நவீன நாணயக் கோட்பாடு இலங்கைக்கு பொருந்துமா? – 02

நவீன நாணயக் கோட்பாடு இலங்கைக்கு பொருந்துமா? – 02

புதிய நாணய அச்சடிப்பு 

அரசியல் மற்றும் பொருளாதார தாக்கங்கள் என்ன

  1. பகுதி 2. 

— வி.சிவலிங்கம் — 

அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கங்களுக்கு மத்தியில், சீனாவின் பொருளாதார வளர்ச்சி அதிகரித்த நிலையில் பொருளாதாரப் போட்டிக்கான புதிய நிலமைகள் தோற்றம் பெற்றுள்ளன. குறிப்பாக சீனப் பொருளாதாரம் என்பது சுமார் 30 ஆண்டு காலத்திற்குள் பல லட்சம் மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுத்தது மட்டுமல்லாமல் அம் மக்கள் புதிய நவீன நகரங்களில் வாழும் அளவிற்கு வருமானமும் உயர்ந்து செல்கிறது. அமெரிக்க பொருளாதாரம் 200 ஆண்டுகளுக்கு மேலான வளர்ச்சியைக் கொண்டிருந்த போதிலும் அங்கு வறுமை, கல்வி வளர்ச்சியின்மை, போதிய இருப்பிட வசதியின்மை என பல பிரச்சனைகள் இன்னமும் உள்ளன. அவ்வாறாயின் பொருளாதாரக் கோட்பாடுகளில் அல்லது அவற்றை நடைமுறைப்படுத்துவதில் உள்ள பிரச்சனைகளே அது ஏற்படுத்தும் தாக்கங்களுக்கு காரணமாக உள்ளன. இதன் காரணமாக அமெரிக்காவின் எதிர்கால அரசியற் பொருளாதாரம் குறித்த விவாதங்கள் இயல்பாக எழுகின்றன. இவ்வாறான சந்தர்ப்பத்தில் பல்வேறு அரசுகள் தத்தமது பொருளாதாரத்தை மீண்டும் இயக்குவதற்குரிய வழிகள் என்ன? என்ற விவாதங்கள் எழுந்துள்ள நிலையில் புதிய நாணயத் தாள்களை அச்சிட்டு விநியோகிப்பது குறித்த விவாதங்கள் பொருளியலாளர்கள் மத்தியில் காணப்படுகிறது. இவை ‘நவீன நாணயக் கோட்பாடு’ (Modern Monetary Theory – MMT) என அழைக்கப்படுகிறது. இக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே இலங்கை அரசு தனது நிதிக் கொள்கையை வகுத்து வருவதாகக் கருதப்படுகிறது.  

இக் கட்டுரை எம்.எம்.ரி கொள்கைகளின் அடிப்படைகளைத் தருவதோடு, இக் கொள்கையைப் பின்பற்ற எண்ணும் இலங்கை அரசு அந்த இலக்கை அடைய முடியுமா? என்பது குறித்த காரணிகளையும் தேடுகிறது. ஏனெனில் இன்றைய இலங்கை அரசு எம்.எம்.ரி கொள்கைகள் எதிர்பார்க்கும் நியதிகளைக் கொண்டிருக்கிறதா? என்பதைக் கேள்விக்குட்படுத்துகிறது. மிக அதிகளவிலான கடன் சுமையைக் கொண்டிருக்கும் இலங்கை தனது உள்நாட்டு உற்பத்தியை மிக விரைவாகவே அதிகரிப்பதற்கான திட்டங்களை வகுத்துச் செயற்பட வேண்டும். அதற்கான அடிப்படைகள் இலங்கையில் உள்ளதா? அதற்கு ஏற்ற வகையிலான அரச கட்டுமானம் உள்ளதா? என்பதையும் அறிய வேண்டியுள்ளது.  

இலங்கை நாணயத்தின் நிலை  

ஏற்கெனவே குறிப்பிட்டது போல கோவிட் -19 நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை மிக அதிகளவில் பாதித்து வருகிறது. இப் பாதிப்பின் காரணமாக தேசிய உற்பத்தி வளர்ச்சியின் பலம் குறித்த சந்தேகங்கள் உள்ளன. ஒரு புறத்தில் உள்நாட்டுக் கடன்கள் அதிகரித்து, மறு பறத்தில் வெளிநாட்டுக் கடன்களும் அதிகரித்த நிலையில் தொடர்ந்தும் அரசு கடன்களைப் பெறுவதில் முனைப்பில் இருப்பதை அவதானிக்கும்போது அக் கடன்களை மீளச் செலுத்துவதற்கான பலம் தேசிய பொருளாதார வளர்ச்சியில் உள்ளதா? என்ற நியாயமான கேள்வி எழுகிறது.  

