சொல்லத் துணிந்தேன் – 84

சொல்லத் துணிந்தேன் – 84

— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்— 

‘சிங்கள முதலமைச்சருக்காக ஏங்கும் கிழக்குத் தேசியவாதிகள்’ என்ற தலைப்பிலே ‘ஊடுருவி’ என்கின்ற ஊர்பேர் சொல்லாத நபரொருவர், அழகு குணசீலன் அண்மையில் வெளியிட்ட கருத்துகள் தொடர்பாகத் தனது பதிவுகளை இட்டுள்ளார். இப்பதிவு எனது நண்பரொருவர் மூலம் எனது பார்வைக்குக் கிடைத்தது. நதிமூலம் தேடியதில் ‘உலகத் தமிழர் ஒன்றியம்’ எனும் ‘வாட்ஸ்அப்’ குரூப்பினூடாகத்தான் ‘ஊடுருவி’ எனும் இந்நபர் ஊடுருவியுள்ளார் என்ற தகவல் கிடைத்தது. 

அண்மையில் ஆய்வாளர் சி.அ.ஜோதிலிங்கம் காணொளி ஒன்றில் முன்வைத்த கருத்துகளைக் கண்டித்து அழகு குணசீலன் ‘அரங்கம்’ மின்னிதழில் தான் எழுதிவரும் பத்தித் தொடரான ‘காலக்கண்ணாடி – 46’ இல் (அரங்கம் 11.07.2021) எழுதியிருந்த விடையங்களைக் குறித்துத்தான் இந்த உலகம் தழுவிய ‘ஊடுருவி’யார் தனது பதிவுகளையிட்டுள்ளார். அவருடைய இந்தப் பதிவிலே எனது பெயரையும் இழுத்துள்ளதால் எனது ‘சொல்லத் துணிந்தேன்’ பத்தித் தொடரில் ‘ஊடுருவி’யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.  

‘காலக்கண்ணாடி – 46’ அழகு குணசீலனால் ஆய்வாளர் சி.அ.ஜோதிலிங்கத்தின் காணொளிக் கருத்துகளுக்குத் தர்க்க ரீதியாகவும் நேர்த்தியாகவும் ஒழுங்கமைக்கப்பட்ட பதில் ‘கிழக்கைக் கையாள ஏஜென்ட் தேவையா?’ என்னும் தலைப்பில் பதிவிடப்பட்டிருந்தது. ஆனால், 

அழகு குணசீலனுக்குப் பதில் சொல்லவந்த ‘ஊடுருவி’யார் கருத்துகளை கருத்துக்களால் மறுதலிக்கும் பண்பாட்டை மறந்து அழகு குணசீலன், அரங்கம் ஆசிரியர் சீவகன் மற்றும் என் மீதும் தனிநபர் தாக்குதல்களையே தொடுத்துள்ளார். 

