WHO IS THIS LADY….?  கிழக்கில் பெண் அரசியல் தலைமைத்துவம்…..! (காலக்கண்ணாடி 47)

WHO IS THIS LADY….? கிழக்கில் பெண் அரசியல் தலைமைத்துவம்…..! (காலக்கண்ணாடி 47)

 — அழகு குணசீலன் — 

சுதந்திர இலங்கையில் 1956இல் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்காவின் அரசாங்கத்தில் விமலா விஜயவர்த்தன முதல் பெண்(சுகாதார) அமைச்சராக நியமனம் பெற்றிருந்தார். பண்டாரநாயக்காவின் மறைவுக்குப் பின்னர் உலகின் முதல் பெண் பிரதமரானார் சிறிமாவோ பண்டாரநாயக்கா. இலங்கையின் முதல் பெண் ஜனாதிபதியாக அவரது மகள் சந்திரிகாவை   மக்கள் தெரிவு செய்தனர். இந்த முன்மாதிரியான நிலையிலும், மூன்று கால்நூற்றாண்டுகளுக்கு பின்னரும் தமிழ்த்தேசிய அரசியல் இன்னும் ஆண்களின் கைகளிலேயே இருக்கிறது.  

சிங்கள தேசத்தின் இந்த நிலையானது சாதாரண சிங்களப் பெண்களின் சமூக, பொருளாதார, அரசியல் விடுதலையின் குறிகாட்டி இல்லை எனினும், தமிழர் தரப்பு இது விடயத்தில் இன்னும் பின்தங்கியே உள்ளது. ஏற்கனவே பெயர் குறிப்பிடப்பட்ட பெண்களுக்கு இருந்த பாரம்பரிய குடும்ப அரசியலும் மற்றைய சமூக அந்தஸ்தும் தமிழ்ப் பெண்களுக்கு ஒப்பீட்டளவில் குறைவாக அல்லது முற்றிலும் இல்லாமலே இருந்திருக்கலாம். ஆனாலும் இன்றும் இந்நிலையில் பெரிய மாற்றமின்றி இருப்பது ஒரு சமூகத்தைப் பொறுத்த மட்டில் அசாதாரணமானது. 

அரசியலில் ஆர்வம் உள்ள பெண்களும் தங்கள் அரசியல் வகிபாகப்பொறுப்பை ஏற்பதற்கு பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி உள்ளது. அதுவும் தமிழ்த்தேசிய அரசியலின் “மேதகு” மனப்பான்மையும், கருத்தியலும் இந்த இருபத்தியோராம் நூற்றாண்டிலும் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டிக்கொண்டிருப்பது பெண்கள் மீதான அப்பட்டமான புறக்கணிப்பு மட்டுமன்றி, சட்டத்திற்கு முரணான அரசியல் உரிமை மறுப்பும் கூட. 

கடந்த பாராளுமன்றத் தேர்தல் வேட்பாளர் தேர்வு முதல் இன்றுவரை இடம்பெறுகின்ற நிகழ்வுகளை தமிழ் சமூகத்தில் அளவில் பெரும்பான்மையாக உள்ள பெண்களை ஒதுக்குகின்ற, அவர்களின் குரல்களை நசுக்குகின்ற, இயங்குசக்தியை கட்டுப்படுத்துகின்ற, மனித உரிமை மீறலாகவே கொள்ள வேண்டி உள்ளது.  

தேர்தல் காலத்தில் ஒலித்த சில பெண்கள் அமைப்புக்களின் குரல்களும் தேர்தலுக்குப் பின்னர் அடைத்து விட்டன. ஆண்களால் ஆளப்ப்படுகின்ற இந்த அரசியல் பாரம்பரியத்தில் நமக்கு ஏன் வீண் வம்பு என்ற எண்ணமாகக் கூட இருக்கலாம். இந்த நிலைப்பாடு ஆபத்தானதும், எதிர்காலத்தில் தமிழ் பெண்களின் தலைமைத்துவம் குறித்த கேள்வியை எழுப்புவதாகவும் உள்ளது. மேலும் ஏற்பட்டு வருகின்ற விழிப்புணர்வை மழுங்கடிப்பதாக அமைந்துவிடும். 

