சொல்லத் துணிந்தேன் – 82

சொல்லத் துணிந்தேன் – 82

— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்— 

தமிழ் அரசியலின் உள் முரண்பாடுகள் குறித்து ‘அரங்கம்’ மின்னிதழில் பேசிவந்த ஆய்வாளர் வி.சிவலிங்கம் அவர்கள் அதன் ஒரு கட்டத்தில் ‘கிழக்கு அரசியல்’ பற்றியும் பேச வந்த அவர் ‘பிரதேசவாதமா ஜனநாயக பற்றாக்குறையா? (தமிழ் அரசியலை முன்னோக்கி நகர விடாது தடுக்கும் உள் முரண்பாடுகள்)’ என்னும் தலைப்பிலான கட்டுரையை 06.06.2021 அன்று ‘அரங்கம்’ மின்னிதழில் பதிவிட்டிருந்தார். 

இக்கட்டுரை உண்மையில் ‘அரங்கம் ஒரு பிரதேசவாத ஊடகம்?’ என்னும் தலைப்பில் எழுவான் வேலன் என்பவர் 22. 05. 2021 ‘அரங்கம்’ மின்னிதழில் கூறியிருந்த கருத்துக்களை மறுதலித்து எழுதப்பட்டிருந்தது. எழுவான் வேலன் தனது கட்டுரையில் பதிவிட்டிருந்த பின்வரும் வரிகளே எழுவான் வேலனின் கட்டுரைக்கு எதிர்வினையாற்றச் சிவலிங்கம் அவர்களைத் தூண்டியுள்ளது போலும். 

* “ஈழத்தில் பிரதேசவாதத்தினை அறிமுகப்படுத்திய பெருமை ஆறுமுக நாவலரையே சாரும். அவர் முன்வைத்த ‘சைவமும் தமிழும்’ எனும் கருத்து நிலை இதில் முக்கியமானதாகும்.” 

* “ஆறுமுக நாவலர் சமூக வேற்றுமைகளைக் கூர்மைப்படுத்தினார். இங்கு (கிழக்கில்) விபுலானந்தர் சமூக ஒற்றுமைகளை வலுப்படுத்தினார்”. 

* “ஆறுமுக நாவலரும் அவருடைய அணியும் சர்வஜன வாக்குரிமை வழங்கக் கூடாது என்றார்கள். கிழக்கின் பிரதிநிதி E.R.தம்பிமுத்து வழங்கவேண்டுமென வாக்களித்தார்”. 

* “கிழக்கு, யாழ் மேலாதிக்கத்துடன் இணைந்து போன சந்தர்ப்பங்களிலெல்லாம் தங்களுக்காகப் பயன்படுத்திவிட்டுத் தூக்கியெறிந்தார்கள். அல்லது தங்களுக்கான அரசியல் மேலாதிக்கத்தைக் கட்டமைத்துக் கொண்டு அதன் அறுவடைகள் அனைத்தையும் பெற்றுக் கொண்டார்கள்”. 

* “….யாழ் மேலாதிக்க அதிகாரத்திற்கு எதிரானவர்களாகக் கிழக்கு மக்கள் இருந்துவந்திருக்கிறார்கள். இது யாழ் மேலாதிக்கம் ஈழத்தில் எங்கும் சந்திக்காத சவாலாகும். இந்தச் சவாலை தனது அறிவுஜீவித் தனத்தினால் எதிர்கொண்டு வருகிறது அது. அவ்வாறு எதிர் கொள்வதற்காகத் தமது புத்தியிலிருந்த பிரதேசவாதத்தினை அப்படியே எமது தலையில் கட்டி எம்மைப் பிரதேச வாதி என்கிறது”. 

கிழக்கைச் சேர்ந்தவர் எனக் கருதப்படும் எழுவான் வேலனின் இந்த எழுத்துக்கள் வடக்கைச் சேர்ந்த சிவலிங்கம் அவர்களின் ‘யாழ்’ உணர்வைத் தூண்டியதனால்தானோ என்னவோ அவர் எழுவான் வேலனின் கட்டுரைக்கு எதிர்வினையாற்றியுள்ளார் போலும். கருத்து முரண்பாடுகள் இயல்பானவை. அவை விவாதங்களுக்கு இட்டுச் செல்வதால் ஆரோக்கியமானவை. எனவே எழுவான் வேலனின் கட்டுரைக்குச் சிவலிங்கம் அவர்கள் எதிர்வினையாற்றியிருப்பதில் தவறொன்றுமில்லை. இது ஒரு சிறந்த கருத்தாடல் களத்திற்குக் காலாக அமைந்துவிட்டது. இதற்குக் களம் அமைத்த ‘அரங்கம்’ மின்னிதழ் ஆசிரியர் பூபாலரட்னம் சீவகன் அவர்களுக்கு முதலில் பாராட்டுக்களும் நன்றிகளும். 

