சாதியும் பிரதேசவாதமும் – கருத்தாடல் களம் 06

சாதியும் பிரதேசவாதமும் – கருத்தாடல் களம் 06

 — எழுவான் வேலன் —  

(‘பிரதேசவாதமா ஜனநாயகப் பற்றாக்குறையா? (தமிழ் அரசியலை முன்னோக்கி நகரவிடாது தடுக்கும் உள்முரண்பாடுகள்)‘ எனும் வி.சிவலிங்கம் அவர்களுடைய கட்டுரை அரங்கம் மின்னிதழ் 06.06.2021 அன்றைய இதழில் பதிவிடப்பட்டிருந்தது. அக்கட்டுரைக்கான கருத்தாடல் களம் 06 இதுவாகும்.)  

கடந்த பதிவில் தமிழ் மொழியை அங்கீகரித்தவர்கள் தமிழை ஒதுக்கி தனிச் சிங்களம் மட்டுமே என்ற நிலைக்கு எவ்வாறு வந்தார்கள் என்று நோக்குதல் வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தேன். 

இங்கு ஒரு விசயத்தை நாம் கவனிக்க வேண்டும். பல நாடுகளில் சிறுபான்மைதான் மொழி உரிமைகளை அல்லது மற்ற உரிமைகளை பெரும்பான்மையிலிருந்து பாதுகாக்கப் போராடுவது வழக்கம். ஆனால் சிறிலங்காவில் ஒரு சிறுபான்மை தன்னை ஆபத்துக்குள்ளாக்கும் என்று அஞ்சி ஒரு பெரும்பான்மை அதன் மொழியைப் பாதுகாக்கப் போராட்டம் நடத்தியது. இந்தச் சிக்கலான பிரச்சினையை நாம் புரிந்து கொள்ள நாம் சிங்களப் பெரும்பான்மை ஏன் ஒரு சிறுபான்மை போல் நடந்து கொண்டது என்பதற்கான பிரத்தியேக காரணங்களை ஆராய வேண்டும்.‘ என்பார் என்.சண்முகதாசன்.  

1822ம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் 42 அமெரிக்க மிசன் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. 1823ம் ஆண்டு வட்டுக்கோட்டையில் பற்றிக்கோட்ட செமினறி ஆங்கிலப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. இதுவே ஆசியாவில் முதலாவது ஆங்கிலப் பாடசாலை எனக் கூறப்படுகின்றது. இதில் ஆங்கிலம், தமிழ்கிரேக்கம்லத்தீன் ஆகிய மொழிகளும் கணிதம்புவியியல், வரலாறுதத்துவவியல் ஆகிய பாடங்களும் ஒரு பல்கலைக் கழகத்தின் தரமுடையதாக கற்பிக்கப்பட்டதுடன் மாணவர்கள் விடுதியில் தங்கிப் படிப்பதற்கான வசதிகளும் இருந்தன.1920 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் 65 ஆங்கிலப் பாடசாலைகள் இருந்தன அவற்றில் 10 முதல்தர கல்லூரிப் பாடசாலைகளாகும். யாழ்ப்பாணத்தில் இருந்த 426 தமிழ் பாடசாலைகளில் கூட தரமான ஆங்கிலம் கற்பிக்கப்பட்டது. 

இலங்கையில் வேறு எங்கும் இல்லாதளவுக்கு யாழ்ப்பாணத்தில் கல்விவாய்ப்பு இருந்ததன் காரணத்தினால் பிரித்தானியரின் நிர்வாக மொழியான ஆங்கிலத்தில் கடமையாற்றக் கூடியவர்களாகவும் அந்தக் கடமையின் நிமித்தம் இலங்கையின் எந்தப்பாகத்திலும் சென்று பணிபுரியக் கூடியவர்களாகவும் யாழ்ப்பாணத்து மத்தியதரவர்க்கத்தினர் இருந்தனர். இந்த மத்திய வர்க்கத்துக்குள் யாழ்ப்பாண சமூக அமைப்பின் உயர்நிலைச் சாதியினரே இருந்தனர். தாழ்த்தப்பட்ட சமூகங்களுக்கான கல்வி வாய்ப்புக்கள் 1960 ஆண்டுக்குப் பின்கூட மறுக்கப்பட்டு வந்திருப்பதை கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.   

