எறும்பு அணிவகுப்பு! (கவிதை)

எறும்பு அணிவகுப்பு! (கவிதை)

— சு.சிவரெத்தினம் — 

மிக அமைதியாக எறும்புக் கூட்டமொன்று 

வரிசை கட்டி அணிவகுத்துச் சென்றது.  

கொடி எதுவும் பிடிக்கவில்லை 

கோசம் எதுவும் எழுப்பவில்லை 

கொடி பிடித்து கோசம் எழுப்பியிருந்தால்  

எறும்புப் பொலிசுகள் தடியடி நடாத்தி 

கண்ணீர் புகைக் குண்டு வீசி  

துப்பாக்கியால் சுட்டு  

அணிவகுப்பைக் கலைத்திருக்கும்  

மரணித்த எறும்புகள் தெருவோரம் கிடந்திருக்கும்.  

ஆனால்  

அப்படி எதுவும் நடக்கவில்லை. 

கூட்டத்தில் 

எது தலைவன் 

எது தொண்டன் விளங்கவில்லை. 

அணிவகுப்பை ஊடறுத்து  

நாலைந்து எறும்பைப் பிடித்து வெளியே விட்டேன் 

பின்னால் வந்தவை இடைவெளியை நிரப்பிக் கொண்டன  

வரிசை குலையவில்லை 

எதுவும் நடக்காதது போல் பயணம் தொடர்ந்தது. 

இரண்டடி முன்னால் சென்று  

முன்னுக்குப் போகும் எறும்பைப் பிடித்து  

பின்னுக்குக் கொண்டு விட்டேன் 

இப்போது 

அடுத்த எறும்பு முன்னால் சென்றது.  

தலைவன் எது

தொண்டன் எது

அதிகாரி எது

ஊழியன் எது?  

எதுவும் விளங்கவில்லை. 

எனக்கு  

நேற்றுவரை நண்பனாய் இருந்தவன் 

இன்று  

கதிரை கிடைத்ததும் கட்டளையிடுகிறான். 

அதிகாரக் கதிரையில் இருப்பவனெல்லாம்  

அறிவாளியாகி விடுகிறான்  

எதிர்க் கதிரையில் இருப்பவரெல்லாம் 

முட்டாளாகின்றான். 

எதிர்க் கதிரையில் இருந்து  

தலையை ஆட்டுவதற்கு மட்டும்  

எமக்குத் தலைகள் இருக்கிறன. 

எறும்புகளுக்கு கதிரையும் இல்லை 

கட்டளையும் இல்லை 

அறிஞனும் இல்லை 

முட்டாளும் இல்லை 

எல்லாம் சமம்  

அதனால்  

முன்னுக்குப் போவது பின்னுக்கு வருவதும் 

பின்னுக்கு வருவது முன்னுக்குப் போவதும்  

ஒன்றின் இடைவெளியை மற்றொன்று நிரப்புவதும் 

அதிசயங்கள் அல்ல. 

நாம் மட்டும் இயல்பினை மறுத்து 

கதிரைகளே இயல்பென  

கட்டிக் காக்கின்றோம்.  

கதிரையில் இருக்கும் தலைவன் வாழ்க! 

கதிரை சுமக்கும் தொண்டன் வாழ்க! 

கதிரைக்கு எதிரேயிருந்து  

தலையாட்டும் தலைகள் வாழ்க! 

வாழ்க! வாழ்க! வையகம் வாழ்க!