‘எல்லோருக்கும் பிடித்தவன்’  (சிறுகதை)

‘எல்லோருக்கும் பிடித்தவன்’ (சிறுகதை)

— அகரன் — 

Max ஐ எல்லோருக்கும் பிடிக்கும். Max க்கும் எல்லோரையும் பிடிக்கும் என்றுதான் நினைக்கின்றேன். Jacques அவனை அறிமுகப்படுத்தியபோது அவனுக்கு மீசை முளைக்க திட்டமிட்டிருந்தது. அவன் தன் வாழ்வின் முதல் வேலையை ஆரம்பித்தபோது நான் அந்த விடுதியில் ஐந்து ஆண்டுகள் அனுபவத்தை வைத்துக் கொண்டிருந்தேன். Jacques ஆறு வருடமாக அந்த விடுதியின் அதிபராக இருந்தான். அவனது அனுபவங்கள் ஆரம்பித்த ஆண்டிலேயே இருந்தது. 

அந்த விடுதியில் வேலை ஆரம்பிப்பதற்கு அரை மணி நேரம் முன்னரே நான் போய்விடுவேன். யாருமே இல்லாத அந்த விடுதியின் சப்தங்களை அனுபவிப்பது எனக்கு ஒரு வியாதி போல நீண்டிருந்தது. 

அன்று கதவைத் திறந்தபோது அழகுக்காகவும் விருந்தினரை காக்க வைக்க வைத்திருந்த ஓய்வு போக்கி இருக்கையில் சூறாவளியில்  சரிந்த வெள்ளைப்பனை போல Max வீழ்ந்துகிடந்தான். ரத்தவாடை என் சுவாசப்பையில் நிறைந்தது. ஆரோகண முறையில் அவன் பெயரை கத்தினேன்.. M.. A.. X. மெதுவாக தலையசைத்தான். உயிர் இருப்பதை உணர்ந்தேன். என் நுரையீரல் மீண்டும் வேலை செய்தது. பொறியில் மாட்டிய எலிபோல அவன் உடல் அசைந்தது.  

என் கையை தாங்கிக்கொண்டு எழுந்திருக்க முயன்றான் பழுத்த பப்பாசிப் பழம் விழுந்து சிதறியது போல இருந்தது அவன் முகம். ஏ.. Max என்ன நடந்தது? என்றேன். அவன் அணுங்கினான். அவனால் பேச முடியவில்லை. பேச முடியாது! கண்களும் திறக்க முடியாது. இரத்தம் எல்லா இடங்களிலும் காய்ந்து போய் வாயையும் கண்களையும் ஒட்டிவிட்டது.  

வாயை மூடு! வாயை மூடு! என்று பிரஞ்சு மொழியில் ஒரு கெட்ட வார்த்தை சொல்வார்கள். பாவம் Maxக்கு எல்லாம் இரத்தத்தால் மூடப்பட்டு இருந்தது. இது செய்யப்பட்ட கெட்ட வார்த்தையாக இருக்கும். 

அவனுக்கு நடந்த சம்பவத்தை அறிய என் மூளை அவசரப்பட்டது. என் விரல்கள் மிருதங்கம் வாசிப்பவர் போல விளையாட ஆரம்பித்தது. 

பொதுவாக அந்த விடுதியில் கூரிய கத்திகளுக்கு என் குருதியில் ஆசை வரும் ஒவ்வொரு தடவையும் நான் மயங்கி விடுவேன். இதை நான் நடிப்பதாக Jacques எண்ணியது எனக்கு தெரியும். ஒரு நாள் கெட்ட போதையில் அவன் இருந்தபோது நான் நல்ல மயக்கம் போட்டு விட்டேன். அப்போது என் காதுகள் கேட்டன.. ‘’போர் நடக்கும் நாட்டில் இருந்து வந்து கத்தி வெட்டிய காயத்துக்கே விழுகிறான். வினோதமானவன்!’’ இப்படிப்பட்ட எனக்கு முன்னால் Max இன்சிதைந்தமுகம் இருந்தது. சுடுநீரில் பஞ்சை தொட்டு அவன் முகத்தை மீட்டெடுக்க ஆரம்பித்தேன். 

