந்து பின்னர் அது எப்படி வாடகைக் காராக வந்து ஓட்டோரிக்ஸாவாக மாறியது என்ற கதையை சுவராஸ்யமாகக் கூறுகிறார். 

இதில் அவர்தரும் நுணுக்கத் தகவல்கள் முக்கியமானவை கார் இலக்கங்கள் கூடத் தந்துள்ளார். அவர்தரும் இத்தகவல்கல் ஒரு சமூகவியல் ஆய்வாளனுக்கு மிக முக்கியமானவை.  

மட்டக்களப்பில் உலாவந்த மண் எண்ணெய்க் கரத்தைகள் எனும் கட்டுரை இன்னொரு முக்கியமான கட்டுரை, மின்சார யுகத்தில் வாழும் இன்றைய தலைமுறைக்கு அன்றைய மண் எண்ணை யுக  வாழ்வு தெரியாது. வென்கலத்தால் அல்லது தகரத்தால் அல்லது போத்தலால் செய்யப்பட்ட குப்பிலாம்புகளில் மண்ணெண்னை ஊற்றி எரித்து வரும் வெளிச்சமே அன்றைய மின்சார வெளிச்சம். அதில்தான் நம்முன்னோர் இரவில் வாழ்ந்தனர். அந்த மண் எண்ணெயைக் கொண்டு வீதி தோறும் செல்லும் இந்த மண் எண்ணெய் கரத்தையை எதிர்பார்த்தபடி வீட்டு பெண்கள் நிற்பர். இதனை இதுவரையாரும் பதிவுசெய்யவில்லை தவராஜா இங்கு பதிவுசெய்கிறார். 

மட்டக்களப்பு மாநகரசபைக்குள் இல்லாதழிக்கப்பட்ட மலசல கூடங்கள் என்பது இன்னொரு முக்கிய கட்டுரையாகும். இதுவும் அரங்கத்தில் வெளியானது. இப்படியொரு கட்டுரையை நான் இதுவரை காணவில்லை, குழிக்கக்கூஸுகளும் கொமட்டுகளும் என நாகரீக மலசலகூட காலத்தில் வாழும் நமது இன்றைய தலை முறைக்கு மனிதர் மலத்தை மனிதரே அள்ளிய அந்தக் காலம் தெரிய வாய்ப்பில்லை.    

காட்டுக்குள்ளேயே மலம் கழித்த நம்முன்னோர், நகரவாழ்வு வந்த பின்னர் வாளிக் கக்கூஸுக்கு பரிச்சயமாயினர். அந்த மல வாளி சுமக்கும் கூட்டமும் உருவானது. அதன் ஒரு பரிணாமமே இந்தப் பொது மலசல கூடம். மட்டக்களப்பில் எங்கெங்கே பொது மலசல கூடங்கள் இருந்தன என அவர் தகவலும் தருகிறார். அவ்விடங்கள் எல்லாம் இப்போது கடைகளும் வீடுகளுமாகிவிட்டன.  

இக்கட்டுரை மட்டக்களப்பின் இன்னொரு பக்கத்தை அழுத்திக்கூறும் இன்னொரு நல்லகட்டுரையாகும். 

இதேபோல மட்டக்களப்பின் பேசப்படாத பக்கங்களான மட்டக்களப்பின் கிறிஸ்தவ நாடகஅரங்கு, மட்டக்களப்பில் வாழும்பறங்கியர் சமூகம், மட்டக்களப்பு மறந்துபோன வெபர்  அடிகளார் இடையில்வீசிச் சென்ற சூறாவளி என பலதெரியாத தகவல்கள் பற்றிய கட்டுரைகளும் இதில் வருகின்றன. 

ஒரு வகையில் மட்டக்களப்பின் சமூக வரலாற்றை அறிவதற்குரிய பல அறியப்படாத தகவல்கள் இங்கு பதியப்பட்டுள்ளன. நான் முன்னர் கூறியது போல நினைவுகள் இங்கு எழுத்தில் வருகின்றன. இவையே இந்நூலின் முக்கிய அம்சங்களாக எனக்குப்படுகின்றன.  

தவராஜாவின் உலகநோக்கு அவரது கருத்து நிலை என்பனவற்றை  இக்கட்டுரைகள் மூலம்தெரிந்து கொள்கிறோம்.  

அவரது எழுத்துநடையும் சொல்லாட்சியும் இலகுவாகவும் தெளிவாகவும் உள்ளன. கதை சொல்லும் பாணியில் தகவல்களைக் கூறிக்கொண்டு செல்கிறார். பத்திரிகைக்காரார் அல்லவா சாதாரண மக்களை மனம் கொண்டு எழுதி உள்ளார். 

தவராஜா இத்தகை பழைய நினைவுகள் பலவற்றைத் தனக்குள் வைத்துக்கொண்டிருப்பவர். இந்தத் தலைமுறையுடன் அவையும் மறந்துவிடும். எனவே தவராஜா தனது பழைய நினைவுகளை ஒரு முழு நூலாக வெளியிடவேண்டும் என ஓர் வேண்டுகோளை இங்கு வைக்கிறேன்.    

அது மட்டக்களப்பின் மற்றப்பக்கங்களையும் அறிவதற்கோர் அரிய ஆவணமாகவும் இருக்கும் தவராஜாவுக்கு எனது வாழ்த்துகள்.