— என்.செல்வராஜா, நூலகவியலாளர்—
புதிதாக நிர்மாணிக்கப்படும் மட்டக்களப்பு பொதுசன நூலகத்தின் தரைத்தளத்தின் முன் பகுதியில் அமைந்துள்ள நுழைவாயிலான வரவேற்பு மண்டபத்தை ஒட்டியுள்ள இடதுபுற முனையத்தின் பத்திரிகை/ சஞ்சிகைப் பிரிவினையும் (வாசிப்பு மண்டபம்) அதன் சேவைப்பகுதி, பொருத்தமான தளபாடங்கள் ஆகியவற்றை கடந்த ஐந்தாவது தொடரில் குறிப்பிட்டிருந்தேன். இன்று வலதுபுற முனையத்தில் திட்டமிடப்பட்டுள்ள இரவல் வழங்கும் பகுதியைப் பற்றியும் அதன் செயற்பாடுகள் உரிய தளபாடங்கள் பற்றியும் சில கருத்துகளைப் பதிவுசெய்ய முனைகின்றேன்.
நூல் இரவல் வழங்கும் சேவைப் பகுதி
பிரதான நூலகக் கட்டிடத்தின் கீழ்த்தளத்தில் ஒரு பாகத்தை இரவல் வழங்கும் பகுதியாக வடிவமைப்பது பொருத்தமானதாகும். பொழுதுபோக்குக்காக வாசிப்பு அனுபவத்தினைப் பெற்றுக்கொள்ள விரும்பும் பெரும்பான்மையான பொது நூலக வாசகர்கள் வீட்டுச் சூழலில் தமது வாசிப்பு அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளவே விரும்புவார்கள். குறிப்பாக ஜனரஞ்சக இலக்கியங்களை, நாவல்களை வாசிப்பவர்கள், அன்றாடம் நூலகத்திற்கு வந்து பகுதி பகுதியாக ஒரு நூலை வாசிப்பதை விரும்பமாட்டார்கள். நூலகத்தில் செலவிட குடும்பத் தலைவியருக்கு அதிக நேரத்தை ஒதுக்க முடியாது போகலாம். நகரத்திற்கோ, பாடசாலைக்கோ வரும்வேளை, நூலகத்திற்கும் ஒரு தடவை வந்து விரைவாக புத்தகத்தை எடுத்துச் செல்லவும் அதே விரைவில் எடுத்த புத்தகத்தை திருப்பி ஒப்படைத்து விட்டு புதிய புத்தகங்களை எடுத்துச் செல்லவுமே அவர்கள் விரும்புவார்கள். அதனால் இரவல் வழங்கும் பிரிவு பெரும்பான்மையான நூலகங்களில் தரைத்தளத்தில், நூலக நுழைவாயிலுக்கு அருகிலேயே இருப்பதைக் காணமுடியும். மாடிப்படியேறுவதில் சிக்கல் உள்ளவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் தரைத்தளத்தில் இரவல் வழங்கும் பிரிவு இருப்பது மேலும் அனுகூலமாகும். மட்டக்களப்பு பொது நூலகத்தின் இரவல் வழங்கும் பிரிவும் இத்தகைய திட்டமிடலை உள்வாங்கிச் செயற்படுவதே விரும்பத்தக்கதாகும்.
மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் அல்லது மாவட்ட எல்லைக்குள் வசிக்கும் 14 வயதுக்கு மேற்பட்ட பதிவுசெய்யப்பட்ட நூலக அங்கத்தவர்கள் அனைவருக்கும் இரவல் வழங்கும் பகுதியில் நூல்களைப் பெற்றுக்கொள்ள முடியும். இப்பிரிவில் நூல்களை இரவலாக வழங்கலும், மீண்டும் திரும்பப் பெறலும், அங்கத்தவர்களைப் புதிதாகச் சேர்த்தலும், அங்கத்துவத்தை புதுப்பித்தல் செய்தலும், அங்கத்தவர் கோரும் நூல்களை (அது மற்றொரு வாசகரால் ஏற்கெனவே எடுத்துச் செல்லப்பட்ட விடத்து) அதனை ஒதுக்கீடு செய்ய உதவுதலும், வாசகர்களிடம் தண்டப்பணம் பெறலும், திரும்பத் தரத் தாமதமாகும் நூல்களை மீளப்பெறுவதற்கான நினைவூட்டும் கடிதங்களை அங்கத்தவர்கட்கு அனுப்புதலுமான வேறு சேவைகளும்இடம்பெறும். இயற்கை வெளிச்சமும், சுத்தமான காற்றோட்டமும் நூலகத்தில் பரவும் வண்ணம் இறாக்கைகள் யாவும் ஒழுங்குமுறையாக நிரைப்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும்.
