— பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா —
‘இது என் கதையல்ல, என்னைத் தாங்கிய என் மண்ணின் கதை’
தமிழரசுக் கட்சித் தலைவர், சி.மூ.இராசமாணிக்கம் அவர்களது மறைவு, பட்டிருப்புத் தொகுதி அரசியல் தலைமையில் பதிலீடு செய்யமுடியாததொரு வெற்றிடத்தை ஏற்படுத்தியது. தலைவரின் மறைவைத் தொடர்ந்து, ஏறத்தாழ, இரண்டரை வருடங்களில், 1977 ஏப்ரல் 26ஆம் திகதி தந்தை சா.ஜே.வே.செல்வநாயகம் அவர்களும் காலமானதால், இலங்கைத் தமிழர்களின் அரசியலில் அறிவுபூர்வமானதும் நிதானமானதுமான செயற்பாடுகளில் ஒரு தளர்வு உண்டாகியது. தமிழரசுக் கட்சியின் தந்தையினதும், தலைவரினதும் மறைவுகளால், தமிழரசுக் கட்சியினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் (TULF) போக்கு வித்தியாசமான திசையில் செல்லத் தொடங்கியது. நாடளாவிய ரீதியிலான இந்த மாற்றங்கள் பற்றி அடுத்தடுத்த பாகங்களில் எடுத்துரைக்க எண்ணுகின்றேன்.
பட்டிருப்புத் தொகுதிக்கான த.ஐ.வி.கூட்டணி வேட்பாளராவதை அதுவரை கனவில்கூடக் கண்டறியாத பலர் 1974ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியிலிருந்து, ஓடத் தொடங்கினார்கள். பல ஊர்களில் இருந்தும் அவ்வந்த ஊர்களைச் சேர்ந்த பல பிரமுகர்களின் பெயர்கள், பாராளுமன்றத்திற்குள் பட்டிருப்புத் தொகுதி உறுப்பினராக நுழையும் எண்ணத்தில் புற்றீசல்கள்போலப் புறப்பட்டுக்கொண்டிருந்தன.
சிலர் தேர்தலில் நிற்க விரும்பினார்கள். சிலரைப் பலர் நிறுத்த விரும்பினார்கள். அரசியலின் பக்கம் திரும்பியும் பார்க்காமல் இருந்தவர்கள், பொதுநலப் பணிகளென்றால் புறமுதுகு காட்டியவர்கள், தமிழரசுக் கட்சிக்கு எதிராகச் செயற்பட்டவர்கள், கல்வியால் சிறந்து, பதவியில் உயர்ந்து, இலஞ்சத்தில் புரண்டுகொண்டிருந்தவர்கள்….. இப்படிப் பலவகை மனிதர்களும் அந்தப் பவனியிலே நடந்து தங்கள் செருப்புக்களைத் தேய்த்துக்கொண்டிருந்தார்கள்.
எங்கள் ஊரைச் சேர்ந்தவர்களும் எவரையோ எல்லாம் முன்மொழிந்துகொண்டிருந்தார்கள். வெளிநாட்டில் உயர் பதவியில் இருந்த கல்விமான், கு.தருமரெத்தினம் அவர்கள், களுவாஞ்சிகுடி சாரதா படமாளிகை உரிமையாளர் த.நமசிவாயம் அவர்கள், இராசமாணிக்கம் அவர்களின் நெருங்கிய ஆதரவாளராக இருந்தவரும் செட்டிபாளையத்தைச் சேர்ந்தவருமான லிங்கநாதன் ஆசிரியர் அவர்கள், மண்டூரைச் சேர்ந்த பேராசிரியர், சந்திரசேகரம் அவர்கள் முதலியவர்களின் பெயர்களை முன்னிறுத்திய செயற்பாடுகளும் அவ்வப்போது இடம்பெற்றுக்கொண்டிருந்தன.
