பெற்ற மனம்!    (சிறுகதை)

பெற்ற மனம்! (சிறுகதை)

— பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா, அவுஸ்திரேலியா —

அந்த ஊர்வலம் மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறது. அது ஒரு மரண ஊர்வலம். பறை அடிப்பவர்கள் முன்னால் செல்கிறார்கள். அவர்களில் ஒருவரின் தோளில் தொங்குகின்ற பறைமேளத்தின் ஒருபக்கத்தில் விரல்களாலும் மறு பக்கத்தில் மெல்லிய கம்பினாலும் அடித்து வாசிக்கிறார். ஒருபக்கம் மட்டும் தோலால் அமைந்த சிறியதொரு மேளம் மற்றொருவரது கழுத்திலேயிருந்து அவரின் அடிவயிற்றோடு தொங்குகின்றது. இரண்டு கைகளிலும் கேள்விக்குறிபோல வளைந்திருக்கும் கம்புகளால் அந்தச் சிறுமேளத்தில் அவர் அடித்துக் கொட்டிக்கொண்டிருக்கின்றார். இன்னும் ஒருவர் ஒருமுழம் நீளமான குழல் ஒன்றை வாயில் வைத்து ஊதிக்கொண்டிருக்கின்றார். இந்தப் பறை மேளச் சத்தமும், குழலோசையும் மரண ஊர்வலத்தின் இன்றியமையாத அடையாளங்களாக மட்டுமன்றி, சுற்றுச்சூழலுக்கும், தொடர்ந்து வருவோருக்கும் சோக உணர்வை ஏற்படுத்தும் சாதனங்களாகவும் அமைகின்றன. 

வாழை மரக் குற்றிகளால் நான்கு கால்களும், மூங்கிலாலும், பூவரசங் கம்புகளாலும் படுக்கையும், புல்லாந்திக் கம்புகளை வளைத்து விதானமும், சேலைகளாலும், பல்வேறு பூக்களினாலும் செய்யப்பட்ட அலங்காரமுமாக ‘சவக்கட்டில்’ என்று சொல்லப்படும் அந்தப் பாடையை நான்குபேர் தூக்கிச் சென்றுகொண்டிருக்கிறார்கள்.  

அந்தக் கட்டிலில் ஐம்பது வருடங்களே இந்த உலகில் வாழ்ந்த தங்கம்மாவின் உயிரற்ற உடல் மரக்கட்டைபோலக் கிடக்கிறது. அதன் பின்னால் தங்கம்மாவின் தமக்கையின் மகன் கொள்ளிக் குடத்தைத் தூக்கிக்கொண்டு செல்கின்றான். அவன்தான் இன்றைக்குத் தங்கம்மாவுக்கு கொள்ளிக்குடம் உடைக்கப் போகிறான். தங்கம்மாவின் வீட்டிலிருந்து புறப்பட்ட ஊர்வலம் பிரதான வீதியைக் கடந்து இப்போது கடற்கரைவீதியில் சென்றுகொண்டிருக்கின்றது. கடற்கரையில்தான் பொது மயானம் இருக்கிறது. மயானத்திற்குப் பெண்கள் செல்லும் வழக்கம் இல்லாததால் ஆண்கள் மட்டுமே சவத்திற்குப் பின்னால் நடந்து கொண்டிருக்கின்றார்கள். துவிச்சக்கர வண்டியை உருட்டிக்கொண்டு சிலர் நடக்கிறார்கள். சிலர் ஏறி அமர்ந்து மிகமெதுவாக மிதித்துக்கொண்டு ஊர்வலத்தின் பின்னால் வருகிறார்கள். ஊர்வலத்தோடு ஒதுங்கிக் கொண்டே நடந்து சென்றுகொண்டிருந்த “அம்பட்டன்” வீதியோரத்தில் வளர்ந்திருந்த பிரண்டைக் கொடிகளை நடந்தவாறே பறித்துத் தன் பையினுள் போட்டுக்கொள்கின்றான். மயானத்தில் பிணத்தைக் கொள்ளிக்குடம் உடைப்பவர் சுற்றி வரும்போது கத்தியால் மூன்றுமுறை குடத்தில் கொத்தி அதை உடைக்கும் கிரியையில் இந்தப் பிரண்டைக்கொடி அவனுக்குத் தேவைப்படும். அவனது தொழில் அக்கறை அவனுக்கு!  

