அகரன் வைத்த ‘புள்ளிகளால்’ நான் வரைந்த கோலம்

அகரன் வைத்த ‘புள்ளிகளால்’ நான் வரைந்த கோலம்

   — அசுரா — 

இலக்கியப் பகுதியாக அரங்கத்தில் வெளிவரும் சிறுகதைகளில் அகரனின் ஒன்பது சிறுகதைகளையும், முருகபூபதி, சபீனா சோமசுந்தரம், பாடும்மீன் சு.ஸ்ரீஸ்கந்தராசா, படுவான் பாலகன், செங்கதிரோனின் நீதிக்-குறுங் கதைகளையும் வாசித்து வந்தேன். தொடருகின்றேன்.  

அகரன் தான் சொல்லும் கதைகளுக்காக கட்டமைக்கும் புறநிலை அரண் (அழகு)தான் இந்த பதிவிற்காக என்னை நகர்த்திக் கொண்டிருப்பது, அவை ‘அரங்கத்தில்’ கதை சொல்லும் பிற படைப்பாளிகளிடமிருந்து வேறுபடுகிறது. அகரனை முன்நிலைப்படுத்தி நான் எழுதுவதென்பது அரங்கத்தில் கதை எழுதிவரும் மற்றையோரை எவ்வகையிலும் குறைத்து மதிப்பிடும் நோக்கம் அல்ல. இது எனது வாசிப்பின் தொடர்ச்சியாக எனக்குள் நிகழ்ந்துவரும் நீட்சியாகும். தீவிர வாசிப்பிற்கான முயற்சியில் ஈடுபட்டுவரும் அனைவராலும் இதனைப் புரிந்து கொள்ளமுடியும்.  

இலக்கிய வாசிப்பின் அனுபவத்தில் ‘மன இறுக்கம்’ தளர்ந்து ஒத்துணரும் வாசிப்புப் பயணம் நிகழும்போது கதைகள் தன்னை ரசிக்கத்தூண்டும். கதைகள் ரசிக்கப்படும்போதே, கதைகளானவை தமது மறைபொருளை வெளிப்படுத்தும். அதனூடாக வாசகன் பெறும் தரிசனக் காட்சிகளுக்கு எல்லையில்லை. வாசகர்களுக்கிடையிலும் வேறுபடும். பன்முக அனுபவங்களையும் தேடலையும் தொடர்ச்சியாக மேற்கொள்ளும் படைப்பாளி ‘வைப்பதெல்லாம்’ வெறும் புள்ளிகளே. அப்புள்ளிகள் ஒவ்வொன்றையும் தொடுத்து அழகிய கோலம் போடும் வாய்ப்பை பெற்றவர்களே தீவிர வாசிப்பை நோக்கி நகரமுடியும். 

‘அரங்கத்தில்’ இலக்கியப் பகுதிக்காக முதல் புள்ளி வைத்தவராக எமது மூத்த ஊடகவியலாளர் முருகபூபதி எழுதிய ‘கொரோனா கால உறவு’ எனும் சிறுகதையை அவதானிக்க முடிகிறது. சபீனா சோமசுந்தரம் எழுதிய கதைகளில் ‘அரைப்போத்தல் கள்ளு’, அதேபோன்று பாடும்மீன் சு.ஸ்ரீஸ்கந்தராசா எழுதிய கதைகளில் ‘எனக்காகவா நான்’ போன்ற கதைகளின் உள்ளடக்கம் சமூகப்பார்வையும், மனித அருவ-மனங்களை சித்தரிக்கும் முயற்சியைக் கொண்டிருக்கிறது. இதுபோன்ற கதை சொல்லும் அனுபவத்தை எனது வாசிப்பின் ஆரம்பம் எனக்களித்ததென்பதும் உண்மை. எனவே அவ்வாறான கதை சொல்லும் விதமும் சில வாசகர்களோடு நெருக்கமாவது நிகழும். இவ்வாறான கதை சொல்வதில் உள்ள அழகியல் அம்சம் என்பது எனக்கு ஒற்றைப் புள்ளியாகத் தெரிகிறது. ஒற்றைப்புள்ளியிலிருந்து கோலம் போடுவதென்பது இயலாத காரியம்.  

