கிழக்கின் அரசியல் தலைமைத்துவம்! (காலக்கண்ணாடி – 50)

கிழக்கின் அரசியல் தலைமைத்துவம்! (காலக்கண்ணாடி – 50)

—- அழகு குணசீலன் —-

நேற்று – இன்று – நாளை ….! 

கிழக்கின் அரசியல் தலைமைத்துவம்! 

மதிப்புக்குரிய அரங்கம் வாசகர்களே! 

நேற்றுத்தான் போன்று உள்ளது. அரங்கம் ஆசிரியர்  நண்பர் சீவகன் என்னை தொடர் பத்தி எழுத விடுத்த அழைப்பு. காலம் ஓடிக்கொண்டிருக்கிறது. காலக்கண்ணாடியும் 50வது பதிவை தாங்கி ஓடுகிறது. சமூகமும் காலத்தோடு சேர்ந்து  ஓடாவிட்டால் தனிமைப்பட்டுவிடும். சமூக விஞ்ஞான இயங்கியல் அரசியலில் ஒரு மந்தத்தை, தேக்கத்தை அது ஏற்படுத்திவிடும். ஆக, காலத்தோடு இணைந்து ஓடுவோம். இது காலத்தின் கட்டாயம்…! காலநியதி….!! காலத்தின் தேவை…!!! 

கடந்த பாராளுமன்ற தேர்தல் முதல், மிகவும் கனதியாக பேசப்படுகின்ற கிழக்கின் தனித்துவ தலைமைத்துவம், கிழக்கு தேசியம் பற்றிய விம்பங்களை பிரதிபலிக்கிறது இவ்வாரக் காலக்கண்ணாடி. உங்கள் ஆசிகளுக்கும், அறிவுரைகளுக்கும், பாராட்டுக்களுக்கும் விமர்சனங்களுக்கும் ஏன்? கல்லெறிகள், பொல்லெறிகளுக்கும் மிக்க நன்றிகள். காய்த்ததால்தான் கல்லெறியும் பொல்லெறியும் என்பதால் பெருமகிழ்ச்சி. பயணம் தொடரும்……! 

கடந்த வாரங்களில் கிழக்கின் வரலாற்று நாயகர்கள் இருவர் பற்றி சமூக ஊடகங்கள் அதிகம் பேசின. ஒருவர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தர். மற்றவர் அரசியல் அறிஞன், அண்ணன் இராசதுரை.  கிழக்கின் அரசியல் தலைமைத்துவம் பற்றிய இப்பதிவு முதலில் அண்ணன் இராசதுரையில் தொடங்கி, சுவாமி விபுலாநந்தரில் முடிவடைகிறது. 

கிழக்கின் முதுபெரும் அரசியல் தலைமைத்துவம் அண்ணன் இராசதுரை. சிலருக்கு அவன்  “சக்கிலியன்” எங்களுக்கோ அவன் “தலைவன்”. முப்பது ஆண்டுகளுக்கு மேலாக மட்டக்களப்பு தமிழக மாதாவின் வரம் பெற்ற குறுநில மன்னன். 94 வயதைத் தொட்டு நிற்கின்ற அரசியல் விருட்சம். விபுலாநந்த அடிகளாரின் முத்தமிழுக்கு நினைவுச்சின்னமாக விபுலாநந்த இசை நடனக்கல்லூரியை நிறுவித் தந்தவன். 

கிழக்கின் சமூக, அரசியல் விஞ்ஞான தலைமைத்துவம் பற்றிப் பேசும் போது இவர்கள் இருவரையும் தவிர்த்து செல்ல முடியாது. கிழக்கின்  தனித்துவ அரசியல் தலைமைத்துவம். ஆம்! அண்ணனால் அதைச் சாதிக்க முடியவில்லைதான் .ஆனால் அந்த சிந்தனையை “விலகினேனா? விலக்கப்பட்டேனா?” என்ற கேள்விகளை எழுப்பி, அவன் பெற்ற கசப்பான அனுபவங்களை பகிர்ந்து,  அதற்கான பதிலை அடுத்த தலைமுறையிடம் விட்டுச் சென்றிருக்கிறான் அவன். அதனால்….! அதனால்…!!  அவன் எங்கள் தலைவன்தானே. 

