மார்க்கண்டேயன் போல இளமை மாறாதிருப்பது நல்லது ஆனால் அறிவு முதிர்ச்சியடைய வேண்டும் (சொல்லத் துணிந்தேன் – 80)

மார்க்கண்டேயன் போல இளமை மாறாதிருப்பது நல்லது ஆனால் அறிவு முதிர்ச்சியடைய வேண்டும் (சொல்லத் துணிந்தேன் – 80)

  — தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்— 

(கடந்த வாரத்தொடர்ச்சி) 

‘அம்பாறை மாவட்டத்தில் தமிழரின் பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்ற ஓரணியாகப் போட்டியிட வேண்டுமென 2000ஆம் ஆண்டு தேர்தலில் ஒரு கோரிக்கை முன்வைக்கப்பட்டது’ என்ற முகநூல் அன்பர் மார்க்கண்டேயனின் கூற்று உண்மையானது. ஆனால் இக் கோரிக்கைக்குத் தமிழர் தலைமை சம்மதித்தது என்ற கூற்றுத் தவறானது. அக்கோரிக்கை அம்பாறை மாவட்டத் தமிழர் மகா சங்கத்தினால் சகல தமிழ் அரசியல் கட்சிகளிடமும் விடுக்கப்பட்டது. அப்போது அம்பாறை மாவட்டத் தமிழர் மகா சங்கத்தின் மாவட்ட இணைப்பாளராகச் செயற்பட்ட நானே சங்கத்தின் சார்பில் சகல தமிழ் அரசியல் கட்சிகளின் தலைமைப் பீடங்களுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தினேன்.  

இப்படி ஒரு கோரிக்கையை அம்பாறை மாவட்டத் தமிழர் மகாசங்கம் விடுப்பதற்குக் காரணம் இருந்தது. 

அதற்கு முந்திய 1994ஆம் ஆண்டு பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் அம்பாறை மாவட்டத் தமிழர்களுக்கு கிடைக்கச் சாத்தியமான ஒரேயொரு பாராளுமன்றப் பிரதிநிதித்துவமும் பறிபோயிருந்தது. இப்படியொரு அவலம் மீண்டும் அம்பாறை மாவட்டத் தமிழர்களுக்கு ஏற்படக்கூடாது என்பதாற்றான் மேற்படி கோரிக்கை தமிழ்க் கட்சிகளிடம் முன்வைக்கப்பட்டது. 

1994ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொண்டால்தான் 2000ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் நடந்ததைப் புரிந்து கொள்ள முடியும். 