1921ம் ஆண்டு 20 வயதுக்கு மேற்பட்ட மொத்த சிங்களவர் 790,954 பேரில் 987 பேர் அரச வேலைவாய்ப்பைப் பெற்றிருக்க அதே ஆண்டு 20 வயதுக்கு மேற்பட்ட மொத்தத் தமிழர்கள் 139,361 பேரில் 684 பேர் அரச வேலைவாய்ப்பைப் பெற்றிருந்தனர். இது தமிழர்களின் சனத்தொகை விகிதாசாரத்திலும் பார்க்க அதிகூடிய எண்ணிக்கையாகும். இந்த ஆங்கிலம் கற்ற வர்க்கத்தினரே உயர் நிர்வாகப் பதவிகளை வகித்ததோடு ஏனைய பதவிகளில் ஆட்சேர்ப்பிலும் அவர்களுடைய செல்வாக்கே காணப்பட்டது. தனது சொந்த பந்தங்களுக்கு முன்னுரிமை அளித்து உள்ளீர்ப்பதில் யாழ்ப்பாணத்தார் எப்பவும் கெட்டிக்காரர்களாக இருந்தார்கள். உதாரணத்துக்கு ஐரோப்பாவுக்கு புலப்பெயர்ந்த போது மற்ற எந்தப் பிரதேசங்களையும் விட யாழ்ப்பாணத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களே தங்களது சொந்தங்களையெல்லாம் அங்கு அழைத்துக் கொண்டதைப் போலதான் இதுவும் ஆகும்.  

சுதந்திரத்துக்குப் பின்பும் ஆங்கில மொழியின் ஆதிக்கத்தின் காரணமாக சிங்கள மொழி மூலம் கற்விகற்ற சிங்கள அறிவுஜீவிகள் கௌரவமான பதவிகளில் ஓரங்கட்டப்படுவதனால் பாதிப்புக்குள்ளானார்கள். இதனால் அவர்கள் சிங்களம் மட்டும் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்று விரும்பினார்கள். அப்போதுதான் அவர்களால் அரச வேவைகளில் இணைந்து கௌரவமான தொழில்களையும் நல்ல வருமானத்தினையும் பெறலாம் என்று எதிர்பார்த்தார்கள். இந்த எதிர்பார்ப்பு சாதாரண சிங்கள தொழிலாளர்களிடத்திலும் விவசாயிகளிடத்திலும் உருவாகவில்லை. அவர்கள் இன்னும் இலவசக் கல்வியின் பயனைப் பெற்றவர்களாக மேற்கிளம்பவில்லை. இதே நிலைதான் கிழக்கு மாகாணத்திலும் வடமாகாணத்தில் தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களிடத்திலும் இருந்த நிலைமையாகும்.   

எனவே சாதாரண சிங்களத் தொழிலாளரும் சரியாழ் மத்தியதர வர்க்கத்தைத் தவிர்ந்த தமிழ் தொழிலாளரும் சரி ஒரு இனத்தின் மொழியை மற்ற இனம் ஒதுக்குவதற்கான தேவையுடையவர்களாக இருக்கவில்லை. ஆனால் இவ்விரு இனங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்களுடை பிள்ளைகள் கல்வி கற்கும் தாய்மொழியில் வேலை வாய்ப்புக்கள் வழங்கப்படுமாக இருந்தால் அதன் மூலம் தமது பிள்ளைகள் எதிர்காலத்தில் நல்ல நிலைக்கு வருவர் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டிருக்கிறது. இந்த எதிர்பார்ப்புக் காரணமாக தங்கள் தாய்மொழிக்கான ஆதரவினை அவர்கள் வழங்கியிருந்தனர். இந்த ஆதரவுத் தளத்தினை கட்டியெழுப்பவதில் நான்கு வகையான குட்டி பூர்ஷ்வாக்கள் செல்வாக்குச் செலுத்தியதாக குமாரி ஜயவர்த்தன சுட்டிக்காட்டுகின்றார். அந்தவகையில்,  

