— கருணாகரன் —
இலங்கை அரசியலை உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருப்போருக்கு சில அடிப்படையான விசயங்கள் புரியும் என்பதற்கு அப்பால் அதிர்ச்சியளிக்கும் விதமாக சிரிப்பை அது ஊட்டுவதையும் உணருவார்கள்.
இது மூன்று சந்தர்ப்பங்களில் பெரும்பாலும் நிகழ்வதுண்டு.
- ஒன்று, இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற பேரில் விடுக்கப்படும் அறிவிப்புகள் – பிரகடனங்கள், அதற்காக நடத்தப்படும் பேச்சுகள் மற்றும் அதை முன்னெடுப்பதற்கான குழுக்களைப் பார்க்கும்போது.
- இரண்டாவது, அரசியலமைப்புத் திருத்தத்துக்கான ஏற்பாடுகள், முயற்சிகள், நடவடிக்கைகள், கலந்துரையாடல்கள் என்ற ஏகப்பட்ட சங்கதிகளைப் பார்க்கும்போது.
- மூன்றாவது தேர்தல் முறைமை மற்றும் அதன் சட்டத்திருத்தங்கள் பற்றிய நடவடிக்கைகளைக் கவனிக்கும்போது.
இவை மூன்றைப் பற்றிய தீவிரமான பேச்சுகள் – உரையாடல்கள் மற்றும் நடவடிக்கைகளின் அளவுக்கு இவற்றின் இறுதிப் பெறுமதி கிடைப்பதில்லை.
ஏனென்றால் இவை மூன்றுமே அடிப்படையில் ஒரே ஒழுங்கில் இருக்க வேண்டியவை. அப்படி ஒரே ஒழுங்கில் கொண்டுவராமலிருப்பதாலேயே இவை பற்றித் தொடர்ந்தும் பேச வேண்டியுள்ளது. தொடர்ந்தும் இவற்றைச் செயற்படுத்த வேண்டும் என்று முயற்சிக்க வேண்டியுள்ளது. இதற்காக காலத்தையும் பெருமளவு செலவு செய்ய வேண்டியுள்ளது.
இதனால்தான் இவை ஒரு சென்ரி மீற்றர் கூட மேலேற முடியாமல் ஏறக்குறைய கிறிஸ் கம்பத்தில் சறுக்குவதைப்போன்று நிகழ்கிறது.
இதனாலேயே இவற்றைப் பற்றிய பேச்சு அரசியல் மட்டத்திலும் ஆட்சித் தரப்பிலும் வரும்போது கூர்மையான அவதானிப்பாளர்களுக்கு சிரிப்பு வந்து விடுகிறது.
நாம் குழந்தைகளைக்கு நிலாவை வைத்துப் பராக்குக் காட்டுவோம் இல்லையா, அதைப்போல. நடக்கவே நடக்காத விசயத்தைப்பற்றி இவ்வளவு சீரியஸாகப் பேசுகிறார்களே என்றால் சிரிப்பு வராமல் வேறு என்னதான் வரும்? எனவேதான் சனங்கள் இப்போதெல்லாம் இதைப்பற்றிப் பொருட்படுத்துவதே இல்லை. அவர்களைப் பொறுத்தவரை இதொன்றும் உருப்படியாக நடக்கப்போவதில்லை என்ற தெளிவுடன் இருக்கிறார்கள்.
ஒரு எளிய உதாரணம், கடந்த ஆட்சிக் காலத்தில் அரசியலமைப்புத் திருத்தம் என்ற பேரில் ஊர் ஊராகச் சென்று ஆடு, மாடு, கோழிகள், வீட்டு வளையில் இருந்த எலிகள் வரையில் அபிப்பிராயம் கேட்டார்கள்.
இறுதியில் என்ன நடந்தது?
அத்தனை அபிப்பிராயங்களும் குப்பையில்தானே எறியப்பட்டன?
இதற்கு யார் பொறுப்புச் சொல்வது?