படமாளிகை உரிமையாளர் த.நமசிவாயம் அவர்களை வேட்பாளராக்குவதற்கான முயற்சிகளில், மா.தருமரெத்தினம் அவர்கள் ஈடுபட்டார். (பிற்காலத்தில் இந்தியப் படையினர் நிலைகொண்டிருந்த போது களுவாஞ்சிகுடி பிரசைகள் குழுத் தலைவராக இருந்து அளப்பரிய பணிகளைச் செய்தவரே திரு தருமரெத்தினம் அவர்கள். அப்போது பிரசைகள் குழுவில் இணைச் செயலாளர்களாக, நானும் கோ.பாக்கியராசா அவர்களும் பணியாற்றினோம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது) தருமரெத்தினம் அவர்கள் கொழும்பில் என்னைச் சந்தித்து, நமசிவாயம் அவர்களை முன்னிறுத்துவது குறித்துப் பேசினார். மறுநாள் அவரும், நமசிவாயம் அவர்களும் நானும் ஓரிடத்தில் சந்தித்து இதுபற்றிக் கலந்தாலோசித்தோம். அடுத்த வாரம், களுவாஞ்சிகுடியில் நமசிவாயம் அவர்களின் தங்கையாரான திருமதி செல்வரெத்தினம் அவர்களின் வீட்டில் சிறிய அளவிலான ஓர் ஆலோசனைக் கூட்டம் இடம்பெற்றது. அதன் பின்னர் நமசிவாயம் அவர்களின் சொந்தக்காரர்கள் சிலரே அவருக்கெதிராகச் சூழ்ச்சி செய்யத் தொடங்கினார்கள். அதனால் அந்த முயற்சி, கதையாய் கற்பனையாய் மெல்ல மெல்லக் கரைந்து போயிற்று.
களுவாஞ்சிகுடியைச் சேர்ந்த கல்வி அதிகாரி க.அ.பாக்கியன் அவர்கள், உள்ளூராட்சித் திணைக்களத்தில் கடமையாற்றிப் பின்னர் இலங்கை நிர்வாக சேவையில் இணைந்து உதவி அரசாங்க அதிபராகப் பணியாற்றிய, சின்னையா அவர்கள் (சிவலிங்கம்), சு.பத்மநாதன் அவர்கள் ஆகியோரும் இன்னும் சிலரும், பெரிய போரதீவைச் சேர்ந்த சோமசுந்தரம் சிவகுருநாதன் அவர்களை அணுகியிருக்கிறார்கள். அவரைத் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியில் போட்டியிட வருமாறு அழைத்திருக்கிறார்கள். சிவகுருநாதன் அவர்கள் லங்கா சமஜமாஜக் கட்சியைச் சேர்ந்தவர். கலாநிதி என்.எம்.பெரேரா, கொல்வின் ஆர்.டீ.சில்வா போன்ற அரசியல் மேதைகளுடன் நெருக்கமான நல்லுறவைப் பேணிக்கொண்டிருந்தவர். நேர்மையான அரசியல்வாதியாக இருந்தவர். ஆனால் அவரோ, தனது கட்சிக் கொள்கையில் மிகவும் பிடிப்புள்ளவராக இருந்தவர். கட்சி மாறுவதைக் கேவலமான செயலாக நினைத்தவர். அதனால் தனது கட்சியிலேயே வேட்பாளராகப் போட்டியிடுவதில் உறுதியாக இருந்தார்.
இந்த நிலையில், பெரிய கல்லாற்றைச் சேர்ந்தவரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளருமான பூ.கணேசலிங்கம் அவர்களும் இந்த முயற்சியில் இறங்கியுள்ளதாகப் பேச்சு அடிபட்டது. அதுபற்றிப் பெரிதாக நாங்கள் அலட்டிக்கொள்ளவுமில்லை, கவனத்தில் எடுக்கவுமில்லை. ஏனெனில் அவர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் என்பது மட்டுமல்லாமல், சில வருடங்களுக்கு முன்னர் 1970இல் இடம்பெற்ற தேர்தலில், சி.மூ.இராசமாணிக்கம் அவர்களுக்கும், தமிழரசுக் கட்சிக்கும் எதிராக மிகவும் கடுமையாகச் செயற்பட்டவருமாவார். அந்தத்தே தேர்தல் பிரசாரத்திற்காக சி.மூ.இராசமாணிக்கம் அவர்கள் ஒரு கிராமத்திற்குச் சென்றிருந்தபோது, அவரது வாகனத்தை மறித்து, கல்லெறிந்து சேதப்படுத்தி, அந்தக் கிராமத்திற்குள் செல்ல முடியாதவாறு தடுத்தவர் பூ.கணேசலிங்கம் அவர்கள் என்பது ஊரறிந்த விடயம்.எனவே, அவரைத் தமிழரசுக் கட்சி, வேட்பாளராகத் தெரிவுசெய்யாது என்பதே எல்லோரினதும் நம்பிக்கையாக இருந்தது.