காய்ந்து கிடந்த ரத்தம் உயிர்பெற்று ஓடியது. கண்களை முதலில் விடுவித்தேன். உதடுகள் சிதைக்கப்பட்டு இருந்தது. உதடுகளை ஒட்டி இருந்த இரத்த கறையை நீக்க என் கைகளுக்கு அதிக நேரம் தேவைப்பட்டது. உதடுகள் விடுபட்டதும் சாம்பலை நீக்கினால் வரும் தணல் போல புது இரத்தம் கசிய ஆரம்பித்தது. என் கரங்கள் இதற்கு முன் இப்படிப்பட்ட வேலைகளை செய்தது இல்லை. 

அவன் முகத்தை ஓரளவு இனங்காணும் நிலைக்குக் கொண்டுவந்த பின்னர் பிழையான நேரத்தில் சரியான கேள்வியை கேட்டேன் ‘cava? (நலமா ?)’. அவன் உதடுகளை அசைக்க முடியவில்லை. நாக்கு மட்டும் ஓணாணின் தலைபோல ஆடியது. சத்தம் வரவில்லை.உதடுகள் பேசுவதற்கு அவசியம் என்பது அப்போதுதான் தெரிந்தது. 

பேச முடியாததை உணர்ந்த அடுத்த நொடியே Max கண்களிலிருந்து நீர் வழிந்தது. அவன் கண்கள் குழந்தைப் பருவம் தாண்டிய பின்னர் இப்போதுதான் அந்தத் தொழிலைச் செய்கின்றன என்பதை புரிந்து கொண்டேன்.  

அவன் தனது இடது கரத்தால் மேல்சட்டைப் பொத்தானை விடுவித்தான். உடலெங்கும் கடைசி காட்டு விலங்கின் அடையாளங்கள் மொத்தமாக இருந்தன. எனக்கு எல்லாம் தெரிந்து விட்டது. அந்த விலங்கு பாரீஸ் கட்ட காட்டுக்குள் உலாவுவது எனக்கு தெரியும். 

அவசர எண்ணை அழைத்தேன். சிகப்பு நிறத்தில் அவசர ஊர்தி கிங்போம் கிங்போம் என்று கத்தியபடி அவனை ஏற்றிச் சென்றது. 

உடனே Jacques இற்கு அழைப்பெடுத்தேன். சிதைந்து கிடந்த Max பற்றிய படத்தை பாடினேன். இரத்தத்தை கண்டதால் எனது தலை சுற்றிக் கொண்டிருப்பதை கூறினேன்.! ‘’நீ வீட்டில் போய் மயங்கு! விடுதியில் நிற்காதே! தயவுசெய்து.’’ என்றான். அவனது தயவான வார்த்தையை மதித்து வீட்டுக்குச் சென்றேன். 

வீட்டிற்குள் செல்லவிடாது மனைவி, என்ன? என்ன? என்ற கேள்விகளால் என்னை தடுத்து கொண்டிருந்தாள். எனக்கு ஒன்றுமில்லை என்று எங்கேனும் உட்கார அனுமதி தருமாறு வேண்டிக் கொண்டேன். 

Maxஇன் முகம் இரத்தத்தில் குளித்திருந்த கோலத்தை விவரித்தபோது, அவள் அழுவதற்கு தயாராகிக் கொண்டிருந்தாள். Max ஐ அவளுக்கு தெரியும். நான் வேலை செய்யும் விடுதிக்கு திடீர் பயணம் மேற்கொண்டு என்மீது தனக்கிருக்கும் காதலை அவள் உறுதிப்படுத்துவாள். அதற்குள் இருக்கும் இராஜதந்திரங்களை நான் சொல்லப்போவதில்லை.  

