சொல்லத் துணிந்தேன் – 83

சொல்லத் துணிந்தேன் – 83

  — தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் — 

அண்மையில் நடந்த இரு சம்பவங்களை நினைத்துப்பார்க்கிறேன். ஒன்று: கடந்த 16.06.2021 அன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்தவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருமான தவராசா கலையரசன் சகிதம் சர்ச்சைக்குரிய கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்திற்கு விஜயம் செய்து, பிரதேச செயலாளரைச் சந்தித்த பின்னர், கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்திற்குக் காணி, நிதி அதிகாரங்களை வழங்க வேண்டுமென்று கல்முனையில் வைத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்துள்ளமை. 

கல்முனை வடக்குப் பிரதேச செயலக விவகாரம் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக நிலவி வரும் பிரச்சினை. கல்முனைத் தமிழ் மக்கள் இது சம்பந்தமாக எத்தனையோ சாத்வீக- உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தியுள்ளனர். எத்தனையோ அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கள விஜயம் மேற்கொண்டுள்ளனர். ஜனாதிபதி மற்றும் பிரதமர் வரைக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ள விவகாரம் இது. 

நிலைமை இப்படியிருக்க, கல்முனைப் பிரச்சினையின் உண்மையான தாற்பரியத்தை இன்னும் சரிவரப் புரிந்து கொள்ளாத சிறிதரனும் கலையரசனும் ஏதோ புதிதாகத் தாங்கள்தான் இப்பிரச்சனையில் முதன்முதலாகத் தலையிடுவது போலவும் தீர்வைத் தேடுவது போலவும் நாடகமாடியுள்ளனர். உண்மையில் இவர்களது நோக்கம் என்னவென்றால், இந்தப் பிரச்சனை அரசாங்கத்தை ஆதரித்து நிற்கும் கருணா அம்மான்- பிள்ளையான்- அகில இலங்கை தமிழர் மகாசபை – கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு அணியினரால் தீர்த்து வைக்கப்பட்டால் (அதற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன) தங்களுக்குச் செல்வாக்குக் குறைந்து விடுமே- வாக்கு வங்கி குறைந்து விடுமே என்ற காரணத்தால் அம் முயற்சிகளைக் குழப்பியடித்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தவிர்ந்த வேறு சக்திகளால் தீர்வு வராமல் பார்த்துக் கொள்வது. அல்லது இவற்றையெல்லாம் கடந்து வேறு சக்திகளால் இப்பிரச்சினைக்குத் தீர்வு ஏற்பட்டால் தாங்களும் சேர்ந்துதான் தீர்வினைப் பெற்றுக் கொடுத்தோமென மக்களுக்குக் காட்டுவது. மற்றப்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தனியே இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வல்லமை கிடையாது. உண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தீர்வுக்கான முயற்சிகளைக் குழப்பாமல் ‘யார் குற்றியாவது அரிசியாகட்டும்’ என்று இப்போது மௌனமாக இருப்பதுதான் தமிழ் மக்களுக்கு இவர்கள் செய்யும் பேருதவியாகும். 

அடுத்த சம்பவம் என்னவெனில், 17.06.2021 அன்று கொழும்பில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு- இந்தியத் தூதுவர் சந்திப்பு. “அரசமைப்பின் 13ஆவது திருத்தத்திற்கு அமைவாகவும், ஐக்கிய இலங்கை என்ற கட்டமைப்புக்குள்ளும் சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும் கௌரவம் ஆகியவற்றுக்கான தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யும் இலங்கையின் நல்லிணக்கத்துக்கு இந்தியாவின் நிலையான ஆதரவு இருக்கும்” இவ்வாறு இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே நேரில் உறுதியளித்தார் என இச்சந்திப்புக் குறித்து வெளியான ஊடகச் செய்திகள் கூறுகின்றன. 

