‘கிணறு வெட்ட பூதம் வந்த கதை’ (பிரதேசவாதம் என்பது சிறு குழு வாதமாக மாற்றம் பெற்றுள்ள பரிதாபம்?)

‘கிணறு வெட்ட பூதம் வந்த கதை’ (பிரதேசவாதம் என்பது சிறு குழு வாதமாக மாற்றம் பெற்றுள்ள பரிதாபம்?)

— வி. சிவலிங்கம் — 

‘தமிழ் அரசியலின் இன்றைய பிளவு நிலமைகள்’ என்ற தலைப்பில் தமிழ் அரசியலில் காணப்படும் இன்றைய உள் முரண்பாடுகளை நோக்கிய பார்வையாக என்னால் எழுதப்பட்ட கட்டுரை எதிர்பார்க்கப்பட்டபடி தாக்க விளைவுகளை உருவாக்கி வருகிறது. ஆனால் அவை மிகவும் பலவீனமான, இன்றைய அரசியல், சமூக, பொருளாதார மாற்றங்கள் மற்றும் உலக மாற்றங்கள் எதனையும் விஞ்ஞானபூர்வ அடிப்படையில் கவனத்தில் கொள்ளப்படாமல் வெறுமனே கடந்த காலத்தோடு விவாதங்கள் தொடர்வது மிகவும் கவலை தருகிறது. நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளுக்கு அப்பால் சென்றுள்ள நிலையில் இன்னமும் குடியேற்ற ஆட்சிக் காலத்து வரலாறுகளைத் துணைக்கழைத்து அதன் தாக்கத்திலிருந்து விடுபட முடியாமல் தவிப்பதாக ஒரு கதையாடல் அல்லது தர்க்கம் உருவாக்கப்படுகிறதே தவிர வேறு எதனையும் காண முடியவில்லை. இங்கு காத்திரமான எதிர்காலப் பாதை ஒன்றிற்கான விவாதங்கள் தேவையே தவிர கடந்தகாலத்தை நோக்கிய வாதங்கள் அல்ல. கடந்த காலத்தின் சில எச்ச சொச்சங்கள் இன்றும் தொடரலாம். ஆனால் அவை இன்றைய வரலாற்றின் போக்கைத் தீர்மானிக்கும் காரணிகள் அல்ல என்பதே எனது கருத்தாகும்.   

குடியேற்ற ஆட்சிக்கால கால எச்ச சொச்சங்கள் 

கிழக்கு மாகாணத்திற்கான தனித்துவமான அரசியல் அணுகுமுறையின் அவசியம் மிகவும் உணரப்பட்ட போதிலும் அம் மாற்றங்களை நோக்கிய இந்த விவாதங்கள் அம் மக்களின் இன்றைய அபிலாஷைகளை வெளிப்படுத்துவதற்குப் பதிலாக எதிரிகளை உற்பத்தி செய்யும் விவாதங்களாக அல்லது மிகவும் குறுகிய அடிப்படைகளைக் கொண்டதாக அல்லது அடுத்த 25 ஆண்டுகளில் ஏற்படக்கூடிய அரசியல், சமூக, பொருளாதார மாற்றங்களைக் கவனத்தில் கொண்டு முன்வைக்கும் நியாயங்களாகவும் அவை இல்லை.  

விவாதங்களைச் சற்று ஆழமாக அவதானிக்கும் போது ஒரு சிறு குழுவினரின் சந்தர்ப்பவாத அரசியலை மறைத்துச் செல்லும் வகையிலான உணர்ச்சியூட்டும் தந்திரங்களாகவே அவை உள்ளன. ஒருவேளை இத்தகைய வாதங்கள் தேர்தல் அரசியலிற்கு அதாவது வாக்கு வங்கி அரசியலிற்கு உதவலாம். ஆனால் சமூக மாற்றத்திற்கு உதவப் போவதில்லை. பலமான ஜனநாயக வரலாற்றைக் கொண்டுள்ள நாட்டில் ஜனநாயக விழுமியங்களைப் பலப்படுத்திச் செல்லும் உள்ளடக்கங்களைக் கொண்டிருக்காமல் இனங்களிடையே பிளவுகளையும், விரிசல்களையும் தொடர்ந்து உற்பத்தி செய்யும் கருத்துகளே முன்வைக்கப்படுகின்றன.  

இதுவரை வெளியான கருத்துக்கள் பலவும் பிளவுகளை நோக்கியதாகவே உள்ளன. ஓர் சமூகத்தின் எதிர் காலத்தினை எதிரிகளை மையமாக வைத்து அல்லது நடப்பிலுள்ள அரசியல், சமூக, பொருளாதார பின்னணிகளைப் புறம் தள்ளி அல்லது பிளவுகளை உருவாக்கும் காரணிகளை மையமாக வைத்துக் கட்ட முடியாது. அவை எதிர்கால செயற்பாடுகளை மேற்கொள்ளும்போது எச்சரிக்கை தரும் சமிக்ஞை என்ற அடிப்படையிலேயே நோக்குதல் வேண்டும். இவ் விவாதங்களில் பல ஏற்கெனவே காலாவதியாகி எச்ச சொச்சங்களாக வலம் வரும் சில கருத்தியல்களை முன் நிறுத்தி, உணர்ச்சி அரசியலைத் தூண்டும் முயற்சிகளாகவே உள்ளன. இத்தகைய பொறுப்பற்ற உணர்ச்சியூட்டும் கருத்துகளால் எமது சமூகம் மிக அதிக விலைகளைக் கொடுத்துள்ளது. அதனை நோக்கியே இத்தகைய விவாதங்களும் நகர்கின்றன. கடந்த காலம் கசப்பான பல வரலாறுகளைக் கொண்டிருக்கிறது. இவற்றைக் கடந்துதான் சமூகம் பயணிக்கிறது. நவீன சமூகம், ஜனநாயகம், சுயநிர்ணய உரிமை, பன்மைத்துவம்,வெளிப்படைத் தன்மை, மனித உரிமை என உலகப் பொதுமையை நோக்கிச் செல்கிறது. இவற்றை மையமாக வைத்தே அமைதி முயற்சிகளும், நிறுவனங்களும் தோற்றம் பெறுகின்றன. ஆனால் இவ் விவாதங்கள் அவற்றைக் கவனத்தில் கொண்டதாக அல்லது அவற்றை வற்புறுத்திச் செல்பவைகளாக அல்லது எந்தச் சமூகத்தின் நல் வாழ்விற்காக என வாதிடப்படுகிறதோ அச் சமூகத்தின் பிரதான விழுமியங்களாகவும் அவை முன்வைக்கப்படவில்லை.          

