இந்தியக் குடியுரிமை!  இலங்கைத் தமிழ் அகதிகள்  கள்ளத்தோணிகளா? (காலக்கண்ணாடி 51)

இந்தியக் குடியுரிமை! இலங்கைத் தமிழ் அகதிகள் கள்ளத்தோணிகளா? (காலக்கண்ணாடி 51)

—— அழகு குணசீலன்—-

1970களில் இருந்து இலங்கைத்தமிழ் அகதிகள் இந்தியாவில் பாதுகாப்பு தேடி செல்லும் நிலை ஆரம்பமானது. காலப்போக்கில் போர்ச் சூழல் காரணமாக இந்த நிலை மேலும் மேலும் அதிகரித்ததே அன்றி குறைவடையவில்லை. இலங்கைத் தமிழர்கள் மேற்குநாடுகளில் அகதிகளாக 1980களில் தஞ்சம் கோரினார்கள் என்றால், இது இந்தியாவில் இன்னும் பத்து ஆண்டுகள் முந்தி ஆரம்பமாகியது. 

ஒரு நாட்டில் அமைதியின்மையும், உள்நாட்டுப்போரும் இடம்பெறும் சூழலில் இருதரப்பு மோதல்களில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக அயல்நாடுகளுக்கு தேசிய எல்லைகளைக் கடந்து மக்கள் பாதுகாப்பு தேடுவது ஒன்றும் இலங்கைத் தமிழர்களுக்கு மட்டுமானதல்ல. இது சாதாரண மக்களுக்கு மட்டும் உரிய நிலையும் அல்ல. இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகளும் இதனுள் அடங்கும். ஆனால் இவர்கள் பிரயாண ஆவணங்களைத் கொண்டிருக்க வாய்ப்பு இருந்தது. தமது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி   இந்தியாவில் எப்போதும் போல் பின்கதவால் சிலதை தமது குடும்பங்களுக்கு செய்யவும் சாத்தியப்பட்டது. சாதாரண மக்களுக்கு இது எட்டாக்கனி. 

அதேபோல் உலகின் முக்கிய அரசியல் மாற்றுக்கருத்தாளர்கள் பலரும் இவ்வாறான நிலைக்கு உட்பட்டுள்ளனர். 1849இல் கார்ள்மாக்ஸ்  ஜேர்மனியில் இருந்து தப்பி இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்தார். 1929இல் ரொட்ஸ்கி சோவியத்யூனியனில் இருந்து தப்பி துருக்கி, பிரான்ஸ், நோர்வே, மெக்சிக்கோ ஆகிய நாடுகளில் 1940 வரை தஞ்சமடைந்திருந்தார். 1959 இல் சீனாவில் இருந்து தப்பிய தலாய் லாமாவுக்கு இந்தியா தஞ்சம் வழங்கியது.  

1967இல் ஸ்டாலினின் மகள் ஸ்வற்லானா அமெரிக்காவில் தஞ்சமடைந்தார். இங்கிலாந்திலும், சுவிற்சர்லாந்திலும் லெனின் மறைந்திருந்தார். ஆக, அரசியல் காரணங்களுக்காக தலைவர்கள் மட்டுமன்றி சாதாரண மக்களும் ஆபத்தில் இருந்து தப்பி மற்றொரு நாட்டில் அகதிகளாக தஞ்சம் கோருவது புதிய விடயமல்ல. இது வரலாற்று நிகழ்வு. 

பிரான்சில் புரட்சிக்குப் பின்னர் 1793 அரசியல் அமைப்பில் அரசியல் தஞ்சச் சரத்து 120 உள்வாங்கப்பட்டுள்ளபோதும் இரண்டாம் உலகப்போருக்குப் பின்னரே இது விடயம் குறித்து அதிகம் பேசப்படுகிறது. அகதிகள் விவகாரம் சர்வதேச மயமாக்கப்படுகிறது. 

