— சிக்மலிங்கம் றெஜினோல்ட் —
(இறுதிப் பகுதி)
இடதுசாரி அரசியல் என்பது மக்கள் அரசியலாகும். மக்களையும் அவர்களுடைய நலனையும் உரிமைகளையும் மையப்படுத்திச் சிந்திப்பதாகும். விடுதலை என்பதை முழுமையான அளவில் கருதிச் செயற்படுவது, செயற்படுத்துவது. சுருக்கிச் சொன்னால் மக்களுக்காக அரசியற் கோட்பாடும் நடைமுறைகளும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துவது. கட்சியோ உறுப்பினர்களோ தலைமைகளோ அனைத்தும் மக்களுக்காக என்ற உறுதியுரைப்பையும் நிலைப்பாட்டையும் கொண்டது. ஆகவே மக்களுக்காகச் செயற்படுவது, அவர்களுக்காகத் தம்மை ஈந்து கொள்வது என்பதாகும்.
வலது அரசியல் இதற்கு நேர்மாறானது. கட்சிக்காக, அதன் கோட்பாட்டுக்காக, அதன் தலைமைக்காகவே மக்கள் என்பதாக அது வியாக்கியானம் கொண்டிருப்பது. நடைமுறைகளும் விதிமுறைகளும் கூட இந்த அடிப்படையில்தான் இருக்கும். இருக்கின்றது. மக்களோ கட்சிக்காகவும் தலைமைக்காகவும் செயற்பட வேண்டும், தியாகம் செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டது. ஆனால் இதை அது உருத்தெரியாமல் வெவ்வேறு பொருத்தமான தந்திரோபாயச் சொல்லாடல்களால் மறைப்புச் செய்து தன்னைத் தளைக்க வைத்துக் கொள்கிறது. இதற்கே தேசியவாதமும் இனவாதமும் துணையாகப் பயன்படுத்தப்படுகின்றன.
இலங்கையின் 1948க்குப் பின்னரான அரசியலானது வலது சக்திகளின் ஆதிக்கத்திலேயே இருந்துள்ளது. இடையிடையே இடதுசாரிகளின் பங்கேற்புடன் அவ்வப்போதான ஆட்சிகள் நடந்திருந்தாலும் அவையும் வலதுக்குக் கட்டுப்பட்டதாக அல்லது அதனோடு இசைவாக்கம் கொண்டதாகவே இருந்துள்ளது.
ஆகவே தொகுத்துப் பார்த்தால், எழுபது ஆண்டுகளுக்கு மேலான ஆட்சி என்பது வலதுகளின் ஆட்சியாகவே இருந்துள்ளது.
இந்த ஆட்சிக் காலத்தில்தான் பேரழிவுகள் நிகழ்ந்திருக்கின்றன. இனமுரண் உச்சமடைந்திருக்கிறது. கடன்பழு கூடியுள்ளது. பல லட்சக்கணக்கானோர் நாட்டை விட்டு அகதிகளாகப் பெயர்ந்திருக்கின்றனர். வெளிச் சக்திகளின் தலையீடுகள் அதிகரித்த நிலை ஏற்பட்டுள்ளது. நாடு ஜனநாயகத்திலும் பொருளாதாரத்திலும் வீழ்ச்சிடையடைந்துள்ளது. லட்சக்கணக்கானோர் அங்கவீனர்களாகியுள்ளனர்.
ஒரு கணம் கண்களை மூடி நியாயமாகச் சிந்தித்தால் மக்கள் வழங்கிய ஆணையை இவர்கள் எப்படியெல்லாம் துஷ்பிரயோகம் செய்துள்ளனர் என்று தெளிவாகத் தெரியும். நாட்டை அப்படியே கெடுத்துக் குட்டிச் சுவராக்கியுள்ளனர்.
அப்படியென்றால் இந்தத் தரப்பு தொடர்ந்தும் ஆட்சியதிகாரத்தில் இருக்கத் தகுதியற்றது. இதை இவர்கள் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். ஆனால் வரலாறு இதை உணர்த்தி வருகிறது.
இதனால்தான் சிறிலங்கா சுதந்திரக் கட்சி மிகப் பின்னடைவைச் சந்திக்க வேண்டி வந்தது. இது வரலாற்று விதியாகும். ஆனாலும் அதை மீண்டும் மிகக் கடினமாகக் கட்டியெழுப்பினார்கள். இருந்தும் இப்பொழுது அது மறுபடியும் உடைந்து நலிந்துள்ளது.