எனது கட்டுரையின் அடிப்படை நோக்கங்கள் 

மேலே குறித்த விழுமியங்களை வற்புறுத்தும் வகையிலான தலைப்பில் கட்டுரை வரைவதற்கான காரணம் தமிழ் அரசியல் எவ்வித மாற்றமும் இல்லாமல், இறுக்கமான நிலையிலிருப்பது, அதுவும் பல இழப்புகளுக்குப் பின்னரும் மாற்றங்களை நோக்கிச் செல்லத் தயங்குவது மிகவும் ஆபத்தான விளைவுகளைத் தோற்றுவிக்கலாம் என்ற அச்சம் காரணமானதே. குறிப்பாக அக் கட்டுரையில் எமது நாடு சுதந்திரமடைந்த பின்னர் பல்வேறு மாற்றங்களினூடாகப் பயணித்து வருவதையும் குறிப்பாக அரசியல் யாப்பு மாற்றம், பொருளாதாரக் கட்டுமான மாற்றம், சர்வதேச உறவு மாற்றங்கள் என்பவற்றால் நாடு ராணுவக் கலவையுடன் கூடிய தெரிவு செய்யப்பட்ட சர்வாதிகார கட்டுமானத்தை நோக்கியதாக மாறிச் செல்வதை அடையாளப்படுத்தி இவை குறித்து தமிழ் அரசியலில் காத்திரமான கருத்து மாற்றங்கள் அல்லது விவாதங்கள் ஏற்படவில்லையே அதற்கான பின்னணிகள் என்ன? அத் தடைகள் என்ன? ஒட்டு மொத்த ஜனநாயக பலப்படுத்தல்கள் இல்லாமல் தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வுகள் சாத்திமா? என்பதை விவாதத்திற்குட்படுத்தவே அக் கட்டுரை வரையப்பட்டது. ஒட்டு மொத்தமான இலங்கையின் அரசிலும், அரசியல் விவாதங்களிலும் ஏற்பட்டு வரும் பண்பு மாற்றங்கள் அச்சம் தருவதாக அமைவதால் தமிழ் அரசியலை அல்லது அதன் தலைமைகளைக் கேள்விக்குட்படுத்தும் நோக்கிலேயே அக் கட்டுரை வரையப்பட்டது. ஓர் ஆழமான சமூகப் பார்வையை எதிர்பார்த்தே எழுதப்பட்டது. ஆனால் அவை வேறு திசையை நோக்கியதாக மாறி வரலாற்றின் உண்மைத் தன்மையைப் பரிசோதிக்கும் வாதங்களாக மாறியுள்ளன.    

தமிழ் அரசியலில் எழுந்துள்ள பல்வேறு உள் முரண்பாடுகளைக் கோடிட்டுக் காட்டியுள்ள அக் கட்டுரை அவற்றில் கிழக்கு மாகாண அரசியலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த கருத்துக்களையும் பதிவு செய்திருந்தது. குறிப்பாக,சுதந்திரத்திற்குப் பின்னதான அரசியல் போக்கினை அவதானிக்கையில் கிழக்கு மாகாண அரசியல் சமீப காலமாக புதிய அரசியல் பாதையை நோக்கிச் செல்வதன் அவசியமும், அதற்கான முன்னெடுப்புகளும் உருவாவதை அவதானிக்க முடிந்தது.  இவை இன்றுள்ள இனவாத சக்திகளின் சூழ்ச்சி அரசியல் நகர்வுகளின் தாக்கங்களின் விளைவுகளின் பின்னணியாக இருப்பதாகவே சாட்சியங்கள் அடையாளப்படுத்துகின்றன. கூட்டமைப்பின் அரசியல் உள் முரண்பாடுகள், உட்கட்டமைப்பு மோதல்கள், வாக்குவங்கி அரசியலை நோக்கி நகரும் பேரம் பேசும் நிலமைகள் என பல அம்சங்கள் பல கேள்விக்குட்படுத்தப்படுகின்றன. 

அரசியல் உரிமைகள்அபிவிருத்தி தேவைகள் பற்றிய விவாதங்கள்   

தமிழ் அரசியல் மிக மோசமான அரசியல் நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது. அரசியல் மற்றும் அபிவிருத்தி தொடர்பான இணைந்த அரசியல் பாதையை உரிய முறையில் வகுக்காமல் வெறுமனே அரசியல் உரிமைகள் பற்றிய கோரிக்கைகளுக்குள் தம்மைப் புதைத்துக் கொண்டனர். இதற்கான பிரதான காரணம் அத் தலைமைகளின் வர்க்க குணாம்சங்களாகும். தமிழரசுக் கட்சியின் தோற்றமே தமிழ்ச் சமூகத்தின் ஆதிக்க சக்திகளின் தேவைகளை நிறைவேற்றுவதாகவே அமைந்தன. சாமான்ய மக்களின் தேவைகளை, பிரச்சனைகளைக் கோருவது சலுகை அரசியல் என வர்ணித்த அதே தலைமைகள் இன்று அதுவும் உரிமைதான் எனப் பேசத் தொடங்கியுள்ளன. ஏனெனில் அபிவிருத்தி தேவைகள் அவர்களை, அப் பிரிவினரை, அவர்களின் நலன்களை இப்போதுதான் பாதிக்கத் தொடங்கியுள்ளன.  