சவ ஊர்வலத்தில் திடீரென்று ஒரு சலசலப்பு. எல்லோரும் முன்னால் ஒருமுறை எட்டிப் பார்த்துவிட்டு தலை குனிந்தபடி நடக்கிறார்கள். இனம்புரியாத பய உணர்ச்சி ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஊடுருவுகின்றது. தங்கள் தங்கள் குல தெய்வங்களை மனதுக்குள் வேண்டிக்கொண்டபடி, மௌனமாக நடக்கிறார்கள். எதிர்த் திசையிலிருந்து இந்திய அமைதிகாக்கும் படையினர் வந்துகொண்டிருக்கின்றார்கள். வீதியின் வலப்பக்கத்தில் ஊர்வலம் சென்றுகொண்டிருக்கின்றது. இடப்பக்கத்தில் அவர்கள்! ஏறத்தாழ ஐந்து அடி இடைவெளிவிட்டு ஒருவர்பின் ஒருவராக இந்தியப்படையினர் ஆயுதங்களை ஏந்தியவாறு வந்துகொண்டிருக்கின்றார்கள். சவ ஊர்வலம் முன்னேறுகிறது. எதிரே வந்துகொண்டிருந்த படையினர் ஊர்வலத்தைக் கடந்து சென்றுகொண்டிருந்தார்கள். ஊர்வலத்தில் சென்றுகொண்டிருந்த சிலர் தலையை மெல்லத் திருப்பிப் படையினர் தங்களைத் தாண்டிப் போவதைப் பார்த்த பின்னர், இயல்பாக மூச்சுவிட்டு நிம்மதியாக நடக்கின்றார்கள். அதுவரை ஊர்வலத்தில் இருந்த இனம்புரியாத இறுக்கம் தளர்கிறது. 

கணபதிப்பிள்ளை ஆசிரியரும் இன்னும் சிலரும் சிவபுராணம் பாடிக்கொண்டு நடக்கின்றார்கள். மௌனமாகச் சிலரும், பலதையும் பத்தையும் பேசிக்கொண்டு சிலருமாக ஊர்வலம் சுடலையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றது. அரசியல் நிலைவரங்கள், அடுத்த வீட்டுப் பிரச்சினைகள், முன்னர் செத்தவர்கள் பற்றிய தகவல்கள், ஊரிலே சாகக் கிடக்கும் கிழடுகட்டைகள், நோயுற்றவர்கள் பற்றிய விபரங்கள் என்றிப்படி ஊர்வலத்தில் செல்வோரிடையே இருவர் மூவர் இணைந்த சம்பாசணைகளாகத் தொடர்ந்து காற்றோடு கலந்துகொண்டிருக்கின்றன. பிணமாகச் செல்லும் தங்கம்மாவின் குணநலன்களும் பேசப்படுகின்றன. 

 ‘..ச்ச.. தங்கம்மா ஒரு தங்கமான மனுசி. அவளுக்கென்ன சாகிற வயதா?’ 

‘.தகப்பனத் தின்னி.. அந்த ஒரேயொரு பொம்பிளைப் பிள்ளைக்குத்தான் ஒரு வழியும் இல்ல….அந்தப்பிளைளைய ஒருத்தன்ர கையில புடிச்சிக் குடுத்திருந்தா தங்கம்மாட சீவன் நிம்மதியாப் போயிருக்கும்.’ 

‘ரெண்டு ஆம்புளப் புள்ளையளப் பெத்தும் அவளுக்கு நிம்மதியில்ல. இண்டைக்குக் கொள்ளி வைக்கிறத்துக்கும் ஒருவன் இல்ல’ 

 ‘அவனுகள் இனியென்னத்துக்குக் கொள்ளி வைக்கிற? அதுதானே உயிரோட வைச்சிற்றானுகளே.’ 

‘எண்டாலும் தங்கம்மாவுக்கு இப்பிடியொரு சாவு வந்திருக்கப் பொடாது.’ 

………………    ……………    ……………. 

தங்கம்மாவுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள். ஒரு பெண்பிள்ளை. பெண் பிறந்து மறுவருடமே தங்கம்மாவின் கணவன், ஆற்றிலே மீன் பிடிக்கப்போனவன் முதலைக்குப் பலியாகிவிட்டான். முதலை பிடித்தபோது அவன் போட்ட கூச்சல் ஆற்றங்கரையில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மற்றவர்களுக்குக் கேட்டும், அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. தங்கம்மா கட்டியழுவதற்குக் கணவனின் உடலின் ஒரு பகுதியைக்கூட முதலை விட்டு வைக்கவில்லை. 

