மூத்த ஊடகர், எழுத்தாளர் அ.செ.மு.

மூத்த ஊடகர், எழுத்தாளர் அ.செ.மு.

 — சிக்மலிங்கம் றெஜினோல்ட் — 

ஈழத்தின் முக்கியமான சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவர் அ.செ.மு. அதைப்போல மூத்த முன்னோடி ஊடகவியலாளர்களிலும் முக்கியமானவர். 1940களிலேயே ஊடகத்துறையில் இயங்கி, தனி அடையாளங்களை உருவாக்கியவர். ஈழகேசரி, சுதந்திரன், வீரகேசரி, ஈழநாடு, எரிமலை ஆகிய பத்திரிகைகளின் ஆசிரிய பீடங்களில் பணியாற்றிய அ.செ.முருகானந்தன், “எரிமலை” என்று தனியாக தன் சொந்தச் செலவிலும் ஒரு பத்திரிகையை நடத்தியிருக்கிறார். திருகோணமலையிலிருந்து வெளிவந்தது. திருகோணமலையின் முதற்பத்திரிகையும் அதுதான் என்று கூறப்படுகிறது. 

ஆனால் அது நீடிக்கவில்லை. காரணம்,பெரிய பத்திரிகை நிறுவனங்களின் உரிமையாளர்களைப்போல அ.செ.மு பெரும் தனவந்தராக அந்தப் பத்திரிகையை ஆரம்பிக்கவில்லை. அதற்கான பொருளாதார வசதியும் அவரிடம் கிடையாது. குறைந்தது அன்று செல்வாக்குச் செலுத்திக் கொண்டிருந்த அரசியல் தரப்புகளின் ஆதரவைக் கூட அவர் பெற்றிருக்கவில்லை. அதில் அவருக்கு நம்பிக்கையும் ஈடுபாடுமில்லை. அவரிடமிருந்த ஒரே மூலதனம் ஆர்வம் மட்டுமே. அதை வைத்தே ஒரு சுயாதீனப் பத்திரிகையாக எரிமலையை ஆரம்பித்தார். அவ்வாறான சுயாதீனப் பத்திரிகைகளுக்கு நம்முடைய தமிழ்ப் பெரும் சமூகத்தில் கிடைக்கும் ஆதரவைப் பற்றி உங்களுக்குத் தெரியுமல்லவா. அந்த விதியின்படி அது ஆறு இதழ்களோடு நின்று தன்னுடைய வரலாற்றுப் பெருமையைப் பெற்றது. 

ஆனால், அ.செ. முவுக்கு வாசல்கள் ஆயிரம். அதன்படி அவர் ஒரு கதவு மூடப்படும்போது இன்னொரு கதவு என்ற மாதிரி அல்லது ஒரு கதவு மூடப்பட்டாலும் இன்னொரு கதவு திறக்கப்பட வேண்டும் என்று சிந்திப்பவர் என்பதால், வேறு பத்திரிகைகளில் இயங்கினார். அதுவும் போதாதபோது சிற்றிலக்கிய இதழாழராகவும் இருந்திருக்கிறார். ஈழத்தின் முன்னோடி இலக்கிய இதழான “மறுமலர்ச்சி”க்கும் அ.செ.முவே மையம். இதற்கெல்லாம் முக்கிய காரணம், அவர் அடிப்படையில் எழுத்தாளர் என்பதே. இலக்கியத்தில் பேரார்வம் கொண்டவர் என்பதே. 

இப்படியெல்லாம் இருந்த அ.செ.முவை இன்று பலருக்கும் தெரியாது. அதாவது நூற்றாண்டு நாயகனாக நினைவு கூரக்கூடிய ஒரு சிறந்த எழுத்தாளரை –ஒரு முன்னோடி ஊடகவியலாளரை பெருந்தமிழ்ச்சமூகதினால் நினைவில் வைத்திருக்க முடியவில்லை. இது எவ்வளவு துயரம்? எவ்வளவு அவலம்? 

அ.செ. மு தெரிந்தவர்களிலும் பலர் இன்று மறந்து விட்டார்கள். அவர் வாழ்ந்த காலத்திலேயே அவரைக் கை விட்ட நிலையில்தான் இருந்திருக்கிறார். இதனால் அவருடைய மரணம் பற்றிய தகவலே குழப்பமானதாக வந்தது. இரண்டு தடவை அவர் இறந்த சேதியை பத்திரிகைகளே வெளியிட்டன என்றால் நிலைமையின் தாற்பரியத்தை உங்களால் புரிந்து கொள்ள முடியும்.  

ஆனாலும் பலருக்கும் அ.செ.முவின் முக்கியத்துவத்தைப் பற்றித் தெரியும். இப்போது கூட அவர்களிடம் அ.செ.மு என்ற பேரைச் சொன்னால் போதும். எழுந்து உட்கார்ந்து கொண்டு அவரைப் பற்றிப் பேசத் தொடங்கி விடுமளவுக்கு அ.செ.மு வின் எழுத்துகளின் மீது ஈர்ப்புண்டு. அந்தளவுக்கு சிறுகதைகளில் தன்னை அடையாளப்படுத்தியவர் அ.செ.மு. இன்றும் கூட அவருடைய பல கதைகள் நினைவு கொள்ளப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன. அதில் ஒன்று “காளிமுத்துவின் பிரஜா உரிமை” என்ற கதை. 