தமிழரசுக்கட்சியின் மேடைகளில் வெறும் பிரச்சாரத்திற்காக பெண்கள் மேடையேற்றப்பட்டார்கள். தமிழ் இளைஞர் பேரவையின் உறுப்பினர்களான காசி ஆனந்தன், மாவை சேனாதிராஜா போன்றவர்களுக்கு பாராளுமன்ற அரசியலுக்கு வழி ஏற்படுத்திய தமிழர் அரசியல் தலைமைகள் மகளிர் அணியினரைப் புறக்கணித்தது. மேடைப் பேச்சுக்கு மட்டும் மங்கையற்கரசி அக்காவுக்கு பின்னால் மட்டக்களப்பில் சுகுணம் அக்கா, கலா அக்கா போன்றவர்கள் வாக்கு சேகரிக்க மேடையேற்றப்பட்டார்கள். 

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அமைக்கப்பட்ட நிலையில் ஆயுத அரசியலின் பின்னணியில், கட்டாயத்தில் சிலருக்கு பாராளுமன்ற அரசியல் பிரவேசம் சந்தர்ப்பவசமாக கிடைத்தது. இது தவிர்க்க முடியாத வகையில் மட்டக்களப்பில் தங்கேஸ்வரி கதிராமருக்கும், யாழ்ப்பாணத்தில் பத்மினி சிதம்பரநாதனுக்கும் வாய்ப்பை வழங்கியது. 

தவிர தேசியப்பட்டியலில் சாந்தியும், அம்பிகாவும் இணைக்கப்பட்டிருக்கிறார்கள்.  

சிங்கள பாராளுமன்றத்திற்கு ஒவ்வொரு முறையும் சாராசரியாக பத்து பெண்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள். தமிழர் தரப்பில் குறைந்தது இருவராவது தெரிவு செய்யப்படவேண்டும். 

பெண்களுக்கான இந்தப் பங்கை ஆண் அரசியல் ஆதிக்கம் கையகப்படுத்துகிறது. இது விடயத்தில், சரியான அணுகுமுறையை ஒரு கொள்கையாக தமிழ்த்தேசியம் தொடரவில்லை என்பது கசப்பான உண்மை. 

மறுபக்கத்தில் குடும்ப அரசியல் என்றாலும் சிங்கள தேசியம் ரங்கநாயகி பத்மநாதன், இராஜமனோகரி புலேந்திரன், விஜயகலா மகேஸ்வரன் போன்ற தமிழ்ப் பெண்களுக்கு சிங்களப் பெண்களுக்கு சமமாக சில வாய்ப்புக்களை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்ப் பெண்கள் மீதான புறக்கணிப்பு தமிழ்த்தேசிய அரசியல் வரலாற்றில் ஒரு கறையாகவே இருக்கப்போகிறது. பேரியல் அஷ்ரப்புக்கு கூட முஸ்லீம் காங்கிரஸ் அந்த வாய்ப்பை வழங்கியிருந்ததை இங்கு சுட்டிக்காட்ட முடியும். 

2020இல் தேர்தல் திகதியும், வேட்பாளர் நியமனத்திகதியும் அறிவிக்கப்பட்டது முதல் வடக்கு, கிழக்கில் சில பெண்களின் பெயர்கள் அடிபட்டன. வடக்கில் அம்பிகா, சசிகலா கிழக்கில் மங்களா, நளினி. மற்றொரு வேட்பாளரான சந்திராவின் பெயர் பின்னர்தான் அடிபட்டது. இப் பெயர்கள் அடிபடத்தொடங்கியவுடன் இவர்கள் மீது பல் வேறு அவதூறுகள், உண்மைக்கும் புறம்பான தொழில்சார், ஒழுக்கம் சார் கட்டுக்கதைகள் திட்டமிட்டு பரப்பப்பட்டன.  

சுமந்திரன் மக்களுக்கு அறிமுகமற்றவர்களை கொழும்பில் இருந்து இறக்குமதி செய்கிறார் என்று விமர்சனம் செய்வது வேறு, உண்மைக்கு புறம்பாக கதை அளப்பது வேறு.  