1. ஆசிரியர்கள்: சிங்கள ஆசிரியர்கள் பலரைப் பேட்டி கண்ட ஹவாட் றிக்கின்ஸ் அவர்களுடைய கருத்தின் பிரகாரம் சிங்களம் அரசகரும மொழியாக்கப்படின் தற்போதைய வசதியீனங்களில் பல மறைந்து விடும். ஆங்கிலம் அரசகரும மொழியாக இருக்கும் வேளை அதற்கு வழங்கப்பட்ட அந்தஸ்த்து அனைத்தும் சிங்கள மொழிக்கும் சிங்கள ஆசிரியர்களுக்கும் கிடைக்கும். அவர்கள் சிங்கள மொழியிலும் கலாசாரத்திலும் உயர்ந்தவர்கள்அவர்களது திறமை அரசின் அங்கீகாரம் பெறின்அவர்களும் அந்தஸ்த்தில் உயர்வர்சிங்களம் அரசகரும மொழியானால் சம்பள வேறுபாடுகல்வி வசதிகள்தொழில் வாய்ப்புக்கள் ஆகியன ஆங்கிலம் பேசும் உயர் வகுப்பினருக்கு மாத்திரம் உரித்தாக மாட்டா. ஆங்கிலத்தின் இடத்திற்கு சிங்களம் முன்னேற்றப்படின் பெருந்தொகையான அரச பதவிகள் கிராமத்தில் கற்கும் மாணவர்களுக்கு உடனடியாகக் கிடைக்கும்‘ (மேற்கோள், குமாரி ஜயவர்த்தனா) என நம்பினார்கள். 

2. மாணவரும் இளைஞரும்: சிங்கள மொழிமூலம் கல்விகற்று ஆங்கில ஆதிக்கத்தினால் ஓரங்கட்டப்பட்டு வேலையற்றிருந்த இளைஞர்களும் இலவசக் கல்வியினூடான வாய்ப்பைப் பயன்படுத்தி சிங்க மொழிமூலம் கல்வி கற்றுக் கொண்டிருந்த மாணவர்களும்சிங்களம் மட்டும் அமுல்படுத்தப்படுமாயின் தங்களுக்கு வேலைவாய்ப்புக்கள் கிடைக்கும் என நம்பியதால் சிங்களம் மட்டும் கொள்கையை தீவிரமாக ஆதரித்தனர். 

3. ஆயுர்வேத வைத்தியர்கள்: சிங்களப் பண்பாட்டில் ஆயுர்வேத வைத்தியத்துக்கும் அதனைச் செய்கின்ற வைத்தியர்களுக்கும் மதிப்பும் மரியாதையும் இருந்தன. ஆங்கிலக் கல்வியும் ஆங்கில மருத்துவமும் அவர்களுடைய அந்தஸ்த்தைக் குறைத்தன. சிங்களம் அரசகரும மொழியாக அமையப்பெற்றால் தங்களுடைய பாரம்பரிய வைத்தியமும் சிங்கள பண்பாடும் உயிர்ப்புப் பெறும் என நம்பினர். இதனால் சிங்கள மொழிக் கொள்கையை வலியுறுத்தினர்.   

4. புத்த மதகுருமார்: இவர்கள் சிங்களம் மூலம் கல்வி கற்று பண்டைய சிங்கள இலக்கியங்களையும் பாளி மொழியையும் படித்திருந்ததோடு, இவர்களே சிங்கள பண்பாட்டின் காவலர்கள் எனும் ஒரு எண்ணப்பதிவும் சிங்கள மக்களிடம் உண்டு. இவர்கள் ஆங்கிலம் பேசும் நிர்வாக அதிகாரிகளினால் ஓரங்கட்டப்படடனர். சிங்களம் அரசகரும மொழியாக வரும் பட்சத்தில் தாங்கள் இழந்த பாரம்பரியத்தினை மீட்டெடுக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் சிங்கள மொழிக் கொள்கையை தீவிரமாக முன்னெடுத்தனர்.    

