மாறிச் செல்லும் உலக அரசியல் சூழலும், ஜனநாயக கோட்பாட்டு விவாதங்களும்

மாறிச் செல்லும் உலக அரசியல் சூழலும், ஜனநாயக கோட்பாட்டு விவாதங்களும்

  — வி.சிவலிங்கம் — 

(பகுதி 1) 

வாசகர்களே! 

நாம் தற்போது வாசிப்பை மேற்கொள்ளும் இணையத் தளத்திலும், மேலும் பல ஊடகங்களிலும் இலங்கையில் நடைபெறும் அரசியல் மாற்றங்கள் குறித்த பல கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. இலங்கையில் இடம்பெற்று வரும் அரசியல், சமூக, பொருளாதார மாற்றங்கள் என்பவை உலக அளவிலான மாற்றங்களோடு சம்பந்தப்பட்டவை. குறிப்பாக கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக நாட்டில் செயற்படுத்தப்படும் நவதாராளவாத பொருளாதாரக் கொள்கைகள் கூடவே பல பிரச்சனைகளையும் தோற்றுவித்துள்ளன. உதாரணமாக, நவதாராளவாதக் கொள்கைகளை முழுமையாக அமலாக்கும் நோக்கில்தான் 1978ம் ஆண்டு இரண்டாவது குடியரசு யாப்பு அமுலாக்கப்பட்டது. அதன் பிரகாரம் நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி ஆட்சிமுறை நடைமுறைக்கு வந்தது.  

இலங்கையை நவீன சிங்கப்பூராக மாற்றும் எண்ணத்தில் தோற்றுவிக்கப்பட்ட நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறையும், நவதாராளவாத பொருளாதாரக் கொள்கைகளும் எதிர்பார்த்தபடி மாற்றங்களைத் தரவில்லை. பதிலாக மிக மோசமான எதேச்சாதிகார அடிப்படையிலான ராணுவ உள்ளடக்கங்களைக் கொண்ட நிர்வாகக் கட்டுமானத்தையும், வறியோருக்கும், பணம் படைத்தோருக்கும் இடையே பாரிய இடைவெளியைத் தரும் பொருளாதார வாழ்வையும் தந்துள்ளது. இவ்வாறான தோற்றம் என்பது இலங்கையின் வரலாற்று நிகழ்வுப் போக்கின் தவிர்க்க முடியாத விளைவுகளாக நாம் அவற்றைக் கருதுவதா? அல்லது இவை உலக அளவில் நிகழ்ந்து வரும் அவ்வாறான போக்கின் ஒரு அம்சமா? என்பது குறித்த ஆய்வினை மேற்கொள்வதே இக் கட்டுரையின் பிரதான எண்ணமாகும்.  

வலதுசாரி ஜனரஞ்சக அரசியல் (Right – wing populist politics) மிகவும் ஆழமாக வளர்ந்து செல்லும் போக்கு தற்போது காணப்படுகிறது. இதனால் உலக நாடுகள் பலவற்றில் இதுவரை பின்பற்றிய லிபரல் ஜனநாயக் கோட்பாடுகள் மற்றும் பாராளுமன்ற ஆட்சிக் கட்டுமானங்களும் செயலற்றுக் காணப்படுகின்றன. இதற்கு இவ்வாறான அரச கட்டுமானங்களைத் தோற்றுவிப்பதற்கான பின்புலமாக அமைந்த லிபரல் ஜனநாயக அரசியல் மற்றும் நவதாராளவாத பொருளாதாரக் கொள்கைகள் தோல்வி அடைந்துள்ளமையே காரணமென விவாதிக்கப்படுகிறது. அவ்வாறாயின் அதற்கு மாற்றீடாக முன்வைக்கப்படும் அல்லது மாற்று ஏற்பாடுகள் என்ன? என்ற கேள்வி எழுகிறது. இத்தகைய விவாதங்களின் பின்னணியில்தான் சீனாவின் அபரிமிதமான பொருளாதார வளர்ச்சியின் அடிப்படைகள் பற்றிய விவாதங்கள் தோன்றுகின்றன.  