கிழக்கின் அரசியல் தலைமைத்துவம் என்பதை மேலாதிக்கம் தவறாகவே புரிந்து கொண்டுள்ளது. இதை ஒட்டுமொத்த யாழ்ப்பாண சமூகத்திற்கும் எதிராக காட்ட அது முயற்சிக்கிறது. இதில் இன்னும் வேடிக்கை என்னவெனில் முழு வடக்கிற்கும் எதிராக  இது காட்சிப்படுத்தப்படுகிறது. கிழக்கு மாகாணத்தை போல் மேலாதிக்கத்தினால் ஒதுக்கப்படுகின்ற மக்களாகவே வன்னி மக்களும், அங்கு வாழும் மலையக மக்களும் உள்ள நிலையில் அவர்களுக்கு தவறான வியாக்கியானங்களைக் கொடுத்து கருணாவை, பிள்ளையானைக்  காட்டி,தமது யாழ்.மேலாதிக்க அடக்குமுறையை மூடி மறைக்கிறது அது. 

கிழக்கின் அரசியல் தலைமைத்துவம் குறித்த  சிந்தனை, செயற்பாடு யாழ்.மேலாதிக்க அரசியல் தொடர்ச்சியாக மேற்கொண்ட புறக்கணிப்பின் விளைவு என்பதை இவர்கள் ஏற்க மறுக்கின்றனர். 

கடந்த காலத் தவறுகளை திருத்திக் கொள்வதற்கும் இன்றைய தலைமைகள் தயாராக இல்லை. தமிழரசு, தமிழ்க் காங்கிரஸ் போன்ற தரகு முதலாளித்துவ தலைமைகள் மட்டும் தான் அப்படி என்று இல்லை. 

தமிழ்த்தேசிய விடுதலைப்போராட்டத்தின் பங்காளிகளாக இருந்து மார்க்சியம் பேசிய, வர்க்கப்புரட்சியில் நம்பிக்கை கொண்டிருந்த விடுதலை அமைப்புக்களும் இறாலின் தலையில் இருக்கும் அழுக்கு போல் அதே மேலாதிக்க கருத்தியலைத்தான் மண்டைக்குள் வைத்துள்ளன. 

உதிரியாக இருக்கின்ற சில முன்னாள் போராளிகளும், இடதுசாரிகளும் இதற்கு விதிவிலக்காக இருப்பது சற்றேனும் ஆறுதலளிக்கிறது.  

தமிழ் தேசியத்தின் இன்றைய இந்த நிலைக்கு மேலாதிக்க அகிம்சை, ஆயுத தலைமைத்துவ போட்டிதான் காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. கிழக்கு மக்களின் அபிலாஷைகளை தங்களுக்கு ஏற்புடையதாகவே அவர்கள் திரிபுபடுத்துகிறார்கள். மேலாதிக்கத்தின் இந்த நிலைப்பாடே கிழக்கிற்கான, தனியான, தனித்துவமான தலைமைத்துவத்தின் தேவையை வேண்டி நிற்கிறது. 

கிழக்கு வேண்டி நிற்பது ஒரு அரசியல் தலைமைத்துவமேயன்றி கருணாவைவோ, பிள்ளையானைனோ, வியாழேந்திரனையோ அல்ல. கிழக்கு மக்கள் இவர்கள்தான் எங்களின் தலைமைத்துவம் என்று ஜனநாயக ரீதியாக அவர்களை தெரிவு செய்தால் அவர்கள் அந்த தலைமைத்துவ  பொறுப்பை ஏற்கவேண்டியவர்கள் ஆகிறார்கள். 

இந்த தலைவர்களை மக்கள் ஜனநாயக ரீதியில் மாற்றமுடியும். இதை மக்கள் அவர்களுக்கு நிரந்தர குத்தகைக்கு வழங்கவில்லை. அதுவும் சம்பந்தன் ஐயா போன்று சாகும்வரையான ஆயுட்கால குத்தகையும் அல்ல. 