Maxக்கும் அவளை பிடிக்கும்., அவளைக் கண்டதும் பிரஞ்சு மொழியின் ஒலியை குழைத்து அவள் பெயரை உச்சரிப்பான். கன்னங்களில் வணக்கம் வைத்துவிட்டு தான் இந்தியா சென்ற நினைவுகளுக்கு வந்துவிடுவான்.  

Maxக்கு ஒரு அப்பாவும், ஒரு அம்மாவும் தனித்தனியே வாழ்ந்தார்கள். அவர்கள் சேர்ந்து உற்பத்தி செய்த முதலும் கடைசியுமான உயிர் Max  மட்டும் தான். அவர்கள் பிரிந்தபின், அப்பா ஒரு காதலியையும், அம்மா ஒரு காதலனையும் கைவசம் வைத்திருந்தார்கள். அவர்கள் அனைவரும் சேர்ந்து ஒன்றாக உணவருந்தும் புரிதல் அவர்களிடமிருந்தது.  

Max பதின்மவயது ஆரம்பித்த போது, அவனும் அவன் அம்மாவும் போதைக்கு அடிமையானார்கள். அதிலிருந்து விடுபடவே இருவரும் இந்தியா சென்று ஓராண்டு கழித்து பிரான்ஸ் திரும்பினார்கள். எந்த சாமியாரின் அருளோ.. யோகா, தியானம் என்று வேறு நல்ல போதையில் மீண்டும் பாரிசில் வாழ ஆரம்பித்தார்கள்.  

அதன்பின் Max மேற்படிப்பை விரும்பாமல் பணம் ஈட்டும் போராட்டத்திற்கு வந்து சேர்ந்த இடம் தான்  Jaque இன் 200 பேர் ஒரே நேரத்தில் உணவு அருந்தும் விடுதி.  

Maxஐ எனக்கு பிடிப்பதற்கு காரணம் அவன் எதிரிகளை உற்பத்தி செய்வதில்லை. யாரிடமும் கோபத்தை வெளிக்காட்டுவதில்லை. புறங்கூறுதல் என்ற நோய் இருப்பது அவனுக்கு தெரியாது. நிற வெறுப்போ, இனவெறுப்போ, அருவருப்போ தெரியாத அகிம்சைவாதி! இப்படியான சீவன்கள் அருகிவரும் houbarabustard என்ற பறவை போன்றவர்கள். இப்பறவையை வேட்டையாட பாகிஸ்தான் மன்னர் குடும்பங்களுக்கு அனுமதித்திருக்கிறது.  

இப்படிப்பட்ட Max ஐ வேட்டையாட ஒரு காதலி இருக்கிறாள். அவளுக்கு பெயர் கிளாரா. இந்திய பெண்களின் முகச்சாயலில் தென்னம் பூவின் நிறத்தில் பூனையின் கண்களை வைத்திருப்பாள்.  

அவள் Max இன் காதலியாகி இரண்டு வருடத்தில் ஐந்து தடவை Max வைத்தியசாலைக்குச் சென்றுள்ளான். இப்போது ஆறாவது தடவை. ஐந்தாவது பயணம் கொடூரமாக இருந்தது. அவள் தாக்கியபோது அவன் வீட்டில் இருந்த கண்ணாடியை தன் கைகளால் தாக்கிதன் கோபத்தை தணிக்க முயன்றான். கண்ணாடிக்குள் சென்ற கையை வெளியே இழுத்தபோது பல நரம்புகள் அறுந்து தொங்கின. ஆறு மாதங்கள் மருத்துவ விடுப்பில் இருந்தான்.  

பிரான்ஸ் உலகத்தின் பெண்களுக்கான உரிமையில் முதல் நாடு என்று உலக வங்கி சொல்கிறது. 1946 ஏப்ரல் 21இல் சட்டமியற்றி பெண்களுக்கு உயர் சட்டப் பாதுகாப்பை வழங்கினர். ஒரு பெண்ணின் உடலில் அனுமதியற்று கரம் பட்டால் அவர் கதி அதோகதி! இந்த பாதுகாப்பை கிளாரா மோசமாக பயன்படுத்துகிறாள். 