இரவல் பெற்றுச் செல்வதற்காக இப்பிரிவில் வைக்கப்பட்டுள்ள நூல்கள் திறந்த இறாக்கைகளில் இருப்பதையே பொதுவாக விரும்புவதுண்டு. அவை தெளிவான வகுப்பாக்கம் செய்யப்பட்டு துறைவாரியாகப் பிரிக்கப்பெற்று தட்டுகளில் ஒரு ஒழுங்கு முறையில் அடுக்கப்பட்டிருக்க வேண்டும். அங்கத்தவரின் வசதிக்காக, அவர்கள் இலகுவாக தமக்குரிய பிரிவில் நூல்களைத் தேடிக்கொள்ளும் வகையில் இறாக்கைகளில் பாடத்துறை குறிக்கும் அட்டைகளும், வகுப்பெண் வழிகாட்டிகளும் வைக்கப்பட வேண்டும் என்பதும் பொதுவான விதியாகும்.
இரவல் வழங்கும்பிரிவில் உள்ள நூல் இறாக்கைகளில் எளிமையான வழிகாட்டிகளையும் சுட்டிகளையும் பொருத்தி வைப்பதால் நூலக ஊழியர்கள் நூல் இறாக்கைகளை பராமரிப்பதில் ஏற்படும் காலவிரயத்தை தவிர்க்கமுடியும். துலக்கமான வழிகாட்டிகளின் மூலம், தமக்கான நூல்கள் இந்த இடத்தில் தான் இருக்கும் என்பதை முன்கூட்டியே வாசகர் அறிந்துகொள்வதால், கண்ட இடத்திலும் தமது தேவைக்குரிய நூலைத் தேடி அலைந்து ஏமாந்து, காலத்தை விரயம் செய்யும் நிலை ஏற்படாது.
இரவல் வழங்கும் பிரிவில் உள்ள நூல்கள் அடிக்கடி நூலக ஊழியர்களால் இறாக்கைகளில் ஒழுங்காக அடுக்கிவைக்கப்படுதல் வேண்டும். நூல் இறாக்கைப் பராமரிப்பு என்பது இரவல் வழங்கும் பிரிவில் மிக அத்தியாவசியமானதாகும்.
‘கோஹா‘ நூலகச் செயலி Koha Library Software
இன்று இலங்கையின் நூலகங்களில் பயன்படுத்தப்படும் ‘கோஹா’ நூலகச் செயலி (Koha Library Software) மட்டக்களப்பு பொதுசன நூலகத்திலும் பயன்படுத்தப்படும் என்ற அனுமானத்தின் பின்னணியிலேயே இக்கட்டுரைத் தொடர் எழுதப்படுகின்றது. புதிய மட்டக்களப்பு பொது நூலகம் போன்ற பிரம்மாண்டமான பொது நூலகமொன்றினை கணனி மயப்படுத்தப்படாத ஒரு நூலகமாகக் கற்பனைசெய்ய முடியாது. எனவே கோஹா பயன்பாட்டின் நுணுக்கங்களையும் தொழில்நுட்பத்தையும் இப்பொழுதே நூலகரும் அவரது சக ஊழியர்களும் ஐயந்திரிபறக் கற்றுத் தேர்ந்து வைத்திருத்தல் முக்கியமானதாகும். நூலகப் பணியாளருக்கான கோஹா நூலகச் செயலியைப் பயன்படுத்தும் பிற நூலகங்களில் முன்கூட்டியே ஒழுங்கு செய்து செயன்முறைப் பயிற்சிகளை வழங்க இப்பொழுதே மாநகரசபையினர் முன்வரவேண்டும்.
கோஹா நூலகச் செயலியின் பயன்பாடு மட்டக்களப்பு பொது நூலகத்தில் ஏற்கெனவே வரையறுக்கப்பட்ட அளவில் இடம்பெறுகின்றது. எனவே முழுமையான பயிற்சி பெறுவதென்பது கடினமானதொன்றல்ல.
