THE PEN & THE GUN! : தமிழர் அரசியலில் ஊடக சுதந்திரம்(?) (காலக்கண்ணாடி 48)

THE PEN & THE GUN! : தமிழர் அரசியலில் ஊடக சுதந்திரம்(?) (காலக்கண்ணாடி 48)

—- அழகு குணசீலன் —-

((காலக்கண்ணாடி – 46 இல் பதிவிட்பட்ட கருத்துக்களுக்கு எதிராக “ஊடுருவி” என்ற சுய அடையாளம் அற்ற முகமூடி, மொட்டைக்கடிதக் குழு ஒன்று வாட்ஸ்அப் இல் பகிர்ந்து கொண்ட யோதிலிங்கம் அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் கருத்துக்களுக்கான(?) பதில் இக்கண்காணாடியின் இறுதியில் காட்சிப்படுத்தப்படுகிறது.)) 

தமிழர் அரசியலில் ஊடக, கருத்து சுதந்திரம் பற்றி சற்று திரும்பிப் பார்க்கையில் ஆயுதப்போராட்டத்திற்கு முன்னரும், போராட்ட காலத்திலும், போர் ஓய்வுக்குப் பின்னரும் இடம்பெற்ற பல நிகழ்வுகள் மனக்கண்ணில் படமாய் ஓடுகின்றன. 

அந்த வகையில் முன்னணி தேசிய தமிழ்ப் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களான தினபதி/ சிந்தாமணி எஸ்.ரி.சிவநாயகம், தினகரன் எஸ்.சிவகுருநாதன், வீரகேசரி எஸ்.சிவப்பிரகாசம், ஏ.சிவநேசச்செல்வன் ஆகியோரின் முகங்கள் நிழலாய் விழுகின்றன. இந்த ஆளுமைகளின் காலத்தில் அன்று நிலவிய கருத்துச் சுதந்திரமும், ஊடக அறமும் சிந்திக்கத் தூண்டுகின்றன. இவர்கள் ஆற்றிய ஊடகப்பணி இன்றும் முன்மாதிரியாக உள்ளது. 

அதேபோல் போராட்ட காலத்தினை நோக்கினால் சற்றர்டே ரிவியூ பிரதம ஆசிரியர் எஸ்.சிவஞானம் நினைவில் கொள்ளப்பட வேண்டிய ஒருவர். 1981இல் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட “SATURDAY REVIEW” 1983 கலவரத்தை தொடர்ந்து ஜே.ஆர்.ஜயவர்தன அரசினால் தடைசெய்யப்பட்டது. அதைப் போன்று “ஈழநாடு” இனவாத நெருப்பிட்டு எரிக்கப்பட்டது. 

சிவஞானம் அவர்களின் பத்திரிகைப் பணியைக் கௌரவித்து அவரால் எழுதப்பட்ட ஆசிரியர் தலையங்கங்களையும், மற்றைய கட்டுரைகளையும் உள்ளடக்கிய  (1977-2001) “THE PEN AND THE GUN” என்ற தொகுப்பின் தலைப்பு இவ்வாரக் காலக்கண்ணாடியை அலங்கரிக்கின்றது. இந்தத் தலைப்பில் வெவ்வேறு நூல்கள் வெவ்வேறு மொழிகளில் வெளிவந்துள்ள போதும் இது எஸ்.சிவஞானம் அவர்களின் ஊடகப்பணிக்கான, கௌரவமாகவும், ஊடகங்கள் மீதான ஆயுத கலாச்சாரத்திற்கு அச்சொட்டாக பொருந்துகின்ற தலைப்பாகவும் உள்ளது. 

தமிழர் அரசியலில் ஊடக சுதந்திரம் பேசு பொருளாகும் போது போராட்ட ஆயுத சூறாவளியில் சிக்கிய பல பத்து ஊடகவியலாளர்களையும், விமர்சகர்களையும், ஆய்வாளர்களையும், படைப்பாளிகளையும் சாதாரணமாக கடந்து செல்ல முடியாது. இதில் பத்திரிகைகள் மட்டுமன்றி, வானோலி, தொலைக்காட்சிகளும், இன்றைய இணையங்களும், சமூக ஊடகங்களும் உள்ளடங்குகின்றன. 

சமகாலத்தில் ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகளிலும் பல்வேறு ஊடகங்களும், படைப்பாளிகளும், வெளியீட்டாளர்களும் தம்பங்குக்கு தம்மால் இயன்றவற்றைச் செய்தார்கள். 1970 களில் இருந்து 1983 வரை போராட்டத்திற்கு சமாந்தரமாக நகர்ந்த ஜனநாயகம், ஊடக சுதந்திரம் இந்தக்காலப்பகுதியையும் தாண்டி நகர முடியவில்லை. புலம்பெயர்ந்த நாடுகளில் ஊடக, கருத்துச் சுதந்திரம் மீதான அச்சுறுத்தல், குரல்வளை நசிப்பு 1990களில் தொற்றிக்கொண்டது. 