1994ஆம் ஆண்டுத் தேர்தலின் போது, 1989 தேர்தலில் முதன்முறையாக அறிமுகமான விகிதாசாரத் தேர்தல் முறையின் கீழ் தமிழ்க் கட்சிகள் ஒரு குடையின் கீழ் போட்டியிட்டால்தான் அம்பாறை மாவட்டத் தமிழர்கள் ஒரு பாராளுமன்ற உறுப்பினரைப் பெற்றுக்கொள்ள முடியும். ஆகவே, (அப்போது நான் அம்பாறை மாவட்டத் தமிழர் மகா சங்கத்தின் தீவிர செயற்பாட்டாளராக இருந்தேன்.) தமிழ்க் கட்சிகளை ஐக்கியப்படுத்தி ஒரு குடையின்கீழ் அவர்களைப் போட்டியிட வைக்க நாங்கள் முயற்சித்தோம். அதற்காகக் கொழும்பிற்குத் தமிழர் மகா சங்கத்தின் தூதுக்குழு ஒன்று சென்று அனைத்துத் தமிழ்க் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தியது. அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் நாங்கள் விடுத்த கோரிக்கையை நியாயமானதென ஏற்றுக்கொண்டார்கள். அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் அப்போதைய தலைவர் அமரர் குமார் பொன்னம்பலம் கூட எங்களது கோரிக்கையின் நியாயத்தை ஏற்றுக் கொண்டு ஆதரவளித்தார். ஆனால், தமிழர் விடுதலைக் கூட்டணி மட்டும் எங்கள் கோரிக்கையை ஏற்காமல் தனித்துப் போட்டியிடக் கங்கணம் கட்டிக் கொண்டு நின்றது. அப்போது அம்பாறை மாவட்டத் தமிழர் மகா சங்கம் சார்பான பேச்சுவார்த்தைக் குழுவுக்கு நான் தலைமை தாங்கினேன். தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பான பேச்சுவார்த்தைக் குழுவுக்கு அமரர் மு.சிவசிதம்பரம் அவர்கள் தலைமை தாங்கியிருந்தார். காரசாரமான பேச்சுவார்த்தைகள், கருத்து மோதல்கள் இடம்பெற்றன. எங்களது கோரிக்கையை ஏனைய தமிழ்க்கட்சிகள் ஏற்றுக்கொண்டு ஒரே சின்னத்தின் (உதயசூரியன்) கீழ் போட்டியிட முன்வந்த போதிலும் தமிழர் விடுதலைக் கூட்டணி மட்டும் அதற்கு மறுத்துத் தனித்துப் போட்டியிடப் பிடிவாதமாக நின்றது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் அப்போதைய தலைவர் அமரர். மு. சிவசிதம்பரம் அதற்குக் கூறிய காரணம் “நாம் (த.வி.கூ.) இரத்தக்கறை படிந்தவர்களுடன் (ஆயுதப் போராளி இயக்கங்களுடன்) கைகோர்க்க மாட்டோம்” என்பதாகும். அப்போது, அம்பாறை மாவட்டத் தமிழர் மகா சங்கத்தின் குழு கூட்டணியிடம் ஒரு நியாயமான கோரிக்கையை விடுத்தது. அது என்னவென்றால், தமிழர் விடுதலைக் கூட்டணி தனித்துப் போட்டியிட்டால் தமிழர் மகா சங்கம் கூட்டணியை ஆதரிக்குமென்றும் தேர்தலில் ஏனைய தமிழ்க் கட்சிகளும் போட்டியிடும். அதன் காரணமாக  வாக்குகள் பிரிந்து தற்செயலாக அம்பாறை மாவட்டத் தமிழ்ப் பிரதிநிதித்துவம் கிடைக்காதுபோகும் பட்சத்தில் கூட்டணிக்குக் கிடைக்கும் தேசியப் பட்டியல் ஆசனத்தை அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவருக்குக் கொடுக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்த போதும் அதற்கும் அவர்கள் மறுப்புத் தெரிவித்தார்கள். அத் தேசியப் பட்டியல் ஆசனம் ஏற்கெனவே நீலன் திருச்செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டுவிட்டது எனக் கூறினார்கள். அப்படியானால், அம்பாறை மாவட்டத்தில் யாரைத் தலைமை வேட்பாளராக நிறுத்தப்போகிறீர்களென்று நாம் கேட்டபோது மாவை சேனாதிராசாவை நிறுத்தத் தீர்மானித்திருக்கின்றோமென்று சொன்னார்கள். அதற்கு நாம், ஏன் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதி வாய்ந்த ஒருவர் கிடைக்கவில்லையா என்று கேட்டு, அதைத் தவிர்க்குமாறும் தயவாய் வேண்டினோம். அதற்கும் அவர்கள் மறுத்து விட்டார்கள். இவ்வாறுதான் தமிழர் விடுதலைக் கூட்டணி ஒரு நியாயமற்ற செயற்பாட்டில் வீம்புத்தனமாகச் செயற்பட்டது. இதனால், அம்பாறை மாவட்டத் தமிழர் மகா சங்கம் தமிழர் விடுதலைக் கூட்டணியை எதிர்த்து என்னுடைய தலைமையில் சுயேச்சைக் குழு அமைத்துப் போட்டியிட்டது. இதன் விளைவு 1994இல் அம்பாறை மாவட்டத்தில் தமிழருக்கான ஒரேயொரு பிரதிநிதித்துவம் இல்லாமற் போனது. இதற்குக் காரணம் தமிழர் விடுதலைக் கூட்டணியே தவிர வேறெவருமல்ல. அம்பாறை மாவட்டத் தமிழர்களின் நலன்களுக்கு முன்னுரிமை வழங்காமல் மாவை சேனாதிராசாவின் தனிநபர் நலன் முதன்மைப் படுத்தப்பட்டதே இதற்குக் காரணம். 