மக்கள் சீனக் குடியரசின்  மிகக் குறுகிய கால வளர்ச்சி என்பது மேற்கு நாடுகளில் பின்பற்றப்படும் லிபரல் பொருளாதாரக் கொள்கைகளை மட்டுமல்ல, சீனாவின் புதிய சோசலிச நிர்மாண கொள்கைகளையும் பலத்த விவாதத்திற்குள் தள்ள்ளியுள்ளது.  

சீனப் பொருளாதாரம் என்பது உலகின் இரண்டாவது பொருளாதாரமாக பலம் பெற்றுச் சென்றிருப்பதற்கு  அங்கு பின்பற்றப்படும் ‘சோசலிச சந்தைப் பொருளாதாரக் கொள்கைகள்’காரணம் எனவும், அதன் பின்னணியில் ‘மார்க்ஸிச, லெனினிய கொள்கைகள்’ பிரதான பங்கு வகிப்பதாகவும் கருதப்படுகிறது. அவ்வாறாயின் சீனாவில் தற்போது பின்பற்றப்படும் ‘தனியார் – அரசுத்துறை’ இணைந்த கலப்புப் பொருளாதாரக் கட்டுமானம் ‘சோசலிசம்’ பற்றிய புதிய விளக்கங்களை எதிர் நோக்குகிறது. உற்பத்தி சாதனங்களைப் பொதுவுடமையாக மாற்றுவதன் மூலமே உழைப்புச் சுரண்டலை முடிவுக்கு எடுத்துச் செல்ல முடியுமென மார்க்சிசம் கூறும் கோட்பாடுகள் எவ்வாறு இன்றைய சீனாவின் சூழலில் புரிந்து கொள்ளப்படுகின்றன? என்பது பற்றியும் அறிதல் அவசியமாகிறது.  

இங்குள்ள முக்கிய விவாதத்திற்குரிய அம்சம் எதுவெனில் நூற்றாண்டுகள் கடந்த மேற்குலக லிபரல் ஜனநாயக கொள்கைகள் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற முடியவில்லையே ஏன்?மிகவும் பின்தங்கிய பொருளாதாரத்தைக் கொண்டிருந்த சீனா முப்பது ஆண்டுகளில் கோடிக்கணக்கான மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ததோடு அம் மக்களின் வாழ்க்கைத் தரமும் உயர்ந்து செல்கிறது. அவ்வாறாயின் அமெரிக்கா தலைமையிலான லிபரல் ஜனநாயக கொள்கைகளில் அமைந்த தனியார் சந்தைப் பொருளாதாரமும், அதனடிப்படையலமைந்த அரசுக் கட்டுமானம் பற்றிய கோட்பாடுகளும் தோல்வியடைந்துள்ளதாகவே கருத வேண்டும். சீனாவில் அமைந்து வரும் சோசலிச சந்தைப் பொருளாதாரமும், அதனடிப்படையிலமைந்த அரசுக் கட்டுமான கோட்பாடுகளும் புதிய சமூகத்தைத் தோற்றுவிக்குமா? அவ்வாறான சமூகக் கட்டுமானத்தில் இன்று காணப்படும் பிரச்சனைகளுக்கான தீர்வுகள் எவ்வாறு அயைலாம்?         

சீனப் பொருளாதாரம் ஏற்படுத்தி வரும் தாக்கங்கள் அதில் சீனக் கம்யூ. கட்சியின் பங்கு, அக் கட்சியின் கோட்பாடுகள், அந் நாட்டின் வரலாறு, அனுபவங்கள், தேவைகள் போன்றவற்றின் அடிப்படையிலிருந்தே சோசலிச நிர்மாணம் என்பது சீன குணாம்சங்களை உடையதாக விபரிக்கப்படுகிறது. எனவே சோசலிச நிர்மாணம் என்பதும் அந்தந்த நாடுகளின் வரலாற்று அனுபவங்களினூடாகவே தோற்றுவிக்கப்பட வேண்டும் என்பதாக புதிய விளக்கங்கள் உள்ளன.  

