மட்டக்களப்பின் கிரிக்கெட் வளர்ச்சிக்கு தடை எது?

மட்டக்களப்பின் கிரிக்கெட் வளர்ச்சிக்கு தடை எது?

— விளையாட்டு விரும்பி —

உலக நாடுகளில் கிரிக்கெட் விளையாட்டு தற்போது மிகவும் பிரபல்யம் அடைந்துள்ள இக்கால கட்டத்தில் இலங்கையிலும் இக் கிரிக்கெட் விளையாட்டின்  ஆதிக்கம் அதிகமாகவே காணப்படுகின்றது.  

இதற்கு உதாரணமாக எமது கிரிக்கெட் வீரர்களான சங்ககார, மஹில, ஜெயசூரியா, முரளிதரன், ரணதுங்க, அரவிந்த போன்றோரை இன்றும் உலக நாடுகள் வியப்புடன் பார்ப்பதை கூறலாம்.

இந்தக்கால கட்டத்தில் இலங்கை கிரிக்கெட் அணிக்காக விளையாடிய தமிழர்கள் என கணக்கிட்டுப் பார்த்தால், மிகச் சிலரையே எமக்கு கூறமுடியும். அதுவும் வடக்கு, கிழக்கில் அல்லாமல் ஏனைய  பிரதேசங்களில் இருந்து கலந்து கொண்ட வீரர்களே அதிகம். அப்போது வடக்கு கிழக்கில் இருந்த போர் நிலைமை அதற்கு ஒரு காரணம் என்றாலும்,  இன்னுமொரு முக்கிய காரணமாகச் சொல்லப்படுவது வடக்கு, கிழக்கில் சரியான புற்தரை மைதானங்கள் இல்லாமை, போதிய பயிற்சி இல்லாமை ஆகியவையாகும். எந்தவொரு விளையாட்டுக்கும் களம், கட்டுமானங்கள் அவசியம். அதிலும் கிரிக்கெட்டுக்கு அது மிக அவசியம். உரிய தரை, விளையாட்டு உபகரணங்கள் அதற்கு மிகவும் அவசியம்.

கிரிக்கெட் வளர்ச்சியை பொறுத்தவரை வடக்கு, கிழக்கு ஆகிய இரண்டு மாகாணங்களிலும் நிலைமை மோசமாகத்தான் இருந்து வந்துள்ளது. அப்படி இருந்தும் வடக்கு மாகாணத்தில் கிரிக்கெட் மேம்பாட்டிற்கு பாரிய செயற்திட்டங்கள் முன்னெடுக்கபட ஓரளவு முயற்சிகள் நடக்கின்றன. ஆனால், கிழக்கு மாகாணம் மிகவும் பின் தங்கிய நிலைலேயே தொடர்ந்தும் இருக்கிறது.   

யாழ்பாணத்தைப் பொறுத்தமட்டில் புற்தரை மைதானத்தை 2014ம் ஆண்டே யாழ் பற்றிக் கல்லூரி கண்டு விட்டது. ஆனால் மட்டக்களப்பை பொறுத்தவரை இதுவரை ஒரு புற்தரை மைதானத்திற்கான அத்திவாரத்தினைக் கூட எம்மால் காண முடியாதுள்ளது. இது ஏன் என்பது பற்றி இங்குள்ள யாரும் ஆராயாத நிலைமை தொடருகின்றது. 

யாழ்பாணத்தில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்தும் நோக்கில் 2015 முதல் யாழ் மாவட்ட கிரிக்கெட் சங்கம் “மல்லாகம் பாஸ்கரன் விளையாட்டு மைதானத்தை” முப்பது வருட ஒப்பந்த அடிப்படையில் பெற்று, தம் போட்டிகளை நடாத்த தீர்மானித்து, செயற்படுத்தி வருகின்றது. ஆனால் மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கெட் சங்கம் 22 வருடங்களாக ஒரே நிர்வாக சபையை வைத்துக்கொண்டு எதுவித முன்னேற்றமும் அற்ற நிலையில் இருப்பதாக விமர்சனங்கள் இருந்து வருகின்றன. அரசினால் மைதானம் அமைக்க காணியும் வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் எதுவும் சரியாக நடந்ததாக தெரியவில்லை என்கிறார்கள் விளையாட்டு ஆர்வலர்கள். 22 வருடமாக ஒரு சபை அப்படியே இருப்பதை அவ்வளவு ஆக்கபூர்வமானதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. அதுவே முன்னேற்றத்துக்கு ஒரு தடையாகவும் இருக்கலாம் அல்லவா? 

