— பேராசிரியர் சி.மௌனகுரு —
மட்டக்களப்பின் பிரபல பெண்கள் பாடசாலையான வின்சன்ட் மகளிர் கல்லூரி தனது 200 ஆவது ஆண்டில் காலடி வைக்கிறது. வின்சன்ட் மகளிர் கல்லூரியின் 200 ஆண்டு கால நீண்டஇந்த வரலாற்றை முக்கிய மூன்று கட்டங்களாகப் பிரித்துப் பார்க்கலாம்
அவையாவன,
ஆரம்ப கால கட்டம் (1820-1932)
இடைக்கால கட்டம் (1932-1962)
பிந்திய கால கட்டம்( 1962- 2020)
ஆரம்ப கால கட்டம்( 1820- 1932)
மட்டக்களப்பு ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இருந்த காலமாகும். தமது வசதிக்காகவும் தமது தேவைக்காகவும் ஆங்கிலேயர் ஆங்கிலக் கல்வியை இங்கு புகுத்திய காலம் அது, அதனால் நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும் இங்கு பொசிந்தது.
இடைக்கால கட்டத்தில் மட்டக்களப்பு (1948_1962) ஆரம்பத்தில் ஆங்கிலேய ஆட்சியின் கீழும், பின்னர் 1948 இன் பின்னர் இலங்கை அரசின் கீழும் இருந்த காலம். ஆங்கிலமொழி மூலமாகவும் பின்னர் தமிழ் மொழி மூலமாகவும் வின்சன்ட் பாடசாலையில் பாடங்கள் கற்பிக்கப்பட்ட காலங்கள் இவை.
பிந்திய காலகட்டம்( 1962-2020)
இலங்கை அரசின் ஆட்சியின் கீழ், அது, அரசால் கையேற்கப்பட்டு, அரச நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பாடசாலையாக வந்ததுடன் தேசிய ரீதியிலும், உள்ளூர் ரீதியிலும் அரசியல் பண்பாடுஆகியவற்றில் அப்பாடசாலை காத்திரமான பங்களிப்புகள் செய்த, செய்து கொண்டிருக்கின்ற காலம்.
இக்காலகட்டங்களுக்கூடாக பொதுவாக இலங்கை வரலாறு, அரசியல், பண் பாட்டு மாற்றங்களையும் சிறப்பாக மட்டக்களப்பின் அரசியல், சமூக, பண்பாட்டு மாற்றங்களையும் நாம் அறிந்து கொள்ளலாம்
இப்பாடசாலையுடன் நான் மூன்றாம் கால கட்டத்தில் தொடர்புகொள்கிறேன்.
1965 இலிருந்து இற்றைவரை அப்பாடசாலையுடன் நான் தொடர்பு கொண்டிருப்பது நான் செய்த பாக்கியம். 1965-1966 வரை நான் அங்கு உயர்தர வகுப்பு மாணவிகளுக்கு தமிழ் பாடம் கற்பித்ததுடன் அன்று அவர்கள் தயாரித்த கூத்துகள், நாடகங்கள் ஆகியவற்றிலும் உதவி புரிந்துள்ளேன். பின்னாளில் வின்சன்ட் மகளிர் கல்லூரி அதிபராயிருந்த திருமதி சுபா சக்கரவர்த்தி அந்நாடகங்களிலும் கூத்துகளிலும் சிறுமியாகப் பங்கு கொண்டமை ஞாபகம் வருகிறது. என் மனைவி சித்திரலேகா பொதுத் தராதரம் வரை கல்வி பயின்றதும் அங்குதான்.
ஆரம்பகால கட்டம்( 1820-1932) –ஸ்தாபிதம்
1820 ஆம் ஆண்டின் மட்டக்களப்பைக் கற்பனை செய்து பாருங்கள், அச்சமயம் கோட்டைமுனைப்பாலம், கல்லடிப்பாலம் கட்டப்படாத காலம். வீதிகள் போடப்படாத காலம், மட்டக்களப்பு வாவி ஊடாகத்தான் பயணப்பாதை. மட்டக்களப்பிற்கு அந்த வாவி மூலமாக வந்து இறங்கிய கிறிஸ்தவரான வில்லியம் ஓல்ட் இங்கு மெதெடிஸ்த மிஷன் பாடசாலைகளை ஆரம்பிக்கிறார். 1814 இல் ஆண்களுக்கான மெதடிஸ்த மத்திய கல்லூரி ஆரம்பிக்கப்படுகிறது. அத்தோடு பின்னர்,பெண்களுக்கான ஒரு விடுதிப் பாடசாலையும் ஆரம்பிக்கப்படுகிறது.
