— கருணாகரன் —
(இனவன் முறையினால் வடக்கு நோக்கி வந்த மலையக மக்களுக்கான நீதி இன்னும் கிடைக்கவில்லை. அவர்கள் நம்பி வந்த தமிழ்ப் பிரதேசங்களிலேயே புறக்கணிக்கப்படுகிறார்கள். பல வழிகளிலும் ஒடுக்கப்படுகிறார்கள். அரச நிர்வாகம் தொடக்கம் வளப்பகிர்வு, சமூக நிலை எனப் பல வகையிலும் இது தொடர்கிறது. இந்த மக்களுடைய பிரச்சினைகளைக் குறித்து இதுவரையிலும் கவனத்திற்குரிய மைய உரையாடல்களோ ஆய்வுகளோ நடக்கவில்லை. இந்தக் கட்டுரைத் தொடர் அதனைப் பொதுவெளியில் தொடக்கி வைக்கிறது.)
“நீதி வழங்கப்படாததையும் விட மோசமானது, நீதியைப் பற்றிய பசப்பு வார்த்தைகளாகும்”
(அறிமுகம்)
(01)
தென்னிலங்கையிலிருந்து வடக்கு நோக்கி வந்த மலையக மக்களின் தொடரும் பிரச்சினைகள், அவர்களுடைய சமூக பொருளாதார நிலைமைகள் மற்றும் அவர்கள் எதிர்கொள்கின்ற சவால்களைக் குறித்த உரையாடல்கள் அண்மைக்காலத்தில் சற்று உரத்த குரலில் கேட்க ஆரம்பித்துள்ளன. இது கொஞ்சம் ஆறுதலான விசயம். ஆனால் நிறைவடையக் கூடியதல்ல. ஏனென்றால் இன்னும் கூட அவர்களும் அவர்களுடைய பிரச்சினைகளும் அவர்களுடைய சமூக பொருளாதார நிலைமை, பண்பாடு போன்றவையும் மைய உரையாடலுக்குட்படுத்தப்படவில்லை. இப்போது நடக்கும் உரையாடல்கள் கூட மிகச் சிறியதொரு வட்டத்தினராலேயே மேற்கொள்ளப்படுகிறன. மைய உரையாடற் பரப்பிற்கு இந்த விசயம் வருவதற்கு இன்னும் நீண்ட நெடும்பயணம் செய்ய வேண்டும். அது சாதாரணமானதல்ல. கடினமான பயணம்.
ஏனென்றால் மலையக மக்களை யாழ்ப்பாணத் தமிழ்ச் சமூகம் நோக்குகின்ற விதம் அப்படியானது. அவர்களைத் தங்களுக்கு அப்பாலான –பிறத்தியாராகவே நோக்கி வருகிறது அது. அதாவது தங்களையும் விட குறைவானோர் – கீழானோர் என்ற நோக்கில். இதில் எல்லாச் சாதி, சமூகப் பிரிவினரும் ஒரே மாதிரியே செயற்படுகின்றனர். அதாவது தாங்கள் வேறு. அவர்கள் வேறு என்ற விதமாக.
இந்த வேற்றுமை நிலையை அகற்றுவதற்கு இந்த உரையாடல்கள் நல்லதொரு பங்கை ஆற்றும் என்று நம்பலாம். இங்கே இதைக்குறித்துப் பேச முற்படும்போது இன்றைய சூழலில் இது அவசியமற்ற ஒன்று எனப் பலரும் வாதிடக் கூடும். இதற்கான காரணமாக அவர்கள் சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறைக்கு இந்த உரையாடல்களும் இந்த விசயத்தை முன்னெடுத்துப் பேசுவதும் வாய்ப்பளிப்பதாக அமைந்து விடும். தமிழ்த்தேசிய வாதத்தையும் தமிழ்த்தரப்பையும் இது பலவீனப்படுத்தக் கூடும் என்றெல்லாம் கூறக்கூடும். ஆனால் இந்தக் காரணங்கள் ஏற்கக் கூடியவையல்ல. ஏனெனில் இந்த மக்களோ இந்த விசயத்தைப் பேசுகின்றவர்களோ ஒரு போதுமே அப்படியான எதிர்நிலை மனப்பாங்கோடும் சிந்தனையோடும் இதை முன்னெடுக்கவில்லை.