பாருங்கள், இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது 1956இல் இருந்து முயற்சிக்கப்படுகிறது. 1957 ஜூலை 26ஆம் திகதி இதற்கான உடன்படிக்கை ஒன்று எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கவுக்கும் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்திற்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டது.
பிறகு டட்லி சேனநாயக்க –செல்வநாயகம் உடன்படிக்கை.
பிறகு இலங்கை – இந்திய உடன்படிக்கை.
பிறகு பிரபாகரன் – ரணில் விக்கிரமசிங்க உடன்படிக்கை.
ஆனாலும் இன்று வரை இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிட்டவில்லை.
இதற்கிடையில் பெங்களுர், டில்லி, திம்பு, நோர்வே, சுவிற்சர்லாந்து, யப்பான் என்று எத்தனை சுற்றுப் பேச்சுகள், எவ்வளவு தீர்வு முயற்சிகள், எத்தனை உடன்படிக்கைகள், எவ்வளவு கால விரயம், எவ்வளவு தரப்புகளின் பங்கேற்புகள், ஆதரவுகள் என வரலாற்றில் இடம்பெற்றிருக்கிறது.
இந்தியாவின் ஆதரவும் ஒத்துழைப்பும் தீவிர முயற்சியும் நேரடிப் பங்கேற்பும் ஒரு கட்டத்தில். பிறகு நோர்வே தலைமையிலான மேற்குலகத்தின் அனுசரணையும் பங்கேற்பும் சமாதான முயற்சிகளும் என.
அமைதியை நிலை நாட்டவென ஒரு லட்சம் இந்திய அமைதி காக்கும் படைகள் வந்து மூன்று ஆண்டுகள் நின்றும் ஆனதென்ன? எல்லாமே மண்ணாயின.
இதெல்லாம் அமைதி வழியிலான நடவடிக்கைகள் என்றால், மறுவழியில் ஆயுதப் போராட்ட முயற்சிகள். இதற்கென எத்தனை இயக்கங்கள். எவ்வளவு உயிர்த்தியாகங்கள். உயிரிழப்புகள், உடமை இழப்புகள், ஊரழிவுகள்..
ஒரு நீண்ட பெரும்போரே தேவையற்ற விதமாக நடந்து முடிந்திருக்கிறது. சின்னஞ்சிறிய இலங்கையின் தாங்குதிறனுக்கு அப்பாலான போர் இதுவல்லவா.
இந்தப் போருக்குச் செலவழித்த வளங்களினாலும் பட்ட கடனாலும் தானே இன்று நாடு இந்தியா – சீனா– மேற்குலகம் என்ற வெளிச்சக்திகளின் நெருக்கடி வலைப்பின்னலுக்குள் சுலபமாகச் சிக்க வேண்டிவந்தது.
ஆனாலும் இன்னும் நமது அறியாமையும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்ற மனப்பாங்கும் ஏற்றுக் கொள்ள முடியாமையும் புரிந்துணர்வின்மையும் அப்படியேதான் உள்ளன. இந்தக் கிறுக்குப் புத்திக்கு –மடத்தனத்துக்கு என்ன செய்யலாம்?
இந்த நிலையில் தொடரும் சமாதான முயற்சிகள் கேள்விகளை எழுப்பாமல் வேறு என்ன செய்ய முடியும்? சிரிப்பை வரவழைக்காமல் வேறு எதைத்தான் கொண்டு வரும்?
இப்பொழுது யாராவது இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்றால் அல்லது பேச்சுவார்த்தை என்றால் அதை விடப் பெரிய பகடி என்னவென்றே எல்லோரும் எண்ணும் அளவுக்கு வந்துள்ளது.
இதற்கு என்ன காரணம்? யாரெல்லாம் காரணம் என்று விளக்கிச் சொல்ல வேண்டியதில்லை.
