நெஞ்சம் இருண்டிருக்கிறது! உதடு அசைகிறது!   அல்லது- ‘புதிய மொந்தையில் பழைய கள்’

நெஞ்சம் இருண்டிருக்கிறது! உதடு அசைகிறது! அல்லது- ‘புதிய மொந்தையில் பழைய கள்’

   — அசுரா — 

தோழர் சிவலிங்கம் அவர்களின் ‘பிரதேசவாதமா ஜனநாயக பற்றாக்குறையா’ எனும் தலைப்பில் அமைந்த கட்டுரைக்கு எதிர்வினையாக எழுவான்வேலன் அவர்களது கட்டுரை ஒரு விவாதப்போக்கிற்கு பயனுள்ளதாக அமைந்திருந்தது. அந்தவகையில் அதன் முக்கியத்துவம் கருதி எழுவான்வேலனின் கட்டுரையையும் தோழர் சிவலிங்கம் அவர்களின் கட்டுரைத் தொடர்பையும் நான் எமது ‘தூ’ (http://www.thuuu.net/) இணையத்தில் “அரங்கம்” இணையத்திற்கான நன்றிப் பகிர்வுடன் மீள் பதிவு செய்து வருகின்றேன். அதற்கான அடிப்படைக் காரணம், யாழ் சமூகத்தின் சாதிய வரலாற்றோடு அதனது அரசியல் போக்கும் வளர்ந்த ஒரு வரலாறு எமக்குள் புரையோடிக்கிடக்கிறதென்பதே. எழுவான் வேலனின் முன்னுதாரணங்களும் அதையொட்டியே வளர்ந்து வந்தது. அதில் முன்வைக்கப்பட்ட வரலாற்று நிகழ்வுகள் தற்போதைய வடக்கு தமிழ் அரசியலின் நகர்வினை புரிந்துகொள்வதற்கான முன்னுதாரணங்களாக இன்றும் அழுத்தமாக முன்வைக்கவேண்டிய அவசியம் இருப்பதாக நானும் கருதுகின்றேன்.  

மதிப்பிற்குரிய தோழர் சிவலிங்கம் அவர்கள்: “ஒரு காலத்தில் சில கருத்துக்கள் ஆதிக்கம் செலுத்தியிருக்கலாம். ஏனெனில் அதற்கான புறச்சூழல் காணப்பட்டிருந்தது. ஆனால் இன்று அவ்வாறான புறச் சூழல் பெருமளவில் மாற்றமடைந்துள்ளது.” என்கிறார். உண்மையில் இது தமிழ் சமூக-அரசியல் மீதான சிவலிங்கம் அவர்களின் புறநிலைப் பார்வைதான். முற்றாக அல்லாது பெருமளவில் மாற்றமடைந்திருக்கிறதென்பதும், அதில் நவீனத்துவ வளர்ச்சியின் பங்களிப்பை கருத்தில்கொள்வது என்பதிலும் உண்மையுண்டு. நவீன நகர்வுகள் சாதிய தீண்டாமை வடிவத்தின் புறச்சூழலை அகற்றி (மறைத்து) வருகிறது என்பதுவும் வெளிப்படையானதே. அவரது அறிவார்ந்தநிலை (மனநிலை) கொண்ட அரசியல் பார்வை அதற்கு பின்புலமாக விளங்குகிறது. ஆனால் சமூகத்தின் அகம் சார்ந்த பார்வைக்கு,  மனித உணர்வு நிலையானது  (நெஞ்சார்ந்த நிலை) அறிவார்ந்த அரசியல் பார்வையுடனும் இணைந்திருக்கவேண்டும். இடதுசாரிய கட்சிகளுடனான அனுபவம் மிகுந்த மதிப்புமிக்க தோழர் சிவலிங்கம் யாழ்ப்பாண தமிழ் அரசியலை அறிவியல் பூர்வமாக நன்கு புரிந்துகொண்டிருக்கிறார் என்பதை: “வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் தலைமையை வைத்திருந்த தமிழரசுக் கட்சி அதன் உள் முரண்பாடுகளால் படிப்படியாக தனது அரசியலைக் குறும் தேசியவாதமாக மாற்றிக்கொண்டது. தென்னிலங்கையில் இனவாதம் பிரதான இயங்கு சக்தியாக செயற்படுகையில் தமிழர் தரப்பில் அதற்கான எதிர் விளைவுகள் இன்னொரு இனவாதமாக மாற்றம் பெற்றன.” என தீர்க்கமாகவே அறிந்திருக்கிறார். 

