— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —
அண்மைக்காலமாகத் தமிழ் அரசியல் கட்சிகளை ஒற்றுமைப்படுத்தும் விடயமாக ‘ரெலோ’ எடுத்துவரும் முன்னெடுப்புகளின் ஒரு கட்டமாக 16.07.2021 அன்று யாழ்ப்பாணத்தில் ‘ரெலோ’த் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ‘புளொட்’ தலைவர் சித்தார்த்தன், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், ஸ்ரீகாந்தா, சிவாஜிலிங்கம் ஆகியோர் சந்தித்துப் பேசியுள்ளனர்.
இச்சந்திப்புப் பற்றிச் செய்தி வெளியிட்டுள்ள தமிழ் ஊடகங்கள் தமிழ்மக்கள் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளான ஈபிஆர்எல்எஃப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் முன்னணித் தலைவர்களான ஸ்ரீகாந்தா, சிவாஜிலிங்கம் எனும் சாரப்படவே குறிப்பிட்டுள்ளன.
இங்கேதான் குழப்பமாய் உள்ளது. கடந்த பாராளுமன்றப் பொதுத்தேர்தலின் போது ஈபிஆர்எல்எஃப் தனது பெயரைத் ‘தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி’ யென்று மாற்றியும் தனது முன்னைய ‘பூ’ச் சின்னத்தை ‘மீன்’ சின்னமாக மாற்றியும்தான் அக்கட்சியில் தமிழ்த் தேசியக் கட்சியைச் சேர்ந்த ஸ்ரீகாந்தா, சிவாஜிலிங்கம் ஆகியோரும் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தலைவர் அனந்திசசிதரன், தமிழ் மக்கள் கூட்டணித் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களும் அவர்களுடன் சேர்ந்து சுரேஷ் பிரேமச்சந்திரனும் போட்டியிட்டனர்.
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி (பெயர் மாற்றம் பெற்று ஈபிஆர்எல்எஃப்) ஒரு தனிக்கட்சியே தவிர அது பங்காளிக் கட்சிகள் இணைந்த ஓர் அரசியல் கூட்டணி (POLITICAL ALLIANCE) அல்ல. இக்கட்சியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன். செயலாளர் சிவசக்தி ஆனந்தன். இக்கட்சியில் சுரேஷ் பிரேமச்சந்திரனின் பதவி என்னவென்று தெரியவில்லை. இப்போது ஈபிஆர்எல்எஃப் என்ற பெயரில் தேர்தல்கள் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியொன்று இல்லை. அதுதான் ‘தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி’ எனப் பெயர் மாற்றப்பட்டுவிட்டதே. தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி என்பது ஒரு தனிக்கட்சியாகும். எனவே, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியைத் தமிழ் ஊடகங்கள் தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்த் தேசியக் கட்சி, ஈழத் தமிழர்சுயாட்சிக் கழகம் மற்றும் (இல்லாத) ஈபிஆர்எல்எஃப் இணைந்த ஓர் அரசியல் கூட்டணியாகக் (Political Alliance ஆகக்) குறிப்பிடுவது தவறானதாகும்.
மட்டுமல்லாமல், சி.வி.விக்னேஸ்வரனைத் தலைவராகக் கொண்ட தமிழ் மக்கள் கூட்டணியும், ஸ்ரீகாந்தாவைத் தலைவராகக் கொண்ட தமிழ்த் தேசியக் கட்சியும், அனந்தி சசிதரனைத் தலைவராகக் கொண்ட ஈழத் தமிழர்சுயாட்சிக் கழகமும் புதிதாக உருவானகட்சிகள். இவை தேர்தல்கள் திணைக்களத்தினால் இன்னும் அரசியல்கட்சிகளாக அங்கீகரிக்கப் பெறாதவை. தேர்தல் விதிகளின்படி ஒன்றுக்கு மேற்பட்ட ‘அங்கீகரிக்கப்பெற்ற’ அரசியல் கட்சிகள்தான் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினூடாக இணைந்து அரசியல் கூட்டணியொன்றினை (POLITICAL ALLIANCE) ஏற்படுத்தலாம். ஆனால் இங்கு அவ்வாறில்லை.
இந்த ‘இடியப்பச் சிக்கல்கள்’ ஒருபுறமிருக்க, தற்போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளாக உள்ள ‘ரெலோ’வும் ‘புளொட்’டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு விலகிவந்து உத்தேச புதிய ‘ஒற்றுமை’க் கூட்டணியை உருவாக்கினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் எஞ்சியிருக்கும் பங்காளிக் கட்சியான தமிழரசுக் கட்சி தனித்து விடப்பட்டு இயங்கும். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்னும் பெயர்ப் பலகையைத் தாங்கியுள்ள அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ் இவர்கள் எவருடனும் கூட்டுச்சேராது ‘இரு தேசங்கள் ஒரு நாடு’ கொள்கையுடன் தனித்துத்தான் இயங்கும். இப்போதும் அது எவருடனும் கூட்டுச் சேராமல் தனித்துத்தான் இயங்குகிறது. உண்மையில் இதுவும் ஒரு கூட்டணி (ALLIANCE) அல்ல. தனிக்கட்சிதான்.