இலங்கையின் வரவு செலவுத் திட்ட அறிக்கைகளை அவதானிக்கையில் நாட்டின் உள்நாட்டு உற்பத்தியை விட கடன் தொகை அதிகரித்துள்ளது. பொதுவாகவே கடன் தொகை எப்பொதுமே உள்நாட்டு மொத்த உற்பத்தியின் ஓர் குறிப்பிட்ட விகிதத்தில் அமைவது அவசியமானது. ஏனெனில் உள்நாட்டு உற்பத்தியில் சேமிப்பு அதிகரித்தால் மட்டுமே உள்நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும். ஆனால் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியின் பெருமளவு பங்கினைக் கடன் செலுத்துவதற்குப் பயன்படுத்துவதால் உள்நாட்டு உற்பத்திக்கு அல்லது வளர்ச்சிக்குப் போதிய பணம் மிச்சமாக இருக்க வாய்ப்பு இல்லை. தற்போதுள்ள நிலையில் அரசாங்க ஊழியர்களுக்கான சம்பளங்கள் மற்றும் கொடுப்பனவுகளுக்கே பணம் போதவில்லை என்ற நிலையில் தேசிய அபிவிருத்திக்கு பணம் எவ்வாறு கிடைக்கும்?  

தற்போதைய பொறி முறைகள் 

அரசுகள் தமது பொருளாதார செயற்பாடுகளுக்கான சில பொறிமுறைகளை உருவாக்கி அதன் அடிப்படையிலேயே தமது செயற்பாடுகளை மேற்கொள்கின்றன. உதாரணமாக, நாட்டில் அபிவிருத்தியை மேற்கொள்ள அரசு செலவு செய்கிறது. அச் செலவுகளை மேற்கொள்வதற்கான வருமானத்தை மக்களிடமிருந்து கிடைக்கும் வரிப்பணத்தின் மூலம் பயன்படுத்துகிறது. ஆனால் எமது நாட்டில் நுகர்வுப் பொருட்களின் மீதான வரிப் பணத்தின் மூலமே அரசுக்கு அதிக வருமானம் கிடைக்கிறது. நேரடி வரிகளை அறவிடுவதில் பாரிய கவனங்கள் செல்வதில்லை. அதாவது வரிப்பணத்தால் கிடைக்கப்படும் வருமானம் தேசிய அபிவிருத்திக்குப் போதாத நிலையில் அரசு தொடர்ந்தும் நாணயத்தை அச்சிடுகிறது. இதற்குப் பல காரணங்கள் உண்டு. ஒரு புறத்தில் பாரிய தொழில் மற்றும் வருமானம் ஈட்டும் நிறுவனங்கள் தமது வருமானங்களை மறைத்துச் செயற்படுவது, அல்லது அரசிற்கு அனுசரணையுள்ளவர்கள் என்பதால் தனியார் நிறுவனங்கள் மீதான வரி அறவிடுதல் என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. வரி ஏய்ப்பு மற்றொரு பிரச்சனையாகும்.  

இவ்வாறான நிலையில் சாமான்ய மக்களின் நுகர்வுப் பொருட்களின் மீதான வரி மூலமே அரசு செலவினங்களை மேற்கொள்ள வேண்டும். ஆனால் இந்த வருமானம் போதாத நிலையில் அதாவது நாட்டின் பலவீனமான பொருளாதாரம் காரணமாக அல்லது மக்கள் மேல் அதிக வரிகளை அறவிடத் தயக்கம் காட்டும் பட்சத்தில் புதிய நாணயத் தாள்களை அச்சிட்டு வெளியிடுகிறது. சில சமயங்களில் அரசு பணமுறிகளை மத்திய வங்கி மூலமாக வெளியிட்டுத் தேவையான பணத்தைப் பெறுகிறது. இதுவே இதுவரை மேற்கொள்ளும் நடைமுறையாக உள்ளது. தற்போது இவற்றில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.     

பண வீக்கம் 

நாம் இங்கு கூறும் எம்.எம்.ரி சில கருதுகோள்களை முன்வைத்தே இலங்கையிலும் பின்பற்றப்படுகிறது. தற்போது இலங்கையில் ஏற்கெனவே பணம் புழக்கத்தில் இருக்கிறது. உற்பத்தி அதிகரிக்காத நிலையில் அதிக பணம் சில பொருட்களைத் துரத்துகிறது. இதனையே நாம் பணவீக்கம் என்கிறோம். எனவே ஏற்கெனவே நாட்டில் பணவீக்கம் அதிகரித்த நிலையில் மேலும் பணத்தை அச்சிட்டு வெளியிடுவது பணவீக்கத்தை அதிகரிக்காதா? என்ற கேள்வி எழுகிறது. சில நிபந்தனைகளைப் பின்பற்றினால் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தலாம் என்பதே எம்.எம்.ரி இனது கருத்தாகும்.  

