— எழுவான் வேலன் —
‘பிரதேசவாதமா ஜனநாயகப் பற்றாக்குறையா? (தமிழ் அரசியலை முன்னோக்கி நகரவிடாது தடுக்கும் உள்முரண்பாடுகள்)‘ எனும் வி.சிவலிங்கம் அவர்களுடைய கட்டுரை அரங்கம் மின்னிதழ் 06.06.2021 அன்றைய இதழில் பதிவிடப்பட்டிருந்தது (https://arangamnews.com/?p];uP5235) அக்கட்டுரைக்கான கருத்தாடல் களம் 05 இதுவாகும்.
1950ம் ஆண்டுகள் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் முக்கியத்துவம் மிக்க ஆண்டுகளாகும். 1948ல் தமிழ் காங்கிரசிலிருந்து எஸ்.ஜே.வி.செல்வநாயகம் பிரிந்து சென்று தமிழரசுக் கட்சியை ஆரம்பித்திருந்தாலும் 1950களில் இருந்தே அவருடைய பிரச்சாரத்தினை தீவிரமாக முன்னெடுத்தார். இதேபோன்று 1951இல் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கா ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வெளியேறி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினை உருவாக்கினார்.
இவ்வாறு இரு இனங்களின் இரு கட்சிகளுக்கிடையே பிளவு ஏற்பட்டதனால் தமிழ் காங்கிரஸ் எதிர் தமிழரசுக் கட்சி என்றும் ஐக்கிய தேசியக் கட்சி எதிர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்றும் தங்களுக்கிடையிலான ஒரு போட்டி அரசியல் உருவாக்கப்பட்டது. இந்தப் போட்டி அரசியலில் விளையாடப்பயன்படுத்தப்பட்டவர்கள் சிங்கவர், தமிழர் என்ற இரு இனங்களாகும். ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்ற இரு சிங்களக் கட்சித்தலைவர்களில் யார் தமிழர்களை அதிகம் எதிர்த்து அவர்களைப் புறந்தள்ளக் கூடியவர் என்றும் தமிழ் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி என்ற இரு தமிழ்க் கட்சித்தலைவர்களில் யார் சிங்களவர்களை அதிகம் எதிர்த்து அவர்களைப் புறந்தள்ளக் கூடியவர் என்பதே இங்கு போட்டியாக இருந்தது. இதற்காக மக்களை அதிகம் உணர்ச்சிவசப்படுத்தக் கூடிய இனம், மதம், நாடு, மொழி, தேசியம் போன்ற அடையாளங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டன. நான்கு கட்சிகளுமே இவற்றைப் பாதுகாத்துப் பேணுவதாகக் கூறினாலும் யாரை நம்புவது என்பதே பிரச்சினையாக இருந்தது. இந்த நம்பிக்கையினைக் கட்டியெழுப்புவதற்காக போட்டிபோட்டுக் கொண்டு இனவாத செயற்திட்டங்களை முன்மொழிந்து மக்களுடைய இனவாத உணர்வைக் கூர்மைப்படுத்தினர்.
சிங்களத் தலைவர்களால் எடுக்கப்பட்ட தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அனைத்தும் இந்தப் பின்னணியிலே எடுக்கப்பட்டன. அதனை எதிர் கொண்ட தமிழ்த் தலைமைகள் இதனை இலங்கை மக்களுக்கு விளக்கி பதவிகளுக்காக இனங்களுக்கிடையில் பகைமையை ஏற்படுத்துவதை அம்பலப்படுத்தியிருந்தால் அன்று சிங்கள மக்களிடம் செல்வாக்குப் பெற்று விளங்கிய இடதுசாரிகளும் தமிழ்த் தலைவர்களுடன் ஒன்றித்து இலங்கையின் இனவாதத்தை முளையிலே கிள்ளி இருக்க முடியும். ஆனால் தமிழ்த் தலைவர்கள் இதை விடுத்து சிங்கள இனவாதத்துக்கு எதிராக தமிழ் இனவாதத்தை வளர்த்து அதன் மூலம் தங்களுக்கான பதவிகளைப் பெற்றுக் கொண்டார்கள். அப்பாவித் தமிழ், சிங்கள மக்கள் பலிக்கடாவாக்கப்பட்டார்கள்.