1895 இல் ஆமி வின்சன்ட் மட்டக்களப்பு வருகிறார். ஆங்கிலம் பேசும் மாணவர்களுக்கான ஒரு பாடசாலையின் அவசியம் உணரப்படுகிறது. மதம், மொழி ஆகியவற்றை மக்கள் மத்தியில் பரப்பி, தமது ஆட்சியை பண்பாட்டு ரீதியாக தம் கீழ் வைத்திருக்க நினைத்த ஆங்கில அரசு, இதற்கு பெரும் ஆதரவு தந்தது.1902 இல் பிரத்தியேகமான ஓர் ஆங்கிலப்பாடசாலை பெண்களுக்கென உருவானது.
1905 இல் மிஸ் வின்சன்ட் சுகவீனமுற்று காலமாகிறார். அடுத்த பத்துவருடங்களுக்கு மிஸ் டக்கறிங், மிஸஸ் புளோரன்ஸ் புல்லர் என்பவர்களின் கீழ் இப்பாடசாலை இயங்குகிறது.
1916 இல் மூன்று பெண்கள் மட்டக்களப்பிலிருந்து E.S.L.C பரீட்சைக்குதோற்றுகிறார்கள். அவர்களில் ஒருவர் லோறன்ஸ் தம்பிமுத்து. பிரின்ஸ் காசிநாதரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்.1921 இல் தமிழ் மொழி விடுதிப்பாடசாலை நீக்கப்பட்டு, ஆங்கிலப்பாடசாலையாக இது மாற்றப்படுகிறது. இதற்கு, இதனை ஸ்தாபித்த வின்சன்ட் அம்மையாரின் பெயரை இடுகிறார்கள். வின்சன்ட் மகளிர் கல்லூரி உருவாகிறது.
இடைக்கால கட்டம் ( 1932- 1962) –வளர்ச்சி:
1922 தொடக்கம் 1946வரை மிஸ் குரப்ட்டின் காலமாகும். இது வின்சன்ட் பாடசாலையின் வளர்ச்சிக்காலமாகும். 84 பெண் பிள்ளைகளுடன் இருந்த பாடசாலை, 365 பெண் பிள்ளைகளைகொண்ட பாடசாலையாக வளர்ச்சியடைகிறது. இதற்குள் இஸ்லாமியப் பெண்களும் அடங்குவர். வின்சன்ட் பாடசாலை மேலும் அகலிக்கப்படுகிறது. ஆரம்பக் கலைத்திட்டம் தயாரிக்கப்படுகிறது. இக்கால கட்டத்திலேதான் இங்கு பயின்ற மட்டக்களப்பு பெண் மணியான யூஜின் நல்லரத்தினம் முதன்முதலாக சீனியர் கேம்றிஜ் பரீட்சையில் சித்தியடைகிறார்.
1932 களில் உப அதிபராகபணியேற்ற மிஸ் சம்னஸ் காலத்தில் இன்னும் பெரு வளர்ச்சி ஏற்படுகிறது. கலைத்திட்டம் இன்னும் விரிவு படுத்தப்படுகிறது.
இதுவரை அதிபர்களாக கடமையாற்றியவர்கள் அனைவரும் மேற்கு நாட்டினர், இங்கிலாந்திலிருந்து வந்தவர்கள்.
பின்னர் அதிபராக வந்து சேர்கின்றார் பத்மன். இவரும் கிறிஸ்தவரே, பட்டதாரியான இவர் இந்தியாவில் கேரளாவைச் சேர்ந்தவர். அவர் அதிபரானதன் பின் வின்சன்ட் இன்னொரு பரிமாணம் பெறுகிறது.
பாடசாலை இன்னும் பல விடயங்களில் முன்னேற்றம் காணுகிறது.