இப் பத்தியின் முதலாவது பந்தியிலே குறிப்பிடப்பட்ட சிவலிங்கம் அவர்களின் 06.06.2021 கட்டுரைக்குப் பதிலிறுக்கும் வகையில் ‘சாதியும் பிரதேசவாதமும்’ என்ற தலைப்பில் தொடர் கருத்தாடல் களங்களை ‘அரங்கம்’ மின்னிதழில் எழுவான் வேலன் ஆரம்பித்துள்ளார். இதுவரை கருத்தாடல் களம்-1 (15.06. 2021), கருத்தாடல்  களம் 2- (20.06. 2021), கருத்தாடல் களம்-3 (29.06.2021), கருத்தாடல் களம் -4 (02.07.2021), கருத்தாடல் களம்-5 (10.07.2021) என ஐந்து கருத்தாடல்களங்களை நிகழ்த்தியுள்ளார். கருத்தாடல் களம் தொடர்கிறது. 

இடையில் அழகு குணசீலன் அவர்களும் சிவலிங்கம் அவர்களின் மேற்படி 06.06.2021  கட்டுரைக்குத் தனது ‘காலக்கண்ணாடி’ த் தொடர் 44 இல் ‘(அரங்கம் 27. 06 .2021)’ ‘கிழக்கு அரசியல் பிரதேசவாதமா?’ எனும் தலைப்பில் பதிலெழுதியிருந்தார். 

அதேவேளை, எழுவான் வேலனின் கருத்தாடல் களங்களின் வரிசை முற்றுப்பெற முன்னரே, கருத்தாடல் களம்-1 இலிருந்து கருத்தாடல் களம்-4 வரையிலான கட்டுரைகளைப் படித்துவிட்டுச் சிவலிங்கம் அவர்கள் இடையீடாக ‘அரங்கம்’ 07.07.2021 மின்னிதழில் ‘கிணறு வெட்டப் பூதம் வந்த கதை’ (பிரதேசவாதம் என்பது சிறு குழு வாதமாக மாற்றம் பெற்றுள்ள பரிதாபம்?) என்ற தலைப்பிலான கட்டுரையில் கிழக்கு அரசியல் குறித்த தனது கருத்துக்களை மேலும் பதிவிட்டுள்ளார். 

இவை அனைத்தையுமே அதன் ஆரம்பத்திலிருந்தே மிக அவதானமாகக் கருத்தூன்றிப் படித்தவன் என்ற வகையில் எனது கருத்துக்களையும் இது விடயமாக இங்கு பதிவிடுகின்றேன். 

சிவலிங்கம் அவர்களை நான் நேரடியாகச் சந்திக்காவிட்டாலும் அவரைப் பற்றி அறிவேன். முற்போக்குச் சிந்தனை உடையவர். இடதுசாரிக் கொள்கைகளின் மீது ஈர்ப்புக் கொண்டவர். நியாயங்களைப் புரிந்து கொண்டு ஏற்றுக்கொள்ளக் கூடிய மனப்பக்குவம் உடையவர். குறிப்பிடத்தக்க அரசியல் ஆய்வாளர். ஆனால், ‘கிழக்கு அரசியல்’ விடயத்தில் ஒரு முழுமையான வரலாற்றுப் புரிதல் இல்லாமல்தான் தனது 06.06.2021 அரங்கம் கட்டுரையை எழுதியுள்ளார் என்றே எண்ணத் தோன்றுகிறது. 

