சாதியும் பிரதேசவாதமும் – கருத்தாடல் களம் 07

சாதியும் பிரதேசவாதமும் – கருத்தாடல் களம் 07

 — எழுவான் வேலன் —  

(‘பிரதேசவாதமா ஜனநாயகப் பற்றாக்குறையா? (தமிழ் அரசியலை முன்னோக்கி நகரவிடாது தடுக்கும் உள்முரண்பாடுகள்)‘ எனும் வி.சிவலிங்கம் அவர்களுடைய கட்டுரை அரங்கம் மின்னிதழ் 06.06.2021 அன்றைய இதழில் பதிவிடப்பட்டிருந்தது. அக்கட்டுரைக்கான கருத்தாடல் களம் 07 இதுவாகும்.)  

ஆங்கில மொழி அதிகாரத்துவம் தம்மைவிட்டு கைநழுவிப் போய்விடக் கூடாது என்பதற்காக தனிச் சிங்களச் சட்டத்துக்கு எதிராக பாராளுமன்றத்தின் படிக்கட்டுக்களில் போராட்டம் நடாத்தி அப்பாவித் தமிழர்களைப் பலிகொடுத்ததின் பயனாக தமிழ் மக்களிடம் தமக்கான ஆதரவுத் தளம் அதிகரித்திருப்பதை அறிந்த தமிழ்த் தலைமைகள் மேலும் தமிழர்களைத் தம்பக்கம் திரட்டுவதற்காக தமிழ் மொழிப் புறக்கணிப்பை தமது அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தத் தொடங்கினர். இதன் அடுத்த கட்டமாக தமிழ் அரசுக் கட்சியினர் 1957ம் ஆண்டு சுதந்திர தினத்தை துக்கதினமாக பிரகடனப்படுத்தி கடைகளை மூடி கறுப்புக்கொடிகளை பறக்கவிடும்படி வேண்டுகோள் விடுத்தனர். தமிழ் அரசுக் கட்சியினரின் வேண்டுகோளை ஏற்று திருகோணமலையில் மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு மேல் கறுப்புக்கொடி கட்ட முனைந்த மலையகத்தைச் சேர்ந்த நடராசன் எனும் இளைஞர் சிங்கள இன வெறியர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிப் பலியானார்.  

பாராளுமன்றப் படிக்கட்டுப் போராட்டத்தின் பலன் அம்பாரையில் வறிய தமிழ் மக்களைப் பலி கொடுத்தது என்றால் துக்கதினப் போராட்டத்தின் பலன் மலையகத் தமிழனை திருகோணமலையில் பலி கொடுத்ததாகும்.   

இத்தகைய சூழலில் இனவன்முறைகளைத் தடுத்து தமிழர்களுக்கும் நியாயமான உரிமையினை வழங்கும் பொருட்டு எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கா 1957 ஏப்ரல் 26இல் தமிழ் மொழியின் நியாயமான உபயோகத்துக்கான மசோதாவை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அத்துடன் அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கும் பாராளுமன்ற தெரிவுக் குழுவொன்றை நியமிக்கவும் முன்வந்தார். சமஸ்டி ஏற்படுத்துவது பற்றியும் ஆலோசிப்பீர்களா என்று எஸ்.ஜே.வி.செல்வநாயகம் கேள்வி எழுப்பியபோது பண்டாரநாயக்கா அதற்கு இணங்கியதாக த.சபாரெத்தினம் அவர்கள் குறிப்பிடுகிறார்.  

