காலக்கண்ணாடி 03

காலக்கண்ணாடி 03

— அழகு.குணசீலன் — 

மட்டக்களப்பில் ஒரு வெட்டவெளி

(பாராளுமன்றப் பொதுத்தேர்தல் முடிந்து இரண்டு மாதங்கள் முடிகின்றன. இந்த நிலையில் மட்டக்களப்பு தேர்தல் களத்தின் இதுவரை காட்சிப்படுத்தப்படாத இன்னொரு பக்கம் இன்றைய “காலக்காலக்கண்ணாடி”யில்….) 

மட்டக்களப்பில் வெறுமையான ஒரு வெளிப்பரப்பை “வெட்டவெளி” என்பது  வழக்கம். 

அனேகமாக இந்த வெளி கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வெளியாகவே  தெரியும். நான் குறிப்பிடும் தூரம்  இங்கு ஆண்டுகளைக் குறிக்கிறது. நீட்டல் அளவை அல்ல கால அளவை. 

ஆம்! ஆகக்குறைந்தது ஐந்து ஆண்டுகள். அதாவது அடுத்த பாராளுமன்ற பொதுத்தேர்தல் வரை. இந்தவெளி, இடைவெளி ஒரு வெட்ட வெளியாகவே இருக்கப்போகின்றது. 

மட்டக்களப்பு தொகுதியில் அதாவது ஏறாவூர் தமிழ்பிரிவு முதல் மட்டக்களப்பு மாநகரசபை ஊடாக  தெற்கே கிரான்குளம் வரையும் நீண்டு கிடக்கின்ற கரையோர எழுவான் கரையும், மண்முனை மேற்கு படுவான்கரையும் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் அற்றதான ஒரு வெளியை இத்தேர்தல் தந்திருக்கிறது. மட்டக்களப்பு தொகுதியைச் சேர்ந்த எந்த வேட்பாளரும் தெரிவு செய்யப்படாத வெளி இது. 

காலாகாலமாக இப்பகுதியில் இருந்து ஒருவர் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் வெற்றி பெற்றுவந்துள்ள போதும் இம்முறை இத்தொகுதி வெறுமையானது ஏன்?  

மட்டக்களப்பில் இந்த எழுவான்கரைப் பிரதேசமே ஒப்பீட்டளவில் அடிப்படை வசதிகள் சார்ந்து அபிவிருத்தி அடைந்த பிரதேசம். இதனால்தான் ஒரு எம்.பி.யை தக்க வைக்க முடியாமல் போனதா….? 

அரசாங்க,  தனியார் துறை உத்தியோகத்தர்களும், அதிகாரிகளும், கல்வியாளர்களும், புத்திஜிவிகளும், மற்றும் கற்றவர்களும் குவிந்து கிடக்கின்ற இந்த எழுவான் மண்ணுக்கு எப்படி இந்த இழப்பு ஏற்பட்டது…? 

வேட்பாளர்களில் முன்னால் அரசாங்க அதிபர், விரிவுரையாளர், சட்டத்தரணி, தனியார் துறை முதலீட்டாளர், அரசுசார்பற்ற நிறுவன உத்தியோகத்தர்கள், முன்னாள் எம்.பி. எல்லாம் இருந்தும்  வெற்றி பெறமுடியவில்லையே ஏன்…? 

சிறிய தாய்களான கல்குடாவும், பட்டிருப்பும் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுக்க பெரியதாய் ஒற்றை குழந்தையேனும்  இல்லாமல் நிற்கிறாளே மட்டக்களப்பு, இதற்குக் காரணம் என்ன ..? 

இந்தக் கேள்விக்கு விடை தேடுகிறது இந்தப் பதிவு. 

இவை “காலக்கண்ணாடி”யில் பட்டுத்தெறித்தவை.

1. முதற் கோணல் முற்றும் கோணல்: 

தமிழரசில் பெண் வேட்பாளர் விடயம் மட்டக்களப்பில் ஏற்படுத்திய அதிருப்தி. 

நளினி இரத்தினராஜா மீது மேற்கொள்ளப்பட்ட தனிநபர்சார் சேறுபூசல்களும், ஒழுக்கம் சார்ந்த கதைகட்டல்களும் மட்டக்களப்பு பெண்கள் அமைப்புக்களுக்கு ஏற்படுத்திய ஆத்திரம், மற்றும் நளினிக்கு மாற்றீடாக மங்களா சங்கரை எதிர்பார்த்து ஏமாந்து போன பெண்கள் அமைப்புக்கள். படகில் பயணித்த மங்களாவை விருப்பத்தெரிவாக கொண்டதுடன், தேசியம் சார்ந்த பெண்கள் தமிழரசின் ஆண் வேட்பாளர்களை நிராகரித்து வீட்டுக்கு மட்டும் புள்ளடியிட மட்டக்களப்பு தொகுதி வேட்பாளர்களின் விருப்பவாக்கு குறைவடைந்தது. 

