இலங்கையின் மீட்பர்கள் யார்? இனவாதிகளா, இடதுசாரிகளா? – 01

இலங்கையின் மீட்பர்கள் யார்? இனவாதிகளா, இடதுசாரிகளா? – 01

— சிக்மலிங்கம் றெஜினோல்ட் — 

“இடதுசாரிகளை விட இனவாதிகளே மக்களை ஈர்த்தனர். அதனால் நாடு நாசமானது” என்று ஒரு பதிவைத் தன்னுடைய முகப்புத்தகத்தில் போட்டிருந்தார் ஜீவன் பிரசாத். ஒரு காலம் ஈழப்போராட்டத்தோடு இணைந்திருந்தவர் ஜீவன். அதேவேளை கலை, ஊடகவியல்துறை, திரைப்படம் எனப் பல துறைகளிலும் ஆளுமை மிக்கவர். ஜனநாயகவாதி. மாற்றங்களை எப்போதும் விரும்புகின்றவர். அவர் தன்னுடைய அவதானங்களின் வழியே கண்டடைந்த உண்மை இது.  

அவருக்கு மட்டுமல்ல, நமக்கும் இது நூற்றுக்கு நூறு உண்மை என்பதே, அதையும் விட உண்மையானது. 

ஏனென்றால், இந்த ஈர்ப்பு இனரீதியான மேம்பாட்டை எந்த இனத்துக்கும் தரவில்லை. இனப்பாதுகாப்புக்கு இதுதான் சிறந்த வழி என்று தோன்றினாலும் இந்த வகையான நிலைப்பாட்டினால் அல்லது வழிமுறையினால் நாடும் நெருக்கடிக்குள்ளாகியது. இனங்களாகப் பிளவுண்டது. ஒவ்வொரு இனமும் நெருக்கடியைச் சந்தித்தன. அழிவுகளுக்கு முகம் கொடுக்க வேண்டியதாயிற்று. இன்று பிளவுண்ட மனதோடுதான் ஒவ்வொருவரும் உள்ளோம். எல்லோரிடத்திலும் சந்தேகமும் அச்சமும் பகையுணர்ச்சியுமே மேலோங்கியுள்ளன. இலங்கையின் குடிமக்களுக்குக் கிடைத்த வரமிதுவாகியுள்ளது. 

பதிலாக இடதுசாரிகளை ஆதரித்திருந்தால் ஜனநாயகம் செழுமையாக இருந்திருக்கும். போரும் இடைவெளிகளும் உருவாகியிருக்காது. அல்லது இந்தளவுக்கு நீறு பூத்த நெருப்பாக இருந்திருக்காது. சுய பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டிருக்கும். அறிவியலும் பண்பாடும் புதிய வளர்ச்சி நிலையை எதிட்டியிருக்கும். அந்நியத் தலையீடுகள் இந்தளவுக்கு ஏற்பட்டிருக்காது. கல்வி, பொருளாதாரம், பண்பாடு உள்ளிட்ட விசயங்களில் சுதேசத்தன்மை உள்ள மக்களாக நாம் வாழ்ந்திருப்போம். அதேவேளை சர்வதேசத் தன்மை வாய்ந்தோராகவும் இருந்திருப்போம்.  

இலங்கைத்தீவு பல்லினத் தன்மையும் பன்மைத்துவமும் உள்ள அமைதித்தீவாக இருந்திருக்கும். 

இப்படி எழுதும்போது “இது ஒரு அற்புதக் கனவு” என ஒரு சாராரும் “இல்லை இது, சுத்தமான அபத்தக் கனவு” என இன்னொரு சாராரும் கூறுவர். ஏனெனில் இரண்டுக்கும் இதில் சாத்தியங்கள் உண்டு. இடதுசாரித்துவத்தில் முற்போக்குத் தன்மையும் மக்கள் நேயமும் மானுட விகசிப்பும் விடுதலையுணர்வும் இருக்கின்ற அதேவேளை அதில் எல்லையற்ற அதிகாரத்தைப் பிரயோகிக்கின்ற மூடத்தனமும் உண்டு. இரண்டுக்கும் ஏராளமான உலக உதாரணங்களும் வரலாற்று அனுபவங்களும் உண்டு. 