இவ்வாறு தமிழர்களுக்குச் சார்பான ஒரு சூழல் உருவாகியிருக்கும் போது அதனை தக்கபடி கையாழ்வதே அரசியல் இராஜதந்திரமாக இருக்க முடியும். ஆனால்தமிழரசுக் கட்சியினர் மேலும் மேலும் சிங்களவர்களை ஆத்திரமூட்டும் செயற்பாடுகளிலே ஈடுபட்டனர். தமிழ் மேல் காட்டிய அக்கறையை யாழ் குடாநாட்டிற்குள்ளும் அதற்கு வெளியிலும் தங்களால் சாதிரீதியாக அடக்கி ஒடுக்கப்படும் தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களின் கல்விசமூக, பொருளாதார விருத்தி போன்றவற்றிலும் மலையக தமிழ் மக்கள் மீதும் எவ்வித அக்கறையும் காட்டாதது மாத்திரமன்றி, இந்த மக்களின் நலன்களுக்காக உழைத்த இடதுசாரி அமைப்புக்களையும் மற்றும் சிறுபான்மை தமிழர் மகாசபை போன்ற அமைப்புக்களின் நடவடிக்கைகளுக்கு இடையூறாகவும் செயற்பட்டனர். உதாரணத்துக்கு சிறுபான்மை தமிழர் மகாசபையினர் அந்த மக்களின் நலனுக்காக உதவி அமைச்சராக இருந்த எம்.பி.டி.சொய்சா அவர்களை யாழ்ப்பாணம் அழைத்திருந்தனர். அவர்களின் அழைப்பை ஏற்று யாழ்ப்பாணத்திற்கு ரயிலில் சென்றுகாரில் ஏறிய போது தமிழரசுக் கட்சியின் வீரபுருசர்கள் அவரின் காருக்கு முன்னால் படுத்து அவரை யாழ்ப்பாணத்துக்குள் பிரவேசிக்க விடாமல் திருப்பியனுப்பினர். 

யாழ் வேளாள மேலாதிக்கத்தால் எந்தவித அடிப்படை உரிமைகளும் வழங்கப்படாது அடக்கி ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களே சிறுபான்மை தமிழர் மகாசபை என்பதனை ஆரம்பித்து தங்களுக்குத் தேவையான கல்விசுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகளை அரசாங்கத்திடம் கோரிநின்றனர். யாழ்வேளாள மேலாதிக்கத்தை மீறி அமைச்சர் தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களுக்கு எதுவும் செய்துவிடக் கூடாது என்பற்காகவே தமிழரசுக் கட்சியினர் அவருடைய காருக்கு முன்னால் படுத்தனர். அதிகார பலமும் பணபலமும் கொண்ட வேளாள மேலாதிக்கத்தினரை எதிர்த்து சிறுபான்மை தமிழர் மகாசபையினரால் எதுவும் செய்ய முடியாத கையறுநிலையில் அமைச்சரை வழியனுப்பி வைத்தனர். இந்தச் செயலானது வேளாளன், வேளாளன் அல்லாதவன் என்றில்லாது தமிழர்கள் தன்னை அழைத்து அவமானப்படுத்தியதாகவே அமைச்சரின் மனதில் பதிவானது.  

எம்.பி.டி.சொய்சா அவர்களுக்கு நடந்தது போலவே கல்வி அமைச்சராக இருந்த டபிள்யூ.தகநாயக்கா அவர்களும் தபால் அமைச்சராக இருந்த சி.ஏ.எஸ்.மரிக்கார் அவர்களும் கிழக்கு மாகாணம் சென்றபோது கறுப்புக்கொடி காட்டப்பட்டது. நிதி அமைச்சராக இருந்த ஸ்ரான்லி.டி.சொய்சா அவர்களுடன் ஆறு அமைச்சர்கள் கொண்ட குழுவினர் மன்னாருக்குச் சென்றபோது அங்கும் கறுப்புக்கொடி காட்டப்பட்டு அவர்கள் எதிர்க்கப்பட்டனர்.  

இந்தச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு நாங்கள் அன்றிலிருந்து இன்று வரை அபிவிருத்திக்காக அல்ல தமிழ் மக்களின் உரிமைகளுக்காகத்தான் போராடுகின்றோம்‘ என குறுந் தமிழ்த் தேசியவாதிகள் நியாயம் கூற முற்படலாம். சாதியின் பெயரால் தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி வைத்துக் கொண்டுள்ள இவர்கள் உரிமை பற்றிக் பேசுவதற்கு அருகதையற்றவர்கள் என்பதை மொத்த தமிழ்ச் சமூகமுமே மறந்து விடுவதுதான் இந்த சமூக இயங்கியலின் முரண்நகையாகும்.  

எஸ்.ஜே.வி.செல்வநாயகம் 1957 மே 13இல் மட்டக்களப்பில் நடந்த கூட்டமொன்றில் தமிழ் மக்களை வெறும் வாய்ச்சொல் வீரர்களாக சிங்கள மக்கள் நினைப்பதாகவும் இதனை மாற்றி செயல் வீரர்களாக தமிழ் இளைஞர்கள் இருக்க வேண்டும் என்றும் ஒவ்வொரு தமிழனும் போராட்டத்தில் தீவிர பங்கெடுப்பதுடன் எந்தத் தியாகத்துக்கும் தயாராக இருக்குமாறு இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துப் பேசினார்.  