சின்னக் குழந்தைகள். சீராக வளர்க்க வேண்டும் என்ற ஆசை. தங்கம்மா அடுப்படியில் கிடந்த கஷ்டப்பட்டாள். அப்பம் சுட்டு விற்று, பிள்ளைகளை வளர்த்தாள். பள்ளிக்கு அனுப்பினாள். ஆண் பிள்ளைகள் இரண்டும் படிப்பில் மிகுந்த கெட்டிக்காரர்களாய் விளங்கினார்கள். மூத்தவன் மோகன். அடுத்தவன் செல்வன். இருவருமே படிப்பிக்கும் ஆசிரியர்களின் விருப்பத்திற்குரிய மாணவர்களாய்த் திகழ்ந்தார்கள். பாடசாலையில் இருவருக்கும் நல்ல பெயர். 

1983 ஆம் ஆண்டின் இனக்கலவரமும் அதனைத் தொடர்ந்து தமிழ் மக்களுக்கெதிரான அடக்கு முறைகளும் அடுத்த சில வருடங்களில் இயக்கங்களில் அதிகமான இளைஞர்கள் இணைவதைத் தூண்டின. தெரிந்துகொண்டு இயக்கங்களில் சேர்ந்தவர்கள் சிலர். எந்த இயக்கம், எங்குபோகிறோம் என்று தெரியாமல், எந்த இயக்கத்தில் சேரப்போகிறோம் என்று தீர்மானமே இல்லாமல் காட்டுவழியாகக் கனதூரம் பயணம் செய்து கூட்டிச் சென்றவர் காட்டிய இயக்கங்களில் சேர்ந்தவர்கள் சிலர். அப்படித்தான் மோகனும் ஒருநாள் பள்ளித் தோழர்கள் சிலரோடு கடல் கடந்து படகேறிச் சென்றான். 

இயக்கங்கள் ஒன்றோடொன்று பிரச்சினைப் பட்டுக் கொண்டிருந்தகாலத்தில், மோகன் தாயைப்பார்க்க வீட்டுக்கு வரும்போதெல்லாம் அவனுக்கும் செல்வனுக்கும் வாக்குவாதம் நடந்துகொண்டேயிருந்தது. செல்வனுக்கு மோகன் சார்ந்துள்ள இயக்கத்தை ஏனோ பிடிக்கவில்லை. அப்போது செல்வன் க.பொ.த. உயர்தர வகுப்புப் படித்துக்கொண்டிருந்தான். ஒருநாள், கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு அவன் தலைமறைவானான்.  

‘அம்மா. என்னை மன்னித்துவிடு. என் மனச்சாட்சி என்னைப் படிக்க விடாமல் தடுக்கிறது. அதனால் நான் நாட்டுக்காகப் போகிறேன். என்னைத் தேடவேண்டாம். ஒருநாள் திரும்பி வருவேன். அன்புள்ள மகன் செல்வன்.’ 