சில மாதங்களுக்கு முன்னர் தமிழரசுக் கட்சித் தலைவராக மாவை சேனாதிராசாவும் தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமைக் கூட்டணியொன்றை ஏற்படுத்த முயற்சித்து அந்த முயற்சிக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளபோது அதற்கு வெளியே வேறொரு கூட்டணி (ALLIANCE) தேவையில்லையென்று கூறி ‘ஆப்பு’ வைத்தார்.
இப்போது அண்மையில் கூடிய தமிழரசுக் கட்சியின் செயற்குழு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வெளியே புதிய அரசியல் கூட்டணியொன்று தேவையில்லை என்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகிச்சென்றவர்கள் எவரும் மீண்டும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் (தமிழரசுக் கட்சியுடன்) வந்து இணைந்து கொள்வதற்குத் தடையேதுமில்லையென்றும் தீர்மானங்களை நிறைவேற்றி ‘ரெலோ’வால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஒற்றுமை முயற்சிக்கும் ‘ஆப்பு’ வைத்துள்ளது. ‘ரெலோ’வினால் முன்னெடுக்கப்படும் ‘ஒற்றுமை’ முயற்சியின் ஆரம்பக்கட்டத்தில் கலந்துகொண்ட மாவை சேனாதிராசா தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்தாலும் கூட தீர்மானங்களை எடுப்பதில் அவர் ஒரு ‘செல்லாக்காசு’ தான்.
2001இல் தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பின்னாளில் பிரிந்து வந்தவைதான் சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான முன்னைய ஈபிஆர்எல்எஃப் உம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் உம்.
அதேபோல், தமிழரசுக் கட்சியிலிருந்து விலகி வந்து தனிக்கட்சி அமைத்தவர்கள்தான் தமிழ் மக்கள் கூட்டணி தலைவர் சி.வி.விக்னேஸ்வரனும் ஈழத் தமிழர் சுயாட்சிக்கழகத் தலைவர் அனந்தி சசிதரனும்.
அதேபோல், ‘ரெலோ’வில் இருந்து விலகி வந்து தமிழ்த் தேசியக் கட்சி எனும் புதிய கட்சியை அமைத்தவர்கள்தான் ஸ்ரீகாந்தாவும், சிவாஜிலிங்கமும்.
இந்தச் சீத்துவத்தில் கட்சிகளையெல்லாம் ஒன்று சேர்க்கும் முயற்சி வெறும் ‘முயற் கொம்பு’ தான். அப்படி ஒன்று சேர்ந்தாலும்கூட திசைமாறிப்போய் தடம்புரண்டு தேங்கிக்கிடக்கும் தமிழ்த் தேசிய அரசியலின் அடிப்படை வர்க்கக்குணாம்சமும்- யாழ் மேலாதிக்கக் கூறுகளும்- குறுந்தமிழ் தேசியவாத மனப்போக்கும்- தேர்தலை மட்டுமே மையமாகக் கொண்ட செயற்பாடுகளும் மாறாதவரை எந்தக் கூட்டுகளும் வெற்றியளிக்கப் போவதுமில்லை.
தற்போது தமிழ்த் தேசிய அரசியலில் அதன் பலம் மற்றும் பலவீனங்களுக்கும் அப்பால், இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் (தமிழரசுக் கட்சியும்) ,கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் (அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின்), சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி எனும் பெயர் மாற்றம் பெற்ற ஈபிஆர்எல்எப் உம்தான் ‘தமிழ்த் தேசியக் கட்சிகள்’ எனக் குறி சுட்டுக்கொண்டு வலம்வரும் மூன்று பிரதான அணிகளாகும்.
