களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை ஒர் அரசியல் போராளியின் பயணம்! – 01

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை ஒர் அரசியல் போராளியின் பயணம்! – 01

— தேசம்நெற் ஆசிரியர் த.ஜெயபாலன் — 

தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் (பகுதி 01) (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 06.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கண்ணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது. 

எனது ஊரும் சுற்றமும் 

(கடந்த கால அரசியலில் 1956ஆம் ஆண்டு இலங்கையில் முதலாவது இனக்கலவரம் அல்லது ஸ்ரீ எதிர்ப்பு போராட்டங்கள் ஆரம்பமானதில் இருந்து அவரின் வரலாறும் கிட்டத்தட்ட தொடங்குகிறது. இலங்கையின் இனவிடுதலை வரலாறும் தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் வரலாறும் கிட்டதட்ட ஒரே சமாந்திரமாக பயணித்துள்ளன. அந்த வகையில் அவருடனான நேர்காணலும் இந்தப் பதிவும் வரலாற்று முக்கியத்துவமானது என நினைக்கின்றேன். — தேசம்நெற் ஆசிரியர் த.ஜெயபாலன்.) 

தேசம்: உங்களின் அரசியல் பயணத்தின் ஊடாக தமிழீழ விடுதலைப் போராட்ட அரசியலை நாங்கள் எவ்வாறு அணுகினோம் என்றுதான் நாங்கள் பார்க்கப் போகின்றோம். பிறந்து, சிறுவனாக, இளைஞனாக வளர்ந்து போராட்டத்தின் முக்கியமான தளத்தில் இருந்திருக்கிறீர்கள். அத்துடன் இந்த புலம்பெயர் தளத்தில் அரசியல் சார்ந்த ஈடுபாட்டாளனாகவும் இருக்கிறீர்கள். நீங்கள் தற்போது சுமார் ஒரு 60 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று உங்களின் மிக இளமைப் பருவத்தில் எந்த விடயத்தை மீள கொண்டு வரக்கூடியதாக உள்ளது? அந்த நேரச் சூழல், உங்கள் கிராமம், எப்படியான சூழலில் நீங்கள் பிறந்திருந்தீர்கள்? உங்கள் பெற்றோரின் அரசியல் பின்னணி என்ன?  

அசோக்: மட்டக்களப்பிலிருந்து சுமார் 18 கிலோ மீட்டர் தூரத்தில இருக்கிற கடலோர விவசாயக் கிராமமான களுதாவளைதான் என் பூர்வீகம். எங்கள் குடும்பம் வந்து நிலப்பிரபுத்துவ சமூகம் சார்ந்த குடும்பம்… 

அப்பா, அம்மா இருவரின் குடும்பமும் விவசாயக் குடும்பம்தான். விவசாயத்தையே பின்னணியாகக் கொண்டது. எனது அப்பாதான் எமது கிராமத்தில் படித்த முதலாவது தலைமுறை. களுதாவளையைச் சேர்ந்தவர். படுவான்கரை, எழுவான்கரை என இரண்டில் எமது கிராமம் எழுவான்கரை. விவசாயத்தை அடிப்படையாகக்கொண்டது.  

அப்பா இராமகிருஸ்ண மிஷனுடன் மிகவும் நெருக்கமான உறவு கொண்டிருந்தார். விபுலானந்தர் மீது பற்றுக் கொண்ட விசுவாசியாக இருந்தார்  

தேசம்: அதற்கு குறிப்பிடத்தக்க ஏதாவது காரணம்…? 

அசோக்: அடிப்படையில் அப்பாவுக்கு ஆன்மீக ஈடுபாடு இருந்தது. அத்தோடு சமூக அக்கறை இருந்தது. அந்தக் காலத்தில் சுவாமி விபுலானந்தரின் சமூக சேவையின் ஊடாகத்தான் பள்ளிக் கூடங்கள் உருவாகியது. அபிவிருத்தி நடைபெற்றது. அதில் அப்பாவும் ஆர்வம் கொள்கின்றார். மிஷனரி (கிறிஸ்தவ) பாடசாலைக்கு பதிலாக இராமகிருஸ்ணன மிஷன் திருகோணமலை, மட்டக்களப்பு பிரதேசங்களில் ஸ்தாபிக்கப்படுகிறது. சிவானந்தா வித்தியாலயம், காரைதீவு இராமகிருஸ்ண மிஷன் வித்தியாலயம் ஆரம்பிக்கப்படுகிறது. இராமகிருஸ்ண மிஷன் களுதாவளையிலும் ஒரு பாடசாலையை ஆரம்பிக்கிறார்கள். அப்பாதான் தலைமை ஆசிரியராக இருந்தார்.  