புதிதாக அச்சிடும் பணம் என்பது நிதி என்பதாக அர்த்தம் கொள்ளாமல் மக்களின் செயற்பாடுகளுக்கு அதிக சக்தியை வழங்குவதாக, பணத்தை உருவாக்குவதற்கான செயற்பாடாக கொள்ளப்படுகிறது. ஒரு அரசு பணத்தை அச்சிடுவது அதன் சுயாதிபத்திய உரிமையாகும். எனவே தேவையான அளவிற்கு அச்சிட்டு வழங்க அரசிற்கு உரிமை உண்டு. பொதுவாகவே அரசு யந்திரம் செயற்படுவதற்கு மக்கள் வரிப்பணம் செலுத்தவேண்டும் என்பது ஏற்கப்பட்ட விதி முறையாகும். இங்கு அரசு வரிப்பணம் பெறாமலேயே பணத்தை அச்சிட்டு வழங்குகிறது. அதாவது இங்கு அரசு அச்சிட்டு வழங்கும் பணம் என்பது ஏற்கெனவே சுழற்சியிலுள்ள பணத்திலிருந்து செலவிடுவதல்ல. அப் பணம் புதியது. அப் பணம் புதிதாக வெளியிலிருந்து உட் செலுத்தப்படுகிறது. வரி என்பது ஏற்கெனவே சுழற்சியிலிருந்த பணத்தைக் கட்டுப்படுத்துவதாகும்.  

அமெரிக்க அனுபவங்கள் 

இன்று அமெரிக்க அரசு பெருந்தொகையான பணத்தை உள்நாட்டு அபிவிருத்திக்குக் குறிப்பாக புதிய வைத்தியசாலைகள், புகையிரத வசதிகள். குடிநீர் வசதிகள், பாடசாலைகள், புதிய தெருவீதிகள், பாலங்கள் என பல திட்டங்களை நிறைவேற்றுவதற்காக பெருந் தொகையான பணத்தை அச்சிட்டுப் புழக்கத்திற்கு விடப் போகிறது. இதற்குப் பிரதான காரணமாக கோவிட் -19 இனால் ஏற்பட்ட அவசரகால நிலமைகள் அல்லது அந் நோய் நாட்டின் பல பலவீனங்களை அடையாளம் காட்டியுள்ளது. உதாரணமாக, சுமார் 600 லட்சம் மக்கள் கொரொனா நோயினால் இறந்தமைக்கான காரணம் பலரின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தமையாகும். பொருளாதாரம் வளர வேண்டுமாயின் ஆரோக்கியமான மக்கள் அவசியம். அத்துடன் கொரொனா நோய் காரணமாக பல வர்த்தக் நிறுவனங்கள் மூடப்பட்டுப் பல லட்சம் மக்கள் வேலை வாய்ப்புகளை இழந்து வருமானப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 

எனவே இத்தகைய அவசரகால நிலமைகளில் அரசு புதிய பணத்தை அச்சிட்டு விநியோகிக்க அதன் செயற்பாடுகளை மத்திய வங்கி கண்காணிப்பதும் என்ற யோசனைகள் தற்போது செயற்பாட்டிற்கு வந்துள்ளன. ஆனால் இவ்வாறான எண்ணங்கள் இலங்கை போன்ற நாடுகளில் சாத்தியமாகுமா? என்ற கேள்விகளை எழுப்புகிறது. ஆனாலும் இவைபற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாமல் அவற்றைப் பின்னர் பார்க்கலாம் என்பதே இன்றைய பதிலாக உள்ளது. இதுவே இலங்கையின் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் நிமல் கப்ரால் தரும் பதிலாக உள்ளது.  

அரசு எவ்வாறான பொருளாதாரப் பின்னணியில் புதிய நாணய தாள்களை அச்சிட்டு விநியோகிக்கத் அரசு திட்டமிடுகிறது?  

தற்போதுள்ள பொருளாதாரப் பின்னணியில் அரசிடம் சேமிப்பு என்பது மிகவும் குறைந்தே செல்கிறது. அதனால் பணவிக்கம் அதிகரித்துச் செல்வதற்கான அதிகளவிலான அடையாளங்கள் வெளிப்படுகின்றன. அதாவது கேள்வி என்பது வழங்கலை விட அதிகரிக்கிறது என்பதாகும். இவ்வாறு பணவீக்கம் அதிகரித்துச் செல்லும்போது வெளிநாட்டுச் செலாவணியில் தளம்பல் ஏற்படுகிறது. மக்கள் இலங்கை நாணயத்தில் நம்பிக்கை இழந்து வெளிநாட்டு நாணயத்தைக் கொள்வனவு செய்ய ஆரம்பிக்கிறார்கள். ஏற்றுமதி குறைந்தமையால் வெளிநாட்டுச் செலாவணி வருமானம் குறைந்துள்ளது. இவை முதலீட்டிற்கான வாய்ப்புகளை மிகவும் குறைக்கின்றன. இதனால் ரூபா நாணயத்தின் மதிப்பு மேலும் இழக்கப்படுகிறது.  

