வடக்கு நோக்கி வந்த சொந்தச் சகோதரர் (நீதி மறுப்பும் நீதி கோரலும்) — 05

வடக்கு நோக்கி வந்த சொந்தச் சகோதரர் (நீதி மறுப்பும் நீதி கோரலும்) — 05

 — கருணாகரன் — 

(இனவன்முறையினால் வடக்கு நோக்கி வந்த மலையக மக்களுக்கான நீதி இன்னும் கிடைக்கவில்லை. அவர்கள் நம்பி வந்த தமிழ்ப் பிரதேசங்களிலேயே (வடக்கிலேயே) புறக்கணிக்கப்படுகிறார்கள். பல வழிகளிலும் ஒடுக்கப்படுகிறார்கள். அரச நிர்வாகம் தொடக்கம் வளப்பகிர்வு, சமூக நிலை எனப் பல வகையிலும் இந்த அநீதி தொடர்கிறது. இந்த மக்களுடைய பிரச்சினைகளைக் குறித்து இதுவரையிலும் கவனத்திற்குரிய மைய உரையாடல்களோ ஆய்வுகளோ நடக்கவில்லை. இந்தக் கட்டுரைத் தொடர் அதனைப் பொதுவெளியில் திறக்க முற்படுகிறது. — ஆசிரியர்)   

(05) 

நாங்கள் வேறு நீங்கள் வேறு என்றானால் 

நமக்கொரு நீதி பிறர்க்கொரு நீதி என்றாகுமே – நாமென்றோர் எண்ணம் என்றேனும் தோன்றாதோ 

கிளிநொச்சியில் குடியேறிய மக்களுக்கு வேறு வகையான நெருக்கடிகள், பிரச்சினைகள் இருந்தன. குறிப்பாக காணிப்பிரச்சினை, வீட்டுப்பிரச்சினை, தொழில் மற்றும் வருமானப் பிரச்சினை, பிள்ளைகளின் எதிர்காலத்துக்கான கல்வி, தாங்கள் வாழ்கின்ற பகுதிகளில் பாடசாலைகளை அமைக்கும் பிரச்சினை, போக்குவரத்துக்கான வீதி, குடிநீர் மற்றும் பயிர்ச்செய்கைக்கான நீர்ப் பிரச்சினை, சமூக நிலையில் சமத்துவமற்ற நிலை, கோயில்களில் பங்கில்லை – உரிமை இல்லை என்ற நிலை என இந்தப் பிரச்சினைகளின் பட்டியல் நீண்டது. 

பெரும்பாலானவர்கள் கூலிகளாகவே இருந்ததாலும் காட்டோரத்தின் புதிய குடியேற்ற வாசிகள் என்பதாலும் இயல்பாகவே ஏற்படுகின்ற பிரச்சினைகளும் இவர்களைச் சூழ்ந்திருந்தது. 

தங்களுடைய பிரச்சினைகளைப் பற்றி எவருடனும் பேசக் கூடிய அமைப்போ தலைவர்களோ இவர்களிடம் உருவாகவும் இல்லை. அதனால் அத்தனை நெருக்கடிகளும் தொடர்ந்து கொண்டேயிருந்தன. 

இதனால்தான் இவர்களுடைய பிரச்சினைகளும் தீரவில்லை. பிரதேசங்களும் முன்னேற்றமடையாமல் நீண்டகாலமாக இருந்தன. 

குறித்துச் சொல்வதாக இருந்தால் 2000 ஆண்டுவரையில் இவர்களுடைய வீடுகளில் சீமெந்தினால் கட்டப்பட்ட பாதுகாப்பான கிணறுகளே இருந்ததில்லை. இவர்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் ஒரு வீதி கூட ஒழுங்காகப் போடப்பட்டதில்லை. 2009க்குப் பிறகு – யுத்தம் முடிந்த பின்னரே அநேகமாக இவர்களுடைய வீடுகள் குடிசையிலிருந்து கல் வீட்டுக்கு – ஓட்டு வீட்டுக்கு வந்தது எனலாம். வீதிகள் புனரமைக்கப்பட்டதும் வீடுகளுக்கு மின்சாரம் வந்ததும் கிணறுகள் கட்டப்பட்டதும் கூட 2009 க்குப் பிறகுதான். 

அந்தளவுக்கு பின்தங்கிய நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டிருந்தனர். 