அபிவிருத்தி அரசியல் 

வடக்கில் தமிழரசுக் கட்சியின் அல்லது கூட்டமைப்பின் உரிமை அரசியல் அடிப்படைகள் தற்போது ஆட்டம் காணத் தொடங்கியுள்ளன. மக்கள் சாரி சாரியாக அரச ஆதரவு சக்திகளை அல்லது அபிவிருத்தி அரசியலை நோக்கித் திரும்புகின்றனர். எனவே அபிவிருத்தி என்பதும் உரிமைதான் எனப் பேசுகின்றனர். வடக்கின் உரிமை அரசியல் கிழக்கையே பெரிதளவில் பாதித்தது. முஸ்லீம் மக்களின் பிரதேசங்கள் படிப்படியாக வளர்ச்சி அடைவதும், தமிழ்ப் பிரதேசங்கள் படிப்படியாக தேய்ந்து செல்வதும், அதேவேளை அரசியல் அதிகாரங்களும் தமிழ் மக்களிலிருந்து நழுவிச் செல்வதும், அந்த வாய்ப்புகளை முஸ்லீம் தலைமைகள் பயன்படுத்திக் கொள்வதும் ஓர் நெருக்கடி நிலமைகளைத் தோற்றுவித்துள்ளன. 

ஆனால் முஸ்லீம் தலைமைகள் தமது அடிப்படை அரசியல் உரிமை அம்சங்களைக் கைவிட்டு அபிவிருத்தி அரசியலை நோக்கிச் சென்றதன் காரணமாக எழுந்துள்ள இன்றைய நிர்க்கதி நிலமைகள் அவ்வாறான சந்தர்ப்பவாத அரசியல் போக்கிற்கான விலைகளாகவே உள்ளன. இந்த வரலாற்றுப் பாடங்களை கிழக்கின் சில தமிழ் அரசியல் பிரிவினர் புரிந்து கொள்ளவில்லை. மத்தியில் பலமாக அமைந்துவரும் சிங்கள பௌத்த இனமையவாத நிகழ்ச்சி நிரலை அலட்சியப்படுத்தி தம்மால் புதிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என வாதிப்பது சிறுபிள்ளை வேளாண்மை போன்றது. நாடு முழுவதும் பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் இருக்கையில், அதேவேளை சிங்கள பௌத்த பேராதிக்க அரசியல் பௌத்த நாடாக மாற்றும் திட்டத்தில் செயற்படுகையில் அதன் உள்ளார்ந்த சூழ்ச்சிகளை அறிந்தும் அறியாதவர்கள் போல அல்லது அவை பற்றி மௌனமாகக் கடந்து செல்வது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அச் சந்தேகம் குறித்த விளக்கங்கள் இன்னமும் வெளிவரவில்லை.  

உதாரணமாக, இலங்கை தொடர்ச்சியாகவே சிங்கள பௌத்த ஆட்சியாளர்களாலேயே அதிகாரம் செலுத்தப்படுகிறது. இருப்பினும் பிரச்சனைகள் மிகவும் கூர்மையாக மாறி வருகின்றன. சிங்கள மக்கள் மத்தியில் பிரச்சனைகள் அதிகரித்தே உள்ளன. சிங்கள மக்கள் சிங்கள ஆட்சியாளர்களால் ஆளப்பட்ட போதிலும் இன்னமும் பிரச்சனைகள் உள்ளனவே ஏன்? சிங்கள ஆட்சியாளர்களுடன் இணைந்து அபிவிருத்தி செய்யலாம் என எண்ணிய முன்னாள் கிழக்கு முக்கியஸ்தர்களான தேவநாயகம், ராஜன் செல்வநாயகம், கனகரத்னம், இராசதுரை போன்ற மற்றும் பலரால் ஏன் முடியவில்லை? இன்று தேர்தல் அரசியலை நடத்தும் புதியவர்களான வியாழேந்திரன், சந்திரகாந்தன், முரளீதரன் போன்றோரால் தற்போதுள்ள இனவாத புறச் சூழலில் ஏதாவது சாதிக்க முடியுமா? இவர்களால் சில சமயம் சில தேர்தல்களை வெற்றி பெற முடியும். கிழக்கு மாகாண மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை இத்தகைய சந்தர்ப்பவாத அரசியலால் வெற்றி கொள்ள முடியாது. பாதுகாக்கவும் முடியாது. மத்தியில் அமைந்துள்ள இனவாத அரசுடன் நடத்தும் உறவுகளுக்கு நியாயம் கற்பிக்க ஆறுமுகநாவலரும், இராமநாதனும் உதவலாம். ஆனால் கிழக்கு மாகாண தமிழரின் புதிய அரசியலிற்கு அவை நியாயங்களாக அமையாது. 

இந்திய அனுபவங்கள் 

இத் தருணத்தில் ஒரு உதாரணத்தை முன்வைக்கிறேன். இந்தியாவின் பிரச்சனைக்குரிய மாநிலமாக அமைந்துள்ள ஜம்மு – கஷ்மீர் பிரதேசம் ஏன் இன்று வரை போராடுகிறது? இந்திய மாநிலங்களில் பல விதங்களில் முன்னேற்றத்தை அடைந்திருக்கும் அம் மாநிலத்தில் இன்னமும் சுயாட்சிக்கான போராட்டமும், உயிரிழப்புகளும் தொடர்கின்றன. இன்றைய இந்திய ஆட்சியாளர்கள் பலவித அபிவிருத்திகளை அறிவித்த போதிலும் போராட்டங்கள் ஓயவில்லை. அம் மக்கள் அடிப்படை ஜனநாயக உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது என்பதில் மிகவும் உறுதியாக உள்ளனர். இந்திய அரசு அங்கு பாரிய ராணுவத்தைக் குவித்துள்ள போதிலும் மாற்றங்கள் ஏற்படவில்லை. இந்திய அரசு அரசியல் அமைப்பின் 370வது பிரிவை இடைநிறுத்தி அதன் மாநில அந்தஸ்தை யூனியன் பிரதேசமாக மாற்றி எச்சரித்திருக்கிறது. ஆனால் போராட்டங்கள் தொடர்கின்றன. அதே போலவே இலங்கை அரசும் அரசியலமைப்பின் 13வது திருத்தத்தினைப் பலவீனமாக்கி வருகிறது. வடக்கு, கிழக்கு மக்கள் வேலைவாய்ப்பு, அபிவிருத்தியையே கோருவதாக அரசு கூறுகிறது. உண்மை நிலை என்ன? ஆனால் இந்த விவாதங்களில் அவை பற்றி எதுவுமே இல்லை.                              