அடுத்ததாக 2000ஆம் ஆண்டுத் தேர்தலின் போதும் முன்னைய அனுபவத்தை வைத்துக் கொண்டு அனைத்துத் தமிழ்க் கட்சிகளையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் அம்பாறை மாவட்டத் தமிழர் மகாசங்கம் ஈடுபட்டது. அப்போதுகூட ஏனைய கட்சிகள் ஒரு குடையின் கீழ் அணி திரள ஒன்றிணைந்த போதும் தமிழர் விடுதலைக் கூட்டணி ஒன்றிணையவில்லை. எனது தலைமையின் கீழ் பேச்சுவார்த்தை இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையிலேயே தமிழர் விடுதலைக் கூட்டணி தனித்துப் போட்டியிட வேட்பு மனுவைத் தாக்கல் செய்தது. இதனால் பேச்சுவார்த்தைகளில் ஒன்றாக இணைந்து செயற்பட முன்வந்த கட்சிகள் தனித் தனியே போட்டியிட முனைந்தன. எங்களுடைய முயற்சி பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் முடியப்போகிறதே என்ற காரணத்தால் போட்டியிடும் தமிழ்க் கட்சிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக ஏனைய தமிழ்க் கட்சிகள் யாவும் தனித் தனியே போட்டியிடாது ஒன்றாக ஒரே அணியின் கீழ் போட்டியிடுவதற்காகத் தமிழர் மகாசங்கம் சுயேச்சைக் குழுவை உருவாக்கியது. அதற்கும் நான்தான் தலைமை தாங்கினேன். கூட்டணியின் தேர்தல் வேட்பு மனுவில் ஒரு பிழையிருந்ததால் அந்த மனுவை எதிர்த்து நாங்கள் வழக்குத் தாக்கல் செய்து  2000ஆம் ஆண்டுத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் மனு திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டது. இதனால் தமிழர் மகா சங்கத்தால் நியமிக்கப்பட்ட சுயேச்சைக் குழு போட்டியிட்டு ஒரு ஆசனத்தைப் பெற்றுக் கொண்டது. அதில் ஈபிடிபி சார்பில் நிறுத்தப்பட்ட மா.குணசேகரம் (சங்கர்) அவர்கள் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் தெரிவானார். இச்சுயேச்சைக் குழுவில் ‘ரெலோ’ வும் இணைந்திருந்தது. ரெலோ சார்பில் ஹென்றி மகேந்திரன் சுயேச்சைக் குழுவின் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தார். ஈ பி ஆர் எல் எஃவ் உம் ‘புளொட்’ உம் போட்டித் தவிர்ப்பை மேற்கொண்டு வெளியே நின்று இச்சுயேச்சைக் குழுவுக்கு ஆதரவளித்தன. ஆனால், அத் தேர்தலில் கூட்டணியானது யூ.என்.பி. சார்பில் போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளருக்கு வாக்களிக்கும்படி அம்பாறை மாவட்டத் தமிழர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தது. இதற்கு ஆதாரமாக அமரர் ந. ரவிராஜ் தன்னுடைய பெயரில் யூ.என்.பி. பட்டியலில் போட்டியிட்ட அம்பாறை மாவட்டம், நிந்தவூரைச் சேர்ந்த அப்பாஸ் என்கின்ற சட்டத்தரணிக்கு ஆதரவளிக்கும்படி வீரகேசரியில் விளம்பரம் கொடுத்திருந்தார். இப்படியாகத்தான் தமிழர் விடுதலைக் கூட்டணி நடந்துகொண்டது. தங்களது வேட்பு மனு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டதால் அதற்குப் பழிதீர்க்கும் வகையில் அம்பாறை மாவட்டத் தமிழர்களின் பிரதிநிதித்துவம் பறிபோனாலும் பறவாயில்லை, அம்பாறை மாவட்டத் தமிழர் மகாசங்கச் சுயேச்சைக் குழுவைத் தோற்கடிப்பதே தமிழர் விடுதலைக் கூட்டணியின் நோக்கமாகவிருந்தது.  

இதேபோன்றுதான் வன்னித் தேர்தல் மாவட்டத்தில் 1994 பொதுத்தேர்தலில் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த வன்னியைப் பிறந்த மண்ணாகக் கொண்ட முன்பு வவுனியா நகரசபைத் தலைவராகவிருந்த திரு கேதீஸ்வரன் அவர்களுக்கு வேட்பாளர் நியமனம் வழங்காது மு.சிவசிதம்பரம், வீ.ஆனந்தசங்கரி ஆகியோருக்கு வேட்பாளர் நியமனங்களை வழங்கி நியாயமற்ற முறையில் தமிழர் விடுதலைக் கூட்டணி நடந்துகொண்டது. வன்னி மக்களின் நலன்களை விட தனிநபர்களான மு.சிவசிதம்பரம், வீ.ஆனந்தசங்கரி ஆகியோரின் நலன்கள்தான் முதன்மைப்படுத்தப்பட்டன. 

எனவே, அம்பாறை மாவட்டத் தமிழரின் பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்ற ஓரணியாகப் போட்டியிட வேண்டுமென 2000ஆம் ஆண்டு தேர்தலில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்குத் தமிழர் தலைமை சம்மதித்தது என்ற மார்க்கண்டேயனின் முகநூல் பதிவு மிகத்தவறான கூற்றாகும்.  