கோஹாவின் அண்மைக்கால பதிப்பு Koha 21.05.01 என்பதாகும். இது 24.6.2021 அன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் நூலகங்களில் தற்போது பயன்பாட்டிலுள்ள பதிப்பினை பெற்றுக்கொள்வதால் தொழில்நுட்ப தகவல்களை பரஸ்பரம் சக பிராந்திய நூலகர்களுடன் பரிமாறிக்கொள்ளலாம் என்பதையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இரவல் வழங்கும் பிரிவில் கோஹாவின் பயன்பாடு முக்கியமானதாகும். நூலக ஊழியர்களின் நேரத்தையும், வாசகர்களின் நேரத்தையும் இச்செயலி கணிசமான அளவில் மீதப்படுத்துகின்றது.
ஐரோப்பிய ஆசிய நாடுகளில் இன்று நூல்களை இரவல் பெறுவதும், திருப்பி வழங்குவதும் RFID System எனப்படும் ஒரு இயந்திரத்தின் மூலமே மேற்கொள்ளப்படுகின்றன. அங்கு ஒரு நூலகர் மேற்பார்வையாளராகவே செயற்படுவார். நூல்கள் அனைத்தும் இலத்திரனியல் chip செருகப்பட்டு உரு மறைப்புச் செய்யப்பட்டுள்ளதால் அந்த chipஐ இயந்திரம் வாசித்து கோஹாவுடன் தொடர்பினை ஏற்படுத்தி நூலை குறித்த வாசகரின் பெயரில் கணப்பொழுதில் பதிவுசெய்து விடுகின்றது. பத்து நூல்கள் கூட ஒரே தடவையில் அந்த இயந்திரத்தின் தட்டில் ஒன்றின் மேலொன்றாக அடுக்கிவிட்டால்கூட அது அந்நூல்கள் ஒவ்வொன்றையும் கணப்பொழுதில் மின்வருடல் செய்து அல்லது வாசகரின் பெயரிலிருந்து நீக்கி விடுகின்றது. இலங்கையில் இத்தகைய RFID System எனப்படும் இயந்திரப் பயன்பாடு பற்றி உரிய கோஹா தொழில்நுட்பவியலாளருடன் உரையாடி பொருத்தமான தகவல்களையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் மின்வெட்டு, தொலைத்தொடர்புச் சீர்கெடு ஆகியவற்றின் பாதிப்பு இலங்கையில் பொதுவானதொரு குறைபாடாகக் காணப்படுவதால், வங்கிகளைப் போல, பொது நூலகத்திலும் மின்தடை ஏற்படும் வேளைகளில் தொடர் மின்சார வழங்கலை உறுதிப்படுத்திக்கொள்ளத் தக்க வகையில் மின் பிறப்பாக்கிகளின் பயன்பாட்டை எந்நேரமும் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கவேண்டும்.
கோஹா தொழில்நுட்ப பாவனையில் தொடர் மின்சார வழங்கல் இருக்கவேண்டும். சடுதியான மின்வெட்டுகள் தகவல் (Data) இழப்பை ஏற்படுத்தியும், உபகரணங்களை பழுதடைய வைத்தும் பாரிய பாதிப்பினை ஏற்படுத்தும் வாய்ப்புமுள்ளது. கோஹா செயலியைப் பயன்படுத்தும் சில இடைநிலை நூலகங்கள் முன்னர் பொதுநூலக சேவையில் பயன்படுத்திவந்த நியுவார்க், பிரவுணி போன்ற பாரம்பரிய சேவைகளையும் கைவிடாமல் இன்றும் பயன்படுத்தி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தகுந்தது.
இரவல் வழங்கும் பிரிவில் நூல்களை பராமரித்தல்
இரவல் வழங்கும் பிரிவில் தமிழ் ஆங்கில சிங்கள நூல்களை தனித்தனியாக இடம் ஒதுக்கி வைத்துப் பராமரிப்பது உகந்ததாகும். சில நூலகங்களில் ஒரு துறைக்குள் அடங்கும் மும்மொழி நூல்களையும் நூலக ஊழியரின் இலகுவான பராமரிப்பு வசதிக்காக ஓரிடப்படுத்தி வைத்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. சிறிய நூலகங்களில் இடப்பற்றாக்குறை காரணமாக இந்த நடைமுறையினை பின்பற்றுவதுண்டு. மட்டக்களப்புப் பொதுசன நூலகத்தின் ஒரு முழு முனையமே இரவல் வழங்கும் பிரிவுக்காக ஒதுக்கப்பட்டிருப்பதால் தரைத் தளத்தை புத்திசாலித்தனமாகத் திட்டமிட்டு உரிய இடஒதுக்கீட்டினை மேற்கொண்டால் இடப்பிரச்சினை ஏற்படமாட்டாது.