ஒரு புறத்தில் நவதாராளவாத பொருளாதாரக் கட்டுமானங்களும், அதனடிப்படையில் தோற்றுவிக்கப்பட்ட லிபரல் ஜனநாயக அரசியல் கட்டுமானங்களும் மாற்றத்தை நோக்கிச் செல்கையில் மறு புறத்தில் சோசலிசக் கட்டுமானத்திற்கான அடிப்படைகளும் மாற்றமடைந்து செல்வதை நாம் காண்கிறோம். இம் மாற்றங்களின் அடிப்படைகள் சிலவற்றை இக் கட்டுரை ஆராய முனைகிறது. இருப்பினும் இக் கட்டுரை அவ்வப்போது இலங்கையின் இன்றைய அரசியல் நிலவரங்களொடு தனது ஒப்பீடுகளை நினைவுறுத்திச் செல்ல முயற்சிக்கும்.  

கடந்த தசாப்தம் என்பது ‘வலதுசாரி ஜனரஞ்சக’ (Right-wing populism) அரசியல் என்பதாக உலக அளவில் விஸ்தரித்து வருகிறது. இந்த ஜனரஞ்சக அரசியல் தேசியவாதத்தினை முன்னோக்கி நகர்த்துகிறது. உலக அளவிலான பல நெருக்கடிகள் இவ்வாறான சந்தர்ப்பவாத ஜனரஞ்சக அரசியல் சக்திகள் பலமடைவதற்கான வாய்ப்பான காலங்களாகவே உள்ளன. அது மட்டுமல்ல, அவ்வாறான அடிப்படைவாத கொள்கைகளை அமுல்படுத்துவதற்கான பலமான தருணங்களாகவும் அவை மாற்றமடைந்துள்ளன.  

இம் மாற்றங்களுக்கான உதாரணங்களாக அமெரிக்க அரசியலில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அவர்களின் வகிபாகம் குறித்தும், அதே போலவே ஐரோப்பிய நாடுகளில் அதிகளவில் ஹங்கேரி நாட்டின் பிரதமர் விக்டர் ஓபர்ன் (Victor O’rban) மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் பிரதானமாக அணுகப்படுகிறது.  

இந்த இரு நாடுகளின் தலைவர்களை உதாரணமாகக் கொள்வதற்குக் காரணம் இவர்கள் இருவரும் தற்போது எழுந்துள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளை தமது நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப அதாவது வலதுசாரி ஜனரஞ்சக அரசியல் தேவைகளுக்கு ஏற்ப மாற்றி அமைத்து வரும் போக்கினை விளங்கிக் கொள்வதன் மூலம் பொதுவான நிலமைகளைப் புரிந்து கொள்ள முடியும்.  அதாவது இத் தலைவர்கள் தற்போதுள்ள சிக்கலான நிலமைகளைப் பயன்படுத்தி தமது நாட்டிற்கு எதிராக பெரும் சூழ்ச்சி உருவாக்கப்படுவதாகச் ‘சித்தப்பிரமை’ (paranoid) நோயால் பீடித்தவர்கள் போல அடிக்கடி கூறி தமது எண்ணங்களுக்கு ஏற்றவாறு மக்களைத் திசை திருப்ப முயற்சிக்கின்றனர். இவ்வாறான ஓர் நிலையே இலங்கையில் ‘ஈஸ்ரர் ஞாயிறு’ படுகொலைகளின் பின்னணியில் உருவாக்கப்படும் அச்சங்களாகும்.  