1951ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சியின் முதலாவது மகாநாடு திருகோணமலையில் நடைபெற்றது. அம் மகாநாட்டில் ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அத் தீர்மானங்கள் தமிழ் மக்களை கவர்ந்து உணர்ச்சியேற்றி தங்கள் தலைமையில் ஒன்று சேர்த்து அதிக பாராளுமன்ற ஆசனங்களைப் பெறும் நிகழ்சித்திட்டத்தினையே கொண்டிருந்தன.
உதாரணத்திற்கு இரண்டாவது தீர்மானம் ‘இலங்கை சமஷ்டிக் கூட்டாட்சி அமைப்பு ஒன்றின் கீழ் ஒரு சுயாதீன மொழிவாரித் தமிழ் அரசை நிறுவுவதன் மூலம் தமது சுதந்திரத்தினைக் கோருமாறும் அச் சுதந்திரத்தை ஈட்டுவதற்குத் தளராது உழைக்குமாறும் இம்மாநாடு, இத் தீவகத்திலுள்ள தமிழ் பேசும் மக்களை அவர்களுடைய இனத்தினுடைய பெயராலும், அவர்களதும், அவர்களது குழந்தைகளினதும் தன்மானத்தின் பெயராலும் அழைக்கிறது‘ (மேற்கோள் த.சபாரெத்தினம்)
இதனைத் தமிழ்த் தேசியத்தின் பிறப்பாகவும் கொள்ளலாம். தமிழ் மக்கள் தங்கள் அடக்குமுறையின் வன்மத்தை உணர்ந்து அதற்கெதிரான ஒன்றுபட்ட திரளுகைக்கூடான ஒரு வரலாற்று நிர்ப்பந்தமாக இந்தத் தேசியம் பிறக்கவும் இல்லை. தமிழ்த் தேசியம் அரசியல்வாதிகளின் தேவைக்காக அவசர அவசரமாக நடந்த அறுவைச் சிகிச்சைப் பிரசவம் ஆகும். குறைமாதப் பிரசவம் ஆகையால் அதை சரியானமுறையில் வளர்த்தெடுக்கவும் முடியாமல் போய்விட்டது. சுயநலத்தினால் வந்த அவசரத் தன்மை காரணமாக தமிழ்த் தலைவர்களின் கோரிக்கைகளும் வார்த்தைப் பிரயோகங்களும் தமிழ் தேசிய இனத்தின் சுயநிர்ணயக் கோரிக்கையினை அல்லாது அதன் பெயரில் தமிழ் அரசுப் பிரிவினையையே முக்கியப்படுத்துகின்றது. ஒட்டு மொத்த தமிழ் மக்களின் சார்பாக இவ்வாறானதொரு பிரகடனத்தைச் செய்வதற்கான ஆணையை தமிழரசுக் கட்சிக்கு வழங்கியது யார் என்ற கேள்வி எழுகின்றது. ஏனெனில் தனிச் சிங்களச் சட்டம் 1956ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும்வரை கிழக்கில் தமிழ் காங்கிரஸ் கட்சியோ அல்லது தமிழரசுக் கட்சியோ காலூன்ற முடியவில்லை. யாழ்ப்பாணத்திலும் கூட கம்யூனிஸ்ட் கட்சியினாலும் சுயேட்சை வேட்பாளர்களினாலும் மேற்படி தமிழ் கட்சிகளின் வேட்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டிருந்தார்கள். இவ்வாறான நிலையில் யாழ் உயர் வர்க்கம் தனது நலனுக்காக ஒட்டு மொத்த தமிழர்களையும் ஒரு யுத்த வேள்விக்கு தள்ளுவதற்கான முதலாவது அறைகூவலாகவே இதைப் பார்க்கவேண்டியுள்ளது.
தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை தொடர்பாக மாக்சிச லெனினியம் பின்வருமாறு கூறுகின்றது. ‘பூர்ஷ்வா –ஜனநாயகப் புரட்சியானது ஒரு குறிப்பிட்ட தேசிய இனம் இன்னொரு தேசிய இனத்திலிருந்து பிரிந்து போவதில் முடியுமா அல்லது அதனுடன் சம அந்தஸ்து பெறுவதில் முடியுமா என்பதை முன்கூட்டியே யாரும் சொல்ல முடியாது, முடிவு இரண்டில் எதுவானாலும் தனது வர்க்கத்தின் அபிவிருத்திக்கு வழிசெய்வதுதான் பாட்டாளி வர்க்கத்துக்கு முக்கியமானது. பூர்ஷ்வா வர்க்கத்துக்கோ, ‘தன்னுடைய சொந்த‘ தேசிய இனத்தின் குறிக்கோள்களைப் பாட்டாளி வர்க்கத்தின் குறிக்கோள்களுக்கு முந்தியதாக வைத்து இந்த அபிவிருத்தியைத் தடைசெய்ய வேண்டும் என்பதுதான் முக்கியம். எனவேதான் பாட்டாளி வர்க்கமானது எந்தத் தேசிய இனத்துக்கும் உத்தரவாதங்கள் அளிக்காமல், இன்னொரு தேசிய இனத்துக்குப் பாதகமான முறையில் எதையும் செய்வோம் என்று உறுதி கூறாமல், சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என்ற எதிர்மறைக் கோரிக்கையுடன் மட்டும் தன்னை நிறுத்திக் கொள்கிறது.
இது ‘செயல் பூர்வமானதாக‘ இல்லாமல் இருக்கலாம், ஆனால் சாத்தியமான தீர்வு அனைத்திலும் மிகவும் ஜனநாயகமான தீர்வு ஒன்றைப் பெறுவதற்கு இது ஒன்றுதான் நடைமுறையில் சிறந்த உத்தரவாதமளிக்கிறது. பாட்டாளி வர்க்கத்துக்கு அத்தகையதொரு உத்தரவாதம்தான் தேவை, ஆனால் எந்த ஒரு தேசிய இனத்தைச் சேர்ந்த பூர்ஷ்வா வர்க்கத்துக்கும், மற்ற தேசிய இனங்களின் நிலைமை (அல்லது அவைகளுக்கு நேரக்கூடிய பிரதிகூலம்) எதுவாயிருப்பினும் தனது சொந்த நலன்களுக்கு வேண்டிய உத்தரவாதங்கள் மட்டும்தான் தேவை.‘ (வி.இ.லெனின்)
மிகத் துல்லியமாக தீர்க்கதரிசனத்துடன் லெனினால் கூறப்பட்ட பூர்ஷ்வா வர்க்கத்தின் குணயியல்புகளை எமது தமிழ்த் தேசியப் பிரச்சினையை யாழ் பூர்ஷ்வா வர்க்கம் எவ்வாறு பயன்படுத்திக் கொண்டு வந்திருக்கிறது என்பதை வரலாறு முழுவதிலும் காணக்கூடியதாக இருக்கின்றது.
இன்னொரு வகையில் கூறுவதாயின் மாக்சிச லெனினியம் கூறும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையினை தனது நலனுக்காக யாழ் உயர் வர்க்கம் திரிவுபடுத்தி பிரிவினையைத்தான் பிரதானப்படுத்தினார்களே தவிர சம உரிமையுடன் கூடிய வாழ்வை பிரதானப்படுத்தவில்லை என்பது மேற்படி தமிழரசுக் கட்சியின் தீர்மானத்திலிருந்து தெளிவாகின்றது.
தமிழ் காங்கிரஸ் யாழ்ப்பாண மக்களிடம் பெற்றிருந்த செல்வாக்கு எஸ்.ஜே.வி.யின் தந்திரமான செயற்பாட்டினால் பறிபோய்விடுமே என்றஞ்சிய ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்கள் ‘1952ஆம் ஆண்டுத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழரசுக் கட்சியினர், தமது கட்சிக்கு ஆங்கிலத்தில் சமஸ்டிக் கட்சி என்றும், தமிழில் இலங்கைத் தமிழரசுக் கட்சி என்றும் இரு வேறுபட்ட பெயர்களைச் சூட்டி, இரட்டை வேடமிடுகின்றனர் என நிறுவ முயன்றார். இலங்கைத் தமிழரசுக் கட்சி என்னும் பெயரில் உள்ள ‘அரசு‘ என்ற சொல் தமிழில் ‘தனியரசு‘ என அர்த்தப்படுமே அல்லாது, அதன் ஆங்கிலப் பெயர் குறிப்பது போன்று ‘சுயாட்சிப் பிரதேசம்‘ அல்ல என எடுத்துரைத்தார்.