மேற்படி தமிழ் அரசுக் கட்சியினரின் பொருத்தமற்ற நேரத்தில் பொருத்தமற்ற போராட்டங்களும் தாழ்த்தப்பட்ட மக்கள் தொடர்பான சமூக அக்கறையுமின்றி இளைஞர்களை உணர்ச்சிவசப்படுத்தக் கூடிய பேச்சுகளும் தமிழ் மக்களுக்கு எதுவுமே பெற்றுக் கொடுக்காதது மட்டுமல்ல அவை எதிர்மறைவான விளைவுகளையே ஏற்படுத்தின. இருந்த போதும் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா 1957 யூன் முதலாம் திகதி செல்வநாயகம் அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து தமிழ் மக்களின் பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்கலாம் என்பது பற்றி இரு தலைவர்களும் கலந்துரையாடினர். இரு தரப்பாரும் மக்கள் தமக்கு அளித்த ஆணைக்குக் கீழ்படிந்து தத்தமது நிலைப்பாடுகளை விட்டுக்கொடுக்காது தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண இணங்கினர்.  

இதன் பிரகாரம் அதிகாரப் பரவலாக்கத்தின் மூலம் பிரச்சினைகள் தீர்க்கப்படலாம் என்ற அடிப்படையில் பிராந்திய சபைகள் அமைத்தல் தொடர்பாக இணக்கம் காணப்பட்டது. இதன்படி தமிழர் தரப்பு வடமாகாணத்தில் ஒரு பிராந்திய சபையும் கிழக்கு மாகாணத்திற்கு இரண்டு அல்லது அதனிலும் கூடிய பிராந்திய சபைகள் அமைப்பதற்கான பிரேரணையை முன்வைத்தனர்.  

வடகிழக்கு தமிழர்களின் தாயகப் பிரதேசம் என்பதில் மிக உறுதியாக நின்ற தமிழ் அரசுக் கட்சியினர். அன்றே வடக்கின் அரசியல் இலாபத்துக்காக கிழக்கு மக்களிடம் இருந்து எவ்வித அபிப்பிராயங்களையும் பெறாது கிழக்கினை எத்தனை துண்டுகளாகப் பிரித்து பங்கிட்டுக் கொள்வதற்கும் தயங்கவில்லை என்பது இதிலிருந்து தெளிவாகின்றது. கிழக்கில் முஸ்லிம், சிங்கள மக்களுக்காக கிழக்கு இரண்டிலும் கூடிய பிராந்திய சபைகளாக அமைய வேண்டும் என்பது நியாயம் எனின் இந்த நியாயம் வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்சிங்கள மக்களுக்கும் பொருந்தக்கூடியதே இதனால் வடக்கும் இரண்டு அல்லது அதனிலும் கூடிய பிராந்திய சபைகள் அமைக்கப்படுதல் வேண்டும். ஆனால் தமிழரசுக் கட்சியினர் கிழக்கைப் பலி கொடுத்து வடக்கை தமது அதிகாரத்துக்குள் கொண்டு வரும் நோக்கிலேயே செயற்பட்டுள்ளனர். அன்றிலிருந்து இன்று வரை வடக்கின் மேலாதிக்கத்துக்காக கிழக்கு பலி கொடுக்கப்படுவது பல்வேறு வடிவங்களில் நடந்து கொண்டே வருகிறது. இது பற்றி இனிவரும் தொடர்களில் சுட்டிக்காட்டப்படும். 

மேற்படி பிராந்திய சபைகளின் மூலமான அதிகாரப் பகிர்வினையும் வடகிழக்கு மாகாணங்களின் நிர்வாக மொழியாக தமிழையும் கொண்டதாக பண்டா – செல்வா ஒப்பந்தம்‘ எனக் கூறப்படுகின்ற ஒப்பந்தம் கைச்சாத்தானது. 