கிழக்கு மாகாண தனித்துவம் 

கிழக்கு மாகாணத்தின் தனித்துவமான நிலமைகள் ஓர் தந்திரோபாய அரசியல் மாற்றத்தை வேண்டி நிற்கின்றன. மூன்று சமூகங்களும் கிட்டத்தட்ட சம அளவில் இணக்கத்துடன் சக வாழ்வு நடத்தும் ஓர் அனுபவம் வட பகுதி மக்களுக்குக் கிடைக்கவில்லை. சுதந்திரம் கிடைத்த சில காலத்திற்குள்ளாகவே தமிழரசுக் கட்சி தோற்றம் பெறுகிறது. குடியேற்ற ஆட்சியின் விளைவுகள் தனித்தனி இனங்களின் பாதுகாப்புக் குறித்த மற்றும் நலன்கள் சார்ந்த அரசியலை நோக்கி மாற்றம் பெறுகின்றன. பலமான அரசியல் கட்சி வடிவங்களைப் பெற்றிராத முஸ்லீம் மக்கள் குறிப்பாக கிழக்கிலங்கை முஸ்லீம் மக்கள் பலமான ஸ்தாபன வடிவங்களை சுதந்திரத்திற்கு முன்னரேயே பெற்றிருந்த ஐ தே கட்சி, சிறீலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ்க் கட்சிகளுடன் இணைந்து தமது பாதுகாப்பை உறுதி செய்ய முனைந்தன.  

சுதந்திரத்திற்குப் பின்னரான சிங்கள பௌத்த பெருந்தேசிய மையவாத சிந்தனைகள் ஏனைய தேசிய இனங்களை பிரித்தாளும் தந்திரங்களைப் பயன்படுத்தி பிளவுபடுத்திப் பலவீனப்படுத்தின. இதன் விளைவாக இன நல்லிணக்கம் என்பது முரண்பாடுகளின் கூர்மைப் போக்கால் மேலும் பிளவுண்டு சென்றது. அரசாங்கத்தின் திட்டமிட்ட குடியேற்றங்களும், முஸ்லீம் – தமிழ் திட்டமிட்ட பிளவுபடுத்தல்களும் இன்று மிக மோசமான இன மோதல்களின் களங்களாக அவை மாற்றமடைந்துள்ளன. இதன் விளைவாக எழுந்துள்ள அரசியல், சமூக நிலமைகளே கிழக்கு மாகாண சமூகங்களின் முரண்பாடுகளின் தோற்றுவாயாக உள்ளன. சிலர் கடந்தகால  வரலாற்றின் சில பகுதிகளை ஆரம்பமாக வைத்துக் காரணங்களைத் தேடலாம். ஆனால் இன்றைய முரண்பாடுகள் முற்றிலும் வித்தியாசமானவை. குடியேற்ற ஆட்சிக்குப் பின்னரான அரசியல் முரண்பாடுகளின் விளைவாக எழுந்த பிரச்சனைகளாகும். நாட்டின் அரசியல் யாப்பு மாற்றங்களும், அதில் இதர தேசிய இனங்களின் உரிமைகள் இரண்டாம்பட்ச நிலமைக்குத் தள்ளப்பட்டிருப்பதும் இன்று மிகவும் தெளிவாகவே உணரப்படுகிறது. உதாரணமாக முஸ்லீம் மக்களின் ஜனாசாக்கள் அம் மக்களின் மத கலாச்சார அடிப்படையில் பல்லாண்டுகளாக நிகழ்ந்து வருகையில் எவ்வித ஆதாரமும் இல்லாமல் எரிக்கும்படி கோருவதும், சிங்கள பௌத்த மக்கள் வாழாத பகுதிகளில் பௌத்த விகாரைகளைக் கட்டுவதும் ஏனைய சமூகங்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் அம்சங்களாகும்.         

தமிழரசுக்கட்சியும் வர்க்க நிலைப்பாடுகளும் 

வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் தலைமையை வைத்திருந்த தமிழரசுக் கட்சி அதன் உள் முரண்பாடுகளால் படிப்படியாக தனது அரசியலைக் குறும் தேசியவாதமாக மாற்றிக் கொண்டது. தென்னிலங்கையில் இனவாதம் பிரதான இயங்கு சக்தியாக செயற்படுகையில் தமிழர் தரப்பில் அதற்கான எதிர் விளைவுகள் இன்னொரு இனவாதமாக மாற்றம் பெற்றன. இதன் விளைவாக முஸ்லீம் மக்களும், சிங்கள மக்களும் தமிழ் குறுந்தேசியவாத தலைமைகள் தமது நலன்களுக்கு எதிராகச் செயற்படுவதாகக் கருதினர். இப் பின்னணியில் கிழக்கு மாகாண தமிழ் மக்கள் தனித்து விடப்படுகின்றனர். தமிழ் மக்களில் ஒரு சாரார் தீவிரவாதத்தைப் பயன்படுத்தி முஸ்லீம் – தமிழ் ஒற்றுமையைச் சிதைத்தனர். சிங்கள பெருந்தேசியவாதம் பாதிக்கப்படும் முஸ்லீம் மக்களின் பாதுகாவலான பாசாங்கு செய்யும் அரசு, சில சலுகைகளை வழங்கி அம் மக்களை ஏமாற்றினர். மொத்தத்தில் தமிழ் அரசியல் தலைமைகள் கிழக்குத் தமிழ் மக்களைக் கைவிட, அரச ஆதரவு சௌகரியங்களை அனுபவித்த முஸ்லீம் தலைமைகள் முஸ்லீம் மக்களை இன்று கைவிட்டுள்ளனர். இவ்வாறாக கிழக்கு மாகாண அரசியல் ஓர் சிக்கலான இடருக்குள் சிக்கியுள்ளது.   