2021 யூலை, முதலாம் திகதி மட்டக்களப்புக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அப்போது கச்சேரியில் இடம்பெற்ற மாநாட்டில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவரும், எம்.பி.யுமான சி.சந்திரகாந்தன் வேறு முக்கிய வேலைகள் காரணமாக கலந்து கொள்ள முடியவில்லை என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தனது பிரதிநிதியாக மாவட்ட அபிவிருத்திக்குழுத்தலைவரின் செயலாளரை அமைச்சரதும், அரசாங்க அதிபரதும் அனுமதியுடன் மாநாட்டிற்கு அனுப்பியிருந்தார் அவர். அந்த கூட்டத்தில் அபிவிருத்திக்குழு தலைவரின் செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி மங்களா சங்கரை நோக்கி மட்டக்களப்பு எம்.பி. சாணக்கியன் கேட்ட கேள்வி இது : “WHO IS THIS LADY……”?. 

WHO IS THIS LADY…? பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது…! 

யாரைப்பார்த்து யார் கேட்கிறார்……? 

கேட்டவர் யார்…….? 

கேட்கப்பட்டவர் யார்? 

 (*) 2020 வரை தமிழ்த்தேசிய சின்னங்களைத்தவிர வேறு சின்னங்களுக்கு புள்ளடி போட்ட பழக்கம் அற்ற தமிழ்த்தேசிய தீவிர ஆதரவாளர் குடும்பமொன்றில் பிறந்து வளர்ந்த மங்களா சங்கர் மாணிக்கப்போடி என்ற பெண்ணைப் பார்த்து கேட்டவர் சாணக்கியன் என்ற ஆண்மகன். தனது பாட்டனாரை முதலீடாகப்போட்டு அதில் வரும் வட்டியில் அரசியல் நடாத்தும் அவருக்கு மங்களாவின் இந்த வரலாறு எங்கே தெரிந்திருக்கப்போகிறது. 

(*) யுத்தத்தின் கோரத்தாண்டவங்களுக்கு முகம் கொடுத்து, மரணத்துள் வாழ்வு கொண்டு, போராளிகளையும், அவர்களுக்கான புகலிடங்களையும் வழங்கிய படுவான்கரை சமூகத்தின் பெண் ஒருவரைப் பார்த்து கேட்டவர் சாணக்கியன். இத்தனைக்கும் இவர் யுத்தவாடையே தெரியாது சிங்கள பேரினவாத அரசின் சகல சௌபாக்கியங்களையும் பெற்று சிங்கத்தின் குகையில் வளர்ந்தவர். 

(*) மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமன்றி நாட்டின் ஒட்டுமொத்த மனித உரிமைகள் விவகாரங்களிலும், குறிப்பாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களின் நலன்களில் அக்கறையுடன் செயற்பட்ட மனித உரிமைகள் பெண் சட்டத்தரணி ஒருவரைப்பார்த்து கேட்கிறார் இவர். 

இவர் யார்? ராஜபக்சேக்களின் மடியில் மட்டுமல்ல, அவர்களின் தோளில் ஏறி நின்று முள்ளிவாய்க்கால் மனித வேட்டைச் சுடுகாட்டைப் பார்த்து ரசித்த மனச்சாட்சியற்ற மாமனிதன் (?) 

(*) 2009இல் யுத்தம் முடிந்த நிலையிலும் காணாமல்போனோர், கைது செய்யப்பட்டோர், பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்கள் என்று மனிதாபிமான மக்கள் சேவையில் ஈடுபட்ட மங்களா என்ற பெண் சட்டத்தரணியைப் பார்த்துக் கேட்கிறார் “யார் இந்தப் பெண்மணி”? 

யுத்தம் முடிந்து மக்களின் அவலங்களும், அழுகுரல்களும் ஓயாத நிலையில் ராஜபக்சேவின் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் தனித் தமிழ் தொகுதியான பட்டிருப்பின் அமைப்பாளராக வந்து கதிரையின்றி திரும்பிப் போனவர். அப்போது கதிரைக்கு முன்னால் மண்டியிட்டது இவர் இன்று பேசும் மனித உரிமை. 

