இலங்கையின் மீட்பர்கள் யார்? இனவாதிகளா இடதுசாரிகளா? (பகுதி 02)

இலங்கையின் மீட்பர்கள் யார்? இனவாதிகளா இடதுசாரிகளா? (பகுதி 02)

—  சிக்மலிங்கம் றெஜினோல்ட் — 

இடதுசாரிகளிடம் ஒரு பொதுவான குறைபாடுண்டு. அவர்கள் எப்போதும் தங்கள் சித்தாந்தத்திலே மிகக் கறாராக இருப்பர். பிறரோடு எந்த வகையான உடன்பாட்டுக்கும் வரமுடியாது என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருப்பர். குறிப்பாக தங்களை ஒத்த ஏனைய இடதுசாரியக் கோட்பாட்டைக் கொண்டோரை அல்லது சமத்துவவாதிகளை அல்லது பெரியாரியவாதிகளையே மிகத் தீவிரமாக எதிர்ப்பர். அல்லது இவர்களுக்கிடையில் உடன்பாடு காணமுடியாமல் திணறுவர். 

இது ஒரு தீரா நோய்க்கூறும் மூடத்தனமுமாகும். கூடவே மக்கள் விரோதச் செயலுமாகும்.  

ஏனெனில், தங்களுக்கும் மக்களுக்கும் உண்மையான எதிரிகள் யார்? என்ற தெளிவிருந்தாலும் அந்த எதிரிகளை ஒன்றிணைந்தே முறியடிக்க வேண்டும். ஒன்றிணைந்து மக்கள் அரசியலை முன்னெடுப்பதன் வழியாகத்தான் இதை ஓரளவுக்கேனும் சாத்தியப்படுத்தலாம் என்று இவர்கள் சிந்திப்பதில்லை. இந்தக் குறைபாட்டினால் இவர்கள் சிற்றணிகளாக சிதறுண்டு கிடக்க வேண்டியிருக்கிறது. இதனால் இவர்கள் பொருட்படுத்தத் தக்கவர்கள் என்ற அடையாளத்தை இழந்து விடுகின்றனர். 

பதிலாக எதிர்த்தரப்பில் உள்ள வலது அரசியலை முன்னெடுக்கும் சக்திகள் (இனவாதிகளும் மதவாதிகளும்) தேவைக்கேற்ப தங்களை நெகிழ்த்திக் கொண்டு அவ்வப்போது ஒன்றிணைவுகளைச் செய்து அதிகாரத்தைக் கைப்பற்றி வெற்றியைப் பெற்று விடுகின்றனர். இந்த எளிய சூத்திரத்தைக் கூட இவர்கள் புரிந்து கொள்ள முற்படுவதில்லை. 

உண்மையில் மக்களுக்கான அதிகாரத்தைப் பெற வேண்டிய சக்திகள் அதற்கான பொறிமுறையையும் தந்திரோபாயத்தையும் வகுக்கத் தவறி, மக்களுக்குரிய வாய்ப்பைத் தவறவிடுகின்றனர். இதன் மூலம் வலது நிலைப்பட்ட ஆதிக்கச் சக்திகளுக்கு இடமளித்து விடுகின்றனர். மக்களை இவர்களும் இணைந்தே தோற்கடிக்கின்றனர். 

இதைப்பற்றிப் பேச முற்பட்டால் ஏராளம் விளக்கங்களை வரலாற்று ரீதியாக அடுக்கி நம்மைக் களைப்படைய வைப்பர். இவர்கள் கூறுவதில் உண்மை உண்டுதான். ஆனால் அந்த உண்மைகளை சுய விமர்சனமாக்கி, அதிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு, தவறுகளைக் களைந்து புதிய நிலையொன்றை எட்டும் மனப்பாங்கும் நோக்கும் வேண்டுமே. அதை ஏன் எட்டுகிறார்களில்லை?சுத்தமான தங்கத்தினால் ஒரு போதுமே ஆபரணங்களைச் செய்ய முடியாது. அதாவது, எந்த உயிரிய கோட்பாடும் மக்களுக்குப் பயன்படவில்லை என்றால் அது புனித சுலோகமாகவே சுருங்கி விடும். 