இன்று முஸ்லீம் மக்கள் இலங்கையில் தமது இருப்பின் நிலை குறித்து தீவிர சிந்தனைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். சிங்கள மக்கள் மத்தியில் பெரும்பான்மையாக வாழும் முஸ்லீம் மக்கள் தமது கலாச்சாரம், பண்பாடு, பொருளாதாரம் என்பன கேள்விக்குட்படுத்தும் நிலையிலிருப்பது குறித்து மிகவும் விசனமடைந்துள்ளனர். எவ்வித சட்டப் பாதுகாப்பும் அற்ற கையறு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மத வழிபாடுகள், கல்வி முறைகள் மற்றும் வாழ்வுப் பண்பாடுகளை சுதந்திரமாக செயற்படுத்த முடியாது இருப்பது அம் மக்களின் இருப்புக் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. தாம் இலங்கையின் பிரஜைகளா? எனச் சந்தேகம் எழுப்பும் நிலை காணப்படுகிறது. தமிழ் மக்கள் நடத்தும் ஜனநாயக உரிமைப் போராட்டத்தின் அடிப்படை அம்சங்களின் உண்மைகளை, விடாப்பிடியான போராட்ட குணாம்சங்களின் அடிப்படைகளை இப்போது அவர்களால் உணர முடிகிறது. அதனால் புதிய விவாதங்கள் அம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளன.    

சிறுகுழுவாதமாக மாறும் பிரதேசவாதம்  

தற்போது சிங்கள பௌத்த பெருந்தேசியவாதம் முஸ்லீம் மக்களின் அடிப்படை உரிமைகள் தொடர்பான பல கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில் கிழக்கு மாகாணத்தில் வாழும் மூவினங்களும் அமைதியாக வாழ்வதற்கான வழி என்ன? என்பது கேள்வியாக மாறியுள்ளது. இதற்கான பதில்களைத் தேடும் பயணத்தில் நாம் இறங்கும் வேளையில் ஆறுமுகநாவலரின் நூற்றாண்டு கடந்த வரலாற்றின் எச்ச சொச்சங்கள் இன்னமும் தமிழ் அரசியலை நடத்துவதாக விவாதங்கள் ஆரம்பமாகியுள்ளன. சிங்கள பௌத்த மேலாதிக்கம் குறித்து இதுவரை கட்டுரைகள் எதையும் பேசவில்லை. அவ்வாறாயின் யாழ். சாதி ஆதிக்க அரசியல் சிங்கள பௌத்த மேலாதிக்க அரசியலை விட மோசமானது என கட்டமைக்க எண்ணுகிறார்களா? இவைகளே சிறிய பிரிவினரின் அரசியல் சித்து விளையாட்டு என வர்ணிக்கத் தோன்றுகிறது. நூற்றாண்டு கடந்த இத்தகைய கருத்துகள் இன்றைய ஜனநாயக சமூகத்தை எவ்வாறு கட்டுப்படுத்துகிறது? என்பதற்கான விஞ்ஞானபூர்வமான விளக்கங்கள் எதுவுமில்லாமல் வெறும் கதைகள் மூலம் அரசியலை விவாதிக்க எத்தனிக்கப்படுகிறது. எமது சமூகம் அவ்வாறான தடைகளைத் தாண்டி வெகு தூரம் முன்னேறியுள்ளது. அவ்வாறான பிற்போக்கு அம்சங்களிலிருந்து சமூகங்கள் வெகுதூரம் முன்னேறியுள்ளது. அவ்வப்போது குடியேற்ற ஆதிக்க எச்ச, சொச்சங்கள் வெளியில் தலைகாட்டினாலும் தாக்கங்கள் அற்பமானவை. சமூக முன்னேற்றத்தைத் தடுத்து விட முடியாதவை.   

பிளவுபடுத்தி ஆளும் தந்திரங்கள்  

தேசிய இனப் பிரச்சனையில் குறிப்பாக சுதந்திரத்திற்குப் பின்னரான தேசிய அரசியல் படிப்படியாகக் குறுந்தேசியவாத அரசியலாக மாறி சிங்கள மக்களும்,தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களும் பரஸ்பர எதிரிகளாக நிறுத்தப்பட்டுள்ளனர். இது குடியேற்ற ஆட்சிக்கால ‘பிளவுபடுத்தி ஆழுதல்’ என்ற சூழ்ச்சிகளின் அடிப்படையில் சமூகங்களைப்  பரஸ்பரம் எதிரிகளாக மாற்றி நாட்டின் செல்வத்தைச் சுரண்டும் வகையிலான அரச கட்டுமானத்தை இன்று உருவாக்கி வருகின்றனர். இதற்குக் காரணம் சிங்கள பௌத்த பெருந்தேசியவாத தந்திரங்களும், முஸ்லீம் மற்றும் தமிழ் அரசியல் தலைமைகளின் சந்தர்ப்பவாத அரசியல்களாகும். இதற்கு சாமான்ய தமிழ் அல்லது முஸ்லீம் மக்கள் பாத்தியதை உடையவர்கள் அல்ல. சிங்கள, தமிழ், முஸ்லீம் அரசியல் தலைமைகளின் வர்க்க அடிப்படையிலான இணக்க அரசியலே இன்றைய முரண்பாடுகளின் ஆணி வேராகும்.   இவ்வாறாகவே தமிழ் அரசியல் போக்கும்  மாற்றமடைந்து சென்றமைக்குக் காரணம் என்பது அங்கு காணப்பட்ட பல்வேறு சமூக உட் கூறுகளின் உள் முரண்பாடுகளின் வெளிப்பாடு எனவும், இம் முரண்பாடுகளின் தோற்றுவாய் என்பது தமிழ் அரசியலில் காணப்பட்ட ஜனநாயகப் பற்றாக்குறையா? அல்லது பிரதேசவாதமா? என்பதை நோக்கியதான விவாதமாக கட்டுரை அமைந்தது. 

