— சி. மௌனகுரு —
1960களின் பிற்பகுதியில் சங்காரம் வடமோடி நாடகம் லும்பினியில் மேடையேறுகிறது. அது தொழிலாளர் எழுச்சி கூறும் நாடகம், அதில் நான் தொழிலாளர் தலைவனாக ஆடிப்பாடி நடித்திருந்தேன். நாடகம் முடிந்தவுடன் மேடைக்கு வந்து ஒருவர் தன்னை அறிமுகம் செய்து என்னை அணைத்துகொண்டார். என் கைகளை இறுகபிடித்து வாழ்த்துரைத்தார் தன்னையும் ஓர் நாடகக்காரன் என அறிமுகம் செய்து கொண்டார்.
அவரே இந்த மாத்தளைக் கார்த்திகேசு.
அவருடைய அந்த பிடிப்புக்குள் நான் ஓர் அற்புத மனிதரின் உணர்வை உணர்ந்தேன்.
அந்தப் பிடிப்பும் இறுக்கமும் அவர் இறக்கும் வரை எம்மிடையே இருந்தன.
இருவரும் சம வயதினர் என நினைக்கிறேன்.
அவரோடு அவரது நாடகங்களை இயக்கிய காலம் சென்ற றொபேர்ட்டும் வந்ததாக ஞாபகம்,
இந்த இருவரின் இணைப்பிலும்தான்.
காலங்கள் அழுவதில்லை, போராட்டம், களங்கம் ஆகிய நல்ல நாடகங்கள் கொழும்பில் மேடையேறின.
நாடகத்தை தமது உயிர் மூச்சாகக்கொண்டு வாழ்ந்த ஓர் இளைஞர் கூட்டம் அது.
கொழும்பின் வாழைத்தோட்ட மக்களது எளிமையான வாழ்க்கையையும் மலையக மக்களின் துயரம் நிறைந்த வாழ்க்கையையும் அன்றைய தொழிலாளர் போராட்டங்களையும் நாடகம் மூலம் மேடையில் கொணர்ந்தது அன்றைய
பௌசுல் அமீர்
சுஹைர் ஹமீட்
கலைச்செல்வன்
மானாமக்கின்
ஜவஹர்
மாத்தளைக் கார்த்திகேசு
றொபேர்ட்
அன்ரனிஜீவா போன்ற இந்த இளைஞர் கூட்டம்.
அந்நாடகங்களில் காட்டப்பட்ட துன்பப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட கொழும்பு நகரில் விழிம்பு நிலையில் வாழ்ந்த மக்களது வாழ்வை பெருமூச்சைக் காட்டும் காட்சிகளும் மலைகத் தோட்டடத் தொழிலாளரரின் துயர் நிறைந்த வாழ்வும் கொழும்பு வெள்ளவத்தை வாழ் மத்தியதர வர்க்கத்தினருக்கு பெரும் அதிர்ச்சியைக்கொடுத்தன.
இப்படியும் கொழும்பிலும் மலையகத்திலும் வாழ்க்கையுள்ளதா என அதிர்ந்துபோயினர் பலர்.
காலங்கள் அழுவதில்லை எனும் கார்த்திகேசுவின் நாடகத்தில்தான் நான் முதல் முதல் தப்பொலி கேட்டேன். அந்த ஆரம்பக் காட்சி இன்னும் என் மனதில் நிழலாடுகிறது.
தொழிலாளர்களை காலையில் துயில் எழுப்பும் தப்பொலியுடன் நாடகம் ஆரம்பித்ததாக ஞாபகம்.
மலையகத் தொழிலாளர்களை காலையில் உசுப்பி எழுப்பி வேலைக்கு அனுப்பும் ஒலி அது என தெரிய வந்தது, இவ்வொலியே காமன் கூத்தின் இயக்குவிசை என்பதும் பின்னால் தெரிய வந்தது. மலையகத்தின் பெரு அடையாளங்களில் ஒன்று அது.
காலங்கள் அழுவதில்லை நாடகம் கார்த்திகேசுவுக்கு பெரும் புகழ் ஈட்டிக் கொடுத்த நாடகம். தோட்டத்தொழிலாளரின் துயரம் உரைக்கும் நாடகம் அது. நாடகத்தில் மேடையில் ஒரு கிழவன் துப்பட்டி போர்த்தியபடி படுத்திருப்பான். பின் காலையில் தப்பொலி கேட்க இருமிக்கொண்டே எழுந்திருந்து, ஹரிக்கேன் லாம்பை எடுத்துகொண்டு தடியுடன் எழும்புவான். அந்தக் காட்சியும் கார்த்திகேசுவின் அந்த நடிப்பும் காலம் கடந்தும் மனதில் உறைந்து போயுள்ளது.