இவ்வாறான நெருக்கடி வேளையில் சேமிப்பிற்கான வட்டி விகிதத்தை அதிகரித்து அதாவது அதிக சுழற்சியிலுள்ள பணத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் மக்கள் தம்மிடமுள்ள பணத்தைச் சேமிப்பிலிட ஊக்குவிக்கப்படுகின்றனர். அதாவது சேமிப்பிற்கான வட்டி விகிதம் அதிகரிக்கப்படுகிறது. இச் செயல் மூலம் சுழற்சியிலுள்ள பணத்தைக் கட்டுப்படுத்த இப் பொறிமுறை பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தற்போதுள்ள நிலையில் குறிப்பாக கொரொனா நோய்க் காலத்தில் அரசு எங்கு முதலிடுவது?முதலீட்டிற்கான வாய்ப்புகள் அதிகரித்தால் மட்டுமே சேமிப்பிற்கான வட்டியை வழங்க முடியும். இங்கு மக்களினன் சேமிப்புகளைப் பயன்படுத்தி முதலீடுகளை அதிகரிக்க முடியாத நிலை நோய் காரணமாக ஏற்பட்டுள்ளது.   

பொருளாதாரத்தில் அரசின் தலையீடு 

நாட்டில் இவ்வாறான பொருளாதார நெருக்கடி எற்பட்டுள்ள நிலையில் குறிப்பாக தமது முதலீட்டுக்கான பயன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என எண்ணித் தனியார் நிறுவனங்கள் முதலீட்டில் ஈடுபடாத நிலையில் அரசே அதற்கான ஆரம்ப முயற்சிகளைத் தோற்றுவிக்க வேண்டும். இதுவரை காலமும் சந்தை நடவடிக்கைகள் உற்பத்தியையும், அதாவது கேள்வியையும், நிரம்பலையும் தீர்மானிக்கும் என்ற கோட்பாடுகள் கைவிடப்பட்டு அரசு தனது உள்நாட்டுக் கடன்களை அடைக்க தனது நாணயத்தை அச்சிட்டு விநியோகிக்கலாம் என்ற கருத்துக்கள் பலமடைந்து வருகின்றன.  

இதற்கான காரணங்களாக அரசு செலவினங்களை அதிகரிக்கும்போது அதாவது அபிவிருத்திகளில் முதலீடு செய்யும்போது நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைவதாகவும், அதன் மூலம் தனியார்துறை ஊக்கம் பெறுவதாகவும், அவ்வாறான நிலையில் அரசு, தனியார்துறை ஆகிய இரண்டும் இணைந்து முழுமையான வேலைவாய்ப்பினைத் தோற்றுவிக்க முடியுமெனவும் குறிப்பாக நாட்டின் விவசாயம் மற்றும் கல்வித்துறையில் பாரிய முன்னேற்றங்கள், சுகாதாரத்துறையில் முன்னேற்றங்கள், முதியோருக்கான இலவச கல்வி வாய்ப்புகள், இயற்கை வளங்களைப் பயன்படுத்திய மின் வசதிகள், சுற்றுச் சூழல் அபிவிருத்தி மற்றும் சிறு வர்த்தக நிறுவனங்களின் அதிகரித்த தோற்றம் போன்றவற்றில் அரசு கவனம் செலுத்துவதன் மூலம் அதிகரித்த அளவில் வேலை வாய்ப்புகளை வழங்க முடியும். அதாவது அரசின் முதலீடுகள் கேள்வியில் அதிகரிப்பை ஏற்படுத்துவதன் மூலம் வழங்கலையும் தூண்ட முடியும் என்பதாகும். இதனால் வேலைவாய்ப்புகள் அதிகரிக்க, அதன் மூலம் தனிநபர் வருமானம் அதிகரிக்க அவை மேலும் கேள்வியை அதிகரிப்பதால் பொருளாதாரம் வளரும். இங்கு இவை கடந்தகால நியாயப்பாடுகளாக தோற்றமளிக்கலாம். ஆனால் இங்கு பாரிய வேறுபாடு உண்டு.  

இங்கு இன்னொரு அம்சம் கவனத்தில் கொள்ளப்படுகிறது. அதாவது அரசு அபிவிருத்திக்காக அதிக பணத்தை அச்சிட்டு வெளியிடும்போது அரசு மட்டுமல்ல தனியார்துறையும் அந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்க முடியும். அவ்வாறு தனியார்துறை எதிர்பார்த்த வேலைவாய்ப்பை வழங்காத நிலையில் அரசு வேலை வழங்கலை உத்தரவாதங்கள் (Job guarantee) மூலம் உறுதி செய்து, அதற்கான அதி குறைந்த சம்பளத்தையும் (Minimum law wage) அறிவிக்க முடியும். அரசு அவ்வாறு புதிய சம்பளத்தை அறிவிக்கும் போது தனியார்துறை தவிர்க்க முடியாமல் அதைவிட அதிக சம்பளத்திற்கு அல்லது அதே சம்பளத்திற்கு வேலையில் அமர்த்த சாத்தியமாகிறது.    