‘காதல் நிலவு ஊர் திரும்ப 45000 ஆண்டுகள்’ எனும் கதையே ‘அரங்கத்தில்’ அகரன் எழுதிய முதல் கதையாக அறியமுடிகிறது. புகலிட இலக்கியப் படைப்பாளிகளின் ஆரம்பம் தமது தாயகத்து நினவுப் புலம்பல்களாகவும் ஏக்கங்களாகவுமே சித்தரிக்கப்பட்டது. அகரனின் படைப்பு மனம் புகலிடவாழ்வின் அனுபவத்தோடும், தாயகத்தை பின்னிப் பிணைத்தே படர்ந்து செல்கிறது. கீழத்தேய பண்பாட்டோடும் கலாசாரத்தோடும் ஜரோப்பா வந்த தாசன் கலாசார பண்பாட்டு அதிர்ச்சிகளை எதிர்கொள்கின்றான். ‘எதெற்கெடுத்தாலும் தாசன் ஆங்கிலத்தில் பேச முற்பட்டான். ஒரு நாள் அவள் உதடுகளால் கொடுத்த அறையிலிருந்து ஆங்கிலத்தில் பேசுவதை கைவிட்டான்’. என சொல்வதில் மறைந்திருக்கும் பொருள் வாசகரை இரண்டு திசைக்கு திருப்புகிறது. அவள் வாய்திறந்து அவனை திட்டியிருக்கலாம். அல்லது உதடுகளால் முத்தம் கொடுத்து அவன் ஆங்கிலம் பேசுவதை தடுத்திருக்கலாம். ‘பஸ்கலின் சோவியத் யூனியனிலிருந்து உடைந்த நிலத்தை பூர்வீகமாகக் கொண்ட உடையாத நிலவு அவள்’. இவ்வாறு பஸ்கலின் எனும் மேற்குலகப் பெண்ணுக்கும் தாசனுக்குமான புகலிட உறவை சித்தரிப்பதோடு இரண்டு நாட்டவர்களின் அரசியல் நெருக்கடிகளையும் வாசகர்கள் தரிசிக்க முடிகிறது. அணு உடைவுக் கசிவினால் விஞ்ஞான அகதிகளாக வாழ்ந்தவர்கள் பஸ்கலினது பெற்றோர்கள். தாசனும், பஸ்கலினும் உணவு விடுதியில் வேலை பார்க்கும் இரண்டு அகதிகள். பண்பாட்டு கலாசார வேறுபாடுகளால் வளரந்தவர்கள். தாசனோ ‘சம வயது பெண்களோடு பேசினாலே பிள்ளை வந்துவிடும் என்ற அசையாத நம்பிக்கை கொண்டவன்’. பஸ்கலின் தனது விடுதிக்கு அழைக்கும்போது அவன் பதறுகின்றான் தயங்குகின்றான் ‘பால் கறப்பதற்கு கன்றை இழுத்துக்கட்டுவதுபோல அவனை இழுத்துக்கொண்டு போனாள். அவன் உள்ளங்காலும் வியர்த்தது’. என கீழத்தேய மேற்கத்தைய பண்பாட்டு அருவ-மனங்களை அகரன் போடும் வார்த்தைப் புள்ளிகளால் தரிசிக்க முடிகிறது. தாசன் தனது நாட்டின் யுத்தக் கதைகளை பஸ்கலினோடு பகிர்ந்து கொள்கிறான். அவளது கதைகளையும் தாசன் அறிந்து கொண்டான். ‘உன் போராளிகளால் வெற்றி பெற்றால் நீ சென்றுவிடுவாயா?’ ….‘ஒரு நாள் உன் நிலத்தை நீ அடைவாய்’ என அவள் சொன்னபோது தாசனால்‘நீயும் ஒரு நாள் உன்னிலத்தை அடைவாய் என்று சொல்ல முடியவில்லை. ஏனெனில் அவள் செர்ணோபின் செல்வதானால் 45000 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.’ என்பதாக இந்தக் கதையை முடிவுக்கு கொண்டுவரும் படைப்பாளியின் மனதின் முதலிடம் தன் ‘தேசம்’ கடந்து பரவுகிறது. நேசிக்கிறது. அணு உலை உடைந்து காற்றில் கலந்துவிட்ட விஷம் அகல அத்தேசத்திற்கு 45000 ஆண்டுகள் தேவைப்படுகிறது. தாசன் ஏங்குகின்றான் என் தேசத்திற்கு நான் போய்விடுவேன். அவள் 45000 ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமே என…!  