தமது எண்ணங்களை அல்லது அச்ச உணர்வுகளை மக்கள் மத்தியில் உருவாக்குவதற்காக இருவருமே ஊடகங்களையே கையாள்கின்றனர். அமெரிக்காவில் பலமான ஊடகங்கள் இருப்பதால் அவற்றைப் ‘போலிச் செய்தி’ (Fake news) ஊடகங்கள் என வர்ணித்து தமக்கென ருவிட்டர் பதிவின் மூலம் தனது செய்தியை டிரம்ப் வெளியிடுகிறார். அவர் தற்போது பதவியிலிருந்து விலகிய போதிலும் மேலும் சில ஊடகங்கள் அவரது எண்ணங்களை வெளியிட உதவுகின்றன. அதே போலவே ஓர்பனும் கடுமையான சட்டங்கள் மூலம் கெடுபிடியை அதிகரித்துள்ளார். உதாரணமாக அரசு வெளியிடும் செய்திகளைப் பிழையாக திரித்து வெளியிட்டால் சிறைத்தண்டனை என அரச அறிவித்தல் தெரிவிக்கிறது. இலங்கையில் பல பிரதான சக்திமிக்க ஊடகங்கள் அரச விசுவாசிகளால் நடத்தப்படுகின்றன. ஏனையவை மீது பலத்த கண்காணிப்பு நடத்தப்படுகிறது.  

இவர்கள் இருவருமே அகதிகள், முஸ்லீம் மக்கள், அந்நியர்களின் குடிவரவு போன்ற நடவடிக்கைகளை மனித உரிமை என்ற அம்சங்களை முன்னிறுத்தாமல் மக்கள் வெறுப்படையும் வகையில் தமது ‘சித்தப்பிரமை’களை வெளிப்படுத்துகின்றனர். உதாரணமாக, மெக்சிக்கோ நாட்டிலிருந்தும், அதன் அருகிலுள்ள பொருளாதார அடிப்படையில் நலிவடைந்த நாடுகளிலிருந்து பெருந்தொகையான அகதிகள் அமெரிக்காவிற்குள் நுழைய மெக்சிக்கோ நாட்டின் எல்லைகளைப் பயன்படுத்துகின்றனர். இந்த மக்களை போதைப் பொருள் கடத்தல்காரர்கள், கொள்ளையர்கள், பிள்ளைகளைக் கடத்துபவர்கள், பாலியல் குற்றவாளிகள் என டிரம்ப் வர்ணித்து அந்த மக்களை நாட்டிற்குள் நுழையவிடாது எல்லையில் சுவர்களை எழுப்புவது, அவ்வாறு சட்ட விரோதமாக நுழைந்தவர்களுக்கு அதிக அளவிலான தொந்தரவுகளை ஏற்படுத்துவது என பல திட்டங்களை நிறைவேற்றினார். இவற்றின் மூலம் தாம் அமெரிக்க மக்களைப் பாதுகாப்பதாகவே கூறினார். அவர் மனித உரிமைகளை அதாவது லிபரல் ஜனநாயகத்தின் பிரதான கூறாக அமையும் மனித உரிமையைப் புறக்கணித்தார்.  