பாலஸ்தீனம், குர்திஸ்தான், சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான், மியான்மார் போன்ற பல நாடுகளின் அகதிகளால் உலகம் நிரம்பியுள்ளது. வியட்னாம் யுத்தத்தின் போதும் “படகு மக்கள்” உலகெங்கும் தஞ்சமடைந்தனர். ஹிட்லரின் இன அழிப்பில் தப்பிய யூதர்களின் நிலையும் இதுதான். இவர்கள் அகதிகள் வரலாற்றை ஆரம்பித்து வைத்தவர்கள். 

இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் அதிகரித்த அகதிகள் பிரச்சினைக்கு தீர்வாக ஐ.நா. அகதிகள் பிரகடனம் 1951 இல் நிறைவேற்றப்பட்டது. இந்தியா இப் பிரகடனத்தை ஏற்றுக்கொண்டு ஒப்பமிடவில்லை. இதனால் இந்தியா 1946 இல் நிறைவேற்றப்பட்ட வெளிநாட்டவர்கள் சட்டம் ஊடாக இலங்கை அகதிகள் பிரச்சினையை கையாள முனைகிறது. இந்தியாவுக்குள் பிரவேசிப்பதற்கான எந்த ஒரு சட்டரீதியான நுழைவு ஆவணங்களையும் கொண்டிருக்காதவர்களை சட்டவிரோத குடியேறிகள் என்றே வெளிநாட்டவர் சட்டம் கூறுகிறது. இவர்களை இச் சட்டம் அகதிகளாகக் கருதவில்லை. 

அதாவது எந்தச் சட்டரீதியான உள் நுழைவு ஆவணங்களும் இன்றி போர்ச் சூழலில் உயிர் தப்புவதற்காக படகுகளில் இந்தியாவுக்குள் வந்துள்ள  இலங்கை அகதிகள் பிரச்சினையை, சட்டரீதியாக நாட்டுக்குள் ஆவணங்களுடன் வரும் வெளிநாட்டு குடியேறிகளுக்கான சட்டத்தின் மூலம் தீர்வுகாண முயற்சிக்கிறது இந்தியா. இதன் வெளிப்பாடே இலங்கை அகதிகள் சட்டவிரோத குடியேறிகள் என்ற இந்திய மத்திய அரசின் நிலைப்பாடாகும். இந்த இந்திய அணுகுமுறை இலங்கைத்தமிழ் அகதிகளின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யுமா….?  

இன்னொரு வகையில் சொன்னால் சிங்கள பௌத்த பேரினவாதம் தமிழர்களுக்கு சொன்னதை இந்தியா திருப்பி சொல்கிறது. இலங்கைத் தமிழ் அகதிகள்  “கள்ளத்தோணிகள்”. 

எந்த ஒரு நாட்டிலும் தஞ்சம் கோருவோரில் 90 வீதமானோர் சட்டரீதியற்றே நாட்டிற்குள் வருகின்றனர். ஆனால் அவர்கள் அகதிகளாக பதிவு செய்யப்படும் மறுகணத்தில் இருந்து சட்டரீதியாகவே அந்த நாட்டில் வாழ்கின்றனர். இலங்கைத் தமிழ் அகதிகள் பல தசாப்தங்களைக் கடந்துள்ள போதும் இந்தியா அவர்களை சட்டவிரோதக் குடியேறிகள் என்பது ஏற்புடையதா?  

இன்றைய உலகில் அரசியல் காரணங்களுக்காக மட்டுமன்றி சமூக, பொருளாதார, சுற்றாடல்சார் விடயங்கள் சார்ந்தும் ஒரு நாட்டில் தஞ்சம் கோரமுடியும். மத சுதந்திர மறுப்பு, ஊடகச்சுதந்திர மறுப்பு, கட்டாயத் திருமணம், பெண்களுக்கான சுன்னத்து, பாலியல் வன்முறை இப்படி காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம் மேலும் பொருளாதார பாதிப்புக்களால் பொருளாதார அகதிகளும், சுற்றாடல் இயற்கை பாதிப்புக்களால் பாதிக்கப்பட்ட சுற்றாடல் அகதிகளும் கூட இந்த உரிமையைப் பெறுகிறார்கள். இந்த நிலையில் இந்தியாவின் கருத்து விந்தையாக உள்ளது. 