இவர் காலத்தில் இந்தியாவிலிருந்து பட்டதாரி ஆசிரியர்கள் ஆங்கிலத்தில் கல்வி பயிற்ற இங்கு அழைக்கப்படுகிறார்கள். வின்சன்ட் கல்லூரியில் படித்த பெண்கள் இந்தியா சென்று பட்டப்படிப்பு படித்துவர வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்றது. இவ்வண்னம் சென்றவர்களுள் முக்கியமான இருவர்தான் திருமதி ராஜகருணாவும், திருமதி செல்வி நாகராஜாவும்.
இராஜ கருணா மட்டக்களப்பில் முதன் முதல் கார் ஓட்டி பாடசாலை வந்த ஆசிரியப்பெண்மணி என நினைக்கிறேன். அவர்கள் எல்லாரும் அக்காலத்தில் அங்கு கற்றுகொண்டிருந்த பெண்களுக்கு முன்னுதாரணம் ஆனார்கள்.
பாடசாலையில் ஆங்கிலமே பேச வேண்டும் தமிழ் பேசினால் தண்டனையுடன் பணமும் கட்டவேண்டும் எனக் கடுமையான சட்டங்களும் போடப்பட்டன. அதிகமாக வசதி பெற்றோருக்கே அனுமதிகளும் கிடைத்தன. வறியவர்களும் இஸ்லாமியரும் சேர்க்கப்பட்டனர், ஆனால் அது புறநடை.
இக்கால கட்டத்தில் பெண்கள் சாரணிய இயக்கம் ஆரம்பிக்கப்படுகிறது. இதன் பொறுப்பாளராக வருகிறார் செல்வி கனகரத்தினா. மட்டக்களப்பில் அன்று சைக்கிளோடிய பெண்களுள் மிக முக்கியமானவர், அவர் ஓடிய சைக்கிள் பிரசித்தமானது. இந்த செல்வி கனகரத்தினாவின் சைக்கிள் ஓட்டம் பெண் பிள்ளைகளையும் சைக்கிள் ஓட வைத்தது. அவர் சிறுமிகளுக்கு ஓர் றோல் மொடலுமாவார்.
இன்றோ சைக்கிளின்றிச் சிறுமிகள் இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது.
மிஸ் சம்னஸ் காலத்தில் பெண்கள் விளையாட்டு போட்டிகளிலும் உடற்பயிற்சிகளிலும் ஈடுபடுத்தப்பட்டனர். இது பாரம்பரிய மட்டக்களப்பிற்கு மிகவும் புதிது.
பெண்கள் ஓடுவதா? பாய்வதா? உடற்பயிற்சி செய்வதா எனப்புருவம் உயர்த்தினர் சனாதனிகள்.
ஆனால் அவ்வெதிர்ப்புகளை தன் செயற்பாடுகளால் அன்று வென்று நிமிர்ந்தது வின்சன்ட்.
மட்டக்களப்பு நகரில் ஆங்கிலம் கற்ற, ஆங்கிலம் பேசும் வெள்ளைக்கார நாகரீகத்தைப் பின்பற்றும் ஒரு மேலோங்கிக் கூட்டம்(Elite Group) உருவானது.
இத்தகைய மேலோங்கி கூட்டத்தை இலங்கையின் பல பாகங்களிலும் உருவாக்கப்பட்ட கிறிஸ்தவ, இந்து, இஸ்லாமிய பௌத்த பாடசாலைகள் உருவாக்கியுமிருந்தன. இதில் பெரும் பங்கு கிறிஸ்தவ பாடசாலைகளுக்கேயுண்டு. அவற்றில் ஒன்றுதான் வின்சன்ட் பாடசாலை.
மட்டக்களப்பில் ஓர் மேல்நிலைப்பட்ட ஆங்கிலம் பேசும் உயர் குழாம் உருவான கதை அது.
மட்டக்களப்பிலிருந்தும் சம்மாந்துறையிலிருந்தும் கல்முனையிலிருந்தும் வசதிபெற்ற குடும்ப பெண் சிறுமிகள் வின்சன்ட் விடுதியில் இணைந்து கல்வி கற்றனர். இவர்களில் பெரும்பான்மையான முஸ்லிம் பெண்களும் அடங்குவர்.
இவ்வண்ணம் வின்சன்ட் பாடசாலை பிற மதத்தவர்களையும் தன்னுள் இணைத்துக்கொண்டது.