பொன்னம்பலம் அவர்கள், தமிழரை தமிழரசுக் கட்சி ஏமாற்றுவதாக சுமத்திய குற்றச்சாட்டுக்குப் பதில் சொல்லும் வகையில் செல்வநாயகம் அவர்கள், தமிழரசுக் கட்சி என்பது, அது பூரண இறைமையைக் கொண்டதாகவோ அல்லது சுய ஆட்சியாகவோ, எப்படித்தான் இருந்தாலும், அது தமிழ்த் தேசத்தையே குறிக்கும் எனப் பதிலளித்ததுடன் தமிழரசுக் கட்சி என்பது கட்சியின் பெயரல்ல, அது கட்சியை விளக்கும் ஒரு பதம் எனவும் கூறினார்.‘ (மேற்கோள் முருகர் குணசிங்கம்) எஸ்.ஜே.வி. அவர்கள் எவ்வளவு நேர்மையானவர் என்று அவருடைய கட்சித் தொண்டர்கள் எடுத்துக் கூறினாலும் அவருடைய மேற்படி பதில் ‘முழுப் பூசணிக்காயை ‘சோற்றுக்குள் மறைக்கும் கபடத்தனம் என்பதை சாதாரண தமிழ் வாசகன் ஒருவனால் விளங்கிக் கொள்ள முடியும்.
‘இந்த வாதத்தைப் புறந்தள்ளிய பொன்னம்பலம் அவர்கள், ஏற்கனவே உள்ள உள்ளூராட்சி மன்றங்களை விட ஓரளவு அதிகாரம் கூடிய மாகாண சபையை மட்டுமே பெறுகின்ற தனது இலக்கை மறைத்துக் கொண்டு, தமிழரசுக் கட்சி, தமிழரை தன்னிடத்தில் கவர்ந்து கொள்வதற்காகவே, தனது பிரச்சாரத்தை தமிழ் அரசுக்கான பிரச்சாரம் என வேடம் புனைந்துள்ளது என மேலும் குற்றம் சுமத்தினார்.‘ (முருகர் குணசிங்கம்)
பொன்னம்பலம் அவர்கள் மேல் எவ்வளவு விமர்சனங்கள் இருந்த போதிலும் தமிழரசுக் கட்சியின் தேர்தல் மைய அரசியலை சரியாகக் கணிப்பிட்டுள்ளார் எனலாம். எஸ்.ஜே.வி. அவர்களால் தொடங்கிவிடப்பட்ட மக்களை உசுப்பேற்றி அரசியல் இலாபம் தேடும் போக்கு இன்றுவரை எவ்வித விமர்சனங்களுமின்றி தொடர்ந்து கொண்டிருப்பதற்குக் காரணம் எஸ்.ஜே.வி. யின் சீடப்பிள்ளைகள் தமிழ்த் தேசியம், தமிழர் இருப்பு என்பவற்றை யதார்த்த முறையிலான ஓர் அணுகுமுறையாக அன்றி அவற்றை தமிழ் மக்களின் இலட்சியப் போதையாக பேணுவதினாலாகும். இதனால் தமிழ்த் தேசியம் குறித்த ஆரோக்கியமான விமர்சனங்கள், யதார்த்த நடைமுறைகள் என்பவை புறக்கணிக்கப்படுவதோடு அவ்வாறு கருத்துக் கூறுபவர்கள் துரோகிகளாக்கப்பட்டு அல்லது பிரதேசவாதிகளாக்கப்பட்டு புறமொதுக்கப்படுகிறார்கள் அல்லது இவ்வாறு நாம் ஏன் புறமொதுக்கப்படவேண்டும் என்ற பயத்தில் மௌனமாக்கப்படுகிறார்கள்.
தமிழர்களின் சுயநிர்ணயக் கோரிக்கைக்குள் காணப்பட்ட பலவீனமான தன்மையினைப் புரிந்து கொண்ட பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கா 1951இல் யாழ்ப்பாணத்துக்குச் சென்று தனக்களிக்கப்பட்ட வரவேற்புபசாரத்தில் உரையாற்றும் போது, ‘சமஷ்டிக் கோரிக்கையைப் பிரிவினைக் கோரிக்கை என்று குறிப்பிட்டார். ஒன்று பட்டால் அனைவருக்கும் வாழ்வு. ஒற்றுமை நீங்கின் யாவர்க்கும் தாழ்வு. எனவே நாம் ஒன்று பட்டு வாழ்வோம் என்று முழங்கினார் டி.எஸ். தட்டோ தட்டென்று கைதட்டி அக்கூற்றை வரவேற்றார்கள் அங்கு குழுமியிருந்த தமிழ் மக்கள்.
