ஜனநாயகமும்  20வது யாப்புத் திருத்தமும்

ஜனநாயகமும் 20வது யாப்புத் திருத்தமும்

— விஸ்வலிங்கம் சிவலிங்கம் —

(இலங்கையில் தற்போது அரசியல் யாப்பு மாற்றம் குறித்த பல வாதங்கள் எழுந்துள்ளன. ஓர் ஊடகம் என்ற வகையில் அதன் உயிர்த்துடிப்பு என்பது ஜனநாயகத்தின் வலுவில்தான் அதிகளவில் தங்கியுள்ளது. எனவே அவைபற்றிய வாதப் பிரதிவிவாதங்களை முன்வைப்பதும் ஊடகத்தின் கடமையாகிறது. அவ்வாறான ஓர் வரலாற்றின் தேவையின் பின்னணியில் இக் கட்டுரையைத் தருகிறார் ஆய்வாளர் விஸ்வலிங்கம் சிவலிங்கம்).

இன்றைய இலங்கையின் அரசியல் பின்னணியில் தற்போதைய அரசியல் யாப்பு விவாதங்கள் ஒரு வகையில் நாட்டைப் பின்னோக்கி இழுத்துச் செல்வதாகவே கருதப்படுகிறது. நாட்டின் ஜனநாயக அரசுக்  கட்டுமானங்கள் பலவீனமாக இருக்கும் வேளையில் அதனைப் பயன்படுத்தி ஜனநாயக விரோத அல்லது சர்வாதிகாரக் குழுக்கள் அல்லது சில ஆதிக்கப் பிரிவினர் அதனைக் கையகப்படுத்த முயற்சிப்பது வரலாற்றில் பல தடவைகள் நிகழ்ந்துள்ளன. உதாரணமாக ஜேர்மனியில் முதலாவது உலக மகா யுத்தத்தினைத் தொடர்ந்து அங்கு காணப்பட்ட பொருளாதார நெருக்கடிகளும், அரசியல் ஸ்திரமற்ற நிலமைகளும் ஜனநாயக அரசியல் கட்டுமானங்களை மிகவும் பலவீன நிலைக்குத் தள்ளின.  

தேர்தல்கள் வலதுசாரி தீவிரவாத சக்திகளை நோக்கித் திரும்பின. ஓர் இறுக்கமான, பலமான ஒருவரை நோக்கி மக்கள் கவரப்பட்டார்கள். அப்போது இராணுவ அதிகாரியான ஹிட்லர் அக் குழப்பமான நிலமைகளை நன்கு பயன்படுத்தி ஜேர்மானிய மக்களின் ஆரிய அடையாளங்களை முன்வைத்து தேசிய சோசலிசக் கட்சியை ஸ்தாபித்து மக்களின் ஆதரவைப் பெற்றார். 

ஹிட்லரின் ஜேர்மனியை நினைவுபடுத்துகிறது: 

ஒரு புறத்தில் ஜேர்மன் மக்களின் அடையாளத்தினையும், மறுபுறத்தில் முதலாவது உலக மகா யுத்தத்தினால் ஏற்படுத்திய அழிவுகளுக்காக அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளுக்கு மேற்கொள்ளவேண்டிய  கொடுப்பனவுகளால் தமது நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைய முடியவில்லை என்ற குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து தமது தேசிய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்குத் தடையாக யூதர்களே உள்ளார்கள் என தனது நாட்டிற்குள்ளேயே ஒரு எதிரியையும் சிருஷ்டித்தார். இதேபோன்ற ஓர் வரலாற்றுப் பின்னணியை நோக்கியே இலங்கையும் செல்வதைக் காணமுடிகிறது. 

இலங்கையில் ஏற்பட்ட 30 ஆண்டுகால உள்நாட்டுப் போர் நாட்டின் பொருளாதாரத்தை மிகவும் பின்னடைவிற்கு எடுத்துச் சென்றுள்ளது. உள்நாட்டுப் போர் என்பது நாட்டின் சிறுபான்மைத் தேசிய இனங்களின் ஜனநாயக கோரிக்கைகள் தொடர்ச்சியாக மறுக்கப்பட்டதன் காரணமாகவும், அதனால் ஏற்பட்ட அமைதியின்மையை இராணுவ உதவியுடன் ஒடுக்க எடுத்த முனைப்புகளாலும் எழுந்த நிலமைகளாகும். உலகம் முழுவதிலும் அமெரிக்க வெளிநாட்டுக் கொள்கையின் ஆதிக்க செயற்பாடுகளும், இஸ்லாமிய எதிர்ப்பு நடவடிக்கைகளும் அமெரிக்க எதிர்ப்பு நிலமைகளைத் தோற்றுவித்திருந்த புறச் சூழலில் அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல்கள் காரணமாக அமெரிக்க அணுகுமுறைகள் பயங்கரவாதத்திற்கு எதிரானதாக மாற்றமடைந்தன.  