‘ஊடுருவி’யார் முதலில் புரிந்துகொள்ள வேண்டிய விடயம் ஒன்றுள்ளது. அழகு குணசீலன் தன் சொந்தப் பெயரிலேயே ‘காலக்கண்ணாடி’ப் பத்தித்தொடரை எழுதி வருகின்றார். நானும் எனது சொந்தப் பெயரிலேயே அதுவும் எனது முழுப் பெயரிலேயே (தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்) ‘சொல்லத் துணிந்தேன்’ பத்தித் தொடரை எழுதி வருகிறேன். சீவகன் அவர்கள் எந்தப் பக்கச்சார்புமில்லாமல் சகல மாற்றுக் கருத்துகளுக்கும் ‘அரங்கம்’ மின்னிதழில் களம் கொடுத்து வருகிறார். எல்லாம் வெளிப்படையாகவே இருக்கின்றன. இப்படியிருக்கும்போது ‘ஊடுருவி’யார் தனது கருத்துகளை மிகவும் நாகரிகமான மொழியில் அரங்கம் மின்னிதழிலேயே தனது சொந்தப் பெயரிலேயே முன் வைத்திருந்தால் அதுவே நேர்மையானது. சில வேளைகளில் தவிர்க்க முடியாத சில காரணங்களுக்காகச் சொந்தப் பெயரில் எழுத முடியாத பட்சத்தில் புனைபெயரில் எழுதுவதில் தவறில்லை. ஆனால் அவை கருத்துக்களாக இருந்தால் அவை ஏற்றுக்கொள்ளத்தக்கனவே. அங்கே பெயர் பற்றிப் பிரச்சனையெழமாட்டாது. ஆனால், ‘ஊடுருவி’யார் கருத்துக்களிருந்து வெகுதூரம் விலகி நின்று தனக்கு உடன்பாடு இல்லாதவர்கள்மீது தனிநபர் தாக்குதல்களைத் தொடுக்கும் போது இந்திரஜித் மேகத்துள் ஒளிந்திருந்து பாணமெய்ததுபோலல்லாமல் சொந்தப் பெயரிலேயே வெளிப்படையாக அதனைச் செய்வதுதான் நேர்மையானது. மடியில் கனமில்லையென்றால் வழிப்பயம்வராதுதானே. இதனை ‘ஊடுருவி’யாரும் அவரது உலகத் தமிழர் ஒன்றியத்தின் ‘வட்ஸ்அப்’ சகாக்களும் உணர்ந்துகொள்ள வேண்டும். 

நிற்க, ‘ஊடுருவி’யார் தனது பதிவில் அழகு குணசீலன் குறித்தும் அரங்கம் ஆசிரியர் சீவகன் குறித்தும் கூறியுள்ள விடயங்களுக்கு அவர்கள் இருவரும் பதிலளிப்பார்கள் என்று எதிர்பார்த்து என்னைக் குறித்து ‘ஊடுருவி’யார் கூறியிருந்த விடயத்துக்கு மட்டுமே இப்பத்தியில் பதிலளிக்க விழைகிறேன். 

‘ஊடுருவி’யார் என் மீது சுமத்தியுள்ள அபாண்டமான குற்றச்சாட்டு என்னவெனில். நான் (கிழக்கில்) சிங்கள முதலமைச்சருக்காக (தயாகமகே) ஏங்குகிறேனாம் என்பதே. உண்மையில் தயாகமகேவை ஆரம்பத்தில் பெயர் வழியிலும் ஓரிரு சந்தர்ப்பங்களில் நேரில் கண்டுமே அறிந்துள்ளேன். இருவரும் ஒருபோதும் அறிமுகமாகிக் கொண்டதுமில்லை. அவருடன் ஒருநாளும் பேசியுமறியேன். அவருக்கும் என்னைத் தெரியுமோ தெரியாது. 

ஆனால், 2015 ஜனவரி 08இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன அவர்கள் வெற்றி பெற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ‘தேசிய அரசாங்கம்’ (நல்லாட்சி அரசாங்கம்) அமைந்த போது இவை எல்லாவற்றிற்கும் தாங்கள்தான் காரணமெனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தம்பட்டம் அடித்துத் திரிந்தனர். 

அப்போதிருந்த அரசியல் கள நிலையில் கிழக்கு மாகாண சபை ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன் பல தெரிவுகள் இருந்தன. இதனை நான் ‘சொல்லத் துணிந்தேன்’- 52, 53 மற்றும் 54ஆம் பத்திகளில் விளக்கமாகப் பதிவுசெய்துள்ளேன். ‘ஊடுருவி’யார் அவற்றை மீண்டும் ஒரு முறை ஊன்றிப் (ஊடுருவிப்) படிப்பது நல்லது. 