இலங்கையின் அரசியல் அமைப்பின் 14வது சரத்தின், 1வது பிரிவு ஒவ்வொரு பிரஜைகளுக்குமான கருத்துச்சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், ஒன்றுகூடல் மற்றும் வெளியீடுகளை செய்வதற்கான உரிமைகளை உறுதிப்படுத்துகின்ற போதும் நடைமுறையில் அது வெறும் காகித உரிமையாகவே உள்ளது. இது இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனநாயகம் குறித்தும், சட்டம், ஒழுங்கு, நிர்வாகம், நீதித்துறை குறித்தும் பல கேள்விகளை எழுப்புவதாக அமைந்துள்ளது என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இருக்க முடியாது. 

காலப்போக்கில் அரசாங்க லேக் ஹவுஸ் பத்திரிகைகளும், லங்காபுவத் செய்தி முகவர் நிலையமும் அரசாங்கத்தின் முற்றுமுழுதான பிரச்சார ஊதுகுழல்களாக மாறின. தனியார் பத்திரிகை நிறுவனங்கள் தங்களை நடுநிலையானவை எனக் காட்டுவதற்கு படாதபாடுபட்டன. இன்னொரு பக்கத்தில் அரசியல் கட்சிகளின் வெளியீடுகள் வெறும் கட்சி பிரச்சாரம் சார்ந்தே வெளியிடப்பட்டன. வரவு-செலவு, வாக்கு வங்கியைக் கொண்டு கணக்கிடப்பட்டது. பல சந்தர்ப்பங்களில் இது தப்புக்கணக்காகவும் அமைந்தது. 

இவை அனைத்திற்கும் மேலாக சின்னஞ்சிறிய மாற்றுக் குழுக்காளால் வெளியிடப்பட்ட சரிநிகர், ராவய போன்ற பத்திரிகைகள் சரியான பார்வையைக் கொண்டிருந்த போதும் பெரும் நிதி நெருக்கடிகளை எதிர்நோக்க வேண்டி இருந்தது. ஆக, அரசியல் அதிகாரம், நிதிநிலை, சந்தையில் மலினப்பத்திரிகைகளின் போட்டி என்பன துரத்திய நிலையில் இந்த மாற்று ஊடகங்களால் தப்பிப்பிழைக்க முடியவில்லை. 

மறுபக்கத்தில் இந்த ஊடகங்கள் “துரோக” ஊடகங்களாக பிரகடனப்படுத்தப்பட்டன. அவை செய்த “துரோகம்” மாற்றுக் கருத்தைக் கொண்டிருந்ததுதான். தமிழ் அகராதியில் மாற்றுக்கருத்து என்பதன் அர்த்தம் துரோகம்.(?) 

1970களில்  மட்டக்களப்பு வீரகேசரி செய்தியாளராக வி.சி.கதிர்காமத்தம்பி இருந்தார். மட்டக்களப்பு கல்லடிப் பாலத்திற்கு அருகில் இராஜன் செல்வநாயகத்தின் அட்டகாசத்திற்கு மத்தியில், தேர்தலுக்கு முன்னர் இடம்பெற்ற பகிரங்க கூட்டம் ஒன்றில் இராசதுரையும் காசி ஆனந்தனும் ஒரேமேடையில் பேசினார்கள். பூ.கணேசலிஙகத்தின் துணிச்சலால் இக் கூட்டம் கைகூடியது. 

அந்த மேடையில் முதலில் உரையாற்றிய காசி ஆனந்தன் “இராசு அண்ணர் ஒதுங்கி இருந்து எம்மை ஆசீர்வதிக்கவேண்டும்” என்று பேசினார். வழமைபோல் தமிழரசுக்கட்சியின் கூட்டங்களில் இறுதிப் பேச்சாளராக முழங்கும்  “சொல்லின் செல்வர்” எழுந்தார். “தம்பி காசி ஆனந்தனும் நானும் இரட்டைக்குழல் துப்பாக்கிகள்” என்றார். வாவி மீன்கள் மட்டுமல்ல, வான் மீன்களும் அன்றிரவு பாடின.  கூடியிருந்த மக்களின் கரகோஷத்தினால் மண்ணும், விண்ணும் அதிர்ந்தன.  

மறுநாள் இந்தச் செய்தி வீரகேசரியின் முன்பக்கத்தில் இரட்டைத் தலைப்பிட்டு வெளிவந்தது. செய்தி ஒன்று! தலைப்பு இரண்டு!! அதன்வடிவம் இது: 

“தம்பி காசி ஆனந்தனும் நானும் இரட்டைக் குழல் துப்பாக்கிகள்” 

                                                                                           – இராசதுரை – 

“இராசு அண்ணர் ஒதுங்கி இருந்து எம்மை ஆசீர்வதிக்க வேண்டும் ” 

                                                                                            – காசி ஆனந்தன் – 

இது மூத்த பத்திரிகையாளர் வி.சி.கதிர்காமத்தம்பியினால் அன்று எழுதப்பட்ட செய்தியின் தலைப்பு. 