ஆயினும் தமிழ் தரப்பினரின் (வடக்கு) எதிர்விளைவுகளில் எவ்வித வேறுபாடுகளும் காணமுடியாத நிலையிலும் அவர்களின் முன்னோடிகளின் அரசியல் செயல்பாடுகள் என்பது காலனித்துவ காலத்தின் எச்சங்கள். அதனை மீள்ஆய்வு செய்வதானது தற்போதைய நவீன வளர்ச்சி செயல்பாட்டிற்கு பாதகமானதெனக் கருதும் வகையில் இப்படியும் முன்வைக்கின்றார்: “இன்றைய அரசியல், சமூக, பொருளாதார மாற்றங்கள் மற்றும் உலக மாற்றங்கள் எதனையும் விஞ்ஞானபூர்வ அடிப்படையில் கவனத்தில் கொள்ளப்படாமல் வெறுமனே கடந்த காலத்தோடு விவாதங்கள் தொடர்வது மிகவும் கவலை தருகிறது. நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளுக்கு அப்பால்சென்றுள்ள நிலையில் இன்னமும் குடியேற்ற ஆட்சிக் காலத்து வரலாறுகளைத் துணைக்கழைத்து அதன் தாக்கத்திலிருந்து விடுபட முடியாமல் தவிப்பதாக ஒரு கதையாடல் அல்லது தர்க்கம் உருவாக்கப்படுகிறதே தவிர வேறு எதனையும் காணமுடியவில்லை. இங்கு காத்திரமான எதிர்காலப்பாதை ஒன்றிற்கான விவாதங்கள் தேவையே தவிரகடந்தகாலத்தை நோக்கிய வாதங்கள் அல்ல.” என்பதோடு“மாறிச் செல்லும் சமூக, பொருளாதார கட்டமைப்புகள் இன்றைய இலங்கைச் சமூகம் குடியேற்ற ஆட்சிக்கால சமூக, பொருளாதார உறவில் இல்லை. அன்று நில ஆதிக்கம் அதனடிப்படையில் சாதி ஆதிக்கம் மற்றும் குடியேற்ற ஆட்சியாளரின் சேவகம் காரணமாக ஏற்பட்ட கல்வி வளர்ச்சி என்பன அரசியல் தீர்மானங்களில் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு உண்டு. அன்று நாட்டின் பல பாகங்கள் தொடர்பு அற்று மூடிய நிலையில் இருந்தன. நாட்டின் பிரதேசங்கள் பலவும் போக்குவரத்து அற்று, மக்களுக்கிடையேயான தொடர்புகள் குறைந்த நிலையில் அப்பிரதேசங்களில் காணப்பட்ட கலாச்சார அம்சங்கள் வளர்ச்சி அடைந்ததாக அல்லது தனித்துவம்மிக்கதாக மூடிய அளவில் வளர்ந்திருக்க வாய்ப்பு உண்டு. இதை எவரும் மறுதலிப்பதாக இல்லை. இவ்வாறான போக்குகள் உலகம் முழுவதிலுமே காணப்பட்டன. இன்று உலகம் மிகவும் சுருங்கி அவற்றின் அடையாளங்கள் பல அழிந்துள்ளன. இவற்றைக் கொண்டாடுவது என்பது வரலாற்றின் அடையாளங்கள் என்பதே தவிர இன்றும் அவை மாறாதிருப்பதாகவும், அதனடிப்படையில் தனித்துவம் இன்னமும் பேணப்படுவதாகவும் விவாதிப்பது விஞ்ஞான பூர்வமானதாக இல்லை. நவீன பொருளாதார யுகத்தில் தனித்துவமான கலாச்சாரம் என்ற வாதங்கள் மிகவும் பலவீனமானவை.” என்பதோடு ஆணித்தரமாக இவ்வாறும் நிறுவுகிறார்: “எமது சமூகம் அவ்வாறான தடைகளைத் தாண்டி வெகு தூரம் முன்னேறியுள்ளது. அவ்வாறான பிற்போக்கு அம்சங்களிலிருந்து சமூகங்கள் வெகுதூரம் முன்னேறியுள்ளது. அவ்வப்போது குடியேற்ற ஆதிக்க எச்ச சொச்சங்கள் வெளியில் தலைகாட்டினாலும் தாக்கங்கள் அற்பமானவை. சமூக முன்னேற்றத்தைத் தடுத்து விட முடியாதவை.” என எமது சமூகமும் அதன் அரசியல்செயல்பாடுகளும் வெகுவாக முன்னேற்றம் அடைந்து வருவதாக தான் அறிவுபூர்வமாக, விஞ்ஞானபூர்வமாக கண்டடைந்துள்ளதாகவும் கருதுகின்றார். வரலாற்று வளர்ச்சி நிலை என்பது (சகல மட்டங்களிலும்) அது கருத்தியலாகட்டும், கோட்பாடுகளாகட்டும் ஒன்றுடன் ஒன்று விவாதித்தும் முரண்பட்டும் முன்னகர்வதாகவே அறிந்திருக்கின்றோம். அந்த வகையில் முரண்படும் இருதரப்புமே முக்கியமானவை மதிப்புமிக்கவை. எழுவான் வேலனின் கருத்தும், தோழர் சிவலிங்கம் அவர்கள் முன்வைக்கும் கருத்தும் அவ்வாறான இரண்டு முரண்பட்ட கருத்து மோதல்களே. ஒன்று பிறிதொன்றை முற்றாக அழித்து சிதைத்து  தன்னை நிறுவிக்கொள்வதாக அமைந்துவிடக்கூடாது. அவ்வாறு நிகழுமாயின் அது முன்னகர்வுக்கான பாதையாக அமைந்துவிடாது. 