பூ.கணேசலிங்கம் அவர்கள் தனது ஸ்கூட்டர் வண்டியில் ஓடியோடி, முக்கியமான மனிதர்களைத் தேடித்தேடி, இரகசியமான சந்திப்புக்களை ஒவ்வொரு ஊரிலும் நடத்திக்கொண்டிருந்தார். எங்கும் அவருக்குப் பெரும் எதிர்ப்பே இருந்தது. அவரது முதல் இலக்கு தமிழரசுக் கட்சியின் உள்ளூர்ப் பிரமுகர்களாகவே இருந்தது. அடுத்ததாக அவர் இளைஞர்களை இலக்குவைத்தார். அந்த வகையில் மட்டக்களப்பு இளைஞர் பேரவையின் உறுப்பினர்கள் சிலரையும் அவர் அணுகியபோது பலத்த எதிர்ப்பை எதிர்கொண்டார்.
களுவாஞ்சிகுடியில் நான் சார்ந்திருந்த எம்.ஜீ.ஆர். மன்றம், இளம்நாடக மன்றம் என்பவற்றின் உறுப்பினர்களோடு மட்டுமன்றி, அங்கே இயங்கிக்கொண்டிருந்த இளைஞர் கழகங்கள் எல்லாவற்றுடனும் எனக்கு நல்லுறவும், நன்மதிப்பும் இருந்தது. அதனை மோப்பம் பிடித்த யாரோ, ஒருவரோ அல்லது பலரோ, களுவாஞ்சிகுடியில், இளைஞர்களை வளைத்துப்போடுவது என் மூலமாகவே சாத்தியமாகக்கூடியதென்று ஒரு கருத்தை அவரிடம் விதைத்திருக்கிறார்கள்.
அதனால் கணேசலிங்கம் அவர்கள் என்னை வந்து சந்தித்தார். இந்தக் கதையையே எடுக்கவேண்டாம் என்று ஒரேயடியாக நான் மறுத்துவிட்டேன். ஆனாலும் அதற்குப் பின்னரும் மூன்று தடவைகள் அவர் என்னைச் சந்தித்தார்.
ஒருதடவை, பேச்சுப்போக்கிலே, கணேசலிங்கம் அவர்கள் என்னிடம், “திருமதி இராசமாணிக்கம் அவர்கள் போட்டியிடட்டும், நான் பணம் செலவளிக்கிறேன்” என்று சொன்னார். அவர் அப்படிச் சொன்னது எனக்குப் பிடிக்கவில்லை.
“திருமதி லீலா இராசமாணிக்கம் அவர்கள், தான் தேர்தலில் நிற்பதாக உங்களிடம் சொன்னாரா? அப்படி அவர் நின்றாலும் அவருக்காகப் பணம் செலவழிக்க நீங்கள் யார்? இப்படியெல்லாம் நீங்கள் பேசுவது முறையில்லை. நீங்கள் உங்களுக்காகப் பேசுவதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்” என்று முகத்தில் அடித்ததுபோல் கூறிவிட்டேன். ஆனால் அவர் எவ்வித எதிர்ப்பு உணர்ச்சியையும் காட்டிக்கொள்ளாமல், சாதாரணமாக, மிகவும் நிதானமாகவே கதைத்தார்.
“ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அது சான்றோர்
மாற்றாரை மாற்றும் படை” என்ற வள்ளுவர் சொல்லியிருப்பது அவருக்குத் தெரிந்திருந்ததோ இல்லையோ, அந்த வாக்குக்கமையவே அவரைவிட வயதிலும், அன்றைய நிலைமையில் அறிவிலும், அந்தஸ்த்திலும், மிகவும் குறைந்திருந்த என்னிடம் மிகவும் பொறுமையுடனும், கனிவுடனும் நடந்துகொண்டார்.