வரலாற்று சித்தரிப்புக்களோடும் குறுந்தொகை, புறனாநூறு போன்ற எமது தமிழ் தொன்ம இலக்கியச் ‘சாரல்களை’ தூவிச்செல்லும் அகரனின் படைப்புலகம் மூத்த இலக்கியப் படைப்பாளியான அ.முத்துலிங்கத்தை என் முன்னால் நிறுத்துகிறது. கர்ணன் தனது கவசகுண்டலத்தை பிய்த்து பிடுங்கிக் கொடுத்தது போன்று தனது அசையும், அசையா சொத்துக்கள் அனைத்தையும் (மொழி, நுட்பம், அங்கதம், வரலாற்றிலிருந்து பெறும் அனுபவம், தொன்ம இலக்கிய ஆர்வம்-பயிற்சி) அ.முத்துலிங்கம் அகரனுக்கு வழங்கிவிட்டாரா எனவும் நிதானித்தேன்.  

 அதனால் வெறுமனே அகரன் அ.முத்துலிங்கத்தை பிரதிபண்ணுகின்றார் என்பதல்ல. அ.முத்துலிங்கம் போன்ற இலக்கிய படைப்பாளிகளே மொழியை வாடவிடாது  ஊன்றித் தழைக்கச் செய்து வருபவர்கள். உருவக-உவமை, கற்பனைச் சித்தரிப்பின் உரங்கள் தூவி- மொழியை சடைத்து வளர்த்து வருபவர்கள். அதற்கு அவர்கள் எமது தொன்மத்தை, வரலாற்றை அரவணைத்து செல்வதோடு, அவைகளை மறுவார்ப்பு செய்வதன் ஊடாக மொழியை வேறொரு பரிமாணத்தில் தரிசிக்க தூண்டுகின்றார்கள். இந்த உதாரணத்திற்கு இங்கே நான் ஜெயமோகனை கடந்து பேசமுடியாது. அவரது ‘வெண்முரசு’ நாவலின் நான்காவது தொகுப்பான ‘நீலம்’ நாவல்  வாசித்து, உறைந்த பனிப்பாறைபோல் அது எனக்குள் குளிர்ந்து கொண்டிருக்கிறது. அது புத்தகம் அல்ல. சொல் விளையும் நிலம் என்பேன். அந்த சொல் விளையும் நிலத்தில் பல வண்ணங்களில் புதிது புதிதாக சொற்கள் பூத்துக் குலுங்குவதை காணலாம். நான் ‘விழையும் வரம்’ என்பது என் ‘ஆயுள்-நூல்’ அறுந்து போகும்முன் வெண்முரசின் 26 தொகுப்பையும் வாசித்து முடிக்க வேண்டும் என்பதே. ‘முதற்கனல்’ ’மழைப்பாடல்’ ‘வண்ணக்கடல்’ ‘நீலம்’ இப்போ ‘பிரயாகை’யை ஏந்தியிருக்கின்றேன். 21 ‘வெண்முரசு’கள் இன்னும் நான் ஊதக் காத்திருக்கிறது.  

அகரனின் படைப்பு நிலத்திலும் சொற்கள் தழைக்கும் வாய்ப்பிருக்கிறதாகவே உணருகின்றேன். அரசியலை, தத்துவங்களை துருத்தி நிற்கும் படைப்புகளல்ல அகரனின் படைப்புக்கள். அவரது படைப்புலகம் அழகியல்-ரசனை சூழ்ந்து பின்னப்படுகிறது.  

படைப்பாளிகள் தமது படைப்புக் களமானது ஒரு அரசியல் தத்துவ துண்டுப்பிரசுரம் என வாக்கு மூலம் அளிப்பது அவர்களது படைப்புலகக் கற்பனை வளத்தை சிதைத்துவிடும் என்றே நான் கருதுகின்றேன். படைப்பின் நோக்கமாக, வெளிப்பாடாக தத்துவங்களும் அரசியல்  கோட்பாடுகளுமே பிரதானமாக கருதும் ஒரு படைப்பாளியால் ‘பேரிலக்கிய’ வாசலைத் திறந்துவிட முடியாது என்பது எனது வாசக அனுபவம். 