அமெரிக்க மற்றும் அதன் நட்பு நாடுகளான இதர மேற்கு நாடுகளின் பயங்கரவாத எதிர்ப்பு செயற்பாடுகளும் இலங்கையின் உள்நாட்டுப் போரின் போக்கை மாற்ற மிகவும் வாய்ப்பாக அமைந்தது. உள்நாட்டில் காணப்பட்ட ஜனநாயக உரிமைக்கான போராட்டங்கள் இராணுவ ஒடுக்குமுறைகளால் வன்முறையை நோக்கித் திரும்பிய வேளையில் உலக நிலமைகளுடன் இணைத்து அதனையும் வன்முறைக்கு அல்லது பயங்கரவாதத்திற்கு எதிரான போராக இலங்கை மாற்றியது. இதன் விளைவாகக் கிடைத்த சர்வதேச உதவிகள் காரணமாக உள்நாட்டுப் போர் 2009இல் முடிவுக்கு வந்தது.  

இலங்கையில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் தேசத்தின் பொருளாதாரத்தை மட்டுமல்ல, தேசிய இனங்கள் மத்தியில் காணப்பட்ட நல்லுறவிலும் பாரிய விரிசல்களை ஏற்படுத்தியது. ஜேர்மனியில் ஹிட்லர் எவ்வாறு யூதர்களைத் தமது நாட்டின் எதிரிகளாக அடையாளப்படுத்தினாரோ அதே போலவே இலங்கை என்ற சிங்கள தேச உருவாக்கத்தின் எதிரிகளாக நாட்டின் சிறுபான்மையினரான  தமிழர்களும், முஸ்லீம்களும் அடையாளப்படுத்தப்பட்டார்கள்.  

இதன் விளைவாக இலங்கை என்பது சிங்கள பௌத்த நாடு எனவும், சிறுபான்மையோர் என்ற பிரச்சனை அங்கு இல்லை எனவும், சகலரும் இலங்கையர்கள் எனவும், அவ்வாறான ஓர் கோட்பாட்டை மதித்து சகல பிரஜைகளும் அதற்கு ஏற்றவாறு செயற்பட வேண்டும் என்பதும் பல விதங்களில் உணர்த்தப்பட்டு வருகிறது. 

பிரித்தானிய குடியேற்ற ஆட்சியாளரிடமிருந்து 1948ம் ஆண்டு சுதந்திரம் பெற்ற போதிலும், இலங்கை அரசுக் கட்டுமானம் பாராளுமன்றத்தினை உச்ச அதிகார மையமாகவும், அரசியல் அமைப்பு வடிவமே நாட்டின் அடிப்படைச் சட்ட ஏற்பாடு என்பதாகவும், தொகுதிவாரி தேர்தல் பிரதிநிதித்துவமே மக்களின் இறைமை அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளும் முறைமை எனவும் ஏற்றுச் செயற்பட்டது. எனவே இலங்கை என்பது பாராளுமன்ற ஜனநாயக வழிமுறைகளில் ஆளப்படும் ஓர் ஜனநாயக நாடாகவே கருதப்படுகிறது.  

1978இன் யாப்பும் அதன் திருத்தங்களும்: 

1978ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இரண்டாவது அரசியல் யாப்பு நாட்டின் அதிகார மையங்களை இரண்டாகப் பிரித்தது. மக்களால் ஜனநாயக வழிகள் மூலம் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் சபையான பாராளுமன்றமும், அதேவேளை மக்களால் நேரடியாக வாக்கெடுப்பு மூலம்  தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியுமாக இரண்டு அதிகார மையங்கள் உருவாகின. 1978ம் ஆண்டிற்கு முன்னர் மக்களின் இறைமை அதிகாரம் பாராளுமன்றத்திடமே முழுமையாக இருந்தது. தற்போது இரு அதிகார மையங்களும் மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளதால் இறைமை அதிகாரமும் பகிரப்பட்டதாகவே கருதப்படுகிறது. எனவே மக்களின் இறைமை அதிகாரத்தினை இரு அதிகார மையங்களும் பகிர்ந்து கொள்வதால் அதற்கு ஏற்றவாறே அரசியல் யாப்பும் வரையப்பட்டது.  