பல்வேறு கோணங்களில் பட்டிருப்புத் தொகுதி வேட்பாளர் பற்றிய தேடல்கள் சென்றுகொண்டிருந்த அந்த வேளையில், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களை மட்டக்களப்பு வேட்பாளராக நியமிப்பதற்கான நிலைமை ஒன்று அரசல் புரசலாக எங்களுக்குத் தெரிய வந்தது. அவரைப் பட்டிருப்பிற்குத் தருமாறு ஒரு கோரிக்கை பட்டிருப்புத் தொகுதியின் பல இடங்களைச் சேர்ந்த தமிழரசுக்கட்சி ஆதரவாளர்களால் கட்சித் தலைமைக்கு விடுக்கப்பட்டது. இதே போன்றதொரு கோரிக்கையைப் பொத்துவில் தொகுதி வேட்பாளராக நியமிக்கப்பட்ட சீ.கனகரெத்தினம் அவர்களும் கட்சியிடம் வைத்ததாகவும், தனக்கு அரசியலில் நாட்டம் இல்லையென்றும், காசி ஆனந்தன் அவர்களைப் பொத்துவில் வேட்பாளராக நியமிக்குமாறும், அவரது தேர்தல் செலவுகளைத் தான் பொறுப்பெடுத்துக் கொள்வதாகவும் கனகரெத்தினம் அவர்களே கூறியிருந்தார்.
ஆனால் தமிழரசுக் கட்சித் தலைவரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமுமாக இருந்த அ.அமிர்தலிங்கம் அவர்களின் மனதில் அழுத்தமாகப் பதிந்து கிடந்த திட்டம் ஒன்றின் காரணமாக, காசி ஆனந்தன் அவர்களை பட்டிருப்பிற்கோ அல்லது பொத்துவிலுக்கோ விட்டுக்கொடுக்கும் பேச்சுக்கள் எதற்கும் அவர் காது கொடுக்கவுமில்லை, கவனத்தில் எடுக்கவுமில்லை.
நாட்கள் நகர்ந்துகொண்டிருந்தன. மாதங்கள் மாறிக்கொண்டிருந்தன. இறுதியில், பூ.கணேசலிங்கம் அவர்கள் தன் முயற்சியில் வெற்றி கண்டார். தமிழரசுக் கட்சித் தலைவர் அ.அமிர்தலிங்கம் அவர்களை எப்படியோ பிடித்துத் தனது எண்ணத்தை நிறைவேற்றிக்கொண்டார். அமிர்தலிங்கம் அவர்கள் பச்சைக்கொடி காட்டிவிட்ட பின்னர் கணேசலிங்கம் அவர்கள் மிகவும் உற்சாகமாகக் களத்தில் இறங்கினார்.
கணேசலிங்கம் அவர்களைத் தமிழரசுக் கட்சிக்குள் உள்வாங்குவதென்ற பேச்சுக்கே இடமில்லை என்ற கருத்தில் மிகவும் உறுதியாக இருந்த, மட்டக்களப்பு இளைஞர் பேரவை உறுப்பினர்களின் நிலைப்பாட்டிலும் தளர்வு ஏற்படத்தொடங்கியது. பல்வேறு வகைகளில் இளைஞர் பேரவையினரை அணுகிய கணேசலிங்கம் அவர்கள், படிப்படியாக அவர்களைக் கவரத் தொடங்கினார். அப்போது மட்டக்களப்புத் தொகுதியின் இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினராகவும், மாவட்ட அரசியல் அதிகாரியாகவும் இருந்த இராஜன் செல்வநாயகம் அவர்களது தயவு இல்லாமல் அல்லது அவரது எதிர்ப்பை மீறி ஒரு கூட்டத்தை மட்டக்களப்பில் நடத்துவது மிகவும் சிரமமான காரியமாக இருந்தது. ஆனால், மட்டக்களப்பு தாமரைக்கேணி வீதியில் வசித்துவந்த, பூ.கணேசலிங்கம் அவர்கள் இராஜன் செல்வநாயகம் அவர்களை நேரடியாக எதிர்க்கக்கூடிய திராணி உள்ளவராகத் தன்னைக் காட்டிக்கொண்டார். அதனைச் சில சந்தர்ப்பங்களில் நிரூபிக்கக்கூடிய விதமாகவும் நடந்துகொண்டார். அதனால், இளைஞர் பேரவையினரின் நம்பிக்கை வட்டத்துக்குள் மெல்லமெல்ல அவர் இடம்பிடித்தார். அமிர்தலிங்கம் அவர்கள் கணேசலிங்கத்தை அங்கீகரித்தமையும் இளைஞர் பேரவையின் மனமாற்றத்திற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.