நவீனத்துவத்தையும் விஞ்ஞானத்தையும் அவைகளின் வளர்ச்சிப்போக்கையும் அதனது சாதகபாதகமான அம்சங்கள் எவையும் கவனத்தில் கொள்ளப்படவில்லை. அனைத்து நவீன வளர்ச்சியையும் எவ்வித விமர்சனப்பார்வையும் அற்ற நிலையில் யாழ்ப்பாண மையவாத      அரசியலுக்கு ஒரு காப்பரணாகவும், அதுவே சமூகத்தின் நவீனத்துவ வளர்ச்சிப்போக்காகவும் தோழர் சிவலிங்கம் முன்வைப்பதை அவதானிக்கமுடிகிறது. 

நவீனத்துவ வளர்ச்சியில் சாதகமான அம்சங்கள் இருப்பினும் பாதகமான அம்சம் என்பது, அதனது நிகழ்ச்சி நிரலுக்கேற்ப மனிதரை தனக்கேற்ப தகவமைத்து வருகிறது. அதனது தேவைகளுக்கும், அது சாரந்து உறவுகளோடும் மனித சிந்தனையை வடிவமைக்கிறது. தனிமனிதனுடைய சுயமான சிந்தனையை நவீனத்துவம் மழுங்கடித்து தனக்கேற்ற வகையிலான தலைமுறையை உருவாக்குகிறது. அதில் உள்வாங்கப்பட்டு தம்மை அதனது சிந்தனையூடாகவே வளர்த்தும் சிந்தித்தும் வரும் இளைய தலைமுறையை நாம் கண்கூடாக கண்டுவருகின்றோம். அவர்கள் தமது சுயமான சிந்தனையின் ஆற்றலை இழந்து நவீனத்துவத்தின் தேவைக்கேற்ப, அழுத்தமாக சொல்வதானால் நவீனத்துவத்தின் உத்தரவுக்கேற்ப செயல்படும் கருவிகளாக, இயந்திரங்களாக மாறிவருகிறார்கள். மதிப்பிற்கும் மரியாதைக்கும் இடதுசாரிய பாரம்பரியமும் சிந்தனையும் கொண்டவராக கருதப்படும் தோழர் சிவலிங்கம் அவர்கள் எவ்வித விமர்சனப்பார்வையும் அற்று நவீனத்துவ வளர்ச்சியை யாழ்ப்பாண அரசியல் தலைமைகளின் நலனுக்கு ஏற்ப, கிழக்கு மகாணத் தமிழ் தரப்பினரிடம் எழுந்த யாழ்ப்பாண அரசியல் தலைமைகள் மீதான அதிருப்த்தியை இணைக்க முற்படும் நோக்கம் மிகவும் தவறாகப் படுகிறது. அரசியல் பார்வைக்கும் அப்பால் கிழக்கு மாகாண ‘மக்களின் தனித்துவமான கலாசாரம் என்பது நவீனத்துவ பொருளாதாரயுகத்திற்கு மிகவும் பலவீனமானது’ எனும் தோழர் சிவலிங்கத்தின் கண்டடைதலும்-விருப்பும் எவ்வளவு ஆபத்தானது.  