பின்னர் 1977 தேர்தல் காலத்தில் வி.சி.கதிர்காமத்தம்பி, இராசதுரைக்கு ஆதரவாக செய்திகளை எழுதுகிறார் என்றும் அதை வீரகேசரி வெளியிடுகிறது என்றும், காசி ஆனந்தனின் ஆதரவாளர்கள் குறிப்பாக இளைஞர்கள் குற்றம்சாட்டினார்கள். இந்தக் குற்றச்சாட்டு வீரகேசரி ஆசிரியபீடத்தையும் எட்டியது.  

வீரகேசரி கதிர்காமத்தம்பியை கொழும்பு தலைமைக் காரியாலயத்திற்கு அழைத்தது. மட்டக்களப்புக்கு தலைமைக் காரியாலயத்தில் இருந்து வேறு ஒரு  நடுநிலை செய்தியாளரை அனுப்பியது. அவர் வேறுயாருமல்ல பின்னாளில் புலிகளால் “துரோகி” பட்டம் வழங்கப்பட்ட பிரபல பத்தி எழுத்தாளர் டீ.பி.எஸ்.ஜெயராஜ். 

அந்த அளவுக்கு மக்களின், வாசகர்களின், ஆதரவாளர்களின் கருத்துக்களுக்கு செவிமடுத்து  ஊடக ஜனநாயக பாரம்பரியத்திற்கு உயிரூட்டுகின்ற நடுநிலையான போக்கு அன்று இருந்தது என்பதைக் காட்டுவதற்கே இந்த நிகழ்வும், செய்தியின் வடிவமும்  இங்கு காட்சிப்படுத்தப்பட்டது. 

————————————————- 

பேனாக்களை குறிவைத்த துப்பாக்கிகள் ! 

“புதிய பாதை”யின் ஆசிரியர் சுந்தரம் மீது புலிகள் மேற்கொண்ட துப்பாக்கி வேட்டே, தமிழ்த்தேசிய விடுதலைப்போராட்ட வரலாற்றில் பேனா மீது தீர்க்கப்பட்ட முதல் வேட்டு.. முதல் சகோதரப்படுகொலை. 1982 ஜனவரி 2ம் நாள் இக் கறை படிந்தது. இது முதல் ஊடகங்களின் குரல்வளை  கழுத்தில் சுருக்கிட்டு மெல்ல மெல்ல இறுக்கப்பட்டது. “பொட்டு” வைக்கும், மண்டையில் போடும் ஆயுதக்கலாச்சாரம் ஆரம்பமானது. 

1983 கலவரத்தைத் தொடர்ந்து நிலைமை மோசமடைந்து கொண்டே போனது. இலங்கை வானொலியின் பிரபல அறிவிப்பாளர் கே.எஸ்.ராஜா சுட்டுக்கொல்லப்பட்டார். இந்திய இராணுவத்துடன் சேர்ந்து இயங்கிய திரிஸ்டார் (ஈ.பி.ஆர்.எல்.எப், ஈ.என்.டி.எல்.எப், ரெலோ) குழு மட்டக்களப்பு வீரகேசரி செய்தியாளர் நித்தியானந்தன் மீது தாக்குதல் நடாத்தியது. 1999 க்கும் 2009 க்கும் இடையில் 19 ஊடகவியலாளர்களின் பேனாக்கள் துப்பாக்கியினால் சுட்டுவீழ்த்தப்பட்டன.  

அனுராதபுரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் கிளை திறப்பு விழாவின்போது புலிகளால் முன்னாள் இராணுவத் தளபதி ஜானக பெரேராவை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் ஊடகவியலாளர் றஷ்மி மொகமட் கொல்லப்பட்டார்.  

சந்திரிகா பண்டாரநாயக்காவை இலக்கு வைத்த புலிகளின் தற்கொலைத்தாக்குதலில் இரு சிங்கள ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். அதேபோல் 2007 மாவீரர் தினத்தன்று சிறிலங்கா விமானப்படைத் தாக்குதலில் புலிகளின் குரல் ஊடகவியலாளர்கள் இசைவிழி, சுரேஷ், தர்மலிங்கம் மூவரும் கொல்லப்பட்டனர். பின்னர் இசைப்பிரியா, சந்திரபோஸ் ஆகியோரும் இராணுவத்தால் கொல்லப்பட்டனர். 

நிமலராஜன், நடேசன், சிவராம், சத்தியமூர்த்தி, சிவமகராஜா ஆகியோரின் கொலையில் அரச படையினர் அல்லது அவர்களுடன் சேர்ந்து செயற்பட்ட வேறுபட்ட புளொட், கருணா, ஈ.பி.டி.பி போன்ற தமிழ் குழுக்கள் மீது சந்தேகம் நிலவுகிறது. 

ரமேஷ், சின்னபாலா, தேவகுமார், றேலங்கி, இராஜேஸ்வரன் ஆகியோரின் கொலைகளில் விடுதலைப்புலிகள் மீது சந்தேகம் நிலவுகிறது.  இந்திய -இலங்கை சமாதான உடன்படிக்கைக்கு எதிராக தென் இலங்கையில் ஜே.வி.பி.யினரால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைக்கு பல சிங்கள ஊடகவியலாளர்கள் பலியானார்கள். ஒட்டு மொத்தமாக கொலையாளி இனம்காணப்படாத இக்கொலைகள் அனைத்தும் இனம்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்டவை என்று பட்டியல் இடப்பட்டது. 