அதிலொரு தெரிவுதான் அதாவது இறுதித் தெரிவுதான் ஒரு தந்திரோபாய ரீதியாக அல்லது ஒரு பரிசோதனை முயற்சியாக யூஎன்பி ஐச் சேர்ந்த தயாகமகேவை சுமார் ஆறு மாத காலத்திற்கு மட்டுமே கிழக்கு மாகாண சபையின் முதல் அமைச்சராகப் பதவி வகிப்பதற்கு ஆதரவு வழங்கி, அதன் மூலமாகக் கிழக்குத்தமிழர்கள் அடையக்கூடிய சமூக பொருளாதார அரசியல் அனுகூலங்களை அறுவடை செய்யும் சந்தர்ப்பத்தைத் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு சாதமாகப் பயன்படுத்தியிருக்க வேண்டுமென்பதே எனது அபிப்பிராயமாகவிருந்ததே தவிர தயாகமகேவை முதலமைச்சராக்க நான் ஒருபோதும் ஏங்கியதில்லை. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன் முன்னிருந்த அத்தனை தெரிவுகளையும் கோட்டைவிட்டுவிட்டுத் தனது அரசியல் கையாலாகாத் தனத்தையே வெளிப்படுத்தியது. தனது அரசியல் கையாலாகாத்தனத்தை மூடி மறைப்பதற்கு முஸ்லீம் காங்கிரஸ் கட்சி தமக்குத் துரோகம் இழைத்ததாகவும் திட்டித் தீர்த்து அழுது புலம்பியதுதான் மிச்சம். 

‘ஊடுருவி’யார் இதனைச் சரியென்று ஏற்றுக் கொள்கிறாரா? தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இது தேவைதானா?  

மேலும், ‘ஊடுருவி’யாரின் பதிவு வரிகளை நான் ஊன்றிப் (ஊடுருவிப்) படித்தபோது எனக்கு வந்த ஊகங்கள் சில. 

‘ஊடுருவியார்’ மட்டக்களப்பைச் சேர்ந்தவர். தற்போது வெளிநாட்டில் (லண்டனில்?) வசிக்கிறார். புலி ஆதரவாளர் அல்லது புலி உறுப்பினராகக் கூட இருந்திருக்கலாம். அது தவறல்ல. அது அவரது தனி மனித உரிமை. 

ஆனால், எனது ஊகங்கள் சரியாயின் ‘ஊடுருவி’யாரே தன்னளவில் வெளிநாட்டில் இருந்துகொண்டு வெளிநாட்டிலுள்ள அழகு குணசீலனைச் சாடியது யோக்கியாம்சமில்லை. 

ஜோதிலிங்கம் தனது காணொளியில் வடக்குத் தமிழ்த் தேசியத் தலைமை கிழக்கைக் கையாள்வதில் தவறிழைத்துவிட்டது என்று கூறி எதிர்காலத்தில் அதனைத் திருத்திக் கொள்வதற்கான ஆலோசனைகளையே முன்வைத்திருந்தார். அதற்கான பதிலைத்தான் தர்க்க ரீதியாக அழகு குணசீலன் வழங்கியிருந்தார். 

ஜோதிலிங்கத்தின் ‘கிழக்கைக் கையாள்வது’ என்ற கூற்றிலேயே யாழ் மேலாதிக்கச் சிந்தனைகள் தொக்கிநிற்கின்றன. நண்பர் ஜோதிலிங்கத்திடம் சில கேள்விகள். 

கிழக்கு அரசியலை எப்போதும் வடக்குத்தான் கையாள வேண்டுமா?  

கிழக்கு அரசியலைக் கிழக்குத் தமிழர்களே கையாளக்கூடிய அறிவும் ஆற்றலும் அவர்களுக்கில்லையென்று கருதுகிறீர்களா? 

மட்டக்களப்பைச் சேர்ந்தவர் என நான் ஊகிக்கும் ‘ஊடுருவி’யாரிடமும் ஒரு கேள்வி. 

எனது ஊகம் சரியாயின் ஜோதிலிங்கத்திற்கு வக்காலத்து வாங்கும் நீங்கள் அவர் தனது காணொளியில் முன்வைத்திருக்கும் யாழ் மேலாதிக்கச் சிந்தனைகளை எந்தக் கேள்விக்கும் உள்ளாக்காமல் நிபந்தனையேதுமின்றி ஏற்றுக்கொள்கிறீர்களா? 