பன்முக பார்வையும் பன்முக அடையாளங்களின் முக்கியத்துவம் கருதிய முற்போக்கான சிந்தனைதரப்பில் நோக்கப்பட்ட தோழர் சிவலிங்கத்தின் பார்வையும் கருத்தியல் வலியுறுத்தலும் மனதை உறுத்துகிறது. ஒடுக்கப்பட்ட மக்கள் தரப்பினரின் குரலாக கருதப்பட்ட தோழர் சிவலிங்கம் அவர்களிடமிருந்து உதிரும் இவ்வாறான கருத்தியலில் ஒரு சமூக பண்பாட்டை கொல்லும் விஷம் கலந்திருக்கிறது. எழுவான் வேலன் மிகதெளிவாக கிழக்குவாழ் தமிழ் சமூகத்தின் பண்பாட்டு கலாசாரத்திற்கும் யாழ்ப்பாண தமிழர்களின் கலாசார பண்பாட்டிற்குமான வேறுபாடுகளை வரிசைப்படுத்தியிருந்தார். அதில் யாழ்ப்பாண சமூகத்திற்கும் கிழக்கு மாகாண சமூகத்தின் பண்பாட்டு கலாசார விழுமியங்களில் மிக அதிகமான வேறுபாடுகள் இருப்பதை அவதானிக்கமுடியும். இதுவரையில் யாழ்ப்பாண அரசியல் விமர்சகர்கள், அரசியல் வாதிகள் எனப்படுவோர் அனைவரும் கிழக்கு-வடக்கு சார்ந்த அரசியல் ஒருங்கிணைப்பு மீதான பார்வையிலேயே கவனம் குவித்து பேசியும் எழுதியும் வருகின்றார்கள்.  

முதன் முறையாக கறைபடிந்த ஒரு கருத்து நிலையாக கிழக்கு வாழ் சமூகத்தின் பண்பாட்டையும் அவர்களது கலாசாரத்தையும் யாழ்ப்பாணத்துடன் இணைப்பதான கருத்தியலை வலியுறுத்துவது தோழர் சிவலிங்கம் என்பது மிகவேதனை தரும் தகவல். முற்போக்கு சிந்தனையும் இலங்கை -இடதுசாரிய பாரம்பரியமும் உடைய ஒருவரிடம் இவ்வாறான ஒரு கருத்து வேர்கொண்டிருக்கிறதே! பௌத்த சிங்கள இனவாத அரசின் இலங்கை பூராகவும் பௌத்தமயமாக்கும் கருத்தியல் -செயல்பாட்டு நிலைக்கும் தோழர் சிவலிங்கத்தின் இவ்வாறான கருத்து நிலையும் எவ்வகையில் வேறுபட்டிருக்கிறது! தனது பார்வையில் வடக்கு-தமிழ் அரசியலும் சிங்கள இனவாதத்திற்கு நிகராக தமிழ் இனவாதத்தை கட்டமைக்கிறது என ஓரிடத்தில் பதிவு செய்திருப்பதானது போறபோக்கில் சிந்திய சொற்களா! ‘உதட்டளவில் அசைந்து உதிர்ந்த சொற்களா!’ அவரது நெஞ்சம் இருண்டிருக்கிறது!உதடு அசைகிறது! அல்லது  ‘புதிய மொந்தையில் பழைய கள்’ என்பதா! (சோவியத் பேரரசின் சர்வாதிகார (பழைய கள்) ஆதிக்கம்). 

இப்போதெல்லாம் இலங்கை அரசியல் விவகாரங்களில், குறிப்பாக தமிழ் அரசியல் விவகாரங்களிலும் அதன் மீது அக்கறைகொள்வதிலும் கருத்து தெரிவிப்பதிலும் இயல்பாகவே எனக்கு ஈடுபாடு தளர்ந்து வருகிறது. தோழர் சிவலிங்கம் ஒரு சமூகத்தின் பண்பாட்டுக் கலாசாரத்தின் மீது வைத்த நெருப்பே என் நெஞ்சை சுட்டது. நின்று எரிகிறது. இதை எழுதுவதன் ஊடாக அந்த நெருப்பு அணைந்துவிடும் எனும் அற்ப ஆசை. ஆதலால் இதனை எழுதுகின்றேன். 