புதிய நாணய புழக்கமும், கேள்வியும், வழங்கலும் 

இவ்வாறாக அரசு செலவினத்தை மேற்கொள்ளும்போது அரசு கடனுக்குள் மேலும் செல்வதாக ஒரு கருத்து உண்டு. இருப்பினும் அரசின் கடன்கள் மறுபுறத்தில் தனியார் வருமானமாக மாற்றப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது. எனவே அரசின் செலவினங்கள் தனியார் வருமானமாக மாற்றமடைவதால் அங்கு பணவீக்கம் ஏற்பட வாய்ப்பு இல்லை என்றாகிறது. ஆனால் இவை அபிவிருத்திகான வேலைவாய்ப்பு வெற்றிடங்களும், அவ் வெற்றிடங்களை நிரப்புவதற்கான போதுமான வேலையற்ற உழைப்பாளர்களும் இருக்கும்போதே இப் புதிய அச்சடிக்கும் நாணயம் புழக்கத்தில் வருவதால் மாற்றம் ஏற்படும். அதாவது அதிகரித்த கேள்வியியைச் சமாளிக்க வழங்கல் அதிகரித்தால் மட்டுமே அது சாத்தியமாகும். அதாவது அதிகளவு வேலைவாய்ப்பு ஏற்பாடுகள் அதிகரித்து ஏற்றவாறான வழங்கல் அதிகரிக்க வேண்டும். இல்லையேல் பணவீக்கம் தவிர்க்க முடியாதது. இங்கு வழங்கலை உறுதி செய்வது அரசின் பிரதான பங்காகிறது. இவை பற்றிப் பின்னர் பார்க்கலாம்.  

இருப்பினும் இவ்வாறு பணவீக்கம் தவிர்க்க முடியாத நிலையில் அதிகரிக்குமானால் அரசு தனது செலவினங்களைக் குறைத்து அல்லது வரிகளை அதிகரித்து பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும் என வாதிக்கப்படுகிறது. உதாரணமாக,தற்போது அமெரிக்க பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்கெனவே குறிப்பிட்டது போல பல அபிவிருத்தி திட்டங்களில் அரசு செலவினங்களை மேற்கொண்டு, வேலைவாய்ப்பினை அதிகரிப்பதாலும் மற்றும் உடனடி நுகர்ச்சிக்கான குறிப்பாக வறுமைக் கோட்டில் வாழும் மக்களின் நுகர்வுப் பலத்தை அதிகரிக்கும் வகையில் கொடுப்பனவுகளை அதிகரிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் அரசின் செலவினங்கள் என்பது தனியார் நிறுவனங்கள் மூலப் பொருட்களை வழங்குவதற்கான ஊக்குவிப்பாக மாற்றமடைவதால் தனியார்துறை வளர்ச்சியடைவதற்கான வாய்ப்பு ஏற்படுவதாகவும், அதனடிப்படையில் அதாவது அரசு மேற்கொள்ளும் அபிவிருத்தித் திட்டங்களுக்கான மூலப் பொருட்களை தனியார்துறை வழங்குவதால் இரு தரப்பாரும் வளர்ச்சியடைவற்கான சூழல் உண்டு எனவும் கருதப்படுகிறது.  

வழமையான பொருளாதார அணுகுமுறைகளில் புதிய நாணயத்தை அச்சிட்டு விநியோகிப்பது பணவீக்கத்தை அதிகரிக்கும் என்ற கருத்துகள் நிராகரிக்கப்பட்டு, தற்போதைய பொருளாதாரச் சூழலில் இந்த அணுகுமுறை பொருத்தமான கருவி என்ற கருத்து வற்புறுத்தப்படுகிறது. இருப்பினும் அரசு பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் மிகவம் கண்காணிப்புடன் செயற்படுதல் அவசியம் என்பது எம் எம் ரி இனது ஆலோசனையாகும்.  

சிம்பாப்வே அனுபவங்கள் 

இதனடிப்படையில் நாம் ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். கடந்த 2000ம் ஆண்டு சிம்பாப்வே நாடு புதிய நாணயத்தாள்களை அச்சிட்டு தனது நாணயத்தின் மதிப்பைக் கீழே இறக்கியது. 90களின் பிற்பகுதியில் ஆரம்பித்த பொருளாதார வீழ்ச்சி 2000ம் ஆண்டுவரை தொடர்ந்தது. இவ் வீழ்ச்சியைத் தடுக்க புதிய நாணயத்தை அச்சிட்டு வெளியிட்டது. அது மட்டுமல்ல புதிய நோட்டுகள் பாரிய பெறுமதியைக் கொண்டனவாகவும் அச்சிடப்பட்டன. அதாவது தற்போது இலங்கையில் 10,000 ரூபாய் பெறுமதியான தாள்களை அச்சிட எண்ணியுள்ளதாக அறியப்படுகிறது. இவ்வாறே சிம்பாப்வேயிலும் இடம்பெற்றது. இதனால் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்ததோடு, மிக மோசமான பணவீக்கத்தை நோக்கி நாடு தள்ளப்பட்டது. குறிப்பாக உயர்ந்த சம்பளங்களைப் பெற்று வந்த வைத்தியர்கள், பொறியியலாளர் என்போர் தமது உயரிய வருமானங்கள் பணவீக்கம் காரணமாக மதிப்பிழந்த நிலையில் அவர்களும் சமான்ய தொழிலாளர் அந்தஸ்தில் வாழ்வதாகவே கருதினர். இவை பெரும் சமூக நெருக்கடிகளை உருவாக்கின.    