ஆனால் அத்தனை பேரும் கடுமையான உழைப்பாளிகள். அதுவும் ஆண்களும் பெண்களும் சமமாக வேலை செய்கின்றவர்கள். உடல் உழைப்பாளிகள். கொஞ்சம் பெரியவர்களாக வளர்ந்து விட்டால் பிள்ளைகளும் வேலைக்குப் போகத் தொடங்கி விடுவார்கள். அவர்களும் உழைப்பாளிகளாகி விடுவார்கள். கொஞ்சம் பெரியவர்கள் என்றால் பத்துப் பன்னிரண்டு வயது ஆனவுடன். 

இன்று குழந்தைத் தொழிலாளர்களைப் பற்றி, அவர்களுடைய உரிமைகளைப் பற்றி அதிகமாகப் பேசப்படுகிறது. ஆனால் அன்று (பத்துப் பதினைந்து ஆண்டுகளின் முன்பு – ஏன் இப்பொழுதும் இந்த நிலை இவர்களிடம் முற்றாக மாறவில்லை) இந்தப் பத்துப் பன்னிரண்டு வயதுப் பிள்ளைகள் வயலில் கதிர் பொறுக்கினார்கள். கிளிகளைக் கலைத்தனர். பன்றிக்கும் காட்டெருமைக்கும் யானைக்கும் எதிராக நெருப்பை மூட்டி விட்டு காட்டோரங்களில் பயிர்களுக்குக் காவலிருந்தனர். தோட்ட வேலைகளிலும் வயல் வேலைகளிலும் ஈடுபட்டனர். வீட்டுப்பணிக்குச் சென்றனர். கடைகளில் உதவியாளர்களாக வேலை செய்தனர். இப்படிப் பல வேலைகளிலும் இந்தச் சிறார்கள் உழைப்பாளர்களாக இருந்தனர். 

இப்படிச் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பமாக உழைத்தும் குடும்பங்களின் பொருளாதாரம் உயர்ந்ததா என்றால் இல்லை என்பதே பதில். 

காரணம், உழைப்பு அதிகம். கூலி (சம்பளம்) குறைவு. 

இதேவேளை இப்படிச் சிறுவயதிலேயே வேலைக்குச் செல்ல வேண்டியிருந்ததால் இவர்களால் படிக்க முடியவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். இதை ஒரு நல்ல வசதியான ஏற்பாடாகவே நிலங்களை வைத்திருந்தோரும் கடைகளை வைத்திருந்தோரும் விரும்பினர். அப்படியென்றால்தானே குறைந்த கூலியில் நிறைய வேலையாட்கள் கிடைப்பர். நிறைய வேலையாட்கள் இருந்தால் கூலியை உயர்த்த வேண்டியதில்லை. 

இதனால் இவர்களுடைய அடுத்தடுத்த தலைமுறையிலும் அநேகர் கூலிகளாகவே வாழ்க்கையைத் தொடர வேண்டியிருந்தது. 

உலகம் முழுவதும் கூலி உழைப்பாளிகள் இப்படி எதிர்கொள்கின்ற நெருக்கடிகள் அதிகம். உத்தரவாதமில்லாத ஊழியம். பாதுகாப்பில்லாத வாழ்க்கை மற்றும் தொழில் ஏற்பாடுகள். இதிலும் சீசன் தொழில்களில் தங்கியிருப்போர் மாற்றுச் சீசன்களில் வருமானத்தை இழக்க வேண்டிய நிலை என்பது மிகத் துயரமானது. பருவகாலப் பயிர்ச்செய்கை இதில் முக்கியமான ஒன்று. வன்னியில் தோட்டச் செய்கையும் வயல் விதைப்பு –அறுவடையும் பிரதான சீசன் தொழில்கள். இதனால் குறிப்பிட்ட சீசனைத் தவிர்ந்து மீதிப் பாதிக்காலத்தை நெருக்கடிகளில் கழிக்க வேண்டும். 

இதேவேளை இதைப்பற்றிப் பேசுவதற்கோ நியாயம் கேட்பதற்கோ தொழிற்சங்கள் மற்றும் தொழிலாளர் உரிமைகள் எதுவும் இல்லை என்ற நிலையில் நிராதரவான ஒரு சூழலிலேயே இவர்கள் வாழ வேண்டிய அவலம் நீடித்தது. 

இப்படித்தான் வன்னி வாழ் மலையக மக்கள் தங்களுடைய வாழ்க்கையை நகர்த்திக் கொள்ள வேண்டி இருந்தது. 