(*) ஐந்து ஆண்டுகள் அரசியல் அஞ்ஞாதவாசம் செய்த இவர் மீண்டும் கதிரைக்காக தமிழ்த்தேசியத்தைப் போர்த்துக்கொண்டு வந்தார். இலங்கையின் மட்டக்களப்பு தமிழர் அரசியல் வரலாற்றில் தேர்தல் தோல்விக்கு பின்னும் தனக்கு வாக்களித்த மக்களுக்காக களத்தில் நின்று பணியாற்றுகின்ற வரலாற்றை மங்களாவைத்தவிர எந்த ஒரு வேட்பாளரும் இதுவரை எழுதவில்லை. சிலவேளைகளில் சிலர் ஆரம்பத்தில் கூட்டத்தோடு கோவிந்தா போட்டிருக்கலாம். இன்னும் சிலர் புதிய பாணியில் திடீர் திடீர் என ஊடகச் சந்திப்பை மட்டும் நடாத்துகிறார்கள். 

(*) தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளராக விண்ணப்பித்து இருந்தவரும், தமிழரசுக்கட்சியின் ஆயுட்கால உறுப்பினருமான இவரை, தனது மாவட்டத்தில் தன்னை எதிர்த்து எதிர்த்தரப்பில் போட்டியிட்ட ஒருவரை, தானே அவருக்கு எதிராக தேர்தல் பிரச்சாரங்களை செய்திருக்கின்ற போது, மட்டக்களப்பு மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் செயலாளராகவும், மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவரின் செயலாளராகவும், அதுமட்டுமின்றி கச்சேரியிலேயே அலுவலகம் வைத்து செயற்படுகின்ற சக பெண் அரசியல்வாதி ஒருவரைப் பார்த்து சாணக்கியன் எழுப்பிய கேள்வி அரசியல் சிறுபிள்ளைத்தனமானது. வெறும் அரசியல் காழ்ப்புணர்ச்சி, பொறாமை, எரிச்சல், அவமானப்படுத்தல். ஒரு பெண்ணை இழிவுபடுத்தல் என்பதன் ஒரு வெளிப்பாடு. 

(*) அமைச்சர் ஒருவர் மாவட்டத்திற்கு வருகைதருகிறார் என்றால் அதற்கான நிர்வாக ஏற்பாடுகளைச் செய்யவேண்டியது அரசாங்க அதிபரை சார்ந்தது. அது அரசியல்வாதியின் வேலையல்ல. மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவர், தான் கலந்து கொள்ள முடியாத நிலையில் இருப்பதாக அமைச்சருக்கும், அரசாங்க அதிபருக்கும் அறிவித்து, தனது செயலாளர் கூட்டத்திற்கு வருவார் என்றும், மட்டக்களப்பு மாவட்ட உல்லாசப்பிரயாணத்துறை அபிவிருத்தி தொடர்பான அறிக்கை ஒன்றை அவர் சமர்ப்பிப்பார் என்றும் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், இந்தக் கூட்டத்தில் சட்டத்தரணி மங்களா சங்கரின் பிரசன்னம் சட்டரீதியானது. இது சாணக்கியனுக்கு தெரியாமல் இருக்க நியாயமில்லை. 

“A Lawyer by profession Mangaleshwari, better known as Mangala Shanker, is a human righte activist, a former Legal Manager at Transparency International Sri Lanka, She also work for the Center for Human Rights Development (CHRD) and at present is a visiting lecturer at the Open University of Sri Lanka. 

She also worked extensively with Women’s Organisations in the district, and this prompted her to take to politics. She Made her intention known to the Tamil National Alliance (TNA), which did not show any interest, but a few days before nomination closed, she was invited by the all main parties including the TNA to contest. 

She opted to accept the invitation of the Tamil Makkal Viduthalai Puligal (TMVP), even it was not the most popular party.” The Island 2020.12.31. 

தேர்தர் காலத்தில் பெண் வேட்பாளர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள் தொடர்பாக Priyan De Silva எழுதிய பத்தியில் மங்களாவுக்கு கொடுக்கப்பட்டுள்ள அறிமுகம் இது. மங்களா சங்கர் யார் என்பதை தெரியாதவர்களுக்கு மட்டும். 

WHO IS THIS LADY : கேள்வியின் பின்னணியில் …! 