இருப்பினும், இரண்டாவது குடியரசு அரசியல் யாப்பினை நாட்டில் அறிமுகப்படுத்திய ஐ தே கட்சி தனது நலன்களைக் கவனத்தில் கொண்டே அரசியல் யாப்பினை வரைந்து அப்போதைய பாராளுமன்றத்தில் அக் கட்சியின் ஐந்தில் ஆறு வாக்குப் பலம் காரணமாக மக்களின் அபிப்பிராயத்தைப் பெறாமலேயே பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. இருப்பினும் இவ்விரு அதிகார மையங்கள் மத்தியில் ஏற்படக்கூடிய அரசியல் அமைப்புச்  சிக்கல்களை மூன்றாவது அதிகார மையமாகிய நீதிச்சேவை தீர்ப்பதாக அமைந்தது. எனவே இலங்கையின் அரசியல் அமைப்பு மூன்று சுயாதீன அதிகார மையங்களைக் கொண்டிருப்பதாகவே விபரிக்கப்பட்டது.  

இரண்டாவது குடியரசு யாப்பு 1978 இல் அறிமுகப்படுத்தப்பட்டபோது இரண்டு நியாயங்கள் முன்வைக்கப்பட்டன. அதாவது உள்நாட்டில் காணப்பட்ட வன்முறை நிலமைகளைக் கட்டுப்படுத்துவதற்குப் பாராளுமன்றத்தினால் முடியாது எனவும், வலுவான அதிகாரமிக்க ஜனாதிபதி முறை அவசியம் எனவும்  கூறப்பட்டது. இரண்டாவது காரணமாக நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையிலுள்ளதால் பொருளாதாரத்தை ஒருமுகப்படுத்தவதற்கு சக்தி மிக்க அதிகார மையம் தேவை எனக் கூறப்பட்டது. அவ் வேளையில் அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் தாராளவாத,  திறந்த பொருளாதாரக் கொள்கைகளை அமுல்படுத்தி வந்ததால் அதில் இணைந்து கொள்வதற்கு வசதியாகவே நாட்டின் அரசியல் கட்டுமானம் மாற்றப்பட்டதாவும் கூறப்பட்டது. உதாரணமாக, இலங்கையின் பொருளாதாரத்தினைச் சிங்கப்பூராக மாற்ற அம்மாற்றம் அவசியம் எனக் கூறப்பட்டது.  

எனவே நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி ஆட்சிமுறை உள்நாட்டின் போர் நிலமைகளைக் கட்டுப்படுத்தவும்,  நாட்டின் பொருளாதார அடிப்படைக் கட்டுமானங்களை மாற்றவும் உதவும் என நியாயப்படுத்தப்பட்டது. 1978 இல் செயற்பாட்டிற்கு வந்த இரண்டாவது குடியரசு யாப்பு, இதுவரை 19 திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இத் திருத்தங்களில் 6வது திருத்தம் நாட்டின் பிரிவினைக் கோரிக்கையைக் கட்டுப்படுத்துவதாகவும், 17வது திருத்தம் ஜனாதிபதியின் மேலதிக அதிகாரங்களைக் கட்டுப்படுத்திப் பாராளுமன்றத்தைப் பலப்படுத்துவதாகவும், 18வது திருத்தம் ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீடிப்பதாகவும், அதிகாரத்தைக் குவிப்பதாகவும் அமைந்தது. 19வது திருத்தம் மீண்டும் ஜனாதிபதியின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்துவதாக அமைந்தது.  

இத் திருத்தங்களை அவதானிக்கையில் நாட்டில் ஜனாதிபதியின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தவது, பாராளுமன்றத்தின் இறைமை அதிகாரத்தை அதிகரிப்பது தொடர்பான விவாதங்களே நாட்டின் தேர்தல்களின் பிரதான பேசு பொருளாக அமைந்திருந்தது. அவ்வாறான விவாதங்களே இன்றைய அரசியல் விவாதமாகவும் உள்ளது.  

இவ் விவாதங்கள் யாவும் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்களாகவே உள்ளன. அது மட்டுமல்ல, ஜனாதிபதியின் அதிகாரங்களை மேலும் குவிப்பதற்கான காரணங்களாக எவை கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்டனவோ, அவற்றினால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதாவது நாடு சிங்கப்பூராக மாற்றப்படவும் இல்லை. அதேவேளை உள்நாட்டுப் போர் உக்கிரப்படுத்தப்பட்டதே தவிர கட்டுப்படுத்தப்படவுமில்லை. 2009இல் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தமைக்குக் காரணம் ஜனாதிபதியின் குவிக்கப்பட்ட அதிகாரங்கள் என்பதை விட சர்வதேச நிலமைகளே அதனை மாற்ற உதவின எனலாம்.  