“யாழ்ப்பாண சாதிய விவகாரமும் அதனது அரசியல் தொடர்புகளும் காலனியத்தின் எச்சங்கள். அவை துடைத்து எறிப்பட்டாகிவிட்டது! தற்போதைய வடக்கு -தமிழ் அரசியல் தலைமைகளிற்கும் அதற்கும் எவ்வித தொடர்புகளும் இருக்க முடியாது” எனும் பார்வையை அழுத்தமாக முன்வைக்கின்றார் தோழர் சிவலிங்கம். தமிழ்- சமூக- அரசியலில் அவ்வாறான புறநிலை செயல்பாடுகள் (அரசியலில் சாதிய-பாகுபாடு) அழுத்தங்கள் ஏதும் இல்லை என்பதாகவும் நிறுவ முற்படுகின்றார். 

முன்பு நினைவு படுத்தியது போன்று முரண்பாடுகள், கருத்து நிலைகள் என்பன ஒன்றுடன் ஒன்று விவாதித்து அவைகள் இரண்டிலிருந்தும் புதிதாக ஒன்று தோன்றுவதே வளர்ச்சி நிலை. சமூகத்தின் வளர்ச்சி நிலையிலும் அவ்வாறே பழைய கருத்துக்களும் செயல்பாடுகளும் பரிசீலிக்கப்பட்டு, விமர்சிக்கப்பட்டு புதிய வழிமுறைகள் கண்டடையப்படும் நிலையில்தான் ஒரு சமூகத்தினதும் வளர்ச்சியாக கருதமுடியும். இன்றும் வடக்கு-தமிழ் அரசியலானது தமது கடந்தகால 70 ஆண்டு அரசியல் செயல்பாடுகள் அனைத்தையும் கொண்டாடிக் கொண்டும் வழிபட்டுக்கொண்ருக்கும் நிலை தொடருகின்றது. பெரும்பான்மையான தமிழ் சமூகத்தின் மனநிலையும் அவ்வாறே வேரூன்றி நிற்கிறது. பழைய அரசியல் செயல்பாடுகளை அதன் வரலாற்றை பின்னோக்கிப் பார்த்து எதிர்த்து நின்று பேசுவதற்கு தயாராக இல்லை. அதனை இன்றுவரை தம்முடன் அழைத்து செல்பவர்களாகவே இருக்கின்றனர். எனவே தமிழ்- அரசியலும் சமூகமும் அழைத்துச் சென்றுகொண்டிருப்பதற்குள், அவர்கள் அரவணைத்துக் கொண்டிருப்பதற்குள், பழைய எச்சங்களும் சாதிய மேலாதிக்கமும் இருக்கின்றதாகவே நாம் கருதுகின்றோம். தமிழ் -அரசியல் -சமூகமானது தமது கடந்தகால செயல்பாடுகளை விமர்சிக்கவோ தமது தவறுகளை ஏற்றுக்கொள்ளவோ தயாராக இல்லை. முப்பது வருடமாக ‘மக்களை கொன்றழித்த’ நடவடிக்கைகளிலும் தமது தரப்பில் எவ்வித தவறுகளும் இல்லை என்பதாகவே தொடருகின்ற சமூகம். இவை அனைத்துக்குள்ளும் காலனிய எச்சசொச்சங்கள் நீரில் மிதக்கும் எண்ணை போன்று தழும்பிக்கொண்டிருக்கிறது. சமூகத்தின் விளிம்பு நிலைச் சமூகங்கள் மீதான ஒடுக்குமுறை சார்ந்தும், அவர்களின் சமூக உரிமைகள் சார்ந்து பேசுகின்ற செயல்படுகின்ற எமக்கும் இவ்வாறான கேள்விகளும் சந்தேகங்களும் இருக்கின்றன. இவ்வாறான கரிசனையும் கருணையும் கொண்ட தரப்பினருக்கே தோழர் சிவலிங்கத்தின் இடதுசாரிய ‘முற்போக்கு அடையாளம்’ ஒரு வழிகாட்டியாக அமைந்திருக்கவேண்டும் என எதிர்பார்த்திருந்தோமே…!  

