— வி. சிவலிங்கம் —
* உல்லாசப் பயணத்துறை வளர்ச்சியடைய பாதுகாப்பு ஏற்பாடுகள் அவசியம்.
* பாதிப்படைந்த பெண்கள் மேலும் நீதிமன்றத்தில் அவமானப்படுத்தப்படும் அவலங்கள்.
* உல்லாச பயணத்துறை கம்பனிகளும் அவற்றின் பயணிகளின் பாதுகாப்பும்
கடந்த வாரம் பிரித்தானிய உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு ஒன்றில் இலங்கையிலுள்ள பெந்தோட்ட (Bentota) உல்லாசப் பயண விடுதியில் பிரித்தானிய பெண்மணி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்பட்டது தொடர்பாக கடந்த 11 வருடங்களாக நடைபெற்ற வழக்கில் அப் பெண்மணிக்கு சார்பாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் மிகவும் பிரசித்தி வாய்ந்த உல்லாச பயண முகவர் நிறுவனம் ஒன்று இலங்கைக்கென சகல அம்சங்களையும் உள்ளடக்கிய (Package holiday) உல்லாச பயண ஒழுங்குகளைச் செய்திருந்தது.
நடந்தது என்ன?
பிரித்தானியாவைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் தனது கணவருடன் இவ் உல்லாசப் பயணக் கம்பனி மூலமாக இலங்கையில் தமது விடுமுறைக்கான ஒழுங்குகளை மேற்கொண்டிருந்தார். தற்போது வயது 40ஐ எட்டியுள்ள அப் பெண்மணி கடந்த 2010ம் ஆண்டு யூலை மாதம் பென்தோட்டை உல்லாச பயணிகள் விடுதியில் அதாவது 11 ஆண்டுகளுக்கு முன்னர் சென்றிருந்தார்.
அவர் 2010ம் ஆண்டு யூலை மாதம் 17ம் திகதி அவ் விடுதியின் கீழ் பகுதிக்கு சென்ற வேளையில் அங்கு மின்சாரம் பழுது திருத்தும் ஒருவர் தனது சீருடையை அணிந்தபடி நின்றிருந்தார். அவ் விடுதியின் வரவேற்பு மையத்திற்குச் செல்லும் குறுக்கு வழியைக் காண்பிப்பதாகக் கூறி ஓர் அறைக்குள் அடைத்து அவர் பாலியல் கொடுமை புரிந்து தாக்கியும் உள்ளார். அதன் விளைவாக அப் பெண் உள ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டார்.
வழக்கு விபரம்
இவ் வழக்கு மிக முக்கியமான அம்சங்களை வெளிப்படுத்தியிருப்பதை வாசகர்களுக்குத் தரும் நோக்கிலேயே இவ் விபரங்கள் தரப்படுகின்றன.
பாதிக்கப்பட்ட பெண்மணியின் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர்கள் விடுமுறை ஒழுங்குகளை மேற்கொள்ளும் கம்பனி அப் பெண்மணியை வரவேற்பு மையத்திற்கு குறுக்கு வழியில் அழைத்துச் செல்லும் கடமையையும் தனது பயண ஒழுங்குகளில் செய்துள்ளதால் அதற்கான பொறுப்பை அக் கம்பனி பொறுப்பேற்க வேண்டும் என்பதே வாதமாக அமைந்தது.
பிரித்தானிய உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் உல்லாச பயணங்களை ஒழுங்கு செய்யும் கம்பனிகள் வெறுமனே தங்கும் இடம், உணவு, போக்குவரத்து என்பது மட்டுமல்ல, தனது வாடிக்கையாளர்கள் அந்த உல்லாச பயணத்தை நியாயமான விதத்தில் அனுபவிப்தையும், அதற்கான பாதுகாப்பையும் உறுதி செய்வது அவசியம் எனத் தீர்ப்பளித்திருந்தது.
பயணத்துறை கம்பனியின் தொடர்ச்சியான இழிவுபடுத்தல்கள்
நீதிமன்றத் தீர்ப்பினால் ஓரளவு மகிழ்ச்சியை அப் பெண்மணி தெரிவித்த போதிலும் கடந்த 11 வருடங்களாக இக் கம்பனி ஊடகங்களில் வழக்கை நடத்தியிருப்பதாகவும், தனது விபரங்களை முகநூல் வழியாகப் பெற்று தம்மை சமூக வலைத் தளங்களில் மிகவும் அவமானப்படுத்தியதாகவும், அதன் காரணமாக வைத்திய ஆலோசனைகளைப் பெறும் நிலைக்குத் தாம் தள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார்.