இந்தப் பலவீனமே இடதுசாரிகளைத் தொடர்ந்தும் பலவீனப்பட்டவர்களாக்கி வெற்றிகளுக்கும் அதிகாரத்துக்கும் மிகத் தொலைவில் நிறுத்துகிறது. 

இதற்கு ஏராளம் உதாரணங்கள் உள்ளன. இலங்கையில் இடதுசாரியக் கட்சிகள் பலவுண்டு. ஆனால் அவற்றிடையே ஒருங்கிணைப்பு எதுவும்  கிடையாது. எல்லாமே உடைந்துடைந்து சிறு சிறு முகாம்களாகவே உள்ளன. சரியாகச் சொன்னால் பெட்டிக்கடைகளைப் போன்றவை. ஏதோ பெயரளவில் கட்சி என்ற அடையாளத்தோடு இருப்பவை. அதற்கப்பால் பரந்துபட்ட அளவில் மக்களின் செல்வாக்கைப் பெற்றவையல்ல. அப்படிச் செல்வாக்கைப் பெறும் முனைப்பைக் கொண்டவையும் அல்ல. 

தமிழ்த்தரப்பிலேயே உடன்பாடு கொள்ளக் கூடிய, மக்கள் அரசியலை முன்னெடுக்கின்ற, சமத்துவமான, மாற்றுச் சிந்தனையைக் கொண்ட, இடது அரசியலை உள்ளடக்கமாகக் கொண்ட தரப்புகள் உண்டு. ஆனால் ஒருங்கிணைய முடியாமல் ஒவ்வொன்றும் தனித்துச் சிதறிக் கிடக்கின்றன. சின்னஞ்சிறிய பெட்டிக்கடைகளாக. 

இதில் உள்ள வேடிக்கை என்னவென்றால், இவர்கள் தங்களுக்கிடையில் ஒருங்கிணைப்பைக் காணமாட்டார்கள். அந்தளவுக்குத் தூய்மைவாதம் பேசுவார்கள். அதேவேளை தனித்தனியாக நின்று எதிர்த்தரப்புகளை – மக்கள் விரோத அரசியலை முன்னேடுப்போரைத் திட்டுவார்கள். பொது எதிரி யார் என்று தெரிந்து கொண்டும் அந்த எதிரியை ஒன்றிணைந்து முறியடிக்காமல் தனித்தனியாகப் பிரிந்து நின்று பலமாக்குவர். இதனால் என்ன பயன் விளைந்திருக்கிறது? எதிர்தரப்பைப் பலப்படுத்தி விட்டு தாம் தொடர்ந்தும் பலவீனப்படுகின்ற நிலையிலேயே உள்ளனர். 

இதுவும் மக்கள் விரோதச் செயலே. அதாவது என்ன, ஏது என்று தெரிந்து கொண்டே அதைப் பொருட்படுத்தாதுவிடுவது. 

இதைச் சற்று வெளிப்படையாகவே சொன்னால், இன்றுள்ள தமிழ்த்தேசிய நிலைப்பட்ட அரசியற் கட்சிகளிடத்திலும் அந்தத் தளத்தில் நின்று செயற்படுவோரிடத்திலும் இடது அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டோருக்கு உடன்பாடில்லை. 

இதில் புதிய ஜனநாயக மாக்ஸிஸ லெனினிஸக் கட்சி, சமத்துவக் கட்சி, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி, இலங்கைத்தமிழர் மகா சபை, ஈழவர் ஜனநாயக முன்னணி என்றுள்ள கட்சிகள் எல்லாம் மக்கள் அரசியலை ஜனநாயக மேம்பாட்டுடன் மேற்கொள்ளும் வகையில் சிந்திப்பவை. 

