‘விபுலானந்த இயல்’ எனும் கல்விசார் துறை தேவை

‘விபுலானந்த இயல்’ எனும் கல்விசார் துறை தேவை

   — செங்கதிரோன் — 

சுவாமி விபுலானந்த அடிகளாரை இராமகிருஷ்ண மிசனைச் சேர்ந்த துறவியாக மட்டுமே பார்க்கின்ற மனோநிலை அல்லது ஒரு போக்குத்தான் எம்மவர்களிடையே ஆரம்பத்தில் இருந்துள்ளது. அதுவே ஒரு மரபாகவும் இருந்தது. அந்த மனப்போக்கை அல்லது மரபை மாற்றுவதற்கு உழைத்தவர்களில் முன்னோடியாக விளங்கியவர் அமரர் அருள் செல்வநாயகம் அவர்கள். 

1954இல் ‘விபுலானந்த அடிகள்’ என்ற வாழ்க்கை வரலாற்று நூலை வெளியிட்டதன் மூலம் இந்தப் பணியைத் தொடக்கி வைத்துத் தொடர்ந்து வெளியிட்ட ‘விபுலானந்த அமுதம்’, ‘விபுலானந்தத் தேன்’, ‘விபுலானந்த வெள்ளம்’, ‘விபுலானந்த செல்வம்’, ‘விபுலானந்த ஆராய்வு’, ‘விபுலானந்தக் கவிமலர்’, ‘விபுலானந்தர் சொல்வளம்’ ஆகிய நூல்களின் மூலம் விபுலானந்தரின் பன்முக ஆளுமைகளையும் பணிகளையும் வெளிக்கொணர்ந்தார். 

பல்கலைக்கழகம் செய்யாது விட்ட பணியினை அல்லது பல்கலைக்கழகம் செய்திருக்க வேண்டிய பணியினைத் தனி மனித உழைப்பின் மூலம் மேற்கொண்ட அன்னாரது அர்ப்பணிப்பு அறிஞர்களுக்கெல்லாம் ஒரு முன்னுதாரணமாகும். 

பதிப்பு என்பது ஒரு பாட நெறியாகப் பல்கலைக்கழகங்களில் அறிமுகம் செய்யப்பட்டிருக்காத ஒரு காலகட்டத்தில் பல்கலைக்கழகப் பட்டம் பெற்றிராத அருள் செல்வநாயகம் அவர்கள் மிகவும் நேர்த்தியாக ஒரு நிபுணத்துவச் சீர்மையுடன்- தொழில்சார் செழுமையுடன் இந்நூல்களை வெளியிட்டுள்ளார் என்பது  எம்மை ஆச்சரியப்பட வைக்கின்றது. 

1951இல் மு.திருநாவுக்கரசு என்பவரால் எழுதப்பட்டு சென்னை கி.மா.கோபாலகிருஸ்ணகோன் என்பவரால் பிரசுரமாக வெளியிடப்பெற்ற ‘விபுலானந்த அடிகள்’ என்ற நூலே சுவாமி விபுலானந்தர் பற்றிய முதலாவது வாழ்க்கை வரலாற்று நூலாகக் கொள்ளப்படுகிறது. அந்த வகையிலே 1954இல் அருள் செல்வநாயகம் எழுதி வெளியிட்ட ‘விபுலானந்த அடிகள்’ என்னும் நூல் சுவாமி விபுலானந்தரின் வாழ்க்கை வரலாற்றினை எடுத்துக்கூறச் செய்யப்பட்ட இரண்டாவது முயற்சி என்று வரலாறு பதிவு செய்து வைத்திருப்பது அருள் செல்வநாயகத்திற்கும் பெருமை சேர்ப்பதாகும். 

1954இல் தொடங்கி 1973இல் அவர் மறையும் வரை அருள் செல்வநாயகம் நடத்திய விபுலானந்த இலக்கிய வேள்வியின் அவிபாகமாக- ஆகுதியாக ‘விபுலானந்த இலக்கியம்’ எனும் இந்நூல் கருதப்படும் என்பதை இந்நூலின் உள்ளடக்கம் மெய்ப்பிக்கின்றது. 

சுவாமி விபுலானந்தர் அவர்களின் நூற்றாண்டு விழாவையொட்டி மட்டக்களப்பு நூற்றாண்டு விழாச் சபை மூத்த அறிஞர் வி.சுப்பிரமணியம் அவர்கள் எழுதிய ‘விபுலானந்த தரிசனம்’ என்னும் நூலை 1993இல் வெளியிட்டிருந்தது. சுவாமி விபுலானந்தர் பற்றி அதுவரை வெளிவந்திருந்த நூல்களுள் ‘விபுலானந்த தரிசனமே’ அதிக நம்பகத்தன்மை மிக்கதாயும் நூலின் தலைப்பிற்கமைய விபுலானந்தரை முறையாக வெளிப்படுத்தியதாகவும் கருதப்பட்டது. ஆனால் ‘விபுலானந்த இலக்கியம்’ என்னும் தொகுப்பு நூலே விபுலானந்தரை முழுமையாகத் தரிசிக்கும் உன்னத இடத்தை வகிக்கும் என்பதைக் காலம் மெய்ப்பிக்கும். 