அப்பாவுக்கு அரசியல் ஈடுபாடும் இருந்தது. தமிழ்த் தேசியவாதியாகவும் தமிழ் ஆசிரியராகவும் இருந்தபடியால் தமிழரசு கட்சியினுடன் அரசியல் உறவும் ஏற்படுகிறது. 

தேசம் : அம்மாவின் பின்னணியைப் பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள்? 

அசோக்: அம்மாவின் குடும்பமும் ஒரு விவசாயக் குடும்பம்தான். அம்மா 10ஆம் வகுப்பு படித்தாவோ தெரியவில்லை எனக்கு. ஆனால் நிறைய வாசிப்பார். நாவல், சிறுகதை, இலக்கியம் என பயங்கர வாசிப்பு. நான் நினைக்கிறேன் அம்மா எட்டு ஒன்பதாம் வகுப்புதான் படித்திருப்பார். அப்பா, அம்மா காதலித்து அதில் நிறைய பிரச்சினைப்பட்டு … 

தேசம்: இரண்டு பேரும் ஒரு கிராமமா? 

அசோக்: ஆம் ஒரே கிராமம்தான். அம்மாவின் அப்பருக்கு விருப்பமில்லை. 

தேசம்: ஏன்? சமூக பின்னணியா? 

அசோக்: இரண்டு குடும்பமும் ஒரு சமூக பின்னணியை கொண்டிருந்தாலும் அம்மாவின் குடும்பம் கொஞ்சம் வசதியான குடும்பம். அம்மாவின் அப்பாவுக்கு அதில் விருப்பமில்லை. அப்பா வந்து அம்மாவை தூக்கிக்கொண்டுபோய் மிஷனில் வைத்து திருமணம் செய்து அது பெரும் முரண்பாடு. காலப்போக்கில் இராமக்குட்டியாரின் கோபம் தணிந்து உறவு உருவாகிவிட்டது. இராமக்குட்டி என்பது அம்மாவின் அப்பா பெயர். 

தேசம்: இதில் பாரம்பரிய வித்தியாசம் அல்லது குல வித்தியாசம் ஏதாவது இருக்கிறதா? 

அசோக்: என்ன சிக்கல் என்றால் எமது கிராமம் கிழக்கு மாகாணத்தில் தாய்வழி சமூகம். இது இறுக்கமான சமூகமாகும். எங்கள் கிராமத்தில் அம்மாவின் குடிதான் நான். 

தேசம்: குடி வழிச் சமூகம் என்றால்…? 

அசோக்: குடி வழிச் சமூகம் என்றா அம்மாவின் வம்சத்தை வழியை கொண்டதாக இருக்கும். எங்கட கோயில் மற்ற சடங்குகள் திருவிழாக்கள் எல்லாம் அம்மாவின்ற குடியைக் கொண்டே நடக்கும். என்னை அழைப்பதென்றால் அம்மாவின் குடியைச் சொல்லித்தான் அழைப்பார்கள். அம்மா பெத்தான்குடி. அப்பா பேனாச்சிகுடி. அம்மா ஆட்கள் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று கருதிக் கொண்டார்களோ தெரியல்ல. சில நேரத்தில் திருமணத்திற்கு அதுவும் ஒரு தடங்கலாக இருந்திருக்கும். அம்மாவை கொண்டு போய் அங்குள்ள கொன்வென்டில் தங்க வைத்து அப்பா படிப்பித்துள்ளார். 

தேசம்: அப்பாவின் அரசியல் போக்கு தொடர்பாக மாறுபட்ட கருத்திருந்ததா? 

அசோக்: இல்லை. அவ்வாறாக தெரியல்லை. 

தேசம்: அப்பாவின் அரசியல் தொடர்பால் அம்மாவின் நிலைப்பாடு என்ன? 

அசோக்: அம்மாவின் ஒத்துழைப்பு நிறையவே இருந்தது. 1956ஆம் ஆண்டு ஸ்ரீ எதிர்ப்பு தனிச் சிங்கள சட்டமூலம் வந்தபோது அப்பா ஆறு மாதம் வீட்டு காவலில் வைக்கப்பட்டார். அம்மா 1961ஆம் ஆண்டு திருகோணமலையில் நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கும் மாநாட்டிற்கும் அறப் போரணித் தலைவர் அரியநாயகம் (திருக்கோயிலை சேர்ந்தவர்) தலைமையில் கால்நடையாக யாத்திரைச் சென்றுள்ளார் திருகோணமலைக்கு. பேரணியில் நிறைய பெண்கள் கலந்துகொண்டிருந்தனர். இது புரட்சியான விடயம். அந்தக் காலத்தில் பெண்கள் திருக்கோவிலில் இருந்து திருகோணமலைக்கு கால்நடையாக போவது பெரிய விடயம். அதில் அம்மா கலந்துகொண்டதாக அம்மா சொல்ல அறிந்துள்ளேன். 