இரவல் வழங்கும் பிரிவில் அலுமாரிகளில் நூல்களை வைத்திருப்பதை தவிர்க்கவேண்டும். முழுமையான திறந்த இறாக்கைகள்/ நூற்தட்டுகளை அழகியல் உணர்வுடன் இப்பிரிவில் வாசகர்களுக்காக பராமரிக்க வேண்டும். இப்பிரிவில் உள்ள ஜன்னல்கள் நேரடிச் சூரிய ஒளியை புத்தக இராக்கைகளில் பாய்ச்ச அனுமதிக்கக்கூடாது. மெல்லிய திரைச்சீலைகள் பயனுள்ளதாக இருக்கும். நூல்களை ஜன்னல்களின் ஊடாக வெளியே கடத்தும் வாய்ப்பினை வழங்க இடமளிக்கக் கூடாது. இதற்கான பாதுகாப்புத் திட்டமொன்றை வகுத்து நூலக ஊழியர் செயற்படவேண்டும்.
இரவல் வழங்கும் பிரிவின் நூலகத் தட்டுக்கள் நாள்தோறும் ஒழுங்குபடுத்தப்படல் வேண்டும் என்பதை முன்னரும் குறிப்பிட்டிருந்தேன். அதிகமான வாசகர்கள் கையாளும் பிரிவு என்பதால் எப்போதும் குழம்பிக்கிடப்பது நூலக ஊழியருக்கு சலிப்பை வரவழைக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. மேலும் திறந்த இறாக்கைகள் என்பதால் தூசு படிந்துகொள்ளும் வாய்ப்பும் அதிகம். எனவே இப்பிரிவில் உள்ள புத்தகத் தட்டுக்கள் அடிக்கடி பேணப்படவேண்டும். ஆங்கிலத்தில் இதனை Shelf Management என்பார்கள். இப்பிரிவின் பகுப்பாக்கம் தூவி தசாம்சப் பகுப்பிலக்க ஒழுங்கில் காணப்பட்டாலும், அதிகம் வாசகர்களால் பயன்படுத்தப்படும் இலக்கியப் பிரிவில் சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், கட்டுரைகள் என்பன அந்தந்தப் பிரிவுகளின் கீழ் ஆசிரியர் பெயர் ஒழுங்கில் அடுக்கி வைப்பது கூடிய பயன்பாட்டைத் தரக்கூடும்.
நூலகத்துக்கு வரும் சில வாசகர்கள் தட்டிலிருந்து ஒரு நாவலை எடுத்து மேலோட்டமாக வாசித்துப்பார்த்து பிடித்திருந்தால் இரவலாக எடுத்துச் செல்வார்கள். அத்தகைய வாசகர்களின் பயன்பாட்டுக்காக இப்பிரிவில் வசதியான சில இருக்கைகள் இடம்பெறவேண்டும். நூலகரின் வரவேற்பு பகுதியை அண்டி ஆங்காங்கே இவ்விருக்கைகளை வைக்கலாம்.
இரவல் வழங்கும் பிரிவுக்கான நூலீட்டல்
இரவல் வழங்கும் நூலகப் பிரிவுக்கான நூல்கள் பெரும்பாலும் அன்பளிப்பாக கிடைத்துவரும் மேலதிகமான ஜனரஞ்சக நூல்களாக இருப்பது வழமை. பெரும் பகுதி ஆங்கில நூல்களாகவும் சிறுபகுதி நூல்கள் மட்டுமே தமிழ் நூல்களாகவும் இப்பகுதியில் இடம்பெறுவது இலங்கையில் தமிழ்ப் பிரதேசங்களில் பொதுவான ஒரு நிகழ்வாகும். தமிழ் நூல்களுக்கான கேள்வியினைப் பூர்த்திசெய்ய முடியாதவிடத்து நிதி ஒதுக்கீட்டினைச் செய்து வாசகர்களை ஆற்றுப்படுத்த வேண்டியது நூலகருக்கு எப்பொழுதும் சவாலானதொரு விடயமாகவே காணப்படும். தமிழ் நூல்களைக் கொள்முதல் செய்யும் நடவடிக்கைகள் ஆண்டுதோறும் மேற்கொண்டுவந்த போதிலும் ஈழத்துச் சந்தையில் தமிழ் நூல்களுக்கும் பற்றாக்குறை இருப்பதனால் தமிழகத்திலிருந்து நூல்களை அதிக விலைகொடுத்து கொள்வனவு செய்ய வேண்டிய நிலையில் நாம் உள்ளோம்.