ஆகவே இரண்டுக்குமான சாத்தியங்களை – நன்மை தீமைகளை – மனதிற் கொண்டே இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது. 

இலங்கையின் எழுபது ஆண்டுகால அரசியல் வரலாற்றில் இடதுசாரிகள் பங்கேற்ற அரசாங்கத்துக்கும் –ஆட்சிக்கும் – இடதுசாரிகளில்லாத ஆட்சிக்குமிடையில் உள்ள வேறுபாடுகளையும் இந்தக் கட்டுரை நோக்குகிறது. 

இனத்துவ ரீதியில் இடதுசாரிகள் சோரம்போனதும் இன்னமும் போய்க்கொண்டிருப்பதும் இடதுசாரிகள் மீதான அவநம்பிக்கைகளையும் மதிப்புக்குறைவையும் ஏற்படுத்தியிருப்பது உண்மையே. இனவன்முறைகளையும் இன ஒடுக்குமுறையையும் இடதுசாரிகள் கண்டிக்கவும் தடுக்கவும் தவறினர் என்பதும் உண்மையே. மட்டுமல்ல இனச் சமனிலையைப் பேணுவதற்கான அதிகாரப் பகிர்வு – அரசியலமைப்பு உருவாக்கம் – போன்றவற்றிலும் இடதுசாரிகளின் பாத்திரம் பலவீனமானதே. 

இப்படித் தவறுகளை இழைத்திருக்கும் –இன்னமும் இழைத்துக் கொண்டிருக்கும் இடதுசாரிகளை பிறகு எப்படி முன்னிலைப்படுத்தலாம். இவர்களால் எப்படி அற்புதமான – அதிசயமான ஒரு இலங்கையை உருவாக்கியிருக்க முடியும்? என்று இடதுசாரிகளை நோக்கி உங்களில் யாரும் கேள்வி எழுப்பலாம். 

ஆனால் இந்தக் கேள்விக்குப் பின்னுள்ள உண்மைகளை மனந்திறந்து கண்டறிய வேண்டும். 

இலங்கையின் அரசியல் வரலாற்றில் சமஸ்டி முறை பற்றி முதன்முதலில் பேசியவர் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கா. ஆனால் அவரே பின்னர் தனிச்சிங்களச் சட்டத்தைக் கொண்டு வந்து கொந்தளிக்கும் நிலைமைக்கு வழியேற்படுத்தினார். அந்தக் கொந்தளிக்கும் நிலைமையின் வளர்ச்சியே இன்று சமஸ்டியைப் பற்றிய பேச்சையே எடுக்க முடியாத நிலையை உருவாக்கியுள்ளது. 

ஏன் இப்படிப் பண்டாரநாயக்கா இரண்டு நிலைப்பாடு எடுக்க வேண்டியிருந்தது? இடையில் நடந்தது என்ன? என்பதைக் கண்டறிந்தால் இடதுசாரிகளிடம் ஏற்பட்ட  – ஏற்பட்டுக் கொண்டிருக்கும் வரலாற்றுத் தவறு எப்படி நிகழ்ந்தது, நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். இவ்வளவுக்கும் பண்டாரநாயக்கா ஒன்றும் முற்போக்குவாதியோ சீர்திருத்தவாதியோ கிடையாது. ஐ.தே.கவின் பிரதிநிதியாக இருந்தவரே. பின்னர் அதிலிருந்து விலகி தனியாகச் சுதந்திரக் கட்சியை உருவாக்கியவர். ஐ.தே.கவுக்கும் சு.கவுக்கும் இடையில் வேறுபாடுகள் கட்சியின் நிறக்கொடிகளில் மட்டுமல்ல நடைமுறை சார்ந்த கொள்கையிலும் இருந்ததுண்டு. ஆனால், அது அதிக வேறுபாடாக இல்லாமல் பின்னாளில் கரைந்து விட்டது. இதற்குக் காரணம், ஐ.தே.கவின் இனவாத அலைக்கு நிகரலையை சு.கவும் இனவாத அலையை உருவாக்க முற்பட்டதேயாகும். 