சிவலிங்கம் அவர்கள் தனது கட்டுரையில் “தமிழ் அரசியல் மிக அதிக அளவில் வடமாகாணத்தைச் சுற்றியே செல்கிறது. இதனால் கிழக்கு மாகாண அரசியல் தனித்துவிடப்படுவதும், இத்தாக்கங்களால் எழுந்துள்ள நிலைமைகளை தமிழ் அரசியல் வெறுமனே பிரதேச வாதமாகக் குறுக்குவதும் நிகழ்கிறது” என்று யாழ் மேலாதிக்கத்திற்கு அவரே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துவிட்டுப் பின்னர் அவரே கிழக்குத் தமிழர்கள் அவாவி நிற்கின்ற கிழக்கு மாகாணத்திற்கான தனித்துவ அரசியல் அணுகுமுறையை- பாதையை- வியூகத்தைப் பிரதேச வாதமாகப் பார்ப்பது முரண்பாடானதாகும் என்று சொல்லி, தன்னோடு தானே முரண்பட்டுக் கொள்கிறார். இது விடயத்தில் அதாவது கிழக்கு அரசியல் விடயத்தில் அவரிடமுள்ள தெளிவின்மையையே இது காட்டுகிறது. 

மேலும், தனது கட்டுரையில் பிறிதொரு இடத்தில், “….தற்போது தமிழ் அரசியலில் காணப்படும் கிழக்கு மாகாணம் சார்ந்த அரசியல் பிரதேசவாதம் என்ற அடையாளத்துக்குள் சென்றிருப்பது மிகவும் துர் அதிஸ்டமானது” என்று கூறி இரண்டாம் தரமும் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறார். 

அதாவது யாழ் மேலாதிக்கத்தின் இருப்பை ஏற்றுக்கொள்ளும் அவர் கிழக்கு மாகாணம் சார்ந்த அரசியல் பிரதேசவாதம் என்ற அடையாளத்திற்குள் சென்றிருப்பதாகக் கருதிக் கவலைப்படுகிறார். 

உண்மையில் கிழக்கு மாகாணம் சார்ந்த அரசியலின் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாத அல்லது அதனை ஏற்றுக் கொள்ள மறுக்கின்ற அல்லது அதனை விரும்பாத சக்திகளே குறிப்பாகத் ‘தமிழ்த் தேசியக் கட்சிகள்’ எனக் குறிசுடப்பட்டுள்ள கட்சிகளும் அக்கட்சிகளுக்கு வால் பிடிப்பவர்களுமே (சிவலிங்கம் அவர்களைக் குறிப்பிடவில்லை) அதனைப் பிரதேசவாதமெனப் பிழையாக அடையாளப்படுத்துகிறார்கள். 

சிவலிங்கம் அவர்களின் வரிகளைப் பார்க்கும் போது கிழக்கு மாகாணம் சார்ந்த தனித்துவமான அரசியலைத் தானும் நியாயமானதென ஏற்றுக்கொள்கிறார். ஆனால் அது பிரதேச வாதமாகப் பிறழ்வடைந்துவிடக்கூடாது என ஆதங்கப்படுகிறாரா? 

அதாவது வரலாற்றில் இலங்கைத் தேசிய வாதம் பௌத்த- சிங்கள பேரினவாதமாகப் பிறழ்வடைந்ததைப் போல அல்லது பௌத்த-சிங்களப் பேரினவாதத்திற்கு எதிரான தமிழ்த் தேசியவாதம் குறுந் தமிழ்த் தேசியவாதமாக மாறி இறுதியில் தமிழ்ப் பாசிச வாதமாகப் பிறழ்வடைந்ததைப் போல கிழக்கின் தனித்துவ அரசியலும் அவ்வாறு ஆகிவிடக் கூடாதென ஆதங்கப்படுகிறாரா? 

அப்படியாயின் சிவலிங்கம் அவர்களின் ஆதங்கத்தில் நியாயம் உண்டு.  

அத்துடன் வடபகுதி அரசியலைச் சமூக மாற்றத்திற்கான போராட்டக் களமாகவும் ஒரு இடத்தில் சான்றிதழ் வழங்குகிறார். வடக்கு அரசியல் என்று எதனை அவர் குறிப்பிடுகிறார் என்பதும் தெளிவில்லை. அதனால் அவரிடம் பின்வரும் கேள்விகளை விடுக்கலாமென விரும்புகின்றேன். சிவலிங்கம் அவர்கள் சுட்டும் வடக்கு அரசியல் என்பது,    

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகிய ‘தமிழ்த் தேசியக் கட்சி’ கள் என குறிசுடப்பட்டுள்ள கட்சிகளால் முன்னெடுக்கப்படும் அரசியலா? 

