— அ. தேவதாசன் —
இன்று தமிழ்த்தேசியம் இளையவர்கள் மத்தியில் ஒரு மந்திரம் போலவே கற்பிக்கப்பட்டுவிட்டது. இதனை செபிப்பதன் மூலம் தமிழ் பேசும் மக்களுக்கு அனைத்து தோசங்களும் நீங்கிவிடும் என்பது போன்ற மாயைக்குள் சிக்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். காலங்காலமாக மூட நம்பிக்கைக்குள் வளர்க்கப்பட்ட இளைஞர் சமூகம், கேள்விகள் மறுக்கப்பட்ட இளைஞர்கள் இவர்களின் மந்திர தந்திரங்களை மிக இலகுவாக நம்புகிறார்கள்.
தமிழ்த்தேசியம் என்பது சாதிய ஆதிக்க வாதிகளால் சாதி, மதம் கலந்து கட்டப்பட்ட ஒரு நச்சு விதை. அதனாலேயே வளர்ச்சியற்ற கணுக்களாக கருகிக்கிடக்கிறது. ஆனால் ஆதிக்க சாதிய கருத்துருவாக்கிகள் அது வளர்ந்து விருடசமாகிவிட்டது போன்ற பிம்பத்தை மக்கள் மத்தியில் பரவவிட்டு தமது சாதிய ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகின்றனர்.
தமிழ்த்தேசியம் பற்றிய கேள்விகள் என்பவை அதன் கட்டமைப்பு சார்ந்த நம்பிக்கை இன்மைகளும், தேசியம் பற்றிய கருத்தியல் சார்ந்ததே தவிர தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியால் எழுவதல்ல, ஒரு மனித சமூகத்தில் தேசிய எழுச்சி ஏற்படுத்தும் அசைவு, அதன் தாக்கம் கேள்விகளை உருவாக்க வேண்டும். புதிய புதிய சிந்தனைகளை உருவாக்க வேண்டும். இவைகள் அறவே அற்றுப்போன, கேள்விகளற்ற சமூகம் ஒரு ஆட்டு மந்தை சமூகமாக முடங்கிவிடும். ஒவ்வொரு மனித உயிருக்கும் உள்ளூர கேள்விகளும், பார்வைகளும் வித்தியாசப்பட்டுக்கொண்டே இருக்கும்.
ஒவ்வொருவருடைய பார்வைகளையும், கேள்விகளையும் விசாலமாக்குவற்கு சுதந்திரமான உரையாடல்கள் மிக அவசியமாகும். அந்த வகையில் அனைத்து உரையாடல்களுக்கும் ஒரு விரிந்த களமாக புலம் பெயர் நாடுகளில் இலக்கியச்சந்திப்புக்கள் அமைந்திருந்தது என்பது நிதர்சனமான உண்மை.
விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களும் ரசிகர்களும் இன்றும் இலக்கியச்சந்திப்பு!.. புலிகளுக்கு எதிராக உருவாக்கப்பட்டது போன்ற கருத்துக்களை பேசியும், எழுதியும் வருகின்றனர்.
அது மிகவும் தவறானது. ஆய்வுகளற்றது. இலக்கியச்சந்திப்பில் மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட பல விடயங்கள் பேசப்பட்டன. அதில் ஒரு விடயமாக விடுதலைப்புலிகளும் விமர்சிக்கப்பட்டனர் என்பது உண்மையை!.. காரணம் மற்றைய இயக்கங்களை விட திட்டமிட்ட வகையில் சகோதர இயக்கப்படுகொலைகள், புத்தி ஜீவிகள் கொலைகள், வடபகுதியில் முஸ்லிம்கள் வெளியேற்றம், அரசியல் கட்சி தலைவர்கள் கொலைகள், ஜனநாயக மறுப்பு போன்ற பல காரணங்களை கூறலாம். இவைகளை விமர்சனம் செய்கிற போது புலி ஆதரவாளர்களும், ரசிகர்களும் அதற்கான நியாயத்தை முன்வைப்பதை விடுத்து!… புலிகள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் போலவும், அவதார புருசர்கள் போலவும், வணங்குதற்கு உள்ளானவர் போலவும் தங்கள் மூளையில் இறுக்கமாக இருத்திக் கொண்டுள்ளனர். தங்களைப்போன்றே எந்த விமர்சனமும் இன்றி அனைத்து தமிழ் பேசும் மக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது அடங்கிப் போக வேண்டும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பாகவும், கட்டளையாகவும் இருந்தது. அதை மறுத்து புலிகளை விமர்சிப்பவர்கள் அல்லது, ஏற்றுக்கொள்ளாதவர்கள் அனைவரும் துரோகிகளாக்கப்பட்டனர். இதனால் இலக்கிய சந்திப்புக்களை துரோகிகள் சந்திப்பாக கதையுருவாக்கினர்.