சாணக்கியனின் இந்த கேள்வியின் பின்னணியானது அரசியல் தலைமைத்துவத்தில் பெண்களின் பங்கு குறித்து பல கேள்விகளை எழுப்புவதாக உள்ளது.  

கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் பல கட்சிகளும், சுயேட்சைக்குழுக்களும் பெண் வேட்பாளர்களை கடந்த தேர்தலில் தங்கள் பட்டியலில் உள்வாங்கி இருப்பது ஒப்பீட்டளவில் முன்னேற்றகரமான ஒரு நடவடிக்கையே. திருமலையில் 8, மட்டக்களப்பில் 8, அம்பாறையில் 10 என கிழக்கில் 26 தமிழ்ப் பெண் வேட்பாளர்கள் 2020 பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டனர். எனினும் பெரும்பாலான பெண் வேட்பாளர்கள் போடுகாய்களாக பட்டியலை நிரப்புகின்ற நிலையில்தான் உள்வாங்கப்பட்டார்களே அன்றி பெண்களுக்கான இட ஒதுக்கீடு, உரிமை என்ற அடிப்படையில் உள்வாங்கப்படவில்லை. 

திருகோணமலையில் தமிழ்மக்கள் தேசிய முன்னணியும், மட்டக்களப்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் எந்தப் பெண்ணையும் வேட்பாளராக நிறுத்த முன்வராதது தமிழ்தேசிய அரசியல் ஆண்களின் அரசியலாக இருப்பதைக் காட்டுகிறது. மட்டக்களப்பில் எட்டு ஆண்கள் போட்டியிட்டு தமிழ்த்தேசிய அரசியலை ஆண் அதிகார அரசியல் என நிறுவினார்கள். 52.3 வீதம் பெண்களைக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெண்களுக்கு ஒதுக்கிய வீதம் பூச்சியம். கிழக்கு மாகாணத்திலும் பெண்கள் சனத்தொகையில் பெண்கள் 51.6 வீதம். தமிழ்க்கட்சிகளில் பாரம்பரியம் கொண்ட பெரிய கட்சியின் நிலைப்பாடு இது என்றால்  புதிய சிறுகட்சிகளும், சுயேட்சைக்குழுக்களும் பரவாயில்லை, பாராட்டப்படவேண்டியவை. 

யாழில் சசிகலா போன்று, மட்டக்களப்பில் ஆண்களுக்கு சமமாக மங்களாவும், சந்திராவும் களமிறங்கினார்கள். ஆனால் இவர்கள் ஆண் வேட்பாளர்களின், ஆதரவாளர்களின் ஜனநாயக மறுப்புக்களைளையும், வன்முறைகளையும் எதிர்நோக்க வேண்டியிருந்தது. யாழ்ப்பாணத்தில் சுமந்திரன் தரப்பினரால் சசிகலாவுக்கு நடந்த அளவுக்கு இல்லை என்றாலும் இவர்களுக்கு முற்றாக எதுவும் நடக்கவில்லை என்றும் கூறமுடியாது. 

2010இல் சாந்தி சச்சிதானந்தம் “பெண்கள் மட்டும்” வேட்பாளர் பட்டியலில் சுயேச்சையாக /மக்கள் உரிமைக் கட்சியில் மட்டக்களப்பில் போட்டியிட்ட போதும், அந்த அணுகுமுறையை தொடர்ச்சியாக பேண பெண்கள் அமைப்புகள் தயாராக இருப்பதாக தெரியவில்லை. இதனால் பெண்கள் தங்களைத் தாங்களே ஆண் அரசியல்வாதிகளில் தங்கியிருக்கின்ற நிலைக்கு தள்ளி விடுகின்றனர். பெண்கள் தங்கள் பிரதிநிதித்துவத்தை ஆண்களுக்கு அன்பளிப்பு செய்யும் நிலை இது. இந்த நிலையில் மாற்றம் தேவை.  

உலகின் பாராளுமன்ற அரசியலில் பெண்கள் 23.4 வீதமாகவும், ஆசியாவில் இது 19.6 வீதமாகவும் உள்ள நிலையில், இலங்கை பாராளுமன்றத்தில் 5.8 வீதமாக மட்டுமே உள்ளது. ஆனால் மொத்த வாக்காளர்களில் பெண்கள் 56 வீதம். அதுவும் தமிழர் பாராளுமன்ற அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் சைபர். மாகாணசபைகள், பிரதேச சபைகளில் கூட இந்த நிலையில் பாரிய மாற்றங்களை தமிழர் அரசியல் செய்யவில்லை.  