தமிழரசுக் கோரிக்கையை பிரிவினைக் கோரிக்கையாக சிங்கள மக்களுக்குப் போதித்த முதலாவது தலைவர் டி.எஸ். அவர்கள்தான். டட்லி சேனநாயக்காவும், ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவும் அப்பிரச்சாரத்தை தொடர்ந்து நடத்தினர். அதன் தாக்கம் இன்றும் சிங்கள மக்களிடம் காணப்படுகிறது‘ (த.சபாரெத்தினம்)
இவ்வாறு சிங்களத் தலைவர்கள் தமிழர்களுடைய நியாயமான கோரிக்கைகளை தவறாகக் புரிந்து கொள்வதற்கு அடியெடுத்துக் கொடுத்தவர்கள் தமிழ் உயர்வர்க்கத்தினரும் மத்திய வர்க்கத்தினருமாவர். தமிழாகளின் சுயநிர்ணயக் கோரிக்கைக்கு சிங்கள மக்களின் வகிபாகம் தொடர்பாக எவ்வித பிரஞ்க்ஞையுமின்றி தமிழ் வாக்காளர்களை மட்டும் கவனத்தில் கொண்டு தமிழரசுக் கட்சியினர் செயற்பட்டனர்.
1952ம் ஆண்டு தேர்தலில் வடகிழக்கில் போட்டியிட்ட தமிழரசுக் கட்சியினர் 2 ஆசனங்களை மாத்திரமே பெற்றனர். இவர்களை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழ் காங்கிரஸ் நான்கு பிரதிநிதிகளைப் பெற்றிருந்தனர். தமிழர்களை ஐக்கியப்படுத்தி தமிழ்த் தேசிய உணர்வினை வளர்த்தெடுப்பதின் ஊடாகத்தான் அடுத்த தேர்தலில் வெற்றியடைய முடியும் என்பதை இத்தோல்வியினால் எஸ்.ஜே.வி.புரிந்து கொண்டார். இதற்காக அவர் மூன்றுவகையான செயற்திட்டங்களை முன்னெடுத்தார்.
1. கூட்டங்களை ஒழுங்கு செய்து மக்களிடம் தமது கருத்தினை முன்வைப்பது
2. கிராமங்கள் தோறும் கட்சிக் கிளைகளை ஆரம்பித்து தமிழ்த் தேசிய உணர்வினை ஊட்டுதல்.
3. மக்களை நேரடி அரசியலில் ஈடுபடுத்துவது, ஆதாவது ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதம், வீதி மறிப்பு போன்ற போராட்ட வடிவங்களை கைக்கொண்டு மக்களை ஈடுபடவைத்தல்.
மேலே சுட்டிக்காட்டப்பட்ட செயற்பாடுகள் காரணமாக 1956ம் ஆண்டுத் தேர்தலில் தமிழரசுக் கட்சி எட்டுத் தொகுதிகளில் பெற்றி பெற, தமிழ் காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில் மாத்திரமே பெற்றிபெறமுடிந்தது.
இதிலிருந்து நாம் ஒன்றைத் தெளிவாக விளங்கிக் கொள்தல் வேண்டும் அதாவது எஸ்.ஜே.வி தமிழரசுக்கட்சியைத் தொடங்கி எட்டு வருடங்களில் தமிழர்களுக்கு எதுவும் பெற்றுக் கொடுக்கவில்லை. ஆனால் தமிழர்களால் எட்டுத் தொகுதிகளில் வெற்றி பெற்று தனது கட்சியை வலுப்படுத்திக் கொண்டார். அதோடு மட்டுமல்லாது தமிழரசுக்கட்சியினது செயற்பாடுகளும் அவர்களது வெற்றியும் பௌத்த சிங்களத் தேசியவாதத்துக்கு எதிரான ஒன்றாகவே சிங்களத் தேசியவாதிகளினால் சிங்கள மக்களுக்கு ஊட்டப்பட்டு பௌத்த சிங்கள தேசியவாதம் மேலும் வலுப்பெறவும் வழிவகுத்துக் கொடுத்தது.