ஒரு சிறந்த படைப்பாளியின் ஆளுமையினால் அவனுக்கு பல ‘திசைகளிலிருந்தும் அழைப்புகள்’ இயல்பாக வந்து சேரும். ‘அழைப்பிற்காக’ தமது படைப்பை உபயோகிக்க முனையும் படைப்பாளிகள் தம்மை மேம்படுத்திக்கொள்வது சிரமமாகும். 

‘ஓய்வு பெற்ற ஒற்றன்’ இளம் சிங்க பண்டாரம்’ எனும் கதைகள் பிரரன்ஸ் அரச வரலாற்றுத் துளிகளாலும், யாழ்ப்பாண தமிழ் இராச்சிய வரலாற்றோடும் சித்தரிக்கப்பட்ட சிறந்த புனைவுகள். ‘அரங்கத்தில்’ நான் வாசித்த அகரனின் ஒன்பது சிறுகதைகளில் ‘போன வடை’ ‘குற்றமும் தண்டனையும்’ ‘எல்லோருக்கும் பிடித்தவன்’ போன்ற கதைகள் எனக்குள் ஏற்படுத்திய தாக்கத்தை மேலும் இங்கே விபரிக்க விரும்புகின்றேன்.  

‘போன வடை’ கதை எனக்கு சோபாசக்தியின் ‘வெள்ளிக்கிழமை’ கதையை மீள நினைவுக்கு கொண்டு வந்தது. அந்தக் கதையின் நினைவுத் தருணம் என் உணர்வுகளை அதிரவைக்கும். அவ்வாறான தருணத்தை அகரனின் ‘போன வடை’ எனக்குள் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.  

‘வெள்ளிக்கிழமையில்’ ஒரு விளிம்பு நிலை மனிதனை எதிர் கொள்ளும் எமது சமூகத்தின் விலகலும், அந்த விளிம்பு நிலைப் பாத்திரமானது தனது தகுதிக்கும் வாழ்விற்கும் ஏற்ற நிலமல்ல இது என தன்னைத் தானே அழித்துக்கொள்வதற்கு ஓடும் மெட்ரோ ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்வதாக சித்தரிக்கப்படுகிறது. இருப்பினும் விளிம்பு நிலை மனிதர்கள் நிலையானவர்கள் எனும் கருத்து நிலையும் முடிவில் ஊன்றப்படுகிறது.  

அகரனின் ‘போன வடை’யில் குணம் எனும் பாத்திரம் எதிர்கொள்வதும் ‘வெள்ளிக்கிழமை’ போன்றதே. ‘மலாயன் கபே வடையும் லிங்கம் கூல்பார் ஐஸ்கிரீமும் ஒருவன் அடிக்கடி சாப்பிடுவது ஒரு சர்வதேச குற்றமா? குணத்தின் வாழ்நாளில் அது ஏற்படுத்திய பாதிப்பு கொஞ்ச நஞ்சமல்ல’. என கருதும் குணம் எனும் பாத்திரம் ‘இறுதியில் எல்லாம் வெறுத்துப்போய் பாரிசின் பெரிய புகையிரத நிலையத்தின் ஒன்றான gare de lyonஇல் இருந்து புறப்படும் மணிக்கு 575 km வேகத்தில் செல்லத்தக்க, இன்று வரை உலகின் மூன்றாவது வேகம் கொண்ட மின் வண்டியில் விழுந்து இறக்கத்தயாராகக் காத்திருந்தான்’. என்பதிலிருந்து கதை தொடங்குகிறது. இந்த குணம் எனும் பாத்திரமானது தனது இயல்பான குணத்தால் தனது குடும்பாத்தாலேயே விளிம்புக்கு தள்ளப்பட்டிருக்கிறது. ‘குணத்தின் பெற்றோர் தமது ஒரு பிள்ளையை நாட்டுக்காக கொடுத்துவிட்டு மீதி எல்லோரையும் படிப்படியாக ஐரோப்பாவுக்கு கொடுத்து விட்டார்கள்’. என எமது யாழ்ப்பாண சமூகத்தின் தமிழ் தேசிய விடுதலைப் பங்களிப்பின் ‘மகத்துவத்தையும்’ உரசிக் காட்டியபடி கதையை அகரன் வளர்த்துச் செல்லுகின்றார். அகரனின் படைப்புலகச் சித்தரிப்பின் அனுபவத்தை ஏற்கனவே நான் அ. முத்துலிங்கத்தின் ‘இங்கே இப்ப என்ன நேரம்’  எனும்  கட்டுரைத் தொகுப்பிலும், அவரது சிறுகதைகளிலும் அனுபவித்தேன். ‘இங்கே இப்ப என்ன நேரம்’ எனும் தொகுப்பானது கட்டுரை மொழியில் அமைந்ததல்ல. தனது அனுபவங்கனை இலக்கிய படைப்பு மொழிகளால் கோர்த்துக் கட்டிய பூ மாலை அது. வாய்விட்டு சிரித்துச் சிரித்தே அந்த தொகுப்பை கடக்க முடியும். அவ்வாறே அகரனின் ‘போன வடை’ எனும் கதையை வாய்விட்டு சிரித்துக் கடந்து வந்தபோதும் முடிவில்: ‘காயவைத்த நெல்லை கொத்தும் கோழி போல புத்தகத்தை கொத்திக் கொண்டிருந்தது, கண்ணீர்’. என ‘தேடிவர யாருமில்லை’ எனும் கதையில் வரும் பெண் பாத்திரச் சித்தரிப்பின் பாதிப்பை ‘போன வடை’ கதையின் முடிவு என் அகத்துள் நிகழ்த்துவதை உணர்ந்தேன்.  