எனவே இங்கு தமிழ் இனத்தின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியினாலன்றி தமிழர்கள் கொண்டிருக்கும் ஆங்கிலத் திறன் காரணமாக தங்களுக்குரிய வேலைவாய்ப்புக்கள் மறுக்கப்படுவதாக உணர்ந்த சிங்கள மத்தியவர்க்கம் ஆங்கிலம் இருந்த இடத்தில் சிங்களத்தைக் கொண்டு வருவதன் மூலம் அந்த வேலைவாய்ப்புக்களை தாம் பெற்றுக்கொள்ள முடியும் என்பதோடு தமது பண்பாட்டையும் பாரம்பரியங்களையும் கட்டியெழுப்ப முடியும் என்று நினைத்தனர்.  

இவ்வாறு நினைப்பதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. தமிழர்களும் இவ்வாறு நினைத்து சிங்களத்துடன் தமிழழையும் ஆட்சி மொழியாக கொண்டு வருவதற்கு சிங்களவர்களுடன் சேர்ந்து உழைத்திருக்க வேண்டும். எஸ்.டபிள்யு.பண்டாரநாயக்கா அவ்வாறானதொரு விருப்பத்தைக் கொண்டிருந்தார் அதனால்தான் அவர் சிங்களத்தையும் தமிழையும் உடனடியாக அரசகரும மொழிகளாக்க வேண்டும். அப்பொழுதுதான் இந்நாட்டு மக்கள் தமது சொந்த நாட்டிலேயே அன்னியராக இருக்கும் நிலை ஒழியும். இதன் மூலம் சிங்களம் மூலமும் தமிழ் மூலமும் கல்வி கற்றோர் இன்று வாழ்க்கையின் கடைநிலையில் இருப்பதற்கும் முடிவு கட்டலாம்‘ என்று குறிப்பிட்டதை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். அது உண்மையும் கூட. ஆனால் யாழ் மேலாதிக்கத் தமிழ்த் தலைவர்கள் ஆங்கிலம் போய் தமிழும் சிங்களமும் வந்து விட்டால் தங்கள் அதிகாரத்துவமும் பிழைப்பும் போய்விடுமே என்றஞ்சினார்கள். அதனால் சிங்களத்துடன் தமிழையும் இணைத்து சாதாரண தமிழ் மக்களும் பயன்பெறத்தக்க ஒரு திட்டத்தை முன்வைப்பதற்கு முனையவில்லை.   

சிங்களம் மட்டும் சட்டத்துக்கு லங்கா சமசமாஜக் கட்சிகம்யூனிஷ்ட் கட்சி என்பன சிங்கள மொழிக்கும் தமிழ் மொழிக்கும் சம அந்தஸ்த்து என்ற கொள்கையினைக் கடைப்பிடித்து பிரச்சாரங்களை முன்னெடுத்தன. இவ்வாறு சமஅந்தஸ்த்துப் பேசிய பல கூட்டங்கள் சிங்கள பேரினவாதிகளால் குழப்பப்பட்ட போதும் லங்கா சமசமாஜக் கட்சிகம்யூனிஷ்ட் கட்சித் தலைவர்கள் தங்கள் கொள்கைகளில் இருந்து பின்வாங்கவில்லை.  

மேற்படி கட்சியினரின் கூட்டங்கள் சிங்களத் தீவிரவாதிகளினால் குழப்பப்பட்ட போதிலும் கலாநிதி என்.எம்.பெரேரா சிங்களமும் தமிழும் சம அந்தஸ்துடைய மொழிகளாக இருக்க வேண்டும் என்ற பிரேரணையை முன்வைத்து பின்வருமாறு உரையாற்றினார். இன்று பிரபலமான கருத்தாகிய சிங்களம் மட்டும் என்பதை ஆதரிப்பது எனக்கும் எனது கட்சி அங்கத்தவர்களுக்கும் எளிதாக இருக்கும். மற்றவர்களைப் போல் நாமும் வீரபுருசர்களாக போற்றப்பட்டிருப்போம். ஆனால் நாம் தொடர்ந்து உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளோம். இந்திலைப்பாடு மிகவும் சரியானது எனக் கருதியதால் நாம் அதிலிருந்து மாறவில்லை. இன்றுவரை அதனையே கைக்கொண்டுள்ளோம். இது மற்றவர்களின் எதிர்ப்பை பெருமளவில் பெற்றபோதும் இந்தக் கருத்து சரியானது என்பதில் நான் மிகவும் உறுதியாக உள்ளேன். இவ்வாறு கூறுவதால் அரசியல் பதவியில் சில காலம் நாம் இல்லாமல் போவதற்கு வழிவகுத்தாலும் எஸ்.எஸ்.எஸ்.பி. அங்கத்தினராகிய நாம் அவற்றை எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம். (மேற்கோள். குமாரி ஜயவர்த்தன) என எந்தவித தேர்தல் இலாபங்களையும் கருதாது சிறுபான்மையினர் உரிமை விடயத்தில் மிக உறுதியாக இருந்துள்ளனர்.   