அதே போலவே விக்ரர் ஓர்பனும், சிரியா நாட்டிற்குள் அமெரிக்க படைகள் நுழைந்து அந் நாட்டிற்கு எதிராகப் பிரகடனப்படுத்தாத யுத்தத்தில் ஈடுபட்ட வேளையில் வெளியேறிய பல லட்சம் அகதிகளை தாம் ஏற்பதாக ஜேர்மனி அரசு மனிதாபிமானத்தின் அடிப்டையில் அறிவித்துத் தனது எல்லையைத் திறந்தது. இதன் காரணமாக பல அகதிகள் ஹங்கேரி ஊடாக ஜேர்மனிக்குள் நுழைய ஆரம்பித்தனர். இந்த அகதிகள் முஸ்லீம்கள் என்பதால் அவர் தனது ஜேர்மனி நாட்டின் எல்லையை மூடினார். ஒரு நாட்டிற்குள் நுழைவதானால் அந்த நாட்டின் அனுமதி பெற வேண்டும். இந்த மக்கள் எவ்வித அனுமதியையும் பெறவில்லை எனவும், தனது நாடு கிறிஸ்தவ நாடு என்பதால் தம் நாட்டின் கலாச்சாரத்திற்குள் வேறு மதக் கலாச்சாரங்களைக் கலக்க தனது நாடு அனுமதிக்காது எனவும், சில ஐரோப்பிய நாடுகளின் இப் பரிசோதனை முயற்சிகளை தமது நாடு ஏற்றுக் கொள்ளாது எனவும் தெரிவித்தார். இந்த நாடு ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவ நாடாக இருந்த போதிலும் அதன் விதிகளை விக்டர் ஓர்பன் மீறி வருகிறார். இந்த இருவரும் மனித உரிமை விடயத்தில் தீவிர வலதுசாரிக் கொள்கைகளையே பின்பற்றினர். இவற்றின் மூலம் தமது நாட்டின் சுதேசிகளின் இரட்சகர்களாகத் தம்மை அடையாளப்படுத்துகின்றனர். இம் மாதிரியான உணர்வுகளையே இலங்கையிலுள்ள சிங்கள பௌத்த அமைப்புகள் நாட்டின் தேசிய சிறுபான்மை இனங்களுக்கு எதிராக தோற்றுவிக்கின்றன. இம் மக்களின் தேசிய உணர்வு குறித்து கேள்விகளை எழுப்புகின்றனர்.     

உலகின் மிகவும் பலமான ஜனநாயக நாடு எனவும், ஜனநாயகத்தைப் போதிக்கும் நாடு எனவும் வர்ணிக்கப்படும் அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் ஏற்பட்டுவரும் வலதுசாரி ஜனரஞ்சக அரசியல் மாற்றங்கள் குறித்து அவதானங்களை மேற்கொள்ளும்போதுதான் இலங்கையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களின் தாற்பரியங்களையும், ஆபத்துகளையும் வரலாற்று அடிப்படையில் காண முடியும். இந்த நாடுகளில் ஏற்பட்டுவரும் தாக்கங்களைக் குறிப்பாக கலாச்சார மாற்றங்கள், பொருளாதார, தொழில்நுட்ப மாற்றங்கள் என்பவற்றின் மூலமாக அடையாளம் காண முடியும். இம் மாற்றங்களே அரசியல் அணுகுமுறைகளிலும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.  

குறிப்பாக, எமது கவனங்கள் தற்போது மேற்கு நாடுகளில் மிக வேகமாகப் பரவிவரும் ‘ஜனரஞ்சக அரசியல்’ (populist politics) என்பது மிக நீண்ட காலமாக பலமாக வேருன்றியிருந்த லிபரல் ஜனநாயக அரசியல் கட்டுமானங்களை மிகவும் ஆட்டம் காண வைத்திருக்கும் போக்குகளை நோக்கித் திருப்புதல் வேண்டும். லிபரல் ஜனநாயக கோட்பாடுகளில் செயற்பட்ட பல பிரதான அரசியல் நீரோட்ட கட்சிகள் இவ்வாறான ஜனரஞ்சக அரசியலை நோக்கி இழுத்து வரப்படுகின்றன. ஜனநாயக அரச கட்டுமானங்களின் அதிகாரங்கள் பின்தள்ளப்படுகின்றன அல்லது பலவீனப்படுத்தப்படுகின்றன. ஜனநாயக பொதுவெளி என்பது மிகவும் கூறுபட்டுச் செல்கிறது. கூட்டுச் செயற்பாடு தெளிவற்றுச் செல்கிறது.  

இவ்வாறான தருணங்களையே சித்தப்பிரமை பிடித்த சந்தர்ப்பவாதிகள் பயன்படுத்துகிறார்கள். குழப்பமான, தெளிவற்ற நிலமைகளே மக்களின் கவனத்தை மாற்ற, தமது கபட அரசியல் எண்ணங்களைச் சாதகமாக்க, ஊடகங்கள் மூலம் தொடர்ச்சியாக போலிக் கதையாடல்களை உண்மைகள் என நம்பவைக்க, போலி எதிரிகளைச் சிருஷ்டிக்க முயற்சிக்கின்றனர்.  