‘நீண்ட காலத்தின் முன்வந்த அகதி கெட்டிக்காரர் பின் வரும் அகதிகளுக்கு கதை எழுதிக் கொடுக்கும் கடை வைத்திருக்கிறார்கள். பாரிசில் அவர்கள் செய்யும் அட்டூழியத்தைவிட சிங்களவனிடம் அடிவாங்கியே சாகலாம்’ என குணம் எனும் பாத்திரம் எதிர்கொள்ளும் புகலிட அனுபவம், இங்கு வாழ்ந்து வரும் அனைவரும் எதிர்கொண்ட ஒரு பொது நெருக்கடி எனும் நினைவை மீட்டுகிறது.  

பாரிசில் வாழும் குணத்தின் சகோதரன் பிரதீபனின் புலனாய்வின் நிமித்தமாகவே குணம் பாரிசுக்கு நாடுகடத்தப் படுகின்றான். குடும்ப பொறுப்பற்றும், வேலை ஏதும் தேடாமல் சோம்பேறியாக காலம் கடத்திக்கொண்டிருப்பதாக அப்பாத்திரம் சித்தரிக்கப்படுகிறது. குணத்தின் தனித்துவமான இயல்பே தம்பி பிரதீபனின் திருமண வாழ்விற்கும் தடையாக கருதப்படுகிறது.  

பிரதீபனின் புலனாய்வு அறிக்கை இவ்வாறு கூறுகிறது: ‘குணம் காலை 9 மணிக்கு புறப்படுகிறான் மெல்லிய பாட்டோடு. யாழ்ப்பாண நகரம் வரையுள்ள எல்லா கோயிலுக்கும் செல்கிறான். கோயிலாளர்களுக்கு குணத்தை நன்றாக தெரிந்திருக்கிறது. பின்பு 12 மணிக்கு மனுஷன் மலாயன் கபே சென்று 2 வடை சாப்பிட்டுவிட்டு, 3 வடை பார்சல் கட்டுகிறார். பின்னர் மதியம் 1h 30 மணிக்கு லிங்கம் கூல்பார் ஐஸ்கிரீமுக்கு முதல் 1 roll  சாப்பிடுகிறார். அதைத் தொடர்ந்து மீண்டும் இரண்டு முப்பது மணிக்கு நகரத்திலிருந்து அவசரமற்று அதேவரிசையில் கோயில்களுக்குச் சென்று மாலை 4 மணிக்கு வீட்டை அடைகிறார்’. இதுதான் குணத்தின் தொடர் நடவடிக்கையாக இருப்பதாக புலனாய்வு செய்யப்பட்டு அவர் பாரிசுக்கு நாடு கடத்தப்படுகிறார். என சித்தரித்து அப்பாத்திரத்தின் இயல்பிற்கும், குணத்திற்கும் விரோதமான வாழ்வு புகழ் இடத்தில் தனது சகோதரனால் திணிக்கப்பட்டு, அவன் மனம் சிதைந்து போகும் காட்சியின் தரிசனம் வாசகர் மனதை வந்தடைகிறது. தற்கொலை செய்வது தோல்வியில் முடிவதற்கும் அவனது இயல்பான சோம்பலே காரணமாக அமைவதை: ‘அதிவேக மின் வண்டியின் (575km/h)ஒலி கேட்டது பாய்வதற்கு தயாராகி தன் வயிற்றைத் தூக்கிக் கொண்டு அந்த பாலத்தின் விளிம்பிற்கு சென்றபோது, புகையிரதம் 50 கிலோமீற்றர் கடந்து விட்டிருந்தது’. எனும் அகரனின் சித்தரிப்பினாது வாசகரின் புறநிலைப் பார்வைக்கு அப்பாத்திரத்தைக் கிண்டல் செய்வதாகவும், நகைப்பிற்குரியதாகவும் ஆக்குகின்றது. ஆயினும் தீவிர வாசக மனதின்  கற்பனைத்தளத்தினுள் விரியும் அகத்-திறப்பு வாயிலாக  அவனுக்காக கண்ணீர் சிந்தும் மொழியாகவும் பிணைந்துள்ளதை உணரமுடிகிறது.  

