வடக்கு நோக்கி வந்த சொந்தச் சகோதரர் (நீதி மறுப்பும் நீதி கோரலும்) — 03

வடக்கு நோக்கி வந்த சொந்தச் சகோதரர் (நீதி மறுப்பும் நீதி கோரலும்) — 03

— கருணாகரன் — 

(இனவன்முறையினால் வடக்கு நோக்கி வந்த மலையக மக்களுக்கான நீதி இன்னும் கிடைக்கவில்லை. அவர்கள் நம்பி வந்த தமிழ்ப் பிரதேசங்களிலேயே (வடக்கிலேயே) புறக்கணிக்கப்படுகிறார்கள். பல வழிகளிலும் ஒடுக்கப்படுகிறார்கள். அரச நிர்வாகம் தொடக்கம் வளப்பகிர்வு, சமூக நிலை எனப் பல வகையிலும் இந்த அநீதி தொடர்கிறது. இந்த மக்களுடைய பிரச்சினைகளைக் குறித்து இதுவரையிலும் கவனத்திற்குரிய மைய உரையாடல்களோ ஆய்வுகளோ நடக்கவில்லை. இந்தக் கட்டுரைத் தொடர் அதனைப் பொதுவெளியில் திறக்க முற்படுகிறது. — ஆசிரியர்)   

(03) 

“குரலற்றவர்களுக்கு நீதியுமில்லை. கருணையில் இடமுமில்லை. தனித்து விடப்பட்டவர்களின் துயரங்களே அவர்களுடைய வழி நீளமும்.” 

தங்களுடைய நிலையை தாமே வெளிப்படுத்தவும் முடியாது. தங்களைப் பற்றி பிறரும் பேசாத ஒரு நிலையே வடக்கு நோக்கி வந்த மலையக மக்களுடைய வாழ்க்கையாக இருந்தது. இதனால்தான் இவர்கள் பேசாப் பொருளாக விலக்கப்பட்டனர். குரலற்றோராக வாழ நிர்ப்பந்திக்கப்பட்டனர். வடக்கு நோக்கி வந்து 60 ஆண்டுகள் கடந்த பின்னும் இவர்களைப் பற்றி, இவர்களுடைய சமூக, பொருளாதார, பண்பாட்டு நிலைமைகளைப் பற்றி எந்தத் தரப்பினாலும் எத்தகைய ஆய்வுகளும் மேற்கொள்ளப்படவில்லை. 

இவ்வளவுக்கும் இவர்கள் வடக்கில் கிளிநொச்சி, வவுனியா ஆகிய மாவட்டங்களில் மூன்றில் ஒரு பங்கிற்கு அண்மையான சனத்தொகைத் தாக்கத்தைக் கொண்டிருக்கின்றனர். முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் நான்கில் ஒரு பகுதியினர் என்ற அளவுக்குள்ளனர். 

அப்படியென்றால் அரசியல் பிரதிநிதித்துவத்திலும் பண்பாட்டு அடையாளத்திலும் சமூக பொருளாதாரத்திலும் வளப்பகிர்விலும் பிற அதிகாரங்களிலும் இவர்களுடைய இடம் உறுதிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். 

ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. 

ஏனென்றால் இவர்கள் கூலிகள்… கூலிகள்… கூலிகள்… 

கூலிகளிலும் பல வகையுண்டு. குறிப்பாக யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் உள்ள கூலிகள் அந்த நிலத்தின் வாழ்க்கைத் தொடர்ச்சியைக் கொண்ட வறிய மக்கள். அல்லது ஒடுக்கப்பட்ட – தாழ்த்தப்பட்ட சமூகத்தினர். இவர்களுக்கு அந்தந்தப் பிரதேசத்தில் தொடர்ச்சியாகவே வாழ்ந்த வாழ்க்கை அனுபவப் பலமும் வரலாற்றுத் தொடர்ச்சி என்ற வலுவும் இருந்தது. ஏற்ற இறக்கமுடைய சமூக நிலை என்றாலும் அயலவர்களுடனான உறவு இருந்தது. 

எனவே இவர்கள் கூலிகள் என்ற நிலையிலும் சற்றுப் பலமானவர்களாகவே இருந்தனர். 

அத்துடன் காலனித்துவகாலத்தில் (கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில்) கிடைத்த வாய்ப்புகளைக் கொண்டும் தொடர்ச்சியாக ஏற்பட்ட அரசியற் பொருளாதார மாற்றங்களினாலும் வடக்கிலிருந்த பிற்படுத்தப்பட்ட மக்கள் மெல்ல மெல்ல வலுவான நிலையைப் பெற்று முன்னேறத் தொடங்கினர். 

கல்வியிலும் பண்பாட்டிலும் கடினமான நிலைகளில் எப்படியோ தமக்கான இடத்தை நிறுவிக் கொண்டவர்கள், தங்களை வெளிப்படுத்தக் கூடிய ஆற்றலைப் பெற்றனர். 