செல்வன் வீட்டைவிட்டுச் சென்று இரண்டு வருடங்களுக்குப் பின்னர், மோகன் சார்ந்த இயக்கம் அந்த மாவட்டத்தில் சுதந்திரமாகத் திரியத் தொடங்கியது. அவன் தனது சொந்த ஊரில் ‘ஏரியா பொறுப்பாளராக’ நியமிக்கப்பட்டான். மோகன் இயக்கத்தில் சேர்ந்தபோது தங்கம்மா கண்ணீர்விட்டுக் கதறினாள். அன்றிலிருந்து அவளது இதயம் முழுவதும் விண்ணென்று ஒருவலி நிரந்தரமாகவே இடம்பிடித்துக்கொண்டிருந்தது. எந்த நேரம் அவனது மரணச் செய்தி வருமோ என்று ஒவ்வொரு கணமும் பதைபதைத்துக் கொண்டு வாழ்ந்தாள். ஆனால், தன்மகன் ஏரியா பொறுப்பாளராக வந்து,  ஊர்மக்களை அதிகாரம் செய்வதை அவள் கண்ணாரக் காண நேர்ந்த போது விண்ணென்று வலித்துக் கொண்டிருந்த இதயத்திலும் தண்ணென்ற சுகம் ஒன்று தானாகப் பரவத் தொடங்கியது. பயத்தின் மத்தியிலும் ஒரு பரவசம். கவலைக்கு மத்தியிலும் ஒரு களிப்பு. சோகத்திலும் ஒரு சுகம். ஏழ்மையிலும் ஓர் இறுமாப்பு. தங்கம்மாவுக்கு அப்போதெல்லாம் ஊரில் நல்ல மதிப்பு. அவளைக் கண்டதும், ஊர்ப் பெரியவர்கள் சிறியவர்கள் எல்லோரும் ஒரு மரியாதை, புன்சிரிப்பு, சுகசேதி விசாரிப்பு. இவையெல்லாம் நெஞ்சில் இருந்து வரும் நிலையான அன்பின் வெளிப்பாடுகளல்ல என்பதையும்,  ஏரியா பொறுப்பாளராக மகன் இருப்பதால் தற்பாதுகாப்புக்காக எல்லோரும் நடிக்கிறார்கள் என்பதையும், தங்கம்மா உணர்ந்திருந்தாளா, அல்லது ஊரார் தரும் அந்தப் போலிக் கௌரவங்களை உண்மையென்று எண்ணி அதில் சோரம் போயிருந்தாளா என்பதெல்லாம் தங்கம்மாவுக்குத்தான் வெளிச்சம். 

நாட்கள் நகர்ந்தன. மாதங்கள் மறைந்தன. வருடங்கள் கடந்தன. செல்வன் ஒரு நாள் தாயைக்காண வந்து போனான். தலைமறைவாக இருக்கும் இயக்கத்தில் அவன் ஓர் உறுப்பினன். பயிற்றப்பட்ட போராளி. அதே போராட்டத்திற்கெனப் புறப்பட்டு, அப்போது சுதந்திரமாகத் திரிவதற்கு அனுமதிக்கப்பட்ட மற்றொரு இயக்கத்தில் மோகன் ஏரியா பொறுப்பாளி. செல்வன் வீட்டுக்கு வந்து போனதை மோகன் எப்படியோ அறிந்து கொண்டான். தாய்மீது சினந்தான். சீறினான். 

‘அம்மா! அவன் இந்த ஏரியாவுக்குள்ள வரக்கூடாது. வந்தால் சுடுவன். அவனிட்டச் சொல்லிவையுங்க. அவனையோ அவன்ர இயக்கத்துக் காறனையோ அண்டவிட்டால் உங்களை நான் அம்மா எண்டும் பார்க்க மாட்டன்’  

கூடப்பிறந்தவனைக் கொன்றுவிடுவேன் என்று அவனை மட்டுமன்றித் அவளையும் பத்துமாதம் சுமந்து பெற்ற அந்தத் தாயிடம் அச்சுறுத்தி விட்டுச் சென்றான்.  

வீட்டுக்காக எதுவுமே செய்யாமல், நாட்டுக்காகப் போராடப்புறப்பட்ட மூத்த மகனின் வார்த்தைகள் நெருப்பில் காய்ச்சிய ஈட்டிகளாக அந்தத் தாயின் நெஞ்சில் பாய்ந்தன. ஒரே வயிற்றில் கருவான இரண்டு மக்களும் எதிரெதிரத் திசைகளில். ஒருவனைக் கொல்ல மற்றோருவன் துரத்தும் நிலை. எந்தத் தாயுள்ளம் இதனைத் தாங்கும்? ஒவ்வொரு நிமிடமும் அவள் துடியாய்த் துடித்தாள். எவன்கையால் எவன் சாவானோ என்று நெஞ்சம் வெடித்தாள். இருவரிடமும் எவ்வளவோ சொல்லிப்பார்த்தாள். தான் பட்ட துன்பங்கள், அவர்களை வளர்ப்பதற்குப் பட்ட கஷ்டங்கள், அவர்களுக்கிடையிலான பாசப்பிணைப்புக்கள் எல்லாவற்றையும் தனித்தனியாக இருவரிடமும் அழுதழுது கண்ணீர்மல்கி எடுத்துக் கூறினாள். ஒருவனுக்காக மற்றவனிடம் உயிர்ப்பிச்சை கேட்டுக் கெஞ்சினாள். இருவரிடமிருந்தும் பதில் இறுமாப்பாகவே வந்தது. இருவரும் தாங்கள் சார்ந்த இயக்கத்திற்கு விசுவாசிகளாக இருந்தார்கள். ஒருவருக்கொருவர் விரோதிகளாக செயற்பட்டார்கள். 