‘குற்றமும் தண்டனையும்’ ‘எல்லோருக்கும் பிடித்தவன்’ எனும் இரண்டு கதைகளின் சித்தரிப்பு, வடிவம், அழகியல் என்பதற்கப்பால் மறைபொருளாய் இரண்டு கதைகளுக்குமிடையில் ஒரு ஒற்றுமை மறைந்திருப்பதாக எனது வாசிப்பு அனுபவம் நுழைந்து காண விழைகிறது. அதாவது கதையில் வரும் மேற்குலகப்  பெண்களை அவர்களது இயல்பிற்கு முரணாக தீர்ப்பு வழங்கும் செயலை அகரனின்  படைப்பு மனம் தேடுகிறதா? அதனூடாக கீழத்தேய பெண்களின் இயல்பை நேர்மறையாகவும், மேற்குலகப் பெண்களின் இயல்பை எதிர்மறையாகவும் முன்வைக்கும் நோக்கமா?  

இவ்வாறான சித்தரிப்பின் மறைபொருள் விளைவானது  எமது பண்பாட்டு கலாசார பெருமை கொள்ளும் பொதுமன வாசிப்பின் ஊடாக மேற்குலகப் பெண்களை சமூக விளிம்பிற்குள் தள்ளிவைத்து நோக்கும் தொடரச்சி நிகழ்வதற்கான வாய்ப்பிருக்கிறதாகவே தோன்றுகிறது.   

மேற்குலகப் பெண்களின் இயல்பை எதார்த்தமாக சித்தரிக்கிறது என்பது உண்மையே. ஆயினும் இதில் மேற்குலகப் பெண்களின் அருவ-மனங்களின் உசாவலுக்கு வாய்ப்பில்லாது, கீழத்தேய பெண்களின் பண்பாட்டு கலாசாரத்தோடு ஒப்பிட்டு நோக்குவதன் அடிப்டையில் கதையின் சித்தரிப்பு தொடர்கிறது. அது அவ்விருகதைகளின் போதாமையாகவும், பெரும் குறையாகவுமே எனக்குத் தோன்றுகிறது. 

எமது சமூகப் பெண்களின் ஏழ்மை, இயலாமை நிமித்தமாக ‘கடமை-மரபு’ சார்ந்து பணிந்து போகும் சூழலை அகரனின் ‘தேடிவர யாருமில்லை’ எனும் கதை மிக நுட்பமாக சித்தரிக்கிறது. திருமண விடயத்தில் சாதியம் இறுக்கமாக பேணப்படும் எமது சமூகத்தில் அதனை தளர்த்தி, சற்று நகர்த்திப் பார்க்கும் அற்ப ஆசையில்: ‘நான் பல்கலைக்கழகம் முடித்துவிட்டு செருப்புக் கடையில் வேலை செய்தேன். சசி கண்ணீரோடு காத்திருந்தாள். தன் தாய்க்கும் என்னை விரும்புவதை சொல்லி விட்டாள். தாய்க்கும் சம்மதமாயிருந்தது. டொமினிக் ஜீவாவின் காதலியின் தாய்போல் சசியின் தாய் இருக்கவில்லை’. என அகரன் டொமினிக் ஜீவாவின் வாழ்க்கை சரித்திரத்திலிருந்து தனது சாதிய எதிர்ப்பு மனதையும் இவ்வாறான புனைவுப் பாத்திரங்களால் கடந்து போக நினைக்கிறார்! ஆயினும் மேற்குறிப்பிட்ட மேற்குலகப் பெண்கள் குறித்த பார்வையில் பண்பாட்டு கலாசாரக் ‘கடமை-மரபு’ சார்ந்து சற்று நிதானித்திருக்கலாம் என்றே எனக்கு தோன்றுகிறது.  