கணேசலிங்கம் அவர்களுக்கு வேட்பாளர் நியமனம் கிடைத்துவிட்ட பின்னரும்கூட நானும் இன்னும் பல இளைஞர்களும் அவரை ஏற்றுக்கொள்ளவோ ஆதரிக்கவோ முடியாத மனநிலையிலேயே இருந்தோம்.
கணேசலிங்கம் அவர்கள் வேட்பாளரானதால், களுவாஞ்சிகுடி தமிழரசுக்கட்சி ஆதரவாளர்கள் இரண்டு பிரிவானார்கள். ஒரு பகுதியினர் “உண்மைத் தமிழர் கூட்டணி” என்று தம்மை அழைத்துக்கொண்டு கணேசலிங்கம் அவர்களுக்கு எதிராகப் பிரசாரம் செய்தார்கள். அவர்களது நிலைப்பாட்டில் நியாயம் இருந்தது. ஆனால், அவர்கள் தேர்தலைப் புறக்கணித்திருந்தால் அவர்களது நியாயத்திற்கு மதிப்பும், மரியாதையும் கிடைத்திருக்கும். ஆனால், அவர்கள் லங்காசமஜமாசக் கட்சி வேட்பாளரான சிவகுருநாதன் அவர்களை வெளிப்படையாக ஆதரித்தமை, “தனக்கு மூக்குப்போனாலும் பரவாயில்லை, எதிரிக்குச் சகுனப்பிழயாக வேண்டும்” என்று நடப்பதைப்போல இருந்தது.
வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் நாள் குறிக்கப்பட்டதன் பின்னர் ஒருநாள், கோ.பாக்கியராசா அவர்கள் திடீரென எங்கள் வீட்டுக்கு வந்தார். அவரது வீடும் எங்கள் வீடும் கூப்பிடு தொலைவிலேயே இருக்கிறது. கோ.பாக்கியராசா அவர்கள் களுவாஞ்சிகுடியில் மிக முக்கியமான சமூக சேவையாளர். ஊரின் நல்லது கெட்டது எல்லாவற்றிலும் கலந்துகொள்பவர். ஆலயபரிபாலட சபைத் தலைவர், சைவ மகாசபையின் செயலாளர் முதலிய பதவிகளில் இருந்து சிறந்த பணியாற்றியவர். என்னில் அன்பும், அக்கறையும் கொண்டிருந்தவர். அவர் என்னிடம் பட்டிருப்புத் தொகுதி வேட்பாளர் கணேசலிங்கம் அவர்களைப்பற்றிக் கூறினார். எங்களது நிலைப்பாட்டின் நியாயத்தை ஏற்றுக்கொண்ட அவர், அதேவேளை கட்சி கணேசலிங்கம் அவர்களை வேட்பாளராக நியமித்திருப்பதால் நமக்கு வேறு வழியில்லை என்றும் எனவே கட்சிக்காக அவரை ஆதரித்தே தீரவேண்டும் என்றும் கூறினார். மறுநாள் நியமனப் பத்திரம் தாக்கல் செய்யவிருப்பதாகவும் என்னைக் கட்டாயம் வரும்படியும் மறுக்கமுடியாதபடி கேட்டுக்கொண்டார்.
அடுத்தநாள் காலையில், அதற்கென ஒழுங்குசெய்யப்பட்டிருந்த வாகனம் அவரையும், என்னையும், இன்னும் இருவரையும் ஏற்றிக்கொண்டு, கணேசலிங்கம் அவர்களது மட்டக்களப்பு வீட்டுக்குச் சென்றது. வீட்டுப் படியேறியபோது கணேசலிங்கம் அவர்கள் என்னை எதிர்கொண்டு கட்டித்தழுவி வரவேற்றார். தனது வெற்றி நிச்சயம் என்று கூறினார். அங்கிருந்த எல்லோருக்கும் என்னை அறிமுகப்படுத்தினார். எனக்கு ஏன் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்று எனக்கே ஆச்சரியமாக இருந்தது.