அவள் எப்படிப்பட்ட தாக்குதலை நடாத்தினாலும், சிறிய, எதிர்ப்பைக்கூட அவள்மீது Max காட்டியது கிடையாது. காந்திகூட, குத்தவரும் பசுவை கொல்லலாம் என்றார்.  

5ஆவது தடவை வைத்தியசாலையில் அவன் இருந்த போது உன் காதலியை மறுபரிசீலனை செய் என்றேன். அவன் கூறினான்  ‘’அவளிடம் பிழை இல்லை. நான்தான் என் கையை கண்ணாடியில் குத்தினேன்’’ என்றான். என்னிடம் இருந்த பிரஞ்சு வார்த்தைகள் தீர்ந்துவிட்டிருந்தது. 

ஆறாவது தடவைக்கு மேல் அவனால் அந்த காத(எ)லியோடு சேர்ந்து இருக்கமுடியாது என்ற அடையாளங்கள் இருந்தன. என் மனைவியும் கிளாராவை நினைத்து குரைத்துக்கொண்டிருந்தாள். 

Max மீண்டும் ஆறு மாதங்கள் வைத்திய விடுப்புக்குச் சென்றுவிட்டான்.  

அரிய ஞாயிற்று கிழமை ஒன்றில் நானும், மனைவியும் அதிகமாக விளம்பரம் செய்யப்பட்ட முக்கிய நட்சத்திரத்தின் தமிழ் படத்தை பார்த்துவிட்டு, எங்கள் வாழ்வில் மூன்று மணி நேரத்தை இழந்துவிட்ட சோகம் நிறைந்து வழிய இரவு இரண்டு மணிக்கு வீடு நோக்கி வந்துகொண்டிருந்தோம்.  

வீட்டின் அருகே இருந்து என் பெயரை சொல்லிய குரல் வந்தது. ஓருவன் காற்றின் உதவியால் அசைந்து  வந்தான். நாம் ஆச்சரியத்தோடு நின்றோம். அது Max தான்! தாடிக்குள் முகம் இருந்தது. அவன் வாழ்வின் முதல் தாடியாக அது இருக்கும். வசந்தகால மரம்போல் சடைத்து வளர்ந்திருந்தது. பலவகையான மது வகைகளின் விநோதமான மணம் அவன் தன் தைக்கப்பட்ட உதடுகளை திறந்தபோது எங்களை வந்தடைந்தது. பின்னர் அவனது போதைகலந்த நலவிசாரிப்பு வந்தடைந்தது.  

கிளாராவிடம் இருந்து விடுதலை பெற்றதை ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட சிரிப்போடு தெரிவித்தான். என் மனைவி, நீ எடுத்த மிகச்சிறந்த முடிவு என்றாள். என் தோளை பற்றி  ஐந்து மாதங்களின் முன் தான் சொல்லாமல் விட்ட நன்றியை கடும் போதையிலும் சொல்லிக்கொண்டே இருந்தான். எம் கன்னங்களில் இரவு வணக்கத்தை தந்தான். நீங்கள் அழகான ஜோடி என்றான். படம் பார்த்ததால் கிடைத்த வேதனை எனக்கு இல்லாமல் போனது.  

நாம் Maxஇன் நினைவோடு தூங்கப்போனோம். நான் ‘’அவன் இரண்டாவது தடவை இந்தியா செல்லும் காலம் நெருங்கிவிட்டது‘’ என்றேன். மனைவி சொன்னாள் ‘’அவன் தாடி பூனையின் மயிர்போல மென்மையாய் இருந்தது.’’  

யன்னலால் எட்டிப்பார்த்தேன், தாடியும், Maxம் எங்கள் வீட்டைப் பார்த்தவாறு நின்றுகொண்டிருந்தார்கள்.  

நான் தூங்கவில்லை.