அக்காலத்தில் இரண்டு வித பாடசாலைகள் இருந்தன. நகரப்புறதில் இயங்கிய ஆங்கில மொழி மூல பாடசாலைகள், கிராமப்புறங்களில் இயங்கிய தமிழ் மொழி மூல பாடசாலைகள். ஆங்கிலப் பாடசாலைகளும் அவற்றில் கற்றோருமே உயர்வாக மதிக்கப்பட்டனர்.
பிந்திய கால கட்டம்( 1962- 2020):
1950 களின் பிற்பகுதியில் இலங்கை அரசியலிலும் கல்வியிலும் பெரு மாற்றங்கள் ஏற்படுகின்றன. கல்வியில் சுயமொழிக்கல்வி அறிமுகம் செய்யப்படுகிறது. எனினும் தனியார் பாடசாலைகள் முக்கியமாக கிறிஸ்தவ பாடசாலைகள் ஆங்கில மொழியிலேயே கல்வி கற்பித்தன.
1962 தனியார் பாடசாலைகள் பலவற்றை அரசாங்கம் கையேற்றது.
தமிழ் பேசினால் தண்டனை என இருந்த பாடசாலைகளில் தமிழ் மொழி பெரிதாக ஒலித்தது. இக்காலகட்டத்தில் இரண்டு பெரும் ஆளுமைகள் வின்சன்ட் பாடசாலையில் விளங்குகிறார்கள். ஒருவர் திருமதி சின்னையா இன்னொருவர் திரவியம் ராமசந்திரன். திருமதி சின்னையா தமிழரசுக்கட்சி ஸ்தாபகர் எஸ் ஜே. வி செல்வநாயகத்தின் உறவினர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர், தமிழ்ப்பற்றாளர்.
திருமதி திரவியம் இராமசந்திரன் மட்டக்களப்பின் பாரம்பரிய கிறிஸ்தவ குடும்பத்தில் வந்தவர். நாடகம், கூத்து, கவிதை என கலை இலக்கிய ஈடுபாடு கொண்டவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பேரா, கணபதிப்பிள்ளை வித்தியானந்தன் ஆகியோரின் கீழ் தமிழ்வித்வான் ( B.O.L) படிப்பு மேற்கொண்டவர். தமிழ்ப்பற்றாளர், மட்டக்களப்பு மண்மீதும் அதன் பாரம்பரியக் கலைகள் மீதும் மாளாக் காதல் கொண்டவர்.
அரசியலிலும் வின்சன்ட்:
1960 கள் இலங்கைத் தமிழரசுக்கட்சி இலங்கை எங்கணும் “சிங்கள ஶ்ரீ ” எழுத்து அழிப்பு போராட்டம், உண்ணாவிரதப் போராட்டம், சத்தியாக்கிரகப் போராட்டங்களை அரச அடக்கு முறைக்கு எதிராக நடத்தியது. அதில் பொது மக்கள் மாத்திரமன்றி, பாடசாலை மாணவர், ஆசிரியர் எனப்பலரும் இணைந்தனர். அச்சமயம் வின்சன்ட் மகளிர் கல்லூரியும் அதில் இணைந்தது. அப்போது, அது அரசாங்கப் பாடசாலை ஆகவில்லை. அதனால் அரசாங்கச் சட்டதிட்டங்களால் அதனைக் கட்டுபடுத்த முடியவில்லை. வின்சன்ட் பாடசாலை இதில் முன்னின்றமை எனக்கு ஞாபகம் வருகிறது. அப்போது கச்சேரி நோக்கி வந்த ஆசிரிய ஊர்வலங்களுள் வின்சன்ட்மகளிர் கல்லூரி ஊர்வலம் முக்கியமானது. இப்படி தமிழர் அரசியலிலும் வின்சன்ட் மகளிர் பாடசாலை இணைந்த காலம் அதுவென நினைக்கிறேன்.
வின்சன்ட்டில் கூத்து:
1960 களின் ஆரம்பகாலங்களில்தான் அங்கு கலைப் பிரிவிற்கான உயர்தர வகுப்புகள் ஆரம்பிக்கப்படுகின்றன. பெண்கள் உயர்தரக் கல்வி பயிலும் வாய்ப்புகள் கிடைத்தன.
