களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை : ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்! – (பகுதி 02)

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை : ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்! – (பகுதி 02)

— தேசம்நெற் ஆசிரியர் த.ஜெயபாலன்  

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! 

(தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் (பகுதி 02) (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 06.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கண்ணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.) 

பள்ளிப் படிப்பும் பதின்மப் பருவமும் 

தேசம்: தோழர் நீங்கள் உங்கள் கிராமம் பற்றிச் சொல்லவில்லை. உங்களின் கிராமத்தின் சூழலைப்பற்றி சொல்லுங்கள். அதன் சனத்தொகை போன்ற விபரங்களைக் கூறுங்கள். 

அசோக்: என் களுதாவளைக் கிராமம் இயற்கைச்  சூழலும் பசுமைகளையும் குளங்களையும் விவசாய தொழிலையும் கொண்டது. சனத்தொகை கூடிய கிராமங்களில் ஒன்று. வாக்காளர் பட்டியலில் மிகப் பெரிய கிராமம்.  

வெற்றிலை செய்கைக்கு பெயர்போனது. ஒரு கிராமியப்பாட்டு உண்டு ‘களுதாவளை  வெற்றிலைக்கும் காலிப்பாக்குக்கும் சிவந்ததுகா உன் உதடு’ என்று. 

தேசம்: வழிபாட்டு முறைகள்,.. 

அசோக்: வழிபாட்டு முறை. பெருங்கோயில் என்றால் களுதாவளை விநாயகர் ஆலயம். முருகன் கோயில் இருக்கிறது. சிறு தெய்வ வழிபாடுகள் உண்டு. எழுவான்கரை என்ற படியால் ஒரு பக்கம் வங்காள விரிகுடா கடல். எமது கிராமம் கடலைச் சார்ந்து இருக்கும். கிராமத்தில் மூன்று குளங்கள், நீர்த்தேக்கங்கள் இருக்கின்றன. அதனைத் தொடர்ந்து விவசாய காணிகள் இருக்கின்றன. இங்கே நெற்பயிர்ச் செய்கையே மேற்கொள்ளப்படுகிறது. அதற்கு அங்கால மட்டக்களப்பு வாவி. குளங்களைச் சுற்றி மருத மரங்கள் இருக்கின்றன. இயற்கையை தன்னகத்தே கொண்ட ஒரு அழகான கிராமம். கடல் கரையை அண்டிய பகுதியில் ஒரு இடைவெளி இருக்கும். அந்த இடைவெளியில் காடுகளும் பனை மரங்களும் இருக்கும். அதற்கு அங்கால எமது கிராமம். இப்போது அக் காடுகள் அழிக்கப்பட்டு விவசாயத்தை மேற்கொள்கிறார்கள். அங்கு இப்போது வெங்காயம், மிளகாய் போன்ற சிறு பயிர் செய்கையை மேற்கொள்கிறார்கள். விவசாயம் செய்வதற்கான இடமாக அது மாறிவிட்டது. நாட்டுக் கூத்தெல்லாம் என் கிராமத்தில் நடக்கும். இப்போது அருகிவிட்டது. 

தேசம்: நீங்கள் சிறுபிள்ளையாக இருந்து வளர்ந்து வரும்போது உங்கள் அனுபவம் என்ன? உங்களின் ஆறு எழு வயதில் நடந்த சில சம்பவங்கள் உங்களுக்கு ஞாபகம் இருக்குமென நம்புகின்றேன். அது தொடர்பாக பகிர்ந்துகொள்ளுங்கள். 

அசோக்: கிராமத்து சிறுவர்களுக்குரிய  விளையாட்டுக்கள் அனைத்தையும் நான் விளையாடி இருக்கிறன். நிறைய சுதந்திரம். சிறு வயதில் வெறும் மேலோடு மேல் சட்டை இன்றியே திரிவேன். எங்கள் ஊர் குளங்களில் நீச்சல் அடிக்கிறது. கிட்டிப்புல் அடிப்பது கெற்றப்போல் அடிப்பது. எறி பந்து விளையாடுவது. கோயில் திருவிழாக்கள் என்றால் ஒரே கொண்டாட்டம்தான். சின்னவேட்டி கட்டி பக்திமானாக மாறிவிடுவேன். திருவெண்பாக்காலம் எனக்கு சந்தோசமான காலம். அம்மா கோயிலுக்கு வேறு எங்கு போனாலும் என்னை கூட்டிப் போவா. எனக்கு ஞாபகம் தெரிந்தவரை ஏழு எட்டு வயதுவரை காதில கடுக்கன் தோடு போட்டிருந்தேன். நிறைய ஞாபகங்கள் இருக்கு. நீண்டதாய் போய்விடும்.  