சிங்கள மக்களிடையே உருவான ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும்; சிங்கள மக்களை தங்களுடைய வாக்காளர்களாக மாற்றும் கருவியாக பௌத்த சிங்கள உணர்வினை எடுத்துக் கொண்டன. இது போன்றே தமிழ் அரசுக் கட்சியும் தமிழ் மக்களை தங்களுடைய வாக்காளர்களாக மாற்றும் கருவியாக தமிழ் உணர்வை எடுத்துக் கொண்டது. இந்த இரு இனங்களின் தேர்தல் மைய அரசியல் போக்குகளின் காரணமாக பௌத்த சிங்கள உணர்வுக்கு எதிர் தமிழ் உணர்வு அல்லது தமிழ் உணர்வுக்கு எதிர் சிங்கள தேசிய உணர்வு எனும் இனவாதப் போக்கு வளர்க்கப்பட்டது. அதாவது சிங்கள இனவாதத்தைக் காட்டி தமிழ் இனவாதமும் தமிழ் இனவாதத்தைக் காட்டி சிங்கள இனவாதமும் வளர்க்கப்பட்டது.
ஏற்கனவே சுட்டிக்காட்டியது போன்று தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்பது எந்தவொரு தேசிய இனங்களின் உரிமைகளுக்கும் எதிரானது அல்ல என்கின்ற தத்துவார்த்தம் இலங்கையில் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை விடயத்தில் தவறிப்போனதற்குக் பிரதான காரணம் யாழ் உயர் வர்க்கத்தினரின் சுயநலப் போக்கினாலேயாகும்.
ஆரம்பத்தில் சிங்களவர்களுக்குரிய வாய்ப்புக்களையும் உரிமைகளையும் பறிப்போர்களாக மலையாளிகள், போரா சமூகத்தவர், கரையோர முஸ்லிம்கள், சிந்திக்காரர், கிறிஸ்தவர்கள் என்போரே காணப்பட்டனர். சிங்கள மத்தியதர வர்க்கத்தினரின் தாக்குதல்களுக்கு உள்ளானவர்களும் இவர்களேயாவர். சிங்களவர்கள் இலங்கைத் தமிழரை இந்த நாட்டின் பூர்வீக சமூகமாகவே பார்த்தனர். இதன் காரணத்தினாலத்தான் சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையில் சிங்களம், தமிழ் ஆகிய மொழிகள் அரசகரும மொழியாக இருக்க வேண்டும் என்பதில் சிங்களத் தேசியவாதிகளும், இடதுசாரிகளும் ஒருமித்த கருத்துடையவர்களாகவே இருந்திருக்கின்றனர்.
‘1944இல் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, சிங்களம் ‘சில வருடகாலத்துள்‘ அரசகரும மொழியாக்கப்பட வேண்டும் எனப் பிரேரித்தார். இதனுடன் தமிழ்மொழியும் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்ற திருத்தத்தினை எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா முன்வைத்தார். பிரேரணை அவ்வாறு திருத்தப்பட்டு சமர்ப்பிக்கப்பட்ட போது ஆதரவாக 27 வாக்குகளும் எதிராக 2 வாக்குகளும் பெற்றது.
1944இல் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா பின்வருமாறு கூறினார்,
‘இவ்விரு மொழிகளும் அரசகரும மொழியாகக் கொள்வதில் எனக்கு எத்தகைய தனிப்பட்ட எதிர்ப்பும் கிடையாது. இதனால் எத்தகைய தீங்கோ, அபாயமோ, இடர்பாடோ, ஏற்படும் என்று நான் கருதவில்லை.‘
1951இல் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா யூ.என்.பியிலிருந்து பிரிந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியை நிறுவியபோது மொழிப் பிரச்சினையில் செயலாற்ற யூ.என்.பி தாமதம் செய்கிறது எனக் குற்றஞ்சாட்டினார். அன்னாரின் முதற் கட்சி அறிக்கை பின்வருமாறு கூறியது,
‘சிங்களத்தையும் தமிழையும் உடனடியாக அரசகரும மொழிகளாக்க வேண்டும். அப்பொழுதுதான் இந்நாட்டு மக்கள் தமது சொந்த நாட்டிலேயே அன்னியராக இருக்கும் நிலை ஒழியும். இதன் மூலம் சிங்களம் மூலமும் தமிழ் மூலமும் கல்வி கற்றோர் இன்று வாழ்க்கையின் கடைநிலையில் இருப்பதற்கும் முடிவு கட்டலாம்‘ (குமாரி ஜயவர்த்தன) என்றார்.