ஆனால் இவற்றுக்கிடையில் பொது உடன்பாடில்லை. 

இவ்வளவுக்கும் இவர்கள் பிரதிபலிப்பது சிறுதிரள் சமூகத்தினரிடத்தில்தான். பெருந்திரளோ வலதுசாரிய கவர்ச்சி அலைகளில் ததும்பிக் கிடக்கிறது. 

இதேவேளை தமிழ்த்தேசிய நிலைப்பட்ட (வலதுசாரிய) கட்சிகள் பிரிந்து பல அணிகளாக நின்றாலும் தேவையான சந்தர்ப்பங்களில் ஒன்றிணைந்து விடும். அல்லது ஒருங்கிணைந்து நிற்கும். இது ஒரு சந்தர்ப்பவாதக் கூட்டுத்தான். ஆனால் வெற்றிக்காக – அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக அவை இதைச் செய்கின்றன. இதன் மூலமாக அவை தமது இருப்பைத் தக்க வைப்பதுடன் மாற்றுச் சக்திகளுக்கு இடமளிக்காத நிலையை உருவாக்கி விடுகின்றன. 

தேர்தல்கால ஒற்றுமை, தேர்தற் கூட்டணிகள் போன்றவற்றை நீங்கள் இந்த இடத்தில் நினைவெடுத்துப் பார்த்துக் கொள்ளலாம். அதைப்போல பொது நெருக்கடி என்று சொல்லப்படும் அல்லது அவ்வாறு கருதப்படும் இடங்களிலும் அவை ஒன்றிணைந்து, ஒருமித்து நின்று செயற்படும். உதாரணம், நினைவு கூருதல்கள் மற்றும் அரச நெருக்கடிகளின்போது. 

இந்தச் சந்தர்ப்பத்தில் இன்னொரு உதாரணத்தையும் சொல்லிச் செல்ல வேண்டும். 

இந்த இடதுசாரிகளில் ஒரு தரப்பினர் அரசுடன் இன்று இணைந்து செயற்படுகின்றனர். எல்லோரும் தனித்தனியாகவே இணைந்திருக்கின்றனர். ஒன்றிணைந்து ஒரு தரப்பாக அரசுடன் இணையவில்லை. அதைப்போல அரசாங்கத்தை ஆதரித்து நிற்கின்ற தமிழ்க்கட்சிகள் கூட தமக்குள் ஒரு இணைவைக் கொள்ளாமல் தனித்தனியாகவே அரசுடன் இணைந்திருக்கின்றன. இது தம்மைத்தாமே பலவீனப்படுத்திக் கொள்வதன்றி வேறென்ன? மட்டுமல்ல, அரசாங்கத்தோடு இணைந்தே இவை வேலை செய்கின்றன. அதுவும் ஒரே பிராந்தியத்திலேயே வேலை செய்கின்றன. அதுவும் பலமான எதிர்ப்புச் சூழலுக்குள் நின்றே வேலை செய்கின்றன. சிறுதிரளுக்குள்ளேயே வேலை செய்கின்றன. இப்படியெல்லாம் இருந்தும் தமக்கிடையில் ஒருங்கிணைவைக் கொள்ள முடியவில்லை என்றால்? அதன் அர்த்தம் என்ன? 

இதற்கு உதாரணம், வடக்கில் டக்ளஸ் தேவானந்தாவும் அங்கயன் இராமநாதனும். கிழக்கில் சந்திரகாந்தனும் (பிள்ளையானும்) வியாழேந்திரனும் கருணா என்கிற விநாயகமூர்த்தி முரளிதரனும். 

இவர்களைப் பற்றி ஒரு நண்பர் சொன்ன சுவாரசியமான சம்பவம் ஒன்றைச் சொல்ல வேண்டும். இவர்களில் ஒருவருடைய வாகனம் வழியில் பழுதடைந்து நின்றிருக்கிறது. அதே வழியால் வந்த மற்றவர் என்ன ஏது என்று கேட்காமலே விலகிச் சென்றாராம். இந்த இடத்தில் தற்செயலாக யானை ஒன்று தாக்கியிருந்தால் கூட அதுதான் நல்லது என்று மற்றைய நண்பர் நினைத்திருப்பாராம் என்றார் நண்பர். 