தேசம்: உங்கள் கிராமத்திற்கே உரிய விளையாட்டு ஒன்றைப்பற்றி சொல்லியிருந்தீர்கள். 

அசோக்: ஆம் அதனை கொம்புமுறி விளையாட்டு என அழைப்பார்கள். இது கண்ணகி வழிபாட்டுடன் தொடர்புடையது. சிறுவர்களுக்குரியதல்ல. குடிகளுக்கு இடையிலான போட்டி விளையாட்டு. ஒரு காலத்தில எங்க கிராமத்தில பிரபலமாக விளையாடப்பட்டது. பெரிய விழாவாக சடங்காக கொண்டாடுவாங்க. கொம்புச்சந்தி என்ற இடமே உண்டு எங்க ஊரில. 

தேசம்: உங்களின் இளமைக்கால கல்வியைப் பற்றி கூறுங்கள். 

அசோக்: அப்பாவின் பாடசாலையான இராமகிருஸ்ண  மிஷனில் ஆரம்பக் கல்வியைக் கற்றேன். நான் கொஞ்சம் சுட்டித்தனம் கொண்டவனாக இருந்தபடியால் ஆரம்பக் காலத்தில் கல்வியில் பெரிய நாட்டம் இருக்கவில்லை. அப்பாவும் தலைமை ஆசிரியராக இருந்தபடியால் எனக்கு அழுத்தங்கள் கூடுதலாக இருக்கவில்லை. இரண்டாம் வகுப்பிற்கு பிறகே எழுத வாசிக்க தொடங்கினேன். 

தேசம்: இன்றைக்கு இருக்கும் ஒரு அரசியல் சூழல் அன்றைக்கு ஏற்பட்ட தாக்கத்தினால் உண்டானதா என்று சொல்ல ஏதாவது ஒரு விடயம் உண்டா? 

அசோக்: தமிழரசு கட்சியுடன் அப்பாவுக்கு இருந்த அரசியல் சூழல்தான். நான் நிறைய வாசிப்பேன். எனது வீடு ஒரு நூலகம். நிறைய நூல்கள் இருந்தன. எனது அண்ணாமார்களும் அக்காக்களும் வாசிப்பதில் நாட்டம் கொண்டவர்கள். ஒரு அண்ணா இருந்தவர் தியாகராஜா என்று. பெரியாரின் கொள்கையில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். அண்ணாவும் அவர் நண்பர்களும் அந்தக் காலத்தில் இலக்கிய சஞ்சிகை ஒன்றை எழுதி கையெழுத்துப் பிரதியாக வெளியிட்டாங்க. பெரியார் தொடர்புடைய எல்லா புத்தகங்களும் இந்தியாவில் இருந்து வரும். இந்தியாவில் இருந்து வரும் நிறைய சஞ்சிகைகளும் எங்கள் வீட்டில் கிடைக்கும். அப்பா பெரியார் மீது நம்பிக்கையும் மரியாதையும் கொண்டவர். அப்பா வித்தியாசமானவர். எல்லாவற்றையும் வாசிப்பார். நல்லதொரு உதாரணம் அப்பாவின்ர பாடசாலையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கடமையாற்றினார். அவர் இடதுசாரிக் கட்சியில் இருந்தார். அவர் தேசாபிமானி என்ற பத்திரிகையை கொண்டு விற்பார். எங்கள் பாடசாலையிலேயே அதனை கொண்டுவந்து விற்பனை செய்வார். அதனையும் அப்பா வாசிப்பார்.   

