நவீன நாணயக் கோட்பாடு இலங்கைக்கு பொருந்துமா? – 01

நவீன நாணயக் கோட்பாடு இலங்கைக்கு பொருந்துமா? – 01

புதிய நாணய அச்சடிப்பு :  

அரசியல் மற்றும் பொருளாதார தாக்கங்கள் என்ன

  1. பகுதி 1. 

      — வி.சிவலிங்கம் — 

இலங்கையில் தற்போது பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கோவிட் – 19 தொற்று நோயின் தாக்கம் காரணமாக உலகம் முழுவதிலும் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் காரணமாக, பெருமளவில் உள்நாட்டு உற்பத்தி தளர்ந்து வெளிநாட்டு இறக்குமதியிலும், உல்லாசப் பயணத்துறையிலும், மத்திய கிழக்கு இலங்கையர்களின் வருமானத்திலும் தங்கியிருந்த நாடு அவை பாதித்துள்ள நிலையில் வெளிநாட்டுச் செலாவணியின் பற்றாக்குறை காரணமாக பல பிரச்சனைகளை எதிர்நோக்கி உள்ளது.  

உள்நாட்டு உற்பத்திகளும் வீழ்ச்சியடைந்து, வெளிநாட்டுக் கடன்களுக்கான கொடுப்பனவுகளும் அதிகரித்த நிலையில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கான முதலீடுகளை ஊக்குவிக்க முடியாத நிலையில் நாடு உள்ளது. ஏனெனில் அதற்கான அடிப்படை ஏற்பாடுகள் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலான நவதாராளவாத பொருளாதாரக் கொள்கைகளால் கைவிடப்பட்டுள்ளன. இறக்குமதியும் தடுக்கப்பட்டு, உள்நாட்டு உற்பத்தியும் தடைப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடுகளும் அதிகரித்துள்ளன. அதிகளவு பணத்தைச் செலவழித்தாலும் பொருட்களைப் பெறமுடியாத நிலை காணப்படுவதால் பணவீக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது.  

பண வீக்கமும்கடன் பளுக்களும் 

நாட்டில் பணவீக்கம் அதிகரிக்குமானால் அதனைத் தொடர்ந்து பல பொருளாதார நெருக்கடிகள் மற்றும் அரசியல் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதற்கான அடையாளங்கள் ஏற்கெனவே வேலை நிறுத்தம் மற்றும் ஆங்காங்கே எழும் போராட்டங்கள் என்பற்றின் மூலம் ஆரம்பித்துள்ளன. சில பிரச்சனைகளை நாம் அவதானிப்பின் குறிப்பாக அரச ஊழியர்கள் தாம் பெறும் சம்பளத்தின் மூலம் வாழ்க்கைச் செலவினத்தைச் சமாளிக்க முடியாத நிலைக்கு சென்றுள்ளனர். கொரொனா நோயின் தாக்கத்திற்கு முன்பதாக இருந்த பொருளாதார நிலமைகளைக் கருத்தில் கொண்டு பலர் வங்கிகளில் கடன்களைப் பெற்றனர். வர்த்தகம், ஓட்டோமோபைல் வாகனம், மோட்டார் சைக்கிள், புதிய வீட்டுக் கடன், விவசாயக் கடன் என சமூகத்தின் வெவ்வேறு பிரிவினர் கடன் பெற்றனர். தற்போது வேலைவாய்ப்பு அற்ற நிலமைகள், கொரொனா நோயின் ஆபத்துகள், சந்தைகள் மூடப்பட்டதால் விற்பனை முடக்கப்பட்ட நிலமைகள் என வருமானமீட்டும் துறைகள் மூடப்பட்டுள்ளதால் அம் மக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். 