2016இல் நிறைவேற்றப்பட்ட தேர்தல் சட்டம் உள்ளூராட்சி அமைப்புக்களில் வேட்பாளர் பட்டியலில் பெண்களுக்கான ஒதுக்கீடு 25 வீதமாக இருக்கவேண்டும் என்று கூறுகிறது. ஆய்வுகளின் படி வடக்கு, கிழக்கில் 15 உள்ளூராட்சி அமைப்புக்களில் இந்த இலக்கை அடைய முடியவில்லை. 

சமகால அரசியல் சந்திப்புக்களிலும், சிங்கள பாராளுமன்றத்திலும் இளைஞர், யுவதிகளுக்கு அரசியலில் அதிக வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று கோரும் சாணக்கியன் எம்.பி., தனது கட்சிக்குள் சில நடைமுறைகளையாவது கடைப்பிடிப்பாரா? சிங்கள பாராளுமன்றத்திற்கு இளம் பிரதமர் வேண்டும் என்ற ஏக்கத்துடன்  “சகோதரயா” நாமல் ராஜபக்சவுக்கு துதிபாடும் இவர், ஆகக் குறைந்தது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சம்பந்தர் ஐயாவின் இடத்திற்கு ஒரு இளையவரை அல்லது ஒரு பெண்ணை பிரேரிப்பாரா? 

சிங்கள பாராளுமன்றத்தில் தங்கியிருக்காத சுய அரசியல் நிர்ணயம் தானே தமிழ்த்தேசியம். தமிழ்த்தேசியம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்களின் அரசியல் தலைமைத்துவத்தை 100% நிராகரித்து செயற்படுகின்றது. பெண்களின் தலைமைத்துவத்தை மதித்து அதற்கொரு வாய்ப்பை வழங்கியிருக்கின்ற மாற்றத்திற்கான அரசியலின் பின்னால் அணி திரள வேண்டிய தேவை சிறப்பாக மட்டக்களப்பு, பொதுவாக கிழக்கு மாகாண பெண்களுக்கு  உள்ளது. அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு! உங்கள் தலைமை உங்கள் கையில்!!. 

அதேபோல் மட்டக்களப்பு அரசியல்வாதிகளுக்கு ஒரு அரசியல் பாரம்பரியம் இருக்கிறது. காலக்கண்ணாடி இங்கு பேசுவது பாட்டன், பூட்டன் பாரம்பரியம் அல்ல. மாறாக நாகரிகமான தொடர்பாடல் அரசியல் பாரம்பரியம். இராசதுரை கால்நூற்றாண்டுகளுக்கும் மேலாக கட்டிக்காத்த பாரம்பரியம். ஆயுத கலாச்சாரம் ஆட்சி ஏறும்வரை தொடர்ந்த பாரம்பரியம். கட்சி அரசியல் காழ்ப்புணர்ச்சிகளுக்கும், வேலிகளுக்கும் அப்பால் மனிதம் பேசும் பாரம்பரியம்.  

பாராளுமன்றத்தில் உரத்த குரலில் பேசுவது போன்று கூலிக்கு வேலைசெய்யும் எட்டாம் வகுப்பு படித்த பொலிஷ்கான்ஸ்டபிளுடன் ஒரு எம்.பி. கர்ச்சிக்க முடியுமா? என்ன? இங்கு தேவை புரிந்துணர்வு. மற்றவரை சகல தகுதிகளுக்கும் அப்பால் மதித்தல். மானிடப்பண்பு. முன்மாதிரியான செயற்பாடு, மக்களுக்கு குறிப்பாக இளம்தலைமுறைக்கு சரியான வழிகாட்டல். தவறான வழிகாட்டல் தமிழ்மக்களை எங்கு கொண்டு நிறுத்தியிருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். 

ஆக, தேவை அவை அடக்கம், நா காக்க..! 

முன்னாள் பெண் போராளிகள் பேசுகிறார்கள் : SERVE TEA! WEAR SAREE!! 