இதை விளங்கிக்கொள்ள கொள்ளளவு குறைந்தவர்கள் கிழக்கின் தலைமைத்துவம் குறித்து பேசுபவர்களை கருணா, பிள்ளையான், வியாழேந்திரன் ஆட்கள் என்று முத்திரை குத்துகின்றனர். 

இங்கு பேசு பொருள் தலைமைத்துமேயன்றி, யார்  அந்தத் தலைவர் என்பதல்ல. அதைத் தீர்மானிப்பது மக்கள், அது அவர்களின் அரசியல் உரிமை. ஒரு ஜனநாயக நாட்டில் அந்த உரிமை எவருக்கும் உண்டு.  

யாழ்ப்பாணத்தில் அங்கயனை அதிக விருப்பு வாக்குகளால் தெரிவு செய்திருப்பதுபோல், மட்டக்களப்பு மக்களின் அதிகூடிய விருப்பத்தெரிவு பிள்ளையான். பாராளுமன்றத்தில் ஜனநாயக முழக்கம் செய்யும் பரம்பரைகள் இதை மறுப்பது அவர்களின் ஜனநாயகப் பற்றாக்குறை. 

வடக்கு அரசியல் தலைமைகள் கிழக்குக்கான அரசியல் அதிகார பகிர்வை நிராகரித்ததன் மூலம் நிகழ்ந்த பிரசவமே கிழக்கின் தனித்துவ தலைமைத்துவ கோரிக்கை. 

நேற்று: தவறிய சந்தர்ப்பங்கள்….! 

தவறிய சந்தர்ப்பம்: ஒன்று! 

இலங்கையின பாராளுமன்ற அரசியல் வரலாற்றில் கிழக்கு கடந்து வந்த பாதையை சற்று திரும்பிப் பார்ப்பது நல்லது. கிழக்கின் பெரும்பாலான தமிழ் முஸ்லீம் அரசியல்வாதிகள் கட்சி அரசியலுக்கு அப்பால் சுயேட்சையாகவே அரசியலில் பிரவேசித்து இருக்கிறார்கள். இது ஆரம்பத்தில் இருந்தே யாழ்.மேலாதிக்க கட்சி அரசியலுடன் கிழக்கு இணைந்து செயற்படவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது. 

1947 பாராளுமன்ற தேர்தலில் கல்குடாவில் கே.டபிள்யூ.தேவநாயகம், பட்டிருப்பில் எஸ்.எம்.இராசமாணிக்கம், மட்டக்களப்பில் கே.வி.எம்.சுப்பிரமணியம், ஆர்.வி.கதிராமர், என்.எஸ்.இராசையா, ஈ.இராசையா ஆகியோர் சுயேச்சை வேட்பாளர்களாகவே போட்டியிட்டுள்ளனர். 

கல்முனையில் கே.கணபதிப்பிள்ளை, பின்னர் பொத்துவில்லில் என்.தருமலிங்கமும் சுயேச்சையாக போட்டியிட்டனர். கிழக்கில் பல்வேறு முஸ்லீம் பிரதேச தேர்தல் தொகுதிகளிலும் வேட்பாளர்கள் சுயேச்சையாக போட்டியிட்டனர். பின்னரே இவர்கள் தேசியக்கட்சிகளிலும், தமிழரசுக்கட்சியிலும் சேர்ந்து தேர்தலில் நின்றனர். 

திருகோணமலையில் மட்டுமே 1947இல் எஸ்.சிவபாலன் அகில இலங்கை தமிழ்காங்கிரஸில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். 

மூதூரில் ஈ.சொக்கலிங்கம், ஏ.சி.செல்லராஜா இருவரும் சுயேட்சை வேட்பாளர்களே. 

இந்த சூழலில்தான் எஸ்.ஜே.வி.செல்வநாயகம்,  தமிழ்க்காங்கிரஸில் இருந்து வெளியேறி தமிழரசுக்கட்சிக்காக கிழக்கில் ஆட்தேடுகிறார். 