சேமிப்புகள் வற்றிச் செல்லல் 

இதற்கிடையில் நாட்டில் ஏற்கெனவே நிலவும் அரச ஊழல்கள், நிதிச் சந்தை மோசடிகள், கறுப்புச் சந்தை வர்த்தகம், கட்டுப்பாட்டு விலை மோசடிகள் போன்றவை மிகவும் துரிதமடைந்துள்ளன. தற்போது பொருட்கள் மட்டுமல்ல, வெளிநாட்டு நாணயங்களும் பதுக்கப்படுகின்றன. இலங்கையின் நாணயப் பெறுமதி இறக்கமும், உள்நாட்டில் படிப்படியாக ஏற்பட்டு வரும் பணவீக்கமும் வங்கிகளிலுள்ள சேமிப்பின் பெறுமதிகளைக் குறைத்துள்ளன. வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக் காரணமாக மக்களின் சேமிப்புகள் வற்றி வருகின்றன. இலங்கை ருபாய்களில் சேமிப்பிலிட்டோர் அவற்றை அந்நிய நாணயங்களில் மாற்றி வருகின்றனர். அதாவது இலங்கை நாணயத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து வருகின்றனர்.   

இப் பிரச்சனைகளுக்கு அரசு மட்டும் காரணமா

இத் தாக்கங்கள் பலவும் அரசின் பொருளாதாரக் கொள்கைகள் என்பதை விட, அரசின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட தாக்கங்களே இக் கொடிய நிலமைகளை ஏற்படுத்தியுள்ளன. ஏற்றுமதி வருமானமும் இல்லாமல், தொழிற்துறைகளுக்கான மூலப் பொருள் இறக்குமதியும் தடைசெய்யப்பட்ட நிலையில் உள்நாட்டு ஏற்றுமதி வர்த்தகத்தில்  அபிவிருத்தியை மேற்கொள்வது எப்படி? என்ற விவாதங்கள் எழுந்துள்ளன. இவை இலங்கைக்கு மட்டுமே உரிய பிரச்சனைகள் அல்ல. உலகம் முழுவதிலும் குறிப்பாக இலங்கை போன்ற நவதாராளவாத பொருளாதார கட்டுமானத்திற்குள் வாழும் நாடுகளில் பல இவ்வாறான பாரிய நெருக்கடிக்குள் சிக்கி உள்ளன.  

இவ்வாறான பொருளாதார சிக்கலில் குறிப்பாக வெளிநாட்டு வருமானங்களில் அதாவது உல்லாசப் பயணத்துறை,ஆடைத் தொழில், தேயிலை, ரப்பர் மற்றும் பாரம்பரிய ஏற்றமதிகளில் தங்கியுள்ள இலங்கை இந்த வருமானங்கள் குறைவடைந்த நிலையில் நாட்டின் பொருளாதாரத்தை வளர்ப்பதற்கு எவ்வாறான மாற்று ஏற்பாடுகளை எவ்வாறு மேற்கொள்ள முடியும்? என்ற கேள்விகள் எழுகின்றன. வளர்ச்சியடைந்த நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், யப்பான், அவுஸ்ரேலியா போன்ற நாடுகள் ஏற்கெனவே அதிகளவு சேமிப்பை வைத்திருப்பதால் உள்நாட்டு உற்பத்தி,ஏற்றுமதி என்பவற்றால் ஏற்பட்டுள்ள வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் விலைவாசி உயர்வு என்பவற்றை ஓரளவு சமாளிக்க முடிந்தது, ஆனால் தற்போது உலக அளவில் ஏற்பட்டுள்ள கொரொனா நோய் காரணமாக எழுந்துள்ள உற்பத்திப் பாதிப்பு, நுகர்வு பாதிப்பு, சுகாதார கெடுபிடிகள் போன்றவற்றால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உள்நாட்டில் பொருளாதார அபிவிருத்தியை துரிதமாக மேற்கொள்வது எவ்வாறு? என்ற கேள்விகள் எழுகின்றன. 

