– தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் —
திலீபனின் முப்பத்திமூன்றாவது நினைவேந்தல் நிகழ்விற்கு நீதிமான்றம் தடைவிதித்ததைத் தொடர்ந்து தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவின் அழைப்பின் பேரில் அவரது தலைமையில் தமிழ் கட்சிகள் கூடி இவ் நினைவேந்தல் விவகாரத்தைக் கூட்டாகக் கையிலெடுத்துள்ளன. தமிழ்க் கட்சிகள் என்றுமேயில்லாதவாறு ஐக்கியப்பட்டுவிட்டன என்று இதனைத் தமிழ் ஊடகங்கள் சிலாகித்துள்ள நிலையில், இந்த ஐக்கியத்தை வரலாற்றுப் பின்புலத்தில் நுண்ணாய்வுக்குட்படுத்துவதே இப்பத்தியின் நோக்கமாகும்.
1944இல் தோற்றம்பெற்ற அமரர்ஜி.ஜி.பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள்ளே “ஐம்பதுக்கு ஐம்பது” போன்ற தமிழர்களுக்கான சில சலுகைகளை வேண்டிநின்றது. 1949இல் அகில இலங்கைத்தமிழ் காங்கிரசிலிருந்து பிரிந்துவந்த அமரர் எஸ்.ஜே.வி. செல்வநாயகம்(தந்தை செல்வா) இலங்கைத் தமிழரசுக்கட்சியை ஆரம்பித்து, தமிழ்த் தேசியம் – தமிழர் இறைமை – தமிழர் தாயகம் – சுயநிர்ணய உரிமை எனும் கருத்தியல்களின் அடிப்படையில் இனப்பிரச்சினைக்கான தீர்வாகச் ‘சமஷ்டி’யை முன்வைத்தார்.
அன்றிலிருந்து தமிழ்த்தேசிய அரசியல் என்பது பாராளுமன்ற ஆசனங்களைக் குறிவைத்த தேர்தல் மைய அரசியலாகவே, அதாவது அகில இலங்கைதமிழ்க் காங்கிரஸ் எதிர் இலங்கைத் தமிழரசுக்கட்சித் தேர்தல் போட்டியாகவே முன்னெடுக்கப்பட்டது. இலங்கையில் வடக்கு கிழக்குத் தமிழர்கள் கடந்த எழுபது வருடங்களாக “தமிழ்த்தேசிய அரசியல்‟என்று மயங்கியது இத்தகைய தேர்தல் மைய அரசியலைத்தான். அதாவது தமிழரசுக்கட்சிக்குக் கிடைக்கும் பாராளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கைதான் “தமிழ்த் தேசிய அரசியலின்‟ அடைவாகவும் படிமுறை வளர்ச்சியாகவும் காண்பிக்கப்பட்டு வந்தது.
1970இல் ஆட்சிக்குவந்த பிரதமர்அமரர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலானஅரசு, தமிழ்த்தரப்பில் சமர்ப்பிக்கப்பெற்ற ஆறு அம்சக் கோரிக்கையையும் அரசியலமைப்பு நிர்ணய சபையில் தமிழரசுக்கட்சியினால் முன்வைக்கப்பெற்ற முன்மொழிவுகளையும் திருத்தங்களையும் முற்றாகப் புறக்கணித்து, 1972 மே 22 இல் புதிய குடியரசு அரசியலமைப்பை நிறைவேற்றியது.
இக்கட்டத்தில் தமிழ்இளைஞர்கள் மிதவாத அரசியல் தலைமைகளின் மீது விரக்தியும் சலிப்பும் உற்று நம்பிக்கையிழந்திருந்தார்கள். மிதவாத அரசியல் தலைவர்களுக்கு எதிரான விமர்சனங்களும் செயற்பாடுகளும் ஆங்காங்கே தலையெடுக்க ஆரம்பித்திருந்தன. அன்றியும் 1970இல் நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் மற்றும் இலங்கைத் தமிழரசுக்கட்சி ஆகிய இருதரப்பிலும் “பெருந்தலைகள்‟ தோல்வி கண்டிருந்தன.
யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ் தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலத்தை, தமிழரசுக்கட்சியைச் சேர்ந்த சி.எக்ஸ்.மார்ட்டின் தோற்கடித்திருந்தார். நல்லூர் தேர்தல் தொகுதியில் தமிழரசுக் கட்சியின் “இரும்புமனிதன்‟ ஈ.எம்.வி.நாகநாதன் தோல்வியுற்று, தமிழ்க் காங்கிரஸைச் சேர்ந்த அருளம்பலம் வெற்றியீட்டியிருந்தார். வட்டுக்கோட்டைத் தொகுதியில் தமிழரசுக்கட்சியின் “தளபதி‟அ.அமிர்தலிங்கம் தோல்வியைத் தழுவ தமிழ்க் காங்கிரஸ் வேட்பாளர் தியாகராசா வெற்றிபெற்றிருந்தார். உடுப்பிட்டித் தொகுதியில் தமிழ்க்காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான எம். சிவசிதம்பரம் தோல்வியுற்று, தமிழரசுக்கட்சியைச் சேர்ந்த ஜெயக்கொடி வெற்றிபெற்றிருந்தார். கிளிநொச்சித் தேர்தல் தொகுதியில் தமிழரசுக்கட்சியின் “பிரச்சாரப்பீரங்கி‟ மு.ஆலாலசுந்தரத்தை, தமிழ்க்காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வீ.ஆனந்தசங்கரி தோற்கடித்திருந்தார். வவுனியா தொகுதியில் தமிழ்காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான தா.சிவசிதம்பரம் தோல்வியுற்று, தமிழரசுக்கட்சி வேட்பாளர் எக்ஸ்.எம்.செல்லத்தம்பி வெற்றியிட்டியிருந்தார்.
1970இல் பாராளுமன்றப் பொதுத்தேர்தல் முடிவகள் “பெருந்தலை‟களுக்கு, தங்கள்அரசியல் எதிர்காலம் குறித்த அதிர்ச்சியை அளித்தது. அதனால் தங்கள் எதிர்காலத் தேர்தல் வெற்றிகளை உறுதி செய்து கொள்வதற்கு அகில இலங்கைத் தமிழ்காங்கிரஸ் மற்றும் இலங்கைத் தமிழரசுக்கட்சி ஆகிய இருதரப்புப் “பெருந்தலை‟களுக்கும் ஐக்கியம் தேவைப்பட்டது. அதே நேரம் தீவிரவாதத் தமிழ் இளைஞர்களைத் திருப்திபப்படுத்திச் சமாளிக்கவேண்டிய தேவையும் இருந்தது.
அதன் பெறுபேறுதான் மேற்கூறப்பெற்ற இரு பிரதான கட்சிகளும் இணைந்து “தமிழர் கூட்டணி‟யாகிப் பின் 1976 வட்டுக்கோட்டை மாநாட்டில் “தமிழர் விடுதலைக் கூட்டணி‟ ஆகியதும் இம்மாநாட்டின் “தனிநாடு” அதாவது தமிழீழத் தீர்மானமும் ஆகும்.
இந்த இடத்தில்தான்பின்னாளில் தமிழ் இளைஞர்களை ஆயுதம் ஏந்தவைத்த இத்தனிநாட்டுத் தீர்மானம் அரசியல்ரீதியாக எவ்வளவு ‘பொய்மை’ யானது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.
1949 இலிருந்து 1972 வரை ‘சமஸ்டி’க்கான அகிம்சைப்போராட்ட நடவடிக்கைகள் யாவும் தோல்வியுற்ற நிலையில், ‘சமஸ்டி’ யை விட அதி தீவிரமான தமிழீழத் தனிநாட்டை எவ்வாறு அதே அகிம்சையால் அடையமுடியும்? ‘சமஸ்டி’யை அடைவதற்காகத் தொடர்ந்து தளராது அகிம்சைவழியில் போராடுவோம் என்றோ அல்லது ‘சமஸ்டி’க்கான அகிம்சைப்போராட்டம் தோல்வியுற்றதால் அதைக் கைவிட்டு தமிழ் ஈழத் தனிநாட்டிற்கான ஆயுதப் போராட்டத்தை முன்னெடுப்போம் என்றோ வட்டுக் கோட்டை மாநாட்டுத் தீர்மானம் அமைந்திருக்குமானால், “சரிபிழை”க்கு அப்பால் அதில் ஒரு தர்க்கமும் நியாயமும் இருந்திருக்கும். எனவே 1972இல் ஏற்பட்ட அகில இலங்கைத் தமிழ்காங்கிரஸ் – இலங்கைத்தமிழரசுக்கட்சி இணைவும் அதன் இறுதி விளைவான “தமிழர்விடுதலைக் கூட்டணி‟ உருவாக்கமும் வட்டுக்கோட்டை மாநாட்டுத் தமிழீழத் தீர்மானமும் “தேர்தல் மைய அரசியல் தேவைகளுக்கானவையே தவிர அவை மக்களுக்கானவை அல்ல” என்பதையே வரலாறு இப்போது காண்பித்திருக்கிறது.