அதன்பின்னர் சி.இராசதுரையின் பிரவேசத்துடன் படிப்படியாக கட்சி அரசியல் நகர்வு ஆரம்பமாகிறது. கிழக்கில் தமிழரசுக் கட்சியும், சிங்கள தேசியக்கட்சிகளும் கால்பதிக்க தொடங்குகின்றன. 

கிழக்கு அரசியலில் ஈடுபாடு கொண்ட, ஆர்வமும்,  ஆளுமையும், திறமையும் கொண்ட இத்தனை அரசியல்வாதிகள் இருந்தும் இவர்கள் கிழக்கிற்கான அரசியல்கட்சி ஒன்றைஅமைத்து, அரசியல் தலைமைத்துவத்தை ஏற்காமல் இருந்தது துரதிஷ்டவசமானது. 

அரசியலில் இவர்களால் விடப்பட்ட இந்த இடைவெளிக்குள் யாழ்.மேலாதிக்ககட்சிகளும், கொழும்பு மேலாதிக்க கட்சிகளும் புகுந்து கொண்டன. 

தவறிய சந்தர்ப்பம்: இரண்டு! 

பல்கலைக்கழக அனுமதியில் தரப்படுத்தல் அறிமுகப்படுத்தப்பட்டபோது பின்தங்கிய மாவட்டங்களுக்கு அது சாதகமானது என்று கருத்து வெளியிட்ட தேவநாயகம், இராஜன் செல்வநாயகம், தம்பிராசா போன்றோர் அதற்கு மேல் நகரவில்லை. தனிநாட்டு கோரிக்கைக்கு எதிராக ஆங்காங்கே பேசியபோதும் கிழக்கின் நீண்டகால, எதிர்கால அரசியல் குறித்து அவர்கள் சிந்திக்கவில்லை. தழிழர் கூட்டணியில் இணைவதற்கு மறுத்த தேவநாயகம்கூட அத்துடன் நின்றுவிட்டார். 

1977 தேர்தல் வேட்பாளர் நியமன அநீதி இராசதுரைக்கு கிழக்கிற்கான அரசியல் தனித்துவ தலைமைத்துவத்தை ஏற்பதற்கான ஒரு வாய்ப்பை வழங்கியது. தேர்தல் முடிந்த பின்னர் அல்லது அமைச்சராக இருந்த நிலையில் மற்றவர்களோடு இணைந்து இதைச் செய்திருக்க முடியும். 

அதையும் அவர் செய்யவில்லை அல்லது அவர் விரும்பி இருந்தாலும் அதற்கான சூழல் உயிரைப்பணயம் வைப்பதாக அமைந்திருந்தது. இராசதுரை காலத்தின் கைதியாக இருந்தார். தேவநாயகத்தின் நிலையும் இதுதான். துப்பாக்கி அவர்களின் அரசியல் சுதந்திரத்தை குறிவைத்திருந்தது. 

இராஜன் செல்வநாயகத்திற்கு மரண தண்டனையை நிறைவேற்ற அனுப்பப்பட்ட மட்டக்களப்பு மைக்கல் அதை நிறைவேற்றாததால் சுட்டுக்கொல்லப்பட்டதும், பொத்துவில் சி.கனகரெட்ணம் கட்சி மாறிய பின்னர் அவர் மீது மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சியும்,  மாலா இராமச்சந்திரன் போன்ற உள்ளூர் அரசியல்வாதிகளின் கொலைகளும் தனிநபர் பயங்கரவாத ஆயுத கலாச்சாரமும் கிழக்கில் ஒரு அரசியல் தலைமைத்துவம் தோன்றுவதற்கான வாய்ப்பைச் சாகடித்து விட்டது என்றே கொள்ளவேண்டும். 

1972 அரசியல் அமைப்பும், 1983 இனக்கலவரமும் தமிழ்த்தேசிய விடுதலைப் பயணத்தில் ஏற்படுத்திய வீக்கம், 1987 இல் இந்திய- இலங்கை சமாதான உடன்படிக்கை ஏற்படுத்திய நம்பிக்கை என்பன 2004 இல் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து கருணா அம்மான் பிரியும்வரையும் பாராளுமன்ற அரசியலிலும் சரி, ஆயுப்போராட்ட அரசியலிலும் சரி தலைமைத்துவத்தின் தேவை உணரப்பட்ட போதும் வெளிப்படையாகப் பேசப்படவில்லை. 