கிழக்கு மகாண புதிய தமிழ் அரசியலும் வடக்கு -தமிழ் அரசியலால் தாமும் தமது சமூக கலாச்சார பண்பாட்டு தனித்துவங்களும் தொடர்ந்தும் பாதிப்புக்குள்ளாகி வருவதிலிருந்து கடந்துபோவதற்காக தனித்துவமாக நிற்க முயற்சிக்கின்றார்கள். தோழர் சிவலிங்கம் எதிர்பார்க்கும் தேசிய பொருளாதார அக்கறை, தேசிய ஜனநாயகப் பற்றாக்குறை என்பதெல்லாம் அவர்களுக்கு இரண்டாவது முயற்சியாக தோன்றுகிறது. காலனிய சாதிய மேலாதிக்க எச்சங்களுடனும் அதனது மேலாதிக்க மனநிலை கொண்ட வடக்கு -தமிழ் அரசியலில் இருந்து தாம் தனித்துவமாக செயல்படுவதற்கான காரணத்தையும் நியாயத்தையும் முதலில் நிலைநிறுத்த முயற்சிக்கின்றார்கள். அதனையொட்டியதாகவே எழுவான் வேலனின் கட்டுரையை மனம் கொள்ளவேண்டியிருக்கிறது. 

கிழக்கு மாகாண அரசியலைப் பேசும் சில தரப்பினரின் சொற்பிரயோகங்கள் பிரதேசவாத தொனியில் அமைந்திருப்பது தவிர்க்கப்படவேண்டும். வடக்கு வாழ் தமிழர்களின் மனங்களை வெல்வதற்கான வகையில் தமது அரசியல் நியாயங்களை தொடர்ந்து முன்வைக்க வேண்டும். சிங்கள பௌத்தவாத மேலாதிக்கத்தை தக்க தருணங்களில் வெளிப்படையாக கண்டித்தும், விமர்சித்தும் முன்னகரவேண்டும். அரசியல் களச்செயல்பாட்டிற்கும், அறிவுப்புலத்தினரின் அரசியல் விமர்சனப்பார்வைக்கும் நிறையவே வேறுபாடுகளும் நடைமுறை நெருக்கடிகளும் இருக்கும். இதனை தோழர் சிவலிங்கம் அவர்களும் ஏற்றுக்கொள்வார் என நம்புகின்றேன். வடக்கு -தமிழ் அரசியல் செயல்பாட்டுடன் கிழக்கு -தமிழ் அரசியல் செயல்பாடு மோதுகிறது. முரண்படுகிறது. தொடரும் செயல்பாட்டின் வளர்ச்சி எமக்கு அதனை நிரூபிக்கும். அதேபோன்று தோழர் சிவலிங்கம் அவர்கள் முன்வைக்கும் தேசிய பொருளாதாரம் குறித்தும் ஜனநாயகப் பற்றாக்குறை விஞ்ஞானப்பார்வை தொடர்பான களச்செயல்பாடுகளும் வடக்கு-தமிழ் அரசியலில் நிகழுமாயின் வரவேற்கப்படவேண்டியதே. தோழர் சிவலிங்கத்தின் இவ்வாறான விருப்பத்தையும் ஆவலையும் எதிர்பார்ப்பையும் வந்தடைவதற்கு வடக்கு தமிழ் அரசியலானது தனது கடந்தகால 70 ஆண்டு புனிதஅரசியலை கேள்விக்குள்ளாக்க வேண்டும்.  

இன்றைய இலங்கை ஆட்சி அதிகாரத்தரப்பினருடன் பேசிப்பயனில்லை. இரண்டு சமூகங்களும் பேசவேண்டும். சிங்கள சமூகத்திற்கு தமிழ் சமூகம் நம்பிக்கை அளிக்கும் வகையில் நடந்துகொள்ளவேண்டும். அவர்கள் மனங்களை வென்று தமது நியாயங்ளை புரியவைக்க முயலவேண்டும். கடும் பாறையின் அடியிலும் நீர்சுரக்கும் தன்மையுண்டு. அவ்வாறான ஊற்றை கண்டடைந்து அருவியாக கலந்திடும் மனம் வேண்டும் வடக்கு-தமிழ் அரசியலுக்கு.  