ஆண்டுக்கணக்காக அகதிகளுக்கு உதவிகளைச் செய்தும், இந்தியாவில் வாழ அனுமதித்தும், இயக்கங்களுக்கு ஆயுதப் பயிற்சிகளை வழங்கியும்,  தலைமைகளை வளர்த்தும், பயன்படுத்தியும் தமது பிராந்திய ஆதிக்க அரசியலை செய்த இந்தியா இறுதியில் சட்டம் பற்றி பேசுவது நியாயமானதா? சட்டம் ஒழுங்குக்கு முரணாக பல மனிதாபிமான நடவடிக்கைகளை செய்துள்ள இந்தியா, அகதிகள் விடயத்தில் மனிதாபிமான அணுகுமுறை ஒன்றை ஏன் தவிர்க்கிறது? 

என்பதற்கு பிராந்திய பூகோள அரசியல் என்பதே பதில். 

தொப்புள்கொடி உறவும் தொடர் துயரும்  

தமிழக, தமிழ்ஈழ அரசியலில் தொப்புள்கொடி உறவு  எப்போதும் ஒரு பேசு பொருளாகவே உள்ளது. இலங்கைத்தமிழ் அகதிகள் சுமார் ஒரு இலட்சம் பேர் தமிழகத்தில் இருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இவர்களில் ஏறக்குறைய 60,000 பேர் தங்களை அகதிகளாக பதிவு  செய்து நூற்றுக்கும் மேற்பட்ட அகதிகள் முகாம்களில் வசிக்கின்றனர். 

சுமார் 40,000 பேர் முகாம்களுக்கு வெளியே வாழ்கின்றனர். இவர்கள் வாடகை வீடுகளில், நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் வாழ்பவர்கள். இந்தியாவில் பிறந்த 25,000 பிள்ளைகளும் மொத்த தொகையில் அடங்குகின்றனர். 

ஒட்டுமொத்த அகதிகள் தொகையில் சுமார் 20,000 பேர் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள். இவர்கள் தென்னிலங்கை இனவன்முறைகள் காரணமாக பெரிதும் வன்னி பெருநிலப்பரப்பில் குடியேறியவர்கள் அல்லது குடியேற்றப்பட்டவர்கள். எல்லோரையும் போன்று யுத்தம் இவர்களையும் துரத்திவிட்டது. இன்னும் ஏறக்குறைய 2000 முதல் 3000 பேர் கொண்ட ஒரு பிரிவினரும் உள்ளனர். இவர்கள் ஈழவிடுதலை இயக்கங்களின் முன்னாள் உறுப்பினர்கள். சகோதரப் படுகொலைகள் நிகழ்ந்த காலத்தில் தப்பி ஓடியவர்கள். இவர்களில் இந்தியப்படையுடன் கப்பல் ஏறி ஒரிசாவில் வாழும் அன்றைய தமிழ்த்தேசிய இராணுவத்தைச் சேர்ந்தவர்களும் அடங்குவர். 

கடந்த நான்கு சகாப்த அகதிகள் விவகாரத்திலும், வாழ்வியலிலும் துயரங்கள் நிறைந்தே கிடக்கின்றன. அகதிகளுக்கான உதவித்தொகையாக குடும்பத் தலைமைகளுக்கு தலா ஆயிரம் ரூபாவும், 12 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு தலா 750 ரூபாவும், 12 வயதுக்கு குறைந்த பிள்ளைகளுக்கு தலா 400 ரூபாவும் மாதம் ஒன்றுக்கு வழங்கப்படுகிறது. இதற்கு மேலதிகமாக குடும்பத்திற்கு மாதமொன்றுக்கு 20 கிலோ அரிசி இலவசமாகவும், மேலதிகமாக தேவைப்படுவோருக்கு சலுகை விலையில் கிலோ 57 பைசாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஸ்டாலின் அரசாங்கம் கொரோனா கால உதவியாக 4000 ரூபாவை அகதிகளுக்கும் வழங்கியிருக்கிறது. இது அந்த அகதி வாழ்வின் வாழ்க்கைத் தரத்தையும், வறுமை மட்டத்தையும் காட்சிப்படுத்துவதாக உள்ளது. 