அனில் முனசிங்கா எஸ்.எஸ்.எஸ்.பியும் வேறு புரட்சிகரக் கட்சிகளும் இவ்வகுப்பு வாதத்திற்கு எதிராகப் போராடும். எந்தச் சூழ்நிலையிலும் இனவாதத்தை நாம் ஆதரிக்கோம். இத்தீவில் வசிக்கும் ஒவ்வொரு நபருக்கும் ஒரே விதமான உரிமையை பெற்றுக் கொடுப்பதற்காக நாம் போராட வேண்டும்‘ (மேற்கோள் குமாரி ஜயவர்தன) என்றார்.  

இது போன்றே முக்கிய இடதுசாரித் தலைவர்களான லெஸ்லி குணவர்த்தன, கொல்வின் ஆர்.டி.சில்லா போன்றவர்கள் தனிச் சிங்களச் சட்டம் இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கு விரும்பத்தகாத எதிர்வினைகளை ஏற்படுத்தும் என அரசாங்கத்தை எச்சரிக்கை செய்யத் தவறவில்லை.  

எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா தனிச்சிங்களச் சட்டத்தைக் கொண்டு வந்திருந்தாலும் அதற்கு முன்பு இலங்கைக்கு சமஸ்டி அரசியலமைப்பே பொருத்தமானது என்றும் சிங்களத்துக்கும் தமிழுக்கும் சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்றும் கூறிவந்தவர். சிங்கள இனவாத வளர்ச்சியை தனது அரசியல் வெற்றிக்காக பயன்படுத்தியதனால் சிறுபான்மையினர் தொடர்பாக தான் கொண்டிருந்த கொள்கையினை அவர் விட்டிருந்தாலும் சிங்களவர்களுடைய கோரிக்கை நியாயமற்றது என்பதை விளங்கிக் கொண்டவராகவே இருந்தார். இதனை அவருடைய பின்வரும் உரை எடுத்துக்காட்டுகின்றது. சிங்களவரில் பெரும்பான்மையினர் இதனை மிகத் தீர்க்கமாக வேண்டுகின்றனர். என்பது ஒரு உண்மையாகும். அவர்களது கோரிக்கை நியாயமானதாஎன்பது வேறொரு பிரச்சினையாகும்.‘ (மேற்கோள் குமாரி ஜயவர்தன) என்றார்.  

இது போன்று சிங்கள மொழி தொடர்பாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மகாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் சட்டமூலத்தை தயாரிக்கும் போதுசிங்கள மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் அதேவேளை தமிழ் மக்களின் அபிலாசைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதோடு இலங்கையில் வாழும் எல்லா இன மக்களும் அரசாங்கத்துடன் தமது தாய் மொழியில் தொடர்பு கொள்வதற்கான வசதிகளும் செய்யப்படுதல் வேண்டும் என ஆலோசனை வழங்கியிருந்தார்.   

சிங்களத் தலைவர்களை வெறுப்பேற்றிய தமிழ் தலைவர்கள்  

தமிழ்த் தலைவர்கள் இவ்வாறான சிங்களத் தலைவர்களுடன் சேர்ந்து பயணிக்காதது மாத்திரமல்ல அவர்களுடைய செயற்பாடுகளுக்கு தீங்கு ஏற்படும் வகையிலும் நடந்து தமிழர்களுக்காகப் பேசியசெயற்பட்ட சிங்களத் தலைவர்களையும் தமிழர்கள் மேல் வெறுப்படைய வைத்து ஒதுங்கிக் கொள்வதற்கான செயற்பாடுகளையே முன்னெடுத்தார்கள் என்பது தமிழர்களுக்குச் சொல்லப்படாத ஒரு செய்தியாகும்.  

