—பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா—
“இது என் கதையல்ல, என்னைத் தாங்கிய என் மண்ணின் கதை”
இருபக்கமும் வரிசையாகக்
குளக்கட்டில் நின்றிருந்த மருதமரங்களிலே
ஏறுமருதை என்று ஒரு மரம்.
கோடைக்காலத்தில்
பெரிய குளம் ஆலையடி நாகதம்பிரான் ஆலயத்திலிருந்து
குளத்தைக் கடந்து, குறுக்காக நடந்து
நேரே மேற்குப்பக்கமாகச் சென்றால்
குளக்கட்டில் உயர்ந்து, அடர்ந்து, ஒருபக்கம் சாய்ந்து நின்ற
அந்த மருதமரத்தடியில் சேரலாம்.
மக்கள் ஏறி அமந்திருப்பதாலோ அல்லது
குளத்தின் வழியாகச் சென்று குளக்கட்டில்
ஏறுகின்ற இடத்தில் அது நிற்பதாலோ
இந்தப் பெயர் அந்த மரத்துக்கு ஏற்பட்டிருக்கலாம்.
அந்த மருத மரம் மிகவும் பிரசித்தமானது.
பக்கத்து வயல்களில் வேலைசெய்பவர்கள்
பசியாறுவதற்கு அந்த மரத்தடிக்கே வருவார்கள்!
அந்த மரத்தின் கீழேதான் அமர்ந்து சாப்பிடுவார்கள்.
பனையோலைப் பெட்டிகளில் தவிடு நீங்காத
சிவப்பரிசிச் சுடுசோறும்,
பலாக்காயில் அல்லது மரவள்ளிக்கிழங்கில்
சுள்ளென்று புளிசேர்த்த சுவையான பாற்சொதியும்,
சள்ளல்மீன் குழம்பும், சாளைச் சூடைப் பொரியலும்,
வெள்ளைக் கறியிரண்டும், வாழைத்தோல் பச்சடியும்
கூனிச் சுண்டலும், குமிட்டிக் கடையலும்
மதியம் சாயத் தொடங்கு முன்பே
மரத்தடிக்கு வந்துசேர்ந்துவிடும்.
வயலில் வேலைசெய்து வியர்வை வடிந்தோட
வரம்பில் நடந்து, வாய்க்காலில் முகம் கழுவி
களைத்துவரும் தொழிலாளிக்கு
கமக்காரரின் வீட்டுக்காரர்கள் பரிமாறுவார்கள்.
வயிறும் நிரம்பும், மனமும் நிரம்பும்
மறுபடியும் அவர்களின் கால்கள்
வயலில் இறங்கும்
வயலை உழுகின்றபோதும், வயலில் விதைக்கின்றபோதும்,
அருவி வெட்டுகின்ற போதும், அள்ளிக்கட்டுகின்றபோதும்,
சூடுவைக்கின்ற போதும், சூடுமிதிக்கின்றபோதும்,
பொலி தூற்றுகின்றபோதும், வண்டியில் ஏற்றுகின்றபோதும்
சாப்பாடு அந்த மருதமரத்தடிக்கு வரும் – சிலவேளை
சாராயம், கள்ளும் சேர்ந்துவரும்
ஏர்ப்பாட்டுப் பாடுகின்ற உழவருக்கு
இவைதானே புதுவருசம், கொண்டாட்டம்?
அந்த, ஏறுமருத மரத்தடியில் பொலிடோல் குடித்து
அப்பாவியான மணியக்கிழவன் தற்கொலை செய்து
அனாதையாக இறந்து கிடந்த காட்சி
இப்போதும் எனக்கு நினைவில் இருக்கிறது.
அக்காலத்தில் வயலில் அடிக்கும் கிருமி நாசினிகளும்,
களைகொல்லிகளும்,
அரளிக்காயும், ஆற்று வெள்ளமும்
தற்கொலை செய்பவர்களுக்குத் தஞ்சமளித்தன.
அவற்றில் ஒன்று பொலிடோல்.
அதனைத்தான்
எங்கள் ஊரில் சமையல்காரராகத் தொழில்செய்து வந்த
இந்திய வம்சாவழியான மணியக்கிழவனும் குடித்திருக்கிறார்.
அவ்விதமான மருந்துகளைக் குடிப்பவர்கள் கடுமையாக
அவஸ்தைப்பட்டே சாவார்களாம் என்று
அப்போதே நான் கேள்விப்பட்டிருக்கின்றேன்.