அமெரிக்காவில் எழுந்துள்ள நிதிக் கொள்கை விவாதங்கள் 

அமெரிக்காவில் அமைந்துள்ள ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் தலைமையிலான அரசு பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருகிறது. அவருக்கு முதல் ஜனாதிபதியாக செயற்பட்ட டொனால்ட் டிரம்ப் அரசாங்கம் இறக்குமதிகளைக் கட்டுப்படுத்தியது. குறிப்பாக சீனாவிலிருந்து மலிவு விலையில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் கட்டுப்படுத்தப்பட்டமையால் உள்நாட்டு உற்பத்திகளின் விலை அதிகரித்தது. பல ஆண்டுகளாக வருமான அதிகரிப்பு மட்டுப்படுத்த நிலையில் வாழ்ந்த மக்கள் மலிவான சீன இறக்குமதிகளைப் பயன்படுத்தினர். தற்போது அதிக விலை செலுத்துவதால் வருமானப் பற்றாக்குறை மக்களைக் கடன் பளுவுக்குள் தள்ளி வருகிறது.    அமெரிக்காவின் பொருளாதாரம் மிக அதிகளவில் ஏற்றுமதி வர்த்தகத்தில் தங்கியுள்ளது. பல அமெரிக்க நிறுவனங்கள் மலிவான உற்பத்திச் செலவை எதிர்பார்த்து சீனா, பங்களாதேஷ், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் தமது உற்பத்தி நிறுவனங்களை நிர்மாணித்தன. இதன் விளைவாக உள்நாட்டில் தொழில்வாய்ப்புக் குறைந்து, அரச கொடுப்பனவுகள் அதிகரித்தன. இப் பின்னணியில் கொரொனா நோயின் தாக்கங்கள் அந் நாட்டின் பொருளாதாரத்தை மிகவும் பாதித்துள்ளன. இக் கொடிய நோய் நாட்டின் பொருளாதாரத்தை மட்டுமல்ல, மக்களின் எதிர்கால சுகாதாரம், கல்வி, போக்குவரத்து போன்றவற்றின் பலவீனங்களையும் அடையாளப்படுத்தியுள்ளது.  

கடந்த காலங்களில் திறந்த சுதந்திரமான போட்டிச் சந்தை நடவடிக்கைகள் சுயாதீனமாக இயங்க அனுமதிப்பதன் மூலமே உற்பத்தி அதிகரிப்பையும், விலைக் கட்டுப்பாட்டையும், பண வீக்கத்தையும் கட்டுப்படுத்த முடியும் என்ற கொள்கைகள் வகுக்கப்பட்டன. ஆனால் உலக அளவிலான உற்பத்தி மற்றும் விநியோக சங்கிலிக் கோர்வைகள் தற்போது அறுந்துள்ள நிலையில் சுதந்திர வர்த்தகம் என்பது மிகவும் கேள்விக்குறியாகி ஒவ்வொரு நாடும் தத்தமது உள்நாட்டுப் பொருளாதாரத்தினை மூடிய நிலைக்கு எடுத்துச் செல்கின்றன. உதாரணமாக, அமெரிக்கா இறக்குமதி தடைகளை விதித்து, அமெரிக்கர்கள் அமெரிக்க பொருட்களை கொள்வனவு செய்யுமாறு ஊக்குவிக்கப்படுகின்றனர். பிரித்தானியா தனது தனித்துவ பொருளாதாரத்தை வளர்க்கும் நோக்கில் ஐரோப்பிய சந்தையிலிருந்து விலகியுள்ளது. இவ்வாறே பல நாடுகள் தத்தமது பொருளாதாரங்களைப் பாதுகாக்கும் பொருட்டு மூடிய நிலைக்கு எடுத்துச் செல்கின்றன. 

அமெரிக்காவில் வேலை அற்றோர் தொகை மிகவும் அதிகரித்துள்ளது. கொரொனா நோய் காரணமாக பல தொழில் நிறுவனங்கள், உணவு விடுதிகள், உல்லாசப் பயணத்துறை போன்றவை மூடப்பட்டுள்ளதால் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அங்கு மத்தியதர வர்க்கத்தினரே மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறாகவே பல  உலக நாடுகள் தத்தமது பொருளாதாரத்தை மூடிய நிலைக்கு மாற்றும்போது ஏற்றுமதி வர்த்தகத்தில் தங்கியிருந்த அமெரிக்க பொருளாதாரம் சீனாவுடனான வளர்ச்சியுடன் போட்டியிட முடியாத அளவிற்கு பிரச்சனைகளுக்குள் சிக்கியுள்ளது. 