2. ஒன்றுக்கே வழியில்லையாம் மூன்றாம்: 

வீட்டுத் தேசியம், மீன்தேசியம், சைக்கிள் தேசியம்  இவற்றில் எதை நம்புவது என்ற கேள்விக்கு மக்களுக்கு சரியான பதில் கிடைக்காமை. 

கடந்த முப்பதாண்டுகால போராட்டத்திலும் தேசியத்திலும் நம்பிக்கை இழந்த மக்கள் மாற்றம் ஒன்றை விரும்பினர். மூன்று தேசிய வேறுபாட்டு நிலைப்பாட்டை மட்டக்களப்பு மக்கள் வெறும் தேர்தல் மோசடியும்  பதவிப் போட்டியும், ஒற்றுமையின்மையுமாகவே பார்த்தனர். மக்களுக்கு இவர்கள் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ஆகினும் மீனும் சைக்கிளும் தமிழரசு வேட்பாளர்களின் விருப்பு வாக்குகளைப் பிரித்து குறைத்துவிட்டனர். 

3. மோதகமும் கொழுக்கட்டையும்: 

மட்டக்களப்பு தொகுதியின் வேட்பாளர் பட்டியல் வெறும் அதிகாரிகளின் பட்டியலாகவேஇருந்தது. இவர்கள் அரசியல் அனுபவம் அற்ற புதுமுகங்கள். 

பெயர், பதவி,  தோற்றம், சின்னத்தில் வேறுபாடு இருப்பினும் உள்ளடக்கம் ஒன்றுதான்.  உதயகுமாரின் நண்பர்கள் வட்டம்தான் ஜெபராசாவின் நண்பர்கள் வட்டம். ஜெபராசாவ தெரிந்தவர்கள்தான் இரவீந்திரனுக்கும் தெரிந்தவர்கள்.  சந்திராவின் வட்டம்தான் மங்களாவின் வட்டம். மங்களாவின் வட்டம்தான் சந்திராவின் வட்டம். இப்படி கட்சி வாக்குகளும், விருப்பவாக்குகளும் பிரித்து அளிக்கப்பட,  உதயகுமார் நிச்சயம் வெற்றி பெறுவார் என்ற கனவு வெறும் பகல் கனவாய் போனது. விளைவு மட்டக்களப்பு  தொகுதி வெறுமையானது. முன்னாள் எம்.பி.க்களான சிறிநேசன், யோகேஸ்வரன் மீது மக்கள் கொண்டிருந்த அதிருப்தியும், கணிசமான கிறிஸ்தவ வாக்காளர்களைக் கொண்டிருக்கின்ற மட்டக்களப்பு தொகுகுதியில் தகுதியான கிறிஸ்தவர் ஒருவரை வேட்பாளராக பழமைக்கட்சி நிறுத்தவில்லை என்பதும் குறிப்பிடப்படலாம்.  

ஏற்கனவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின்போது தமது அரசியல் அனாதை நிலையை அவர்கள் அனுபவித்து இருந்தனர் என்பதையும் இங்கு குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும். 

4. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அலை: 

மட்டக்களப்பில் ரி.எம்.வி.பி.க்கு ஒருபெரும் அலை காணப்பட்டது.  நாங்கள் படித்தவர்கள் என்று கூறிக்கொண்டு மக்களை மாக்களாக ஏமாற்றலாம் இலகுவாக வெற்றி பெறலாம் என்ற மெத்தன, அறப்படித்த போக்கு  தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளையும், பொதுஜன பெரமுனையையும் முன்னுக்கு தள்ளி விட்டன. 

யாழ்ப்பாணம், திருமலை மாவட்டங்களில் நிலவிய தமிழரசின் பலவீனமும் குளறுபடிகளும் மட்டக்களப்பு மக்களின் சிந்தனையைத் தூண்ட, வழமைக்கு மாறான மாற்றத்திற்கான முடிவு பிறந்தது. மட்டக்களப்பு எங்கள் உசிரு என்று பல நூறு இளைய தலைமுறையினர் சந்திரகாந்தனுக்காக களத்தில் இறங்கினர். இவர்களில் பலர் முன்னாள் போராளிகள், பல ஆண்டுகாலம் ஆயுதமேந்தி அரசியல் உரிமைக்காக போராடியவர்கள்.  இவர்களின் சுறாவளி சுழற்சிப் பிரச்சாரத்திற்கு முன்னால் எந்த அணியாலும் நின்றுபிடிக்க முடியவில்லை. 

பழம் பெரும் கட்சி 30 ஆயிரம் வாக்குகளை மட்டக்களப்பு தொகுதியில் பெற முதன்முதலாக பாராளுமன்ற தேர்தலில் பிரவேசித்த ரி.எம்.வி .பி. 28 ஆயிரம் வாக்குகளைப் பெற்று வரலாற்றுச்சாதனை படைத்தது. 

தமிழரசின் வேட்பாளர் விருப்பு  மிகவும் பின்னிலைக்கு தள்ளப்பட்டது. இது சந்திரகாந்தனின் விருப்பத் தேர்வை நம்பமுடியாத அளவுக்கு உயர்த்தியது.  