மட்டக்களப்பில்  தினக்கதிர் பத்திரிகை நிறுவனத்தை புலிகள் தகர்த்தார்கள். அச்சு இயந்திரங்களை அபகரித்து சென்று தமிழ்அலை பத்திரிகையை வெளியிட்டார்கள். இதில் முன்னாள் பா.உ. அரியநேத்திரன் முக்கிய பணியில் இருந்தார். இவர் கூட ஊடக சுதந்திரம் பற்றிப் பேசுகிறார்.  அதிகாரமும், ஆயுதமும், பதவியும் இருக்கும் பக்கம் பாயும் அரசியல்வாதிகள். காற்றடிக்கும் பக்கம் ஆலாய்ப் பறப்பார்கள். 

இலங்கையில் இதுதான் நிலைமை என்றால், ஈழத்தமிழர்கள் புலம் பெயர்ந்த நாடுகளிலும் வன்முறை முதுகுப் பையில் கொண்டு வந்து இறக்கப்பட்டது. ஐரோப்பாவில் பிரான்ஸ், சுவிஸ், ஜேர்மனியில் ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் மீது திட்டமிட்ட தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. 

பிரான்ஸ் நாட்டில் மாற்றுக்கருத்தாளர்கள், அவர்களின் அமைப்புக்கள் மீது புலிகளின் பொறுப்பாளர் திலகர் காலத்தில் இருந்தே வன்முறைகள் இடம்பெற்றன. மாற்று அரசியல், கலை, இலக்கிய கருத்துக்களைக் கொண்ட குழுக்கள் அச்சுறுத்தப்பட்டன. கருத்தை கருத்தால் வெல்ல முடியாத கோழைகள் சபாலிங்கம் சுட்டுக் கொன்றனர். 

மறுபக்கத்தில் கஜன், நாதன் என்ற இரு ஊடகவியலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். இது சிறிலங்கா அரசின் திட்டமிட்ட கொலை என்று கூறப்பட்டது. பாரிசில் இருந்து ஒலிபரப்பான குகநாதனின் ரீ.ஆர்.ரீ வானொலி, தொலைக்காட்சி நிறுவனத்தை புலிகள் கைப்பற்றினர். மாற்று விடுதலைப்போராட்ட குழுக்களின் செயற்பாடு தடைசெய்யப்பட்டது. 

ஜேர்மனியில் ஜெமினியின் “தேனீ” இணையத்தளம் பெரும் அச்சுறுத்தல்களை புலிகளால் எதிர்நோக்கியது. சுவிஸில் “தமிழ் ஏடு” பத்திரிகைக்கும், தினமுரசு பத்திரிகைக்கும் அன்றைய புலிகளின் பொறுப்பாளர் முரளி தடை விதித்தார். தமிழ் வர்த்தகர்கள் இப் பத்திரிகைகளை விற்கக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டனர். “மனிதம் குழு”, இலக்கியச் சந்திப்பு, பெண்கள் சந்திப்பு என்பன அச்சுறுத்தப்பட்டன. கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. 

லண்டனில் இருந்து ஒலிபரப்பாகிய இராமராஜின் ரி.பி.சி வானோலி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அதன் “வான்முரசு” பத்திரிகை பறிக்கப்பட்டது. அதன் ஊடகவியலாளர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. 

கனடாவில் “தேடகம்” புலிகளால் எரிக்கப்பட்டது. ஊடகவியலாளர்கள், படைப்பாளிகள் எச்சரிக்கப்பட்டனர். பத்தி எழுத்தாளர் டீ.பி.எஸ்.ஜெயராஜ்க்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. அவரால் வெளியிடப்பட்ட “செந்தாமரை” பத்திரிகைக்கு புலிகள் பல தடைகளைப் போட்டனர். 

புலம் பெயர்ந்த நாடுகளின் ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம், ஒன்று கூடும் சுதந்திரம் என்பனவற்றை அனுபவித்துக் கொண்டு, புலம் பெயர்ந்த மாற்றுக்கருத்து தமிழர் அமைப்புக்களுக்கு புலிகள் அதை மறுத்தார்கள். காலப்போக்கில் சட்டம் திலகர், முரளி போன்றவர்களை துரத்தியபோது  வேறு நாடுகளுக்கு தப்பி ஓடினார்கள். 

“ஊடுருவி” – முகமூடியின்  மறைந்து இருந்து பார்க்கும் மர்ம ஊடகப்பாணி..! யோதிலிங்கத்திற்கு வாங்கும் வக்காலத்து…!! 

