ருவாண்டா (இது கதையல்ல மெய்)

ருவாண்டா (இது கதையல்ல மெய்)

 — அகரன் — 

பாரிசின் ஏ1 என்கின்ற விமான நிலையத்திற்குச் செல்லும் அதிவேக பாதையில் 110 கிலோ மீட்டர் வேகத்தில் அந்த பெர்லின் வகை கார் சென்று கொண்டிருந்தது. குணத்தின் மனைவியை விமான நிலையத்தில் வரவேற்பதற்காக சென்றுகொண்டிருந்தோம். அருகில் படபடப்போடு குணம் அமர்ந்திருந்தான். எப்படியாவது 40 வயதுக்குள் திருமணம் செய்து விட வேண்டும் என்ற அவன் கனவு நிறைவேறியது உண்மைதான். ஆனால் திருமணம் முடித்தும் தன் மனைவியை காண மூன்று ஆண்டுகள் அவன் காத்திருக்கவேண்டி இருந்தது. அவனின் ஒரு கையில் மலர்க்கொத்து இருந்தது. மறு கையில் படபடப்பு இருந்தது. 

அப்போதுதான் அந்த அழைப்பு வந்தது. வாகனத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் போது பேச முடியாது. ஆனால் எப்படியாவது பேசிவிட வேண்டும் என்கின்ற அழைப்பு. அந்த அழைப்பை ஏற்று, ஓலி பெருக்கியில் தொட்டுவிட்டு குணத்தை கைபேசியை காதுக்குள் பிடிக்குமாறு சொன்னேன். அவன் மிக மோசமான பார்வையை மறைத்துக்கொண்டு அதைச் செய்தான். அந்த வேகப்பாதையில் அவனால் நான் சொல்வதை செய்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருந்தான். ‘’இவன் பாதையை மாறவிட்டு விடுவானோ? ‘’ என்று வெளியில் சொல்ல முடியாத கெட்டவார்த்தையால் அவன் என்னை மனதிற்குள் திட்டி இருக்கத் தேவையான அனைத்துச் சூழலும் அப்போதிருந்தது.  

ஒரு சர்வதேச நடுநிலையான ஊடகத்தில் பல ஆண்டுகள் வேலை செய்து ஓய்வு பெற்ற ஒரு கண்ணியத்துக்குரிய ஊடகரின் அழைப்பு. அவருக்கு இலங்கை பற்றிய ஒரு கட்டுரையை எழுதி அனுப்பியிருந்தேன். அவர் அந்தக் கட்டுரையை படித்துவிட்டு ‘அது பிரசுரிக்க முடியாது’ என்று கண்டபடி திட்டிக் கொண்டிருந்தார். குணத்துக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. அந்த ஊடகர் இராணுவ தலைமையகம் தாக்குதல் இலக்கை வழங்குவது போல ஒரு கட்டுரை தலைப்புத் தந்தார். அதன் பெயர் «ருவாண்டா!» 

இடி அமீன் வீட்டுக்கு அடுத்த வீடு 

உகண்டாவிற்கும் ருவண்டாவிற்கும் பலருக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. ஆனால் இடி அமீனை மட்டும் யாரும் மறப்பதில்லை. இடி அமீன் கலக்கம் கொடுத்த நாடு உகண்டா. அதன் பக்கத்து வீடுதான் ருவாண்டா. சிலபேர் அதனை றுவாண்டா என்றும் எழுதுவார்கள். 

சிகப்பு நிறத்தில் உதட்டுச் சாயத்தை பூசி வைத்திருக்கும் ஒரு அழகி ஒருத்தி இடது கன்னத்தில் முத்தத்தை பதித்தால் அந்த உதடுகள் அப்படியே கன்னத்தில் பதிந்து இருக்கும். அப்படி ஆபிரிக்கக் கண்டத்தின் இடது கன்னத்தில் குருதியால்  ‘குற்றம்’ வைக்கப்பட்ட இடம் ருவண்டா… இருபது ஆண்டுகளில் தம் குற்றங்களை அத்தேச மக்கள் இனங்கண்டு, ஆபிரிக்காவின் சிங்கப்பூராக மாற்றி வருகிறார்கள். அதனால்தான் ருவாண்டாவை அறியவேண்டி இருக்கிறது. 