பொதுவாக இந்தியாவிலே தமிழக கல்வித்தரம் குறிப்பாக தொழில்நுட்பம் சார் கல்வித்தரம் உயர்வானது. இதனால் இலங்கை அகதிக் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் கல்வியில் முன்னேற்றத்தைக் காட்டுகின்றனர். இவர்கள் பல்கலைக்கழகம் வரை சென்று கல்வி கற்பதற்கான வாய்ப்புக்களைப் பெறுகின்றனர். வைத்தியத்துறை தவிர மற்றதுறைகளுக்கு பிரச்சினைகள் இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால் தான் பழ.நெடுமாறன் வைத்திய மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்படவேண்டும் என்று தமிழக அரசைக்கோரியுள்ளார். 

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தி.மு.க. தேர்தல் அறிக்கையை நினைவூட்டுகின்ற மாநில அரசால் சாதிக்கக்கூடிய ஜதார்த்தமான கோரிக்கை இது. 

இந்திய பல்கலைக்கழக பட்டம் இந்தியா, இலங்கை மட்டுமன்றி மேற்கு நாடுகளிலும் அங்கிகரிக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் இந்தியர் ஒருவருக்கு சமமான வேலையை, சம்பளத்தை பெறுவதிலும், தொழில் அனுமதிப்பத்திரத்தை பெறுவதிலும் அகதிகளுக்கு சிரமங்கள் இருப்பதாக அறியக் கிடைக்கிறது. இதனால் சில சந்தர்ப்பங்களில் சட்டரீதியற்ற வகையிலும் வேலை செய்யவேண்டிய நிலை காணப்படுகிறது. ஆக, சட்டவிரோத குடியேறிகள் கறுப்புச் சந்தையில் தங்கள் உழைப்பை குறைந்த கூலிக்கு விற்கிறார்கள். 

இலங்கைத்தமிழ் அகதிகளுக்கு முன்னாள் இருக்கின்ற தேர்வுகள் 

 (*) இலங்கைத் தமிழ் அகதிகள் தாயகம் திரும்பி மீளக் குடியேறல். 

 அல்லது 

(*) இந்தியக் குடியுரிமையை பெற்று, இந்தியப் பிரஜையாக வாழ்தல். 

இதுவரை இந்த இரு தேர்வுகள் அகதிகளுக்கு முன்னால் இருந்தன. அல்லது இருப்பதாக அவர்கள் நம்பிக்கையுடன் இருந்தார்கள். ஆனால் இந்திய அரசின் “சட்டவிரோத குடியேறிகள்” என்ற அறிவிப்பு ஒரு தேர்வுக்கான கதவை இழுத்துச் சாத்திவிட்டது. ஆகக் குறைந்தது இந்தக் கதவு குறிப்பிட்ட காலத்திற்கு மூடியே இருக்கப்போகிறது என்பது மட்டும் நிச்சயம். இந்த நிலையில் இப்போதைக்கு இருக்கின்ற ஒரே ஏக தேர்வு இலங்கை திரும்பி மீளக் குடியேறுவதுதான். 

மீளக் குடியேறுவது கூட எல்லோரும் நினைப்பதுபோல் அவ்வளவு இலகுவானதல்ல. பல தடைகளைத் தாண்டவேண்டி இருக்கிறது. பொதுவாக நோக்குகையில் கொள்கை அடிப்படையில் தமிழ்த்தேசிய அரசியல், அகதிகள் மீளக்குடியேறுவதையே ஊக்குவிக்க வேண்டும். இந்திய நிலைப்பாடு குறித்த அவர்களின் மௌனம் அதன் சம்மதமே. இந்தக் கொள்கையையே பாலஸ்தீனம், குர்திஸ்தான், இஸ்ரேல் என்பன பின்பற்றுகின்றன. 