மாறாக நீண்ட காலமாகவே இந்தப் பிரச்சினை பேசப்படாது தந்திரமாகக் கடந்து செல்லப்படுகிறது. தொடர்ந்து புறக்கணிப்பும் ஒடுக்குமுறையும் நிகழ்த்தப்படுகிறது. பண்பாடு, பொருளாதாரம், சமூக நிலை போன்றவற்றில் ஒடுக்குப்படுவது, சுரண்டப்படுவது மட்டுமல்ல, அரசியல் ரீதியாகவும் இவர்கள் சுரண்டப்படுகிறார்கள். அதுவும் இரட்டை ஒடுக்குமுறையாக, இரட்டைச் சுரண்டலாக. ஒன்று தமிழ்த்தரப்பினால். மற்றது சிங்கள அதிகாரத் தரப்பினால். இதை நேரடியாகவே சொல்வதாக இருந்தால் சமூக பொருளாதார ரீதியில் கூலிகளாக நடத்தப்படுவது மட்டுமல்ல அரசியற் கூலிகளாகவும் இவர்கள் நடத்தப்படுகிறார்கள். இப்படி கூலிகளாக நடத்தப்படுவதும் சுரண்டப்படுவதும் எந்த வகையில் ஏற்றுக் கொள்ளக் கூடியது? இதற்கு என்ன நியாயமுண்டு? இதை மாற்றியமைப்பதற்கு யார் தயார்? அந்தத் தரப்புகளை யாராவது அடையாளப்படுத்த முடியுமா?
இதற்கு யாரும் பொருத்தமான பதிலைத் தரப்போவதில்லை. எனவேதான் இதைப் பொது உரையாடற் பரப்பிற்கு எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது.
(02)
இந்த மக்கள் 1958இலிருந்து வடக்கே வந்தவர்கள். முதலாவது வருகை 1958 இனவன்முறையினால் நிகழ்ந்தது. அடுத்த பெரிய வருகைகள் 1977, 1983 ஆகிய ஆண்டுகளில் நடந்த இன வன்முறையினால் ஏற்பட்டவை. இந்த மூன்று பெரு வருகைகளிலும் ஏறக்குறைய மூன்று லட்சம் மக்கள் வரையில் கட்டம் கட்டமாக வடக்குக்கு வந்தனர். வடக்குக்கு என்றால் கிளிநொச்சி, வவுனியா மற்றும் மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு.
இந்த வன்முறைகளின்போதெல்லாம் தெற்கிலிருந்து (மேற்கு மற்றும் மத்திய, வடமத்திய, ஊவா மாகாணங்கள் உள்ளடங்கலாக) வடக்கு நோக்கி வந்த ஏனைய தமிழர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று விட்டனர். அல்லது உறவினர்களின் இடங்களுக்குச் சென்றனர். பெரும்பாலும் யாழ்ப்பாணத்துக்குச் சென்று விட்டனர். இதற்கு நல்லதொரு உதாரணம், 1977 வன்முறையினால் அகதியான தமிழர்களைக் கொழும்பிலிருந்து காங்கேசன்துறைக்கு ஏற்றி வந்த லங்கா ராணி என்ற கப்பலை மையமாக வைத்து எழுதப்பட்ட அருளரின் நாவல். நாவலின் பெயரும் “லங்கா ராணி”யே.
ஆனால், மலையக மக்கள் என்ற இந்திய வம்சாவழியினராக இருந்தவர்கள் அப்படிச் செல்ல முடியவில்லை. அவர்களுக்கு ஏற்கனவே வடக்கில் சொந்த ஊர்களிருக்கவில்லை. உறவினர்களும் இருக்கவில்லை. இதனால் கிளிநொச்சியிலும் வவுனியாவிலும் இறக்கப்பட்டனர். சிறிய எண்ணிக்கையானோர் முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்களெல்லாம் பின்னர் இந்த இடங்களிலேயே குடியமர்த்தப்பட்டனர். சிலர் தாமாகவே அங்கங்கே தமக்கு வசதிப்பட்ட இடங்களில் குடியேறினர். வேறு வழி இருக்கவில்லை.
