— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்—
கடந்த எழுபது வருடங்களுக்கும் மேலாக நடைமுறையிலிருந்துவரும் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்ட அரசியலிலும் அந்த எழுபது வருடத்தின் பின்னரைவாசிக் காலத்தை விழுங்கிய ஆயுதப் போராட்டத்திலும் இருந்த தவறுகள்- பலவீனங்கள்- இழக்கப்பட்ட அரிய சந்தர்ப்பங்கள்- இனிமேல் செல்ல வேண்டிய பாதை பற்றியெல்லாம் சுய விமர்சன நோக்கில் இப்பத்தி எழுத்துத் தொடர் கடந்த பத்திகளில் நிறையவே பேசியிருக்கிறது. இப்பத்தி எழுத்துக்களின் நோக்கம் எந்தத் தனிநபர் மீதோ- கட்சியின் மீதோ- போராளி இயக்கங்களின் மீதோ குறை காண்பதோ அல்லது குற்றம் சாட்டுவதோ அல்ல. கடந்த காலத் தவறுகளிலிருந்தும்-பலவீனங்களிலிருந்தும்- இழக்கப்பட்ட அரிய சந்தர்ப்பங்களிலிருந்து பாடங்களைப் படித்துக் கொண்டு அவற்றின் அடிப்படையில், தற்போது தடம்புரண்டு போயுள்ள தமிழ்த் தேசிய அரசியல் பயணத்தை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்துவதற்கான செல்நெறியைத் தீர்மானிப்பதற்கு உதவக்கூடிய சுய விமர்சனங்களையும் முன்மொழிவுகளையும் முன்வைப்பதே இப்பத்தி எழுத்துத் தொடரின் முழு நோக்கமுமாகும்.
கடந்த காலத்தில் நடைபெற்ற தமிழ்த்தேசிய விடுதலை நோக்கிய அகிம்சை வழிப் போராட்டங்கள் வெவ்வேறு காலகட்டங்களில் தமிழ் மக்கள் மத்தியிலே சில எழுச்சிகளை ஏற்படுத்தியிருக்கலாம். சில வேளைகளில் அவை தமிழ்த் தேசிய அரசியலில் சாதனைகளாகக் கூடப் பதிவாகியிருக்கலாம். அதேவேளை தமிழ்த் தேசிய விடுதலை நோக்கிய ஆயுதப் போராட்டங்கள் சில வீரசாகசங்களை வெளிப்படுத்தியிருக்கலாம். தற்காலிக இராணுவ வெற்றிகளைக் கூட அவ்வப்போது தந்திருக்கலாம். ஆனால் எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பிரித்துப் பெருக்கி இவற்றின் ஒட்டு மொத்தமான விளைவு குறித்த ஒரு ‘ஐந்தொகைக் கணக்கு’ப் பார்த்தால் அதன் பெறுமானம் பூச்சியம்(0) அல்லது மோசமான எதிர்மறைக் கணியமாகவே (-) உள்ளது. இதற்கான அடிப்படைக் காரணம் யாதெனில், தமிழரசுக்கட்சி காலத்திலிருந்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக் காலம் வரை முன்னெடுக்கப்பட்ட தமிழ்த் தேசிய அரசியல் மக்கள் நலன் சார்ந்த முற்போக்குக் குணாம்சங்களிலிருந்தும் புரட்சிகரப் போக்குகளிலிருந்தும் விலகித் தேர்தல்களில் வாக்குச் சேகரிப்பதற்கான ‘வாக்குப்பெட்டி’ அரசியலான குறுந்தமிழ்த் தேசியவாதமாகப் பிறழ்வடைந்ததால்- அதேபோல் ஆயுதப் போராட்டத்தைப் பொறுத்தவரை அதன் இறுதிக் கட்டத்தில் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் தாமே என இராணுவ மேலாண்மையால் தம்மை நிலை நிறுத்திய தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் என உச்சரித்துக் கொண்டு முன்னெடுத்த அரசியல் மற்றும் ஆயுத நடவடிக்கைகள் யாவும் மக்கள் நலனை விட்டு வெகுதூரம் விலகி- அதிகார போதையும் தலைமைத்துவ மோகமும் கொண்ட தனிநபர் பயங்கரவாதப் பிடிக்குள் சிக்கித் தமிழ்ப் பாசிசவாதமாகப் பிறழ்வடைந்ததால் ஏற்பட்ட தத்துவார்த்தப் பலவீனமேயாகும்.