அன்று வேட்பாளர் நியமனப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
அன்றிலிருந்து தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் கலந்துகொள்ளவேண்டி ஏற்பட்டது. அதற்குப் பின்னர்தான், இப்போதைய தமிழரசுக்கட்சியின் சிரேஸ்ட உப தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான, நண்பர் திரு.பொ.செல்வராசா அவர்களது பழக்கம் ஏற்பட்டது. கணேசலிங்கம் அவர்களது வெற்றிக்காக உழைத்தவர்களில் அவர் மிகவும் முக்கியமானவராக இருந்தார். அதற்கு முன்னரே அவர் எனக்கு அறிமுகமானவர்தான் என்றாலும், ஒரே பாதையில் சேர்ந்து இயங்கியதில்லை என்பதால் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டிருக்கவில்லை.
ஒருநாள் நான், போரதீவில் நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில் பேசும்போது சிவகுருநாதன் அவர்களைச் சற்று விமர்சித்துப் பேசவேண்டியதாயிற்று. அதனால் அவரது ஆதரவாளர்கள்சிலர் என்மேல் மிகுந்த ஆத்திரமடைந்துள்ளதாகவும், எங்கள் வாகனத்தை வழிமறித்து என்னைத் தாக்குவதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் ஆறுமுகவடிவேல் அண்ணனுக்கு ஒருதகவல் கிடைத்திருக்கிறது. அவரும் அரங்க அண்ணன், புலேந்திர அண்ணன் மற்றும் அவர்களது நண்பர்கள் சிலரும் அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்தார்கள். சிவகுருநாதன் அவர்களது வீட்டில் நின்றிருந்த எங்கள் ஊரைச்சேர்ந்த உண்மைத் தமிழர் கூட்டணியினரில் ஒருவர், என்னைக் காப்பாற்றுவதற்காக இந்தத் தகவலை அங்கிருந்து ஓடிவந்து ஆறுமுகவடிவேல் அண்ணனிடம் சொல்லியிருக்கிறார். அதனால் ஆறுமுகவடிவேல் அண்ணனும், மற்றவர்களும் கூட்டம் முடிந்து திரும்பி ஊருக்குப் போகும்போது காரில் போவதில்லை எனவும் நடந்தே செல்வது எனவும் வீறாப்பான தீர்மானம் ஒன்றை எடுத்திருக்கிறார்கள். கூட்டம் முடிந்து நான் மேடையில் இருந்து இறங்கியதும் என்னிடம் எந்த விபரத்தையும் சொல்லாமல், தம்பி “கார் வரச் சுணங்குமாம் நாம நடந்து போவமே” என்றார்கள். சிறிது தூரம் நடந்து செல்லும்போதே சைக்கிள்களில் வந்திருந்தவர்களும், அவற்றைத் தள்ளிக்கோண்டு எங்களோடு நடந்து வருவதை அவதானித்தபோது எனக்குச் சந்தேகம் பிறந்தது. சிவகுருநாதன் அவர்களின் வீட்டுக்கு முன்னால் செல்லும்போது, நம்மைச் சுற்றி நடந்துவருவோர் உதிர்த்த வார்த்தைகளில் இருந்து விடயம் எனக்கு வெளிச்சமானது. எனக்குக் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது.
ஆனால் அந்த வீட்டுக்கு முன்னால், களுவாஞ்சிகுடி ஆட்கள் – எனது உறவினர்கள் உட்பட – உண்மைத் தமிழர் கூட்டணியினர் – நிற்பதையும் கண்டேன். எனவே எதுவும் நடக்காது என்று எண்ணிக்கொண்டு நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு நடந்தேன்.
சிலர் முறுகிக்கொண்டு நின்றார்கள். நாங்கள் அப்படியே நடந்து, கட்டுறாம் பூச்சி மரத்தடிச் சந்திக்குச் சென்றதும் சொல்லிவைத்தாற்போல எங்களை ஊருக்கு ஏற்றிச் செல்லும் கார் வந்தது. அண்ணன்மார் அப்படித்தான் சொல்லி வைத்திருக்கிறார்கள் என்பது அப்போதுதான் எனக்குப் புரிந்தது.
(நினைவுகள் தொடரும்)