இன்று இந்தியாவிலிருந்து தமிழ் நூல்களை இறக்குமதி செய்யும் தமிழ் நூல் விற்பனையாளர்கள் தாம் சார்ந்தியங்கும் இலங்கையின் நூல் இறக்குமதியாளர் சங்கத்தின் அனுமதியுடன் இறக்குமதி நாணயப் பெறுமதியை 4.5 மடங்காக உயர்த்திவைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு பெருமெண்ணிக்கையில் நூல்கள் கொள்வனவு செய்வதால் கிட்டும் தமிழகப் பதிப்பாளர்கள் வழங்கும் வர்த்தகக் கழிவை வாசகருடன் பங்கிட்டுக்கொள்வதில்லை. இதை இன்னும் தெளிவாகச் சொல்வதானால், இந்திய ரூபாவில் 100 ரூபா பெறுமதியானதொரு நூல் இலங்கையில் புத்தகக் கடைகளில் கொள்வனவு செய்வதாயின் 450 இலங்கை ரூபாவுக்கே வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது. அதனை அவர் 40 சதவீதக் கழிவில் 60 ரூபாவுக்கே வாங்கியிருக்கக்கூடும். ஏற்றுமதிச் செலவு, கப்பல் செலவு என்று விலை அதிகரிப்பை வழமைபோல தமது பக்க நியாயமாக இறக்குமதியாளர்கள் பார்க்கிறார்கள்.
இந்திய ரூபா 100இன் இன்றைய இலங்கை நாணயப் பெறுமதி 267 ரூபாவாகும் (27.07.2021 அன்றுள்ளபடி). வானளாவி உயர்ந்து நிற்கும் இந்த விலை உயர்வினை சமாளிக்கும் வகையில் இந்திய பதிப்பகங்களிடமிருந்து நேரடியாகவே நூலகத்திற்கான நூல்களை கொள்வனவு செய்வது பற்றிச் சிந்திக்க வேண்டியுள்ளது. மேலும், தமிழகத்தில் 30-40 வீதம் வர்த்தகக் கழிவும் வழங்குகின்றார்கள் என்பதால் கொள்விலை மேலும் குறையலாம். அங்கு வருடாந்தம் இடம்பெறும் புத்தகச் சந்தைகளில் மலிவு விலையில் நல்ல நூல்களை பெற்றுக்கொள்ளலாம்.
இலங்கையில் இயங்கும் அரச சார்பற்ற தொண்டர் தாபனங்கள் பொதுநூலகங்களுக்கு நன்கொடையாகவும் நூல்கள் மற்றும் தளபாடங்கள் வழங்கும் நடைமுறையும் காணப்படுகின்றது. நூலகப் பொறுப்பாளர், ஆணையாளரின் அனுமதியுடன் இந்த அமைப்புகளுடன் தொடர்பினை ஏற்படுத்தி அவர்களின் மூலமாக தமிழகத்திலிருந்து தமிழ் நூல்களை இலவசமாகப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. யாழ்ப்பாணப் பொது நூலகத்தின் இரவல் வழங்கும் பிரிவிற்கான புத்தக இறாக்கைகளை யாழ். கிறிஸ்தவ சங்கத்தினர் நன்கொடையாக வழங்கியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. இலங்கையில் இயங்கும் யூ.எஸ். எய்ட், கிறிஸ்டியன் எய்ட், ரூம் டு ரீட், ஏசியா பவுண்டேஷன், லிட்டில் எயிட் போன்ற அரச சார்பற்ற தொண்டர் அமைப்புகளை அணுகியும் இரவல் வழங்கும் பிரிவுக்கான நூல் மற்றும் தளபாடத்திற்கான நன்கொடைகளைப் பெற முயற்சி செய்யலாம். அதற்கான நடவடிக்கைகளை இப்பொழுதே ஆரம்பிக்க வேண்டும். தாகம் எடுக்கும் வரை தண்ணீர் பற்றிய சிந்தனையே இல்லாதிருப்பது நல்லதல்ல.
(தொடரும்)