தமிழர்களை உணர்ச்சி வசப்படுத்தக் கூடியதும் சிங்களவர்களை கோபமேற்படுத்தக் கூடியதுமான வாதங்களை முன்வைத்தனர். உதாரணமாக சி.சுந்தரலிங்கம் அவர்கள் சிங்களம் மட்டும் மசோதாவை மிகவும் கடுமையாக எதிர்த்தார். சிங்களம் மட்டும் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டால் தமிழர் தமக்கெனத் தனியான அரசை அமைக்கின்ற நிலை ஏற்படும் எனப் பாராளுமன்ற விவாதத்தின் போது எச்சரிக்கை செய்தார். ஜி.ஜி.பொன்னம்பலமும் அதே கருத்தையே தெரிவித்தார்.‘ (முருகர் குணசிங்கம்) 

“தமிழர்களுக்கான தனியரசு என்பது தமிழ்த் தலைவர்களின் சட்டைப் பைக்குள் இருக்கும் விடயமல்ல தமிழ்த் தலைவர்களின் இவ்வாறான பேச்சுக்கள் சாதாரண தமிழ் மக்களை உணர்ச்சிவசப்படுத்தி, பாராளுமன்றத்தில் தாங்கள் நிலையாக இருப்பதற்கான வழிவகை” என்பதை நன்கு உணர்ந்து கொண்ட எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா இடதுசாரிகளின் யதார்த்தமான எச்சரிக்கைகளையும் பொருட்படுத்தாது, தனிச்சிங்களச் சட்ட மசோதாவை வாக்கெடுப்புக்காக பாராளுமன்றில் சமர்ப்பித்தார். இதன் போது ஆதரவாக 66 வாக்குகளும் எதிராக 29 வாக்குகளும் கிடைத்தன. எதிராக வாக்களித்த கட்சிகள்கம்யூனிஸட் கட்சி, எஸ்.எஸ்.எஸ்.பிதமிழரசுக் கட்சிதமிழ் காங்கிரஸ் என்பனவாகும். 

தனிச் சிங்களச் சட்டத்துக்கு எதிராக அளிக்கப்பட்ட 29 வாக்குகளில் 10 வாக்குகள் மாத்திரமே தமிழர்களுடையதாகும். ஏனையவைகளில் 3 முஸ்லிம் வாக்குகளும் 16 சிங்கள வாக்குகளுமாகும். இங்கு தமிழ்முஸ்லிம் எனும் இரு சிறுபான்மையினரை விட சிங்களப் பிரதிநிதிகள் அதிகமானவர்களாகும். இவ்வாறு சிங்களப் பிரதிநிதிகள் அதிகமாக இருந்தமை தமிழர்களுக்கு ஒரு சாதகமான நிலைமையாகும். இந்தச் சாதக நிலையில் ஆதரவாக வாக்களித்த 19 சிங்களமுஸ்லிம் பிரதிநிதிகளுடன் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக தமிழ் தலைமைகள் கலந்துரையாடி ஒரு கூட்டுத் தீர்மானத்தை எடுத்து அதனை பிரதமருக்கு அறிவித்திருப்பார்களேயானால் அது தொடர்பான பிரதமரின் முடிவு வேறுவிதமாக இருந்திருக்கலாம். பிரதமர் பாதகமான பதிலை வழங்கியிருந்தால் மக்களுக்காக தங்கள் பாராளுமன்றப் பதவிகளைத் துறந்து விட்டு மேற்படி  சிங்களமுஸ்லிம் தலைவர்களுடன் ஒன்றிணைந்து அனைத்து மக்களும் ஒன்றிணைந்த ஒரு மக்கள் போராட்டத்தை நடாத்துவதாக இருந்திருக்க வேண்டும். தமிழ் மொழிக்கும் சம அந்தஸ்த்துப் பெற்றுக் கொடுக்க வேண்டுமாக இருந்திருந்தால் இதைத்தான் செய்திருப்பார்கள். சிங்கள மொழியை எதிர்க்க வேண்டிய அவசியம் கிடையாது. அவ்வாறு எதிர்த்தமைக்குக் காரணம் ஆங்கிலம் இல்லாமல் போய்விடும் என்பதினால்தான். அதனால்தான் தமிழ் தலைமைகள் சிங்களத் தலைவர்களை விட்டு விட்டு தாங்களே தன்னிச்சையாக கூடி தனிச் சிங்களச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாராளுமன்ற கட்டிடத்தின் படிகளில் சத்தியாக்கிரகம் நடத்தவது என்று தமிழ் அரசுக் கட்சி தீர்மானித்தது. இந்தப் போராட்டத்தை அரசு அடக்கும் எனத் தெரிந்திருந்த போது, திரு.சி.சுந்தரலிங்கம் உதுக்கெல்லாம் பயப்படுகிறதாசெய்வதைச் செய்யட்டும் நாங்கள் எமது முடிவை மாற்றக் கூடாது என்றார். அக்கருத்தை தந்தை செல்வா ஆதரித்தார்.‘ (த.சபாரெத்தினம்) 