அல்லது 

‘மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி’ எனும் கொள்கைப் பிரகடனத்துடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் முன்னெடுக்கப்படும் இணக்க அரசியலா? 

அல்லது 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அங்கஜன் ராமநாதன் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த திருமதி விஜயகலா மகேஸ்வரன் போன்றவர்கள் ஈடுபடுகின்ற பேரினவாதக் கட்சிகளைச் சார்ந்த அரசியலா? 

இன்னோரிடத்தில் யாழ் மேலாதிக்க சிந்தனை மரணப்படுக்கையை நோக்கிச் செல்கிறது என்பதன் மூலம் யாழ் மேலாதிக்கச் சிந்தனையின் இருப்பை ஏற்றுக்கொள்கிறார். அது மரணப்படுக்கையை நோக்கிச் செல்வது குறித்த எந்த விளக்கங்களும் இல்லை. 

அதேவேளை, யாழ் மேலாதிக்க வாதத்தை மறுதலிக்க அல்லது நியாயப்படுத்த முயன்ற சிவலிங்கம் அவர்கள் தனது 06.06.2021 கட்டுரையின் இறுதிப் பகுதியில் யாழ் மேலாதிக்கத்தின் இருப்பை மீண்டுமொருமுறை ஏற்றுக்கொண்டு யாழ் மேலாதிக்கத்தை விட மோசமான மேலாதிக்கம் (அது என்னவென்று அவர் பெயரிடவில்லை) நாட்டின் சகல மக்களின் இருப்பிற்கும் அச்சுறுத்தலாக வளர்ந்து வருவதாகக் குறிப்பிடுகின்றார். 

தமிழ் அரசியலின் உள் முரண்பாடுகள் (யாழ் மேலாதிக்கம் உட்பட) பற்றிப் பேச வந்த அவர் இறுதியில் அந்த உள் முரண்பாடுகளைப் பெரிதுபடுத்தக் கூடாது என்ற தொனியிலேதான் தனது கட்டுரையை நிறைவு செய்கின்றார். 

இனி, இக்கருத்தாடல் களத்தின் இடையீடான (குறுக்கீடான) சிவலிங்கம் அவர்களின் 07.07.2021 கட்டுரைக்கு வருகிறேன். 

தமிழ் அரசியலின் உள் முரண்பாடுகளிலொன்றாக (அல்லது பலவீனங்களிலொன்றாக) யாழ் மேலாதிக்க வாதத்தை ஒப்புக்கொள்ளும் சிவலிங்கம் அவர்கள், யாழ் மேலாதிக்கத்தின் நீண்டகால இருப்பையும் அதனால் தமிழ்த் தேசிய அரசியலும் கிழக்குத் தமிழர் மட்டுமல்ல மலையகத் தமிழர்களும் (இதனுடன் வடக்கில் யாழ் குடாநாட்டுக்கு இப்பாலுள்ள கிளிநொச்சி மற்றும் வன்னிப் பிரதேச மக்களையும் சேர்த்துக்கொள்ளலாம்) பாதிக்கப்பட்ட வரலாற்றை ஆதாரபூர்வமாக எழுவான் வேலன்  ஒரு ஆய்வு நோக்கில் தனது கருத்தாடல் களங்களில் கூறிவருவதைப் ‘பலவீனமானதாகவும்’  ‘வெறுமனே கடந்த காலத்தோடு விவாதங்கள் தொடர்வதாகவும்’ நோக்குவது அவரது ஆரோக்கியமான பார்வையை வெளிப்படுத்தவில்லை. 

உலகிலே பெரும்பாலான சரியான முடிவுகள் யாவும் வரலாற்றுப் பின்புலத்திலேயும் கடந்தகால அனுபவங்களினூடாகப் பெறப்படும் பட்டறிவின் அடிப்படையிலுமே எடுக்கப்படுகின்றன. இதுதான் இயங்கியல் விதி. அவரே தேவையானதாகக்  கருதும் ‘எதிர்காலப் பாதை ஒன்றிற்கான விவாதங்களை’ வழிநடாத்த ‘கடந்த காலத்தை நோக்கிய விவாதங்களும்’ தேவையானவையே. இந்தத் தேவையைத்தான் எழுவான் வேலனின் கருத்தாடல் களத்தொடர் நிறைவேற்றி வைக்கின்றது. இதில் சிவலிங்கம் அவர்கள் தவறு காண்பது ஏற்புடைத்தல்ல. 