ஜி.ஜி.பொன்னம்பலம் இந்த ஒப்பந்தத்தை தனது அரசியல் இலாபத்துக்காகப் பயன்படுத்தினார். அதாவது மானில சுயாட்சியும் மொழிச் சமத்துவமும் கேட்டுப் போராடியவர்கள் பிராந்திய சபையுடனும் வடகிழக்குடனும் நின்றுவிட்டார்கள் என தமிழ் அரசுக் கட்சியினரை குற்றம் சாட்டினார். இதற்குப் பதலளித்த செல்வநாயகம் நாங்கள் எங்கள் இலட்சியத்தைக் கைவிடவில்லை. இது ஒரு இடைக்கால ஒழுங்கு மட்டுமே‘ எனப் பதிலளித்தார். 

இடைக்கால ஒழுங்கு‘ எனும் செல்வநாயகம் அவர்களின் பதிலை சிங்கள பேரினவாதிகள் ஆயுதமாக எடுத்துக்கொண்டு இது தமிழர்கள் தனிநாடு அமைப்பதற்கான முதற்படி என்று ஒப்பந்தத்திற்கு எதிராகப் பிராச்சாரம் செய்தனர். 1958இல் களனியில் நடந்த மகாநாட்டில் தமிழர் பிரச்சினைக்கு கௌரவமான தீர்வு எட்டப்பட்டுள்ளதாக பண்டாரநாயக்கா தெரிவித்தார். ஆனால் பண்டா செல்வா ஒப்பந்தத்தினை ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, டட்லி சேனநாயக்கா போன்ற யு.என்.பி கட்சித்தலைவர்கள் கடுமையாக எதிர்த்து சிங்கள உணர்வைத் தூண்டி அரசியல் இலாபம் தேட முயன்றனர். ஜே.ஆர். கண்டி யாத்திரையை ஆரம்பித்தார். கொழும்பில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்துக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்து கல்லெறித் தாக்குதலில் ஈடுபட்டனர். ஊர்வலம் கம்பஹாவுக்கு அப்பால் செல்ல சிறிலங்கா சுதந்திரக் கட்சித் தொண்டர்கள் அனுமதிக்கவில்லை. குறிப்பாக இம்புல்கொட என்ற இடத்தில் எஸ்.டி.பண்டாரநாயக்கா எனும் இடதுசாரித் தலைவரினால் ஊர்வலம் தடுத்து நிறுத்தப்பட்டது.   

பண்டாரநாயக்காவும் அவருடைய கட்சித் தொண்டர்களும் இடதுசாரிகளும் ஒப்பந்தத்துக்கு சார்பாக இருந்து யு.என்.பி கட்சியினரையும் பிற இனவாதிகளையும் எதிர்த்தமை தமிழர்களுக்குச் சார்பான ஒரு நிலையாகும். சமஷ்டிக் கட்சித் தலைவர்கள் அவருக்கு உதவி செய்வதற்குப் பதிலாக முட்டாளத்தனமாக சிறி எதிர்ப்பு இயக்கத்தை ஆரம்பித்தார்கள். தமிழ் பிரச்சினைக்கு பரிகாரம் ஒன்றை அமுல்படுத்தக் கூடியளவிற்கு போதிய தேசிய அந்தஸ்த்தும் மக்கள் ஆதரவும் உடைய ஒரேயொரு சிங்களத் தலைவராக திரு.பண்டாரநாயக்கா ஒருவரே இருந்தார். என்பதை உணர்ந்துகொள்ளக் கூடியளவிற்கு அவர்களிடம் அரசியல் ஞானம் இருக்கவில்லை‘ என என்.சண்முகதாசன் அவர்கள் குறிப்பிடுகின்றார்.  

சிறி எதிர்ப்பு இயக்கம் என்பது வாகனங்களின் இலக்கத் தகடுகளில் இருந்த சிங்களச் சிறி‘ எனும் எழுத்தினை அழித்து அவ்விடத்தில் தமிழ் எழுத்துக்களை எழுதுவதாகும். அதாவது 1957 களுக்கு முன்பு மோட்டார் வாகனங்களின் இலக்கத்துக்கு முன்பு CEYLON எனும் ஆங்கில எழுத்துக்களே இருந்தன. சிலோன் என்பதை குறிப்பது இது. 

