‘இந்தப் பிரச்சினையை இப்போது பேசவேண்டுமா?’
— கருணாகரன் —
(இன வன்முறையினால் வடக்கு நோக்கி வந்த மலையக மக்களுக்கான நீதி இன்னும் கிடைக்கவில்லை. அவர்கள் நம்பி வந்த தமிழ்ப் பிரதேசங்களிலேயே (வடக்கிலேயே) புறக்கணிக்கப்படுகிறார்கள். பல வழிகளிலும் ஒடுக்கப்படுகிறார்கள். அரச நிர்வாகம் தொடக்கம் வளப்பகிர்வு, சமூக நிலை எனப் பல வகையிலும் இந்த அநீதி தொடர்கிறது. இந்த மக்களுடைய பிரச்சினைகளைக் குறித்து இதுவரையிலும் கவனத்திற்குரிய மைய உரையாடல்களோ ஆய்வுகளோ நடக்கவில்லை. இந்தக் கட்டுரைத் தொடர் அதனைப் பொதுவெளியில் திறக்க முற்படுகிறது. — ஆசிரியர்)
“எத்தகைய அநீதியின் முன்னும் இறுக்கமான அமைதியோடு நில்லுங்கள்
அவமானங்களைச் சகித்துக் கடவுங்கள் என்றால், நீதியின் முன்னே யார்?”
ஒரு இடைக்குறிப்பு –
இந்தத் தொடர், வடக்கு நோக்கி வந்த இந்திய வம்சாவழி மக்களின் சமூக பொருளாதார ஆய்வொன்றை மேற்கொள்வதற்கான முற்குறிப்புகளாகவே எழுதப்படுகிறது. இது வெளிவரத் தொடங்கியதிலிருந்து எதிரும் புதிருமான கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. ஒரு தரப்பு ‘’இது அவசியமானது. இப்போதாவது இந்த விடயம் பேசப்படுகிறதே. கட்டாயம் இது உரையாடப்படவே வேண்டும்’’ என்கிறது. மறுதரப்போ, ‘’கடந்த காலத்தை மீளக் கிளறுவதால் பயனென்ன? நடந்தது நடந்து விட்டது. இனி நடக்கவேண்டியதைப் பார்ப்போம். இதுவரை நடந்ததையும் கடந்ததையும் விட இப்போதுள்ள துயரம் பெரிதல்ல. இன்றுள்ள நெருக்கடிகளையும் கடந்து விடுவோம்” என்கிறது. இவர்களில் அந்தச் சமூகத்திலிருந்து படித்து பெரிய ஆளுமைகளாக வந்த சிலரும் உள்ளடங்குகின்றனர். இதை நாம் புரிந்து கொள்ள முடியும். மத்தியதர வர்க்கத்தினராக இவர்கள் வளர்ச்சியடையும் போது இத்தகைய குணாம்சமும் அதற்கான மனநிலையும் உருவாகுவது இயல்பு. அதையே இவர்கள் பிரதிபலிக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு மற்றவர்களுக்கு நிகரான பொறுப்பொன்றுண்டு. தமது சமூகத்துக்கு எதிராக இழைக்கப்படும் அநீதியை எதிர்ப்பதும் அந்த மக்களை மேம்படுத்துவதும் இந்தப் பொறுப்பிலுண்டு.
இதேவேளை இந்த மக்களுடைய காணிப் பிரச்சினை மற்றும் சமூக நிலைபற்றிய ஆய்வுகளையும் உரையாடல்களையும் வன்னி மாவட்டங்களில் மேற்கொள்வதற்கு சில அமைப்புகள் முன்வந்துள்ளன. இது வரவேற்கத்தக்கது. ஆனால், அவை சுயாதீனமாக அந்தப் பணியை மேற்கொள்வதற்கு வழமையான அதிகார சக்திகள் முட்டுக்கட்டை போட்டுள்ளன. குறிப்பாக கிளிநொச்சியில் இந்தப் பணிகளில் ஈடுபட முன்வந்தோர் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். இதனால் இந்தப் பணிகளில் ஈடுபட முன்வைந்த சில அமைப்புகள் பின்வாங்கியுள்ளன. இது நிலைமையில் எந்தப் பெரிய முன்னேற்றமும் எட்டப்படவில்லை. அதற்கான சாத்தியங்கள் இல்லை என்பதையே காட்டுகிறது.