இப் பின்னணியில் அங்கு பல விவசாய நிலங்களை வெள்ளை இனத்தினர் கட்டுப்படுத்தியதால் அவர்கள் நாட்டின் உற்பத்திக்கு உதவவில்லை எனக் கூறி அவர்களின் நிலங்கள் சுவீகரிக்கப்பட்டன. அவ்வாறு சுவீகரிக்கப்பட்ட நிலங்கள் தமது நாட்டின் சுதந்திரத்தைப் பெற்றுத் தர ராணுவத்தினரே உதவினார்கள் எனக் கூறி அவர்களுக்கு அந்த நிலங்கள் வழங்கப்பட்டன. ஆனால் ராணுவத்தினருக்கு விவசாயத்தில் அதிக அனுபவம் இல்லாமையால் எதிர்பார்த்த விவசாய வளர்ச்சியை ராணுவதினரால் வழங்க முடியவில்லை. ஒரு காலத்தில் உணவு வகைகளை ஏற்றமதி செய்த அந்த நாடு தனது மக்களுக்குத் தேவையான உணவைத் தன்னால் உற்பத்தி செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது.  

இலங்கை அனுபவங்கள் 

இலங்கையில் தற்போது காணப்படும் நிலமைகள் சிம்பாப்வே நாட்டின் அனுபவங்களையே நினைவூட்டுகின்றன. இலங்கை அரசு தனது அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்கு ராணுவத்தையே அதிகம் சார்ந்திருக்கிறது. விவசாயிகளும், ராணுவமும் கூட்டு அடிப்படையில் விவசாயத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பாவனைக்குட்படுத்தப்படாத தரிசு நிலங்கள், மேய்ச்சல் தரைகள், வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் நிலங்கள் என்பன சட்டத்திற்குப் புறம்பான வகையில் கையகப்படுத்தப்பட்டு ராணுவக் கட்டுப்பாட்டில் நடத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களாக மாற்றப்படுகின்றன. இத் திட்டங்களுக்கே புதிய அச்சிட்ட நாணயத்தாள்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதாவது ஏற்கெனவே குறிப்பிட்டது போல குறிப்பிட்ட திட்டங்களை நோக்கி அப் புதிய பணம் செலவளிக்கப்படுகிறது. அப் பணத்தின் மூலம் வருமான அபிவிருத்தியை எதிர்பார்க்கின்றனர். ராணுவத்தினரின் உதவியுடன் விவசாயம் மட்டுமல்ல மற்றும் பல அபிவிருத்தித் திட்டங்கள் உதாரணமாக, உல்லாசப் பயண விடுதிகள், விற்பனை நிலையங்கள் எனவும் செயற்படுத்தப்படுகின்றன. விவசாயத்துறையில் விவசாயிகளுடன் ராணுவம் இணைந்து இரசாயன உரங்களுக்குப் பதிலாக சேதன உரங்களைப் பயன்படுத்தும் முறைகள் செயற்படுத்தப்படுகின்றன. ஆனால் ஏற்கெனவே இரசாயன உரங்களைப் பயன்படுத்திய நிலங்களில் உடனடியாகவே சேதன உரங்களைப் பயன்படுத்துவதால் மாற்றங்கள் ஏற்படாது என்பது அறிஞர்களின் கருத்தாகும். குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகள் அந் நிலங்கள் பயன்படுத்தப்படாமல் தரிசாக விடப்பட வேண்டும். இவை யாவும் இத் துறைகளில் எவ்வித அனுபவமும் அற்ற ராணுவத்தால் மேற்கொள்ளப்படும்போது எதிர்பார்த்த பலன் கிடைக்குமா? என்பது சந்தேகமே.  

சிவிலியன் துறைகளில் ராணுவமும், விளைவுகளும் 

இங்கு ராணுவத்தினர் சிவிலியன்களின் செயற்படுதுறைகளிலேயே ஈடுபடுத்தப்படுகின்றனர். உற்பத்தி, வர்த்தகம், உல்லாசப் பயணம் போன்ற துறைகளில் தனியார் துறைக்குப் போட்டியாக ராணுவம் செயற்படுகிறது. நாட்டின் அரச உயர் மட்டம் வரை ராணுவ ஆதிக்கம் அதிகரித்த நிலையில் அரச உதவிகள் ராணுவத்தின் தேவைக்கே அதிகளவில் செல்ல வாய்ப்பு உண்டு. இந் நிலையில் தனியார்துறைகள் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் மிகவும் மந்தமாகவே உள்ளன. அத்துடன் அரச உதவிகளைப் பெறும் ராணுவ அபிவிருத்தித் திட்டங்களுடன் கிராம அளவிலான உள்ளுர் மக்களின் முதலீடுகள் போட்டியிட முடியாத நிலையில் தனியார் அவ்வாறான முயற்சிகளைத் தவிர்க்கின்றனர். இதனால் உள்ளுர் அளவிலான குடும்பங்களின் வருமானம் அதிகரிக்க வாய்ப்பு இல்லை. 