தவறிய சந்தர்ப்பம்: மூன்று! 

தமிழ் அரசுக்கட்சியுடன் அரசியல் தொடர்புகளைப் பேணிய கிழக்கு முஸ்லீம் அரசியல்வாதிகள்  தனிநாட்டுப் பிரகடனத்திற்கு பின்னர் அதில் நம்பிக்கை இழந்தனர். நாடுமுழுவதும் பரந்து வாழும் முஸ்லிம்களை இக் கோரிக்கை பாதிக்கும் என்று சிந்தித்தனர். தொண்டமானும் இதே முடிவுக்கே வந்திருந்தார். அதேவேளை கொழும்பு முஸ்லீம் தலைமைகளில் தங்கியிருக்காது கிழக்கு மாகாணத்தில் செறிந்து வாழும் முஸ்லிம்களையும், அவர்களின் தனித்துவமான பிரச்சினைகளையும் கருத்தில் கொண்டு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைக்கப்பட்டது. 

1981, செப்டம்பர், 11ம் நாள் காத்தான்குடியில் இடம்பெற்ற அங்குரார்ப்பணக் கூட்டத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைக்கப்பட்டது. சிறுபான்மை முஸ்லீம்களின் அரசியல் அபிலாஷைகளை பிரதிநிதித்துவம் செய்வதே அதன் நோக்காகும். 

மூன்று மொழிகளுக்கும் சம அந்தஸ்து, வடக்கு, கிழக்கில் வாழும் முஸ்லீம்களுக்கான ஒரு சுயாட்சி பிரதேசம் என்பனவும் இலக்காக இருந்தது. 

இங்கு முக்கியமான செய்தி என்னவெனில் ஷரியா சட்டத்தை முஸ்லீம் காங்கிரஸ் ஏற்றுக்கொள்வில்லை. 

இந்தச் சந்தர்ப்பத்தில் அன்றைய கிழக்கு தமிழ் அரசியல் தலைமைகள் இதுபற்றி சிந்திக்கவில்லை.   கிழக்கில் இரு இனமக்களுக்குமான ஒரு  பொதுக் கட்சியின் தோற்றத்திற்கும் அது வழிவகுத்து இருக்கமுடியும். ஆனால் கிழக்கு தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் அன்றைய சூழலில் இதுவும் சாத்தியமற்றே இருந்தது. இது ஆகப் பிந்திய ஒரு பொருத்தமான வாய்ப்பாக இருந்தபோதும் கெரில்லா போராட்டம் உச்ச மடைந்திருந்த அந்த சூழலும் வாய்ப்பை தடுத்துவிட்டது. 

இன்று: விடுதலைப்புலிகளில் ஏற்பட்ட பிளவும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தோற்றமும்…!  

விடுதலைப்புலிகள் அமைப்பில் பிளவு ஏற்பட்டு கருணா அம்மான் தலைமையிலான ஒரு தொகுதி போராளிகள் இயக்கத்தை விட்டு விலகும்வரை கிழக்கில் ஒரு தனித்துவ அரசியல் தலைமைத்துவம் சாத்தியமானதாக இருக்கவில்லை. இதற்கு காரணம் ஆயுதங்கள் இன்றி ஒரு ஜனநாயக அரசியலில் பங்குகொள்ள முடியாத நிலையாகும். 

இது கிழக்குக்கு மட்டும் உரிய நிலையல்ல. இன்று ஜனநாயக அரசியலில் பங்கேற்றுள்ள அனைத்து முன்னாள் மாற்று போராளி அமைப்புக்களும் ஆயுதம் இன்றி விடுதலைப்புலிகளுக்கு எதிராக இதனைச் சாதித்திருக்க முடியாது. இதற்கு ஈ.பி.டி.பி, ஈ.பி.ஆர்.எல்.எவ், புளோட், ஈ.என்.டி.எல்.எப், ரெலோ எவரும் விலக்கல்ல.  