ஒவ்வொரு இலக்கியச் சந்திப்பும் கருத்து உடன்பாடுகளுடன் நடந்து முடிந்தவையல்ல. பெரியார் முதல், கார்ல் மாக்ஸ் வரை.. தேசியம் முதல், பின்நவீனத்துவம் வரை விமர்சனங்களுக்கு உட்பட்டே உரையாடல்கள் இருந்தன. பலவிதமான முரண்பாடுகளும் கொந்தளிப்புக்களும் நிகழ்ந்தன. கல்வெட்டுக்கள் அடிக்கப்பட்டன, துண்டுப்பிரசுரங்கள் மேசைகள் மீது பறக்கவிடப்பட்டன. ஆனாலும் ஜனநாயக உரிமைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. கருத்துரிமை மதிக்கப்படுகிறது. பலவிதமான கருத்துப்போர் நடந்தாலும் அது முடிந்தபின் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி அன்பைப் பரிமாறும் நாகரிகம் இருக்கிறது. பல நாடுகளில் வாழும் கருத்து முரண்பட்ட, கருத்து ஒருமித்த பல நண்பர்கள் ஒரே இடத்தில் சந்திக்கும் அனுபவம் மிக இனிமையானது. இலக்கியச் சந்திப்புக்கு பின்னரான, ஒன்றுகூடல் என்பது ஒரு கொண்டாட்டம் போல மகிழ்ச்சியான தருணங்கள். எனது குடும்பத்து கொண்டாட்டங்களை விடவும் எனக்கு மகிழ்ச்சி தரக்கூடிய கொண்டாட்டமெனில் இலக்கியச்சந்திப்பு கொண்டாட்டங்களே!…..
ஐரோப்பாவை சுற்றிச் சுழன்று வந்த சந்திப்புக்கள் 2013ல் இருந்து இலங்கையையும் சுற்றி வந்துள்ளது. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மலையகம், வன்னி ஆகிய இடங்களில் மிகச்சிறப்பாக நடைபெற்றன. அடுத்த சந்திப்பு நோர்வேயில் நடைபெற இருந்தது. கொரோனா வைரஸின் தொடர்ச்சியான கொடூரம் காரணமாக இரண்டு வருடங்கள் உலகமே முடக்கத்திற்குள்ளாகிவிட்டது. இதனால் இலக்கிய சந்திப்புகளும் முடங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. உலகம் சுமூக சூழலை சந்திக்கும்போது இலக்கியச் சந்திப்பும் தொடரும் என்று நம்புகிறேன்…
சாதியம் தமிழர்களின் உள்ளக பிரச்சினை அதை இலகுவாக தீர்த்து விடலாம் என்கிற மந்திரச்சொல்லில் மயங்கியே பல இளைஞர்கள் பல இயக்கங்களிலும் தங்களை இணைத்துக் கொண்டனர். அது அவ்வளவு சாமானியமான விடயம் அல்ல மதம் ஊடாகவும், கலாச்சாரம் ஊடாகவும் சமூகத்தின் ஆணிவேர் வரை ஆழப்பதிந்து கிடைக்கும் சாதியம் வெறும் துப்பாக்கி மிரட்டலால் மட்டும் அழிந்து போகமுடியாது. அதற்கான தனித்துவமான வேலைத்திட்டங்களும், விழிப்புணர்வும் அதனூடான கலாச்சார புரட்சியும் நடந்தால் மட்டுமே சாதியத்தை அசைக்க முடியும். மாறாக தமிழ்த்தேசியக்கட்சிகள் அனைத்துமே வெள்ளாளிய கட்டமைப்பு கட்சிகள் என்பதனால் அவர்கள் சாதியத்தில் கை வைப்பதென்பது தங்கள் தலையில் கை வைப்பதற்கு சமனாகும் ஆதலால் வெறும் வார்த்தைகளால் மட்டும் சாதி மத பேதமற்ற விடுதலை என பேசிக்கொண்டே தமது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வார்கள். ஆதலால் ஒடுக்கப்பட்ட சாதியினர் தங்களை தற்காத்துக் கொள்ளவும் மேம்படுத்திக் கொள்ளவும் தமக்கான தலைமைகளை உருவாக்குவது மட்டுமே நியாயமானதும், நடைமுறைச்சாத்தியமானதும் என்பதை தேசிய விடுதலைப் போராட்டத்தின் போக்கும் அது பற்றிய உரையாடலும் நமக்கு உணர்த்தின.
எண்பதுகளின் முற்பட்ட காலங்களில் சிறுபான்மை தமிழர் மகாசபை, தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் என்பன ஒடுக்கப்பட்ட சமூகத்தினர்களது மேம்பாட்டுக்கும், சமூக நீதிக்கும், சுய மரியாதைக்கும் தலைமை ஏற்று வழி நடத்தின. தேசியத்தின் பெயரில் உருவாகிய ஆயுதப்போராட்டம் அவற்றை அழித்தொழித்த நிலையில் குரலற்றவர்களாக, உடைக்கப்பட்டவர்களாக, நொருக்கப்பட்டவர்களாக மவுனிக்கப்பட்ட மக்களிடம் தமிழ்த்தேசியம் ஆயுதத்தை திணித்து இவர்களை தமது இருத்தலுக்கு தீனி ஆக்கியது. குறைந்த பட்சம் இந்த மக்கள் உயிர் வாழ்ததலுக்கான குரல் கூட எழுப்பப்பட முடியாத நிலையில் தேசியப்பலியாடுளாக வளர்க்கப்பட்டனர். இந்நிலையில்தான் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் சமூகம் சார்ந்து புலம் பெயர்ந்த தேசத்தில் இருந்து குரல் ஒலிக்க வேண்டும் என ஒரு குழு தங்களுக்குள் உரையாடல்கள் செய்தனர்.
(தொடரும்……)