மேலும், 2000 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் திகாமடுல்ல (அம்பாறை) தேர்தல் மாவட்டத்தில் அம்பாறை மாவட்டத் தமிழர் மகா சங்கச் சுயேச்சைக்குழுவில் போட்டியிட்டுப் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவான மா. குணசேகரம் (சங்கர்) தான் ஈ.பி.டி.பி. என்று அறிவிக்க வேண்டிய அவசியமுமில்லை. ஏனெனில், இச் சுயேச்சைக் குழுவில் அவர் ஈபிடிபி கட்சியின் சார்பில்தான் இடம்பெற்றிருந்தார். சங்கர் அரசில் இணைந்துகொண்டது அவரின் கட்சியின் அல்லது அவரின் சொந்த முடிவு. அன்றியும், அவர் அரசில் இணைந்து கொண்டதை எவ்வாறு தமிழர் நலனுக்கெதிரானது என்று கூறமுடியும். அவர் அரசில் இணைந்துகொண்டதனாற்றான் அவர் பாராளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த ஆக ஓராண்டு காலத்திற்குள் (2001இல் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு 2001 டிசம்பரில் தேர்தல் நடைபெற்றது) அம்பாறை மாவட்டத்தில் புதிய தமிழ்ப் பெரும்பான்மை நாவிதன்வெளிப் பிரதேச செயலகத்தை உருவாக்க முடிந்தது. இப் பிரதேச செயலக உருவாக்கம் தமிழர்களின் நலன்களுக்கு எதிரானதா? இல்லையே.  

3) மார்க்கண்டேயனின் முகநூல் வரிகள்:- 

 “…கோபாலகிருஷ்ணன் 2020 தேர்தலில் புதிய நண்பர் கருணாவை ஆதரித்து அம்பாறையில் தமிழ் பிரதிநிதித்துவத்தை இழக்க வைக்கும் சிங்களத் தரப்பின் நோக்கத்துக்கு துணை போனார்”- 

எனது பதில்:-.                                                                                                  

2020 தேர்தலுக்கு முன்னர் நான் கருணாவுடன் இணைந்தோ அல்லது ஆதரவாகவோ எந்த அரசியற் செயற்பாடுகளிலும் எந்தக் காலத்திலும் ஈடுபடவேயில்லை. கருணா இலங்கைத் தேர்தல் திணைக்களத்தினால் இன்னும் அங்கீகரிக்கப்படாத ‘தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி’ என்னும் அரசியல் கட்சியின் தலைவர். கடந்த 2020 தேர்தலில் அகில இலங்கை தமிழர் மகா சபையில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான விண்ணப்பத்தைச் (என் மூலம்- அப்போது நான் அகில இலங்கை தமிழர் மகா சபையின் முன்னாள் செயலாளர் என்ற நிலையிலிருந்தேன். இப்போது 25.04.2021. அன்று மட்டக்களப்பில் நடைபெற்ற அகில இலங்கை தமிழர் மகாசபையின் ஒன்பதாவது தேசிய மாநாட்டில் மீண்டும் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன்) செய்திருந்தார். எமக்கும் வேறு நபர்களைத் தெரிவு செய்வதற்கான கால அவகாசம் போதாமை காரணமாக கருணா அம்மானின் விண்ணப்பத்தை நாம் ஏற்றுக் கொண்டோம். அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பல நபர்களை நாம் அணுகியும் கூட அவர்கள் அனைவரும் தேர்தல் களத்தில் துணிந்து குதிப்பதற்குத் தயங்கினார்கள். இந்நிலையில் கருணாவைத் தவிர வேறு தெரிவுகள் எங்கள் முன் இருக்கவில்லை. 

அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை தமிழர் மகா சபையின் தலைமை வேட்பாளராகக் கருணாவை நிறுத்துவதென்பது கட்சி எடுத்த முடிவு. கட்சியின் முடிவுக்கிணங்க அப்போது அதன் முன்னாள் செயலாளரான நான் அம்பாறை மாவட்டத்தில் கட்சியின் வேட்பு மனுவைத் தாக்கல் செய்யும் ஏற்பாடு முதற்கொண்டு முழுநேரமாகக் கருணாவை ஆதரித்துப் பிரச்சாரம் மேற்கொண்டேன். அது என் மீது சுமத்தப்பட்ட பொறுப்பும் கடமையுமாகும். 