பதிலாக அது பொதுஜன பெரமுன என்ற ஒரு புதிய லேபிளைக் கொண்டுள்ளது. ஆனால் அடிப்படையில் இரண்டும் ஒன்றே. அதே ஆட்கள், அதே கோட்பாடு, அதே நிலைப்பாடு, அதே மாதிரிகள் என.
இதே கதையும் கதியும்தான் ஐ.தே.கவுக்கும். ஐ.தே.க இப்பொழுது உடைந்து நொருங்கியுள்ளது. சு.க.வுக்கு எப்படிப் பொது ஜன பெரமுனவோ அப்படியே ஐ.தே.கவுக்கு ஐக்கிய மக்கள் சக்தி.
இவற்றுக்கிடையில் என்ன வித்தியாசம் என்று சத்தியமாக யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.
இது நாடகமன்றி வேறென்ன? ஏமாற்றன்றி வேறேது?
இப்படித்தான் தமிழ்த்தரப்பிலும். தமிழரசுக் கட்சி சரியில்லை என்று (அதாவது அதன் மீது மக்கள் நம்பிக்கை இழக்கின்றனர் என்ற நிலையில்) தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற புதிய லேபிளை ஒட்டிக் கொண்டது.
இதைப்போலத்தான் தற்போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குப் பதிலாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி என்ற மாதிரி புதிய லேபிள்களை உருவாக்கியிருப்பது. இடையில் தமிழ் மக்கள் பேரவை என்ற இன்னொரு தில்லாலங்கடி…
அடிப்படையில் இவற்றுக்கிடையில் எந்த வேறுபாடுகளும் இல்லை. அதே குணவியல்பு. அதே ஆட்கள். அதே பம்மாத்து மற்றும் மக்கள் விரோத தன் மைய அரசியலும்.
மட்டுமல்ல, தமிழ்த்தரப்பிலும் இந்தச் சக்திகள்தான் மாறி மாறி அதிகாரத்தில் இருந்துள்ளன. மக்களிடம் செல்வாக்கைப் பெற்றிருந்தன.
அப்படியிருந்தும் மக்களுக்கு ஏதாவதொரு விமோசனத்தையோ, சிறிய மாற்றத்தையேனுமோ செய்திருக்கின்றனவா? …இல்லையே!
பதிலாக முரண்பாட்டையே ஊக்கி வளர்த்துள்ளன.
மக்களின் வாழ்க்கையைக் கீழிறக்கியுள்ளன.
சமூகங்களைப் பிளவுற வைத்துள்ளன.
அரச ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராடுகிறோம் என்ற கோதாவில் மக்களைப் பாதிப்புக்குள்ளாக்கி விட்டுத் தாம் மட்டும் அரசுடன் இணைந்த ரகசிய நடவடிக்கைகளில் கொழுத்திருக்கின்றனர்.
ஆகவேதான் இவை மக்களுக்கு எதிரான சக்திகள் என்கிறோம்.
இன்னும் பத்து ஆண்டுகளல்ல, ஐம்பது ஆண்டுகளை இவர்களிடம் கொடுத்தாலும் இவர்களால் ஒரு சிறிய மாற்றத்தையும் உருவாக்க முடியாது. அதையும் கரியாக்கி விடுவார்கள்.
எனவேதான் இவர்களை – இந்தச் சக்திகளை நாம் கழித்து விட வேண்டியுள்ளது. கழித்துக் குப்பைத் தொட்டிக்குள் போட்டு விட வேண்டும்.
ஆமாம், வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள்.
பதிலாக இலங்கையின் பல்லினத் தன்மைக்கும் பன்மைத்துவச் சூழலுக்கும் அமைய புதிய மக்கள் சிந்தனைப் போக்குடைய – இடது நிலைப்பட்ட தரப்பினரே ஆட்சிக்கு வர வேண்டும்.
அவர்களே மாற்று அரசியற் பண்பாட்டை உருவாக்கக் கூடியவர்கள். மக்கள் அரசியலைச் சிருஸ்டிக்கக் கூடியவர்கள்.
இதுவரையான வரலாற்றில் அவர்கள் –அந்தச் சக்திகள் – மையத்தில் நின்று ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்கமுடியாமல் இருந்திருக்கலாம். ஆனால் ஆட்சியதிகாரத்தில் இருந்தோரை ஓரளவுக்கேனும் நெறிப்படுத்தியது இடதுசாரிகளின் மக்கள் நிலைப் போராட்டங்களேயாகும்.
இப்போது கூட ஜனநாயகத்துக்கும் உரிமைகளுக்கும் சமத்துவத்துக்கும் தேச நலனுக்கும் நாட்டின் இறைமைக்குமாக மெய்யாகவே போராடிக் கொண்டிருப்பது இடதுசாரிகளே.