மருதமரத்தடியில், நஞ்சைக் குடித்த மணியக்கிழவனும்
கைகளாலும், கால்களாலும் நிலத்தை விறாண்டி,
மண்ணைத் தோண்டிக் குழியுண்டாக்கியிருந்தார்.
மருதமர வேர்களைச் சிதைத்து விட்டிருந்தார்.
அந்த அளவுக்கு அவர் குடித்த நஞ்சு மருந்து
அவரைச் சித்திரவதை செய்து
கொல்லாமல் கொன்றிருக்கிறது என்று
எல்லோரும் கதைத்தார்கள்.
மருந்து குடித்த மணியக்கிழவனை மட்டுமல்ல
ஆற்றில் விழுந்து தற்கொலை செய்தவர்கள்,
ஆற்று நீரில் அமிழ்ந்து செத்தவர்கள் என்று
கூற்றுவனிடம் அகாலமாய் உயிரைக் கொடுத்தவர்கள்
எல்லோரின் உடல்களையும் முதலில் அந்த
ஏறுமருதயடியில்தான் கொண்டுவந்து போடுவார்கள்.
அங்கேதான் மரணவிசாரணை நடக்கும்.
அப்படிப்பட்ட பிரசித்திபெற்றது அந்த ஏறுமருதமரம்.
ஆற்றங்கரையில் கிண்ணை மரங்கள் அழகாக வளர்ந்து நிற்கும்
சேற்றுநிலத் தாவரம் என்பதால், செழித்துப் படர்ந்திருக்கும்
அடுத்தடுத்துத் தொடர்ந்து, அவை இணைந்து நிற்கும்
ஆற்றுக்கும், வயலுக்கும் அணைபோல நெடுந்தூரம்
அவற்றின் கிளைகள் ஒன்றோடு ஒன்று பிணைந்து கிடக்கும்!
ஒருமரத்தில் ஏறினால் மரத்துக்குமரம் கிளைகளில் தாவி
நிலத்தில் இறங்காமல் நெடுந்தூரம் செல்லலாம்.
மரங்களின் அடியில் முதலைகள் மறைவாகப் படுத்திருக்கும்
இறங்கினால் எம்பியெழுந்து நம்மை இழுத்துச் சென்றுவிடும்
கிண்ணை மரங்களுக்கு மற்றுமொரு சிறப்பு
திண்மையான அதன் சுவாச வேர்கள்
மரத்தைச்சுற்றிவர அதன் அடிப்பாகத்தில்
நிலத்தில் முளைத்து அவை எழுந்து நிற்கும்,
கிண்ணஞ்சொட்டு என்று அதனை அழைப்பார்கள்
போத்தல்களின் மூடிகளாகப் பயன்படும் தக்கைகள்
மூச்சுவேர்களில் இருந்தே செய்யப்படுகின்றன.
முற்காலத்தில் கிண்ணை மரத்தின் மூச்சுவேர்கள்
தக்கை உற்பத்தியில் தனித்துவம் பெற்றவை.
நாணல் மரங்கள் கிண்ணை மரங்களுக்கிடையில்
நர்த்தனம் ஆடிநிற்கும்,
தோற்றத்தில் மெல்லிய மூங்கில்போல இருக்கும்
காற்றடிக்கும் திசையெல்லாம் அவை சாய்ந்தாடும்.
ஆற்றங்கரையில் அடர்ந்துகிடக்கும் நாணல் பற்றைக்குள்
சள்ளல் மீங்கள் குஞ்சுகளோடு தழுவிக்கிடக்கும்
அழகிய அந்த கிண்ணை மரங்களின் அடர்ந்த கிளைகளில்
அமர்ந்துகொண்டு சிலர் தூண்டில் போடுவார்கள்.
அவர்கள் முதலைக்குப் பயந்து மிகவும்
அவதானமாக இருப்பார்கள்
எத்தனையோ பேரை முதலைகள்
இழுத்துக்கொண்டுபோன வரலாறுகளை
இந்தச் சிற்றாறு எழுதிவைத்திருக்கின்றது.
அண்மையில் கூட, சிலவருடங்களுக்கு முன்னர்
அண்ணன் புலேந்திரன், முதலைக்குப் பலியானார் .
வெள்ளை மனமும் வேடிக்கைப் பேச்சும்கொண்ட
புலேந்திர அண்ணன் “தம்பி” என்று உரத்த சத்தத்துடன்
அன்பாக என்னை அழைக்கும் குரல்
இப்போதும் என் காதுகளில் இசைபோலக் கேட்கிறது.