இந்த இரண்டு கட்சிகளும் இனவாத அலையை உச்ச நிலைக்குக் கொண்டு செல்ல முற்பட்டபோது இதை எதிர்த்து நிற்கும் திராணியை இடதுசாரிகள் கொண்டிருக்கவில்லை. ஆனால் 1948க்குப் பின்னான இலங்கை அரசியற் பரப்பில் இடதுசாரிகளுக்கென்றொரு தனித்துவ அடையாளம் இருந்தது. இடதுசாரித் தலைவர்கள் சிங்கள – தமிழ் சமூக வெளியில் பேரடையாளத்தோடிருந்தனர். நம்பிக்கை ஒளியூட்டினர். 

ஆனால் இனவாத அலையானது கொந்தளிக்கும் உணர்ச்சியின் மையத்தில் சுழன்று கொண்டிருப்பது என்பதால், தவிர்க்க முடியாமல் இடதுசாரிகளும் அதனோடு சமரசம் செய்ய வேண்டியேற்பட்டது. அல்லது அதைக் கண்டும் காணாதிருக்க வேண்டியேற்பட்டது. அல்லது அதனோடு சேர்ந்து இழுபட வேண்டியிருந்தது. இதில் இவர்கள் தவிர்க்க முடியாமல் இரண்டு சிக்கல்களுக்குள்ளாகினர். ஒன்று அப்போது ஏற்பட்ட ரஸ்ய – சீன சார்புப் பிளவு. இரண்டாவது ஐ.தே.கவை எதிர்த்துத் தோற்கடிக்க வேண்டும் என்ற முனைப்பில் சு.கவுடன் செய்து கொண்ட சமரசம். இரண்டுமே இடதுசாரிகளைப் பலவீனப்படுத்தின என்பதை வரலாறு நிரூபித்திருக்கிறது. இவர்கள் பிரதான எதிரியாக ஐ.தே.கவையும் அதனுடைய மேற்குச் சாய்வையும் வெளியான அந்நியத்தனத்தையும் எதிர்க்க வேண்டும் என்று கருதினர். இதனால் சு.கவின் ஏனைய தவறுகள், போக்குகளுக்கு தவிர்க்க முடியாமல் உடன்பட்டனர். 

இரண்டாவது தமிழ்ச்சமூகத்தின் மீதான இனவன்முறை, இன ஒடுக்குமுறை போன்றவற்றில் சரியான நிலைப்பாட்டினை எடுக்க முடியாத நிலையை ஏற்படுத்தியதாகும். இதனால் தமிழ் இடதுசாரிகள் தனியான நிலைப்பாட்டை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.  

இலங்கையின் இடதுசாரித்துவம் மூன்றாக வகைப்பட்டது. ஒன்று, ரஸ்ய சார்புவாதிகள். இரண்டாவது சீனச் சார்புடையோர். மூன்றாவது இவர்களில் தமிழ் நிலைப்பட்டுச் சிந்திக்கும் இடதுசாரிய நிலைப்பட்டோர் ஆக. 

ஆகவே வரலாற்றுப் பொறியிலிருந்து மீள முடியாத சுழலுக்குள் இவர்கள் சிக்குண்டனர். இதன் விளைவாக வரலாற்றுத் தவறுகளுக்குட்பட வேண்டியதாயிற்று. இடதுசாரியம் ஒரு விஞ்ஞானத்துவம். அது தூரநோக்கோடு சிந்திக்கும் ஆற்றலையும் பண்பையும் கொண்டது என்பதை இவர்கள் தவற விட்டனர். இதில் தவறிழைத்தனர். இந்தத் தவறே இடதுசாரிகளை முன்னிலைச் சக்தியாக இன்னும் மாற விடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது. 

ஆனாலும் ஒப்பீட்டளவில் இடதுசாரிகளின் இடம் பெரியதே. 

எப்படியென்றால் ஒரு போதுமே அவர்கள் பன்மைத்துவத்தை மறுதலிக்கவில்லை. சிறுபான்மைத் தேசிய இனங்களின் உரிமைகளை நிராகரித்ததில்லை. மட்டுமல்ல, இலங்கையின் இந்தளவுக்கான அரசியல் நிலைமைக்கு – கட்டறுந்த அதிகார வெறிக்கும் மக்கள் விரோதப் போக்குக்கும் எதிராக இடதுசாரிகளே இடையில் நிற்கிறார்கள். ஒரு தரப்பு ஆட்சியில் பங்கேற்று விவாதங்களை நடத்துகிறது. கட்டுப்படுத்துகிறது. மறுதரப்பு மக்கள் போராட்டங்களை நடத்துகிறது. 