அன்றியும், அகில இலங்கை தமிழர் மகாசபை கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு எனும் அரசியல் கூட்டணியின் (POLITICAL ALLIANCE) பங்காளிக் கட்சிகளுளொன்றாகவும் விளங்கியது. கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் தலைவராகவும் நான் இருக்கின்றேன். கடந்த பொதுத் தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் செயற்படும் அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளையும் (வடக்கைத் தளமாகக் கொண்ட தமிழ் அரசியல் கட்சிகள் உட்பட) ஒன்றிணைத்து கிழக்கு மாகாணத்தின் திகாமடுல்ல (அம்பாறை), மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் ஒரு பொதுச் சின்னத்தில் போட்டியிட வைப்பதற்காக இரண்டு வருடங்களுக்கும் மேலாக மேற்கொண்ட பகீரதப் பிரயத்தனம், இறுதியில் கிழக்குத் தமிழர் கூட்டமைப்புப் பிரதிநிதிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியுடன் இணைந்து அக்கட்சியின் ‘படகு’ச் சின்னத்தில் போட்டியிடுவதென்றும்,திகாமடுல்ல (அம்பாறை) மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் கருணா அம்மானின் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் பிரதிநிதிகளையும் உள்வாங்கிக் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான அகில இலங்கை தமிழர் மகாசபையின் ‘கப்பல்’ச் சின்னத்தில் போட்டியிடுவதென்றும் ஒரு போட்டித் தவிர்ப்புப் புரிந்துணர்வில் வந்து நின்றது. இந்த அடிப்படையிலேயே எல்லாம் நடந்தேறின. 

2020 ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தலில் என்ன நடந்ததென்பதையும் இங்கு பதிவு செய்ய வேண்டியுள்ளது. 

அம்பாறை மாவட்டத்தில் கருணாவை வெல்ல விடக்கூடாது என்பதில் தமிழர்களுக்கு எதிரான அரசியல் கட்சிகள் உட்படப் பல உள்நாட்டு வெளிநாட்டு முஸ்லிம் சக்திகளும் கங்கணம் கட்டிச் செயற்பட்டன. இச்சக்திகள் யாவும் திரைமறைவில் நிதியுதவி உட்பட சகல ஆதரவுகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கியிருந்ததாகத் தேர்தல் காலத்திலேயே பலத்த சந்தேகங்கள் தெரிவிக்கப்பட்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தாம் தோற்றாலும் பரவாயில்லை; கருணாவை வெல்ல விடக்கூடாது. தமிழர் பிரதிநிதித்துவம் பறி போனால் அப்பழியைக் கருணா மீதும் அவரைத் தலைமை வேட்பாளராக நிறுத்திய அகில இலங்கை தமிழர் மகாசபை மீதும் சுமத்தலாமென்றுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எண்ணிச் செயற்பட்டது. ‘தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு இரண்டு கண்களும் போகட்டும்’ என்ற எதிர்மறையான-வக்கிரமான மனப்போக்குத்தான் இது. ஆனால், அப்படிச் செய்ய அவர்களால் முடியாமற் போயிற்று. காரணம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அளிக்கப்பட்ட சுமார் 25000 வாக்குகளைவிட அகில இலங்கை தமிழர் மகா சபைக்கு 5000 வாக்குகள் கூடுதலாகச் சுமார் 30000 வாக்குகள் கிடைத்தன. தமிழர் பிரதிநிதித்துவம் பறிபோவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பிரதான காரணம். இத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்த மற்றும் அகில இலங்கை தமிழர் மகாசபை தவிர்ந்த ஏனைய கட்சிகளுக்கு வாக்களித்த மற்றும் வாக்களிப்பில் கலந்து கொள்ளாத தமிழர்கள் அனைவரும் தங்கள் தலையில் தாங்களே மண்ணையள்ளிப் போட்டுக் கொண்டுள்ளனரென்பதே சீரணிக்க முடியாத அவலமாகும். தமிழர்கள் இன்னும் அரசியல் விழிப்புணர்வு பெற வேண்டியுள்ளது. 

நிலைமை இப்படியிருக்க, முகநூல் அன்பர் மார்க்கண்டேயன் “…… கோபாலகிருஷ்ணன் 2020 தேர்தலில் புதிய நண்பர் கருணாவை ஆதரித்து அம்பாறையில் தமிழர் பிரதிநிதித்துவத்தை இழக்கவைக்கும் சிங்களத் தரப்பின் நோக்கத்திற்கு துணை போனார்” எனக் கூறுவது சுத்த அபத்தம். சோடிக்கப்பட்ட பச்சைப் பொய். 

4) மார்க்கண்டேயனின் முகநூல் வரிகள்:- 

“இன்று வடக்குக்கெதிராக வாந்தி எடுக்கும் இதே கோபாலகிருஷ்ணன் அன்று தரப்படுத்தலுக்கு எதிரான கண்டனக் கூட்டத்தில் கலந்து கொண்டார். மட்டக்களப்பு மாவட்ட உயர்தர வகுப்பு மாணவர்களினால் ஒழுங்குபடுத்தப்பட்ட இந்நிகழ்வு வெபர் மைதானத்தில் நடைபெற்றது. இதில் தமிழ் மாணவர் பேரவைத் தலைவர் சத்தியசீலன் மற்றும் சிவகுமாரன் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் அன்று வந்தாறுமூலை மத்திய கல்லூரி மாணவர்களில் ஒருவராக விளங்கிய கோபாலகிருஷ்ணன் தனது சகாக்களுடன் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. (இப்பாடசாலைதான் தற்போது கிழக்குப் பல்கலைக் கழகமாக விளங்குகிறது)” 