ஆனால் அகதிகளின் சுயவிருப்பம் இங்கு முக்கியம் பெறுகிறது. இந்தியாவில் உள்ள தமிழ் அகதிகளைப் பொறுத்தமட்டிலும் இது விடயத்தில் வேறுபட்ட கருத்துக்கள் நிலவுவதை ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. இலங்கை திரும்புவது இல்லை என்ற நிலைப்பாடுடையவர்கள், திரும்பத் தயாராக உள்ளவர்கள், திரும்புவதற்கான காலம் இன்னும் கனியவில்லை என்று நினைப்பவர்கள் என மூன்று பிரிவினர் அகதிகள் மத்தியில் காணப்படுகின்றனர். 

இந்த வேறுபட்ட நிலைப்பாட்டிற்கான காரணங்கள் எவை?  

அகதிகள் இலங்கைக்குத் திரும்பும் விடயம் இலங்கை -இந்திய மத்திய அரசுகளை சார்ந்தது. ஐ.நா. அகதிகள் அமைப்பு, தந்தை செல்வாவின் மகன் சந்திரகாந்தனின் தலைமையிலான அமைப்பான ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகம் (OFERR), இதில் சிரத்தையுடன் செயற்படுகின்ற போதும் அலுவல்கள் ஆமை வேகத்தில்தான் நகர்கின்றன. 

1. இந்திய அரசு அகதிகள் நாடு திரும்புவதற்கான சரியான, போதுமான, நம்பிக்கை ஊட்டக்கூடிய தகவல்களை வழங்குவதில் அசிரத்தை காட்டுவதாகக் கூறப்படுகிறது. வந்த வழியில் தானாகவே திரும்பிப் போகட்டும் என்ற நிலைப்பாடாகவும் இருக்கலாம். 

2. தமிழக, தாயக அரசியல் கட்சிகளும், அமைப்புக்களும் அகதிகள் விவகாரத்தை தமது அரசியல் நலன் சார்ந்து நோக்குதல். 

3. மலையகத் தமிழர்களைப் பொறுத்தவரை அவர்கள் இந்தியாதான் தங்கள் பூர்வீகம் என்பதால் இலங்கை திரும்புவதில் அக்கறை காட்டவில்லை. ஓரளவுக்கு இவர்கள் தமிழக சமூகத்துடன் ஒருங்கிணைந்த வாழ்க்கையை பேணுவதாகவும் கிராமிய மக்களுடன் கலந்து விட்டதாகவும் தெரியவருகிறது. சகல தரப்பாலும் பெரிதும் வஞ்சிக்கப்பட்டவர்கள் இவர்களே. 

4. ஏற்கனவே இலங்கை வந்துள்ளவர்கள் இங்குள்ள சமூக, பொருளாதார, அரசியல் நிலைமைகளைச் சுட்டிக்காட்டி மற்றவர்களை இப்போதைக்கு இலங்கை திரும்புவதை பிற்போடுமாறு மற்றவர்களுக்கு சொல்கின்றனர். இதை அரச, தன்னார்வ அமைப்புக்களின் தகவல்களை விடவும்  அகதிகள் அதிகம் நம்புகிறார்கள். 

5. ஐ.நா. அகதிகள் அமைப்பின் உதவியுடன் நாடுதிரும்பும் அகதிகளுக்கு விமானச்சீட்டு, மீள்குடியேற்ற உதவிகள் வழங்கப்படுகின்ற போதும், விமானத்தில் 60 அல்லது 70 கிலோ பொருட்களே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறது. பல பத்து ஆண்டுகளாக இந்தியாவில் வாழும் இவர்களிடம் மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டிகள் உட்பட பல வகையான மின்சார பாவனைப் பொருட்களும் இருப்பது இயல்பானது. இவற்றை எடுத்துச் செல்ல  மாற்று வழிமுறைகள் எதுவும் ஏற்படுத்தப்படவில்லை. 

6. அகதிகள் கப்பல் மூலம் இலங்கை திரும்பினால் அதிக பொருட்களை எடுத்துச் செல்லலாம் என்பதால் கப்பலில் செல்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். அதற்கான வழி இன்னும் இல்லை. 