ஆகவே இந்த மக்களுடைய பிரச்சினைகளையும் வாழ்க்கைச் சவால்களையும் நாம் உரத்த குரலில் பேசியே தீர வேண்டியுள்ளது.
இனி பகுதி (06)
போராட்டமும் போரும் தீவிரமடைய வவுனியா மாவட்டத்தில் குடியேற்றப்பட்டோர் அங்குமிங்குமாக அலையத் தொடங்கினர். இவர்களில் ஒரு தொகுதியினர் முல்லைத்தீவு மாவட்டத்தை நோக்கி நகர்ந்தனர். குறிப்பாக முத்தையன்கட்டுப் பக்கமாக. ஏனையோர் முல்லைத்தீவின் கிராமங்களை நோக்கிச் சென்றனர். ஒரு தொகுதியினர் வவுனியா வடக்கில் நெடுங்கேணியை அண்மித்த கிராமங்களில் தஞ்சமடைந்தனர். இன்னொரு தொகுதியினர் கிளிநொச்சிக்குச் சென்றனர்.
இப்படிச் சிதறிய மக்கள் உடனடியாக தங்களை அந்தந்த இடங்களில் நிலைப்படுத்திக் கொள்வதற்கு மிகச் சிரமப்பட்டனர். ஆனாலும் வேறு வழியின்றி அங்கே உள்ள நிலைமையையும் அந்தச் சூழலையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இது அவர்களுடைய வளர்ச்சிப் பாதையில் மேலுமொரு தடங்கலை உண்டாக்கியது. திரும்பத்திரும்ப இடம்பெயர்ந்து அகதியாகுதல் என்பது இலகுவானதல்லவே!
ஆனாலும் கொஞ்சக் காலத்தில் அந்தந்த இடங்களில் ஒருவாறு தம்மை நிலைப்படுத்திக் கொண்டனர். இருந்தாலும் யுத்தம் அதற்கு முழுதாக அனுமதிக்கவில்லை. யுத்தச் சூழல் இவர்களுக்கு நிரந்தரக் காணிகள் கிடைப்பதையே தாமதப்படுத்தியது. இயக்கங்கள் முயற்சித்து சில சில குடியிருப்புகளை உருவாக்கின. 1990க்குப் பின்னர் புலிகள் இவர்களுடைய இருப்பிடம் தொடர்பாக கூடுதலான கரிசனையைக் கொண்டிருந்தனர். அதற்கு முன்பு ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட் போன்றன கரிசனை காட்டின. 1990களில் வவுனியாவில் புளொட்டும் ரெலோவும் இந்த மக்களில் ஒரு தொகுதியினருக்க காணிகளை வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டன. இந்தச் சந்தர்ப்பத்தில் இவை இரண்டும் வவுனியா நகரப்பகுதியில் மட்டுமே இயங்கக் கூடியதாக இருந்ததால், நகரைச் சூழமைந்த பகுதிகளிலேயே இவர்களுக்கான காணிகள் வழங்கப்பட்டன. இதில் ஈரப்பெரிய குளம் 50 வீட்டுத்திட்டம், ஆச்சிபுரம், திருநாவற்குளம் போன்றவை முக்கியமானவை.
ஆனால் எந்தச் சந்தர்ப்பத்திலும் தமிழ் மிதவாத சக்திகளான தமிழரசுக்கட்சி, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி போன்றன இந்த மக்களுடைய பிரச்சினைகளில் அக்கறை கொள்ளவேயில்லை. தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 1977இல் பலமாக இருந்த காலத்தில் கூட சொல்லிக் கொள்ளும் அளவுக்கு உருப்படியான எந்தத் திட்டத்தையும் எவ்விதமான நடவடிக்கையினையும் மேற்கொள்ளவில்லை.
ஆனால் அன்றும் சரி, இன்றும் சரி இந்த மக்களுடைய வாக்குகளை அறுவடை செய்வதில் இவை தந்திரமாக அக்கறை கொண்டிருக்கின்றன. இந்த அருவருப்பான உண்மையை தமிழ்ச்சமூகம் கண்டு கொண்டேயிருக்கிறது.