அவரது போராட்டம் எனும் நாடகத்தில் சிவப்புப்கொடி தாங்கி நடிகர் சிதம்பரம் தொழிலாளர் கோசமெழுப்பிகொண்டு வந்த காட்சியும் இன்னும் மனதில் உறைந்துபோயிருக்கிறது.
அருமையான ஒரு நடிகரை அதில் அறிமுகம் செய்தார் கார்த்திகேசு. இன்று நாடகம் பற்றிப்பேச நிறையப்பேர் வந்துவிட்டனர், நாடகம் பாடப்பொருளாகி பலருக்கு வழியும் காட்டுகிறது. நாடகத்தால் பட்டம் பெறுவோர், பதவி பெறுவோர் வந்தும் விட்டனர்.
ஆனால் 1960களின் பிற்பகுதியிலும் 1970களிலும் நாடகத்தை மூச்சாகக்கொண்டு கொழும்பின் புற நகர்ப்பகுதிகளில் ஒரு தீவிர நாடகக் கூட்டம் இயங்கியது.
இப்போது அது மறந்து போன கதையாகிவிட்டது.
அந்த இயக்கத்தின் ஒரு பிரதான புள்ளி இன்று நம்மை விட்டுசென்று விட்டது.
கார்த்திகேசு, நாடகம், திரைப்படம், நூல் வெளியீடு இலக்கிய வெளியீடு என பல துறைகளுக்குள் புகுந்து வந்தவர்.
அன்றைய எழுத்தாளர்களில் மிக பெரும்பாலானோர் அவருக்கு மிக வேண்டியவர்களாயிருந்தனர்.
கொட்டான்சேனையில் இருந்த அவரது அந்தச்சிறிய வீடு அனைவரும் இணையும் இடமாக இருந்தது.
மென்மையான மனிதர், இரைந்து பேசமாட்டார். மனம் நோக எதனையும் உரையார். சிரித்துகொண்டே கிண்டலாக கூறிவிடுவார். ஆனால் அவரது மனதுள் ஒரு நெருப்புக் கனன்று கொண்டிருந்ததை நாம் அறிவோம். அந்த நெருப்புக்கனலே மேடையில் கலையாக வெளிவந்தது.
அவரது பேச்சுமுறை கார்த்திகேசுவுக்கேயுரிய பேச்சு முறை. அது அவரது தனிப்பாணி. கொழும்பில் நான் வாழ்ந்த 1972, 1978க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் அவரை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்புக்கிடைத்தது.
நான் யாழ்ப்பாணம் போன பின் அந்தச் சந்தர்ப்பம் கிடைக்கவேயில்லை. நாட்டு நிலைமைகளும் சாதகமாக இருக்கவில்லை. பின்னர் அவரை 1990களுக்கு பின் மீண்டும் சந்திக்கும் வாய்ப்புக்கிடைத்து. அவர் மாத்தளை சென்ற பின் அதுவும் குறைந்து போய்விட்டது. போனிலே தான் உரையாடுவோம். ஒரு முறை மாத்தளை முத்துமாரியம்மன் ஆலைய நிர்வாக ஆதரவில் இராவணேசனை மாத்தளையில் மேடையிட முடியுமா எனக் கேட்டிருந்தார்.
ஆவன செய்தோம் ஆனால் அதற்கான சந்தர்ப்பம் ஏற்படவில்லை.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு வந்தபோது வீட்டுக்கு வந்திருந்தார், அவரை நாடக மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தினேன். ஒரு பயிற்சிப்பட்டறைக்கு அழைத்து அவர் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுகொண்டேன்.
பகிர்ந்து கொண்டார் படமும் எடுத்துகொண்டோம். சாயுங்கால பொழுதில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று அவருக்கேயுரிய சிரிப்போடு கூறினார். அவர் தோற்றமும் சிறிது மாறி இருந்தது.
அண்மையில் விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக நாடக மாணவி ஒருத்தி கார்த்திகேசுவின் நாடகச் செயற்பாடுகள் பற்றி ஆராய்ந்து ஆய்வு நூல் சமர்ப்பித்துள்ளார். அவர் சம்பந்தமாக அந்த மாணவி என்னையும் பேட்டிகண்டார்.
மாத்தளை மாணவி அவர், அவர்தான் நேற்று போன் பண்ணி எனக்கு இந்த இழவுச்செய்தி கூறினார்.
அன்றைய நாடக வரலாறுகளை அறிந்த வரலாறாகவே வாழ்ந்த பலர் ஒவ்வொருவராகச் சென்றுகொண்டிருக்கிறார்கள்.
நெஞ்சில் ஆழப்பதிந்துள்ள தோழனே!
என் நாடக நண்பனே!
சென்று வா. கனத்த இதயத்தோடு வழி அனுப்புகிறேன்..