புலி ஆதரவாளர் அல்லது புலி உறுப்பினர் என நான் ஊகிக்கும் உங்களுக்குக் கிழக்கின் முதலமைச்சராகச் சிங்களவர் ஒருவரை (தயாகமகே) ஆக, ஆறு மாத காலத்திற்கு மட்டும் ஆக்கும் அரசியல் தந்திரோபாயம் ‘சினம்’ ஊட்டுகிறதாயின், 

* சமாதான கால கட்டமொன்றில் புலிகளின் தளபதிகளில் ஒருவரான கிட்டு யாழ் மாவட்டத்தில் கடமையாற்றிய இராணுவ அதிகாரியான கொத்தலாவலயுடன் கைகுலுக்கிப் பிறந்தநாள் வாழ்த்துக் கூறி அவருக்குப் பிறந்தநாள் பரிசாகத் தங்க மாலை பரிசளித்த போது, 

* 1987இல் பிரபாகரன் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவுடன் கூட்டுவைத்து வடக்குக் கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாகவேனும் இணைந்த வட கிழக்கு மாகாண அரசுக்கட்டமைப்பைக் குழப்பிய போது, 

* 1987/90 காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் இயக்கம் முன்னாள் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் ரஞ்சன் விஜயரட்ணவின் அனுசரணையுடன் இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்திற்கு ஆதரவாகச் செயற்பட்ட சகோதர இயக்கப் போராளிகளைப் போட்டுத்தள்ளியபோது, 

* 1990/91 காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசாவுக்கு எதிராகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருந்த (அது பின்னால் சபாநாயகரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை) குற்றவியல் பிரேரணையின்போது பிரேமதாசாவுக்கு ஆதரவாகப் பிரேரணையை எதிர்த்து வாக்களிப்பதற்காக அப்போது புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த ஈரோஸ் பாராளுமன்ற உறுப்பினர்களை விமானத்தில் அரச செலவில் கொழும்புக்குக் கூட்டி வந்தபோது, 

* புலிகளின் ஆலோசகர் அன்டன் பாலசிங்கத்தை மருத்துவச் சிகிச்சைக்காக வெளிநாடு அனுப்புவதற்கு உதவி கேட்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவிடம் கோரிக்கைவிடுத்த போது, 

* 2004 ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவைத் தோற்கடிப்பதற்காக மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் இரகசிய உடன்படிக்கையொன்றை மேற்கொண்டு தமிழ் மக்களின் வாக்குகள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அளிக்கப்படக்கூடாது என்பதற்காகப் புலிகள் அந்த ஜனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரிக்குமாறு தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்த தமிழ் மக்களைக் கட்டாயப்படுத்திய போது,  

* கருணா அம்மான் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து வந்த பின்னர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுடன் திரைமறைவில் பேசி, அரசாங்கப்படைகளின் அனுசரணையுடன் வன்னிப்புலிகள் கடல் மார்க்கமாக வெருகலுக்குவந்து, பின்பு நிலப்பகுதியை ஊடறுத்து வெருகல் ஆற்றின் இடதுகரைக்கு வந்து நிலையெடுத்து கிழக்குப் புலிகளை (அதாவது தம்மைத்தாமே) 10/04/2004 அன்று வெருகலில் வைத்துப் படுகொலை செய்தபோது, 

* 2010 ஜனாதிபதித் தேர்தலில் முள்ளியவாய்க்கால் இறுதி யுத்தத்தை இராணுவ ரீதியாகத் தலைமையேற்று வழிநடத்திய முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு ஆதரித்த போது, 

* புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் 2010ஆம் ஆண்டுப் பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் திகாமடுல்ல (அம்பாறை) தேர்தல் மாவட்டத்தில் ‘பொடியப்பு பியசேன’ என்ற சிங்களப் பெயர் இடம் பெற்றிருந்தபோது மற்றும் தாய்மொழியைச் சிங்களமாகக் கொண்ட சாணக்கியனின் பெயர் 2020ஆம் ஆண்டுப் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வேட்பாளர் பட்டியலில் உள்ளடக்கப்பட்ட போது,   