7. இலங்கையில் தமது காணிகள் மற்றவர்களாலும், அரசாங்கம், இராணுவத்தினாலும் அபகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்களை உறவினர்களிடம் இருந்தும், நாடு திரும்பியவர்களிடம் இருந்தும் அறிந்து கொள்வதால் திரும்பி வருவதில் காட்டும் ஆர்வம் குறைகிறது. 

8. இலங்கையை விடவும் இந்தியாவில் கல்விக்கான வசதியும், தரமும் அதிகம் என்று பெற்றோர்களும், இளைஞர், யுவதிகளும் கூறுகின்றனர். 

9. ஐ.நா.அகதிகள் அமைப்பு ஒரு வருடத்திற்கு மட்டுமே தங்களை கண்காணிப்பதுடன் உதவியும் செய்யும் என்ற எதிர்காலம் குறித்த அச்சம் அகதிகளிடம் காணப்படுகிறது. 

10. சகோதரப் படுகொலைகள், இராணுவ அச்சுறுத்தல், ஏற்கனவே தேடப்படுபவர்கள் போன்ற காரணங்களுக்காக இந்தியா சென்றவர்கள் இன்னும் நாடு திரும்புவதற்கான சுய நம்பிக்கையைப் பெறவில்லை.! 

இந்தியக் குடியுரிமை  அரசியல்: மனிதாபிமானம் VS சட்டம்.  

இந்தியாவில் உள்ள தமிழ் அகதிகளின் குடியுரிமை விவகாரத்தில் இரு சட்டங்கள் மோதுகின்றன.  ஏற்கெனவே குறிப்பிட்டபடி இந்திய வெளிநாட்டவர் சட்டமும், ஐ.நா. அகதிகள் பிரகடனமும். ஆனால் மனிதாபிமான அடிப்படையில் இந்த விவகாரத்தை அணுகுவதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறுவதற்கும் இல்லை.  

ஏனெனில் வெளிநாட்டவர் சட்டத்தில் 2019 டிசம்பரில் கொண்டுவரப்பட்ட திருத்தங்களின் அடிப்படையிலேயே, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்காளதேச அகதிகளில் 2014 டிசம்பர் 31க்கு முன்வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. இவர்கள் இந்து, கிறிஸ்தவ, சீக்கிய, பௌத்த, ஜெயின் மதங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தங்கள் நாடுகளில் வஞ்சிக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

1955 இல் வெளிநாட்டவர் குடியுரிமை சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் மூலம் தீபேத் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.   

டெல்லி நீதிமன்றம் ஒன்று வழங்கிய தீர்ப்பின் அடிப்படையிலேயே தீபேத்தியர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படுகிறது. அன்றைய தீர்ப்பின்படி 1950 ஐனவரி முதல் 1987 யூலை வரை இந்தியாவில் பிறந்த தீபேத்தியர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இவர்கள் பிறப்பால் இந்தியர்கள் என்பதே நீதிமன்றம் தெரிவித்த காரணம். ஆனால் சொத்து உரிமை தொடர்பாக இவர்களுக்கு சில வரையறைகள் உண்டு. 

இதே அணுகுமுறையை இலங்கைத் தமிழர் விவகாரத்திலும் இந்தியா மேற்கொள்ள வேண்டும். இலங்கையில் இருந்து சென்ற இந்திய வம்சாவளியினருக்கு இதை இலகுவாக செய்ய முடியும். ஆனால் அது இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர்கள் குடியுரிமை பெற சாதகமாக அமைந்துவிடும் என்று டெல்லி கருதுவதால், தனது சொந்த மக்களுக்கு கூட அந்த உரிமையை அது வஞ்சிக்கிறது. பிறப்பால் இந்தியர்களாக 25,000 ஈழத்தமிழ் இளையோர் உள்ளதை இந்தியா கவனத்தில் கொள்ளாதது ஏன்? 