எனது நெறியாள்கையில் எத்தனையோ நாடகங்களில்
திறமையாக நடித்துப் புகழ்சேர்த்த அவருக்கு
மட்டக்களப்பு நாட்டுப்பாடல்களில் இருந்த
மட்டற்ற ஈடுபாடு மனமுவந்து வியக்கத்தக்கது.
தனியான அத்தியாயம் ஒன்றில் அது பற்றி
தருவதற்கு எண்ணியுள்ளேன்.
கிண்ணம்பழம்!
நினைக்கவே நெஞ்சில் இனித்து வாயில் நீர்சுரக்கிறது.
அளவிலும், அழகிலும் அப்பிள் பழம்போல அது இருக்கும்.
இன்னும் சொல்லப்போனால்,
அவுஸ்திரேவியாவில் கிடைக்கும் பேர்சிமோன் என்ற பழத்தைப்போல,
காம்போடு இணைந்த தடித்த இதழ்கள் பழத்தின் மேல்பக்கத்தை மூடியிருக்கும்.
அப்போதெல்லாம் அப்பிள் பழத்தை
அறவே நான் கண்டதில்லை.
பாடப்புத்தகத்தில் படித்ததோடு சரி!
அப்பிள் பழத்தைவிட கிண்ணம்பழங்கள்
எத்தனையோ மடங்கு இன்சுவை கொண்டவை.
காய் உவர்ப்போடு புளிக்கும்.
பழம் புளிப்போடு கலந்து இனிக்கும்.
அடர்ந்து, படர்ந்து, குகைபோல அமைந்திருக்கும் கிண்ணை மரங்களில்
காய்களும் பழங்களும் தொங்குவதைப் பார்த்துக்கொண்டேயிருக்கலாம்.
அவ்வளவு அழகு!
காலையில் பழஞ்சோற்றுடன் கிண்ணம் பழத்தைப் போட்டுப்
சீனியும் சிறிதளவு கலந்து, பிசைந்து சாப்பிடும்போது
உலகத்தின் இனிமைச் சுவைகளெல்லாம்
வாய்வழியாக வயிற்றுக்குள் செல்லும்.
இப்போது நினைத்தாலும்
மனமெல்லாம் இன்பத்தில் மிதக்கும்.
வாயிலே உமிழ்நீர் சுரக்கும்.
பழந்தோட்டம் என்று ஊரின் ஒரு பகுதி அப்போது அழைக்கப்பட்டது
என் பள்ளிப்பருவகாலத்தில், காடு மண்டிக்கிடந்த பகுதி அது.
இப்பொழுது வீதிகளும், மாடி வீடுகளும், பாடசாலை,கோவில் என்று
மக்கள் நிறைந்து வாழும் பகுதியாக அது மாறி இருக்கிறது.
முன்னர், தனியாக யாரும் போவதற்குத் தயங்கும் அளவுக்குச்
செறிவான பற்றைகளும், காட்டுமரங்களும் அங்கே நிறைந்திருந்தன.
பலவகைப் பழமரங்களும், பால்வடியும் சில மரங்களும்
உயிர்போக்கும் நச்சுமரங்களும், ஒன்றுக்கும் பயனற்ற செடிகளும்
செறிவாக வளர்ந்து பழந்தோட்டத்தில் செழித்து நின்றன.
பறவைகள் தங்கள் வசந்த பூமியாகப்
பண்பாடிப் பறந்து திரிந்த சோலை அது!
பழங்களைத் தின்னவும், பூக்களின் தேனை உண்ணவும்
பலவண்ணப் பறவைகள் வானிலே சிறகடித்துப்
பவனிவரும் காட்சி பழந்தோட்டத்தின் மாட்சி!
தவணைமுறையில் சில பறவை இனங்கள்
தங்கிச் செல்லும் சரணாலயம் அது.
காலை வேளையில் சிட்டுக் குருவிகள் பாடுகின்ற கானம்
காற்றிலே மிதந்து காதுகளில் இனிக்கும்.
கூட்டம் கூட்டமாக அவை வந்து மரங்களில் குதிக்கும்
பாட்டிசைத்தவாறு அப்படியே வானத்தில் எழுந்து பறக்கும்.
குடைபோல விரிந்து, குகைபோல வளர்ந்து நிற்கும்
முந்திரிகை மரங்களில்
மஞ்சளும், சிவப்புமாய் முந்திரிகைப் பழங்கள்
வாளிப்பாக இலைகளில் மறைந்து தொங்கும்.