 உரிமைப் போராட்டமும் காஷ்மீர் விவகாரங்களும் 

ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை அதன் சுய-உரிமைப்போராட்டத்தை முன்னுதாரணமாகவும் இலங்கை அரசு 13ஆம் திருத்தச்சட்டத்தை பலவீனப்படுத்துவதை: “இத் தருணத்தில் ஒரு உதாரணத்தை முன்வைக்கிறேன். இந்தியாவின் பிரச்சனைக்குரிய மாநிலமாக அமைந்துள்ள ஜம்மு –காஸ்மீர் பிரதேசம் ஏன் இன்று வரை போராடுகிறது? இந்திய மாநிலங்களில் பல விதங்களில்ம முன்னேற்றத்தை அடைந்திருக்கும் அம் மாநிலத்தில் இன்னமும் சுயாட்சிக்கான போராட்டமும் உயிரிழப்புகளும் தொடர்கின்றன. இன்றைய இந்திய ஆட்சியாளர்கள் பலவித அபிவிருத்திகளைஅறிவித்த போதிலும் போராட்டங்கள் ஓயவில்லை. அம் மக்கள் அடிப்படை ஜனநாயக உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது என்பதில் மிகவும் உறுதியாக உள்ளனர். இந்திய அரசு அங்கு பாரிய ராணுவத்தைக் குவித்துள்ள போதிலும் மாற்றங்கள் ஏற்படவில்லை. இந்திய அரசு அரசியல் அமைப்பின் 370வது பிரிவை இடைநிறுத்தி அதன் மாநில அந்தஸ்தை யூனியன் பிரதேசமாக மாற்றி எச்சரித்திருக்கிறது. ஆனால் போராட்டங்கள் தொடர்கின்றன. அதே போலவே இலங்கை அரசும் அரசியலமைப்பின் 13வது திருத்தத்தினைப் பலவீனமாக்கி வருகிறது. வடக்கு, கிழக்கு மக்கள் வேலைவாய்ப்பு அபிவிருத்தியையே கோருவதாக அரசு கூறுகிறது. உண்மை நிலை என்ன? ஆனால் இந்த விவாதங்களில் அவை பற்றி எதுவுமே இல்லை” என்பதாக எடுத்துரைக்கப்படுகிறது.                 