ஜனநாயகப் பற்றாக்குறை விளக்கம் 

இங்கு பயன்படுத்தப்பட்ட ‘ஜனநாயகப் பற்றாக்குறை’ என்ற கருத்தியல் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இக் கட்டுரையின் வசதி கருதி இரண்டு விளக்கங்களை மட்டும் எடுத்தாளலாம். உதாரணமாக, இன்று இலங்கையில் காணப்படும் தேசிய இனப் பிரச்சனை குறித்து தரப்படும் விளக்கங்களை அவதானிக்கலாம். இரண்டாவது உலக மகா யுத்தத்தின் பின்னர் குடியேற்ற ஆதிக்கத்தின் கீழிருந்த பல நாடுகள் சுதந்திரம் பெற்றன. அதாவது அந்நிய காலனி ஆதிக்கத்திலிருந்து அம் மக்கள் விடுவிக்கப்பட்டு சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சுதந்திரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. சுதந்திரம் பெற்ற நாடுகளுக்கு ஏற்கெனவே சர்வதேச அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தேச எல்லைகள் இருந்தன. எனவே அத் தேச எல்லைகளுக்குள் வாழ்ந்த மக்கள் தமது எதிர்காலத்தைத் தாமே தீர்மானிக்கும் ஜனநாயகக் கட்டுமானத்திற்குள் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் செயற்பட சுதந்திரம் வழங்கப்பட்டது. 

இந் நாடுகளுக்குச் சுதந்திரம் வழங்கப்பட்ட போதிலும் அந் நாடுகளில் பலவற்றில் இன்னமும் உறுதியான ஆட்சிகள் நிலைக்கவில்லை. சுயநிர்ணய உரிமை வழங்கப்பட்டிருந்தும் அம் மக்கள் அவற்றை அனுபவிக்க முடியவில்லை. அவ்வாறான ஒரு நாடாக இலங்கை உள்ளது. பெரும்பான்மைச் சிங்களவரால் தாம் ஒடுக்கப்படுவதாகவும், தமது மொழி மற்றும் அடையாளங்கள் சிதைக்கப்படுவதாகவும், இதற்கான பிரதான காரணியாக குடியேற்ற ஆட்சியாளரின் பிரித்தாளும் தந்திரங்களே இருந்தன என்ற வாதம் தற்போதும் முன்வைக்கப்படுகிறது.  

தமிழ் தரப்பினரில் சில பிரிவினர் சிங்கள ஆட்சிக்குள் இனிமேலும் வாழ முடியாது என்பதால் வெளியக சுயநிர்ணய உரிமை அடிப்படையில் பிரிந்து செல்ல உரிமை கோருகின்றனர். ஆனால் ஐ நா சபை போன்ற அமைப்புகள் அவ்வாறான நிலமைகளுக்கான காரணம் ஜனநாயக பற்றாக்குறை என்பதால் பெரும்பான்மைச் சர்வாதிகாரம் என்பதை விட அங்கு காணப்படும் ஜனநாயக விழுமியங்கள் போதுமானதாக இல்லை எனக் கருதி உள்ளக சுயநிர்ணய உரிமை என்ற அடிப்படையில் இலங்கை – இந்திய ஒப்பந்தம், 13வது திருத்தம் என்பவற்றை நோக்குகின்றனர். இதனையே ‘பற்றாக்குறை ஜனநாயகம்’ என்ற கருத்தியலை முன்வைத்தேன்.  

தமிழ் அரசியலில் பற்றாக்குறை ஜனநாயகத்தின் தாக்கங்கள் 

இது பற்றாக்குறை ஜனநாயகத்திற்கான பரந்த விளக்கமாகும். இங்கு தமிழ் அரசியலில் இன்று ஏற்பட்டுள்ள வடக்கு, கிழக்கு நெருக்கடிகளை முன்வைத்து அங்கு காணப்படும் பிரச்சனைகளுக்கும் ‘பற்றாக்குறை ஜனநாயகம்’ என்ற சுருங்கிய விளக்கத்திற்குள் வரையறுத்தேன். அதாவது தமிழரசுக் கட்சிக்குள் பல்வேறு நலன் சார்ந்த குழுக்கள் செயற்பட்டன. ஒரு புறத்தில் நில ஆதிக்கப் பிரிவினர், இன்னொரு புறத்தில் மதம் சார்ந்த பிரிவினர், மற்றொரு புறத்தில் குடியேற்ற ஆட்சி வசதிகளை அனுபவிக்கும் பிரிவினர் என ஓர் கலவை காணப்பட்டது. இதனால் எப்போதுமே முரண்பாடுகள் எழ வாய்ப்பு உண்டு. இருப்பினும் அங்கு ஓர் சமநிலை வர்க்க சமரசம் காரணமாகப் பேணப்பட்டது. இந்தச் சமநிலையை அடைவதற்கு உட்கட்சி ஜனநாயகமே விலை கொடுக்கப்பட்டது. தனிநபர் ஆதிக்கம், குழு ஆதிக்கம், கல்வி ஆதிக்கம், சாதி ஆதிக்கம் எனக் காணப்பட்ட ஆதிக்கப் போட்டிக்கு உட் கட்சி ஜனநாயகமே விலை கொடுக்கப்பட்டது. அவை இன்று வரை தொடர்கின்றன. ஒரு சாரார் சம்பந்தன், சுமந்திரன் ஆதிக்கம் எனவும், இன்னொரு சாரார் மாவை தரப்பின் ஆதிக்கம் எனவும் முன்வைக்கப்படுகிறது. இவை சிக்கலான காலங்களில் ஒன்றிற்கொன்று விட்டுக் கொடுப்பை மேற்கொண்டு தமது நலன்களைப் பேணுகின்றன. எனவே உட்கட்சி ஜனநாயகம் என்பது படிப்படியாகத் தொலைந்து வருகிறது. இதனையே பற்றாக்குறை ஜனநாயகம் என அழைக்கிறேன். இப் பற்றாக்குறை ஜனநாயகத்தின் விளைவே உட் கட்சிகள் மத்தியில் பிரதேச மற்றும் பல நலன்களின் ஆதிக்கம் தொழிற்படுவதற்கு வாய்ப்பாக அமைகிறது. அதன் விளைவுகளையே இன்று கிழக்கு அரசியல் அனுபவிக்கிறது என்பது எனது வாதமாகும். ஆனால் கிழக்கு அரசியல் பற்றிய தற்போதைய விவாதங்களில் ஜனநாயகம் என்ற வார்த்தை தொலைந்தே செல்கிறது.    