இந்தக் குடியமர்த்தலானது அநேகமாகச் சட்டபூர்வமாக நடக்கவில்லை. ஆகவே கிடைத்த இடத்தில் குந்துவோம் என்று குடியேறினார்கள். ஒரு சிறிய தரப்பினருக்கே காணிகள் கிடைத்தன. ஏனையோர் அரச காணிகளைப் பிடித்துக் குடியேறினா். அதற்கே ஏராளம் கெடுபிடிகளை நிர்வாக ரீதியில் சந்தித்தனர்.
1958இல் வந்த முதலாவது வருகையினருக்கு பரந்தன் –முல்லைத்தீவு வீதியிலுள்ள தருமபுரம் என்ற இடத்தில் நிலம் வழங்கப்பட்டது. இதில் 680 குடும்பங்கள் குடியேறக் கூடியதாக இருந்தது. அப்பொழுது அது காட்டுப்பகுதி. காடென்றால் பெருங்காடு. யானையும் கரடியும் பாம்பும் உள்ள காடு. அதை இவர்கள் வெட்டித் துப்புரவு செய்தே குடியேறினார்கள். தண்ணீரை எடுப்பதே அப்போது பெரிய பிரச்சினையாக இருந்தது. சுற்றயல்களிலும் குடியிருப்புகளோ கிராமங்களோ இருக்கவில்லை. ஆகவே தனித்தே எல்லா நெருக்கடிகளையும் எதிர்கொள்ளவேண்டியிருந்தது. வேறு வழியில்லை. எந்த நிலையையும் சமாளித்தே – எதிர்கொண்டே ஆக வேண்டும் என்ற நிலை தொடர்ந்தது. ஆகவே எல்லாத் துயரங்கள், அவலங்களையும் சமாளித்துக் கொண்டே குடியேறினார்கள்.
பிறகு 1977, 1983 ஆகிய ஆண்டுகளில் வந்தவர்கள் விசுவமடு – ரெட்பானா, உழவனூர், கிளிநொச்சி தெற்கில் இப்போதுள்ள தொண்டமான் நகர், செல்வாநகர், மலையாளபுரம், பாரதிபுரம், கிருஸ்ணபுரம், அம்பாள்குளம், உதயநகர், புதுமுறிப்பு, ஊற்றுப்புலம், கோணாவில், மணியங்குளம், ஆனைவிழுந்தான், ஜெயபுரம், இயக்கச்சி போன்ற இடங்களில் குடியமர்த்தப்பட்டனர். இதைப்போல வவுனியாவில் கன்னாட்டி, செட்டிகுளம், …….போன்ற கிராமங்களிலும் நெடுங்கேணியில் டொலர் பாம், கென்பாம், நாவலர் பண்ணை உள்ளிட்ட பகுதிகளிலும் முல்லைத்தீவில் மன்னாகண்டல், முத்தையன்கட்டு போன்ற இடங்களிலும் குடியமர்த்தல் செய்யப்பட்டனர். அதிகமாக தாமாகவே காடுகளை வெட்டிக் குடியேறினார்கள் என்றே சொல்ல வேண்டும்.
இதைத் தவிர ஒரு தொகுதியினர் வேலை வாய்ப்பு உள்ளிட்ட பிற தேவைகளைக் கருதி வயல் நிலங்களை அண்டிய பகுதிகளில் குடியமர்த்தப்பட்டனர். இந்த வயல் நிலங்கள் அனைத்தும் யாழ்ப்பாணத்தவர்களுக்கும் யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி,நெடுங்கேணி, வவுனியா, கன்னாட்டி போன்ற இடங்களில் ஏற்கனவே அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட குடியேற்றத்திட்டங்களின் மூலமாகக் குடியேறியேருக்கும் சொந்தமானவை. ஆகவே இங்கே இவர்கள் கூலிகளாகவே குடியேற்றப்பட்டனர். இன்னும் இவர்களுடைய தலைமுறைகள் இங்கு காணியற்ற நிலையிலேயே உள்ளனர்.
ஏனையோரும் கூலிகளாகவே இங்கே தங்களை ஒழுங்கமைத்துக் கொள்ள வேண்டியதாயிற்று. தாங்களாக வெட்டித் துப்புரவு செய்த காணிகளில் குடியிருந்தாலும் தொழிலுக்காக இவர்கள் நிலக்கிழார்களையே தஞ்சமடைய வேண்டியிருந்தது. ஏனென்றால் இவர்களுடைய குடியேற்றமானது அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்ட முறையில் மேற்கொள்ளப்படவில்லை. அதற்குரிய வளங்கள் வழங்கப்படவுமில்லை.
அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்ட குடியேற்றங்கள் என்றால் அதற்கு தொழில் வாய்ப்பு உட்பட அடிப்படைக் கட்டுமானங்கள் அத்தனையும் இருக்கும். குறிப்பாக நீர்ப்பாசனம், வீட்டு வசதி, பாசன நிலம் (வயல்) சிறுதானியப் பயிர்ச்செய்கைக்கும் குடியிருப்புக்குமான மேட்டு நிலம், பாடசாலைகள், பஸ் போக்குவரத்து, கமநல சேவைகள் நிலயம், வீதி மற்றும் வடிகாலமைப்பு வசதிகள், விளையாட்டு மைதானம், மருத்துவமனை, பொதுச் சந்தை என அடிப்படை வசதிகள் இருக்கும். இதைப் பெற்றுக் குடியேறியவர்கள் யாழ்ப்பாணத்தவர்கள். இவர்கள் தீவுப் பகுதியைச் சேர்ந்தவர்களும் மாதகல், வட்டுக்கோட்டை, பளை, கோப்பாய், இடைக்காடு, பருத்தித்துறை, தென்மராட்சி, காரைநகர் போன்ற இடங்களைச் சேர்ந்தவர்களாகும்.
இந்த மலையக மக்கள் அங்கீகரிக்கப்படாத குடியேற்ற வாசிகள் என்பதால் இவர்கள் சுயாதீனமாகக் காடுகளை வெட்டிக் குடியிருப்புகளை அமைத்ததால் இந்த வசதிகள் எதுவும் இவர்களுக்குக் கிடைக்கவில்லை. என்பதால் இவர்கள் இந்தப் பிரதேசங்களில் – காடுகளின் மத்தியில் –சிறிய குடிசைகளைப் போட்டுக் கொண்டு குடியிருந்தனர். தண்ணீருக்கு மிக மிகச் சிரமப்பட்டனர். இவர்களுடைய பிரதேசம் நீர்ப்பாசனத்துக்கு வெளியே –மேட்டுப்பகுதியில் இருந்ததால் தண்ணீரைக் காண்பதே அபூர்வமாக இருந்தது. இவ்வளவுக்கும் இவர்களே இந்த மாவட்டங்களில் உள்ள கிணறுகளை கடந்த ஐம்பது ஆண்டுகளாத் தோண்டியவர்கள். ஆனால் தங்களுக்கு ஒரு கிணறு இல்லாத நிலையில் வாழ்ந்தனர். பின்னர் மெல்ல மெல்ல தங்கள் காணிகளிலேயே கிணறுகளைத் தோண்டினாலும் இந்தக் கிணறுகள் மண் கிணறுகளாகவே இருந்தன. இந்த மண் கிணறுகள் ஆபத்தானவை. ஆண்டுதோறும் இந்தக் கிணறுகளில் தவறி விழுவோரின் தொகை கூடிக் கொண்டேயிருந்தது. நீரும் சுத்தமானதில்லை. வேறு வழியின்றி இவற்றையே பயன்படுத்த வேண்டியிருந்தது.
இதைப்போல வயல்களில் வேலை செய்வோரின் வீடுகள் வருடத்தின் பெரும்பாலான நாட்களிலும் பசியிலும் பட்டினியிலுமே வெந்தது. மாரி மழை வெள்ளத்தில் மூழ்கியது. பாம்புகளும் பன்றியும் யானையும் விரட்டின. ஆனாலும் வேறு கதியில்லை. இதற்குள்தான் வாழ வேண்டும் என்ற விதி. மலையகத்தில் எப்படிக் கொத்தடிமை நிலை இருந்ததோ அதை ஒத்த – அதையும் விட மோசமான நிலையே இங்கே நிலவியது. அங்கே தொழிற்சங்கங்களாவது இருந்து ஏதோ சாட்டுக்காவது குரல் கொடுத்தன. இங்கே குரலற்ற மனிதர்களாகவே கிடந்துழல வேண்டியதாயிற்று.
(தொடரும்)