ஆனால் மலையகத்திலிருந்தும் தென்பகுதியிலிருந்தும் இடம்பெயர்ந்து வந்த இந்தக் கூலிகள் அப்படியல்ல. இவர்களுக்கு இது புதிய சூழல். இடமும் தொழிலும் முற்றிலும் புதியது. அயலர்கள்(தமிழர்) புதியவர்கள் –அந்நியர். அதைப்போல வாழ்விடமும் முற்றிலும் புதியதாக இருந்ததால் இவை எல்லாவற்றையும் கூட்டாக எதிர்கொள்வதில் மிகக் கடினமான நிலைகளை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. 

முக்கியமாக வடக்கிலுள்ள அனைத்துத் தரப்பினராலும் இவர்கள் புறத்தியாராகவே பார்க்கப்பட்டனர். நடத்தப்பட்டனர். ஆக மிக அடிநிலையிலிருந்தே தம்மைக் கட்டியெழுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. 

இதற்கு நல்ல உதாணம், இவர்களுக்கு வடக்கு மக்களால் இடப்பட்ட அடையாளக் குறியாகும். வடக்கத்தையார், இந்தியாக்காரர், தோட்டக்காட்டார், வந்தேறிகள் என்ற அடையாளப்படுத்தல்களால் குறிப்பிடப்பட்டதிலிருந்தே இவர்களைக் குறித்து வடக்கு மக்களிடம் எத்தகைய மனநிலை இருந்தது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். மிகப் பிந்தியே மலையக மக்கள் என்ற சொற்பதம் பிரயோக நிலைக்கு வந்தது. இதற்குக் காரணம், விடுதலை இயக்கங்களே. 

மற்றும்படி இவர்கள் விவசாயக் கூலிகளாகவும் நகரங்களிலும் கிராமங்களிலும் விளிம்பு நிலைத் தொழிலைச் செய்வோராகவுமே இருந்தனர். 

காணியற்றவர்கள் என்பதால் குடியிருப்பே பெரும் சவாலாக இருந்தது. இந்தப் பிரச்சினை இன்றும் (2021 இலும்) தொடர்கிறது என்பது எவ்வளவு அவலம்? 

1958இல் வந்தவர்களுக்கு தருமபுரத்தில் ஒரு தொகுதி காணி வழங்கப்பட்டது. அப்பொழுது தருமபுரம் பெருங்காடு. அந்தக் காட்டையே இவர்கள் வெட்டித் துப்புரவு செய்து குடியேறினர். பின்னர் வந்தவர்களுக்கு இதுவும் இல்லை. அவர்கள் தாமாகவே காடுகளை வெட்டி அங்கங்கே குடியேறினார்கள். வவுனியாவில் 1977இல் சில இடங்களில் காணிகள் கிடைத்தன. இதற்கு காந்தியம் உதவியது. ஆனால் இதெல்லாம் நீர்ப்பாசனக் காணிகளே அல்ல. 

வன்னியின் குடியமைப்பு விவரத்தைப் பற்றி ஒரு சிறிய விளக்கம் இந்த இடத்தில் சொல்லவேண்டும். முதலாவது பூர்வீக வன்னி மக்கள். இவர்கள் காலாதிகாலமாக வன்னிக் கிராமங்களில் வாழ்ந்து வந்தனர். இவர்களுடைய குடியிருப்புகள் இரண்டு வகையான அடிப்படைகளில் அமைந்தது. ஒன்று, குளங்களை – அதனையொட்டிய நீராதாரங்களை அடிப்படையாகக் கொண்ட விவசாயக் குடியிருப்புகள். வன்னியிலுள்ள பெரும்பாலான ஊர்கள் குளங்களின் பெயரோடு இணைந்திருப்பதை நீங்கள் இந்த இடத்தில் நினைவு கொண்டு பார்க்கலாம். கொந்தக்காரன்குளம், கூமாங்குளம், ஒட்டறுத்த குளம், ஐயன்குளம், அனிஞ்சியன்குளம், பன்றிக்கெய்த குளம், பாண்டியன் குளம், பாவற்குளம், செட்டிகுளம், உக்கிளான் குளம், பண்டாரிகுளம், திருநாவற்குளம், தவசிகுளம், கோயில்குளம், இறம்பைக்குளம், சமளங்குளம், ஆசிகுளம், மாதர்பணிக்கங்குளம் என பல நூறு குளக்குடியிருப்புகள் உண்டு. 

இரண்டாவது, கடலோரங்களில் அமைந்த மீனவக் குடியிருப்புகள். இரண்டும் நீரை அடிப்படையாகக் கொண்டமைந்தவை. இவையே பூர்வீக வன்னியின் குடியிருப்பு முறைமையும் இதனோடிணைந்த பொருளாதார முறைமையுமாகும். 