அவரவர் தத்தமது பொறுப்பேற்றல்களைச் சரியாகச் செய்தாலே போதுமானது. அமைதியும் தீர்வும் சமாதானமும் தானாகவே எட்டி விடும்.
அதற்குப் பதிலாக ஒவ்வொருவரும் பொறிகளை வைப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள்.
பேச்சுவார்த்தை ஒரு பொறி. அதைப்பற்றிய பேச்சுகள் என்பது காலங்கடத்தல் என்பதாக.
இதெல்லாம் மக்களிடத்திலே இந்த முயற்சிகளின் மீதும் இந்தப் பேச்சுகளின் மீதும் நம்பிக்கையை இழக்கச் செய்துள்ளது. மக்கள் இப்பொழுது இதைப்பற்றிப் பொருட்படுத்துவதே இல்லை. அவர்களுக்குத் தெரியும் இது தங்களின் தலையில் அரைக்கப்படும் மிளகாய் என்று. தங்களை ஏமாற்றுவதற்கு நடத்தப்படும் நாடகம் என.
இப்படியானதுதான் அரசியலமைப்புத் திருத்தம் பற்றிய உரையாடல்களும் நடவடிக்கைகளும்.
உண்மையில் ஏற்கனவே உள்ள அரசியலமைப்புத்தான் ஏராளம் பிரச்சினைகளுக்குக் காரணம். பௌத்தத்துக்கும் சிங்களத்துத்துக்கும்தான் முதலிடம் என்றால் பன்மைத்துவத்துக்கும் சமத்துவத்துக்கும் சமூக நீதிக்கும் ஜனநாயகத்துக்கும் அதில் எங்கே இடம்? அப்படியான ஒரு அரசியலமைப்பு ஒரு நாட்டுக்குத் தேவையா? எனக்குத்தான் முதல் வரிசைச் சாப்பாடு. மற்றவர்களுக்கு மிச்சம் மீதி என்பதற்கு நாகரீக சமூகத்தில் என்ன பெயர்?
இப்படிச் சொல்வதற்கு மெய்யாகவே இந்த நாகரீக உலகில் சிங்களச் சமூகம் வெட்கப்பட வேண்டும்.
ஆகவே சரியான – நீதியான –பன்மைத்துவத்துக்கும் பல்லினத்தன்மைக்கும் இடமளிக்கக் கூடிய அரசியலமைப்பு உருவாக்கப்படாத வரை அதைப்பற்றிய பேச்சுகளே வீண்.
அது வம்புக்கு நிகர்.
அப்படித்தான் தேர்தல் முறைமைகளைப் பற்றியும் தேர்தல் சட்டங்களைப் பற்றியுமான உரையாடல்களும் முயற்சிகளும். இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் இன்னொரு கூத்து இது.
இருக்கின்ற தேர்தல்கள் முறைமைகள் ஓரளவுக்குப் பரவாயில்லாதவை. சமத்துவமற்ற பல்லினச் சூழலில் விகிதாசாரத் தேர்தல் ஒன்றுதான் சிறப்பானது. அதையே குழப்பி, வேறு ஏதொவெல்லாம் செய்ய முயற்சிக்கிறார்கள். அதாவது தெரிந்து கொண்டே நாட்டுக்குச் சூனியம் வைக்கிற செயல் இது.
இதனால்தான் உள்ளதையும் கெடுத்து விடாதீர்கள் என்று சில கட்சிகள் தேர்தல் முறைமைகள் மற்றும் தேர்தல் சட்டங்கள் பற்றி வலியுறுத்திக் கூறுகின்றன. குறிப்பாக ஜனநாயகத்தையும் ஐக்கியத்தையும் சமாதானத்தையும் விரும்புகின்ற சில தமிழ்க்கட்சிகள்.
“இலங்கை ஒரு பல்லின சமூகங்கள் வாழ்கின்ற நாடு என்ற அடிப்படையில் பன்மைத்துவப் பண்புகளுக்கு இடமளிக்கும் வகையில் அரசியலமைப்பும் நடைமுறைகளும் தேர்தல் ஏற்பாடுகளும் இருக்க வேண்டும்.