ஏராளம் புறக்கணிப்புகள், நெருக்கடிகள், துயரங்களின் மத்தியிலும் 1958 க்குப் பிறகு படிப்படியாக வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் ஆகிய மாவட்டங்களில் மலையக அல்லது இந்திய வம்சாவழிக் கிராமங்கள் உருவாகியிருந்தன. இதில் அதிக கிராமங்கள் வவுனியாவிலும் கிளிநொச்சியிலுமே உள்ளன. இந்தக் கிராமங்களில் முன்பு 100 வீதமும் இந்திய வம்சாவழி மக்களே குடியிருந்தனர். யுத்தம், இடப்பெயர்வுகள், கால நீட்சியினால் ஏற்பட்ட ஏனைய தொடர்பாடல்கள், உறவு போன்றவற்றினால் இப்பொழுது ஒரு சிறிய விகிதத்தில் பிற இடங்கள், ஊர்களைச் சேர்ந்தவர்களும் இந்தக் கிராமங்களில் வாழ்கின்றனர்.
ஆனாலும் இந்தக் கிராமங்கள் இந்திய வம்சாவழி மக்கள் வாழும் கிராமங்காகவே உள்ளன. இதனை இவற்றைப் பார்க்கும்போதே புரிந்து கொள்ள முடியும்.
ஏனைய பிரதேசங்களின் வளர்ச்சியை இங்கே காண முடியாது என்பது இதில் முக்கியமானது. இதற்கான காரணத்தையும் உளவியல் பின்னணியையும் நாம் முற்பகுதிகளில் விளக்கியிருந்தோம். மாற்றான்தாய் மனப்பாங்கின் வெளிப்பாடாக இந்த மக்களை புறத்தியில் வைத்து நோக்குவதே இதற்குக் காரணம் என. இந்த மக்களுடைய பிரச்சினைகளைப் பற்றிப் பொது வெளியில் பேச முற்பட்டால் அல்லது இவர்களுக்கு யாராவது குரல் கொடுக்க முன்வந்தால் அவர்கள் இனங்காணப்பட்டு ஒதுக்கப்படுகிறார்கள். அவமதிக்கப்படுகிறார்கள். நெருக்கடிக்கு உட்படுத்தப்படுகிறார்கள். வசைக்கப்படுகிறார்கள்.
இதற்கு அண்மையில் பகிரங்க வெளியில் நடந்த ஒரு உதாரணம், ஊடகவியலாளர் மு.தமிழ்ச்செல்வன் வெளிப்படுத்திய ஒரு செய்தியின் விளைவை எதிர்கொள்ள முடியாத பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் வசைகூறலாகும்.
பெருமாள் கணேசன் என்ற அதிபர் தரமுடைய ஒருவருக்கு தகுதியான பாடசாலை நிர்வாகப் பொறுப்பை வழங்குவதில் காணப்பட்ட அநீதியை தமிழ்ச்செல்வன் வெளிப்படுத்தியிருந்தார். இந்த நியமனம் சமூகப் பின்னணியை மனதில் வைத்தே இழுத்தடிக்கப்படுவதாகவும் இந்த அநீதி பாரபட்சங்களின் அடிப்படையில் இழைக்கப்படுவதாகவும் தகுந்த ஆதாரங்களோடு (சான்றாதாரங்களோடு) தமிழ்ச்செல்வனால் முன்வைக்கப்பட்டது.
இதனால் உண்டான நிர்வாக மற்றும் அரசியல் நெருக்கடியை எதிர்கொள்ள முடியாமற் போனபோது தமிழ்ச்செல்வனை நோக்கி அவருடைய சமூக அடையாளத்தைப் பிரதிபலிக்கும் வசைச் சொல்லைப் பயன்படுத்தித் தரக்குறைவான முறையில் திட்டினார் சிறிதரன்.
இது மிகப் பெரிய சர்ச்சையை உருவாக்கியது. இதைக் கண்டித்து கிளிநொச்சி நகரில் மக்கள் போராட்டங்களை நடத்தினர். அத்துடன் இந்தப் பாரதூரமான விடயத்துக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் தமிழரசுக் கட்சியும் பொறுப்புச் சொல்ல வேண்டும் என்று அதன் தலைவர் சம்மந்தனிடம் நேரில் கோரிக்கையும் விடப்பட்டது.
ஆனாலும் அந்தத் தரப்பிலிருந்து எந்தவிதமான பதிலும் அளிக்கப்படவில்லை. குறைந்த பட்சம் வருத்தம் கூடத் தெரிவிக்கப்படவில்லை. இனிமேல் இந்த மாதிரியான சம்பவங்கள் நடக்காது என்று உறுதி கூடக் கூறப்படவில்லை.
இது இந்த மக்களுக்கு மிக வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் அளித்தது.
(தொடரும்)