இதற்கு உதாரணமாக இரண்டு விடயத்தை இங்கே நான் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. முதலாவது ராமச்சந்திர குஹாவின் ‘தென்னாபிரிக்காவில் காந்தி’ எனும் நுலில் இருந்து அறிந்துகொண்டது. இரண்டாவது டால்ஸ்டாயின் பெண்பாத்திரங்களின் அகச்சிறைகளில் ததும்பிக் கொண்டிருப்பவைகள்.  

தென்னாபிரிக்காவில் காந்தியின் அனைத்து செயல்பாடுகளுடனும் அவரது குடும்பத்துடன் நெருங்கிய உறுவும் நட்பும் கொண்ட குடும்பம் ஹென்றி போலக்-மில்லி எனும் யூத இன குடும்பம். தென்னாபிரிக்காவில் ஆசியர்களுக்கு எதிரான சட்டங்கள் அடக்குமுறைகளுக்கு எதிராக அனைத்து வகையிலும் காந்தியுடன் இணைந்து செயல்பட்ட குடும்பம். ஆயினும் காந்தி தனது குடும்ப விவகாரத்துடனும், மனைவி கஸ்தூரிபாய் மீது மேற்கொள்ளும் நடவடிக்கைகளை மிக அவதானமாக அவதானித்து காந்தி மீதான விமர்சனப்பார்வையும் கொண்டவர்கள். தென்னாபிரிக்க வாழ் இந்திய சமூகத்திற்கு எதிரான சட்டங்களை எதிர்த்து காந்தியுடன் இணைந்து போராடியது மட்டுமல்லாது, அதற்கான ஆதரவை இந்தியாவிலும் பெறுவதற்கு இந்தியா சென்று மெட்ராஸ் உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் சென்று ஆதரவு திரட்டியவர் ஹென்றி போலக். அவர் இந்திய குடும்ப அமைப்பு முறை அதில் பெண்களின் நிலை சம்பந்தமாக மிக நுட்பமாக அறிந்திருக்கிறார். அதன் அனுபவத்தில் மேற்குலகப் பெண்களுக்கு குடும்ப அமைப்பு முறையிலும், ஆண் பெண் உறவு முறையிலும் ‘அன்பும்-காதலுமே’ அவர்களின் உறவை, நெருக்கத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது. கீழத்தேய பெண்களின் குடும்பவாழ்வில் ஆணுக்கும் பெண்ணுக்குமான உறவை தீர்மானிக்கும் அம்சம் என்பது ‘கடமையும்-மரபுமாக’ இருக்கிறது என மிக துல்லியமாக அறிந்துகொணண்டார். காந்தி கஸ்தூரிபாயுடன் முரண்படும் தருணத்தில் காந்தியுடன் நேரடியாக இவ்விடயத்தை எடுத்துரைத்தார். காந்தி மௌனமாக அவரது கருத்தை உள்வாங்கி ஏற்றுக்கொண்டார்.  