இவ்வாறான இடமளித்தலே அனைத்துத் தரப்பினதும் சுயாதீனத்தையும் ஜனநாயகத்தையும் மேம்படுத்தும்.
இதுவே வளர்ச்சியடைந்த, அமைதி நிலவும் நாடுகளின் பொது நடைமுறைகளாக உள்ளது.
ஆகவே நமது தேர்தல் முறைமைகளும் சட்டங்களும் இந்த அடிப்படை விடயங்களை கவனத்திற் கொண்டு உருவாக்கப்படுவது அவசியமாகும்.
அல்லது பெரும்பான்மை –சிறுபான்மை என்ற அடிப்படைகளைக் கடந்து அனைவருக்குமான சமத்துவத்தை உடைய தேர்தல் முறைமைகளும் தேர்தல் சட்டங்களும் அமைய வேண்டும்.
தேர்தல் மூலமான ஆட்சியமைப்பானது எமக்கு நீதியை வழங்கும் என்ற நம்பிக்கை நாட்டின் அனைத்துக் குடிமக்களுக்கும் ஏற்பட வேண்டும். அந்த நம்பிக்கையை ஏற்படுத்துவதே தேர்தல் ஆணையகம் மற்றும் ஆட்சிக் கட்டமைப்பின் பொறுப்பாகும். இதுவே நாட்டில் ஒரு ஆசுவாசத்தைக் கொண்டு வரக்கூடியதாக இருக்கும் என்று அவை குறிப்பிட்டுள்ளன.
தேர்தல் முறைமைகளைப் பற்றியும் தேர்தல் சட்டங்களைப் பற்றியும் பேசப்படும் இன்றைய சூழலில் இத்தகைய முன்வைப்புகள் முக்கியமானவவை.
மேலும் இலங்கையில் உள்ள வாக்களிக்கத் தகுதி உடைய அனைவரும் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட வேண்டும்.
குறிப்பாக இலங்கையில் இடம்பெயர்ந்தோ வேறு காரணங்களின் நிமித்தமாகவோ இருப்பவர்களும் இந்தியாவில் அகதிகளாக இருப்போரும் வெளிநாடுகளில் பணி நிமித்தமாக இலங்கையர்களாகவே வாழ்வோரும் வாக்காளர்களாகப் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவது அவசியம். அத்துடன் இவர்கள் தேர்தல்களின்போது வாக்களிக்கக் கூடிய பொறிமுறையும் ஏற்படுத்தப்பட வேண்டும்.
ஒவ்வொருக்கும் வாக்குரிமை எவ்வளவு முக்கியமானதோ அதே அளவு முக்கியத்துவம் உள்ளது வாக்களிப்பதுமாகும். ஆகவே ஒவ்வொருவரும் வாக்களிப்பதை உறுதிப்படுத்தும் சட்டம் உருவாக்கப்படுவது அவசியமானது. இது பொறுப்பேற்றலை உருவாக்குவதுடன் ஆட்சியை அமைப்பதில் அனைவருடைய பங்களிப்பையும் உறுதிப்படுத்துவதாகும் என்பதும் கூட.
நாட்டின் அனைத்து மக்களினதும் உண்மையான பிரதிநிதியாக, பொறுப்பு, கண்ணியம், நம்பிக்கை, சமத்துவம், சமூகப் பாதுகாப்பு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு பாராளுமன்றம் செயற்பட வேண்டும்.