ஊடுருவி என்ற பெயரில் மறைந்து கொண்டு முகவரியைத் தொலைத்து, முகமூடியும், முக்காடும் அணிந்து வெறும் தனிநபர்கள் பற்றிப் பேசும் இவர், யோதிலிங்கத்தின் கருத்துக்களுக்கு காலக்கண்ணாடி வைத்த எந்த எதிர்க்கருத்தையும் மறுத்துவாதிடும் திராணியற்றவர். யோதிலிங்கத்திற்கு வக்காலத்துவாங்கப் போய் அரசியல் என்ற பெயரில் ஒரு உளறல். பானையில் இருந்தால்தானே அகப்பையில் வரும். 

தேசிய விடுதலைப்போராட்டங்கள் குறித்த கருத்தாடல்கள் பொழுதுபோக்குக்கான அரட்டை அரசியல் அல்ல. இவர்கள் இன்னும் மட்டக்களப்பு பழைய பஸ் நிலையத்திற்கு முன்னால் இருந்த “அல்ஹாம்றா” உணவுவிடுதிக்கு அருகில் கூடிநின்று அரைத்த அரசியலைத்தான் திருப்பி அரைக்கிறார்கள். முப்பது ஆண்டுகால ஆயுதப்போராட்டம் இவர்களில் நடைமுறை, ஜதார்த்த, கோட்பாட்டு அரசியலில் எந்த  வளர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை என்பதை அவர்களே நிரூபித்துள்ளனர். வயது மட்டும் தான் ஏறி இருக்கிறது. அரசியல் முதிர்ச்சி இல்லை. 

சிங்கள முதலமைச்சருக்காக ஏங்குவதாக கயிறு திரிக்கிறார் “இனம் தெரியாத ஊடுருவி”. காலக்கண்ணாடி-46 அங்கு பேசுவது சகல இனத்தவர்களுக்குமான உரிமைபற்றியது. அதைமறுத்துப் பேசுவது அரசியல் வரட்சியுள்ள உங்கள் தமிழ்த்தேசியமாக இருக்கலாம். நீங்கள் விரும்புகின்ற முட்டாள்தனமான அரசியலைப் பேச நாங்கள் என்ன உங்களின் நாக்குகளா? இயலுமானால் சிங்களவர்களுக்கு அந்த உரிமை இல்லை என்று யோதிலிங்கத்தை வாதிடச் சொல்லுங்கள். 

ஈ.பி.ஆர்.எல்.எப். இல் புலிகள் வழங்கிய துரோகிகள் பட்டத்துடன், சுரேஷ் பிரேமச்சந்திரனை நாடிச் சென்று, தற்போது ஒரு நாடு இருதேசத்தில் இருந்து கழட்டி விடப்பட்ட முதல்வர் மணிவண்ணனுக்கு முட்டுக் கொடுக்கிறார் யோதிலிங்கம். இத்தனை தமிழ்த்தேசிய அனுபவங்களை கொண்ட மேதகு அவர்களுக்கு காலக்கண்ணாடியின் கருத்தை மறுதலிக்க வக்கில்லை.  

அதற்காக வக்காலத்து வாங்குகிறார்கள் முகமூடிகள். முகமூடிகளே! இந்திய இராணுவ காலத்தில் சோதனைச்சாவடியில் நின்ற மாற்று இயக்கத்தவர்களை நீங்கள் முகமூடிகள் என்றும் துரோகிகள் என்றும் அழைத்தீர்கள். இப்போது அதே முகமூடியை போட்டுக் கொண்டு நீங்கள்….? உங்களுக்கும் அந்தப் பட்டத்தைச் சூட்டலாமா? 

“ஆற்றல் மிகுந்தவன் சாதிக்கிறான், முடியாதவன் போதிக்கிறான்” என்று வீராப்பு பேசும் உங்களிடம் ஒரு கேள்வி! போதனை அற்ற வெறும் சாதனை வாணவேடிக்கை. புஷ் வாணம். இதன் மூலம் உலகில் வெற்றியடைந்த ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தைத் சொல்வீர்களா? ஒன்றே ஒன்று போதும். உங்கள் பானை வெறும்பானைதான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கிறீர்கள். 

விடுதலைப் போராட்டத்தை அரசியல் சிந்தாந்த அடிப்படையில் நகர்த்திய புளட்டை சோத்துப் பார்சல் என்றீர்கள், விடியும் வரை காத்திரு என்றீர்கள். ஈ.பி.ஆர்.எல்.எப். இழிசனர் இயக்கம் என்றும், ரெலோ இந்தியாவின், கருணாநிதியின் கைக்கூலி என்றீர்கள்.  

ஆயுத சாதனைதான் விடுதலை என்றும் மற்றைய போராளி இயக்கங்கள் எல்லாம் வெறும் போதனை செய்கிறார்கள் என்றும்தானே சகோதர இயக்கங்களை அழித்து, தடைசெய்து முதலாளித்துவ ஏகபோகத்தை கையில் எடுத்து விடுதலைப் போராட்டத்தை தனியுரிமை ஆக்கினீர்கள். 

இறுதியில் நடந்தது என்ன?   