விலையேற்றத்திற்கு எதிராக, தொழில் உரிமைகளுக்காக, சம்பள உயர்வுக்காக, இயற்கை வளங்களின் சுரண்டலுக்கும் அழிப்புக்கும் எதிராக, ஜனநாயகத்துக்காக, அதிகாரக் குவிப்புக்கு எதிராக, வெளிச்சக்திகளின் தலையீடுகளை எதிர்ப்பதாக, அரசியல் உள் நோக்கமுடைய கைதுகள், கொலைகள், தவறான அரசியல் நடவடிக்கைகள் போன்றவற்றுக்கு எதிராக என இடதுசாரிகள் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர்.
இவர்களில் ஒரு சிறிய தரப்பே ஆட்சியில் – அரசோடு இணைந்து பங்கேற்கிறது.
ஏனைய இடது சக்திகள் அத்தனையும் மக்களோடு நின்று அரசை நெறிப்படுத்தவும் ஆட்சியைச் சீரமைக்கவும் உரிமைகளை நிலை நிறுத்தவும் போராடுகின்றன.
கொழும்பிலும் கண்டி, ஹற்றன், யாழ்பாணம் போன்ற நகரங்களிலும் நடக்கும் சிவப்புப் போராட்டங்களுக்கு என்றொரு வரலாற்று முக்கியத்துவம் உண்டு.
இப்போது கூட கொழும்பு – கோட்டையிலும் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திலும் இந்தச் சிவப்புகளின் ஆக்ரோஸமான குரலை நீங்கள் கேட்கலாம்.
மழையிலும் வெயிலிலும் நின்று இவர்கள் கூவுகிறார்கள். எதற்காக? யாருக்காக? எந்த அதிகாரமும் இல்லாத இவர்களுடைய இந்தக் குரல்தான் அதிகாரத்தையே ஆட்டுகிறது.
எனவேதான் சொல்கிறோம், அரசியல் வரலாற்றில் இடதுகளின் பாத்திரம் என்பது வலுவானது. வரலாற்று முக்கியத்துவமுடையது. மக்கள் இன்று அனுபவிக்கின்ற பாதி அரசியல் உரிமைகள் மற்றும் மக்கள் நலன்கள் எல்லாமே இடதுகளினால் உருவாகியவையே என்று.
இதை யாராலும் மறுத்துரைக்க முடியாது.
ஆகவே இனியாவது இலங்கைத் தீவை ஒரு புதிய நிலையை நோக்கி நகர்த்த வேண்டும் என்றால், இலங்கை ஒரு பல்லின சமூகங்கள் வாழும் நாடு என்ற வகையில் பன்மைத்துவப் பண்பையும் அதற்கான ஜனநாயக விழுமியங்களையும் உருவாக்கி வளர்க்க வேண்டும் என்றால் அதற்கு இடதுசாரிகளே பொருத்தமானவர்கள்.
இனவாதிகளோ மதவாதிகளோ அல்ல.
இடதுசாரிகளே சுதேசியப் பொருளாதாரத்தைக் குறித்துச் சிந்திக்கக் கூடியவர்கள். நவீனத்தைக் குறித்த புரிதலைக் கொண்டவர்கள். விரிந்த சிந்தனையை உடையவர்கள். நெறிமுறைகளை மீறத் துணியாதவர்கள். இதுவரையான வரலாற்றுப் பங்களிப்பிலும் பாத்திரத்திலும் அவர்களுடைய அடையாளத்தை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.
இதை விளங்கிக் கொள்ளவோ விளங்கியும் ஏற்றுக் கொள்ளவோ முடியவில்லை என்றால் அழிவு அரசியலையே நாம் விரும்புகிறோம். தொடரப்போகிறோம் என்றே அர்த்தமாகும்.
அழிவு அரசியற் சக்திகள் எத்தனை தடவை வென்றாலும் எதையும் புதிதாக ஆக்கப் போவதில்லை. வரலாற்று நிரூபணமும் அதுவே.
மீட்பர்கள் யார்? என்று அறியாமல் இன்னும் எத்தனை காலம்தான் நெருப்பில் எரிவது? குழிக்குள் வீழ்வது?
ஆனால் இடதுகளும் தம்மை மீள் பரிசீலனை செய்து மீள்நிலைப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனென்றால் வரலாற்றையும் அரசியலையும் சமூகப் பொருளாதாரவியலையும் விஞ்ஞான பூர்வமாக விளங்கிச் செயற்படக் கூடிய இடதுசாரிகள் தமக்குள் பிளவுண்டு எதிர்த்தரப்புகளுக்கு இடமளிப்பது மக்கள் விரோதமாகும்.
(முற்றும்)