அன்று தங்கம்மாவின் கணவனின் ஆண்டு அமுது. இறந்த திதி. எவ்வளவு கஷ;டப்பட்டாலும் ஒவ்வோர் ஆண்டும் கணவனின் இறந்த திதியில் ஐயரை அழைத்து, சங்கு ஊதி, ஏதோ தன்னால் இயன்ற வரையில் பிதிர்க் கிரியை செய்வதில் அவள் தவறியதே இல்லை. இந்த முறை கொஞ்சம் பெரிய அளவிலேயே ஆண்டமுதை நடத்த எண்ணினாள். முன்பெல்லாம் அமுதுக்கு வரும்படி அழைத்தபோது முகத்தைச் சுழித்தவர்கள் இப்போது முதல்நாள் இரவே தங்கம்மாவின் வீட்டுக்கு வந்து சமையல் வேலைகளில் பங்குகொண்டார்கள். அன்று அதிகாலையிலேயே மோகன் வீட்டுக்கு வந்துவிட்டான். தாங்களும் அங்கே இருப்பதை மோகனிடம் காட்டிக்கொள்வதில் அங்கிருந்த எல்லோருமே அக்கறை காட்டினார்கள். அமுது வேலைகள் நடப்பதை கண்காணிப்பதுபோல மோகன் எல்லாப்பக்கங்களிலும் நோட்டம்விட்டான். அன்றைய அமுதுக்கு தம்பியும் வருவான் என்று அவன் எதிர்பார்த்தான். தம்பி என்ற பாசம் மறைந்து, மாற்று இயக்கம் என்ற குரோதம் அவனிடம் குடிகொண்டிருந்தது. கிணற்றடிக்குப் போன மோகன் செல்வனின் உள் காற்சட்டை ஒன்று தட்டுவேலியில் காயப்போட்டிருப்பதைக் கண்டான். அதைத் தொட்டுப் பார்த்தான். இன்னும் ஈரம் காயவில்லை. அது செல்வன் நேற்றிரவு அங்கே வந்து போனதற்கான அடையாளம். அவனுக்குத் தாங்கமுடியாத ஆத்திரம் வந்தது. 

நேரே தாயிடம் சென்றான். ‘அம்மா…அந்த வளிசல் இரவு வந்தவனா?’ 

‘அவன் எங்கடா வந்தவன்?’ தங்கம்மா நடுங்கிக்கொண்டே பொய்சொன்னாள். 

‘நீங்க எனக்குப் பொய் சொல்றீங்க. பரவாயில்ல. அவனுக்கு என்ர கையாலதான் அழிவு.. அவனிட்டச் சொல்லி வையுங்க.’ 

‘ஏன்ரா இப்பிடிச் சொல்லுறாய்…அவன் உனக்கு என்னடா செஞ்சவன்? ஆளுக்காள் இப்பிடிச் சுடுவன் சுடுவன் எண்டு சொல்லுறத்தவிட முதல்ல என்னச் சுடுங்கடா. அதுக்குப்புறகு என்னண்டாலும் நீங்க ஆடுறத்தையெல்லாம் ஆடுங்கடா..’ விம்மிவெடித்தாள் தங்கம்மா. விருட்டென்று வெளியேறினான் மோகன். 