புலிகள் தடைசெய்த, தலைமைத்துவங்களை அழித்த, போராளிகளை சுட்டுத்தள்ளிய இயக்கங்களும், கட்சிகளும்தானே இன்று தமித்த்தேசியத்தை சுமந்துநிற்கின்றன. புலிகள் இருந்த இடம் தெரியாமல்  போனது ஏன்? எல்லாம் விதியின் விளையாட்டு. மாற்று இயக்கங்களும், மக்களும்  சிந்திய இரத்தமும் கண்ணீரும். ஏகபோகம் தந்த “மேதகு” பரிசு. இனியாவது அரசியல் பேசுங்கள். மத நம்பிக்கையாளர்கள் விதி என்கிறார்கள், மற்றவர்கள் வரலாற்று நியதி என்கிறார்கள். 

ஊடக தர்மம் பற்றி பேசுவதற்கு ஒரு யோக்கியதை வேண்டும். கண்ணாடிக்கு முன் நின்று உங்களை நீங்களே கேளுங்கள். சிறிலங்கா அரசு கொலைசெய்த ஊடகவியலாளர் கொலைக்கு எந்தளவும் குறையாத அளவுக்கு நீங்களும் செய்துவிட்டு ஊடகதர்மம் பற்றியும், பி.பி.சி. சீவகன் பற்றியும் பேசுகிறீர்கள். அரங்கத்திற்கு ஆக்கங்களை அனுப்பினால் சீவகன் “நிராகரிப்பார்” என்று எழுதுகிறீர்கள்.  

தமிழே தட்டுப்பாடு அதற்குள் மற்றவனுக்கு குட்டுப்போடும் சுத்துமாத்து. நிராகரித்தார் (இறந்தகாலம்) ,நிராகரிக்கிறார் (நிகழ்காலம்) நிராகரிப்பார் (எதிர்காலம்). நிராகரிப்பார் என்றால் இனித்தான் நடக்கப்போகிறது. இதுவரை நடந்ததில்லை. ஆக, இது வெறும் ஊகம். இப்படிக்கதையளப்பது உங்களுக்கு ஒன்றும் புதிதல்ல. குணசீலன் ஆசிரியரிடம் தமிழ் படிக்க வைத்திருக்கிறது காலம். இப்போதாவது போதனை அற்ற சாதனை வெறும் காற்றுப் போன பலூன் என்று நம்புங்கள். 

பி.பி.சி.சீவகன் என்று அரங்கம் ஆசிரியர் சீவகனை ஒரு சர்வதேச தரத்திலான ஊடகவியலாளர் என அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி. 

தமிழ்த்தேசிய போராட்டத்திற்கும் பி.பி.சி.க்கும் ஒரு நீண்ட கால வரலாறு உண்டு. அதில் சீவகனுக்கும் பங்குண்டு. இது ஆனந்தி அக்கா வன்னிக்காட்டிற்கு சென்று விடுதலைப்புலிகளின் தலைவரைப் பேட்டி எடுத்ததினால் மட்டும் ஏற்படவில்லை. 

அடுத்த ஊரில் என்ன நடக்கிறது என்பது மட்டுமன்றி, செய்தியின் உண்மைத்தன்மையை அறிவதற்கும் ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல, தமிழக உலகத்தமிழர்களும் வானொலிக்கு முன்னால் குந்தி இருந்து இரவோடிரவாக பி.பி.சி. கேட்டகாலம் ஒன்று இருந்தது. லங்காபுவத் ஊதித் தள்ளிய போது, பத்திரிகைகள் தணிக்கைக்கு உட்பட்டிருந்தபோது தமிழர்களின் வீட்டு வாசல்களுக்கு உண்மையான, நடுநிலையான செய்தியை கொண்டு வந்தது பி.பி.சி. 

மறுபக்கத்தில் ஈழப்போராட்டத்தினை உலகநாடுகளில் உள்ள தமிழர்களுக்கு அறிமுகம் செய்த பெருமையும் பி.பி.சி.க்கு சேரும். காலப்போக்கில் விடுதலைப்போராட்டம் ஒன்று சர்வதேச சூழலில் பயங்கரவாதமாக மாறிய போது பி.பி.சி.யின் அணுகுமுறை சிலர் எதிர்பார்ததற்கு மாறாக இருக்கலாம். ஆனால் மேற்குலக ஜனநாயக, கருத்து, ஊடக சுந்திரத்தினை பயன்படுத்தி பி.பி.சி. தனது வரையறைக்கு உட்பட்ட வகையில் தனது நடுநிலையான பணியைச் செய்தது என்பதை மறுப்பதற்கில்லை. இங்கு முகமூடி பி.பி.சி.யை இழுத்திருப்பது வெறும் தனிநபர் காழ்ப்புணர்ச்சி. 

கடந்த பாராளுமன்ற தேர்தல் முதல் யாழ்.மேலாதிக்கம், மேட்டுக்குடி பற்றி பல  ஆக்கங்கள், பல கருத்தாடல்கள் இடம்பெற்றுவருகிறது. இது யாழ்ப்பாண மக்களுக்கு எதிரானது அல்ல, யாழ். மேட்டுக்குடி கருத்தியல் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆறுமுகநாவலர் முதல் இன்றைய யாழ்.அரசியல் தலைமைத்துவம் வரை இந்த கருத்தியலை கொண்டிருப்பது பல்வேறு சமூக, பொருளாதார, அரசியல் நடைமுறைகளில் ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. சண்முதாசன், வி.பொன்னம்பலம், சிவத்தம்பி, கைலாசபதி போன்றவர்கள் இக் கருத்தியல் பற்றி பேசியிருக்கிறார்கள். 