படையாக வருகின்ற பஞ்சவர்ணக் கிளிகள்
கிளைகளில் அமர்ந்து சுளைகளைக் கோதும்,
கொஞ்சு மொழிபேசி குலவிமகிழும்.
சுரபுன்னை [சுரமின்னா என்று தான் சொல்வோம்] மரங்கள் ஆங்காங்கே நிற்கும்.
சுரமின்னாப்பழம், காரைப்பழம், நாவல் பழம்,துவரம்பழம் எல்லாம்
அந்தந்தக் காலத்தில் காய்க்கும்.
அம்மா அங்கே எல்லாம் போக என்னை விடமாட்டா.
என்றாலும் இரண்டு மூன்று தடவைகள் நான் போய்
மரங்களில் ஏறி, பழங்களைப் பறித்திருக்கிறேன்.
அங்குதான் சோமப் பெத்தப்பா, தெய்வி ஆச்சி குடும்பத்திற்கு ஒரு ஏக்கர் வளவு இருந்தது.
அதில் அவர்கள் வெற்றிலைத் தோட்டங்களை வைத்திருந்தார்கள்.
வெற்றிலை செய்கைக்குப் பக்கத்துக் கிராமமான களுதாவளை பெயர் பெற்றிருந்த அந்தக்காலத்தில்
களுவாஞ்சிகுடியிலும் குறிப்பிடத்தக்களவு வெற்றிலைத் தோட்டங்கள் இருந்தன.
பலர் வெற்றிலைச் செய்கையில் ஈடுபட்டிருந்தார்கள்.
அதையே தமது வாழ்வாதாரத் தொழிலாகக் கொண்டிருந்தார்கள்.
பழந்தோட்டத்தில் இருந்த வெற்றிலைத் தோட்டத்திற்கு முத்துலிங்க குஞ்சப்பாவுடனோ, நல்லையா குஞ்சப்பாவுடனோ நான் போய் வருவேன்.
அவர்கள் இருவரும் சோமப்பெத்தப்பா, தெய்வி ஆச்சி தம்பதிகளின் பிள்ளைகள்.
அவர்கள் வெற்றிலைத் தோட்டம் வைத்திருந்த வளவிலும்
மிகப் பெரிய இரண்டு நாவல் மரங்கள் இருந்தன.
இப்பொழுது அங்கே தோட்டங்கள் இல்லை. நாவல் மரங்களும் இல்லை.
வளவைத் துண்டுகளாகப் பிரித்து ஒரு பகுதியை விற்றுவிட்டார்கள்.
மறுபகுதியைப் பிள்ளைகளுக்குக் கொடுத்து, இப்போது ஐந்தாறு வீடுகள் அங்கே உள்ளன.
மூக்குச்சளிப்பழம் என்று ஒருவகைப் பழம் இப்பொழுதும் என் நினைவில் நிற்கிறது.
நறுவிலிப் பழம் என்பது அதன் உண்மையான பெயர்.
யாருக்காவது நறுவிலி மரம் ஞாபகத்தில் இருக்கிறதா?
எங்களின் வீட்டுக்குப்பக்கத்தில்-பாக்கியம் மாமியின் வளவுக்குப் பின்னால்-ஒரு மரம் நின்றது.
கிளைகள் படர்ந்து ஒரு குடை போல நின்ற அந்த மரத்தின் இலைகளின் வடிவம் இப்போது எனக்கு நினைவில் இல்லை.
முத்துக்களைக் கட்டி வைத்ததுபோல, காரைப்பழத்தின் அளவுள்ள அந்தப்பழம்
கொத்துக் கொத்தாய் காய்த்துத் தொங்கும்.
பழமும் காயும் பச்சை நிறமாகவே இருக்கும்.
அந்த பழத்தைப் பறித்துப் பிரித்தால் அதிலிருந்து வெளிவரும் செறிவான திரவம்
தடிமல் பிடித்தவரின் மூக்கிலிருந்து வடியும் சளியைப் போல இருக்கும்.
அதனால்த்தான் நறுவிலிப் பழத்திற்கு மூக்குச்சளிப் பழம் என்ற பெயர் வந்திருக்கவேண்டும்.
சுவைமிகுந்த பழம் என்று சொல்ல முடியாது.
ஆனாலும் விடலைப்பருவத்துப் பிள்ளைகள் விரும்பிப் பறித்துச் சாப்பிடுவார்கள்.
(நினைவுகள் தொடரும்)