அமெரிக்காவும்நவீன நாணயக் கோட்பாடும் 

அமெரிக்காவில் தற்போது பதவியிலுள்ள ஜோ பைடன் தலைமையிலான அரசு ஏற்பட்டு வரும் பாரிய பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்க புதிய வழிகளை நோக்கிச் செல்கிறது. கடந்த காலங்களில் வரி விதிப்பு மூலமும், பெரும் பணக்காரர்கள் முதலீட்டை மேற்கொள்ளும் வகையில் வரிச் சலுகைகளையும்  அறிவித்து வந்தனர். தற்போது தனியார்துறையினர் தமது பணத்தை முதலீடு செய்யத் தயங்கி வருகின்றனர். இந் நிலையில் அரசு முதலீட்டை மேற்கொண்டால் மட்டுமே கேள்வியை அதிகரிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வாறாயின் அரசு சமூக கட்டுமானங்களில் தனது முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும். அதாவது தற்போது கல்வி, போக்குவரத்து, தொழில் நுட்பம், வீட்டு வசதிகள் எனப் பல துறைகளில் முதலீடு செய்து பல மில்லியன் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வறுமையிலிருந்து காப்பாற்றி வருகிறது.  

தற்போது அமெரிக்க அரசு உள்நாட்டு வங்கிகளிடம் பாரிய கடன்களைப் பற்று வருகிறது. பாரிய நிதி நிறுவனங்களே மேலும் பணத்தைக் குவிக்கின்றன. இந்த நிலையைத் தடுக்க வேண்டுமெனில் அரசு புதிய நாணயத் தாள்களை அச்சிட்டு அதனைக் குறிப்பிட்ட திட்டங்களில் முதலீடு செய்து வேலைவாய்ப்பை அதிகரித்து வருமானத்தை அதிகரிக்க வேண்டும். எனவே புதிய நாணயத்தை அச்சிட்டு வெளியிடுவது என்பது குறிப்பிட்ட திட்டங்களில் அப் பணத்தை முதலீடு செய்து அபிவிருத்தியை மேற்கொள்வதாகும். அக் கொள்கையின் அடிப்படையில் அதாவது ஏற்கெனவே குறிப்பிட்ட எம் எம் ரி கொள்கையே (நவீன நாணயக் கோட்பாடு – Modern Monetary Theory – MMT) பயன்படுத்தப்படுகிறது.  

இலங்கையில் நவீன நாணயக் கோட்பாடு – எம் எம் ரி 

இவ்வாறான ஓர் கொள்கையைப் பின்பற்றியே இலங்கை நிதிக் கொள்கையும் மாற்றமடைந்து வருகிறது. இலங்கை போன்ற மேலும் பல நாடுகள் இவ்வாறான மாற்று ஏற்பாடுகளை நோக்கிச் செல்ல நிர்ப்பந்திக்கப்படுகின்றன. கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக உலக அளவில் செயற்பட்ட நவதாராளவாத திறந்த பொருளாதார செயற்பாடுகள் உலக அளவில் உற்பத்தியில் அதிகரிப்பை மேற்கொண்ட போதிலும் வருமான ஏற்றத்தாழ்வையும் அதிகரித்துள்ளது. இதனால் பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்குமிடையேயான வருமான ஏற்றத் தாழ்வுகள் மிக அதிகமானவை.  

இலங்கையில் நடைமுறையிலுள்ள இந்த நவதாராளவாத பொருளாதாரச் செயற்பாடுகளால் வருமான ஏற்றத்தாழ்வு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாடும் கடன்பளுவுக்குள் தள்ளப்பட்டுள்ளது. இந் நிலையில் குறிப்பாக உலக அளவில் கொரொனா நோயின் தாக்க விளைவுகளால் உலக பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டின் பொருளாதாரத்தை வளர்க்க புதிய அணுகுமுறை தேவையாகிறது. அதாவது உள்நாட்டில் வேலைவாய்ப்புகளை, உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பினை, வருமான அதிகரிப்பினை எவ்வாறு மேற்கொள்வது? ஏற்றுமதியும், இறக்குமதியும் பாதிப்படைந்த நிலையில் தேசிய பொருளாதாரத்தை எவ்வாறு ஊக்குவிப்பது? என்ற கேள்விகள் எழுகின்றன.  

புதிய நாணயத் தாள்கள் 

இப் பின்னணியிலேயே இலங்கை அரசு மிக அதிக அளவிலான நாணயத் தாள்களை அச்சிட்டு வெளியிட்டுள்ளது. பொதுவாகவே நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றவாறான அளவிலேயே நாட்டில் நாணயம் புழக்கத்திலிருக்க வேண்டும். பொருளின் உற்பத்திச் செலவும், அதனை நுகர்வதற்கான செலவும் சமநிலையைப் பேணவேண்டும். அதாவது கேள்வியும், நிரம்பலும் மக்களின் கொள்வனவு சக்திக்கு ஏற்றதான அளவு சமநிலையைப் பேண முடியும்.  