தனிச் சிங்களச் சட்டத்தைத் தொடர்ந்து அரசு இந்த ஆங்கில எழுத்துகளுக்குப் பதிலாக சிங்கள சிறி எழுத்தினை அறிமுகப்படுத்தியது. சிறி‘ என்பது சிறிலங்கா‘ என்பதன் சுருக்கமாகும். இவ்வாறு சிங்கள சிறி எழுதப்பட்ட மோட்டார் வாகனங்களை அரசு வடகிழக்கிற்கு அனுப்பி வைத்தது. தமிழரசுக் கட்சியினர் சிங்களச் சிறி எழுத்துடன் அனுப்பப்பட்ட வாகனங்களின் சிங்கள எழுத்தை அழித்து அந்த இடத்தில் தமிழ் வரிவடிவத்தில் எழுதினர். அவர்களுக்குத் தமிழ்‘ சிங்களத்தை எதிர்ப்பதற்கான ஒரு கருவி மட்டுமேயாகும். அவர்கள் ஆன்மாவிலும் நாடி நரம்புகளிலும் இருந்ததெல்லாம் ஆங்கிலம்தான் அதனையே அவர்கள்தமிழில் வாகனங்களில் எழுதி  வடகிழக்கில் ஓடவிட்டனர். இதுதான் தமிழ் மொழிப் பிரயோகத்தின் சீத்துவமாகும். இந்தச் சீத்துவத்துவத்தை நடாத்திய செயலணியின் பெயர்தான் சிறி எதிர்ப்பு இயக்கமாகும். 

1957இல் இவ்வியக்கம் ஆரம்பித்திருந்தாலும் பெரியளவில் பிரபல்யம் அடையவில்லை. 1958ம் ஆண்டு இலங்கைப் போக்குவரத்துச் சேவையின்  அனுராதபுர மடுவத்துக்குச் சொந்தமான பஸ் வண்டி ஒன்று சிங்கள ஸ்ரீ எழுத்துடன் யாழ்ப்பாண பஸ் நிலையத்துக்கு வந்திருப்பதை அறிந்த அப்போதைய வட்டுக்கோட்டைப் பாராளுமன்ற உறுப்பினராகவும் தமிழ் அரசுக் கட்சியின் வாலிப முன்னணித் தலைவராகவும் இருந்த திரு.அ.அமிர்தலிங்கம் அவர்கள் பஸ் நிலையம் சென்று சிங்கள எழுத்தினை தார் பூசி அழித்தார். இதுவே சிங்கள சிறி எதிர்ப்புப் போராட்டமாகப் பிரவாகம் எடுத்தது. இதன் மூலம் தமிழர்களின் தளபதியாக அமிர்தலிங்கம் உருவானார். இங்கு கவனிக்கப் படவேண்டியது சிங்களச் சிறி எழுத்துடன் வந்த பஸ் வண்டி வடகிழக்கு மடுவத்துக்குச் சொந்தமானது அல்ல அது இலங்கைப் போக்குவரத்துச் சபையின் அனுராதபுர மடுவத்துக்குச் சொந்தமானதாகும். வடகிழக்கிலுள்ள வாகனங்களின் எழுத்துக்கள் மாற்றப்பட்டமையை சிங்களச் சமூகமும் அரசும் பெரிதாக எடுத்துக் கொள்ளவும் இல்லை. ஆனால் வடகிழக்குக்குச் சொந்தமில்லாத ஒன்றின் எழுத்தை மாற்றியதுதான் சிங்களச் சமூகத்தையும் அரசையும் ஆத்திரங் கொள்ள வைத்தது.     