இந்தத் தத்துவார்த்தப் பலவீனத்திற்குக் கடந்த எழுபது வருடங்களுக்கும் மேலாகப் பங்களித்ததில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் (1944) அதிலிருந்து பிரிந்து உருவான இலங்கைத் தமிழரசுக் கட்சி (1949), இரண்டும் இணைந்து உருவான தமிழர் கூட்டணி/ தமிழர் விடுதலைக் கூட்டணி (1972/76) மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு (2001) ஆகிய தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் 2001இல் புலிகளைத் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் பங்காளிக் கட்சிகளாக இணைந்த முன்னாள் போராளி இயக்கங்களான சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈபிஆர்எல்எப், செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ரெலோ மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பின்னர் இணைந்துகொண்ட சித்தார்த்தன் தலைமையிலான புளொட் என்பவற்றிற்கும் பெரும் பங்குண்டு.
தற்போது உருவாகியுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்), சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக்கூட்டணி (மறுவடிவம் எடுத்துள்ள ஈபிஆர்எல்எஃப்) மற்றும் ரெலோவிலிருந்து பிரிந்து வந்து ஸ்ரீகாந்தாவும் சிவாஜிலிங்கமும் இணைந்து சிறிகாந்தா தலைமையில் உருவாகியுள்ள தமிழ்த் தேசியக் கட்சி, முன்னாள் புலி உறுப்பினராகவிருந்து பின்னர் தமிழரசுக் கட்சியில் இணைந்து இறுதியாக அதிலிருந்து விலகி வந்து அனந்தி சசிதரன் தனது தலைமையில் அமைத்துள்ள ஈழத் தமிழர் சுயாட்சிக்கழகம் இவை எல்லாமே இந்தத் தத்துவார்த்தப் பலவீனத்தைத் தலைக்குள் வைத்துக்கொண்டுதான் தம்மைத் ‘தமிழ்த் தேசியக் கட்சிகள்’ எனக் குறி சுட்டுக்கொண்டு அரசியல் செய்கின்றன. தமிழர் வாக்கு வங்கிகளை அடையாளம் கண்டு அதில் முதலீடுகளை வைப்புச் செய்யும் அரசியலைக் கட்டமைப்பதிலேயே இக்கட்சிகள் யாவற்றினதும் கவனம் குவிந்துள்ளதே தவிர தமிழ்த் தேசிய அரசியலின் தற்போதைய தேக்க நிலை குறித்தகவலை இக்கட்சிகளிடம் இல்லை.
மேலே பெயர் குறிக்கப்பட்ட கட்சிகள் அனைத்துமே தற்போது தங்களைப் புலிகளின் முகவர்களாக அல்லது பதிலிகளாகவே அடையாளம் காட்டியுள்ளன அல்லது அவ்வாறு அடையாளப்படுத்தும் வண்ணமே நடந்துகொள்கின்றன.
இவர்கள் தேர்தல்களில் வடக்குக் கிழக்குத் தமிழர்களால் பெரும்பான்மையாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும்கூட (சிலரைத் தவிர்த்து) இவர்கள் புலிகளின் முகவர்களாக அல்லது பதிலிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதால் இவர்களைச் சிங்கள சமூகமோ- இலங்கை அரசாங்கமுமோ (அது எந்தக் கட்சி அரசாங்கமாக இருந்தாலும் சரி)- இந்தியாவோ- சர்வதேச சமூகமோ உளமார ஏற்றுக் கொள்ளவில்லை. இது சரியா? பிழையா? என்பதற்கப்பால் இதுவே யதார்த்தம். இவர்கள் பெரும்பான்மைத் தமிழர்களால் ஜனநாயக ரீதியில் தேர்தல்களின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளனரென்ற ஒரே காரணத்திற்காக இவர்களுடன் இச்சக்திகள் பேசுகின்றனவே தவிர இவர்கள் மீது இச்சக்திகளுக்கு நம்பிக்கையில்லை.