இந்த நிலையில்தான் கிழக்கு நேற்று தவறவிட்ட சந்தர்ப்பங்களைத் தாண்டி தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஊடாக ஒரு அரசியல் தலைமைத்துவத்தை அடையாளம் கண்டது. இதனூடாக கிழக்கில் ஏற்பட்ட அரசியல் விழிப்புணர்வும், அரசியல் மயமாக்கமுமே பிள்ளையான், கருணா, வியாழேந்திரன் ஆகியோருக்கு ஒரு அரசியல் தலைமைத்துவ அங்கிகாரத்தை இலங்கையிலும், பிராந்தியத்திலும், ஓரளவுக்கு சர்வதேசத்திலும் வழங்கியிருக்கிறது. 

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் இவர்களின் கட்சிகள் பெற்ற வாக்குகள் 40 வீதம் இது குறைத்து மதிப்பிடக்கூடிய ஒன்றல்ல. அவ்வாறே வன்னியில் பொதுஜனபெரமுனையும், ஈ.பி.டி. யும்  26 வீதவாக்குகளை பெற்றுள்ளன. யாழ்.மாவட்டத்தில் மக்கள் சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்கும், ஈ.பி.டி.பி.க்கும் 26.5 வீதமான வாக்குகளை அளித்து டக்ளஸ் தேவானந்தாவையும், அங்கயனையும் தமிழ்த்தேசிய தலைமைக்கு மாற்றுத்தலைமையாக தேர்வு செய்துள்ளனர். தென் இலங்கையிலும் மாற்றுத்தலைமையின் தோற்றம் சஜீத் பிரேமதாச மூலம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. மலையகத்திலும், முஸ்லீம் சமூகத்திலும் இந்த மாற்றங்களை அவதானிக்க முடியும். 

கிழக்கு மாகாணத்திற்கான இரு மாகாண சபைத் தேர்தல்கள் மட்டுமன்றி பாராளுமன்றத்தேர்தலும் இந்த தலைமைத்துவத்தை ஜனநாயக ரீதியாக உறுதிப்படுத்துகின்றன. குறிப்பிட்ட சில பிரதேச சபைகளும் இதற்கு விதிவிலக்கல்ல. இவை அனைத்தும் மாறிவரும் மாற்று தலைமைத்துவப் போக்கின் வெளிப்பாடுகளாகும். 

ஆனால் பிள்ளையானும், கருணாவும், வியாழேந்திரனும் எவ்வளவு காலத்திற்கு? அல்லது  நீண்ட காலத்திற்கு இந்த தலைமைத்துவத்தை சுமக்க முடியுமா? என்ற கேள்வி இங்கு எழுகின்றது. கிழக்கில் இன்று எட்டப்பட்டிருக்கின்ற இந்த நிலையானது ஒரு வரலாற்றுச் சாதனை. பல முது பெரும் அரசியல்வாதிகளால் செய்ய முடியாத, அல்லது அவர்களின் தீர்க்கதரிசனம் அற்ற அரசியல் விட்ட தவறை, அல்லது அவர்களின் கரங்கள் கட்டப்பட்டிருந்த நிலையில் மக்கள் இன்றைய மாற்றுத்தலைமைகள் ஊடாக சாதித்துக் காட்டியிருக்கிறார்கள்.  

இந்த அரசியல் தலைமைத்துவத்திற்கு ஒரு தொடர்ச்சி தேவை. பிள்ளையானும், கருணாவும், வியாழேந்திரனும் இத் தலைமைத்துவத்தை பல வில்லங்கங்களுக்கு மத்தியில் ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள். இது ஒரு இடைக்கால தீர்வு மட்டுமே. நீண்டகால நிரந்தர தலைமைத்துவம் அடுத்த தலைமுறைக்கு கைமாற்றப்பட வேண்டும். இந்த பொறுப்பு வாய்ந்த இலக்கை அடைவதற்கு இன்றைய தலைமைத்துவம் செய்ய வேண்டியது என்ன? இது கிழக்கின் நாளைய அரசியல் எதிர்காலம் குறித்த அதிமுக்கியத்துவம் வாய்ந்த வினா! 