இவ்வாறு முக்கியமான சிங்களத் தலைவர்கள் சிங்களத்தையும் தமிழையும் தேசிய மொழிகளாக ஏற்றுக் கொண்டு அவற்றை அரசகரும மொழிகளாக அமுல்படுத்த வேண்டும் என்ற நிலையிலிருந்தவர்கள், தமிழும் அரசகரும மொழியாக இருக்க வேண்டும் என்ற திருத்தத்தைக் கொண்டுவந்தவர் எந்தத் தமிழ்த் தலைவர்களும் அல்ல, தனிச் சிங்களச் சட்டத்தைக் கொண்டு வந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்காவேதான். இவ்வாறு தமிழ் மொழியை அங்கீகரித்தவர்கள் தமிழை ஒதுக்கி தனிச் சிங்களம் மட்டுமே என்ற நிலைக்கு எவ்வாறு வந்தார்கள் என்று நோக்குதல் வேண்டும்.
(அந்த நோக்கு அடுத்த பத்தியில் தொடரும்..)
(குறிப்பு
‘தத்துவவியலாளர்கள் இந்த உலகை பல்வேறு வழிகளில் விளக்க மட்டுமே செய்தனர். ஆனால் பிரச்சினை என்னவெனில் இதனை மாற்றியமைக்க வேண்டும் என்பதாகும்‘ என்பார் மாக்ஸ். இந்த மாற்றியமைத்தலுக்கு வரலாற்றுப் பொருள்முதல்வாத அறிவு அவசியமானதாகும். அதன் காரணத்தினால்தான் அவர் முதலாளித்துவ சமூகத்தில் வாழ்ந்து கொண்டு புராதன கம்யூனிசம்,ஆண்டான் அடிமைச் சமூகம்,நிலப்பிரபுத்துவ சமூகங்களின் வரலாற்றுப் பாதையினை விளக்கினார். வரலாற்றிலிருந்து பாடங்களைப் படித்துக் கொண்டு எதிர்காலத்தை வடிவமைத்தலுக்கான வழிமுறையே அதுவாகும். வரலாற்றிலிருந்து பாடங்களைப் படிக்காத சமூகம் எதிர்காலத்தை வடிவமைக்க முடியாது. இதனால்தான் எனது கட்டுரைத் தொடர் எங்களது வரலாற்றை சமூகத்துக்கு எடுத்துரைக்கின்றது. அது முடிவுற்றதும் அடுத்த கட்டமாக ஜனநாயகம் பற்றியும் வடக்கு மாகாண அரசியல் நிலை குறித்தும், கிழக்கின் அரசியல் நடவடிக்கை அல்லது கிழக்கின் எதிர்காலம் குறித்தும் இன்றைய சமூக பொருளாதார அரசியல் சூழமைவுக்கு ஏற்ற முறையில் நாங்கள் என்ன செய்யலாம் என்றும் பேசலாம். அவ்வாறு பேசுகின்றபோது சிவலிங்கம் அவர்களுடைய ஆதங்கங்களுடன் கைகோர்த்து பொது வேலைத்திட்டத்தை நோக்கி நகரமுடியும் என நினைக்கின்றேன். இது தனிமனித நடத்தையல்ல நாம் எல்லோரும் இணைந்துதான் பயணிக்க வேண்டும். கருத்துக்கள் பகைமையை வளர்க்கக் கூடாது; அது மேலும் மேலும் கருத்தாடலுக்கான தளத்தினையும் கருத்தாடலாளர்களுக்கிடையிலான புரிந்துணர்வினையும் நட்பினையும் வளர்க்கவும் வேண்டும். எமது அரசியல் பண்பாட்டில் அது இல்லாமல் போனது துரதிஸ்ட்டசவமானதாகும். அதையே நாமும் செய்யக் கூடாது. அவ்வாறு செய்பவர்களாக இருந்தால் இந்தக் கருத்தாடலுக்கு நாம் அருகதையற்றவர்கள். இவ்வாறு கூறுவதனால் பிழைகளெல்லாம் சரி எனப் போற்றிப் புகழ்வது என்று அர்த்தமாகாது பிழையை பிழை என்று கூறுகின்ற தர்க்க அறிவும் அரசியல் நாகரீகம் தெரிந்தவர்களாகவும் நாம் இருக்க வேண்டும் என்பதும் முக்கியமானதாகும்.)