நமது இந்தச் சிறிய நாடானது 1948இல் சுதந்திரமடைந்த பின்னர் உள்நாட்டில் விளைந்த அரசியல் முரண்பாடுகளின் விளைவாக 1.5 மில்லியனுக்கு மேற்பட்ட மக்களை இழந்துள்ளது. பல்லாயிரக்கணக்கானோர் அனைத்துச் சமூகங்களிலும் அவயங்களை இழந்து அவல வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆகையால் உருவாக்கப்படும் தேர்தல் சட்டங்களும் தேர்தல் முறைமையும் அதன் பின்னர் உருவாகும் ஆட்சியும் அரசியற் சூழலும் அரசியலமைப்பும் நேர்மையானதும் உறுதியுமான நல்லிணக்கத்தையும் அரசியற் சுமுக நிலையையும் நம்பிக்கையையும் எட்டுவதாக இருக்க வேண்டும் என்று அவை வலியுறுத்தியுள்ளன.
அத்துடன் இலங்கை பல்லின மக்கள் வாழ்கின்ற நாடு என்ற வகையில் பன்மைத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட சிந்தனையும் நோக்கு நிலையும் அவசியமாகும். இந்தப் பன்மைத்துவம் என்பது சமநிலைப் பண்புடையதாக –அனைவருக்குமான உரிமைகளை உறுதிப்படுத்துவதாக இருத்தல் வேண்டும். ஏனெனில் இலங்கையின் பல்லினச்சூழல் என்பது சமநிலைத் தன்மையுடையது அல்ல. அது இனரீதியான சனத்தொகை விகிதத்தில் ஏற்ற இறக்கங்களைக் கொண்டது. ஆனால் நீதியானது ஏற்ற இறக்கங்களைக் கொண்டிருக்க முடியாதது. ஆகவே நேர்மையும் நியாயமும் அனைத்துத் தரப்பினருக்கும் உரிய சமத்துவமுமான ஆட்சி அதிகார நடைமுறையைத் தோற்றுவிக்கும் வகையில் தேர்தல் சட்டங்களும் அவசியமான திருத்தங்கங்களும் அமைதல் வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளன.
இதை தமிழ் முற்போக்குக் கூட்டணி, சமத்துவக் கட்சி, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி போன்றவை உறுதியாகக் கூறியுள்ளன.
குறிப்பாக சிறுபான்மை இனங்களின் பிரதிநிதித்துவமானது இன ரீதியான அடிப்படையில் ஒதுக்கப்படும் ஆசனங்களின் மூலம் உறுதிப்படுத்தப்படுவது அவசியம். அல்லது அவர்கள் தமக்கான ஆசனங்களைப் பெறக்கூடிய தேர்தல் சட்ட ஏற்பாடுகளின் வழிமுறைகளின் ஊடாக பெறும் ஆசனங்களின் மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
ஜேர்மனி, இந்தியா, பாகிஸ்தான், கொலம்பியா, குரோஸியா, அல்பினியா, தாய்வான் போன்ற நாடுகளில் இத்தகைய நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இது ஏனைய சமூகத்தினரிடையே நம்பிக்கையைக் கட்டியெழுப்பி நல்லிணக்கத்துக்கும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் வழியேற்படுத்தும். பதற்றத்தைக் குறைக்கும் என்று சுட்டிக் காட்டியுள்ளன.
அத்துடன் பெண்களுக்கான இடம் அதிகரிக்கப்பட வேண்டும். உள்ளுராட்சி மன்றங்களில் அவர்களுக்கு தனியான ஒதுக்கீடுகள் அவசியம். மாகாணசபையில் 30 வீதத்துக்குக் குறையாமலும் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தில் 20 குறையாமலும் ஒதுக்கீடுகளைச் செய்வது அவசியம். எதிர்காலத்தில் இதில் வளர்ச்சி ஏற்படும்.
இதெல்லாவற்றையும் அதிகாரத்திலிருப்போர் கணக்கிலெடுப்பார்களா? அல்லது கெடு குடி சொற் கேளாது என்ற மாதிரி எல்லாவற்றையும் போட்டு உடைப்பார்களா?
சகுனம் நல்ல மாதிரித் தெரியவில்லை. ஆனாலும் நம்பிக்கையைக் கை விட முடியாதல்லவா? வரலாற்றின் விதி அது.