இது வெறுமனே கேலியல்ல. ஆழமான வருத்தத்தின்பாற்பட்ட ஒரு நிலை. இந்தளவுக்குத்தான் உள்ளது நம்முடைய சூழலின் அரசியல் நாகரீகமும் மனமுதிர்ச்சியும். 

ஆக பகை மனநிலை என்பது எல்லோரிடத்திலும் நன்றாக முற்றிக் கிடக்கிறது. இதனால் உரையாடல்களுக்கு யாரும் தயாரில்லை. கட்சிகளின் பெயர்களுக்கும் அவற்றின் செயற்பாடுகளுக்கும் இடையில் எந்தத் தொடர்புமே இல்லை என்ற நிலையில்தான் எல்லாமும் உள்ளன. 

இப்படியான நிலையில் இடது – வலது என்ற வேறுபாடுகளை அதிகமாகக் காண முடியாது. 

ஆனால் ஒரே ஒரு ஆறுதல் என்னவென்றால் பொதுவெளியிலும் பெருந்திரள் மக்களிடத்திலும் இடதுசாரிகள் இனவாதத்தை விதைக்கவில்லை என்பது. கூடவே அதிகாரத்தைக் கைப்பற்றாத காரணத்தினால் ஜனநாயக விரோத –மக்கள் விரோத ஆட்சியையோ அதிகாரத்தையோ பிரயோகிக்கவும் இல்லை என்பதாகும். 

ஆனால் உலக வரலாற்று அனுபவங்களில் இடதுசாரிகளும் உச்சமான அதிகாரத்தைப் பிரயோகித்திருப்பதைக் காண்கிறோம். ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்ததை. எதிர்ப்பை அடக்குதல் அல்லது புரட்சிகர நடவடிக்கை என்ற நிலைப்பாடெடுத்து மிக மோசமான அடக்குமுறையைப் பிரயோகித்ததை. 

இதை ஒத்த இன்னொரு உதாரணம்,நமது விடுதலை இயக்கங்கள் உருமாறித் திசைமாறி மக்கள் விரோத, விடுதலைக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கியமை. 

ஆகவே இந்த மாதிரி ஏராளமான அரசியல் பேருண்மைகள் நம்மிடம் பல கோணங்களில் சிதறிக் கிடக்கின்றன. 

இங்கே நாம் பேச வந்த இடதுசாரிகளா –இனவாதிகளா இலங்கையின் மீட்பர்கள் என்பதைப் பார்க்க முற்பட்டால், இடதுசாரிகள் பலவீனங்களின் மத்தியிலும் தவறுகளைச் செய்வதில் குறைவான பாத்திரத்தையே வகித்திருக்கின்றனர். அதிலும் ஒரு சாரார்தான் இதற்குப் பொறுப்புடையோர். ஏனைய தரப்பினருக்கு இந்தளவுக்குப் பொறுப்பில்லை. 

ஆனால் இனவாதிகளின் நிலை அப்படியல்ல. அவர்கள் இனவாதத்தை இரத்தத்தை ஊற்றியே வளர்த்தனர். அதுவும் எதிர்த்தரப்பின் இரத்தத்தை. வன்முறைகளையே தங்களுடைய அரசியலின் ஆயுதமாகப் பயன்படுத்தினர். பகைமையையும் முரணையுமே முதலீடாக்கினர். அமைதியை நிர்லமாக்கினர். சந்தேகத்தையும் அச்சத்தையும் எல்லோரிடத்திலும் விதைத்தனர். ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து விட்டனர். சனங்களைப் பகடைக்காய்களாக்கினர். ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைத்தனர். உண்மைக்கு நிறமடித்தனர். 

(தொடரும்)