இனப்படுகொலையாளிகள் தேசம் 

ருவாண்டா என்றதுமே சற்று உலக விசயங்களில் நாட்டமுள்ளவர்களுக்கு பயம் வரும். அது 1994இல் நடந்த இனப்படுகொலை. இனப்படுகொலைகளை மனித வரலாறு அருவருப்போடு கடந்து வந்திருக்கிறது. அதில் ருவாண்டா மிக உயரத்தில் இருந்தது. 90 நாட்களில் 800,000 அதிகமான சிறுபான்மை இனமக்களை நவீன ஆயுதங்களின்றி கத்தி, பொல்லு, கல்லு, இன்னும் கையில் கிடைத்த எல்லாவற்றையும் கொண்டு பெரும்பான்மை இனத்தை சேர்ந்த குரூரர் கூட்டம் கொன்றது. வழமைபோல உலகம் பார்த்து செய்தி வாசித்தது.  

ஐ.நா படையும், ஸ்பெயின் படையும் அங்கு இருந்தன. பிரஞ்சுப்படை, இனப்படுகொலையை தூண்டிவிட்ட பெரும்பான்மை அரசாங்கத்துக்கு ஆயுதம் வழங்கியது.  

அந்த நேரத்தில் பிரஞ்சு இராணுவ அதிகாரியாக கடமையாற்றிய ‘GUILLAME ANCEL’ அண்மையில், அன்றைய பிரஞ்சு அரசாங்க நடவடிக்கைகளை கேள்விக்குள்ளாக்கி «RWANDA LA FIN DU SILENCE» (ருவாண்டா, அமைதிக்குப் பின்னால்) என்ற புத்தகம் எழுதினார். அது இங்கு பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. பிரஞ்சு அதிபர்  EMANUVAL MACRON கடந்தகால தவறுக்கு வருத்தம் தெரிவிக்கும் நிலையை அந்தப் புத்தகம் உருவாக்கியது.  

இனப்படுகொலை நடந்த நாட்களில் ஒரு கனடிய நாட்டு ஐ.நா அதிகாரி மட்டும் நெஞ்சில் அடித்து கதறினார். ‘’இனப்படுகொலையை நிறுத்த உதவுங்கள், அல்லது என்னிடம் அதிகாரத்தை தாருங்கள் நான் நிறுத்துவேன்’’ என்றார். 

யாரும் அந்த அதிகாரியின் கதறலை கண்டுகொள்ளவில்லை. வழமைபோல எல்லாம் முடிந்தவுடன் ‘மனித உரிமை பேணும் உலகம்’ இறந்த எண்ணிக்கையை சரியாக கணக்கிட்டதால் தம் வேலையில் திருப்தி அடைந்தார்கள்.  

காலம் காலமாக ஒன்றாக வாழ்ந்த அந்த மக்கள் எப்படி இந்த கொடூரத்தை செய்தார்கள்? அது ஒரு கொப்பியடித்தான் கதை. 

ருவாண்டா நாட்டுக்கு கடல் இல்லை. நாலு பக்கமும் தான்சானியா, உகண்டா, புருண்டி, காங்கோ நாடுகள்தான் இருந்தது. ஆனால் நைல் நதியின் வாசமும் உலகின் ஆழமான ஏரிகளில் ஒன்றான ’கிவு’ மற்றும் பக்கவாட்டில் பல நதிகள் என்று வளத்துக்கு குறைவற்ற நாடு. இயற்கை வளம் செழித்திருந்தால் அன்றைய ஐரோப்பியர்களுக்கு பிடிக்காது என்பது உங்களுக்கு தெரியும். முதலில் ஜேர்மனியும், பின்னர் நீண்டகாலம் பெல்ஜியமும் பட்டாபோட்டு கொள்ளையடித்து முடித்தார்கள்.  

1962 ஜீலை 1இல் பெல்ஜியத்தின் பிருட்டங்களுக்கு வலி ஏற்பட அப்படியே போட்டுவிட்டு போய்விட்டது. அந்த நாளை ருவாண்டா மக்கள் விடுதலை நாள் என்றனர்.  

ஜனநாயகக் குண்டு 

அதன் பின்னர்தான் சனநாயக குண்டு வெடித்தது. அங்கு இரண்டு இனங்கள் வாழ்ந்தனர். காலகாலமாக மன்னர்களாக ஆண்ட இனத்தைச் சேர்ந்தவர்களே காலணி காலத்தில் அரச பதவிகளிலும் கல்வியிலும் வளர்ந்திருந்தார்கள், அவர்கள் துட்சி இனம். ஆனால் அவர்கள் மக்கள் தொகையில் 25% ஆக இருந்தார்கள்.  

மாறாக 75% ஆக மக்கள் தொகையை வைத்துக்கொண்டு சும்மா இருந்தவர்கள் ‘’(கூ)உட்டு’’ இன மக்கள். (அவர்கள் சும்மா இருந்தாலும் இனம் பெருகுவதில் அக்கறையோடு இருந்திருப்பார்கள்.)  