இந்தியத் தூதுவரின் இக்கூற்று புதிதல்ல. இந்திய- இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் கீழ் 13வது அரசியல் சட்டத் திருத்தம் இலங்கையின் அரசியலமைப்பில் நிறைவேற்றப்பட்ட 1987ஆம் ஆண்டிலிருந்து கடந்த முப்பத்தி நான்கு வருடங்களாக இலங்கைத் தமிழர் தரப்பு- இந்தியத்தரப்பு என எல்லாச் சந்திப்புகளின் போதும் வாய்ப்பாடு போல இந்தியத் தரப்பினால் முன் வைக்கப்படும் கூற்றாகும். 

13ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை முழுமையாக அமுல் செய்வதற்குத் தமிழர் தரப்பிலிருந்து எந்தக் காத்திரமான முயற்சிகளையும் மேற்கொள்ளாமல் அவ்வப்போது இப்படியான சந்திப்புக்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியப் பிரதிநிதிகளுடன் (இந்திய பிரதமர், வெளிவிவகார அமைச்சர், இலங்கைக்கான இந்தியத் தூதுவர் உட்பட) மேற் கொள்ளுவதும் அவர்கள் அப்போது கூறும் மேற்குறிப்பிட்ட வழமையான கூற்றுகளைத் தமிழ் ஊடகங்கள் தமிழ் மக்களிடம் ஒப்புவிப்பதும் ஒரு சம்பிரதாயமாக ஆகிவிட்டது. 

உண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்படியான சந்திப்புக்களை மேற்கொள்ளும் நோக்கம் என்னவெனில், இனப்பிரச்சனைத் தீர்வு விவகாரத்தில் நாங்கள் சும்மாயிருக்கவில்லை. இராஜதந்திர ரீதியான நகர்வுகளை மேற்கொள்ளுகிறோமென்று அரசியல் பொதுவெளியில் தமிழ் மக்களை நம்ப வைத்துப் ‘பேய்க்காட்டு’ வதற்காகவே. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ‘ஏட்டுச் சுரக்காய்’ அரசியலுக்கு வெளியே இவர்களது பங்குபற்றுதலில்லாமல் தமிழ் அரசியல் கட்சிகள் சில 09.04.2021 அன்று கொழும்பில் கூடித் தேர்தல் அரசியலுக்கப்பால் அதிகாரப்பகிர்வு இயக்கத்தை (Movement For Devolution Of Power) அங்குரார்ப்பணம் செய்துள்ளன. இந்த அரசியல் நிகழ்வு ஏற்படுத்திய அருட்டுணர்வுகளால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் துள்ளி எழுந்து மீண்டும் வழமை போல 13ஆவது அரசியல் சட்டம் குறித்து பிரஸ்தாபிக்கத் தொடங்கியுள்ளனர். 

“எத்தனை காலம்தான் (இவர்கள் தமிழ் மக்களை) ஏமாற்றுவார் இந்த நாட்டிலே”  

மேலும், மேற்குறிப்பிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு- இந்தியத் தூதுவர் சந்திப்பின்போது, 

“தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு 13ஆவது திருத்தத்தையாவது முழுமையாக நிறைவேற்றுங்கள் என்று வலியுறுத்தாத வரை நாம் (இந்தியா) எப்படி வலியுறுத்துவது” என இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை நோக்கிக் கேட்டதாகவும் செய்திகள் கசிந்துள்ளன. 

இனியாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ‘புதிய அரசியலமைப்பு’ க் கனவிலிருந்து மீண்டு தற்போது கைவசமுள்ள 13ஆவது அரசியல் சட்டத்திருத்தத்தை முழுமையாக அமுல் செய்வதற்கான முயற்சிகளை முதலில் முன்னெடுப்பதற்கான அரசியல் கள வேலைகளை இதில் ஆர்வமுடைய ஏனைய தமிழ் அரசியல் சக்திகளுடன் இணைந்து மேற்கொள்வார்களா? அப்படியில்லையாயின் அரசியலைக் கைவிட்டு ஒதுங்கியிருக்கட்டும். அதுவும் நன்றே! ஏனெனில், இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை உடனடித் தேவை 13ஆவது அரசியல் சட்டத்திருத்தத்தின் முழுமையான அமுலாக்கலே. இது நோயாளி ஒருவருக்குக் கொடுக்கும் முதலுதவிச் சிகிச்சை போன்றது.