தேசம்: உங்கள் பெற்றோரை பொருத்தவரையில் இரண்டு பேரும் அரசியலில் ஈடுபட்டிருந்தனர்? 

அசோக்: ஆம் 

தேசம்: உங்கள் குடும்பத்தில் மொத்தம் எத்தனை பேர்? 

அசோக்: நாங்கள் மொத்தம் ஒன்பது பேர். ஏழு அண்ணா இரண்டு அக்கா. நான் ஒன்பதாவது ஆள். 

தேசம்: நீங்கள் பெரிய குடும்பம். மேலும் ஒரு அண்ணாவை நீங்கள் வளர்த்தும் உள்ளீர்கள். 

அசோக்: ஓம் ஒரு அண்ணா எங்களுடன்தான் வளர்ந்தார். மொத்தம் பத்து பேர். 

தேசம்: பெரிய குடும்பமாக இருந்து இன்னொருவரை எடுத்து வளர்ப்பது அதற்கான தேவை எப்படி வந்தது? 

அசோக்: பொருளாதார ரீதியாக எங்கள் வீடு பிரச்சினைக்குரியது அல்ல. அப்பாவுக்கு தலைமை ஆசிரியர் தொழில் கௌரவ தொழிலேயொழிய, அதுதான் எங்களது பொருளாதாரம் இல்லை. அம்மாவின் பக்கம் நிறைய தென்னங் காணிகளும் விவசாயக் காணிகளும் இருந்தன. விவசாயக் காணிகளை நாம் செய்வதுடன் குத்தகைக்கும் கொடுப்போம். இப்போ அப்படியில்ல. பொருளாதார ரீதியில் சராசரி குடும்பம்தான். அன்றைய காலகட்டத்தில் தமிழரசுக் கட்சியினுடைய பொருளாதார வளங்களை கொடுக்கும் பெரிய பின்புலமாக அப்பா இருந்துள்ளார். அதனால்தான் எனக்கு தமிழரசுக் கட்சியில் வெறுப்பு வந்தது. அப்பா் எப்படி பயன்படுத்தப்பட்டார் என்பது எனக்குத் தெரியும். 

தேசம்: களுதாவளையில் இருந்து ஒரு சராசரி குடும்பத்தையும் பார்க்க நீங்கள் கொஞ்சம் வசதியாக இருந்திருப்பீர்கள் என நினைக்கின்றேன். 

அசோக்: அப்படித்தான் நினைக்கிறன். நிலவுடைமைச் சமூகத்திற்குரிய அனைத்து குணாம்சங்களும் எமக்கிருக்கும். தோட்டங்களில் வந்து வேலை செய்வார்கள். நிறைய தொழிலாளர்கள் எங்களைச் சுற்றியிருப்பார்கள். ஒரு கூட்டு குடும்பத்துக்குரிய எல்லாம் இருக்கும். தொழிலாளர்கள் என்பதை விட ஒரு ஐக்கிய உறவு எங்களுக்குள் இருக்கும். ஏன் என்றால் நாங்கள் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். உறவுக்காரர்கள். யாழ்ப்பாணத்தில் தொழிலாளர்கள் வேறு சமூகம், நிலவுடையமையாளர்கள் வேறு சமூகம். எமது ஊரில் நிலவுடையாளர்களும், தொழிலாளர்களும் ஒரே சமூகம். அதனால் ஒரு கூட்டுறவு இருக்கும். 

தேசம்: களுதாவளைக் கிராமத்தை எடுத்தோமேயானால் ஒட்டுமொத்தமாக களுதாவளை கிராமத்தைச் சேர்ந்த மக்கள் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்களா? அல்லது வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்களா? 

அசோக்: நல்லதொரு கேள்வி. யாழ்ப்பாண சமூகத்திற்கும் எமது சமூகத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது. யாழ்ப்பாணத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் பல்வேறு சாதிகள் இருக்கும். நீங்கள் வந்து கொக்குவில் கிராமத்தை எடுத்தீர்கள் என்றால் பல்வேறு சமூகங்கள் இருக்கும். 