2020 ஜனவரியில் யாழ் மண்டைதீவில் 50 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான விடயத்தினை அப்போதைய இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் தலைவர் திலங்க சுமதிபால நேரடியாக வந்து, ஆய்வு செய்து, அதற்கான மாதிரி படங்களையும் வெளியிட்டு இருந்தார். ஆனால் மட்டக்களப்பில் இருந்த அந்த ஒரு வெபர் மைதானத்தை கிரிக்கெட் விளையாட்டின் பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம் என மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கெட் சங்கம் அன்று தெரிவித்திருந்தால் ஒருவேளை, சிறந்ததொரு புற்தரை மைதானம் மட்டக்களப்பிற்கு கிடைத்திருக்கும். ஆனால் அது நடக்கவில்லை.

2020 யூலையில் யாழ் விஜயத்தை மேற்கொண்ட தற்போதைய இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் தலைவர் ஷம்மி சில்வா,  உள்ளுர் போட்டிகளை நடாத்துவதற்கு மல்லாகத்தில் 20 தொடக்கம் 25 மில்லியன் ரூபாய் முதலீட்டில் புற்தரை மைதானம் ஒன்றை அமைக்கவுள்ளதாகவும், வடக்கின் பாடசாலை கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்ய யாழ். இந்துக்கல்லூரி, சென் ஜோன்ஸ் கல்லூரி, யாழ் மத்திய கல்லூரிகளுக்கு புற்தரை ஆடுகளங்களை வழங்கவுள்ளதாகவும் குறிப்பிட்டதுடன், யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரியில் ஏற்கனவே இடப்பட்ட புற்தரை மைதானம் மேம்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.  

ஆனால் மட்டக்களப்பில் சிவானந்தா பாடசாலையின் மைதானமே ஒரே ஒரு பாடசாலை மைதானமாக காணப்படுகின்றது. இதில் கடின பந்து விளையாடுவதற்கான எது வித வசதிகளும் காணப்படவில்லை.  புற்தரை என்பது எமது வீரர்களுக்கு கனாவாகவே இருந்துவருகின்றது.  

இம்மைதானத்தில் தான் மட்டக்களப்பில் நடைபெறும் கண்காட்சிகள், கலைநிகழ்வுகள், களியாட்டங்கள், பாடசாலை போட்டிகள் என எல்லாம் நடக்கின்றன. இந்த விளையாட்டு மைதானத்தை புனரமைத்துக் கொடுக்க மட்டு மாவட்ட கிரிக்கெட் சங்கம் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சங்கத்திடம் இதுவரை எந்த முன்மொழிவுகளையும் சமர்பித்ததாகத் தெரியவில்லை. ஆனால் மட்டு மாவட்ட கிரிக்கெட் சங்கத்தால் நடாத்தப்படும் சகல போட்டிகளும் இம்மைதானத்திலேயே நடைபெற்றுவருவது யதார்த்தம்.

2020 செப்டம்பர் மாதம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய வன்னி மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தன் உரையில் தம் மண்ணின் இளைஞர்களுக்கான விளையாட்டுத் திறனை மேம்படுத்த முல்லைத்தீவு, மன்னார், வவுனியா போன்ற மாவட்டங்களில் மைதானங்களை அமைக்க 2021ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.  