29 பேரில் 19 பேரிடம் எவ்வித ஆலோசனைகளும் கேட்காது 10 பேரினால் எடுக்கப்பட்ட முடிவுதான் தந்தை செல்வநாயகத்தின் யாழ் மேலாதிக்க ஜனநாயகமாகும். இந்த யாழ் மேலாதிக்க ஜனநாயகத்தினால் பலியானவர்கள் சுந்தரலிங்கமோ அல்லது தந்தை செல்வாவோ அல்லது ஜி.ஜி.பொன்னம்பலமோ அல்லது அவர்களின் குடும்பங்களோ, உறவினர்களோ அல்ல. மாறாக கல்லோயா குடியேற்றத் திட்டத்தின் கீழ் குடியேறிய வறிய தமிழ்க் குடும்பங்களேயாகும். ஊடகப் பிரபல்யத்துக்காகவும் அதனை அடிப்படையாகக் கொண்ட தங்கள் இருப்புக்காகவும் நடத்தப்பட்ட சத்தியாக்கிரகம் போராட்டமானது தமிழ் மொழிக்கு எவ்வித நன்மையையும் அளிக்காததோடு தமிழர்களின் பாரம்பரிய நிலங்களிலிருந்து தமிழர்கள் விரட்டியடிக்கப்படுவதற்கும் வழிகோலியது. அதாவது இவர்களுடைய போராட்டத்துக்கு பலிக்கடாவாக்கப்பட்டவர்கள் அம்பாரையைச் சேர்ந்த வறிய விவசாய தமிழ் மக்களாகும். இந்த எதிர்விளைவுகள் பற்றியும்  பலியான மக்களைப் பற்றியும் கவலைப்படாது வீரத் தளும்புகளைப் பெற்றுக் கொண்ட தமிழரசுக் கட்சித் தலைவர்களையே யாழ் மையவாத ஊடகங்கள் புழுகித் தள்ளி தமிழ் மக்களின் மீட்பர்களாக எடுத்தோதின.  

உண்மையில் 1956ம் ஆண்டில் அம்பாரையில் ஏற்பட்ட முதலாவது இனக் கலவரத்துக்கு பிரதான காரணகர்த்தாக்கள் யாழ் மேலாதிக்கத் தமிழ்த் தலைவர்களேயாகும். இந்த உண்மைகளை மறைத்து  தமிழுக்காகப் நடாத்திய அகிழ்சைப் போராட்டத்தை சிங்கள அரசு இனக்கலவரத்தை உருவாக்கி அடக்கி விட்டது என்றே எமக்குச் சொல்லப்பட்டு வருகிறது. யாழ் மேலாதிக்கத் தலைவர்களின் பிரபல்யத்துக்கும் இருப்புக்கும் கிழக்கு மக்களும் வடக்கின் வறிய தமிழ் மக்களும் பலியாக்கப்படுகின்றோம் எனக் கூறினால் நாம் தமிழ்த் தேசியத் துரோகியாகவும் பிரதேசவாதியாகவும் ஆக்கப்பட்டு கடந்த காலத்தைப் பற்றிப் பேசி வாக்கு வங்கி அரசியல் செய்பவர்களாக முத்திரை குத்தப்படுகின்றோம்.     

(தொடரும்…………………..)