தேசம்: அந்த நேரம் உங்களின் பொழுது போக்குகள் எவை? வீட்டில் நிறையபேர் இருந்தாலும் வெளியில் போய் விளையாடுவதற்கான சூழல் மற்றும் நட்பு வட்டங்கள் எவ்வாறு இருந்தன? 

அசோக்: நான் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே எங்கள் கிராமத்தில் படித்தேன். பின்னர் சிவானந்தா வித்தியாலயத்தில் படித்தேன். சிவானந்தா பாடசாலை மிகவும் கட்டுப்பாடான பாடசாலை. அங்கு நாங்க நினைத்த மாதிரி பெரிசா விளையாட முடியாது. லீவு நாட்களில் வீட்டுக்கு வருவேன். ஓரே விளையாட்டுத்தான். பொழுது போக்காக முத்திரை சேகரிக்கும் பழக்கம் இருந்தது. 

தேசம்: உங்கள் ஊரில் இருந்து அப்பாடசாலை எவ்வளவு தூரம்? 

அசோக்: ஊரில் இருந்து 16, 17 கிலோமீற்றர் இருக்கும். விடுதியில் இருந்தே படித்தேன். இங்கு ஒரு வருடம் கல்வி கற்றேன். விடுதியிலும் பாடசாலையிலும் மிகவும் கட்டுபாடுகள் இருந்தன. இந்த கட்டுப்பாடு எனக்கு கஸ்டமாக இருந்தது. பிறகு வீட்டிலிருந்து போய் வந்தேன். 

இப்பாடசாலையில் சமஸ்கிருதமும் ஒரு பாடமாக இருந்தது. படிப்பும் ஒழுங்குகளும் முக்கியம் . ஒரு வருடத்தின் பின் அந்தப் பாடசாலைக்குச் செல்ல முடியாதெனத் தெரிவித்துவிட்டேன். ஆறாம் வகுப்பு மட்டும்தான் சிவானந்தா பாடசாலையில் கற்றேன். பின்னர் வந்தாறுமூலை மத்தியக் கல்லூரியில் கற்றேன். அந்தப் பாடசாலை எங்க ஊரிலிருந்து இருந்து 30 கிலோ மீற்றர் தூரம் இருக்கும். அங்கேயும் விடுதியில் இருந்தே கல்வி கற்றேன். 

தேசம்: உங்கள் பகுதியில் அப்போது உயர்தரப் பாடசாலைகள் இல்லையா? 

அசோக்: பாடசாலைகள் இருந்தன. என்றாலும் அப்பா விபுலானந்தரின் மேல் இருந்த அபிமானத்தில் சிவானந்தா வித்தியாலயத்தில் அந்தப் பாடசாலையில் சேர்த்தார். அங்கு கட்டுப்பாடு இறுக்கம் எனக்கு பிடிக்கவில்லை. அதற்குப் பிறகுதான் வந்தாறுமூலை மத்திய கல்லூரியில் சேர்ந்தேன். சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வீட்டுக்கு வருவேன். எங்கள் ஊரில் கிராம சபையால் உருவாக்கப்பட்ட நூலகம் ஒன்று இருந்தது. அதில் இளந்தளிர் வாசகர் வட்டத்தை நாங்க உருவாக்கினோம். 

தேசம்: உங்களுக்கு எத்தனை வயது? 

அசோக்: அப்போது எனக்கு சுமார் 15, 16 வயதிருக்கும். அந்த வாசகர் வட்டத்தின் ஊடாக சிறிய சிறிய கருத்தரங்குகள் நடத்துவோம். இளந்தளிர் வாசகர் வட்டத்தை உருவாக்கியமைக்கு காரணம் நாங்கள் விரும்பிய புத்தகங்களை வாசகர் வட்டத்தின் ஊடாக சிபாரிசு செய்யலாம். அதனூடாக நிறைய எழுத்தாளர்களின் அறிமுகம் கிடைத்தது. பாரதி நூற்றாண்டு விழாவை முதல் முதலாக இலங்கையில் செய்தவர்கள் நாங்கள் தான்.  