1950களில் இதனோடிணைந்த விவசாயக் குடியேற்றங்கள் புதிதாக வன்னியில் ஆரம்பிக்கப்பட்டன. இரணைமடு, வவுனிக்குளம், முத்தையன்கட்டுக்குளம், அக்கராயன் குளம், வன்னேரிக்குளம், விசுவமடுக்குளம் என பல குளங்கள் புதிதாக இதற்கெனக் கட்டப்பட்டன. 

இந்தக் குளங்கள் அத்தனையும் நீர்ப்பாசனக் குளங்களாகும். அதாவது பூர்வீக வன்னியின் சிறிய குளங்களைப் போலன்றி இவை பிரமாண்டமான பாசனை வசதியைக் கொண்டமைந்தவை. 

இந்தப் பாசன நீரை ஆதாரமாகக் கொண்ட நெல் மற்றும் மேட்டு நிலப் பயிர்ச்செய்கைக்கான ஏற்பாடுகளோடு இந்தக் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டன. இதற்கான குடியிருப்பாளர்கள் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்தே கொண்டு வரப்பட்டனர். 

இவர்களுக்கு பாசனத்தில் பயிர் செய்யக் கூடிய நிலமும் குடியிருப்புக்கான நிலமும் வழங்கப்பட்டன. அத்துடன், இவர்களுக்கான குடியிருப்புக்கு வீடுகளும் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டது. 

இந்தக் குடியேற்றத்திட்டங்கள் பல வகையான அடிப்படைகளில் வேறு அமைக்கப்பட்டது. மத்திய வகுப்புத்திட்டத்தில் 30 ஏக்கரிலிருந்து 15 ஏக்கர் வரையில் வழங்கப்பட்டது. படித்த வாலிபர் திட்டம். இதில் ஐந்து ஏக்கரிலிருந்து மூன்று ஏக்கர் வரை வழங்கப்பட்டது. படித்த மகளிர் திட்டம், விவசாயிகள் திட்டம் எனப் பல வகையான திட்டங்களுக்கூடாக பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வன்னியெங்கும் குடியேற்றப்பட்டன. 

இன்றைய வன்னி மாவட்டங்களில் கணிசமானோர் இவ்வாறு குடியேற்றப்பட்டவர்களால் நிரப்பப்பட்டோரே. இவர்களுக்கான பாடசாலைகள், வீதிகள், தபால் நிலையங்கள், மருத்துவமனைகள், சந்தைகள், கூட்டுறவுக்கடைகள், விவசாய நிலையங்கள், நிர்வாகப் பணிமனைகள், மின்சாரம் என அனைத்தும் சிறப்பு ஏற்பாடாகச் செய்து கொடுக்கப்பட்டன. 

இதனால் இந்தக் குடியேற்றவாசிகள் மிக விரைவாக வன்னியில் புதியதொரு வலுவான சமூகமாகத் திரட்சியடைந்தனர். பெருமளவு நிலத்தையும் வளத்தையும் கொண்டவர்களாக இருந்த காரணத்தினாலும் யாழ்ப்பாணத் தொடர்பினாலும் இவர்களுடைய வளர்ச்சி விரைவாக நிகழ்ந்தது. 

ஆனால், வன்னிக்கு வந்த – வடக்கிற்கு வந்த மலையக மக்களுக்கு இதெல்லாம் கிடைக்கவே இல்லை. இதைப்பற்றி யாரும் சிந்திக்கவுமில்லை. 

இவர்களுக்குக் கிடைத்ததெல்லாம் புறம்போக்கு நிலம் என்ற கிறவல் பிட்டிகளே. இதைக்கூட இவர்கள் மிகச் சிரமப்பட்டு அத்துமீறலாக பிரவேசித்து, வெட்டித் துப்புரவு செய்துதான் எடுத்துக் கொண்டனர். 

இதில் ஒரு துளி நீரைக் காண்பதே அபூர்வம். 

ஆனாலும் இதை விட்டால் வேறு வழியில்லை என்ற நிலையில் வேறு என்னதான் செய்ய முடியும்? 

இந்தச் சூழ்நிலையில்தான் இவர்கள் தங்கள் குடியிருப்புகளை அமைத்தனர். அத்தனையும் சின்னஞ்சிறு குடிசைகள். 

1958 தொடக்கம் 1977, 1983 எனத் தொடர்ந்த வன்முறைப் பெயர்வுகளில் வந்த இந்த மக்களின் இரண்டாவது கட்ட அவலம் இந்தக் குடிசைகளில் தொடர்ந்தது. 

மலையகத்தில் உள்ள லயங்களுக்கு நிகராகவே இந்தக் குடிசைகள் அப்போதிருந்தன. 

(தொடரும்)