2019 சட்டத்திருத்தம் இந்திய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டபோது அ.தி.மு.க விற்கு லோக்சபாவில் ஒருவரும், ராஜ்ஜசபாவில் 11 உறுப்பினர்களும் இருந்தார்கள். இவர்களின் ஆதரவோடுதான் இத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது. அ.தி.மு.க. மத்திய அரசுக்கு ஆதரவளிப்பதற்கு நிபந்தனையை விதித்திருக்க முடியும், அதை அவர்கள் செய்யவில்லை. 125:99 என்ற நிலையை 114:110 என்ற நிலைக்கு மாற்றி பேரம்பேசும் வாய்ப்பை அ.தி.மு.க. தவறவிட்டு விட்டது. 

இலங்கை அகதிகள் அனைவருமே வஞ்சிக்கப்பட்டவர்கள். இன, மத, மொழி, பிரதேச, தேசிய, சமூக அங்கத்துவம், ரீதியாக ஒதுக்கப்பட்டவர்கள், புறக்கணிக்கப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்கள். 

இந்த உலகில் சட்டரீதியற்றவர்கள் என்று எவரும் இல்லை என மனித உரிமை பிரகடனங்களும், சட்டங்களும் கூறுகின்ற நிலையில் “கள்ளத்தோணிகள்” என்பது வஞ்சனையா?இல்லையா?  

“சட்டவிரோதக் குடியேறிகள்” என்ற இந்திய மத்திய அரசின் வார்த்தையாடல் சட்டம், மனிதாபிமானம் என்பனவற்றிற்கு அப்பால் பெருமளவுக்கு பிராந்திய பூகோள அரசியலை இந்திய நலன் சார்ந்து முதன்மைப் படுத்துவதாக உள்ளது. 

1. இந்தியாவுக்கும் சீனாவுக்கும், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் வங்காளதேசத்திற்கும், இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான அரசியல் பகை முரண்பாட்டின் ஒரு விளைவே இந்திய அரசு “தீபேத்” உள்ளிட்ட மற்றைய நாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்குகின்ற நடவடிக்கையாகும். பர்மியர்களுக்கும் குடியுரிமை வழங்கப்பட்டது. இதற்குக் காரணம் பர்மா இந்தியாவின் ஒரு பகுதியாகவே நீண்டகாலமாக இருந்தது. 

இந்த முரண்பாட்டு பூகோள அரசியல் அமெரிக்கா கியூபர்களுக்கும், இஸ்ரேல் பாலஸ்தீனர்களுக்கும், குடியுரிமை வழங்குகின்ற அரசியல் காய் நகர்த்தலுக்கு சமமானது. இலங்கையுடனான உறவில் இந்தளவுக்கான விரிசல் எப்போதும் ஏற்பட்டதில்லை. அப்படி அது ஏற்படுவதாயின் இந்தியப் படைக்காலத்தில் ஏற்பட்டிருக்க வேண்டும். சமகால  பூகோள அரசியலில் இது சாத்தியமில்லை. அப்படி நடந்தால் இந்தியா தானாகவே இலங்கையை சீனாவிடம் கையளிப்பதாக அமைந்துவிடும். இதனால் தமிழ் அகதிகள் இந்தியாவுக்கு முக்கியமல்ல. 

2. இலங்கை தமிழ் அகதிகள் இந்தியாவில் இருந்து மட்டுமன்றி வேறு நாடுகளில் இருந்தும் நாடு திரும்புவதை இலங்கை ஏற்றுக்கொள்கிறது. 

ஆனால் வடக்கில் தமிழர் சனத்தொகையில் ஒரு அதிகரிப்பை ஏற்படுத்தும் என்று இலங்கை கருதுகிறது. மறுபக்கத்தில் இவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டால் தமிழ் நாட்டில் இடம்பெறும் ஈழத்தமிழர் ஆதரவு போராட்டத்திற்கு அது வலுச்சேர்ப்பதாக அமைந்துவிடும் என்பதும்  இந்தியா, இலங்கையின் அவதானிப்பாக உள்ளது. இந்த “வலுசேர்ப்பு” விடயமும் குடியுரிமை வழங்குவதில் இந்தியா காட்டும் தயக்கத்திற்கும் ஒரு காரணம். 