இப்போது தேர்தல் நடந்தது. வரலாற்று உரிமை, கல்வி அறிவு, தேசப்பற்று வைத்திருந்தாலும் துட்சிகளுக்கு ஆளும் வாய்ப்பு வரவில்லை. அதுதானே சனநாயகம்!!  

அப்போதுதான் உட்டு இனத்தலைவர்கள் மிரண்டார்கள். ’’சண்டாளர்களா! நாங்கள் அதிக சனத்தொகையில் இருந்தாலும் எல்லா அலுவலகங்களிலும் உயர் பதவிகளில் நீங்கள் எப்படி)?’’ அப்படித்தான் அங்கு வன்மம் ஆரம்பித்தது. ஆனால் அது வெளியில் தெரியாமல் உள்ளுக்குள் ‘அலுவல்’ பார்த்துக்கொண்டிருந்தார்கள் உட்டு இனவாதிகள்.  

எல்லாவற்றையும் தீர்க்க ஒரு நாள் வந்தது. பெரும்பான்மை அரசாங்க செயற்பாடுகளை வெறுத்து அதை எதிர்த்து இயக்கங்களும் அங்கு உருவாகி இருந்தன. 1994 சித்திரை 6ஆம் நாள் ராகு வேளையில் ருவாண்டா அதிபர் ‘கப்யாரிமானா’ (பெரும்பான்மை உட்டு) விமானத்தில் சென்றபோது யாரோ புண்ணியவான்கள் சுட்டு வீழ்த்திவிட்டனர்.  

அடுத்த நாள் 1994 சித்திரை 7இல் உட்டு இனத்தை சேர்ந்தவர்கள் கையில் கிடைத்த எல்லா ஆயுதங்களாலும் கண்ணில் படாவிட்டாலும் தேடித் தேடி துட்சி இன மக்களை கொன்று வீதிகளில் உயிரோடே போட்டு எரித்தனர். கொடுமையிலும் கொடுமை தாம் திருமணம் செய்த துட்சி இனத்தவர்களைக்கூட கொன்றனர். அயல் வீட்டுக்காரராக இருந்தவர்களை கொன்றனர். உலக வரலாற்றில் குறைந்த நாட்களில் இப்படி மனிதனை மனிதன் கொல்ல முடியும் என்பதற்கு ருவாண்டா இன அழிப்பை விட வேறொன்று இருக்கமுடியாது. வன்மம் நைல் நதிபோல் ஓடியது. 200,000 அதிகமான பெண்கள், பூவை நசித்து வீசுவதுபோல குதறி எறியப்பட்டனர்.  

இந்தக் கொடூரங்களை பார்த்துக்கொண்டு உலகமே சும்மா இருந்தது. ஆனால் ‘’பால் ககமே‘’ செயலில் இறங்கிவிட்டான்!   

பால் ககமே துட்சி (பாதிக்கப்பட்ட) இனத்தை சேர்ந்தவன். யாருக்கு பாதிப்பு என்றாலும் அவனால் தாங்க முடியாது. உகாண்டாவில் இடி அமீனுக்கு எதிரான புரட்சிப்படையில் தன்னை இணைத்து அவன் போராடினான். அவன் மதிநுட்பத்தை இனங்கண்ட புரட்சிப்படைத் தலைவர் அவனை அமெரிக்கா அனுப்பி இராணுவ நுணுக்கங்களை கற்க ஏற்பாடு செய்திருந்த வரலாறு அவனுக்குண்டு.  

இந்த கோரத்தை நிறுத்த வேண்டும்! அவன் ஒரு அறிவித்தலை வெளியிட்டான். 

‘’ருவாண்டாவை கொடியவர்களிடம் இருந்து மீட்ப்பேன். துட்சி இனத்தார் மட்டுமல்ல துட்சி இனத்துக்கு நடக்கும் கொடுமையை நிறுத்த நினைக்கும் உட்டு இனத்தை சேர்ந்தவர்களும் வாருங்கள்! ருவண்டாவை மீட்போம்!! அவசரம்! வாரீர்.. வாரீர்..!‘’   

அவர்கள் கையில் ஏந்திய ஆயுதங்களே இனப்படுகொலையை மூன்று மாதத்தில் முடிவுக்கு கொண்டுவந்தன.  

பால் ககமே, தன் மீட்புப்போரில் துணைநின்ற பெரும்பான்மை உட்டு இனத்தை சேர்ந்த ‘’PASTEUR BIZIMUNGU’’விடம் ஆட்சிப்பொறுப்பை ஒப்படைத்தார். பால் ககமே இன அழிப்பில் ஈடுபட்டவர்கள் தங்கள் தவறை உணர்ந்தவர்களுக்கு மன்னிப்பு வழங்கினார். 2000000 பேருக்கு குற்ற விசாரணை நடந்தது.  