1965 களில் மட்டக்களப்பில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தயாரிக்கப்பட்ட “இராவணேசன் கூத்து” மட்டக்களப்பில் அரங்கேறுகிறது. அந்த நவீனப்படுத்தப்பட்ட கூத்தினால் கவரப்பட்ட திரவியம் இராமசந்திரன், மட்டக்களப்புக் கூத்தை வித்தியானந்தன் பாணியில் வின்சன்ட் பெண் பிள்ளைகளைக் கொண்டு அரங்கேற்றுகிறார்.
கூத்துப்போட்டியில் அவர் தயாரித்த “உத்தமன் பரதன்” எனும் கூத்து முதலிடம் பெறுகிறது. தொடர்ந்து சில கூத்துகளையும் தயாரிக்கிறார். முதன் முதலில் பாடசாலை மாணவிகள் கூத்தில் பங்கு கொண்டமை வின்சன்ட் பாடசாலையில்தான். அக்கூத்துகளுக்கு ஒப்பனை செய்தார் அங்கு ஆசிரியராகக் கடமை புரிந்த செல்வி நாகராஜா. உதவியாக இருந்தார் திருமதி ராஜ கருணா. அப்போதுதான் எனக்கு வின்சன்ட் மகளிர் பாடசாலையுடன் தொடர்பு ஏற்படுகிறது. அந்தக் கூத்தின் பாரம்பரியம் இன்றும் அங்கு தொடருகிறது.
நானும் அங்கு கற்பித்தேன், அவர்கள் தயாரித்த அக்கூத்து உருவாக்கங்களுக்கு உதவினேன். இன்று பிரபலமான பலர் அன்று சிறுமிகளாக அதில் பங்கு கொண்டனர். அவர்களுள் ஒருவர்தான் பின்னாளில் இப்பாடசாலை அதிபராக வந்த சுபா சக்கரவர்த்தி. வின்சன்ட் மாணவியாக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி கதிர்காமரும் கூத்து ஆடிய ஒருவர்தான்.
ஆங்கிலம் கோலோச்சிய, பியானோ சப்தம் ஒலித்த பாடசாலையில் ஆங்கில நாடகங்கள் ஆக்கிரமித்த வின்சன்ட் பாடசாலை கலை மண்டபத்தில், வின்சன்ட் பாடசாலை பரிசளிப்பு விழாக்களில் மாணவிகள் நடித்த உள்ளூர்க் கூத்தும் இடம்பெறுகிறது. பியானோ போல மத்தள ஒலியும் சலங்கை ஒலியும் வின்சன்ட் வளாகத்தில் ஒலிக்கத் தொடங்கின.
சரஸ்வதி விழாக்கள், இந்து பண்டிகைகள், தமிழ் விழாக்கள் பாடசாலையில் கொண்டாட நிர்வாகம் உதவியது.
அன்று அங்கு பணிபுரிந்த திருமதி சின்னையா, திரவியம் ராமசந்திரன் போன்ற கிறிஸ்தவர்களினதும் ஏனைய ஆசிரியர்களினதும் பரந்த மனப்பாங்கு இதற்குக் காரணமாகும்.
திருமதி சின்னையாவுக்குபின் அதன் அதிபர்களாக உள்ளூரவர்களேதொடர்ந்தும் வருகிறார்கள்.
சின்னையாவுக்குப் பின் திருமதி பாக்கியராஜா, திருமதி பவளகாந்தன், சுபா சக்கரவர்த்தி, சுஜாதா, ராஜகுமாரி, திருமதி சுபாகரன் ஆகியோர் அதிபர்களாக இருந்தார்கள். இன்று அந்தப் பள்ளிக்கூடம் 200வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நிலையில் அதன் பழைய மாணவிகளில் ஒருவரான திருமதி தவத்திருமகள் உதயகுமார் அதன் அதிபராக பணியாற்றுகிறார். இவரும், இவர்கள் அனைவரும் இந்துக்கள்.
அரசாங்க பாடசாலையில் யாரும் அதிபராக வரலாம்.
இவ் ஓவ்வொரு அதிபர்களின் கீழும் இப்பாடசாலை ஓவொரு படி வளர்ந்திருக்கிறது, அவ்வளர்ச்சி அவ்வவ் அதிபர்களின் ஆளுமையை பொறுத்து அமைந்திருக்கிறது.