பொருளாதாரத்தில் கேள்வியும், நிரம்பலும் (Demand and Supply)  

தற்போதுள்ள நிலையில் மக்களின் வருமானப் பற்றாக்குறை காரணமாக கேள்வி குறைந்துள்ளது. இதனால் உற்பத்தி குறைய வாய்ப்பு உண்டு. கொரொனா நோய் காரணமாக உற்பத்தியும் குறைந்துள்ளது. எனவே இங்கு கேள்வியையும் அதிகரித்து, வழங்கலையும் அதிகரித்தல் அவசியமாகிறது. பொதுவாகவே எமது பொருளாதாரம் தொடர்பான கல்வியில் கேள்வி அதிகரிக்கும்போது வழங்கல் அதிகரிக்கும் எனவும், கேள்வியும், வழங்கலும் ஒரு புள்ளியை அடையும்போது ஸ்திரமான விலைச் சமநிலை பேணப்படும் எனக் கருதப்பட்டது. கேள்வி அதிகரித்து வழங்கல் குறைவடையும்போது விலை அதிகரிப்பு ஏற்படலாம் எனவும், வழங்கல் அதிகரித்தால் விலை குறைவடையலாம் எனவும் படித்தோம். இருப்பினும் தற்போது நடைமுறையிலுள்ள நவதாராளவாத பொருளாதார ஆதரவு கொள்கையாளர்கள் அரசின் தலையீட்டை அதாவது சந்தைச் செயற்பாடுகளில் அரசின் தலையீட்டை எதிர்த்தனர். அரசின் பணி என்பது சந்தைச் செயற்பாடுகள் சுமுகமாகச் செயற்படுவதை உறுதி செய்வது மட்டுமே என்றனர். இதன் விளைவாக நாட்டின் பொருளாதாரச் செயற்பாடுகளில் அரசின் தலையீடு படிப்படியாகக் குறைந்தது. இதனால் பொருளாதார அடிப்படையில் நலிவடைந்த பிரிவினரின் எண்ணிக்கை அதிகரித்ததோடு, அம் மக்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் கைவிடப்பட்டது. குறிப்பாக அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைக் கட்டுப்பாடுகள், மானியக் கொடுப்பனவுகள் போன்றன நிறுத்தப்பட்டன.  

ஆனால் 2008ம் ஆண்டு ஏற்பட்ட உலக பொருளாதாரச் சரிவு அரசின் தலையீட்டை வேண்டி நின்றது. பல வங்கிகள் திவாலாகும் ஆபத்தை அரசின் தலையீடுகளே தவிர்த்தன. அதாவது மக்களின் வரிப்பணமே வங்கிகளைக் காப்பாற்றியது. இதேபோன்ற நிலையே தற்போதும் ஏற்பட்டுள்ளது. இன்றைய உலக பொரளாதார நெருக்கடிகள் முதலாளித்துவ உலகப் பொருளாதார நெருக்கடிகளால் மட்டுமல்ல, கொரோனா நோயின் தாக்கங்களால் வளர்ச்சி அடைந்த நாடுகளும், வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளும் சம காலத்தில் பாதிக்கப்பட்டுள்ளதால் அந்த நாடுகள் யாவும் தமது நாட்டின் நிலமைகளுக்கு ஏற்றவாறான மாற்று ஏற்பாடுகளை நோக்கிச் செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளன. அத்துடன் கொரொனா நோய் காரணமாக உலகப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வெறுமனே லாப நோக்கில் இயங்கிய தனியார் துறையால் அல்லது பல்தேசிய நிறுவனங்களால் உலகப் பொருளாதாரத்தை மீண்டும் இயக்க முடியவில்லை. இலாபமீட்டுவதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ள நிலையில் தனியார் துறையினர் முதலீடுகளில் ஈடுபடத் தயங்கியுள்ளனர். அந்தந்த அரசுகளே தத்தமது பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

(தொடரும் )