எனது பதில்:- 

(அ). கிழக்குத் தேசியம் 

நான் தற்போது தலைவராக விளங்கும்’கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு’ என்னும் அரசியல் கூட்டணியோ அல்லது நான் செயலாளராக விளங்கும் ‘அகில இலங்கை தமிழர் மகாசபை’ என்னும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியோ அல்லது தனிப்பட்ட ரீதியில் நானோ தமிழ்த் தேசியத்திற்கோ- வடக்குக் கிழக்கு மாகாணங்கள் இணைந்த ஒற்றை மொழிவாரி மாகாண அதிகாரப்பகிர்வலகிற்கோ அல்லது வடக்குக்கோ எதிரல்ல. இதனைப் பல சந்தர்ப்பங்களில் தெளிவாகவும் உறுதியாகவும் பேசியும் எழுதியும் நான் வெளிப்படுத்தி வந்துள்ளேன். ஆனால், தமிழ்த் தேசிய அரசியலைப் பீடித்துள்ள யாழ் மேலாதிக்கக் கருத்தியல் நோய்க்கே நான் எதிரானவன். ‘தமிழ்த் தேசிய அரசியல்’ என்று இதுவரை நாம் கற்பிதம் செய்து கொண்டுள்ள ‘போலி’ த் தமிழ்த் தேசிய அரசியலோடு ஒட்டிப்பிறந்ததுதான் யாழ் குடாநாட்டுக் குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் பூர்ஸுவா அரசியல் குணாம்சமாகும். இதுவே யாழ் மேலாதிக்கமாகும். இதனையே நான் தத்துவார்த்த ரீதியாக எதிர்க்கின்றேன். தமிழ்த் தேசியவாதம் எவ்வாறு பௌத்த- சிங்கள பேரினவாத மேலாதிக்கத்துக்கு எதிரானதோ (இலங்கைத் தேசியத்திற்கோ அல்லது பௌத்த சிங்களவர்களுக்கோ எதிரானதல்ல) அவ்வாறே கிழக்குத் தேசியம் என்பது (இப்படித்தான் முகநூல் அன்பர் மார்க்கண்டேயன் கிழக்கின் தனித்துவ அரசியலுக்குப் பெயரிட்டுக் குறிப்பிட்டுள்ளார்) யாழ் மேலாதிக்கத்திற்கு மட்டுமே எதிரானது (தமிழ்த் தேசியத்திற்கோ அல்லது வடக்குக்கோ அல்லது யாழ்ப்பாணத்தவர்களுக்கோ எதிரானதல்ல) திராவிட இயக்கத் தந்தை ஈ.வே.ரா. (பெரியார்) கூறிய கூற்றினை முகநூல் அன்பர் மார்க்கண்டேயனின் பார்வைக்கு இங்கு பதிவிடல் பொருத்தம். அது இதுதான். “நாம் பார்ப்பனீயத்திற்கு எதிரானவர்களே தவிர பார்ப்பனர்களுக்கு எதிரானவர்களல்ல”.  

மேலும், இந்த விடயம் குறித்த நீண்ட கருத்தாடலொன்று அரங்கம் மின்னிதழில் நடைபெற்று வருகிறது. அரங்கம் மின்னிதழில் பின்வரும் பதிவுகளைப் பார்வையிட்டுத் தெளிவடையுமாறு முகநூல் அன்பர் மார்க்கண்டேயனை கேட்டுக்கொள்கிறேன். 

* 22.05.2021, ‘அரங்கம் ஒரு பிரதேசவாத ஊடகம்? -எழுவான் வேலன். 

* 06.06.2021, ‘பிரதேசவாதமா ஜனநாயக பற்றாக்குறையா?’ –வி.சிவலிங்கம் 

* 15.06.2021, ‘சாதியும் பிரதேசவாதமும்- கருத்தாடல் களம் 01’- எழுவான்வேலன். 

* 20.06.2021, ‘சாதியும் பிரதேசவாதமும்– கருத்தாடல் களம் 02 ‘- எழுவான் வேலன். 

* 27.06.2021, ‘கிழக்கு அரசியல் பிரதேசவாதமா? (காலக்கண்ணாடி 44)-அழகுகுணசீலன். 

                                                                            *29.06.2021, ‘சாதியும் பிரதேசவாதமும்– கருத்தாடல் களம் 03 ‘- எழுவான் வேலன். 