இதற்குள் யுத்த நெருக்கடிகள் வேறு. 

போராட்டமும் போரும் தீவிரமடைய இந்தக் குடும்பங்களிலிருந்தே பெருமளவு இளைஞர்களும் பெண்களும் போராட்டத்தில் ஈடுபடத்தொடங்கினர். இதனால் இவர்களுக்கே இழப்புகளும் அதிமாகின. இதைப்பற்றிப் பின்வரும் அத்தியாயங்களில் விரிவாக நோக்கலாம். 

இதேவேளை கிளிநொச்சி முல்லைத்தீவு தவிர்ந்த வவுனியா மாவட்டத்தில் குடியமர்த்தப்பட்ட மலையக மக்கள் எதிர்கொண்ட நெருக்கடிகளும் சவால்களும் மிக அதிகம். அதிகமென்ன, உச்சம் எனலாம். 

இவர்கள் குடியமர்த்தப்பட்டனர் என்று ஏன் இங்கே அழுத்தமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது என்றால், அப்பொழுது (1977 தொடக்கம்) வவுனியா மாவட்டத்தின் எல்லையோரத்தைப் பாதுகாப்பது ஒரு பெரிய நெருக்கடியாக தமிழ்ச்சமூகத்திற்கு இருந்தது. 

சிங்களக் குடியேற்றங்கள் விரைவுபடுத்தப்பட்டு நகர்த்தப்படுவதை தமிழர்கள் எதிர்கொள்ள முடியாமல் தவித்தனர். 

இதற்கு ஒரு எதிர் ஏற்பாடாக –நல்லதொரு வாய்ப்பாக வன்முறையினால் பாதிக்கப்பட்டு வடக்கு நோக்கி வந்த இந்த மலையக மக்கள் பயன்படுத்தப்பட்டனர். 

இவர்களுக்கு காணிகளை வழங்கி, எல்லைப்புறங்களில் குடியேற்றினால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் என்ற அடிப்படையில் இவர்களுடைய காணிப் பிரச்சினைக்கும் தீர்வைக் காணலாம். சிங்களக் குடியேற்றத்தையும் தடுத்து விடலாம் என்று தமிழ் மூளைகள் சிந்தித்தன. 

அந்த அடிப்படையில் நெடுங்கேணிக்குத் தெற்கே தொடக்கம் வவுனியாவின் பெரும்பாலான எல்லைக்கிராமங்களை நோக்கி இந்த மக்கள் நகர்த்தப்பட்டுக் குடியமர்த்தப்பட்டனர். 

இதில் காந்தியத்தின் பங்கு அதிகமாக இருந்தது. 

ஆனால் இங்கே ஒரு விடயத்தைக் குறிப்பிட வேண்டும். 

இந்த மக்களைக் குடியேற்றி விட்டு காந்தியத்தினர் விலகி விட வில்லை. இவர்களுடன் கூடவே இருந்து வேண்டிய உதவிப்பணிகளைச் செய்து கொடுத்தனர். 

ஆனாலும் இது நீடிக்கவில்லை. அதற்கிடையில் அரசு இந்தப் பணிகளில் ஈடுபட்ட டேவிட் ஐயா, டொக்ரர் ராஜசுந்தரம் போன்றோரைக் கைது செய்தது. 

இந்தக் கைதுகளோடு நிலவரம் மாறியது. 

அடுத்து என்ன நடக்கும்? என்ன செய்வது என்று தெரியாத நிலை ஏற்பட்டது. 

மறுபடியும் திக்குத் தெரியாத காட்டில் கண்ணைக் கட்டி விடப்பட்டதைப் போன்ற நிலை இவர்களைச் சூழ்ந்தது. தெற்கில் அடிவாங்கியது போதாதென்று இங்கேயும் அடி வாங்க வேண்டியிருந்தது. 

கூடவே போர் நெருக்கடிகளும் அதிகரிக்க இவர்கள் அதற்கும் முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டது. 

எல்லைக் கிராமங்கள் என்பதால் முன்னரங்கில் தொடர்ந்தும் அடிவாங்க வேண்டிய நிலை உருவானது. 

1980களில் இவர்களின் கிராமங்கள் பல படுகொலைக்களங்களாகின. “ஒதியமலை” இதற்கு ஒரு சிறந்த உதாரணம். 

(தொடரும்)