தமிழீழத் தனிநாடு என்பது தேர்தல் தேவைகளுக்கான ஓர் அரசியல் கோஷமே தவிர அது பாராளுமன்ற அரசியலுக்கூடாக நடைமுறைச் சாத்தியமற்ற ஒன்றாகும். “தமிழர் விடுதலைக் கூட்டணி‟யின் உருவாக்கம் மக்களுக்கானது என்றால் உண்மையில் அப்போதே அகில இலங்கைத்தமிழ்காங்கிரஸும் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் கலைக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
இப்போது வரலாற்றில் என்ன நடத்திருக்கிறது என்றால் அகில இலங்கைத் தமிழர்காங்கிரஸும் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் தமிழர் விடுதலைக் கூட்டணியும் ஒன்றையொன்று எதிர்த்து தேர்தல்களில் போட்டியிடும் எதிர்மறையான நிலைமையே ஏற்பட்டுள்ளது.
1972இல் ஏற்பட்ட தமிழ்கட்சிகளின் ஐக்கியத்தின் சீத்துவம் இதுதான்.
இந்த வரலாற்றுப் பின்புலத்தில்தான் தற்போது திலிபனின் பெயரைச்சொல்லி ஏற்பட்டுள்ள தமிழ்கட்சிகளின் இணைவை எடைபோடவேண்டும்.
05.08.2020 அன்று நடந்து முடிந்துள்ள பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சித் தலைவர் மாவை சேனாதிராசாவும் பொதுச்செயலாளர் கி.துரைராசசிங்கமும் தோல்வியைத் தழுவியுள்ளனர். ஓய்வு பெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ்மக்கள் தேசியக் கூட்டணியின் “மீன்‟ சின்னத்தில் போட்டியிட்ட முன்னாள் ரெலோ தலைவர்களான (தற்போது தமிழ்த்தேசியக் கட்சியின் தலைவர்கள்) சிவாஜிலிங்கமும் சட்டத்தரணி சிறிகாந்தாவும் மற்றும் முன்னாள் ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் (தற்போது தமிழ் மக்கள் தேசியக்கூட்டணி) தலைவர் சுரேஸ்பிரேமச்சந்திரனும் தெரிவாகவில்லை. ஆக, பிரதானமான “பெருந்தலைகள்‟ இத்தேர்தலில் வீழ்ந்துதுள்ளன. அன்றியும் தமிழரசுக்கட்சிக்குப் பாரிய வாக்குவங்கிச் சரிவும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையை 1970ம் ஆண்டுப் பொதுத்தேர்தலின் பெறுபேறுகளுடன் ஒப்புநோக்கவேண்டும். அப்படி ஒப்புநோக்கும்போதுதான் இப்போது ஏற்பட்டுள்ள தமிழ்க்கட்சிகளின் கூட்டு 05.08.2020ல் நடந்து முடிந்துள்ள பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் வீழ்ந்துபோயுள்ள “பெருந்தலை‟களின் எதிர்காலத் தேர்தல் அரசியலுக்குத் தேவையானதே தவிர இது மக்களின் எதிர்காலத்திற்கானது அல்லது என்பது புரியும்.
திலீபனின் பெயரைச்சொல்லி இப்போது ஏற்பட்டுள்ள தமிழ்க்கட்சிகளின் கூட்டானது சில “பெருந்தலை‟களின் தனிநபர் நலன்கள் சார்ந்ததும் மற்றும் அப் “பெருந்தலை‟கள் சார்ந்துள்ள கட்சி நலன்கள் சார்ந்ததுமே தவிர இது ஒட்டுமொத்தத் தமிழ்த்தேசிய இனத்தின் மக்கள் நலன்சார்ந்தது அல்ல என்பதைத் தமிழ்மக்கள் அரசியல் நுண்ணாய்வு மூலம் உனர்ந்து கொள்வார்களாக.