ஸ ரி க ம ப த நி என ஆரோகணத்தில் செல்லும் வளர்ச்சி அது!
அடுத்த கட்ட வளர்ச்சிக்கு இதனைக் கொண்டு செல்ல வேண்டிய பெரும் பொறுப்பு இன்றைய அதிபர் திருமதி உதயகுமார் தோழில் சுமத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பு பாரம்பரிய கூத்தை வளர்க்கும் பணியும் அதில் அடங்கும்.
இன்று தேசிய பாடசாலையாகத் திகழும் இப்பாடசாலை இலங்கையிலுள்ள முன்னணிப்பாடசாலைகளில் ஒன்று.
இதிலிருந்து வருடம் தோறும் பல்கலைக்கழகத்திற்கு சகல பிரிவுகளுக்கும் பெரும் தொகை மாணவர் செல்கிறார்கள்.
இதில் கல்வி கற்ற மாணவிகள் பல்கலைக் கழகப் பேராசிரியர்களாக, விரிவுரையாளர்களாக, அதிபர்களாக சிறந்த ஆசிரியைகளாக, பராளுமன்ற உறுப்பினராக, வைத்தியர்களாக, எந்திரிகளாக, சமூக சேவையாளர்களாக கலை இலக்கிய உலகில் சிறந்தவர்களாக உருவாகியுள்ளனர்.
அவர்களின் சிறந்த சேவைகளை நாடு பெற்றது, பெறுகிறது.
இன்று 200 ஆவது ஆண்டைப்பூர்த்தி செய்யும் இப்பாடசாலையின் வரலாறு சுவையானது
ஆங்கிலம் கற்பிக்க ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையில் தமிழ் போதனாமொழியாக்கப்பட்டு, இன்றோ தமிழ் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.
மேற்கு நாட்டு பண்பாட்டு மனோபவம் கொண்டவர்களாக மாணவரை உருவாக்கும் நிலைமாறி, தேசிய நோக்கும் உள்ளூர்ப் பண்பாட்டில் பற்றும் கொண்டவர்களாகவும் மாணவிகளை உருவாக்கும் நிலைக்கு அது வந்திருக்கிறது
அனைத்து மதங்களையும் இணைக்கும் அல்லது மதிக்கும் ஒரு நிறுவனமாக அது உருவாகியுள்ளது.
வசதி பெற்ற உயர்மட்ட பிள்ளைகள் மாத்திரமன்றி குறிப்பாக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த, குறிப்பாக மட்டக்களப்பை சேர்ந்த வசதி குறைந்த மாணவர்கள் இங்கு கல்வி பயிலுகிறார்கள்.
தமிழர் அரசியல் போராட்டத்தின் ஒர் கால கட்டத்தில் முக்கியமான அரசியல் நிலைப்பாட்டினை இது எடுத்திருக்கிறது.
இத்தனை மாற்றங்களுக்கு உட்பட்ட போதிலும் தமது இல்லங்களுக்கு இட்ட பெயர்களான அயல் நாட்டவர்களான வின்சன்ட், சம்னஸ், குரப்ட், பத்மன் ஆகியோரின் பெயர்களை மாற்றாமல் வைத்து நன்றி பேணுகிறது.
ஐரோப்பிய நாகரிகத்தினதும் கீழைத்தேயப் பண்பாட்டினதும்,
கிறிஸ்தவ மதத்தினதும் இந்து இஸ்லாமிய மதத்தினதும்,
வெளியூர் பண்பாட்டினதும், உள்ளூர்ப் பண்பாட்டினதும்,
ஆங்கில மொழியினதும், தமிழ் மொழியினதும்
மரபினதும், புதுமையதும்
வசதி குறைந்த மாணவியரினதும், வசதி கூடிய மாணவியரினதும்
சங்கம நிலையமாகத் திகழ்ந்து,
ஓர் முன் உதாரண பாடசாலையாகவும் திகழ்கிறது.
அறிவும் ஆற்றலும் நிரம்பிய இளம் தலைமுறையை உருவாக்கும் மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் கல்லூரியினை நாமும் வாழ்த்தி மகிழ்வோம்.