தமிழ்த் தேசிய அரசியலானது அதன் தத்துவார்த்தப் பலவீனங்களுக்கும் அப்பால் சரியோ பிழையோ முள்ளிவாய்க்கால் யுத்தம் முடியும்வரை (18 மே 2009) ஒரு கொதி நிலையில் இருந்தது. அதனால் யுத்தத்தை நிறுத்தும் நோக்கில் அந்த யுத்தத்தின் தோற்றுவாய்க்குக் காரணமான இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பதில் இலங்கை அரசாங்கங்களுக்கும், இந்தியாவுக்கும், சர்வதேச நாடுகளுக்கும் ஏதோ ஒரு வகையில் தேவை இருந்தது. தமிழர் தரப்பு அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தத் தவறிவிட்டது என்பதைவிடக் கெடுத்துவிட்டதென்பதே சரியானது.
ஆனால், யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் அத்தகைய சூழல் அற்றுப் போய்விட்டது. கொதி நிலையில் இருந்த தமிழ்த் தேசிய அரசியல் அதன் தத்துவார்த்தப் பலவீனம் காரணமாகத் தற்போது உறை நிலைக்குத் திரும்பிவிட்டது.
வருடா வருடம் வரும் கோவில் திருவிழாக்கள் போல் வந்து போகும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின் போது சர்வதேச போர்க்குற்ற விசாரணைக் கோரிக்கைகளை உருப்போடுவதுடனும்- உள்நாட்டில் தேர்தல் தேவைகளுக்காகப் பாராளுமன்ற உரைகள், பத்திரிகை அறிக்கைகள். ஊடகச் சந்திப்புகள், பேரணிகள், நினைவேந்தல் நிகழ்வுகள் இப்படிப்பட்ட வெறுமனே உணர்வுபூர்வமான நிகழ்ச்சிகளுடனும்-மாற்றுச் சிந்தனையாளர்களைத் “துரோகிகள்” எனப் பட்டம் சூட்டுவதுடனும்- சுயலாப அரசியல் காரணங்களுக்காக வடக்கில் டக்ளஸ் தேவானந்தாவையும் கிழக்கில் பிள்ளையானையும் எதிர்பதுடனும் ‘தமிழ்த் தேசிய அரசியல்’ மட்டுப்பட்டு அல்லது கட்டுப்பட்டுக் கிடக்கிறது. தமிழ்த் தேசிய அரசியல் அந்த நிலைக்குத் தன்னைத் தாழ்த்திக்கொண்டுவிட்டது. இந்த நிலைமை தேக்கம் அடைந்துள்ள தமிழ்த் தேசிய அரசியலில் எந்த முன்னேற்றத்தையும் கொண்டுவரப் போவதில்லை. இந்திய- இலங்கை சமாதான ஒப்பந்தம்- முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட அரசியல் தீர்வுப் பொதி- நோர்வேயின் மத்தியஸ்தத்துடன் முன்னெடுக்கப்பட்ட ஒஸ்லோ பேச்சுவார்த்தையில் இலங்கை அரசாங்கம் உடன்பட்ட உள்ளக சுயாட்சி இப்படி எல்லாச் சாதகமான சந்தர்ப்பங்களையும் உதறித்தள்ளிவிட்டுத் தமிழர் தரப்பு இப்போது திக்குத் திசை தெரியாது நிற்கின்றது. இதற்கு மாற்று வழி யாது? இதற்கு மாற்று வழி தலைவர்களிடம் இல்லை. மக்களின் கைகளில்தான் உள்ளது. அது பற்றி இத்தொடரின் அடுத்த பத்தி (சொல்லத் துணிந்தேன்-87) சொல்லும்.