பாதிக்கப்பட்ட சிறுபான்மை இனத்தவரான பால் ககமேயிடம் ‘’எங்களை கொன்றவர்களை கொல்லவேண்டும்’’ என்று பலர் கேட்டபோதும் அவர் கண்ணியத்தோடு நடந்துகொண்டார். ‘’நீதி விசாரணை மூலமே தண்டனை வழங்கமுடியும்!என்றார்.  

பெரும்பான்மை இனத்தை சேர்ந்த PASTEUR BIZIMUNGU ஊழலில் மிதக்க ஆரம்பித்தார். இத்தனை இரத்தம் சிந்தியது இதற்கா? என பால் ககமே கொதித்துப்போனார். தேர்தல் நடந்தது. பெரும்பான்மை மக்களும் அவரை விரும்பி தெரிவு செய்தனர்.  

ஒரு ’போராளி’ தலைவர் ஆனார். ருவாண்டா நாடு, வயலில் நெல் வளர்ந்ததுபோல வேகமாக வளர்ந்தது. அவர் ஆட்சி செய்ய ஆரம்பித்தபோது 25% இருந்த கல்வி அறிவு வீதம் இன்று 20 ஆண்டுகளில் 85% உயர்ந்துவிட்டது. பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்ட ஒரு நாட்டில் இன்று உலகிலேயே பெண்கள் முன்னிலையில் இருக்கிறார்கள். பாரளுமன்றத்தில் 80 கதிரைகள் உண்டு அதில் 45 கதிரைகளில் பெண்கள் அமர்ந்து பக்கத்து வீட்டுப் பிரச்சினையோடு நாட்டுப் பிரச்சினையையையும் விவாதித்து பணி ஆற்றுகிறார்கள். அயல் நாடுகள் எல்லாம் பொறாமைப்படும் வண்ணம் ருவாண்டா மனிதர்களும் அழகாகி வருகிறார்கள். இன்று இனம் என்று நெஞ்சு புடைத்தால் அங்கு சிறைவாசம். பால் ககமே ஆபிரிக்க லீ குவான் யூ (சிங்கப்பூரின் நிறுவனர்) அல்ல அதற்கும் மேலே!  

** 

குணத்தின் மனைவிக்காக விமான நிலையத்தில் காத்திருந்தோம். மூன்று மணி நேரமாக விமானம் வந்தும் மனைவியை காணாததால் குணம் பதற்றத்தில் இருந்தான். கையில் இருந்த பூங்கொத்தும் அவன் மளிக்கப்பட்ட முகமும் வாட ஆரம்பித்திருந்தன. நான் ருவாண்டா பற்றிய கட்டுரைக்கு குறிப்புகள் எடுத்து விட்டிருந்தேன். 

அந்த விமானத்தில் வந்த எல்லோரும் வெளியேறி விட்டார்கள். விமான நிலைய காரியாலயத்தில் விபரத்தை கூறினோம். காத்திருக்கச் சொல்லிவிட்டு. செய்து வைத்த சிலைபோன்ற இளமங்கை ‘’உங்கள் மனைவி கட்டார் விமான நிலையத்தில் covide 19 தொற்றால் தடுக்கப்பட்டுள்ளார். அவர் 14 நாட்களின் பின்னர் வந்தடைவார்’’ என்றார். குணம் காருக்குள்ளும் ’கறுமம்.. கறுமம்.‘ என்று திட்டிக்கொண்டிருந்தான். நாம் ஒன்றுமில்லாமல் 70 km/h வேகத்தில் வீடு வந்துகொண்டிருந்தோம். கார் தடையின்றி ஓடியது. 

குணத்தை இலகுப்படுத்த ஒரு கேள்விகேட்டேன். ‘’குணம், ருவாண்டா எங்க இருக்கு?‘’ அவன் மனதுக்குள் கெட்டவார்த்தையும், வெளியே“ அமெரிக்காக்கு கீழே!‘’ என்றான்.  

நான் வாயை பூட்டுப் போட்டு பூட்டிவிட்டு இருந்தேன். ருவாண்டாவின் கதையை அவனுக்கு சொல்ல வேண்டி இருக்காது. நான் நம்ம நாட்டு கதையின் முன்பகுதியை கொப்பியடித்து பின்னால கற்பனையை சேர்த்துவிட்டிருப்பதாக அவன் நினைக்கக்கூடும்.