நாளை: கிழக்கின் அரசியல் தலைமைத்துவத்தின் தொடர் பயணம்….! 

ஈ.பி.டி.பி யும்முஸ்லீம் காங்கிரசும் தரும் பாடங்கள். 

கிழக்கின் நாளைய தலைமைத்துவம் குறித்த இந்த தூரநோக்கில் ஈ.பி.டி.பி.யையும், முஸ்லீம் காங்கிரஸையும் சிறுபான்மையினரின் கட்சிகள் என்ற வகையில் எந்த அளவுக்கு பின்பற்றவும் எந்த அளவுக்கு நிராகரிக்கவும் முடியும்? என்ற கேள்வி எழுவது இயல்பானது.

இரு கட்சிகளுமே இணக்க அரசியலை அவர்களின் தனித்துவ பாணியில் கொண்டிருந்தவை, கொண்டிருப்பவை. ஈ.பி.டி.பி.யை விடவும் முஸ்லீம் காங்கிரஸ் இணக்க அரசியல் மூலம் சாதித்து அதிகம் என்றும் கூறமுடியும். அஷ்ரப் அவர்களின் தலைமைத்துவத்தில் இது சில சாதனைகளைத்தந்தது. விகிதாச்சார தேர்தல் முறையின் வெட்டுப்புள்ளி வீதத்தை குறைத்தது ஒரு வரலாற்றுச் சாதனை. 

எதிர்க்கட்சியில் அமர்ந்து கொண்டு முஸ்லீம் காங்கிரஸ் சமூகம் சார்ந்து அரசை ஆதரித்ததும், அரசில் இருந்து கொண்டு உள்ளுக்குள் போராடிய நிலைமைகளும் குறிப்பிடக்கூடியவை. சுதந்திரமான கட்சி அரசியல் செயற்பாடுகளில் தலைமைத்துவம் ஒன்றின் ஆளுமைக்கு இவை உதாரணங்கள். இரு கட்சிகளிலும் உட்கட்சி ஜனநாயகம் பேணப்பட்டது. வெளியேறுவதும், உள்ளே வருவதும் இயல்பாக இருந்தது.  ஈ.பி.டி.பி. ஒரு ஆயுதகட்டமைப்பில் இருந்து ஜனநாயக அரசியலுக்கு வந்தது என்பதால் இங்கு ஒரு வரையறைக்குட்பட்டு இது இடம் பெற்றிருக்கலாம்.  

கட்சியின் வளர்ச்சி என்ற வகையில் முஸ்லீம் காங்கிரஸ் பெரும் முன்னேற்றத்தை காட்டியது. சிறப்பாக கிழக்கிலங்கை முஸ்லீம்களின் தலைமையாகவும், பொதுவாக இலங்கை முஸ்லீம்களின் தலைமையாகவும் செயற்பட்டது. தந்திரோபாயங்களுடன் கூடிய, பேரம்பேசும் சக்தியைக் கொண்டிருந்தது. வடக்கு கிழக்கில்நிலத்தொடர்பற்ற முஸ்லீம் நிர்வாக அலகு ஒன்றை எந்த விட்டுக் கொடுப்புக்கும் இடமின்றி அது கோரியது. 

முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் அஷ்ரப் கால வளர்ச்சியில் இளைய தலைமுறையினர், கல்வியாளர்கள், புத்திஜீவிகள், துறைசார் நிபுணர்கள், சமூக முக்கியஸ்தர்கள் நிறையவே உள்வாங்கப்பட்டார்கள். இவர்களின் பங்களிப்பு கட்சியின் வளர்ச்சிக்கு அளப்பரியதாக அமைந்தது. இன்றும் அன்றைய இளைய தலைமுறையினர் கட்சியின் முக்கிய செயற்பாட்டாளர்களாக உள்ளனர். இந்த அணுகு முறையை ஏனோ ஈ.பி.டி.பி. பின்பற்றவில்லை. ஒப்பீட்டளவில் அது ஒரு வட்டத்திற்குள் ஓடிக்கொண்டிருக்கிறது. இது அதன் வளர்ச்சியில் ஒரு மந்த நிலையை ஏற்படுத்தி உள்ளது. ஈ.பி.டி.பி. அதன் செயற்பாடுகளை வடக்கில் எல்லா மாவட்டங்களுக்கும் பரவலாக விரிவுபடுத்தி இருப்பதாகவும் தெரியவில்லை. 