மேலும், தனது 07.07.2021 கட்டுரையில் ‘கிழக்கு மாகாணத்திற்கான தனித்துவமான அரசியல் அணுகுமுறையின் அவசியம் மிகவும் உணரப்பட்ட போதிலும்’ எனக்கூறும் சிவலிங்கம் அவர்கள் அதே உணர்வோடு எழுவான் வேலனின் கட்டுரைகளைப் படிக்கத் தவறிவிட்டார் என்றே எண்ணத் தோன்றுகிறது. 

மட்டுமல்லாமல், ‘கிழக்கு மாகாண அரசியல் சமீபகாலமாக புதிய அரசியல் பாதையை நோக்கிச் செல்வதன் அவசியமும் அதற்கான முன்னெடுப்புகளும் உருவாவதை அவதானிக்க முடிந்தது’ என உடன்பாட்டு ரீதியாகக் கூறும் சிவலிங்கம் பின் எதிர்மறையாக ‘இவை இன்றுள்ள இனவாதச் சூழ்ச்சி’ என்கிறார். 

இனவாதச்  சூழ்ச்சிகள் இன்று நேற்று ஏற்பட்டதல்ல. மகாவம்சக் காலத்திலிருந்தே அவை கட்டமைக்கப்பட்டதாகும். கிழக்கு மாகாணத் தமிழர்களைப் பொறுத்தவரை கடந்த எழுபது வருடங்களுக்கும் மேலாக யாழ் மேலாதிக்க வாதத்தைக் கண்டும் காணாதது போல் அதனைப் புறமொதுக்கிவிட்டுத்தான் ஒட்டுமொத்தத் தமிழ்த் தேசிய அரசியலில் பங்களிப்புச் செய்து வந்துள்ளனர். ஆனால், நடைமுறையில் தமிழ்த் தேசிய அரசியலை வழிநடாத்திய யாழ் மேலாதிக்க மேட்டுக்குடிக் குட்டி முதலாளித்துவ வர்க்கம் ‘இளநீர் குடிக்க’, யாழ் குடாநாட்டுக்கு வெளியே கிளிநொச்சி மற்றும் வன்னிப் பிரதேச மக்களுடன் கிழக்குமாகாணத் தமிழர்களும் இணைந்த விவசாய மனோபாவம் கொண்ட விளிம்புநிலை மக்கள் ‘கோம்பை சுமந்த’ பட்டறிவின் அடிப்படையில்தான் கிழக்குத் தமிழர்களுக்கான தனித்துவ அரசியல் சிந்தனைகள் மேற்கிளம்பினவே தவிர இது இனவாதச் சூழ்ச்சி அல்ல. 

மேலும், சிவலிங்கம் அவர்கள் தனது 07.07.2021. கட்டுரையில் குறிப்பிடுவது போன்று ‘கிழக்கு அரசியல்’ என்பது வெறுமனே அபிவிருத்தியை மட்டுமே நோக்கமாகக் கொண்டதல்ல. இது கிழக்குத் தமிழர்களின் சுயாதீனம், தனித்துவம்- யாழ் மேலாதிக்கப் பிடியிலிருந்து தம்மை விடுவித்தல்- தமது சமூக பொருளாதார அரசியல் விடயங்களில் தாமே தீர்மானங்களை மேற்கொள்ளல்- கிழக்கின் தனித்துவமான கலை இலக்கியப் பண்பாட்டுப் பாரம்பரியங்களை புறத்தாக்கங்களிருந்து பாதுகாத்துப் பேணி வளர்த்தெடுத்து அடுத்த தலைமுறைக்கு மடை மாற்றம் செய்தல் போன்ற அக வயப்பட்ட அபிலாசைகளையும் உள்ளடக்கியதாகும். 