* 02.07.2021, ‘சாதியும் பிரதேசவாதமும்– கருத்தாடல் களம் 04 ‘- எழுவான் வேலன். 

(ஆ) தரப்படுத்தல் 

1970ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் வென்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரதமர் திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான கூட்டரசாங்கம் அமைந்தது. இந்த அரசாங்கத்தினாலேயே பல்கலைக்கழக அனுமதிக்குத் ‘தரப்படுத்தல்’ முறைமை அறிமுகம் செய்யப்பட்டது. இது அகில இலங்கை ரீதியான இன விகிதாசார அடிப்படையில் அமைந்திருந்ததால் இது இனவாத அடிப்படையிலானது எனத் தமிழர் தரப்பிலிருந்து எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் சத்தியசீலன் ‘தமிழ் மாணவர் பேரவை’ என்ற அமைப்பைத்  தனது தலைமையில் உருவாக்கித் தரப்படுத்தலுக்கான எதிர்வினைச்  செயற்பாடுகளைக் கட்டமைத்தார். இது விடயமாக அவர் மட்டக்களப்பிற்கு வந்திருந்தபோது அப்போது வேணுதாஸ், வசந்தன் போன்ற நண்பர்களுடன் இணைந்து நானும் சத்தியசீலனின் ‘தரப்படுத்தல்’ முறைமைக்கான எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக உதவிகளையும் ஒத்தாசைகளையும் வழங்கியிருந்தேன். ஆனால், முகநூல் அன்பர் மார்க்கண்டேயன் குறிப்பிட்டது போல் மட்டக்களப்பு மாவட்ட உயர்தர வகுப்பு மாணவர்களினால் ஒழுங்குபடுத்தப்பட்டு வெபர் மைதானத்தில் நடைபெற்ற எந்த நிகழ்விலும் நான் கலந்து கொள்ளவில்லை. மட்டுமல்லாமல். அப்போது வந்தாறுமூலை மத்திய கல்லூரி மாணவனாகவும் நான் இருக்கவில்லை. 1968 நவம்பரிலேயே நான் வந்தாறுமூலை கல்லூரியிலிருந்து விலகிவிட்டேன். தமிழ் மாணவர் பேரவைத் தலைவர் சத்தியசீலன் மட்டக்களப்பிற்கு வருகை தந்திருந்தது 1971 இலாகும். அப்போது நான் கல்முனையில் நீர்ப்பாசனத் திணைக்களத்தில் அரசாங்க ஊழியனாகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு வயது 21. இப்போது எனது வயது 71. முகநூல் அன்பர் மார்க்கண்டேயனுக்கு எப்போதும் வயது 16 தானோ. நல்ல ‘ஞாபக சக்தி’ இருக்கிறது. தரப்படுத்தல் சம்பந்தமாக மேலும் சில விளக்கங்களைக் கொடுக்க வேண்டியுள்ளது. 1971இல் பல்கலைக்கழகங்களுக்கு இன விகிதாசார அடிப்படையில் மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டபோது தெரிவான சிங்கள மாணவர்களில் பெரும்பான்மையினர் கொழும்பு மற்றும் கண்டி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாகவும் தெரிவான தமிழ் மாணவர்களில் பெரும்பான்மையானவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாகவுமிருந்தனர். இம்மாவட்டங்கள் கல்வி வசதியில் உயர்ந்த மாவட்டங்களாகும். கல்வி வசதிகள் குறைந்த பின்தங்கிய மாவட்ட மாணவர்கள் இதனால் பாதிப்புற்றனர். இதனை நிவர்த்தி செய்ய 1972இல் ‘தரப்படுத்தல்’ முறைமையில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி பல்கலைக்கழக அனுமதி அகில இலங்கை ரீதியான திறமை அடிப்படையில் 30% ஆகவும் மாவட்ட அடிப்படையில் 55% ஆகவும் (DISTRICT QUOTA), பின்தங்கிய மாவட்டங்களுக்கு மேலதிகமாக 15% ஆகவும் மாற்றியமைக்கப்பட்டது. இதை நடைமுறைப் படுத்துவதற்காக இலங்கையில் 16 மாவட்டங்கள் பின்தங்கிய மாவட்டங்களாக அரசாங்கத்தினால் அடையாளப்படுத்தப்பெற்றன.  

பின்தங்கிய மாவட்டங்களாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்கள் வடக்கிலும் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்கள் கிழக்கிலும் அடையாளப் படுத்தப்பெற்றன. அப்போது வடக்கில் கிளிநொச்சி மாவட்டம் உருவாகியிருக்கவில்லை. அது அப்போதைய யாழ் மாவட்டத்தின் பகுதியாகவிருந்தது. அதேபோல் அப்போது முல்லைத்தீவு மாவட்டம் உருவாகியிருக்கவில்லை. அது அப்போதைய வவுனியா மாவட்டத்தின் பகுதியாகவிருந்தது. 