தம்மைப் பொறுத்த வரையில் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்திலும் பாலியல் விபரங்களை மீளவும் விசாரித்து மேலும் மன நோயை அதிகரித்த நிலைக்குத் தள்ளுவதாகத் தெரிவித்தார். இந்த வழக்கு என்பது அக் கம்பனி அந்தச் சம்பவத்திற்கு முன்னரும், பின்னரும் தம்மைப் பாதுகாக்கத் தவறியுள்ளது என்பதே தமது குற்றச்சாட்டு என்றார். தனக்கு ஏற்பட்ட பாதிப்புகளைக் கவனத்தில் கொள்ளாது அக் கம்பனி தம்மை நீதிமன்றத்தில் மேலும் மேலும் துன்புறுத்தியுள்ளது என்றார்.
இந்த வழக்கானது இக் குற்றச் செயலுக்கான சட்டப்படியான பொறுப்பாளர் யார்? என்பது குறித்ததாகும். ஆனால் அக் கம்பனியின் சட்டத்தரணிகள் தனது முகநூல் விபரங்கள், சமூக வலைத்தளங்களில் வெளியான விபரங்கள், தனது வைத்திய சிகிச்சை விபரங்கள், உளவியல் தாக்கங்கள் தொடர்பான விபரங்கள் போன்ற பல விபரங்கள் பற்றிய கேள்விகளே நீதிமன்றத்தில் தொடர்ந்தன. இவை யாவும் இக் குற்றச் செயல்களுக்குப் பின்னதான தனது உடல்நிலை பாதிப்புற்ற வேளையில்தான் நிகழ்ந்தன.
பாலியல் குற்றச் செயல்கள் காரணமாக பாதிப்புறும் மக்கள் தொடர்ந்தும் இவ்வாறான கொடுமைகளை அனுபவிக்கின்ற நிலமைகள் காணப்பட்ட போதிலும் அக் கம்பனி உண்மையில் தனது செயற்பாடுகளில் உள்ள தவறுகளைக் கண்டறிந்திருக்க வேண்டும். இந்த தீர்ப்பின் மூலம் அக் கம்பனி தனது வாடிக்கையாளர்களின் சுகாதாரம், பாதுகாப்பு, அவர்களுக்கான உதவிகள் என்பதில் எதிர்காலத்தில் கவனம் கொள்வார்கள் என நம்புகிறேன் என்றார். ஆனால் என்னைப் போன்று இதர பெண்களும் இவ்வாறு மிகவும் தளராத எண்ணத்துடன் நீதியைப் பெற இவ்வாறு செயற்படுவார்களா? என்பது சந்தேகமே எனவும் தெரிவித்தார்.
இப் பெண்மணி சார்பில் வாதாடிய வழக்கறிஞர் கருத்து
சர்வதேச கடுமையான காயங்களுக்காக வாதாடும் சிறப்பு புலமை மிக்க அந்த வழக்கறிஞர் தெரிவிக்கையில் இப் பெண் அனுபவித்த துன்பங்கள் அப் பெண்ணை மட்டும் பாதிக்கவில்லை எனவும் முழுமையான குடும்பமே மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் அதன் தாக்கத்தை அவர்கள் மிகவும் குறைத்தே மதிப்பிட்டிருந்தார்கள். கடந்த ஒரு தசாப்தமாக அவர்களின் வாழ்வு மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. இந்தத் தீர்ப்பை வரவேற்கின்ற போதிலும் நடந்தவை அவற்றை ஆற்றுப்படுத்தப்போவதில்லை.
இந்த விடுமுறை காலத்தில் நிகழ்ந்த சம்பவம் என்பது அவரால் எதிர்பார்க்கப்பட்ட சம்பவம் அல்ல. இச் சம்பவம் விடுமுறைக்கான ஏற்பாடுகளின் தரத்தை விட மிகக் குறைந்ததாகவே உள்ளது.
இத் தீர்ப்பின் பரந்த தாக்கங்கள்
இத் தீர்ப்பு உல்லாச பயண ஒழுங்குகளை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு முக்கியமான ஒன்றாகும். அவர்களின் சட்ட அடிப்படையிலான பொறுப்புகளை இத் தீர்ப்பு உணர்த்தியுள்ளது. அத்துடன் அவ்வாறான நிறுவனங்களையும் பாதுகாக்க உதவியுள்ளது.
இத் தீர்ப்பு தமது பொறுப்பிலுள்ள பயணிகளின் பாதுகாப்பு இந்த உல்லாச பயணங்களை ஏற்பாடு செய்யும் கம்பனிகளின் பொறுப்பு என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் உல்லாசப் பயணத்துறை என்பது மிக முக்கியமான வருமானம் ஈட்டும் துறை என்பதால் உல்லாசப் பயணிகளின் பாதுகாப்பு என்பது மிக முக்கியமானது என்பதை அரசு மட்டுமல்ல, உல்லாச பயணிகளும், அவர்களை விருந்தினராகக் கொள்ளும் அந் நாட்டு மக்களும் அப் பயணிகளை மிகவும் கௌரவமாக நடத்துவது நாட்டின் கௌரவத்திற்கும், வருமானத்திற்கும் பயனுள்ளதாக அமையும் என்பதை இத் தீர்ப்பு தந்துள்ளது.