மேற்குலக பெண்களின் குடும்ப ஆண்-பெண் உறவுப் பின்புலத்தின் வலிமை என்பது ‘அன்பும்-காதலும்’. பெண்பாத்திரங்களின் அருவ-மனங்கள் தேடி-அலையும் காட்சித் தரிசனத்தை, மிக நுட்பாமாக, உணர்வுபூர்வமாக அறிந்துகொள்ளும் வகையில் டால்ஸ்டாய் தனது நாவல்களில் அதனை சித்தரித்திருப்பார். அன்னா கணவன் கரீனை மதிக்கிறாள், நேசிக்கிறாள் ஆனால் விரான்ஸ்கியை நோக்கி ஈர்க்கப்படுகிறாள். இந்த நாவலுடனான நீண்ட பயணத்தின் பின்பே வாசகர்கள் அறிந்துகொள்ள முடிகிறது…., கரீனுக்கும் அன்னாவுக்கும் இருபது வயது வேறுபாடு. கரீனிடம் இருந்து காதலும் அன்பும் அன்னாவை நிறைவாக வந்தடையவில்லை. அவள் ஏங்கும் எதிர்பார்க்கும் அன்பும் காதலும் விரான்ஸ்கியிடமிருந்து கிடைக்கும் என எதிர்பார்க்கிறாள். ‘நான் உன்னைக் காதலிக்கிறேன்’ ‘நான் உன்னை காதிலிக்கிறேன்’என்று அடிக்கடி அவளுக்குச் சொல்லி அவள்மேல் தனக்கிருக்கும் காதலை அவளுக்கு உறுதிப்படுத்தித் தருவதற்கு அவனுக்கு வெட்கமாக இருந்தது. அதே சமயம் தான் உண்மையான காதலை அவள் மீது வைத்திருக்கும் போது இப்படி வார்த்தைகளால் சொல்வது அவசிமில்லாதது என்றும் அவனுக்குப்பட்டது. இருப்பினும் தன் அன்பு அன்னாவுக்காக அவன் அந்த வார்த்தைகளை அவளிடம் அடிக்கடி சொன்னான். நான் உன்னை காதலிக்கிறேன் என்று. அவள் அந்த வார்த்தைகளை ஆவல் தீர அள்ளிப் பருகினாள்’.  என விரான்ஸ்கியின் மனநிலையை ஒருகட்டத்தில் டால்ஸ்டாய்  விபரிக்கின்றார். இவ்வாறு அள்ளி அள்ளிப் பருகிய அன்னாவுக்கு ‘அன்பு-காதல்’ எனும் தாகம் விரான்ஸ்கியிடமிருந்தும் நிரம்பித் தீராததை உணர்ந்தே தற்கொலை செய்கிறாள் என புரிந்து கொள்ள முடிகிறது. இதேபோன்ற அன்புக்கும் காதலுக்கும் ஏங்கும் ஒரு பாத்திரமாகவே ‘போரும் அமைதியின்’ நாயகி நட்டாஷாவுக்கான சித்தரிப்புகளுடாகவும் புரிந்துகொள்ள முடிகிறது.  

இந்த அனுபவங்களுடன் அகரனின் ‘எல்லோருக்கும் நல்லவன்’ குற்றமும் தண்டனையும்’ கதைகளின் மேற்குலகப் பெண்கள் மீதான மறைபொருள் சித்தரிப்பை எனது வாசிப்பு அணுகியது. மேற்குறிப்பிட்ட மேற்குலகப் பெண்கள் ஆண்கள் மீது எதிர்பார்க்கும் ‘அன்பு-காதல்’, என்பதன் அடிப்படையில் அந்த கதைகளையும் அகரன் நோக்கியிருந்தால் வாசகர்களுக்கு மேற்குலகப் பெண்கள் மீதான மாற்றுத் தரிசனத்தை (மறுவார்ப்பை) கொடுத்திருக்க முடியும் என உணருகின்றேன்.  

அகரனின் ‘சந்திப்பு’ ‘ஓய்வுபெற்ற ஒற்றன்’ எனும் சிறுகதைகளும் விவாதித்து சிரித்துச் சிந்தித்து நகர வைக்கின்றது. 

 நான் முன்பு வலியுறுத்தியதுபோன்று அரசியல் தத்துவ இறுக்கமில்லாத, அழகியல் கற்பனைத் திறன்கொண்ட படைப்பிலக்கிய முன்னகர்வே பேரிலக்கிய வாசலை நெருங்க முடியும். அதற்கான படைப்பாக்க அணுகுமுறைகளை நான் அகரனில் காண்கிறேன்.  

வாசகர்களுக்குள் உறைந்து ஒளி தீண்டா அருவ-மனங்களை, சிறந்த படைப்பாளியால்தான் ஒளியூட்டி அவர்களது காட்சித் தரிசனத்தின் பரிமாணத்தை ஊக்கிவிக்கமுடியும்.  

‘அரங்கத்தின்’ ஊடாக அகரனின் கதைகளை முதலில் எனக்கு அறிமுகப்படுத்திய விஜி நல்லையாவுக்கு எனது நன்றிகள்.