தரப்படுத்தல் முறைமையில் அப்போதைய அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட மாற்றத்தினால் வசதியான யாழ்மாவட்ட மாணவர்கள்  அவர்கள் அதுவரை அனுபவித்த வசதி, வாய்ப்புகளை இழந்தனரென்பது உண்மைதான். ஆனால், பின்தங்கிய மாவட்டங்களான வவுனியா, மன்னார், மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்ட மாணவர்கள் (தமிழ், சிங்கள, முஸ்லிம்) நன்மையடைந்தனர். இது யாழ் மேலாதிக்கவாத அரசியல் சக்திகளுக்குப் பிடிக்கவில்லையென்பதே உண்மை. உண்மையிலேயே இந்தத் தரப்படுத்தல் முறைமை இனவாதத்தையோ பிரதேச வாதத்தையோ கொண்டிருக்வில்லை. இதில் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என இலங்கையின் அனைத்துப் பகுதித் தமிழ் சிங்கள முஸ்லீம் மாணவர்களனைவரும் இனப் பாகுபாடின்றி பிரதேச பாகுபாடின்றி நன்மையடைந்தனர்.  

வவுனியாத் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆரம்பத்தில் தமிழ்க் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவராகவிருந்து பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியில் உள்ளீர்க்கப்பட்ட அமரர் தா.சிவசிதம்பரம் தலைமையில் வவுனியாவில் யாழ் மேலாதிக்கத்துக்கெதிராக ‘யாழ் அகற்றிச் சங்கம்’ என்ற அமைப்பு இயங்கியது என்ற தகவலையும் இங்கு பதிவிடுதல் பொருத்தம். இதை என்ன ‘வாதம்’ என்று முகலூல் அன்பர் மார்க்கண்டேயன் பெயரிடப் போகிறாரோ தெரியவில்லை. 

நிறைவாக, முகநூல் அன்பர் ‘மதிப்புக்குரிய’ மார்க்கண்டேயன் அவர்கள் தனது முகநூல் பதிவில் முதல் பந்தியிலே என்மீது கொண்ட அதிக ‘பட்சம்’  காரணமாக “தந்தை செல்வா, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் போன்றோர் தமது வாழ்நாளில் இறுதிப்பகுதியில் பார்க்கின்சன் நோயால் பீடிக்கப்பட்டு இருந்தனர். கடந்த காலத்தில் நடந்த சம்பவங்கள் அனைத்துமே மறந்து போதல் என்பதே இந்த நோயின் பிரதான அறிகுறி. ஆனால் தம்மை கிழக்கின் தேசியவாதிகள் என்றும், அரசியல் விமர்சகர்கள் எனவும் அடையாளப்படுத்த முயலும் சிலர் (இவர்களில் முக்கியமானவர் தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்) அரை பார்க்கின்சன் நோயால் அவதிப்படுவதை காணமுடிகிறது” என்று என்மீது ‘அர்ச்சனை’ பொழிந்துவிட்டுத்தான் தனது பதிவு வரிகளைத் தொடர்ந்திருந்தார்.   

‘பார்க்கின்சன்’ நோய் நரம்புத் தளர்ச்சியோடு சம்பந்தப்பட்டது. மறந்துபோதலல்ல. அது கை கால் தலை போன்றவை நடுங்குவதாகும். பார்கின்சன் நோய் முற்றி மூப்புடன் சேர்ந்து மறதியும் உண்டாகலாம். ஆனால், ‘கடந்த காலத்தில் நடந்த சம்பவங்கள் அனைத்துமே மறந்து போதல் என்பது இந்த நோயின் (பார்க்கின்சனின்) பிரதான அறிகுறி’ என்று முகநூலன்பர் மார்க்கண்டேயன் கூறியிருப்பது பிழையாகும். மறதி நோய் ‘டிமென்ஷியா’ (Dementia அல்லது Alzheimer) ஆகும். 

‘பரமதேவா இராமலிங்கம்’ எனும் முகநூலில் ‘மார்க்கண்டேயன்’ என்ற பெயரில் பதிவுகளையிடும் (குயில், காகத்தின் கூட்டில் முட்டைகளைக் களவாக இடுவதைப்போல) அன்பருக்கு ஒரு பணிவான அறிவுரை. மற்றவர்களுக்கு என்ன ‘அரை’ நோய் உள்ளது என்று பிழையாகக் கற்பனை செய்வதைவிட தனக்கு என்ன ‘முழு’ நோயுள்ளது என்று சரியாகக் கண்டுபிடிப்பது சாலவும் சிறந்தது.