அவனைத் தடுக்க முயன்றாள் தங்கம்மா. ‘எங்க தம்பி இப்ப போறாய்? அப்பாட அமுதுக்கு இந்தமுறையெண்டாலும் நிண்டு நீ கடமை செய்யோணும்; தம்பி.’ தனது துயரத்தையும், கோபத்தையும் மறந்து அவனிடம் கெஞ்சினாள். ஆத்திரத்தில் எங்கே அவன் தகப்பனின் அமுதுக்கு நிற்காமல் போய்விடுவானோ என்ற பதைபதைப்பு அவளுக்கு. நேற்றிரவு இரகசியமாக வீட்டுக்கு வந்த செல்வன் அமுதுக்குத் தன்னால் வரமுடியாது என்று சொல்லிவிட்டுப் போனான். சொல்லாவிட்டாலும் பகல் நேரத்தில அவன் வரமாட்டான். அதனால், அண்ணனும் தம்பியும் சந்திக்கவேண்டிய அபாயம் ஏற்படாது என்ற நிம்மதி தங்கம்மாவுக்கு இருந்தது. அதனால்தான் மோகனை நிற்கும்படி கெஞ்சினாள். வீட்டைவிட்டு வெளியேறிய மோகன் கடப்படிவரை சென்று மீண்டும் திரும்பிவந்தான். கிணற்றடிக்குச் சென்றான். காயப்போட்டிருக்கும் செல்வனின் காற்சட்டையை உற்றுப்பார்த்தான். அவனது மூளை பயங்கரமாக வேலை செய்தது. தனது இடுப்பில் சொருகியிருந்த கிறனேற் குண்டை எடுத்தான் ஏதேதோ செய்தான். வேலியில் தொங்கும் செல்வனின் காற்சட்டைப் பையினுள் அதை வைத்தான். மறுபடியும் ஏதோ செய்தான். கிணற்றடியை விட்டு வெளியேறினான். வாசலைக் கடந்து சென்றுகொண்டிருந்தவனை இடைமறித்து, ‘எங்க மனே போறாய்…கல்லையில போடுறத்துக்கு வந்திரு மனே..’ தொண்டை தழுதழுக்க அன்பாகச் சொன்னாள். சொல்லி முடித்ததும் அவள் கண்களில் நீர் பனித்தது. அதைத் துடைத்துக்கொண்டே அவன் போவதையே பார்த்துக்கொண்டு நின்றாள். அவளையறியாமலே பெருமூச்சொன்று வெளிவந்தது. 

சமையல் வேலை முடிந்துவிட்டது. வரவேண்டிய சொந்தக்காரரும், அக்கம்பக்கத்தில் இருந்தவர்களும் வந்துவிட்டார்கள். ஐயரும் வந்துவிட்டார். மத்தியான நேரமும் நெருங்கிவிட்டது. அமுதுக்குப் படைப்பதற்குத் தலைவாழை இலை வெட்டுவதற்காக தங்கம்மா கிணற்றடிக்கச் சென்றாள். அங்கே தொங்கிக் கொண்டிந்த செல்வனின் உள்காற்சட்டை தற்செயலாக அவளின் கண்ணில் பட்டது. அவளுக்கு நெஞ்சில் திகீர் என்றது. அவள்தானே இரவு அதைக்கழுவிக் காயப்போட்டவள். ‘கடவுளே.. நல்ல நேரம்.. மோகன் இதக் காணல்ல. கண்டிருந்தா என்னக் கொண்டுபோட்டிருப்பான்..’ என்று மனதுக்குள் நினைத்தவாறே அதை எடுத்து வீட்டுக்குள் ஒழித்து வைக்க எண்ணி, காய்ந்துவிட்டதா என்று பார்ப்பதற்காக அதை இரண்டு கைகளாலும் பிடித்து உதறினா…..’ட்..டுமீ….ல்.!!!!’  

………………    ……………    ……………. 

தங்கம்மாவின் சவ ஊர்வலம் சுடலையை அடைந்துவிட்டது. முன்னால் சென்றுகொண்டிருந்த பெரியவர்கள் இருவர் சுடலையின் ஒரு பகுதியைச் சுட்டிக்காட்டி அங்கே வருமாறு சவக் கட்டிலைச் சுமந்து செல்வோரை நெறிப்படுத்துகிறார்கள். அங்கேதான் தங்கம்மாவின் கணவன் அடக்கம் செய்யப்பட்ட இடம் இருக்கவேண்டும் என்பதை எல்லோரும் ஊகித்துக்கொண்டு சவக்கட்டிலைப் பின்தொடர்கிறார்கள். ஆளுக்கொரு மண்வெட்டியைத் தோளில் சுமந்தபடி அங்கே வந்து சேர்ந்த இரண்டு பேர், தங்கம்மாவின் கணவனை அடக்கம் செய்த இடம் என்று குத்துமதிப்பாக அடையாளம் காட்டப்பட்ட இடத்தில், எதிரெதிரே நின்றவாறு தங்கம்மாவின் உடலை அடக்கம் செய்வதற்குக் குழி வெட்டத் தொடங்கிவிட்டார்கள்!  

(யாவும் கற்பனை)