5. மட்டக்களப்பில் தமிழரசினருக்கு சரியான தலைமைத்துவம் இருக்கவில்லை:

அரசியல் முதிர்வு கொண்ட மக்களால் நேசிக்கப்படும், மக்களை நேசிக்கும் எவரும் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை. தட்டிக் கேட்காத பலவீனமானவர்களை நிறுத்தினால் தமக்கு சாதகமாக இருக்கும் என்று சம்பந்தப்பட்டவர்கள் கருதியிருக்க வாய்ப்புண்டு. 

துரைராசிங்கமும், உதயகுமாரும் வெல்வது தான் முதல் திட்டம். மூன்றாம் நிலையில்தான் சிறிநேசன், சாணக்கியன் வைக்கப்பட்டார்கள். ஜனாவை தோற்கடிக்கும் திட்டம் உள்வீட்டில் இருந்தது. ஆனால் மக்கள் தீர்ப்போ தலையெழுத்தை மாற்றிவிட்டது. 

6. தமிழரசின் தப்புக்கணக்கும் மக்களின் கணக்கு தீர்ப்பும்: 

மட்/மாவட்டத்தில் சுமார் 80ஆயிரம் வாக்குகளைப் பெற்ற தமிழரசு கட்சியில் ஆகக்கூடுதலாக சாணக்கியன், சுமார் 33,000 விருப்பு வாக்குகளை மாத்திரமே பெறமுடிந்து. ஜனா சுமார் 26,000 விருப்பு வாக்குகள். இத்தனைக்கும் பட்டிருப்பில் தமிழரசுக்கட்சி பெற்ற வாக்குகள் 26,500. ஆக, சாணக்கியனும் ஜனாவும்  மட்டக்களப்பு,  கல்குடா தொகுதிகளில் இருந்து கணிசமான விருப்பு வாக்கைப் பெற்று மட்டக்களப்பு தொகுதி வேட்பாளர்களை முந்திவிட்டனர். 

மட்டக்களப்பு தொகுதியில் தமிழரசுக் கட்சி 30,600 வாக்குகளைப் பெற்றும் விருப்பு வாக்கில் ஜனாவைக்கூட பிடிக்க முடியவில்லை. இதன் அர்த்தம் மட்டக்களப்பு தொகுதி வேட்பாளர்கள் மற்றைய தொகுதிகளில் இருந்து கணிசமான விருப்பு வாக்குகளைப் பெறமுடியவில்லை. 

7. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளும் தலைமைத்துவமும்

தமிழரசின் தலைமைத்துவம் அற்றநிலை ரி.எம்.வி.பி.க்கு பெரும் சாதகமாக இருந்தது. 

பிள்ளையான் எந்த ஒரு பிரச்சாரத்திலும் நேரடியாக களத்தில் இறங்காது, இந்தளவிற்கு விருப்பு வாக்குகளைப் பெற்றிருப்பது மட்டக்களப்பு மக்கள் ஜனநாயக ரீதியில் தமது அரசியல் தலைமைத்துவம் பிள்ளையான் தான் என்று முடிவு செய்திருந்ததை நிருபித்துள்ளது. பொதுவாக கட்சித்தலைவர்கள் பெறுகின்ற விருப்பு வாக்கு மிக மிக அதிகமாக இருக்கும். 

தமிழரசிலோ தலைமையும் தோற்று, செயலாளரும் தோற்று, ஒரு இலட்சம் வாக்குகளைப் பெறுவேன் என்று மார்தட்டிய சுமந்திரனுடனும் ஒப்பிடுகையில். சந்திரகாந்தனின் தலைமைத்துவம் யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஒரு வரலாற்று நியதி. இதனால்தான் கட்சியின் சுமார் 70,000 வாக்குகளில் 54,000 வாக்குகளை விருப்பு வாக்காகப் பெறமுடிந்து. 

ஆக, கல்குடாவில் ரி.எம்.வி.பி பெற்றது 20,600 வாக்குகள். அப்படியானால் மிகுதி சுமார் 33,400 விருப்பு வாக்குகள் மட்டக்களப்பு, பட்டிருப்பு தொகுதிகளில் இருந்து சந்திரகாந்தன் என்ற அரசியல் தலைமைத்துவத்திற்கு அளிக்கப்பட்ட வாக்குகள். இதனால்தான் ஆகக்கூடிய வாக்குகளை மட்டக்களப்புத் தொகுதியில் தமிழரசுக்கட்சி பெற்றும் ஒருபிரதிநிதி கூட கிடைக்காமல் போனது. 

எது எப்படி இருப்பினும் எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்கு மட்டக்களப்புத் தொகுதியில் இது ஒரு “வெட்டவெளி” தான். 

யாருக்குத் தெரியும்……? 

காலமே பதில். 

மட்டக்களப்பில் மெல்லத் தமிழரசு  இனி……?