வாக்கு வங்கியை நோக்கிய கருத்தியல்கள் 

பிரதேசவாதம் என்பது குறித்து பல கட்டுரைகள் வெளியாகியுள்ள பின்னணியில் அவை இப் பிரதேசவாதம் குறித்த விவாதங்களை மேலும் குழப்புவதாகவே உள்ளன. இங்கு யார் பிரதேசவாதத்தினைக் கையாள்கிறார்கள்? என்பது மிகவும் தெளிவற்றதாகவே உள்ளது. கிழக்கிலுள்ள சில பிரிவினர் வட பகுதியினரே பிரதேசவாதத்தைக் கையாள்வதாகவும், தம்மை இரண்டாம்பட்ச நிலையிலேயே கருதுவதாகவும்  இக் கருத்தியலின் பிதாமகராக ஆறுமுகநாவலரையும் துணைக்கழைத்துள்ளனர்.  

இவ் விவாதங்களை ஆழமாக அவதானிக்கையில் அவை குடியேற்ற ஆட்சிக் காலத்தில் அல்லது அதற்கு முன்னைய காலத்தின் வரலாறுகளை முன்வைத்தே விவாதங்கள் நகர்த்தப்படுகின்றன. ஆனால் இன்றைய இலங்கைச் சமூகம் பல மாற்றங்களினூடகச் சென்றுள்ளது. நாட்டின் பொருளாதாரம் பாரிய மாற்றங்களை அடைந்துள்ளது. நாட்டின் அரசியல் கட்டுமானம் மாற்றங்களை அடைந்துள்ளது. இவை மக்களின் வாழ்விலும்,சிந்தனைப் போக்கிலும் காத்திரமான தாக்கத்தைச் செலுத்துகின்றன.   

அரசியல்பொருளாதார அடிப்படைகள்  

இதுவரை முன்வைக்கப்பட்ட வாதங்கள் எதுவும் இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல், பொருளாதார, சமூக, கலாச்சார மாற்றங்கள் எதனையும் கருத்தில் கொண்டதாக இல்லை. சுருக்கமாகக் கூறினால் விவாதங்கள் எதுவும் விஞ்ஞானபூர்வ அடிப்படைகளிலிருந்து முன்வைக்கப்படவில்லை. அவை ‘பட்டிமன்றம் பாணி’யில் பார்வையாளனின் அல்லது வாசகனுக்கு கிளுகிளுப்பை ஏற்படுத்தும் வகையிலான மொழிப் பிரயோகங்களே தவிர இன்றைய சமூகம்  பற்றிய சமூக ஆய்வு அடிப்படையிலான வாதங்களாக இல்லை. பதிலாக 18ம், 19ம், 20ம் நூற்றாண்டின் குடியேற்ற ஆதிக்க எச்ச சொச்சங்களைக் கதைகளாகப் பின்னி விவாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.   

என்னால் வரையப்பட்ட கட்டுரை, இலங்கையின் எதிர்கால அரசியல் பொருளாதாரம் குறித்த தனது கவலையை வெளிப்படுத்துகிறது. இன்றைய பொருளாதாரம் அதனடிப்படையில் உருவாகி வரும் அரசியல் கட்டுமானம் என்பவற்றின் ஜனநாயக எதிர்காலம் குறித்த கேள்வியை எழுப்புகிறது. இங்கு கடந்த காலம் குறித்த ஆய்வுகள் பற்றிய அறிவு பற்றிய விவாதங்களாக அவை இல்லை. இன்றைய மனிதர்களை வழி நடத்தும் சமூகப் பொறிமுறைகள், அதன் தாக்கங்கள் பற்றிய உரையாடலாகவே அவை தரப்படுகின்றன. அவை எந்த விதத்திலும் ‘பட்டி மன்ற பாணியிலான’ விவாதங்களாக இருக்க முடியாது. அவை விஞ்ஞானபூர்வமான, உற்பத்தி உறவுகளுக்கிடையேயான சமூக வளர்ச்சிப் போக்கின் அடிப்படையிலான உறவுகள் பற்றிய வாதங்களாகவே அமைய முடியும்.  

அந்த அடிப்படையிலேயே இதுவரை முன்வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண அரசியல் வாதங்கள் யாவும் (சில பத்தியாளர்களின் குறிப்பாக 13வது திருத்தத்துடன் அணுகிச் செல்லும் கருத்துக்கள் தவிர்ந்த) பிற்போக்கான அடித்தளங்களை மட்டுமல்லாது, அவை அப் பிரதேசத்தின் மிகச்சிறு பிரிவினரின் பிரதேசவாத முன்னெடுப்பிற்கான அல்லது தேர்தல் அரசியல் அடையாளங்களாகவே கருத வேண்டியுள்ளது. இவை 21ம் நூற்றாண்டின் மாறிவரும் சமூக மாற்றங்களை உள்வாங்காதது மட்டுமல்ல, உட் பிளவுகளை உற்பத்தி செய்யும் ஜனநாயக விரோத அம்சங்களைக் கருவாகக் கொண்டுள்ளதாகவே காணப்படுகிறது.  

குடியேற்ற ஆட்சிக்கால எச்ச, சொச்சங்கள் 

இதுவரை வெளியான கட்டுரைகள் தொடர்பான அல்லது வெளிப்படுத்தப்பட்ட சந்தேகங்கள் யாவற்றிற்கும் பதில்கள் வரையவேண்டிய அவசியம் எழவில்லை. ஏனெனில் அவ் வாதங்கள் யாவும் கடந்த நூற்றாண்டுகளில் ஆதிக்கம் செலுத்தி இன்று காலாவதியாகி வெறுமனே கருத்தியலாக மட்டும் வாழும் சில எச்சசொச்சங்களை முன்னிலைப்படுத்தி அவற்றின் மேல் ஓர் நிழல் யுத்தம் நடத்தும் எழுத்துக்கள் எதிர்காலத்தில் எந்த மாற்றத்தையும் பிறப்பிக்கப் போவதில்லை என்ற அசையாத நம்பிக்கையின் முடிவு ஆகும்.  

