கிணற்றுத் தண்ணீர்ப் பங்கும் வழிவாய்க்கால் உரித்தும்

கிணற்றுத் தண்ணீர்ப் பங்கும் வழிவாய்க்கால் உரித்தும்

— வேதநாயகம் தபேந்திரன் —  

யாழ்ப்பாணப் பண்பாட்டின் தனித்துவங்களில் ஒன்றாக கிணறுகளில் தண்ணீர் எடுக்கும் போது தண்ணீர்ப்பங்கும் வழிவாய்க்கால் உரித்தும் உள்ளது. 

காணி உறுதிகளிலும் இவை எழுத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் நாட்டின் நாலாதிசைகளிலும் இருந்த போதும் கிணற்றை மட்டும் குடிநீருக்கு நம்பி, விவசாயத்திற்கு நம்பி வாழும் யாழ்ப்பாணத்தில் மட்டும் தனித்துவமான ஒன்றாக இந்தத் தண்ணீர்ப் பங்கும் வழிவாய்க்கால் உரித்தும் என்பது உள்ளன. 

கிணற்றுப் பங்கு என்பது கிணற்றில் பங்கு உள்ளவர்கள் தனித் தனிக்கப்பியோ துலாவோ பயன்படுத்துவதைக் குறிக்கும். கிணற்றில் நீர் அள்ளிக்குளிக்கலாம். உடைகள் துவைக்கலாம். தண்ணீர் எடுத்துச் செல்லலாம். இவ்உரிமை உள்ளவர்கள் கிணற்றடிக்கு வந்து போவதற்குத் தனியான ஒரு பாதை காட்டப்பட்டிருக்கும். 

ஆனால் தண்ணீர்ப் பங்கும் வழிவாய்க்கால் உரித்தும் என்பது மாறுபட்டது. இவ் உரிமை உள்ள ஒருவர் குறித்த வழி ஊடாகச் சென்று கிணற்றில் உள்ள வாளி மூலமாக தண்ணீர் எடுத்துச்செல்லலாம். ஆனால் அதில் நின்று குளிக்கவோ உடுப்புகளைத் துவைக்கவோ முடியாது. அது மட்டுமல்ல, தனக்கெனத் தனியாகக் கப்பியோ, துலாவோ பயன்படுத்த முடியாது. 

நாட்டின் ஏனைய பகுதிகளில் குளங்கள், ஆறுகள், நன்னீர் ஏரிகளைக் குடிநீருக்கு நம்பி இருக்கிறார்கள். 

ஆனால் யாழ்ப்பாணத்தில் மட்டும் இந்த நிலைமை இல்லை. சுண்ணக்கற் பாறைகளின் கீழ் இருக்கும் நிலத்தடி நீரை மட்டும் உயிர் வாழ்வதற்கான குடிநீருக்காக நம்பியிருக்கும் நிலைமை யாழ்ப்பாணத்தில் மட்டுமே இருக்கிறது.  

இதனால் யாழ்ப்பாணத்தின் முன்னைய தலைமுறையினர் தமது கிணறுகளின் பாதுகாப்பு, குடிநீர்ப் பங்கீடு தொடர்பாக தூர நோக்குடன் செயற்பட்டனர். 

வீட்டுக்கு ஒரு கிணறு உள்ள நிலைமை அண்மைய வருடங்களில் தான் வந்தது. 

அதற்கு முந்திய காலத்தில் பொருளாதார வசதிகள் மிகவும் குறைவாக இருந்த காலத்தில் கற்பாறைகளைப் பிளந்து கிணறு ஒன்றைக் கட்டுவது என்பது பெரும் உடல் உழைப்பும் பணச் செலவும் உடையதாக இருந்தது. 

இதனால் ஒரு பெற்றோர், பிள்ளைகள் சேர்ந்து  அல்லது பல உறவுக்குடும்பங்களால் வெட்டப்பட்டுக் கட்டப்பட்ட கிணறு பல பிள்ளைகளுக்கோ, பல உறவுகளுக் கோபங்காக வந்து விடும். ஆரம்ப காலத்தில் நடத்தை வழியாக இந்தக் கிணற்றுப் பங்குகளைப் பராமரித்து வந்திருக்கலாம். இதில் ஏற்பட்ட நேர்மையின்மை, முரண்பாடுகள் காரணமாக நாளடைவில் காணி உறுதியில் எழுதி முறையான எழுத்து ஆவணமாக்கி இருக்கலாம். 

இந்தக் கிணற்றுப் பங்கு உரிமைப் பிரச்சினைகளால் அடிதடி வெட்டுக்குத்துகள், கொலைகள் கூட முன்னைய நாள்களில் இடம் பெற்றுள்ளன. சகோதரர்களில் உறவுகளுக்கிடையில், ஊர்களுக்கிடையில் பரம்பரைப் பகைமைகூட நிலவி வந்திருக்கிறது.  

கோடு (நீதிமன்றம்- Courts), கச்சேரி, பொலிஸ் நிலைய வாசல் ஏறி அலைந்த குடும்பங்கள் பல உண்டு. தற்போதும் உள்ளனர். தமது காணியின் விலைக்கு மேலாகத் தண்ணீர்ப் பங்குக்காக வழக்குக்குச் செலவழித்து அறுந்தவர்களும்  உள்ளனர். 