ராணுவத்தினர் மூலமாக மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி முயற்சிகள் என்பது மறைமுகமாகவே நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் நிறுவனங்களாக அவை மாற்றப்படுகின்றன. உதாரணமாக, நாட்டின் அபிவிருத்தி திட்டங்களில் ராணுவ ஈடுபாட்டைக் குறைக்க புதிய அரசு முயற்சிக்குமாயின் நாட்டின் பாதுகாப்பையும், பொருளாதார நலன்களையும் அனுபவிக்கும் ராணுவம் எவ்வாறு நடந்து கொள்ளும் என்பதை ‘மியான்மார்’ அல்லது பர்மா நாட்டின் அனுபவங்கள் உணர்த்துகின்றன. அங்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ராணுவமும் போட்டியிட்டது. இருந்த போதிலும் ராணுவத்திற்கு எதிராகப் போட்டியிட்ட கட்சி பெரும்பான்மை ஆதரவைப் பெற்றது. ஜனநாயகத்தை ஏற்பதாக உறுதியளித்த அந்த ராணுவம் தற்போது அத் தேர்தலை நிராகரித்து எதிர்க்கட்சிகளைச் சிறையில் தள்ளியுள்ளது. இவை அனுபவங்களாகும்.       

நாம் எதிர்பார்க்கும் புதிய நாணயத்தாள் அச்சடிப்பு விவகாரம் அதன் சாத்தியங்கள் என்பன மக்களின் கைகளில் அல்லாமல் ராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே உள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும். ராணுவத்தினரின் செலவினங்கள் உற்பத்தி வருமானத்தினை விட அதிகரிக்குமாயின் பணவீக்கம் கிடு கிடுவென அதிகரிக்க அதிக சந்தர்ப்பங்கள் உண்டு. இங்கு உற்பத்தி மட்டுமல்ல, நாட்டின் பாதுகாப்பு விவகாரமும் கேள்விக்குட்படுத்தப்படும்.  

லத்தீன் அமெரிக்க நாடுகளின் அனுபவங்கள் 

இவ்வாறு புதிய  நாணய நோட்டுகளை அச்சடித்து விநியோகித்த சில நாடுகளின் அனுபவங்கள் எமது கவனத்திற்குரியன. உதாரணமாக சிலி, ஆர்ஜென்ரினா, பிறேசில், நிக்கரகுவா, பெரு, வெனிசூலா போன்ற நாடுகள் தமது நாணயங்களை அச்சிட்டு தத்தமது மத்திய வங்கி மூலமாக புழக்கத்தில் விட்டன. இதன் விளைவாக பணவீக்கம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு உயர்ந்தும், பாரிய நிதிப் பற்றாக்குறையும் ஏற்பட்டது. அந்த நாடுகளில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்ட காரணத்தால் சம்பளங்கள் அதிகளவு உயர்ந்தன. வேலையற்றோர் தொகை குறைவடைந்தது.  

ஆனால் சிறிது காலத்திற்குள்ளாகவே பிரச்சனைகள் ஆரம்பமாகின. பொருட்களின் விலை அதிகரித்து பணவீக்கமும் அதிகரித்தது. விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலைகள் விதிக்கப்பட்டன. சம்பள அதிகரிப்பு நிறுத்தப்பட்டது. ஆனால் பதிலாக, பதுக்கல் தொடர்ந்தது. உற்பத்தி பாதித்தது. வேலைவாய்ப்பு மறுபடி அதிகரித்தது.  

பிரித்தானியாவில் மத்திய வங்கி சுயாதீனமாக இயங்கி நாணய விநியோகத்தைக் கட்டுப்படுத்துகிறது. ஆனால் மேலே குறிப்பிட்ட நாடுகளின் மத்திய வங்கிகள் அரசியல்வாதிகளால் கட்டுப்படுத்தப்பட்டன.      உதாரணமாக சிலி நாட்டில் நாணய புழக்கம் 360 சதவீதத்தால் அதிகரித்ததோடு, வரவு செலவுப் பற்றாக்குறை உள்நாட்டு மொத்த உற்பத்தியை விட 24 சதவீதத்தால் 1973ம் ஆண்டில் உயர்ந்திருந்தது. ஆர்ஜென்ரினாவில் பணப் புழக்கம் 40 சதவீதத்தால் அதிகரித்து வரவு செலவுப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட 6 சதவீதத்தால் அதிகரித்தது. இவை 2015ம் ஆண்டில் நிகழ்ந்தது. அந்த நாடு பல தடவைகள் கடன் பெற முடியாத நிலையில் திவாலாகின.   

ஐரோப்பிய நாடுகளில் பணவீக்கம் என்பது கொரொனா நோய்க்காலத்திலும் மிகவும் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. அவற்றின் பொருளாதாரப் பரிமாணம் மிகவும் பரந்ததாகவும், ஐரோப்பிய வங்கிகள் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த இணைந்து செயற்படுவதால் அங்கு வேலையில்லாப் பிரச்சனை அதிகரித்த போதிலும் பணவீக்கம் ஏற்படவில்லை. அதற்கான பிரதான காரணியாக அங்கு செயல்முறையிலுள்ள ஜனநாயக அடிப்படையிலான ஆட்சிமுறை பங்கு வகிக்கிறது.  