எழுவான் வேலன் விலாவாரியாக, ஆணிவேறு அக்குவேறாக விளாசித்தள்ளுகிறார். கோபாலகிருஷ்ணன், சிவலிங்கம், அசுரா, கருணாகரன், இப்பத்தியாளர் என பலர் கருத்துக்களை முன் வைத்துள்ளனர். இவை எல்லாவற்றையும் தாண்டி நிலாந்தனுக்கு விரிவான பதிலை வழங்கியிருக்கிறார் ஸ்டாலின் ஞானம். நீங்களோ இது என்ன படுவான்கரை போடியார் மாதிரியா? என்று கண்ணை மூடிக்கொண்டு பாலைக்குடிக்கின்ற பூனைக்கேள்வியை எழுப்புகிறீர்கள்.. 

படுவான்கரை போடியார் பாராளுமன்றத்தில் பத்துலட்சம் தோட்டத்தொழிலாளர்களின் வாக்குரிமையை பறித்தாரா? 

படுவான்கரை போடியார் சுயபாசை சட்டத்தை எதிர்த்து சிங்களம் மட்டும் சட்டம் கொண்டு வருவதற்கு வாய்ப்பளித்தாரா? 

பௌத்த சிங்கள பேரினவாத அரசில் பங்கேற்று அமைச்சராகி தமிழ் இனத்தை காட்டிக்கொடுத்தவர்கள் ஜீ.ஜீ.பொன்னம்பலம் போடியாரும், மு.திருச்செல்வம் போடியாருமா? 

பின்தங்கிய பிரதேச தமிழ்மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்வதற்கான வாய்ப்பை வழங்கிய தரப்படுத்தலை முழுத்தமிழினத்திற்கும் பாதகமானது எனப் படம் காட்டி அரசியல் ஆக்கியவர் படுவான்கரையின் எந்தப்போடியார் என்று சொல்லமுடியுமா? 

இதுவரையில் எத்தனை தமிழ் அரசியல் கட்சிகளுக்கு படுவான்கரை போடியார் தலைமை தாங்கி முட்டுக்கொடுத்து கதிரையைப் பிடித்திருக்கிறார்? எத்தனை இயக்கங்களுக்கு தலைமை தாங்கி இருக்கிறார்?   

படுவான்கரை போடியார் எத்தனைகோயிலில் கதவடைப்பு செய்துள்ளார்? எத்தனை பள்ளிக்கூட கதவுகளை இழுத்து மூடியுள்ளார்? 

படுவான்கரை போடியார் பெண்களுக்கான வாக்களிக்கும் உரிமையை மறுத்தாரா? இல்லை படித்தவர்களுக்கு மட்டும்தான் வாக்குரிமை என்று பைத்தியக்கார அரசியல் நடாத்தினாரா? சவரக்கத்தியை உதாரணமாகக் காட்டி பாராளுமன்றத்தில் முழங்கினாரா? 

படுவான்கரையில் எந்தப்போடியார் வீட்டில் மூக்குப் பேணியில் தண்ணீர் கொடுத்தார்கள்? எந்தப் போடியார் வீட்டில் நாய்க்கு சோறுபோடும் தட்டில் மனிதனுக்கு சோறு போட்டார்கள்? 

மட்டக்களப்பு அன்னை சாதித்திமிரும், வேளாளவெறியும், ஆகம அகங்காரமும் அற்றவள். மனிதமும் மானிடநேயமும் கொண்டவள். 

முகமூடிகளே! இன்னும் உங்களுக்கு மேலாதிக்க கருத்தியலும், மேதகுவும் விளங்கவில்லை என்றால் அவ்வளவுதான் உங்கள் கொள்ளளவு. 

விடிய விடிய இராமாயணம், விடிந்து எழும்பினால் சீதைக்கு இராமன் என்ன முறை? 

யோதிலிங்கம்  சரியோ பிழையோ களத்தில்  நிற்கிறார், அவர் எந்தத் தேர்தலிலும் போட்டியிடவில்லை என்பது அவரின் கருத்தை நியாயப்படுத்துவதற்கான உங்கள் வாதம். அதற்காக  அவர் வாயில் வந்ததை சொல்லி விட்டுப் போவதற்கு கிழக்கு மாகாணத்தவர் எடுப்பார் கைப்பிள்ளை இல்லை. அவர் வீட்டு வேலைக்கார்களும் அல்ல. கிழக்கு மாகாணத்தவர்கள் மௌனமாய் இருந்த காலம் மலையேறிவிட்டது. கண்டால் இதை அவருக்குச் சொல்லுங்கள். 