3. தி.மு.க. மாநில அரசாங்கம் தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள குடியுரிமை விவகாரத்தை கையாள்வது அவ்வளவு இலகுவானதல்ல. இது மத்திய அரசுடன் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் மதசார்பற்ற காங்கிரஸ் கூட்டணியில் இருந்து மதசார்பு கூட்டணி மோடி அரசாங்கத்தில் சாதிக்க முடியுமா என்பதும் ஒரு கேள்விக்குறி. தமிழக பாரதிய ஜனதாவின் ஆதரவு ஸ்டாலினுக்கு கிடைத்தாலும் வடக்கு அல்லது தேசிய பாரதிய ஜனதாவின் போக்கே இதைத்தீர்மானிக்க முடியும். இது எந்தளவுக்கு சாத்தியம்? 

4. வட்டுக்கோட்டைத் தீர்மானம் அண்மையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. காசி ஆனந்தனின் வார்த்தைகளில் கூறுவதானால் “கறந்தபால் முலைக்கேறாது” என்ற உறுதியான தனிநாட்டுக் கோரிக்கை. இவ்வாறான கோரிக்கைகள் குறித்து இந்திய அரசு அலட்டிக்கொண்ட காலம் கடந்துவிட்டது. 

ஆனால் காலக்கண்ணாடியின் பார்வையில் இந்திய அரசு இதைச்சாட்டாக வைத்து குடியுரிமை மறுப்பை செய்வதற்கு இப்போது ஒரு காரணம் கூடுதலாக உள்ளது. காரணம் அகதிகள் இதற்கு வலுசேர்ப்பார்கள், தமிழக, இந்திய அரசுகளுக்கு அச்சுறுத்தலாக அமையும், இலங்கை இந்திய உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என நொண்டிச்சாட்டுக்களைச் சொல்ல முடியும். 

5. குடியுரிமை விவகாரத்தில் இதுவரை சீமான் மாத்திரமே வழமையான பாணியில் கருத்து வெளியிட்டுள்ளார். குடியுரிமையை விடவும் “சட்டவிரோதிகள்” என்ற வார்த்தை பிரயோகம் அவரை ஆவேசப்படுத்தி உள்ளது. மற்றைய தமிழ்தேசிய ஆதரவு அமைப்புக்களோ, கட்சிகளோ பெரிதும் மௌனம் சாதிக்கின்றனர். இதற்கு இவர்கள் மீள்குடியேற்றத்தை கொள்கையாகக் கொண்டிருப்பது காரணமாக இருக்கலாம். இலங்கை தமிழ்த்தேசிய அரசியல்வாதிகளும் மோடியை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை போலும். 

ஆக, முள்ளை முள்ளால் எடுத்தலே ஒரேவழி. “சட்டரீதியற்ற முள்ளை” “சட்டரீதியான முள்ளால்” எடுப்பதே ஈழத்தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை கிடைப்பதற்கான ஒரே வழி.  

நீதி, நியாயம், சமத்துவம், சமாதானம் ஈழத்தமிழர்களுக்கு கிடைக்கவேண்டும் என்று இலங்கையைக் கோரும் இந்தியா, முன்மாதிரியாக ஈழத்தமிழ் அகதிகளுக்கு இவற்றை முதலில் வழங்குமா? 

இதை மோடி அரசாங்கம் செய்யுமா…..? 

அதற்கான அழுத்தத்தை ஸ்டாலின் அரசாங்கமும், ஐ.நா.அகதிகள் அமைப்பு உள்ளிட்ட அகதிகள் நலன்சார்ந்த அமைப்புக்களும் கொடுப்பார்களா…..? 

பூனையை மடக்கி பிடிக்க காங்கிரஸ் கூட்டணி ஸ்டாலினுக்கு கைகொடுக்குமா……? 

டெல்லி பூனைக்கு மணியை ஸ்டாலின் கட்டுவாரா ? 

எல்லாமே கேள்விக்குறி.! அகதிகளின் எதிர்காலமும் தான்!!