காஷ்மீர் குறித்த விவகாரத்தை பேசப்போனால் அது ஒரு நூல் எழுதுவதற்கான அடிப்படை விபரங்களைக்கொண்டது. இந்திய சுதந்திரத்திற்கு பின்பாகவும் ஒரு சுதந்திர சமஸ்தானமாக இருந்த பிரதேசம் காஷ்மீர். ஹரிசங் மகாராஜாவுடனும் சேக் அப்துல்லாவுடன் தொடர்புடைய விவகாரத்துடன் விரிந்து செல்லக்கூடியது அவ்விவகாரம். இந்து ராட்சியத்தின் அதிருப்தியால் ‘பதானிய முஸ்லிம்களின்’ இயல்பான போராட்டத்தின் விளைவு இது என பாக்கிஸ்தான் கூறியது. பாக்கிஸ்தானின் உதவியுடன்தான் அவர்களது கிளர்ச்சி தூண்டிவிடப்பட்டது எனவும் கருதப்பட்டது. இவ்வாறான சூழ்நிலையில் ஹரிசங் மகாராஜா இந்திய உதவிய நாடியதும் தற்போதும் அங்குள்ளஅரசியல் விவகாரமானது இரண்டு நாடுகளுக்கு இடையிலானதும் இரண்டு மதங்களுக்கு இடையிலானதுமான விவகாரமாக தொடருகின்றது. ஜம்மு-காஷ்மீர்- பாக்கிஸ்தான்- இந்திய விவகாரமானது இஸ்ரவேல் பாலஸ்தீன விவகாரங்களோடு ஒப்பிட்டுப் பார்க்க கூடியதாக இருக்கிறது. இதனை கிழக்கு மகாண தமிழ் அரசியலோடும் யாழ்ப்பாண சீர்குலைந்த அரசியலோடும் ஒப்பிட்டு பேசுவது மலினமாகவே எனக்கு தோன்றுகிறது. அதைக்கடந்து இந்திய இலங்கை ஒப்பந்தப் பிறப்பாக உள்ள 13ஆம் திருத்தச்சட்டத்தின் பலவீனம் பற்றி சில அடிப்படை விபரத்தை கூறமுடியும். தோழர் சிவலிங்கம் எடுத்துரைப்பதுபோன்று 13வது திருத்தத்தை இலங்கை அரசு பலவீனப்படுத்துகின்றது என்பதற்குரிய நியாத்தை ஏற்றுக்கொள்வதற்கு 13வது திருத்தச் சட்டத்தின் ‘பிறப்பையும்’ நாம் இணைத்து பார்க்கவேண்டியிருக்கிறது. இந்த பௌத்த பேரினவாத அரசு அதனை பலவீனப்படுத்துவதற்கு அதனது ‘பிறப்பே’ அடிப்படைக்காரணம். அதனுடைய தேவைகளும் அதன் அடிப்படையில் அமைந்த சட்டங்களும் தமிழ்பேசும் மக்களின் அரசியல்-உரிமைகளை ஓரளவிற்கேனும் உத்தரவாதப் படுத்துவதாக இருக்கிறதென்பதும் உண்மையே. ஆயினும் அதனை நிறைவேற்றிய தரப்பினர் சமூகத்தின் பிரதிநிதிகளாக செயல்படவில்லை. அவரவரது அதிகார ஆளுமையினால் திணிக்கப்பட்டது. இதற்கு இந்திய அரசியல் பாடத்திலிருந்து ஒரு உதாரணத்தை எடுத்துக்கூறலாம். எவ்வளவுதான் காலனித்துவமானது இந்திய பொருளாதாரத்தையும், உலகப் பொருளாதாரத்தையும் சுரண்டிக் கொழுத்தபோதிலும் ஆட்சி அதிகாரிகளின் அரசியல் செயல்பாட்டில் குறைந்தபட்ச நேர்மையும் மனிதாபிமானமும் இருந்திருக்கிறது. இந்திய தீண்டாமைச் சாதிய ஒடுக்குமுறை சார்ந்து பேசுவதற்கு டாக்டர் அம்பேத்கரும் பிற சிறுபான்மை இனங்களின் தலைவர்கள் (முஸ்லிம் பிராந்தியங்களின் சமஸ்தான மன்னர்கள்) தமது பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு கூடிய முதலாவது வட்டமேசை மாநாட்டில் கலந்துபேசி எவ்வித தீர்மானங்களும் எடுக்கமுடியாதுபோனது. காரணம் அந்த மாநாட்டில் பிரச்சினைக்கு பொறுப்பாக கருதப்பட்ட காங்கிரஸ் சார்பான பிரதிநிதிகள் எவரும் கலந்துகொள்ளவில்லை. எனவே அவர்கள் கலந்துகொள்ளாது அவர்களது அபிப்பிராயங்களும்  விவாதிக்கப்படாமல் தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்ற முடியாது என ஏகாதிபத்திய ஆதிக்கம் கொண்ட காலனியம் கருதியது. ஆனால் ராஜீவ் காந்திக்கும் ஜே.ஆர். ஜெயவர்த்தனவுக்கும் அவ்வாறான மனமும் சிந்தனையும் உதிக்கவில்லை. எனவே அவர்களால் மேற்கொள்ளப்பட்ட 13வது திருத்தச்சட்டம் என்பது ஒரு குறைப்பிரசவமாகவும் கருதமுடியாது. அவர்களால் ‘பெற்றெடுக்கப்பட்ட’ 13வது சட்டத்திருத்தம் என்பது இறந்த குழந்தைக்கு சமமானாதாகவே கருதமுடிகிறது. ஆகவேதான் அதற்கு உயிர்கொடுக்க முடியாத நிலையே அடிப்படைப் பிரச்சனையாக உள்ளது. என்னைப் பொறுத்தவரையில் 13வது திருத்திற்கு உயிரூட்டுவதாக இருந்தால் இன்றைய இலங்கை ஆட்சி அதிகாரத்தரப்பினருடன் பேசிப்பயனில்லை.  

இரண்டு சமூகங்களும் பேசவேண்டும். சிங்கள சமூகத்திற்கு தமிழ் சமூகம் நம்பிக்கை அளிக்கும் வகையில் நடந்துகொள்ளவேண்டும். அவர்கள் மனங்களை வென்று தமது நியாயங்களை புரியவைக்க முயலவேண்டும். கடும் பாறையின் அடியிலும் நீர் சுரக்கும் தன்மையுண்டு. அவ்வாறான ஊற்றை கண்டடைந்து அருவியாக கலந்திடும் மனம் வேண்டும் வடக்கு-தமிழ் அரசியலுக்கு.  

தோழர் சிவலிங்கத்தின் மனதிலும் ஈரம் இருக்கும், அதன் ஊற்றை நெருங்கி வருடிக் கலந்திடும் ஆவலிலான முயற்சியே இது.