இதன் அடிப்படையில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கருத்து தெரிவிக்கையில் முல்லைதீவு, மன்னார் மாவட்ட விளையாட்டு மைதான பணிகளை பூர்த்தி செய்யவும், வவுனியா, மன்னார், யாழ் மாவட்ட பாடசாலைகளின் முன்னேற்றத்திற்கும் தேவையான நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்ததுடன், முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டு மைதானத்திற்கான காணியின் அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும், மன்னார் மாவட்டத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க 32 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மன்னார் எமில் நகர பொது விளையாட்டு மைதானம் மிக விரைவில் பாவனைக்கு வரும் என்றும், நிச்சயமாக 2021 வரவு செலவு திட்டத்தின் ஊடாக அனைத்து மைதானத்திற்கும் நிதி ஒதுக்கப்படும் எனுவும் தெரிவித்தார்.  

எமது மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலைமையை அங்கு குறிப்பிட எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் தவறிவிட்டனர். 

நான் பாராளுமன்றம் சென்றால் சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானம் ஒன்றை மட்டக்களப்பில் அமைத்துத் தருவேன் என தேர்தல் காலங்களில் வாக்குறுதி தந்தவர்கள் இதற்கு என்ன பதில் கூறுவார்கள் என்று தெரியவில்லை. 

இப்படியான ஒரு சூழ்நிலை எம்மண்ணில் தொடர்ந்தால் எப்படி நம் வீரர்கள் தேசிய அணியில் இடம் பிடிப்பார்கள்? நிச்சயம் யாழ் மண்ணில் இருந்து ஒரு வீரர் தேசிய அணியில் இடம் பிடிப்பார். அது மகிழ்ச்சிக்குரிய விடயம். ஆனால் நாமோ இன்னும் இன்னும் மற்றவரை குறை கூறியபடி வாழ்ந்தே தீரவேண்டிவரும்.

இதற்கான தீர்வுகளில் ஒன்றாக, முதலில், 22 வருடங்களாக ஒரே நிர்வாக சபையைக் கொண்டு செயற்பட்டுவரும் மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கெட் சங்கம், புதிய இளைஞர்களை உள்வாங்கி மறுசீரமைக்கப்பட வேண்டும். 

தற்போது இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டக்களப்பில் உள்ள மைதானங்களை கணக்கிட்டு சர்வதேச தரத்திலான ஒரு மைதானத்தை அமைத்து தரும்படி புதிய விளையாட்டு அமைச்சரிடம் கோர வேண்டும், பாடசாலை மைதானமாகிய சிவாந்தா விளையாட்டு மைதானத்தை புற்தரை மைதானமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மட்டக்களப்பில் உள்ள மைதானங்களுக்கு வெறுமனே கிரவல் மண் நிரப்பி விட்டு, உரிய மைதானம் அமைப்பட்டுள்ளதாக கூறாமல், அதற்கான புற்கள் நடுவதற்கான கோரிக்கையை விளையாட்டு அமைச்சரிடம் கூறவேண்டும். அதன்மூலம் மேலும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பையும் பெற்றுக்கொடுக்க முடியும்.

வன்னி பாராளுமன்ற உறுப்பினர் இளைஞர்களின் விளையாட்டுக்காக எழுந்து நின்று பேசும்போது ஏன் எம் பாராளுமன்ற உறுப்பினர்களால் பேச முடியாது? அவர்கள் இப்படியான நடவடிக்கைகளை ஆரம்பிப்பதன் மூலம் எமது மாவட்ட மண்ணில் இருந்தும் தேசிய அணியில் வீரர்கள் இடம்பெறுவதற்கான அத்திவாரத்தை போட வேண்டும்.

(விளையாட்டு குறித்த ஆக்கங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. கிரிக்கெட் மாத்திரமன்றி, ஏனைய அனைத்து விளையாட்டுகள் குறித்த தகவல்களும் எதிர்பார்க்கப்படுகின்றன. அவற்றை அரங்கத்துக்கு அனுப்ப Seevagan@hotmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்) 

விளையாட்டுச் செய்திகளுக்கான அனுசரணை

கோட்டைமுனை விளையாட்டுக் கழகம்