இதனைப் புரிந்துகொள்ள முடியாத சிவலிங்கம் அவர்கள் கிழக்கு அரசியலைக் கடந்த காலத்தில் தேவநாயகம், ராஜன் செல்வநாயகம், கனகரத்தினம், இராசதுரை போன்றவர்களினதும் தற்போது வியாழேந்திரன், சந்திரகாந்தன் (பிள்ளையான்), முரளிதரன் (கருணா அம்மான்) ஆகியோரினதும் அரசியற் செயற்பாடுகளை அடிப்படையாக வைத்து நோக்குவதைப் பார்த்தால் கிழக்கு அரசியல் பற்றிய சிவலிங்கம் அவர்களின் புரிதல் பூச்சியம்தான் போலுள்ளது. மேற்கூறப்பட்டவர்கள் முன்னெடுத்த/ முன்னெடுக்கும் அரசியல் வேறு. கிழக்கு அரசியலென்பதன் அரசியல் தத்துவார்த்தத் தளமும் அதன் அர்த்தமும் நோக்கமும் வேறு.  

ஆழமான அரசியல் ஆய்வாளர் என்று கருதப்படும் சிவலிங்கம் அவர்கள் கிழக்கு அரசியலைப் பார்த்த பார்வை  மிகவும் மலினமாகப்படுகிறது. அவரது இந்த மலினப்பார்வை அவரது ஆய்வறிவையே கொச்சைப்படுத்துகிறது. 

‘கிழக்கு மாகாணத்தின் தனித்துவமான நிலைமைகள் ஓர் தந்திரோபாய அரசியல் மாற்றத்தை வேண்டி நிற்கின்றன’ எனக்கூறும் சிவலிங்கம் அவர்கள் அம் மாற்றத்திற்கான முன்னெடுப்புக்களைச் சீரணித்துக்கொள்ளத் தயங்குவதன் காரணமென்ன? புரியவில்லையே. 

கிழக்கு அரசியலைச் சிவலிங்கம் அவர்கள் ‘எதிரிகளை உற்பத்தி செய்யும் அரசியலாக’ – ‘குறுகிய அடிப்படைகளைக் கொண்டதாக’ – ‘ஒரு சிறு குழுவினரின் சந்தர்ப்பவாத அரசியலை மறைத்துச் செல்லும் வகையிலான உணர்ச்சியூட்டும் தந்திரங்களாக’ – ‘தேர்தல் அரசியலுக்கு அதாவது வாக்கு வங்கி அரசியலுக்கு உதவுவதாக’- ‘ஏற்கெனவே காலாவதியாகி எச்ச சொச்சங்களெல்லாம் வலம்வரும் கருத்தியல்களை முன்னிறுத்தி உணர்ச்சி அரசியலைத் தூண்டும் முயற்சிகளாக’ச் சித்தரிப்பது கிழக்கு அரசியலின் வரலாற்றுப் பின்புலத்தையும் அதன் தாற்பரியத்தையும் அதன் தத்துவார்த்தத் தளத்தையும் அறவே விளங்கிக் கொள்ளாத அவரது அறியாமையையே காட்டுகிறது. தன்னுணர்ச்சி அவரது அறிவுக் கண்களை மறைத்து விட்டதுபோலும். 

சிவலிங்கம் அவர்களின் 06.06.2021 மற்றும் 07.07.2021 ஆகிய இரு கட்டுரைகளினதும் உள்ளடக்கங்களை ஒட்டுமொத்தமாக எடுத்து நோக்கும்போது கிழக்கு அரசியல் குறித்து அவருக்குத் தெளிவில்லை என்ற அனுமானத்திற்கே வரவேண்டியுள்ளது. சிலவேளை இந்த அனுமானம் தவறாயின், கிழக்கு அரசியலின் நியாயத்தை அவருடைய மனச்சாட்சி ஏற்றுக்கொள்கிறது. ஆனால் பகிரங்கமாகப் பொதுவெளியில் அதனை வெளிப்படுத்துவதற்கு அல்லது ஏற்றுக் கொள்வதற்கு அவரது ‘யாழ்’ உணர்வு அல்லது ‘தமிழ்த்தேசிய’ (?)’ உணர்வு தடுக்கிறது என்றே எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. 

இப்பத்தியின் நிறைவாக ஒரு வேண்டுகோள். எழுவான் வேலன் ஆரம்பித்திருக்கும் கருத்தாடல் களவரிசை முற்றுப்பெறும் வரை காத்திருந்து அதன் பின் அவரது கருத்துக்களை ஒட்டுமொத்தமாக நோக்கிச் சிவலிங்கம் அவர்கள் தனது கருத்துக்களை (வாதங்களை) முன் வைப்பதே விரும்பத்தக்கது. இடையீட்டைத் (குறுக்கீட்டைத்) தவிர்ப்பது நன்று.