பெண்களுக்கான தலைமைத்துவ அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் மன்னார் மாவட்டத்தில் மேற்கொண்ட ஆய்வுகள் முழுத் தமிழ் பிராந்தியங்களுக்கும் பொருந்திப்போகின்ற ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறுபதமாக உள்ளது. இதில் முக்கியமான இன்னொருவிடயம் என்னவெனில் விடுதலைப்புலிகள் அமைப்பில் போராளிகளாக இருந்த பெண்கள் பலரும் போராட்டக் காலத்தில் சமூகத்தில் தமக்கு இருந்த அந்தஸ்து, மதிப்பை இழந்து இருப்பதாக கூறுகிறார்கள். இந்த ஆய்வில் பல தரப்பட்ட பெண்களுடன் முன்னாள் பெண்போராளிகளும் உள்வாங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

அந்த அறிக்கையில் இருந்து காலக்கண்ணாடி தேர்ந்தெடுத்த இரு நிகழ்வுகள் அரங்கம் வாசகர்களுக்காக..! விடுதலைப்போராட்டம் ஒன்று எந்த சமூகப்பார்வையும் அற்று பெண்களுக்கு ஆயுதத்தை வழங்கி அதன் மூலம் போலி அந்தஸ்த்தை மக்களிடம் இருந்து வழங்க வைத்த துயரக் கதை. அரசியல் மயப்படுத்தப்பாடாத சமூகம் ஆயுதத்துடன், அதிகாரமும் அற்ற பெண்களை அன்று போல் இன்றும் பார்க்கிறது.  

ஆயுதப் போராட்டம்  பிற்போக்கு சமூக கட்டமைப்பை, அதன் அடித்தளத்தை எந்த விதத்திலும் தகர்க்க வில்லை. இது குண்டுகளால் தகர்ப்பதல்லவே. நீறுபூத்த நெருப்பாக பொத்திப் பொத்தி 30 ஆண்டுகளாக பாதுகாத்த கட்டமைப்பு, பெண்போராளிகளை வீதியில் விட்டுச் சென்றிருக்கிறது. அவர்களே வெளிப்படையாக பேசுகிறார்கள். 

 # “ONE WOMEN MEMBER OF THE COUNCIL SERVES TEA DURING MEETINGS. 

SO THAT IS THE STATE, SO A WOMEN’S ROLE IS TO SERVE TEA, WHETHER SHE IS A MEMBER OF THE DISTRICT COUNCIL OR MUNICIPAL COUNCIL….. 

SO WHAT IS THE SIGNIFICANCE OF THEM GETTING IN IF THEY HAVE NO RECOGNITION TO MOVE TO THE NEXT STAGE ” ( ASPIRANT FOR PROVINCIAL COUNCIL ELECTION) 

#. “YOU CAN’T WEAR A TROUSER AND DO A SPEECH ON A STAGE. YOU HAVE TO WEAR A SAREE.”  – MEMBER OF PARLIMENT- 

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மங்களா சங்கரைப் பார்த்து அவமானப்படுத்தும் வகையில் எழுப்பிய கேள்வியின் மறுவாசிப்பு : 

“இங்கு அதிதிகள் அமர்ந்திருக்கும் தலைமை மேசையில் உங்களுக்கு என்ன வேலை? நீங்கள் யார்? என்ற அர்த்தத்தில் எழுப்பப்பட்ட முற்றிலும் ஆண் அரசியல் தனியுரிமை கொண்ட தமிழ்த் தேசியத்தின் அதிகாரக்குரலாகும். மேலே காட்டப்பட்டுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட கருத்துக்களுக்கும் சாணக்கியனின் கருத்துக்களுக்கும் உள்ள உள்ளார்ந்த அடிப்படை வேறுபாடு  என்ன? இது கிழக்கின் பெண்களுக்கு! 

அதிகாரம்  கிடைத்திருக்கிறது என்பதற்காக, அதைத் தவறாகப் பயன்படுத்தும் அரசியல்வாதிகளுக்கு   பொருத்திப் போகும் அற்புதமான வரிகள் இவை. 

“பரம சிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா…? 

 யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே 

இது கருடன் சொன்னது, அதில் அர்த்தமுள்ளது…!.”