* 2015 ஜனவரி 08 ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ‘நாம்தான் மஹிந்த ராஜபக்ஷவை வீட்டுக்கனுப்பினோம். மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கினோம்’ எனப் பெருமை பேசிய போது, 

* 2015 ஆகஸ்டில் நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராகக் கொண்டமைந்த ‘நல்லாட்சி’ அரசாங்கத்திற்கு எந்த நிபந்தனையுமில்லாமல்- தமிழ் மக்களுக்கு எந்தவித நன்மைகளுமில்லாமல் சுமார் நான்கரை ஆண்டுகள் (நீதிமன்றம் வரை கூடச் சென்று) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ‘முண்டு’ கொடுத்தபோது, 

தயாகமகே சிங்களவரென்பதற்காக இப்போது வருகின்ற ‘சினம்’ ‘ஊடுருவி’யாருக்கு அப்போது எங்கே போனது? 

கொத்தலாவல, பிரேமதாசா, ரஞ்சன் விஜெயரட்ண, சந்திரிக்கா, மகிந்த ராஜபக்ஷ, சரத் பொன்சேகா, மைத்திரிபால சிறிசேன, ரணில்விக்கிரமசிங்க இவர்களெல்லாம் சிங்களவர்கள் இல்லையா? தயாகமகே மட்டும்தான் சிங்களவரா? பொடியப்பு பியசேனா மற்றும் சாணக்கியன் ஆகியோரின் சிங்களக் கலப்பு உங்கள் ஊடுருவும் கண்களுக்குத் தெரியவில்லையா? 

‘ஊடுருவி’யாரே! பிரபாகரனின் தன்முனைப்பான செயற்பாடுகளினாலும் அவர் கையில் எடுத்த தமிழ்ப் ‘பாசிச’ப் போக்குகளினாலும்தான் இலங்கைத் தமிழர்களின் நியாயமான தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் தடம் புரண்டது. ‘தமிழ்த் தேசியம்’ என்பது பௌத்த சிங்களப் பேரினவாத மேலாதிக்கக் கருத்தியலுக்கெதிரானதே தவிர சிங்கள மொழிக்கோ அல்லது சிங்களவர்களுக்கோ எதிரானதல்ல. இதைத்தான் அழகு குணசீலன் தனது ‘காலக்கண்ணாடி’க் கட்டுரையில் கூறமுற்பட்டுள்ளார்.   

நடந்தது நடந்தாகவே இருக்கட்டும். வரலாற்றிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொண்டு காலத்திற்கும் களத்திற்கும் ஏற்றவகையில் கருதுகோள்களையும் அணுகுமுறைகளையும் மாற்றுவதன் மூலம் ஈழத்தமிழினம் இழந்தவை போக (அவற்றை மீட்டெடுக்கும் வரை) எஞ்சியிருப்பவற்றையாவது காப்பாற்றுவோம்! 

அத்துடன் ‘கிழக்குத் தேசியம்’ என்று நீங்கள் பெயரிட்டு அழைக்கும் கிழக்கு அரசியல் உண்மையான தமிழ்த்தேசியத்திற்கு எதிரானதல்ல. சுதந்திர இலங்கையில் ‘இலங்கைத் தேசியம்’ பௌத்த சிங்களப் பேரினவாத மேலாதிக்கமாகப் பிறழ்வடைந்த காரணத்தால்தான் ‘தமிழ்த் தேசியம்’ உருவானது. 

அந்தத் ‘தமிழ்த் தேசியம்’ யாழ் மேலாதிக்கக் குறுந்தமிழ்த் தேசியவாதமாகவும் யாழ் மேலாதிக்கத் தமிழ்ப் பாசிசவாதமாகவும் பிறழ்வடைந்த காரணத்தால்தான் ‘கிழக்குத் தேசியம்’ (உங்கள் பார்வையின் கோணத்தில்) உருவாகியுள்ளது என்ற உண்மையையும் சற்று ஊடுருவிப் பாருங்கள்.