உண்மையில் அந்த “மேதகு” அவரது கருத்து குறித்து கேள்வி எழுப்பியவருடன் விவாதிப்பதுதான் வெளிப்படையான அரசியல். அரசியல் நேர்மை. ஊடகதர்மம். அதைவிடுத்து முகமூடிகளையும், முக்காடுகளையும், முகவரியற்றதுகளையும் அனுப்பி கூலிக்கு மாரடிக்க வைத்து விட்டு, அவர் ஒழித்து இருப்பது ஏன்? கிழக்கு மக்களின் தலைவிதியை தீர்மானிக்க அவருக்கு இருக்கின்ற உரிமை என்ன?அது எங்கள் பிறப்புரிமை அதை அவர் “கையில் எடுத்து ஆள” முடியாது. 

தாந்தாமலையில் பௌத்த பிக்கு ஒருவர் சில தடயங்களைப் புதைத்து விட்டு தவறான வரலாறு வரைய எடுத்த முயற்சி பற்றியும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. யோதிலிங்கத்திற்காக வக்காலத்து வாங்கப்போய், காலக்கண்ணாடியின் கருத்துக்களுக்கு பதில் கருத்து இல்லாததால் எதையோ எல்லாம் எழுதுகிறார்கள் முகமூடிகள். இப்படிப் பதில் எழுதினால் குணசீலன் மாஸ்டரிடம் நிட்சயம் பெfயில் தான். 

கணேசலிங்கம் இறந்த போது வெளியிடப்பட்ட நினைவு மலரிலும், அவருக்கான சிலை திறப்பு விழா மலரிலும் இப்பத்தியாளரின் இரு கட்டுரைகள் உண்டு. இது தேடலை, கற்றலை விரும்புபவர்களுக்கு. சாதனையாளர்களுக்கு கற்றல் அலர்ஜி என்றால் தயவு செய்து தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் ஒவ்வாமை உங்கள் வயதுக்கு அவ்வளவு நல்லதல்ல. 

மாவீரர் பட்டியல் போட்டிருக்கிறீர்கள். ஏன்? புலிகள் மட்டும்தான் இந்த தமிழ்த்தேசிய விடுதலைக்கு போராடினார்களா? அவர்கள் மட்டும்தான் போராளிகளா? மற்றைய இயக்க மாவீரர்களின் தொகையை, போராட்டத்லில் பலியான மக்களின் தொகையை ஏன் மறைக்கிறீர்கள்? 

போராடி இறந்த போராளிகளிலும் பாகுபாடு காட்டி தேர்வு செய்து மாவீரராக்கி வழிபடும் கர்மத்தை சுமக்கும் உலகின் முதல் தேசிய விடுதலைப் போராட்டம் இதுதான். 

சேகுவராவின் புத்தகத்தை, குமுதம், ஆனந்தவிகடன் போன்று கையில் வைத்து படம் எடுப்பதல்ல தத்துவார்த்த அரசியல். சேகுவேரா வின் போதனைகளை கற்று போராடுவது. மன்னிக்கவும் நீங்கள் தான் போதனையற்ற சர்க்கஸ் சாதனையாளர்களாச்சே. உங்களிடம் இருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும். 

முகவரியில்லாத ஊடுருவி எழுப்பிய தனிநபர் கேள்விக்கு பதில் அளிப்பதற்கு, ஊடுருவியின் பிறப்பு, திருமண, தொழில், வதிவிட சான்றிதழ்கள் காலக்கண்ணாடிக்கு தேவை. நெஞ்சில் உரமும் நேர்மைத்திறனும் இருந்தால் ஊடகதர்மம் பற்றி பேசும் நீங்கள் உங்கள் முகமூடியை கழட்டி வெளியே வாருங்கள். நீங்கள் யார் என்பதை அடையாளம் காட்டுங்கள். ஆரோக்கியமான அரசியல் கருத்தாடலுக்கு அது வழிவகுக்கும். 

மேய்ச்சல் தரை விவகாரம் தொடர்பான கேள்விக்கு அரங்கத்தில் அது தொடர்பான காலக்கண்ணாடி: 11  (காணி நிலம் வேண்டும்). படியுங்கள். படிப்பு உங்களுக்கு பிடிப்பு இல்லை என்று தெரியும். ஆனால் உங்களுக்கு உள்ள தேர்வு ஒன்றில் படித்து விவாதிப்பது அல்லது படியாது விவாதிக்காது இருப்பது. 

ஈரோஸ் அமைப்பு தொடர்பான கேள்விக்கும், பஷீரின் அரசியல், மற்றும் ஈரோஸின் ஆயுத மொழி பற்றிய கேள்விகளுக்கும் விரிவான பதில் காலக்கண்ணாடியில் விரைவில்…… எதிர்பாருங்கள்…….!! 

“JOURNALISM IS NO JOURNALISM IF IT LACKS PASSION” 

“ஊடகவியலின் மீது அதீத உணர்வுபூர்வமான ஈடுபாடு அற்றிருந்தால் அது ஊடகவியல் ஆகாது” 

பேனாக்களை இலக்கு வைக்கும் துப்பாக்கிகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட அனைத்து ஊடகப் போராளிகளுக்கும் வீரவணக்கம்!