தற்போது அரசியல் அமைப்பில் 20வது திருத்தம் முன்மொழியப்பட்டுள்ளது. இதற்கான நியாயங்களாக மீண்டும் பயங்கரவாதமே முன்வைக்கப்படுகிறது. தற்போது ‘பயங்கரவாதம்’ என்ற சொல்லிற்குப் பதிலாக நாட்டின் பாதுகாப்பு என மாற்றப்பட்டுள்ளது. இப் ‘பாதுகாப்பு’ என்ற சொற் பிரயோகம் என்பது பல்வேறு உள்நோக்கங்களின் பிரதிபலிப்பாகும். அதாவது இலங்கை தற்போது பல்வேறு சர்வதேச அதிகார வலையங்களின் போட்டித் தளமாக மாறியுள்ளது. உதாரணமாக நாட்டின் அபிவிருத்திக்கான முதலீட்டில் சீனா முதலிடம் வகிக்கிறது. உலகம் முழுவதிலுமான சந்தை வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக ‘நிலவழி, கடல்வழி’ பாதை அமைப்பதில் சீனா அதிக முதலீடு மேற்கொண்டுள்ளது. சீனாவின் பொருளாதார ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்கா, இந்தியா, யப்பான், அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் ‘இந்தோ, பசுபிக் பாதுகாப்பு வலயம்’ என்ற போர்வையில் தமது கடல்வழிப் போக்குவரத்தை உறுதி செய்ய கூட்டுச் சேர்ந்துள்ளன.  

உள்நாட்டில் பாதுகாப்பு என்பது இந்திய எதிர்ப்பாகவும். வெளிநாடுகளின் பார்வையில் ‘கூட்டுச் சேராமை’ என்ற போர்வையில் சீனா சார்பு நிலமைகளையும் ஏற்படுத்தி வருகிறது. தற்போது இவை உள்நாட்டு அரசியலில் தாக்கங்களை ஏற்படுத்தாவிடினும், அதிகாரத்தில் இருப்போர் இதனால் ஏற்படக்கூடிய ஆபத்தினை நன்கு உணர்ந்துள்ளனர்.  

எனவே 20வது திருத்தம் என்பது உள்நாட்டு அரசியல் கட்டுமானங்களை இராணுவ வழிகளில் திருப்புவதற்கும், தனிநபர் அல்லது குழுக்களின் ஆதிக்கத்திற்குள் நாட்டின் பரிபாலனத்தை மாற்றுவதற்குமான முயற்சிகளாகும். தற்போது 20வது திருத்தம் தொடர்பாக சிலர் நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில் நாட்டில் இன்னமும் ஜனநாயகத்திற்கான வாய்ப்புகள் உள்ளதாக அடையாளப்படுத்த முயற்சிக்கின்றனர். ஆனால் நாட்டின் நீதிமன்றம் பல விதங்களில் அரசியல்வாதிகளின் பிடிக்குள் சிக்கியிருப்பதை வரலாறுகள் உணர்த்தியுள்ளன. நாட்டின் நீதிச்சேவை சுயாதீனமாகச் செயற்படவில்லை என்பதால்தான் சர்வதேசங்கள் கலப்பு நீதிமன்றம் அமைத்து போர்க்குற்ற விசாரணை நடத்தும்படி ஆலோசனை வழங்கினார்கள்.  

சுதந்திரத்திற்குப் பின்னதான இலங்கை அரசியல் என்பது அரசியல் யாப்பு மாற்றங்கள் மூலம் சமூக, பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும் எனக் கருதுவது மிகவும் தோற்றுவிட்ட ஒன்றாகவே உள்ளது. 1ம், 2ம் குடியரசு யாப்புகள் அறிமுகப்படுத்தப்பட்ட போது அவ்வாறான விவாதங்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் அவை சாத்தியப்படவில்லை. இதற்கான பிரதான காரணம் ஜனநாயகம் மீதான அவநம்பிக்கைகளும், சிங்கள பௌத்த ஆதிக்க செயற்பாடுகளுமாகும். எனவே இலங்கையில் ஜனநாயகப் பற்றாக்குறையை நீக்குவதற்கான போராட்டங்களும், அணுகுமுறைகளும் அவசியம் என்பதே கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.