‘ரெலோ’வின் ஒற்றுமை முயற்சி கைகூடினால்கூட அதன் ஒட்டுமொத்த விளைவு என்னவாயிருக்குமெனில், தமிழரசுக்கட்சி தனித்தியங்கும். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் (அகிலஇலங்கைத் தமிழ்க் காங்கிரசும்) தனித்தியங்கும். ‘ரெலோ’ ‘புளொட்’ சி.வி.விக்னேஸ்வரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், ஸ்ரீகாந்தா, சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் ஆகியோரின் இந்த உத்தேச புதிய ‘ஒற்றுமை’க் கூட்டணி தனியாக இயங்கும். ஆக மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக- பழைய குருடி கதவைத் திறடி என்பதுபோல் இந்த மூன்று அணிகளுமே’ தமிழ்த் தேசியக் கட்சிகள்’ என்று குறி சுட்டுக்கொண்டு தமிழ்த் தேசிய அரசியலில் மீண்டும் பவனி வரப்போகின்றன. இதனால் எந்த மாற்றங்களும் ஏற்படப் போவதில்லை. கட்சிகளும் தலைவர்களும் இடம்மாறுவார்கள். அவ்வளவுதான்.
வரலாற்றில் தமிழ்க் காங்கிரஸ் கட்சியிலிருந்து தமிழரசுக்கட்சி பிரசவமாகி பின் இரண்டும் இணைந்து ஒற்றுமைக் கூட்டணியாக தமிழர் விடுதலைக் கூட்டணி மலர்ந்து இறுதியில் இப்போது பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கு ஆகிய கதையாகதமிழ் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி என மூன்று கட்சிகள் தனித்தனியாக இயங்கிகொண்டிருக்கின்றன. அதாவது இரண்டு கட்சிகளை ஒன்றாக்கப்போய் மூன்று கட்சிகளாகின. இந்த அனுபவப் பாடமும் தமிழ் மக்களுக்கு உண்டு.
மட்டுமல்லாமல், நான்கைந்து வருடங்களுக்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சித்துக் கொண்டு அதன் தவறான அரசியல் போக்குகளைச் சுட்டிக்காட்டிக் கொண்டு ஒரு மாற்றுவழியாகத் தோற்றம் பெற்ற ‘தமிழ் மக்கள் பேரவை’ பலத்த ஆரவாரத்துடன் எழுந்து ‘எழுக தமிழ்’ கொண்டாடிப் பின்னர் இருந்த இடம் தெரியாமல் இல்லாமற்போய்விட்டது. தமிழ் மக்களுக்கு அதுவும் இன்னொரு அனுபவம்.
கடந்த வருடம் (2020) அக்டோபர் மாதம் ‘தமிழ்த் தேசியக் கட்சிகள்’ என்று தம்மைத்தாமே குறி சுட்டுக்கொண்ட பத்துக் கட்சிகள் கூடி ‘ஒற்றுமை’ முயற்சியை முன்னெடுத்தன. அதற்கு என்ன நடந்ததென்று தெரியவில்லை. 16.07.2021 கூட்டத்தில் கலந்துகொண்ட சுரேஷ் பிரேமச்சந்திரன் முன்னைய பத்துக் கட்சிகள் கூட்டிய ‘ஒற்றுமை’ முயற்சியைத்தான் தொடர வேண்டுமென்று கேட்டுள்ளார். இக்கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தாவும் இதே நிலைப்பாட்டில்தான் உள்ளார். ஆகவே ‘ரெலோ’வின் ஒற்றுமை முயற்சியும் இடையில் நிற்கும் போல்தான் தெரிகிறது. இப்படி இந்த ‘ஒற்றுமை’ முயற்சிகளெல்லாம் எப்போதும் இழுபறி நிலையில்தான் உள்ளன.
எனவே, தமிழர்களின் அரசியல் பொது வெளியில் செயற்படுகின்ற அனைத்துப் பதிவு செய்யப்பட்ட /பதிவு செய்யப்படாத தமிழ் அரசியல் கட்சிகளும் தத்தம்கொள்கைகள் மற்றும் கோட்பாட்டு முரண்பாடுகள், கருதுகோள்கள், எடுகோள்கள், சின்னம், கொடி, தலைமைத்துவ ஆசைகள், தனித்துவங்கள் என்று தம்மால் கருதப்படுபவை மற்றும் தேர்தல் இலக்குகள் என்பவற்றையெல்லாம் ஒருபுறம் மூட்டைகட்டி வைத்துவிட்டு, மக்களுக்காக ஒரு நடைமுறைப் பொது வேலைத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் பதின்மூன்றாவது அரசியல் சட்டத்திருத்தத்தை முழுமையாக அமுல் செய்வதென்ற ஒற்றைப் பரிமாண வேலைத்திட்டத்தின் கீழ் ஒன்றுபடுவார்களாயின் அதுதான் பலனளிக்கக் கூடியது. தமிழ்க்கட்சிகளின் ஒற்றுமைக்கான நல்ல ஆரம்பமாகவும் இது இருக்கும். மற்றப்படி தமிழ்க்கட்சிகளின் ஒற்றுமைக் கூட்டணி என்பது ஆண்டிகள் கூடி மடம் கட்டியது மாதிரித்தான்.