இளந்தளிர் வாசகர் வட்டம் உருவாக்க காரணமாக இருந்தவர் வெல்லவூர் கோபால் அண்ணர். அதற்கு போஷகராக இருந்தவர். அவர்தான் எங்கள் ஆலோசகர். வழிகாட்டி. மிக அருமையானவர். இன்று குறிப்பிடத்தக்க வரலாற்று ஆய்வாளராக இலங்கையில் இருக்கிறார். அவர் மட்டக்களப்பு வரலாறு தொடர்பாக பல ஆய்வுகளை செய்துள்ளார். அவர் எங்கட கிராம ஆட்சி சபையின் காரியாலயத்தில பிரதமலிகிதராக இருந்தார். அவர் ஒரு கவிஞராக, எழுத்தாளராக இருந்தபடியால் அவரின் ஊக்கத்தினால இளந்தளிர் வாசகர் வட்டம் உருவாகியது. 

தேசம்: அந்தக் காலத்தில் உங்களுடன் இருந்த நண்பர்கள் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? 

அசோக்: அவர்களை ஞாபகம் இருக்கிறது. பிற்காலத்தில் அவர்களில் பலர் என்னோடு  இயக்கத்தில் இணைந்து கொண்டனர். 

தேசம்: இளந்தளிர் வாசகர் வட்டத்துடன் பயணித்தவர்களுடனான ஞாபகங்கள்? 

அசோக்: ரவி, பேரின்பம், சீவரெத்தினம். இப்போ கிழக்கு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். ஜெயவரதன். செல்வரெத்தினம் காலமாகி விட்டார். ஜெயரெத்தினம். திருநா. மனோ- தவராஜா, பணிக்ஸ், நல்லிஸ் தயா, சிவஞானம், குணம் சந்திரன்  இப்படி நிறையப் பேர்களை சொல்லலாம். இவர்களில் பலர் என்னால் பாதிக்கப்பட்டவர்கள். சிறைக்குச் சென்று நிறைய பிரச்சினைகளை எதிர்நோக்கினாங்க.. எனது கிராமத்தைச் சேர்ந்த எனது நண்பர்கள் அனேகர் என்னால் பாதிக்கப்பட்டவர்கள்தான். என் நண்பன் ரவி  பொலிசாரினால் கடும்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டான். இன்றும் அதன் பாதிப்பிலிருந்து அவன் மீளமுடியவில்லை. 

தேசம்: இந்த நீண்ட அரசியல் பயணத்தில் கலை இலக்கிய பயணத்திலும் இந்த இளந்தளிர் வாசகர் வட்டம் ஒரு முக்கியமான பங்கை வகித்துள்ளது. 

அசோக்: ஆம் இளந்தளிர் வாசகர் வட்டம் எமக்கு வாசகர் வட்டம் மாத்திரமல்ல. கிராம அபிவிருத்தி, சிரமதானங்கள் விழாக்கள் கருத்தரங்குகள் செய்வதுடன் விளையாட்டுப் போட்டிகளும் நடத்துவோம். கிராமத்தில் நாங்கள் ஒரு வித்தியாசமான முன்னுதாரணங்களாக இருந்தோம். வெறும் படிப்புடன் இருக்காமல் சமூக சேவையிலும் ஈடுபடக்கூடியதாக இருந்தது. 

தேசம்: பதின்ம பருவத்திற்குரிய எல்லா விடயங்களிலும் நீங்கள் ஈடுபட்டுள்ளீர்கள்? 

அசோக்: ஆம் பதின்ம பருவத்திற்குரிய எல்லாச் சேட்டைகளும் எங்களுக்கு இருந்தது. என்றாலும் அதற்குள் முழுமையாக அகப்படாமல் தப்பித்துக்கொண்டோம். நம்பலாம்! எங்கள் அனைவருக்கும் சமூக அக்கறை இருந்தது. அந்த சமூக அக்கறையினால நாங்கள் காலப்போக்கில் அரசியலுக்குள்ளும் வந்தோம். பல்வேறு சஞ்சிகைகள், புத்தகங்கள் படித்தோம். இவைகள் எல்லாம் சேர்ந்து  நாங்கள் அரசியல் மயப்படுவதற்கான ஒரு வாய்ப்பாக இருந்தது. 