யாழ். மேலாதிக்கம், சாதி மேலாதிக்கம் என்பனவற்றின் கடந்தகால செயற்பாடுகள் பற்றிய விளக்கங்கள் ஒரு ஆய்வுக்கு உரியனவே தவிர அவை இன்றைய வாழ்வில் பாரதூரமான தாக்கங்களைத் தராவிடில் அவற்றை அலட்சியப்படுத்திச் செல்வதே பொருத்தமானது. பொதுவாகவே வர்க்க அடிப்படையிலான பிளவுகள் நிறைந்த சமூகங்களில் பல்வேறு கருத்தியல்கள் தொடர்ந்து நிலவுகின்றன. ஒரு காலத்தில் சில கருத்துக்கள் ஆதிக்கம் செலுத்தியிருக்கலாம். ஏனெனில் அதற்கான புறச் சூழல் காணப்பட்டிருந்தது. ஆனால் இன்று அவ்வாறான புறச் சூழல் பெருமளவில் மாற்றமடைந்துள்ளது. மிகவும் முன்னற்றகரமாக உள்ளது. கல்வி, பொருளாதாரம், அறிவியல் வளர்ச்சி போன்றன அவ்வாறான பிற்போக்கு அம்சங்கள் பலமடைவதற்கான பொருத்தமான புறச் சூழலை வழங்காத நிலையில் அவை பற்றிப் பேசுவது எந்த வகையிலும் யதார்த்தமாக அமையாது. அத்துடன் மாறி வரும் சமூகத்தினைப் பின்னோக்கி இழுத்துச் செல்ல முயற்சிப்பது போன்றதாகும். இதனையே இனவாதிகள், பாசிசவாதிகள் போன்ற பிற்போக்கு சக்திகள் பயன்படுத்துகின்றன. எனவேதான் ஜனநாயகம் என்பது தொடர்ந்து விழிப்போடு பேணப்படுவது அவசியமாகிறது.    

மாறிச் செல்லும் சமூக, பொருளாதார கட்டமைப்புகள்  

இன்றைய இலங்கைச் சமூகம் குடியேற்ற ஆட்சிக்கால சமூக, பொருளாதார உறவில் இல்லை. அன்று நில ஆதிக்கம் அதனடிப்படையில் சாதி ஆதிக்கம் மற்றும் குடியேற்ற ஆட்சியாளரின் சேவகம் காரணமாக ஏற்பட்ட கல்வி வளர்ச்சி என்பன அரசியல் தீர்மானங்களில் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு உண்டு. அன்று நாட்டின் பல பாகங்கள் தொடர்பு அற்று மூடிய நிலையில் இருந்தன. நாட்டின் பிரதேசங்கள் பலவும் போக்குவரத்து அற்று, மக்களுக்கிடையேயான தொடர்புகள் குறைந்த நிலையில் அப் பிரதேசங்களில் காணப்பட்ட கலாச்சார அம்சங்கள் வளர்ச்சி அடைந்ததாக அல்லது தனித்துவம் மிக்கதாக மூடிய அளவில் வளர்ந்திருக்க வாய்ப்பு உண்டு. இதை எவரும் மறுதலிப்பதாக இல்லை. இவ்வாறான போக்குகள் உலகம் முழுவதிலுமே காணப்பட்டன. இன்று உலகம் மிகவும் சுருங்கி அவற்றின் அடையாளங்கள் பல அழிந்துள்ளன. இவற்றைக் கொண்டாடுவது என்பது வரலாற்றின் அடையாளங்கள் என்பதே தவிர இன்றும் அவை மாறாதிருப்பதாகவும், அதனடிப்படையில் தனித்துவம் இன்னமும் பேணப்படுவதாகவும் விவாதிப்பது விஞ்ஞானபூர்வமானதாக இல்லை. நவீன பொருளாதார யுகத்தில் தனித்துவமான கலாச்சாரம் என்ற வாதங்கள் மிகவும் பலவீனமானவை.  

இன்றைய உலகம் மிகவும் சுருங்கி வருகிறது. அதில் இலங்கையும் விதிவிலக்கல்ல. நாடு முழுவதும் பாரிய வீதிகள், தொலைத் தொடர்பு வசதிகள், புதிய புதிய நகரங்கள், புதிய சந்தை வசதிகள், கிராமத்திலிருந்து நகரங்களை நோக்கிய இடப்பெயர்வுகள், உலகத் தொடர்புகள், வெளிநாடுகளை நோக்கிய இடப்பெயர்வுகள், தொலைத் தொடர்பு சாதனங்கள் மூலமான கலாச்சார பரிவர்த்தனைகள் மற்றும் விவசாய செயல்களிலிருந்து வெளியேறி சேவைத்துறையை நோக்கியும் மக்கள் சென்றுள்ளனர். இன்று விவசாயத்தை விட பலர் சேவைத்துறையில் இணைந்துள்ளனர். எனவே மனித உறவுகள் மிகவும் விரிவடைந்து சமூகங்களின் கடந்தகால அடையாளங்கள் தொலைந்து வருகின்றன. இம் மாற்றங்களைப் புரிந்து கொள்ளாமல் இன்னமும் கிழக்கு மாகாணத்தில் தனித்துவம் இருப்பதாகக் கூறி புதிய சமூகக் கட்டுமானத்தில் வடக்குக் கிழக்கிற்கான பொதுத் தன்மைகளில் உடன்பாடு காண மறுப்பது அல்லது யாழ்ப்பாணத்தான் சாதியத்திற்குள் மூழ்கியிருப்பதாக இன்னமும் வாதிடுவது யதார்த்தத்திற்கு முரணானது. உண்மைகளைப் புரிந்து மாற்றங்களைத் தேட அவ்வாறான வாதங்கள் உதவாது. ஒருவேளை ‘பட்டிமன்றம்’ நடத்த உகந்ததாக இருக்கலாம். ஆனால் இன்றைய தேவை அதுவல்ல. 

முற்றும்.