வள்ளுவரியல், பாரதியியல், பெரியாரியல் எனும் வரிசையில் ‘விபுலானந்த இயல்’ என்னும் கல்விசார் துறையொன்று எதிர்காலத்தில் ஏற்படுவதற்கு ‘விபுலானந்த இலக்கியம்’ எனும் இந்நூல் கால்கோள் இட்டுள்ளது. 

‘விபுலானந்த அடிகள்’ முதலிலும் தொடர்ந்து ‘விபுலானந்த அமுதம்’, ‘விபுலானந்தத் தேன்’, ‘விபுலானந்த செல்வம்’, ‘விபுலானந்த வெள்ளம்’, ‘விபுலானந்தக் கவிமலர்’, ‘விபுலானந்த ஆராய்வு’ எனும் வரிசையிலே இந்நூல்களெல்லாம் ஒன்று சேர தொகுக்கப் பெற்றுள்ளன. ‘விபுலானந்தர் சொல்வளமும்’ இதில் தேடிச் சேர்க்கப்பட்டிருக்குமாயின் இந்நூல் மேலும் முழுமை பெற்றிருக்கும். இந்நூலின் இரண்டாம் பதிப்பு வெளிவரும் போது இது நிவர்த்திக்கப் படலாம். 

மேலும், சுவாமி விபுலானந்தரின் சமயப் பணிகள்- சமூகப் பணிகள்- கல்விப் பணிகள்- மனிதநேயச் செயற்பாடுகள்- இசைத்தமிழ்ப் பணிகள்- நாடகத்தமிழ்ப் பணிகள்- இதழியல் செயற்பாடுகள்- இயற்றமிழ்ப் பணிகள் போன்றவை வெளிக்கொணரப்பட்ட அளவுக்கு ‘விஞ்ஞானத்தைத் தமிழில் தருவதில் விபுலானந்தர் ஆற்றிய பணி’ முழுமையாக ஆய்வுக்குட்படுத்தப்படவில்லை. 

“புத்தம் புதிய கலைகள்- பஞ்ச பூதச்செயல்களின் நுட்பங்கள் கூறும் மெத்த வளருது மேற்கே- அந்த மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை! 

சொல்லவும் கூடுவதில்லை- அவை சொல்லும் திறமை தமிழ்மொழிக்கில்லை. மெல்லத் தமிழினிச் சாகும்- அந்த மேற்கு மொழிகள் புவிமிசையோங்கும். 

என்றந்தப் பேதை உரைத்தான்- ஆ!  இந்த வசையெமக் கெய்திடலாமோ! சென்றிடுவீர்! எட்டுத்திக்கும்- கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!” 

என்ற பாரதியின் அறைகூவலை ஏற்று பாரதியின் சிந்தனைக்குச்  செயல் வடிவம் கொடுத்தவர், தமிழிலும்- ஆங்கிலத்திலும்- விஞ்ஞானத்திலும் புலமை பெற்றிருந்த சுவாமி விபுலானந்தர் அவர்களே. 

விஞ்ஞானத்தைத் தமிழில் தருவதில் விபுலானந்தர் ஆற்றிய பணியினை வரன் முறையான ஆய்வுக்கு உட்படுத்த விழைவோர்க்கு அடிப்படையான பல தகவல்களையும் ‘விபுலானந்த இலக்கியம்’ எனும் இந்நூல் கொண்டிருக்கிறது என்பது இந்நூலின் இன்னொரு சிறப்பு ஆகும். 

‘விஞ்ஞானத்தைத் தமிழில் தருவதில் விபுலானந்தர் ஆற்றிய பணிகள்’ எதிர்காலத்தில் ஆழமாக ஆராயப்பட வேண்டிய ஓர் ‘ஆய்வுப் பொருள்’ ஆகும். 

(14.02.2010 அன்று மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி கலை அரங்கில் நடைபெற்ற மறைந்த எழுத்தாளர் அருள் செல்வநாயகம் அவர்களின் ‘விபுலானந்த இலக்கியம்’ நூல் வெளியீட்டு விழாவில் ‘செங்கதிர்’ ஆசிரியர் செங்கதிரோன் நிகழ்த்திய ‘நூல் ஆய்வுரை’ ச் சுருக்கம்.)