அஷ்ரப்பின் மரணத்தின் பின் தலைமைத்துவம் கிழக்கை விட்டு நழுவியது. இதனால் கிழக்கு முஸ்லீம்களின் தனித்துவத்திற்கான முன்னுரிமை ஒப்பீட்டளவில் குறைந்தது. இலங்கை முஸ்லீம்களின் பொதுவான பிரச்சினைகள் முதன்மை பெற்றன. விளைவு கட்சியில் கருத்துவேறுபாடுகளும், விளைவுகளும் ஏற்பட்டதனால் பிரிந்து சென்றவர்கள் புதிய கட்சிகளை ஆரம்பித்தனர். இதனால் முஸ்லீம்களின் நலனை விடவும் கட்சி அரசியல் முதன்மை பெற்றுள்ளது. முஸ்லீம் காங்கிரஸ் பலவீனம் அடைந்தது. 

ஒரு சிறந்த தலைமைத்துவத்தின் ஆளுமை தனக்குப் பின் அடுத்த தலைமுறையில் ஒரு தலைமைத்துவத்தை இனம்காண்பதாகும். அஷ்ரப்பின் அகாலமரணம் இதை அவர் செய்வதற்கு இடம்கொடுக்கவில்லை என்றே கொள்ளவேண்டி உள்ளது. ஈ.பி.டி.பி.யை பொறுத்தவரை அவர்கள் எதிர்கால தலைமை ஒன்றை இனம் கண்டிருப்பதற்கான அறிகுறிகள் தெரியவில்லை.  

அஷ்ரப்பின் மரணத்தின் பின்னரான முஸ்லீம் காங்கிரஸின் இன்றைய நிலைக்கு இந்த தலைமைத்துவம், ஒரு முக்கிய காரணமாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 

ஆக, இணக்க அரசியலிலும் உறுதியான கொள்கை, உடன் இருந்து குரல் எழுப்பல், எதிர்நின்று ஆதரித்தல், சமூக முக்கியஸ்தர்கள், கல்வியாளர்கள், புத்திஜீவிகள், துறைசார் நிபணர்களை கட்சியில் உள்வாங்கல், தனித்துவ பிரச்சினைகளுக்கும், சமூக பண்பாட்டு விழுமியங்களுக்கும் முன்னுரிமை, அடுத்ததலைமுறை தலைமைத்துவத்தை இனம்காணல், உட்கட்சி ஜனநாயகம், சமூகத்தின் சகல தரப்பினரதும் பங்களிப்பு  போன்றவை ஒரு அரசியல் தலைமைத்துவத்தை தொடர்ச்சியாக பேண அவசியமானவை. இல்லையேல் ஒரு தலைமைத்துவம் வெறும் “தள்ளாடும்” தலைமைத்துவமாக இருந்து விட்டுப் போய்விடும். 

இந்த வகையில்  சுவாமி விபலானந்தரின் சமூக அரசியலையும், பொருளாதார அரசியலையும் அடையாளம் கண்டு இன ஐக்கியத்தை பேணுகின்ற, கல்வியை மக்களின் காலடிக்கு கொண்டு செல்கின்ற, கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துகின்ற, அனைத்திற்கும் மேலாக மானிட நேயத்தைப் பேணுகின்ற, சமூக நீதியின் பாற்பட்ட  விபுலாநந்த சிந்தனைகளின் அடிப்படையிலான ஒரு தலைமைத்துவமே கிழக்கின் தனித்துவ தலைமைத்துவமாக அமைய முடியும்.   

இதுவே விபுலாநந்தர் கண்ட கிழக்கிலங்கைக்கான கனவு ! 

இது கிழக்கின் அரசியல்  தலைமைகளின் சிந்தனைக்கு !!