தண்ணீர்ப் பங்கு காரணமாக எல்லை வேலியை முழுதாக அடைக்கவோ, மதில் கட்டவோ விடாமல் மறிப்பார்கள். அப்படியே வேலி, மதில் அமைத்தால்கூட அதில் ஒரு படலை அல்லது கேற் (Gate) போடுவேண்டும்.  

கிணறுகள் அரிதாக இருந்த காலத்தில் இப்படிக் கேட்டதில் ஒரு நியாயம் இருந்தது. ஆனால் பின்னாளில் வீட்டுக்குவீடு கிணறு வந்த காலத்தில் கூடக் காணியின் எல்லையை மூடி மதில் கட்டவோ வேலி அடைக்கவோ விடாமல் சண்டித்தனம் காட்டியவர்கள் இருந்தார்கள். 

முழுதாக வேலியடைக்க அல்லது மதில்கட்ட வேண்டுமாயின் தண்ணீர்ப் பங்கை நீக்க பெரும்தொகைப் பணம் கொடுக்கவேண்டும். அப்படிக் கொடுத்தால் நொத்தாரிசு ஒருவர் முன்னிலையில் காணி உறுதியில் உள்ள தண்ணீர்ப்பங்கை நீக்கிக் கொள்வார்கள். 

காணி ஒன்றைப் பிரித்து உறுதி எழுதியபோது தண்ணீர் பங்கு என்ற வசனத்தை மறைத்து எழுதிப் பின்னர் அதன் தாய் உறுதியை (பழைய உறுதியை) ஆதாரமாக வைத்து உரிமைக்காக வழக்காடிய குடும்பங்களும் உள்ளன. 

இது தொடர்பான வசனங்களில் கருத்து மயக்கத்தை வேண்டுமென்றே இட்டு எழுதிய சட்டத்தரணிகளும் உண்டு. தான் எழுதிய காணியை வைத்துப் பின்னர்தானே வழக்காடி உழைத்த விண்ணன்களும் உண்டு.  

நீதிமன்றங்களில் காணி உரிமை தொடர்பாகச் சிவில் வழக்கு ஒன்றுக்குச் சென்றால் 5 வருடங்கள் முதல் அதற்கு மேற்பட்ட வருடங்கள் வரையில் காலத்தைச் செலவிட வேண்டிவரும். 

காணி ஒன்றில் வீடு கட்ட விரும்பும் ஒருவர் “வழி வாய்க்கால்” பாவிப்பு உரித்தை நீக்குவதற்கு முறைகேடாகக் கடிதங்களை வாங்கி உள்ளுராட்சி மன்றங்களில் கட்டிட அனுமதிக்காக விண்ணப்பித்து நன்மை பெறுவார்கள். இந்த முரண்பாடுகளால் நீதிமன்றத்திற்கு சென்று வழக்காடுபவர்களும் உண்டு. 

போரின் காரணமாக காணி உரிமையாளர்கள் புலம் பெயர்ந்தோ, உள்நாட்டில் இடம்பெயர்ந்தோ போக கிணற்றுப் பங்கு வழிவாய்க்கால் பாவிப்பு உரித்துகளை மறைத்துக் காணி விற்றோரும் உண்டு. 

தண்ணீர்ப் பங்கிற்காக கிணற்றுக்குச் செல்லும் நடைபாதை கூடப் பொதுக் காணியாக உறுதிகளில் காட்டப்படும் விசித்திரங்கள் கூட உண்டு. 

தோட்டக் காணிகளுக்கும் தண்ணீர்ப்பங்கு, வழிவாய்க்கால் பாவிப்பு உரித்து என்பவை உண்டு. பல தோட்டக்காரர்கள் சேர்ந்து வெட்டிய கிணற்றின் பங்கு குறித்து உறுதியில் எழுதி இருப்பார்கள். உறுதியில் தண்ணீர்ப் பங்கு இல்லாத ஒருவரைத் தோட்டத்திற்கு நீர் இறைக்கவிட மாட்டார்கள்.  

ஒரு கிணற்றில் 5 தோட்டக்காரர்களுக்குப் பங்கு இருந்தால் பயிர்களுக்கு முறை வைத்து இறைப்பார்கள்.  

காலை, மாலை நேரம் ஒன்றைக் குறித்து முறை வைப்பார்கள். காலை நேர முறை உள்ளவர்கள் காலையில் மட்டும் பயிர்களுக்கு நீர் இறைக்கலாம். அதுபோலவே மாலை நேரமும். முழுநாள் முறை வைத்து இறைப்போரும் உள்ளனர். 

முறை தப்பினால் அடுத்த முறைக்காகக் காத்திருக்க வேண்டும். அதுவரை பயிர்கள் வாட வேண்டியது தான். 

இன்று வீட்டுக்கு வீடு தண்ணீர்க் கிணறுகள், குழாய் கிணறுகள் வந்துவிட்டன. பணவசதிகளும் உச்சத்தில்வந்து விட்டன. தண்ணீர்ப் பங்குப் பிரச்சினைகளும் மிகப் பெருமளவுக்கு குறைந்து விட்டன. 

யாழ்ப்பாணத்திற்கே உரியதனித்துவமான இவ் விடயம் தொடர்பாகமிக நீளமான நினைவுகள் உள்ளமை மறக்க முடியாதது.