இது மலையக மக்களை நாடற்றவர்களாக்கும் பிரஜா உரிமைச் சட்டத்தைப்பற்றிப் பேசுகிறது. இதற்குப் பிறகுதான் மலையகத்திலேயே இந்தப் பிரச்சினையைப் பற்றிய எழுத்துகள் மேலெழுந்தன. அந்த வகையிலும் அ.செ.முவே இதற்கும் முன்னோடி. இதை விட “மாடு சிரித்தது”, “மனித மாடு” “பழையதும் புதியதும்” என இன்றும் புதுமை குன்றாத பல கதைகளை எழுதியிருக்கிறார் அ.செ.மு. சிறுகதைகள் மட்டுமல்ல, நாவல்கள், குறுநாவல்கள், கட்டுரைகள் என ஒரு காலத்தில் ஏராளமாக எழுதித்தள்ளியவர். அவற்றில் கவனத்தைக் குவிக்கக் கூடிய அழகியலையும் மொழிச் சிறப்பையும் வெளிப்படுத்தியவர். 

ஆனால் அவற்றையெல்லாம் நூலாக்கும் வாய்ப்பு அ.செ.முவுக்குக் கிடைக்கவில்லை. இதற்குச் சில காரணங்கள் உண்டு. ஒன்று அவர் வசதியான வாழ்க்கையில் ஒரு போதுமே இருந்தவரில்லை. வறுமையும் ஏழ்மையும் தனிமையுமே அவருடைய வாழ்க்கையாக இருந்தது. இரண்டாவது, எந்த அரசியல் நிலைப்பாட்டையும் அ.செ.மு ஆதரித்தவரில்லை. அவருடைய கொள்கை எப்படியானது என்றால், “அரசியல் சமூக விசயங்களை குத்திக் கிளறுவதற்காகவே ஒரு புதுமையான இலக்கியத்தை மறுமலர்ச்சி சிருஷ்டிக்கப் போவதில்லை. ஆனால், இலக்கியத்தின் வளர்ச்சியிலே சமூகத்தின் வளர்ச்சி பின்னி வரும் என்பதை மறுமலர்ச்சி நிரூபிக்கும்” என்பதாகும். இதை அவரே மறுமலர்ச்சி இதழில் குறிப்பிட்டிருக்கிறார். என்பதால் அவர் எந்த அரசியல் கட்சிகளின் உள்ளுமில்லை. பின்னுமில்லை என்பது தெளிவு. மூன்றாவது தன்னுடைய காரியங்களைத் தந்திரமாகவோ நியாயமாகவோ பார்த்துக் கொள்ளும் ஆர்வமும் கரிசனையும் அவரிடமிருந்ததில்லை. இவ்வளவு ஊடகத் தொடர்புகளோடும் எழுத்துச் சிறப்போடும் இருந்தவர் தொடர்ந்தும் ஏழ்மையிலும் தனிமையிலும் வாழ்ந்திருக்கிறார் என்பதைச் சரியாக உணர்ந்து கொண்டால், அவருடைய இயல்பையும் மனநிலையையும் விளங்கிக்கொள்ள முடியும். 

இதனால்தான் அவரால் ஒரேயொரு நாவலைத் தவிர வேறெந்த நூலையும் வெளிக் கொணர முடியவில்லை. பின்னாளில் யாழ்ப்பாணக் கலாசாரப் பேரவை அவருடைய சிறுகதைகளில் ஒரு பகுதியை தொகுத்து “மனித மாடு” என்று வெளியிட்டது. ஏனையவை எல்லாம் அந்தந்த இதழ்கள், பத்திரிகைகளில் வெளிவந்த அளவிலேயே உள்ளன. 

1921இல் தெல்லிப்பழையில் பிறந்த அ.செ.மு படித்தது மகாஜனாக் கல்லூரியில். வாழ்ந்தது அளவெட்டியில். செயற்பட்டது யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை ஆகிய இடங்களில். இறந்தது திருகோணமலையில்.  அவர் ஒரு பரந்த தளத்தில், விரிந்த மனதோடு பன்முக ஆளுமையாகச் செயற்படுவதற்கு இந்த இடவிரிவுகளும் ஒரு காரணமாக இருக்கக் கூடும். 

இப்பொழுது அ.செ.மு வுக்கு நூற்றாண்டு. என்பதால் இதுவரையுமான குறையை நாம் நிவர்த்தி செய்தே ஆக வேண்டும். அவருடைய எழுத்துகளை –சிறுகதைகளையும் நாவல்களையும் – தேடித் தொகுத்து நூலாக்க வேண்டும். தொடர்ந்து அவர் எழுதிய கட்டுரைகளை நூலாக்கம் செய்வது அவசியம். அ.செ.முவைப்பற்றி இதுவரையிலும் எழுதிய கட்டுரைகளையும் மதிப்பீடுகளையும் இனி யாராவது எழுதக் கூடியதாக இருந்தால் அவற்றையும் சேர்த்துத் தனி நூலாக்கலாம். 