இந்த இடத்தில் இடதுசாரிகளையும் இடதுசாரித்துவத்தையும் வகைப்படுத்திப் புரிந்து கொள்வது அவசியம். ஒன்று உண்மையில் இடதுசாரிகள் சமகால நிலவரங்களுக்குள் சிக்கப்படாது தெளிவாக அரசியலை முன்னெடுத்திருக்க வேண்டும். ஆனாலும் சமகாலத்தை அவர்களால் புறக்கணிக்க முடியாத நிலை இருந்ததையும் புரிந்து கொள்வது அவசியம். இதில்தான் இடதுசாரிகளிடையே பிளவுண்டாகியது. இந்தப் பாராளுமன்ற அரசியல் என்பது தரகு முதலாளித்துவத்தை சட்ட ரீதியாக நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு ஏற்பாடே என இடதுசாரிகளில் ஒருசாரார் தொடர்ந்தும் வலியுறுத்தினர். இன்னொரு சாரார் இதில் பங்கேற்று இடையீடு செய்யவில்லை என்றால் மிகப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்றனர். ஆகவே இடதுசாரிகளில் இரு நிலைப்பட்டோர் உண்டு என்பதை மனங்கொள்ள வேண்டும். 

ஒரு சாரார் ஆட்சி அதிகாரத்தோடு சமரசம் செய்தோர். ஒத்தோடிகளாக இருந்தோர். இருப்போர். இதற்கு சமகால உதாரணம் திஸ்ஸ விதாரண, வாசுதேவ நாணயக்கார போன்றோர். இன்னொரு கோணத்தில் அரச எதிர்ப்பு – புரட்சி என்ற கோதாவில் வந்த விமல் வீரவன்ஸ. 

ஏனையயோர் அரசை எதிர்த்து, அதனுடைய மக்கள் விரோதப்போக்கைக் கண்டித்துக் கொண்டிருப்போர். இங்கே உள்ள கவலையும் துரதிருஷ்டமும் என்னவென்றால் இவர்கள் பல அணிகளாக – குழுக்களாகச் சிதறுண்டிருப்பதே. உண்மையில் இது மக்கள் விரோதமானது. அரச அதிகாரத்துக்குச் சார்பானது. ஒடுக்கு முறைக்கு ஒத்துழைப்பது. தவறுகளுக்கு வழிவிடுவது. இதனால்தான் எதிர்த்தரப்பில் இருந்தாலும் சரி, ஆளுந்தரப்பில் (தேர்தல் அரசியலில்) இருந்தாலும் சரி இடதுசாரிகள் மீதான மதிப்புக்குறைந்தமைக்குக் காரணம்.  

கூடவே எழுந்தெரியும் இனவாத அலையை அணைக்கக் கூடிய எந்தச் சக்தியும் கருத்து நிலையும் தந்திரோபாயமும் இடதுசாரிகளிடம் இல்லை என்பதாகும். ஆனால் இடதுசாரித்துவம் என்பது விஞ்ஞானம் என விளங்கிக் கொள்வோமாயின் அதனிடம் –அந்த தரப்பிடம் அறிவு பூர்வமான – விஞ்ஞான பூர்வமான ஆற்றல் மிக்க சிந்தனையும் செயல் வழிமுறையும் அதற்கான வடிவமும் கிடைத்திருக்கும் அல்லவா. இங்கே அது நிகழவில்லை என்றால் இது அந்த அறிவுபூர்மான – விஞ்ஞான பூர்வமான தகுதியைப் பெற்றிருக்கவில்லை என்றே அர்த்தமாகும். இதைக்குறித்த உரையாடல்களும் விமர்சனங்களும் மதிப்பீடுகளும் விசாரணைகளும் நடக்கவில்லை என்றால் அது இடதுசாரித்துவத்தின் அடிப்படைக்கும் அதன் பண்புக்கும் எதிரானதே. 

அப்படியென்றால் இங்கே என்னதான் நடந்தது? என்னதான் நடந்து கொண்டிருக்கிறது? 

(தொடரும்)