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பை பொறுத்தவரையில் குறிப்பிட்ட கிராமங்கள் மட்டும்தான் சாதிய அடிப்படையிலான கிராமங்கள். ஆரம்ப காலத்தில் பண்டைய குடியேற்றங்கள் நடைப்பெற்ற போது சில கிராமங்களில் குடிமைச் சமூகங்கள் குடியமர்த்தப்பட்டுள்ளன. நீங்கள் எல்லா கிராமங்களிலும் ஒடுக்கப்பட்ட குடிமைச் சமூகத்தை காண இயலாது. குறிப்பிட்ட சில கிராமங்களிலேயே காண முடியும். ஐந்து கிராமங்கள் என நினைக்கின்றேன். குடிமைச் சமூகங்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர். களுதாவளை, கோமாரி, அம்பிளாந்துறை, கல்முனை, வெல்லாவெளி. இவ்வாறு நான்கு ஐந்து கிராமங்கள். இக்கிராமங்களில் ஒடுக்கப்பட்ட சமூகமாக பறையர் சமூகம் இருக்கும். கிழக்கு மாகாணத்தில் பறையர் சமூகத்திற்கு காணிகள் இருக்கும். யாழ்ப்பாணத்தில் ஒடுக்கப்பட்ட பெரும்பாலான பறையர் சமூகத்திற்கு நிலங்கள் இல்லை. இங்கு இவர்களுக்கு நிலங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இயல்பாகவே அவர்கள் பொருளாதார ரீதியாக சுயமாக வாழக்கூடிய சூழல் இருக்கும். 

தேசம்: சாதிய முரண்பாடு மட்டக்களப்பில் ஓரளவு குறைவாக இருக்கும்? 

அசோக்: ஆம் குறைவாக இருக்கும். சாதிய முரண்பாடு குறைவாக இருக்கும். பொதுத்தளத்தில் பார்க்கும் போது குறைவாக இருக்கும். ஆனால் குடிமைச் சமுகங்கள் வாழும் அந்தந்த கிராமங்களில் இருக்கும். அந்தக் கிராமங்களில் அவர்கள் ஒடுக்கப்பட்ட சமூகம் தானே. ஒடுக்கப்பட்ட சமூகம் உள்ள கிராமங்களில் அவர்கள் மீதான ஓடுக்குமுறை கடுமையாக இருக்கும். எங்களுடைய கிராமத்தில் பறையர் சமூகம் கோயிலுக்குள் செல்ல முடியாது. நாங்கள் படிக்கும் பாடசாலையில் படிக்க முடியாது. அவர்களுக்கு தனிப் பாடசாலை. தனிக் கோயில். 

நான் பல்வேறு முயற்சிகள் செய்து அவர்களை எங்கள் கோயிலுக்குள் கொண்டுச் செல்ல எடுத்த முயற்சியினால் பல்வேறு சிக்கல்களை அனுபவித்துள்ளேன். அது ஒரு காலம். இப்போதும் அப்படித்தான் என நினைக்கிறன். கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில் சாதிய ஒடுக்குமுறை இல்லை என்று சொல்வதற்கு காரணம், ஒரு கிராமத்திற்கு சென்றால் அங்கு ஒரே சாதி. முக்குவராக இருப்பார்கள். அல்லது கரையார் சமூகமாக இருப்பார்கள். அங்கு சாதி ஒடுக்குமுறை இருக்காது. நூற்றுக்கு தொண்ணூறு வீதமான கிராமங்கள் ஒரு சமூகமாகத்தான் இருக்கும். 

தேசம்: இப்படி பார்க்கும் போது யாழ்ப்பாணத்தை பொறுத்தவரையில் சாதி முறைக்கும் வேலைப் பிரிவினைக்கும் ஒரு நெருக்கமான தொடர்பிருக்கிறது. நீங்கள் சொல்வதை பார்க்கும்போது வேலைப்  பிரிவினை அடிப்படையில் சாதி இருப்பது போல் தெரியவில்லை. ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களே எல்லா வேலைகளையும் செய்கிறார்கள். 

அசோக்: ஆமாம். அப்படித்தான். உதாரணமாக பார்த்தால் இலங்கையில் இடதுசாரி இயக்கங்கள் யாழ்ப்பாணத்தில்தான் அதிகம். மட்டக்களப்பில் அதன் தோற்றம் இடம்பெறமுடியாமல் போய்விட்டது. ஒரே சமூகத்தைச் சார்ந்தவர்கள் தொழிலாளர்களாகவும் நிலஉடமையாளர்களாகவும் இருந்தபடியால் அது கூர்மை அடையவில்லை. சாதிய முரண்பாடுகளோ, வர்க்க முரண்பாடுகளோ வருவதற்கு சாத்தியம் இல்லாமல் போய்விடுகின்றது, கூர்மை அடைந்தாலும் சமாளித்துவிடுவார்கள். ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தானே.  

சாதியும் வர்க்கமும் வடமாகாணத்தில் தாக்கம் அதிகம். மட்டக்களப்பில் ஒரே சமூகமாக இருக்கின்றபடியால் அந்த முரண்பாடுகள் கூர்மையடையாது. 

காணொளி, பகுதி- 01

https://youtu.be/5eHQjCivde0