இதை விட அவருடைய ஊடகத் துறைப்பங்களிப்பைப் பற்றிய ஆய்வும் பதிவும் முக்கியமானது. அதையும் செய்ய வேண்டும். இதில் கதைகளையும் நாவல்களையும் செம்பதிப்பாகக் கொண்டு வரலாம். அப்படிக் கொண்டு வருவது சிறப்பு. அது அ.செ.மு என்ற முன்னோடிக்கும் பங்களிப்பாளருக்கும் நாம் செய்கின்ற மரியாதையுமாக இருக்கும். 

இந்தியாவில் – தமிழகத்தில் முன்னோடிப் படைப்பாளர்களின் நூல்கள் இந்த மாதிரிச் செம்பதிப்புகளாக வெளியிடப்படுகின்றன. மட்டுமல்ல, அவர்கள் மறுவாசிப்புக்குட்படுத்தப்படுகிறார்கள். தொடர்  மதிப்பீடு செய்யப்படுகிறார்கள். அவர்களுடைய ஏனைய எழுத்துகள் தேடி எடுக்கப்பட்டு அவை வரலாற்றுத் தரவுகளோடு நூலாக்கப்படுகின்றன. புதுமைப்பித்தனின் கதைகள், கட்டுரைகள், கடிதங்கள், கவிதைகள், வாழ்க்கை விவரம் எனப் பலவும் இவ்வாறு தொகுக்கப்பட்டுள்ளமையை இங்கே குறிப்பிடலாம். இதில் இரா.வேங்கடாசலபதி முக்கியமான ஒரு முன்னுதாரணம். இப்படிப் பலருடைய எழுத்துகளும் பங்களிப்புகளும் தொகுக்கப்பட்டு நூலாக்கி அளிக்கும் பணிகள் நடக்கின்றன. இப்பொழுது தி.ஜானதிராமன் நூற்றாண்டையொட்டி “ஜானகிராம்” என்ற நூலொன்று உருவாக்கப்பட்டுள்ளது. 

ஆகவே அ.செ.முவின் நூற்றாண்டையொட்டி அவருடைய எழுத்துகளைத் தேடித் தொகுக்கும் வேலைகள் நடக்க வேண்டும். கடந்த 27.06.2021 அன்று லண்டன் –தமிழ்மொழிச் செயற்பாட்டகம் அ.செ.முவைப்பற்றிய, அவருடைய எழுத்துகளைக் குறித்த கலந்துரையாடல் ஒன்றைச் செய்திருந்தது. இதன்போது அ.செ.முவின் நூற்றாண்டையொட்டி அவருடைய எழுத்துகளைத் தொகுப்பது நல்லது என நிகழ்வை நெறிப்படுத்திய எம்.பௌசர், நிகழ்வில் பங்கேற்ற கவிஞர் சேரன் மற்றும் கருணாகரன் ஆகியோர் வலியுறுத்தினர். இதனை அந்த zoom உரையாடலில் பங்கேற்றிருந்த நாகலிங்கம் கெங்காதரன் ஏற்றுக்கொண்டு அ.செ.மு வின் ஒரு நாவலை வெளியிடுவதற்கு முன் வந்தார். 

இதைத் தொடர்ந்து சேரன், நாகலிங்கம் சபேசன் போன்றோரும் அ.செ.முவின் ஏனைய எழுததுகளைத் தொகுப்பதற்கான பங்களிப்புகளைச் செய்வதற்கு தாமும் பிற நண்பர்களும் உதவ முடியும் என்று சொல்லியிருக்கிறார்கள். இதில் இவர்களோடு ஏனையவர்களும் இணைவது அவசியம். அப்பொழுதுதான் சிரமங்கள் குறையும். வேலைகளை பலரும் பொறுப்போடு பங்கிட்டுக் கொள்வதன் மூலம் சுமைக்குறைவோடு பணிச் சிறப்புகளும் ஏற்படும். விரைவாகக் காரியங்களும் நிறைவேறும். 

இதெல்லாம் கூடி வரும்போது அது அ.செ.முவின் நூற்றாண்டுக்கான அடையாளங்களாக மாறும். அதாவது அவருடைய எழுத்துகளின் வழியாக அவரை அறிவதும் அவரைச் சென்றடைவதுமாக இருக்கும். 

ஒரு முன்னோடிக்கு, ஒரு நல்ல எழுத்தாளருக்கு, தன்னமைதியோடு வாழ்ந்த ஒரு பண்பாளருக்கு நாம் செய்ய வேண்டிய வேலையும் செலுத்த வேண்டிய மதிப்பும் இதுவன்றி வேறென்ன?