தேசம்: அந்தச் சூழல் பெற்றோரால் ஊக்குவிக்கப்பட்டதா? உங்கள் பார்வை என்ன? 

அசோக்: எனது குடும்பத்தில் சுதந்திரம் இருந்தது. படி, படி என்று பெரிதாக கட்டாயப்படுத்தவில்லை.  

தேசம்: இந்தச் சுதந்திரம் உங்களின் மற்ற நண்பர்களுக்கும் இருந்ததா?  

அசோக்: அப்படி சொல்லமுடியாது. 

தேசம்: உங்கள் கிராமத்து ஒடுக்கப்பட்ட சமூக மக்களோடு உங்கள் உறவு எப்படி இருந்தது ? 

அசோக்: எமக்கும் ஒடுக்கப்பட்ட சமூகம் எனச் சொல்லப்படுகின்ற மக்களுக்கும் மிகவும் நெருக்கமான உறவு இருந்தது. இயல்பாகவே ஒரு நட்பு இருந்தது. ஆனால் எமது கிராமத்திற்குள் பழைய தலைமுறையினருக்கு முரண்பாடு இருந்தது. பாரதி நூற்றாண்டு விழாவில்அவங்கட நாடகம் ஒன்றை போடுவதற்கு இருந்த வேளையில் எமது கிராமத்தில் ஒரு சிலரால் எதிர்ப்பு ஏற்பட்டது. இதனையும் மீறி சித்திரைப் புத்தாண்டு விழாவில் மேடையேற்றினோம். நாடங்களில் அவங்க மிகத்திறமையானவங்க. என்ர நண்பன் ஆனைக்குட்டி சிவலிங்கம் அண்ணா கலைமன்றம் வைத்திருந்தார். நிறைய நல்ல நாடகங்கள் போடுவாங்க. நான் சனி, ஞாயிறு போனால் அவர்களுடன் மிகவும் நெருக்கமாக   இருப்பேன். 

எங்கு ஒடுக்கப்பட்ட சமூகம் இருக்கிறதோ, அங்கு சாதிய முரண்பாடு நிச்சயமாக இருக்கும். எங்க கிராமத்திலும் இந்த முரண்பாடு காணப்பட்டது. கோயிலுக்குள் போகமுடியாது. எங்க பாடசாலையில் படிக்கமுடியாது. ஒடுக்கப்பட்ட பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எங்க கிராமத்தில் சைக்கிளில் ஓட முடியாது. அவ்வாறு சைக்கிளில் வந்தாலும் குறிப்பிட்ட இடத்தில் இருந்து உருட்டிக்கொண்டு போகவேண்டும். நான் அவர்களை சைக்கிளில் ஏற்றிச்செல்வேன். இப்படி என்ன செய்தாலும் எங்க கிராமத்தில் என்னை எதிர்ப்பவர்கள் குறைவு. அதற்கு எனது குடும்ப பின்னணியும் ஒரு காரணமாக அன்று இருந்திருக்கலாம். அவ்வாறான ஒரு சூழல்தான் நான் இருந்தபோது இருந்தது. இப்போது நிறைய மாற்றங்கள் வந்துள்ளது.  

அவங்க செய்யும் விழாக்கள் விசேடங்கள் எல்லாவற்றிக்கும் செல்வோம்.. நாடகம் போடுவார்கள். என் நண்பர்கள் அவங்கட நாடகங்களில் சேர்ந்து நடிப்பார்கள். என் அண்ணர் ஒருவர் தன் பிள்ளைகளை அவர்களிங்ர ஆரம்ப பாடசாலையில் சேர்த்தார். எனக்கு பல நண்பர்கள் அங்க இருந்தாங்க. அந்த நண்பர்களில் சிலபேர் என்னோடு இயக்கத்திற்கு வந்தாங்க.  

தேசம்: உங்களுக்கு இயல்பாகவே சாதி எதிர்ப்பு மனநிலை இருந்தது. 

அசோக்: எனக்கு மாத்திரம் அல்ல என் நண்பர்களுக்கும் இருந்தது. 

(தொடரும்..).