முடிவுரை 

மேற்குறித்த கருத்துக்களை அவதானிக்கையில் நவீன நாணயக் கோட்பாடு என்பது பாதகமான விளைவுகளை அதிகம் கொண்டிருப்பினும் ஆட்சியாளர்கள் அவ்வாறான கொள்கையை அமுல்படுத்தக் காரணம் என்ன? என்ற கேள்வி எழுகிறது. ஏற்கெனவே குறிப்பிட்ட சில லத்தீன் அமெரிக்க நாடுகளில் இக் கொள்கைகளை அமுல்படுத்துவதற்கான பின்புலமாக அங்கு ராணுவ ஆட்சிகள் அல்லது ராணுவக் கலப்பு ஆட்சிகள் செயற்பட்டன. உள்நாட்டு நாணயத்தைக் கட்டுப்பாடற்ற விதத்தில் அச்சிட்டு வெளியிட்ட காரணத்தால் அங்கு ராணுவம் அதன் ஆதரவாளர்கள் பலமான பொருளாதாரப் பின்னணியை ஏற்படுத்திக் கொண்டனர். சொத்துக்களைக் குவித்துக் கொண்டனர். 

குறுகிய காலத்திலேயே பொதுமக்களின் வருமானமும் அதிகரித்து, வேலைவாய்ப்புகளும் அதிகரித்த நிலையில் மக்கள் ராணுவ ஆட்சி குறித்து அலட்டிக்கொள்ளவில்லை. ஆட்சியாளர்களும் தமது இலக்குகளை அக் குறுகிய காலத்தில் அடைந்தனர். அவ்வாறான ஓர் குமிழிப் பொருளாதாரமே (Bubble economy) இலங்கையில் தோற்றம் பெறுகிறது. அதிகார வர்க்கமும், ஆதரவாளர்களும் அக் குறுகிய காலத்தில் பலமான சக்தி மிக்கவர்களாகத் தோற்றமளிப்பார்கள். நாணயம் அதிகளவில் சுழற்சியில் வருவதால் பலர் பணக்காரர்களாக வலம் வருவார்கள். ஆனால் பணவீக்கம் அதிகரிக்கும்போது பணத்தின் சுழற்சி வேகமும் அதிகரிக்கும். அதாவது தமது இருப்பில் நாணயத்தை வைத்திருந்தால் அதன் பெறுமதி குறையலாம் என்ற எண்ணத்தில் முடிந்த அளவில் அதனைக் கைமாற்ற மக்கள் முயற்சிப்பர். 

இலங்கையின் 1972ம் ஆண்டிற்குப் பின்னதான ஆட்சி என்பது அதாவது நாடு பிரித்தானிய முடி ஆட்சியிலிருந்து முற்றாக வெளியேறி குடியரசாக மாறிய காலத்தின் பின்னர் ஆட்சியாளரின் போக்குகள் ஒரு பிரிவினரின் ஆதிக்கத்திற்குள் சென்றுள்ளதை நாம் காண்கிறோம். 1970 – 1977ம் ஆண்டு காலத்தில் இடதுசாரிகள் இணைந்த அரசு தவிர்ந்த காலங்கள் என்பது மக்களின் நலன்களிலிருந்து விலகியதாகவே உள்ளது. 1977ம் ஆண்டு முதல் 1994ம் ஆண்டு வரையான காலம் மேற்குலக ஆதிக்கமாகவும், முதலாளித்துவ நலன்களின் பாதுகாவலனாகவுமே தொழிற்பட்டுள்ளது. அதே போலவே 1995 – 2021ம் ஆண்டு வரை தொடரும் அரசு சில குடும்பங்களின் ஆதிக்கத்தின் பிடியிலேயே உள்ளது. மக்கள் ஆட்சியாளர்களின் இனவாத அல்லது சிங்கள பௌத்த தேசியவாத கருத்துக்களை உண்மை என நம்பி வாக்களித்தனர். அதன் விளைவுகளையே அவர்கள் அனுபவக்கின்றனர்.      

ஆட்சியாளர்கள் தமது பதவிக் காலத்தைக் கணித்தே இக் கொள்கைகளைத் தேர்ந்தெடுக்கின்றனர். இதற்கான விலையை மக்களே கொடுக்கின்றனர். அவர்களே இவ்வாறான அரசியல்வாதிகளைத் தேர்வு செய்கிறார்கள். எனவே அதற்கான பாடங்களையும் அவர்களே படிக்க வேண்டியுள்ளது. அவ்வாறானால் இதே கொள்கைகளைப் பின்பற்றும் அமெரிக்காவில் இந்த விளைவுகள் ஏற்படாதா? என்ற கேள்வி எழலாம். அங்கு பலமான ஜனநாயக ஆட்சி இருப்பதும், அதே போலவே பலமான எதிர்க்கட்சியும் செயற்படுவதால் சமநிலை பேணப்பட அதிகளவு வாய்ப்பு உள்ளது.  

முற்றும்.