தமிழரசுக் கட்சியினாலன்றி தனிநபர் ஒருவரினால் எடுக்கப்பட்ட இத்திட்டமிடாத பொருத்தமற்ற பின்வளைவுகளைப் பற்றி கணக்கில் கொள்ளாத நடவடிக்கையினை அன்றிருந்த மொத்த யாழ் அதிகாரத்துவ சமூகம் எவ்வித கேள்வி பார்வையுமின்றிஅங்கீகாரம் வழங்கி அவரைத் தளபதியாகவும் கொண்டாடியது. அமிர்தலிங்கம் செய்த அதே வேலையை தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவரோ அல்லது கிழக்கைச் சேர்ந்த ஒருவரோ செய்திருப்பாரேயானால் அவரை தமிழ் அரசுக் கட்சி விசாரணைக்கு உட்படுத்தி கட்சியின் அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்று அவரைத் தண்டிக்கவும் தயங்கியிருக்காது. ஆனால் இங்கு அமிர்தலிங்கம் என்றவுடன் அவர் தளபதியாக்கப்பட்டு விட்டார். இந் நடவடிக்கைக்குள் மறைந்திருக்கும் சாதிய அரசியலையும் அமிர்தலிங்கத்தின் முறையற்ற நடவடிக்கை பற்றியும் கேள்விகள் கூட இதுவரை கேட்கப்படாதளவுக்கு எமது மூளைகள் களுவப்பட்டுள்ளன. உண்மையில் இந்த சிங்கள சிறி எதிர்ப்புப் போராட்டம் அப்பட்டமான தமிழ் இனவாதப் போராட்டமே தவிர தமிழ்த் தேசியப் போராட்டம் அல்ல என்பதனை தமிழ் மக்களுக்கு உணர்த்துவதற்கான தத்துவார்த்த அரசியலும் அதற்கான அதிகாரமும் தமிழர்களிடம் இருக்கவில்லை. 

ஏற்கனவே காலங்காலமாக தமிழர்களை, சிங்களவர்களையும் சிங்களப் பண்பாட்டையும் அழிக்கும் ஆக்கிரமிப்பாளர்களாக உருவகிக்கப்பட்டு சிங்கள பௌத்தம் நிலைநிறுத்தப்பட்டு வந்த சூழலில் சிங்கள எழுத்தை அழித்தமையானது தமிழர்கள் தொடர்பான ஆக்கிரமிப்பு அழிப்பு நடவடிக்கையினை உறுதிப்படுத்துவதாக இருந்தது. தமிழர்களின் இந்த இனத்துவ வெறிகாரணமாக சிங்கள மொழிச் சட்டத்துக்கு எதிராக வாக்களித்த முற்போக்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் சிங்களப் பொதுமக்களும் அதுவரை தமிழர்களுக்கு வழங்கிவந்த ஆதரவினை விட்டு ஒதுங்குவதற்கு வழிசமைத்தது. இவர்களின் ஒதுக்கம் சிங்கள இனவாதிகள் மேலும் தீவிரமாக தமிழர்களை புறந்தள்ளுவதற்கு வாய்ப்பாய் அமைந்தது.  

தமிழர்களின் தார் பூசுதலுக்கு எதிர்வினையாக சிங்களப் பகுதியில் இருந்த தமிழ்ப் பெயர்ப் பலகைகளும் எழுத்துக்களும் சிங்கள இன வெறியர்களினால் தார் பூசி அழிக்கப்பட்டன. ஏட்டிக்குப் போட்டியான இனவாத நடவடிக்கைகள் தீவிரமடைந்து கொண்டிருந்தமை அரசியல் இலாபம் தேடுவதற்கு வாய்ப்பாக அமைந்தது. ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, டட்லி சேனநாயக்கா போன்ற யு.என்.பி. கட்சித்தலைவர்களின் ஊர்வலத்தையே தடுத்து நிறுத்திய சிங்கள மக்கள்தமிழ்த் தலைவர்களின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளினால் பண்டாரநாயக்கா மீது அழுத்தங்களைப் பிரயோகித்து பண்டா – செல்வா ஒப்பந்தத்தை கைவிடப்பண்ணினர்.   

எமக்கு பண்டா செல்வா ஒப்பந்தம் பண்டாரநாயக்காவினால் கிழித்தெறியப்பட்டதன் பின்புலம் கூறப்படாமல் சிங்களத் தலைவர்கள் ஏமாற்றுப் பேர்வழிகளாகவும் தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கிடைக்க இருந்த கல்விசுகாதார வசதிகளைத் தடுத்த தமிழ்த் தலைவர்கள் வீரபுருசர்களாகவும் கொள்கைப் பற்றுள்ளவாகளாகவும் தியாகிகளுமாகவே கதையாடல்கள் கட்டமைக்கப்பட்டு எமது அரசியல் பகுத்தறிவு மழுங்கடிக்கப்பட்டு வந்திருப்பதை இந்த மேலாதிக்க அரசியல்வாதிகளின் இவ்வாறான நடவடிக்கைகளை பகுத்தாராயும் போது விளங்கிக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. 

(தொடரும்…)