ஏற்கெனவே குறிப்பிட்டவை போன்ற நிலமைகளே அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப், ஹங்கேரியில் விக்டர் ஓர்பன் போன்றோரைப் பதவியில் அமர்த்த உதவியுள்ளது. இவர்களின் தெரிவு என்பது ஏற்கெனவே மிக நீண்ட காலமாக செயற்பாட்டிலிருந்த லிபரல் ஜனநாயக கட்டுமானங்களுக்கான ஆபத்தாக மாற்றமடைந்துள்ளது. இவ்வாறே இலங்கையில் தனிச் சிங்கள பௌத்த கதையாடல்களும், சிறுபான்மைத் தேசிய இனங்களான தமிழர்களும், முஸ்லீம்களும் தமது சிங்கள, பௌத்த தேச உருவாக்கத்திற்கு இடையூறாக இருப்பதாகவும் அதனடிப்படையில் பாராளுமன்ற ஜனநாயகம் தோற்றுவிட்டதாகவும் கூறி தேர்தல் மூலமான சர்வாதிகார அரசுருவாக்கம் 20வது திருத்தத்தின் மூலம் தோற்றம் பெற்றுள்ளது.     

தற்போது ஊடகங்கள் மீதான நம்பிக்கை என்பது மிகவும் குறைந்துள்ளது. அத்துடன் சமூக வலைத்தளங்கள் போன்ற ஊடகங்களின் வளர்ச்சி என்பது செய்தித்துறையில் புது நிலமைகளை அதாவது புதிய அனுபவங்களை ஏற்படுத்தியுள்ளது. கல்வியிலும் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. புதிய துறைகள் ஆரம்பமாகியுள்ளன. இம் மாற்றங்களினூடகவே தேசியவாதமும் வளர்ந்து வருகிறது.  

இம் மாற்றங்களுக்கு மத்தியில்தான் நாம் ஏற்கெனவே கூறும் ‘சித்தப்பிரமை’யை ஏற்படுத்தும் இயக்கு விசைகள் செயற்படுகின்றன. இவை மூலமாகவே இவற்றிற்குத் தலைமைதாங்கும் சக்திகளும்,மக்களின் கூட்டு மனங்களும் இணைந்து கொள்வதோடு, புதிய திரிபுபடுத்தும் கருத்தியல்களும் ஆழமாகின்றன. இலங்கையைப் போன்ற தேசங்களில் ஓரங்களில் செயற்படும் சக்திகள் இலங்கைக்கு எதிராக பாரிய சூழ்ச்சி நடப்பதாகவும் அவை நாட்டின் பாரம்பரியமிக்க கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றை அழிக்கத் திட்டமிடுவதாகவும் அடிக்கடி கூறி நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அச்சமூட்டுகின்றனர். இவற்றிற்கான உண்மைகளை அறிவதற்கான மாற்று ஊடக ஏற்பாடுகள் அற்ற நிலை காணப்படுகிறது. இவ்வாறாக எவ்வித உண்மைகளையும் மக்கள் அறியாதவண்ணம் ஊடக ஆதிக்கங்களால் செய்திகள் மறைக்கப்பட்ட நிலையில் அதனைப் பற்றிக்கொள்ள அல்லது நம்புவதற்கு பல ஆயிரம் மக்கள் தவிர்க்க முடியாதபடி  தமது எதிர்காலத்தை அடமானம் வைக்கத் தயாராகிறார்கள். இவை இலங்கையில் மட்டுமல்ல, அமெரிக்கா, ஐரோப்பா போன்ற தேசங்களிலும் தோற்றம் பெறுகிறது என்பதனை நாம் மேலும் பார்க்கலாம். 

(தொடரும் )